மோடி 3.0 பட்ஜெட்!
பி.ஜே. ஜேம்ஸ்
ஏழைகளை புறக்கணித்த பட்ஜெட்! நடுத்தர வர்க்கத்தை ஏமாற்றிய பட்ஜெட்! கார்ப்பரேட்-பெருங்கோடீஸ்வர கார்ப்பரேட்டுகளை ஊட்டி வளர்க்கும் பட்ஜெட்!
கூர்மையடைந்து வரும் ஏற்றத்தாழ்வு, அதிகரித்து வரும் வேலையின்மை, ஏன் பங்குச் சந்தைகளைப் பயன்படுத்தி ஊகவழிகளில் நிதி மூலதனம் எவ்வாறு குவிக்கப்பட்டு வருகிறது என்பது பற்றிய கேள்விகளும், கவலைகளும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் வெளிப்பட்ட போதும், மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வின் அதிதீவிர வலதுசாரி அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஒத்திசைவான கார்ப்பரேட்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை எவ்வித கூச்சநாச்சமுமின்றி தாக்கல் செய்துள்ளது. பரந்துப்பட்ட உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கும், குறைந்து கொண்டே வரும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் உண்டான எந்த அறிவிப்புகளும் இல்லாத நிலையில், இன்று உலகிலேயே மிக மிகக் குறைவாக கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில், கார்ப்பரேட்கள் மீதான வரியை உயர்த்துவதற்கு மறுத்து வருவதிலிருந்தே இந்த “மோதானி” பட்ஜெட் யாருக்கானது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதே சமயம், பங்குச் சந்தைகளில் விலையேற்ற இறக்கங்களை உண்டுபன்னி சூதாடுவதிலும்(derivative trading), பங்குச் சந்தை நிதி முதலீடுகளிலிருந்து வரும் இலாபங்கள்(capital gains) மீதும், பெயரளவிற்கு வரியை உயர்த்தி, பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணில் தோராயமாக ஒரு சதவீதம் சரிந்துவிட்டதாக காட்டுவதன் மூலம் மக்களுக்கு கண்கட்டிவித்தையும் காட்டிவிடுகிறார்கள். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்திய பங்குச் சந்தை 400 சதவீதம் வளர்ந்து நான்கு மடங்களவிற்கு பெரிதாகியுள்ளதால், ஒட்டுண்ணித்தனமான கார்ப்பரேட் சூதாடிகளும், ஊக முதலாளி வர்க்கமும் எந்தளவிற்கு மூலதனத்தை குவித்து வைத்துள்ளார்கள் என்பது எவரும் மறுக்க முடியாதளவிற்கு அம்பலமாகியுள்ளது. வருமான வரிக் கணக்கை ‘பூஜ்ஜியமாக’ காட்டும் கார்ப்பரேட் கம்பனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மோடி அதிகாரத்திற்கு வந்தது முதல் - அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என மிகச் சிறு பிரிவினர் தவிர்த்து - சுயதொழில் செய்வோர், அமைப்பு சாரா/முறைசாராத் தொழிலாளர்களின் பெயரளவிற்கான கூலி(விலையேற்றத்தை கணக்கில் கொள்ளாத கூலி) உயரவேயில்லை அல்லது குறைந்து கொண்டேதான் வருகிறது. புதிய பாசிச மோடி ஆட்சியில், கடந்த பத்தாண்டுகளாக இந்திய உழைக்கும் மக்கள் தொகையில் 90 சதவீதமாக உள்ள “முறைசாராத் தொழிலாளி வர்க்கத்தின்” சராசரியான மாதக் கூலியானது(விலையேற்றத்தை கழித்த பிறகு) 12,000 என்பதிலிருந்து 11,000 என்பதாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், நாட்டின் 40 சதவீத சொத்துக்கள், 1 சதவீத பெரும்பணக்காரர்களிடம் சேரந்துள்ளது.(77 சதவீத சொத்துக்கள் மேலடுக்கிலுள்ள 10 சதவீத பேரிடம் உள்ளது) மறுபுறம், உணவுப் பொருட்கள், இன்னப்பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை(ஜீன் மாதத்தில் மட்டும் காய்கறிகளின் விலை 27.33% அதிகரித்துள்ளது) பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டு போகும் நிலையில், 50 சதவீத ஏழை மக்களின் வாங்கும் சக்தி அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
இதுபோன்றதொரு கொதிநிலையான சூழலில்தான், 2047க்குள் “வளர்ச்சியடைந்த பாரதம்-Viksit Bharat” என்ற இலட்சியப் பயணத்திற்கான அடித்தளம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, மோடியின் சாதனைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் கதையளக்கும் பட்ஜெட்டில், நாம் மேற்சொன்ன எந்தப் பிரச்சனைகள் பற்றியும் ஒரு வார்த்தைக்கூட இடம்பெறவில்லை. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஏற்கனவே மோடி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை உயர்த்த மறுத்துவிட்ட நிலையில், முழுமையான பட்ஜெட் இப்போது தாக்கல் செய்தபோதும் எங்குமே MGNREGA திட்டத்தை பற்றிக் குறிப்பிடவேயில்லை. 2014 தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி பகிரங்கமாக வாக்குறுதியளித்து என்ன நடந்ததென்று யோசித்து பார்த்தால், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள் வெறும் 20 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக, திறன் பயிற்சி வழங்குவதற்காக, 2-லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் உருவாக்கப்படும் என சொல்லியிருப்பதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது புரியவரும். அதே அடிப்படையில்தான், ‘அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு, சமூக நீதி, என்பன போன்ற வார்த்தைகளும் வெறும் வாய்ச்சவடால்களாகவே இருக்கும். ஐ.எம்.எப். இட்ட கட்டளைகளுக்கிணங்கி இயற்றப்பட்ட FRBM சட்டம், சட்டப் புத்தகத்தில் இருக்கும்வரை எவ்வளவுதான் நடைமுறை சாத்தியமுள்ள, உருப்படியான மக்கள் நலத் திட்டங்களை தீட்டினாலும், அவற்றால் எந்த பயனும் மக்களுக்கு முடிவில் கிடைக்கப்போவதில்லை.( 2003ல் IMF வெளியிட்ட இந்திய நாடிற்கான ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம் FRBM சட்டத்தை இயற்றியது. அதுமுதல் அடுத்தடுத்து வந்த எல்லா ஆட்சியிலும் அதே பயபக்தியோடும், விசுவாசத்தோடும்தான் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது).
மூலதனச் செலவிற்காக இந்த நிதியாண்டில் 11 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு இறுதியினும் இறுதியாகப் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்கு துளியும் விரும்பாத ஊழல் மலிந்த, ஒட்டுண்ணி முதலாளிகளின் சட்டைப் பைகளுக்கே போய்ச் சேரும் என்பதையே தற்போதைய முதலீட்டு போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 1.52 இலட்சம் கோடி நிதியும், பிரம்மாண்டமான வீட்டுவசதித் திட்டத்திற்கு 10 இலட்சம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டத்தில் மத்திய அரசின் பங்காக 2.2 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதேபான்றத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது, இதன் பயன் யாருக்கு கிடைத்துள்ளது என்பதை அடிப்படையாக வைத்தே இப்போதைய நிதி ஒதுக்கீட்டையும் மதிப்பிட வேண்டும். இதேபோல, அணு சக்தி(எகாதிபத்திய சக்திகளால் இந்தியா மீது திணிக்கப்படுகிறது), மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள், முக்கிய கனிமவள இயக்கம், சாலை வசதித் திட்டங்கள், தொழில் வழித்தடங்கள், தொழில் பூங்காக்கள், நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி/ஆற்றல் உத்திரவாதம், உள்கட்டமைப்பு மேம்பாடு, இன்னும் பல என இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பவ்வேறு திட்டங்களெல்லாம் அரசுத்-தனியார் பங்கேற்பு(PPP) முறையில்தான் செயல்படுத்தப்படவிருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதிகளுமே நேரடியாக ஒட்டுண்ணி கார்ப்பரேட் முதலாளிகளின் சட்டைப் பைகளுக்கே சென்று சேரும். சோலார் தகடுகளையும், மின்கலங்களையும் தாயரிப்பதற்கான மூலதனப் பொருட்களை சீனாவிலிருந்து இறக்கமதி செய்யலாமென அதானி தீர்மானித்துள்ளார். இந்த பின்னணியிலிருந்துதான், பல்வேறு மூலதன பொருட்களுக்கு, குறிப்பாக சோலார் தகடுகளையும், மின்கலங்களையும் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களுக்கு குறைந்தபட்ச சுங்கவரியிலிருந்து(Basic Customs Duty) அளிக்கப்பட்டுள்ள விலக்கையும் புரிந்து கொள்ள வேண்டும். பாசிச ஆட்சி அதிகாரத்தில் தொடர்வதற்கும், கூட்டணி கட்சிகளைத் திருப்தியடையச் செய்வதற்காக மட்டுமே ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர இந்த மாநிலங்களில் உள்ள மக்களின் தேவைகளையும், கனவுகளையும் பூர்த்தியடையச் செய்வதற்காக அல்ல என்பதில் சந்தேகமே இல்லை. மறுபுறம், கூட்டாட்சி உரிமைகளை மேலும் பறிப்பதற்காகவும், வெகுஜன மக்கள் மீது வரிச் சுமையை மேன்மேலும் ஏற்றி வைப்பதற்காகவே சீரமைத்தல் என்ற பெயரில் புதியதாராளமய, பிற்போக்கு ஜி.எஸ்.டி பற்றி இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினச் சுருக்கமாக சொல்வதெனில், பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் எதிர்கொள்ளக்கூடிய வறுமை, வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சமத்துவமின்மை போன்ற தலைபோகிற பிரச்சனைகளுக்கு பட்ஜெட்டில் எந்த தீர்வையும் சொல்லவில்லை. விவசாயத் துறை, தொழில் துறை போன்ற உற்பத்தித் துறைகள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளை இந்த பட்ஜெட் புறக்கணித்துள்ளது. மறுபுறம், உண்மையில் புதிய காலனியாதிக்க நிறுவனங்களால் வகுத்தளிக்கப்பட்ட “தொழில் செய்வதை எளிமைப்படுத்துதல்-Ease of Doing Business” என்ற விசயத்திற்கு சூட்சமமாக எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை கவனித்தாலே உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் மேன்மேலும் அதிகமாக சுரண்டுவதற்கே இந்த பட்ஜெட் வழியமைத்து தந்துள்ளது என்பது புரியவரும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, அதிதீவிர வலதுசாரிகளுக்காக, புதிய பாசிச மோடி ஆட்சியின் நலனுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் உட்பட எந்தவொரு பொருளாதார கொள்கைகளையும் ஏதாவதொரு வழியில் இரத்து செய்துவிட முடியும் என்று நம்புவதில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளோடும், அனைத்து ஜனநாயக சக்திகளோடும் ஒன்றுசேர்ந்து மக்கள் நலன் சார்ந்த மாற்று வளர்ச்சித் திட்டங்களுக்காக போராடுவதும், விரைவில் இந்த ஆட்சியை தூக்கியெறிவதுதென்பதும் தொழிலாளி வர்க்கத்தின், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில்தான் உள்ளது.
(பி.ஜே. ஜேம்ஸ், பொதுச் செயலாளர், சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார்)
- விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு