சுதேசிய புரட்சியாளர் - கப்பலோட்டிய தமிழன்!
செந்தளம் செய்திப் பிரிவு
கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. வங்காளத்தில் விபின் சந்திரபாலைப் போல தமிழ்நாட்டில் சிதம்பரனார் விடுதலைத் தளபதியாக திகழ்ந்தார். 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவர் 1894-ஆம் ஆண்டு சட்டம் பயின்று, 1895 முதல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஏழைகளுக்கும், விடுதைப் போராட்ட வீரர்களுக்கும் இலவசமாக வாதாடினார். காவல் துறையினரால் பொய் குற்றம் சாட்டப்பட்ட போராளிகளையும் பாமர மக்களையும் இவர் சட்ட நுணுக்கத்தாலும், தனது போராட்ட குணத்தாலும் காவல் துறையினரை எதிர்த்து விடுதலைப் பெற்றுத்தந்தார். பின்னர் வ.உ.சி. 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று புகழ் பெற்ற வழக்கறிஞரானார். சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பியதை உணர்ந்த வ.உ.சி. பாரதியாருடன் நெருங்கிய நண்பரானார்.
சுதேசிய நிறுவனர்:
இந்தியா விடுதலைக்காக போரிட்ட, ஏகாதிபத்திய எதிப்பு புரட்சியாளர். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்ற நிறுவனங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். என்பதை உணர்ந்த வ.உ.சி. தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிசு இந்திய ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி" (The British India Steam Navigation Company) இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விசயராகவாச்சாரியார் ஆகியோரை உள்ளடக்கிய "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை என்பதால், "சாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிசு இந்திய ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "சாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து பிரிட்டன் பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பலை நிறுவி, கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. சொந்த கப்பல்கள் இல்லை என்பதை நிவர்த்தி செய்ய, கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர், ஆனால் அது போதுமானதாக இல்லை என்பதால், புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இக்கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். இதை கண்டு ஆங்கிலேய அரசு அட்சம் கொண்டது, சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை தடுக்க, கட்டண குறைப்பு மற்றும் இலவச பயணம் என்று பலவிதங்களில் முயற்சி செய்தது.
திருநெல்வேலி எழுச்சி:
விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908 ஆம்-ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சி தலைமையில் கொண்டாடினர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா நடந்தது. நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் 1908ம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக நெல்லை பகுதியில் புரட்சிக்கனல் மூண்டது 1908ம் ஆண்டு மார்ச் 13ம்-தேதி நெல்லை பாலம் என அழைக்கப்பட்ட வீரராகவபுரம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர், பொதுமக்கள் என தெருக்களில் இறங்கி போராட்டத்தை தொடங்கினார்கள். கல்லூரி முதல்வர் உட்பட இருவர் தாக்கப்பட்டு, கல்லூரி மூடப்பட்டது. சி.எம்.எஸ். கல்லூரிக்குள் புகுந்த புரட்சி கூட்டம், கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச்சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையம் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணெய்க் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் கோர்ட், காவல் நிலையம் தாக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உட்பட நால்வர் இறந்தனர். அதே நாளில் தூத்துக்குடியிலும் கலவரம் ஏற்பட்டது. காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடுத்த நாளும் போராட்டம் தொடர்ந்தது. அடக்குமுறையையின் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.
நெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது. நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் எழுச்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட் சேதங்களுக்கு தண்டத்தீர்வை வசூலிக்கப்பட்டது. நெல்லையில் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாக இருந்தது.
தொழிலாளர் போராட்டம்:
தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து மிகவும் வருந்தினார் வ.உ.சி, நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் கூலி உயர்வு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மற்ற விடுமுறை நாட்களையும் வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். அதில் அடிபணிந்த நூற்பாலை நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்றது. சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியும் ஆங்கிலேயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. வ.உ.சி.யின் பேச்சாற்றலால், வெளிநாட்டுப் பொருட்களை மக்கள் புறக்கணித்தார்கள். மக்கள் வ.உ.சி. யின் சொற்களைக் கட்டளையாக ஏற்று அவருக்குப் பின்னால் தொழிலாளர்கள் அனைவரும் திரண்டனர். சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி. காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தற்போழுது தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். வ.உ.சி மீது தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க சதி திட்டம் தீட்டினார்கள். அவ்வாறே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
செக்கிழுத்த செம்மல்:
ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனையும், சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனையும் மொத்தம் 40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை வழக்கப்பட்டது. இந்தக் கொடுமையான தண்டனைக்கு வ.உ.சி.யின் மேல் இருந்த அளவு கடந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும் என்று நம்பினார்கள். வங்காளி, "அமிர்த பசார்", "சுதேசமித்திரன்" "இந்தியா", "ஸ்வராஜ்ஜியா" மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தன. ஆங்கில இதழான "ஸ்டேட்சு மேன்" இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது. ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி, இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்கொடூரமான தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைககள் செய்ய நிர்பந்திக்கப்பட்டார். அதாவது சணல் நூற்றல், கல் உடைத்தல், மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். இப்படி புகழ் பெற்ற போராட்ட வீரர், வழக்கறிஞர் ஒரு மாடு போல செக்கிழுக்க வைத்தனர். வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. ஆம், அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டனர். பின்னர் அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில் (பிரிவியூ கவுன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது. 1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரசு நாட்டில் வ.உ.சி. ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். இவர் லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். ஆனால், காந்தி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்தியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. எனவே சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. பின்னர் 1932-ல் தூத்துக்குடியில் குடியேறினார் அங்கு தமிழ் நூல்களை எழுதுவதிலும் தொழிலாளர்களை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சுதந்திரத்துக்காக மட்டும் அல்லாமல், தீண்டாமைக்கு எதிராகவும் போராடிய வ.உ.சி., சகஜாநந்தா என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை தம் வீட்டில் தங்க வைத்துத் போதித்து தமிழறிவு ஊட்டினார். மற்றும் மறுமணம், கலப்புத் திருமணம் போன்ற முற்போக்குச் சீர்திருத்தங்களையும் ஆதரித்தும் போராடினார். ஏகாதிபத்திய எதிப்பாளராகவும் விடுதலை போராட்ட புரட்சியாளராகவும் தனது இறுதி மூச்சியுள்ளவரை வாழ்ந்து, 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.
உறுதிமிக்க அவரின் ஏகாதிபத்திய எதிப்பு "சுதேசி கொள்கையும்", "விடுதலை போராட்டத்தையும்" போற்றுவோம்!
அவர் வழியில் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுப்போம்!!
சோவியத் படைப்போம் வாருங்கள் ஓரணியில் !!!
- செந்தளம் செய்திப் பிரிவு