கியூப தீவிலிருந்து ஒரு குழந்தை உலகிற்கு எழுதும் மனம் திறந்த மடல்

இகே ரோமே

கியூப தீவிலிருந்து ஒரு குழந்தை உலகிற்கு எழுதும் மனம் திறந்த மடல்

.மனிதகுலத்தவர் அனைவருக்கும், உலகத் தாய்மார்களுக்கும், பரந்த இவ்வுலகின் அனைத்து மருத்துவர்களுக்கும், கண்ணியமான பத்திரிகையாளர்களுக்கும், இன்னும் நீதியை நம்ப செய்யும் அரசாங்கங்களுக்கும்:

என் பெயரும் மில்லியன் கணக்கான மற்றுள்ளவர்களைப் போன்றதுதான். எனக்கு நன்கு அறியப்பட்ட குடும்பப் பெயரோ அல்லது முக்கியமான பதவியோ இல்லை. நான் ஒரு சாதாரண கியூப பெண். உங்களுக்கு நான் ஒரு மகள், ஒரு சகோதரி, அல்லது கியூப நாட்டின் ஒரு தேசபக்தர். இதை நான் உடைந்த இதயத்துடனும் நடுங்கும் கைகளுடனும்தான் எழுதுகிறேன். ஏனென்றால், இன்று எங்கள் மக்கள் அனுபவித்து வருவது ஒரு தவிர்க்க முடியாத நெருக்கடியை அல்ல. இது வாஷிங்டனில் இருந்து திட்டமிடப்பட்டு, படிப்படியாக அரங்கேற்றப்படும் ஒரு கொடூரமான படுகொலை.

உலகம் வேறு விதமாக புரிந்துகொள்வதைக் குறித்த என் தாத்தா பாட்டி சார்பான புகார் என்னவென்றால்:

கியூபாவில் வயதானவர்கள் அகால மரணம் அடைவதற்கு காரணம் எங்களது இயலாமை அல்ல. அது இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள் வருவதை அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை தடுக்கிறது என்பதாலேயாகும். உலகம் இந்த உண்மையை உணர மறுப்பதை நான் கண்டிக்கிறேன். இது எங்கள் வளங்கள் வற்றிப் போனதால் ஏற்பட்ட பற்றாக்குறை அல்ல. வேண்டுமென்றே விதிக்கப்பட்ட தடை. கியூபாவிற்கு மருந்துகள் அல்லது மருத்துவ மூலப்பொருட்கள் விற்க விரும்பும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது, அவைகள் துன்புறுத்தப்படுகின்றன. கூடவே அச்சுறுத்தவும் படுகின்றன. ஆனாலும் அந்நிறுவனங்களின் நாடுகளும் அரசாங்கங்களும் அமைதியாக இருக்கின்றன. இந்த நிலையில்தான், எங்களின் கியூப தாத்தாக்கள் தங்களது மார்பைப் பிடித்துக் கொண்டு மருந்துக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் மரணம் எந்த சலுகையையும் வழங்காமல் அவர்களை ஆரத்தழுவுகிறது.

என் போன்ற குழந்தைகளின் புகார்கள் என்னவென்றால்:

எரிபொருள் பற்றாக்குறையால் கியூபாவில் உள்ள இன்குபேட்டர்கள் செயலிழக்கின்றன என்பதை உரக்க சொல்கிறேன். எந்த நாடுகள் எங்களுக்கு எண்ணெய் விற்கலாம், யார் விற்கக்கூடாது என்பதை அமெரிக்க அரசாங்கம் தீர்மானிப்பதால், ​​புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் உயிருக்குப் போராடுகிறார்கள். வாஷிங்டன் அலுவலகத்தில் கையெழுத்திடப்படும் உத்தரவானது அவர்களின் கரையிலிருந்து 90 மைல் தொலைவில் உள்ள ஒரு குழந்தையின் உயிரை விட மதிப்புமிக்கது என்பதால், அது தங்களின் குழந்தைகளின் உயிரை காவு வாங்குகிறது என்பதை கியூப தாய்மார்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

சர்வதேச சமூகம் எங்கே? முக்கியமாக குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்புகள் எங்கே? எல்லாரும் கியூப குழந்தைகள் வாழத் தகுதியற்றவர்கள் என்று முடிவு கட்டி விட்டனரா?

வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட பஞ்சமும் பசியும் குறித்த எங்களது புகார் என்னவென்றால்:

இது ஆக்கிரமிப்பாளர்கள் திட்டமிட்டு ஏற்படுத்திய பட்டினி கொடுமை என்பதால் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கியூபாவில் எந்த காரணமும் இல்லாமல் உணவுப் பற்றாக்குறை ஏற்படவில்லை. எங்களால் எல்லாமும் வாங்க முடியும். அவர்கள் எங்களை வாங்கவிடாமல் தடுக்கிறார்கள் என்பதே பிரச்சனை. உணவை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மறிக்கப்படுகின்றன; வங்கி பரிவர்த்தனைகள் தடுக்கப்படுகின்றன; எங்களுக்கு தானியங்கள், கோழிக்கறி மற்றும் பால் விற்கும் நிறுவனங்கள் மீது தடை போடப்படுகின்றன என்பதே எங்களின் பசிக்கான காரணம்.

கியூபாவில் பசி என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இது அமெரிக்க அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கையால் விளைந்ததாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடருகிற, ஒவ்வொரு நிர்வாகத்தாலும் புதுப்பிக்கப்படுகிற, டொனால்ட் டிரம்பால் தற்போது தீவிரப்படுத்தப்படுகிற, மார்கோ ரூபியோவால் இரக்கமின்றி செயல்படுத்தப்படுகிற யுத்தமாகும்.

இதை அவர்கள் "பொருளாதார அழுத்தம்" என்கிறார்கள். நாங்கள் இதை மரணத்தை உண்டாக்குகிற பசி பயங்கரவாதம் என்கிறோம்.

எங்கள் மருத்துவர்கள் குறித்த புகார் என்னவென்றால்:

உலகம் முழுவதும் சரிந்தபோது, ​​தொற்றுநோய்களின் போது, உலகத்தை காக்க முன்வந்த எங்கள்  மருத்துவர்கள், இப்போது சிரிஞ்ச்சுகள், மயக்க மருந்து மற்றும் எக்ஸ்ரே உபகரணங்கள் இல்லாமல் தவிப்பதைக் கண்டு நான் கண்டிக்கிறேன். அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்று எங்களுக்குத் தெரியாததால் அல்ல. எங்களுக்கு திறமை இல்லாததால் அல்ல. ஆனால் பொருளாதார முற்றுகையினால் பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கிடைக்க விடாமல் தடுப்பதாலேயாகும்.

நமது விஞ்ஞானிகள் ஐந்து COVID-19 தடுப்பூசிகளை உருவாக்கினர். ஒன்றல்ல, ஐந்து. எந்த உதவியும் இல்லாமல். எந்த பக்க விளையும் இல்லாமல். முற்றுகைகள் மற்றும் பொய்களை முறியடித்து. அதனால்தான் பேரரசு எங்களைத் தண்டிக்கிறது.

நான் உலகிற்கு உரக்கச் சொல்கிறேன்: கியூபா உதவித் தொகைகளைக் கேட்கவில்லை. கியூபா பிற நாட்டு வீரர்களைக் கேட்கவில்லை. கியூபா உங்கள் அனுதாபத்தைக் கேட்கவில்லை. கியூபா நீதியைக் கேட்கிறது. அதற்கு மேல் எதுவும் இல்லை. அதற்கு குறைவாகவும் எதுவும் இல்லை. என் மக்களின் துன்பத்தை தொடரச் செய்வதை நிறுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். முற்றுகையை அதன் சொந்த பெயராலேயே அழைக்க வேண்டுமென நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். 

"உரையாடல்" மற்றும் "ஜனநாயகம்" என்ற கதையாடல் மூலம் அவர்கள் எங்கள் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கும்போது, ​​நீங்கள் ஏமாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு தொண்டு தேவையில்லை. எங்களை எங்கள் வழியில் வாழ அனுமதிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

இத்தனை கொடுமைகளையும் பார்த்தபடி அமைதியாகவும் உடந்தையாகவும் இருக்கும் அரசாங்கங்களுக்கு: வரலாறு உங்களைப் பொறுப்பேற்க வைக்கும். பொய் சொல்லும் ஊடகங்களுக்கு: உண்மை எப்போதும் கட்டுக்கதைகளைக் கண்டுபிடிக்கும்.

எங்கள் மீதான தடைகளுக்கு ஆதரவாக கையெழுத்திட்டு எங்களுக்கு மரணதண்டனை வழங்குபவர்களுக்கு: கியூப மக்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

இன்னமும் தங்கள் இதயங்களில் ஈரம் உடையவர்களுக்கு: கியூபாவைப் பாருங்கள். கியூபாவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். கூடவே, "வரலாற்றில் யாரோடு நிற்கப் போகிறோம்?" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு

இந்த சிறிய தீவில் உள்ள பெரிய மனது படைத்த எங்கள் மக்களை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க  விரும்பாத ஒரு சாதாரண கியூப பெண்.

இந்த உரை உங்களை பாதித்தால் இதைப் பகிரவும். நீங்கள் பகிரவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை.

இது பிரபலங்களின் செய்தி அல்ல. இது மற்றுமொரு சாதாரண கருத்தும் அல்ல.

இது எங்களது கண்ணீர். கண்ணீரை எல்லா நேரத்திலும் அடக்கி வைத்துவிட முடியாது. அது வெடித்து வெளிப்படும் போது பேரலையாக மாறிவிடுகிறது.

கியூபாவில் எந்த உள்நாட்டு நெருக்கடியும் இல்லை என்பதை உலகம் அறியும். ஒரு குற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இகே ரோமே

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு