நாம் எல்லோரும் பலமாக மூச்சு விட்டால் போதுமே! நம் மூச்சுக்காற்றில் பறந்து போகாதா வெள்ளையர் ஆதிக்கம்? என்று கர்ஜித்த சிதம்பரனாரின் பிறந்த தினம் இன்று

செந்தளம் செய்திப் பிரிவு

நாம் எல்லோரும் பலமாக மூச்சு விட்டால் போதுமே! நம் மூச்சுக்காற்றில் பறந்து போகாதா வெள்ளையர் ஆதிக்கம்? என்று கர்ஜித்த சிதம்பரனாரின் பிறந்த தினம் இன்று

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், மூத்த தொழிற்சங்கவாதி என்ற புகழுக்கு சொந்தக்காரர் அவர். 

தன் இறுதி காலத்திலும் தன் மூச்சு பிரியும் வேலையிலும் என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்! என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்! எனும் மகாகவி பாடல் வரிகளை கேட்டவாரே உயிர்விட்ட மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

தேச விடுதலை போராளி வ.உ.சி.

இந்திய நாட்டை அடிமைப்படுத்தி சுரண்டி கொழுத்த பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக உதித்தெழுந்த உதயசூரியன் அவர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெகுண்டெழுந்த விடுதலைப் போராட்ட பேரெழுச்சியின் தன்னிகரற்ற வீரர்களின் தலைசிறந்தவர் வ.உ.சி. அவரிடமிருந்த  தீரமும் தியாகமும் ஒவ்வொரு புரட்சி வாதிக்கும் ஆக்சிஜன் ஆகும்.

பிரிட்டிஷ் ஆட்சியின் காலனியாதிக்க கொடுங்கோன்மையை விரட்ட மக்கள் போராட்டங்களை கட்டியமைத்தார் வ.உ.சி.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு நடவடிக்கையாக சுதேசிய கப்பல் விட்டார். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, 1907 ஆம் ஆண்டு மே மாதம்  கலியோ லாவோ என்ற கப்பல்கள் இலங்கைக்கு தூத்துக்குடிக்கும் இடையே இயக்கப்பட்டன. சுதேசிய கப்பல்கள் வாங்க வ உ சி தனது சொத்தை விற்றார். ஆரம்பித்திருக்கும் கம்பெனி வியாபார கம்பெனி மட்டுமல்ல மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு விரட்டுவதற்கான கப்பல் கம்பெனி என்று முழங்கினார்.

கோரல் ஆலை தொழிலாளர் போராட்டம்: 

தூத்துக்குடியில் பிரிட்டிஷ் முதலாளியால் நடத்தப்பட்டு வந்த கோரல் ஆலையில் 10 வயதிற்கும் குறை வயதுடைய சிறுவர்களும் தொழிலாளியாக கசக்கி பிழியப்பட்டனர். சொற்ப கூலி, வார விடுமுறை கிடையாது. மட்டுமன்றி தொழிலாளர்கள் பிரம்பால் அடித்து துன்புறுத்தப்பட்டனர். இக்கொடுமைகளை கண்டு சினம் கொண்ட வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப ஐயங்காரும் போராட்டத்திற்கு திட்டமிட்டனர். ஆலை தொழிலாளர்களை திரட்டினர். வ.உ.சி., சிவாவின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவை கேட்டு கோரல் தொழிலாளர்கள் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடமும் கொண்டு சென்று பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி. போராட்டம் தீவிரமடைந்தது வெள்ளையர்களை மக்கள் கற்களை வீசி தாக்கினர். வெள்ளையர்களுக்கு வியாபாரிகள் உணவு பொருட்கள் கொடுக்க மறுகத்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தினை ஆதரித்து துப்புரவு தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். நாவிதர்கள் வெள்ளையர்களுக்கு சவரம் செய்ய மறுத்துவிட்டார்கள். இப்படி போராட்டம் மக்கள் மத்தியில் பரவியதால் வெள்ளையர்களுக்கு தலைவலியாகிப் போனது. நிலைமைகள் தங்கள் கைமீறி போனதால் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு கோரல் நிறுவனம் பணிந்தது.

போராட்டத்தின் பயனாய் தொழிலாளர்களின் வேலை நேர குறைப்பு, விடுமுறை, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை பெற்றனர். தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுக்க வைத்து நிறுவனத்தை பணிய வைத்தார் வ உ சி. 

இதனை தொடர்ந்து பின்னர் விபின் சந்திர பால் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நாளினை சுயராஜ்ய தினமாக கொண்டாட எடுக்கப்பட்ட முடிவினை கலெக்டர் விஞ்சு துரை தடை செய்தான். 1908 மார்ச் 10ஆம் தேதி வ உ சி யுடன் சிவாவும் பத்மநாபாவும் மக்கள் திரளுடன் தடையை மீறியதானது விஞ்சை கொதிப்படைய செய்தது. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் விளைவாக கொதிப்படைந்த மக்கள் பல்லாயிரம் கணக்கானோர் கடையடைப்பு செய்ததுடன் தங்களோடு கல்லூரி மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு வெள்ளையர்களின் அலுவலகம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் போன்றவற்றை தீ வைத்து கொளுத்தினர். நெல்லையே நெருப்பாய் எரிந்தது. கட்டுமீறி சென்ற கூட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீஸ் படை ஆயத்தமானது. அப்போது "எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளைர்களை சுடுங்கள்" என்று போலீசுக்கு மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்து கோரிக்கைகள் நிறைவேறி, போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்குச் சென்ற கோரல் ஆலை தொழிலாளர்கள் தலைவர்களின் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். 

வ.உ.சி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 

"வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும்! அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்'' எனவும் 

”வ.உ.சி வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தை ஊட்டும்...” என்றும் 

வெள்ளைய நீதிபதி ஃபின்ஹே தனது தீர்ப்பில் கூறி வ.உ.சி க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தான்.

மேல் முறையீட்டால் தண்டனை ஆறாண்டாக குறைக்கப்பட்டது. சிறையிலும் சிறைக் கைதிகளுக்காக போராடினார் வ.உ.சி. பிரிட்டிசாரின் தண்டனை கொடுமையால் வ.உ.சியின் உடல் நலிவுற்றது. இதனால் பிரிட்டிஷ் அரசுக்கு அவரை விடுதலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படவே 1912இல் சிறையிலிருந்து விடுதலை ஆனார் வ.உ.சி.

சிறையில் இருந்து வெளியே வந்தவரை வரவேற்க பெரிய கூட்டம் ஒன்றும் கூடியிருக்கவில்லை. தள்ளாடிய நிலையில் உடலில் வலுவற்று நிற்க முடியாமல் ஒரு தொழுநோயாளியும்  அவருடன் நான்கு ஐந்து பேர்தான் நின்று கொண்டிருந்தனர் வ.உ.சியை வரவேற்க,  வ. உ .சிக்கு  அதிர்ச்சியாய் இருந்த போதும் அந்த தொழு நோயாளியை அழைத்து "நீ யாரப்பா?" என கேட்கவும், என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் உன் நண்பன் சுப்பிரமணிய சிவா என்றார். சிறைபட்ட காலத்தில் சிவா தொழுநோய்க்கு ஆட்பட்டார். மனதை திடப்படுத்திக் கொண்டு, "நம்முடைய கப்பல் என்னவானது?" என்று வ.உ.சி சிவாவிடம் கேட்க, "அது வெள்ளைக்காரனின் கைகளுக்கே போய்விட்டது" என்றார். வ உ சி க்கு பெரும் ஆத்திரம்தான் வந்தது. "அதை துண்டு துண்டாக்கி கடலில் எறிந்திருந்தாலும் கூட அகம் மகிழ்ந்திருப்பேன்” என ஆவேசப்பட்டார்.

சிறை வாழ்விற்கு பின்னர், வ.உ.சி. காந்தியாரின் கொள்கையோடு  ஒத்துப் போகவில்லை. வ.உ.சிக்கு காந்தியின் மீது தனிப்பட்ட கசப்பும் இருந்தது. சிறையில் இருந்து திரும்பிய வ.உ.சி. யின் குடும்பத்தின் வறுமையை போக்க 50,000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சி யிடம் ஒப்படைக்குமாறு காந்தியிடம் தென்னாப்பிரிக்க தமிழர்கள் கொடுத்தனர். அந்த பணத்தினை கடிதம் மூலமும் நேரிலும் பல முறை காந்தியிடம் கேட்டும் அந்த பணத்தை வ.உ.சி இடம் தரவே இல்லை காந்தி.

காந்தியின் போக்கில் நம்பிக்கையற்றிருந்த வ.உ.சி அன்றைய கட்டத்தில் காந்தியவாதியாக இருந்த பா.ஜீவானந்தம் நடத்தி வந்த ஆசிரமத்தை பார்க்க சென்றார். ஆசிரமத்தில் இருந்த ராட்டைகளை பார்த்தவுடன், "இங்கு உள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?" என்று ஜீவாவிடம் கேட்க, அதற்கு அவரும் ஆம்! என்று பதில் அளித்தார். "முட்டாள்தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டையை சுற்ற சொல்கிறாயே.." என்று ஜீவாவை கடிந்து கொண்டார் வ.உ.சி.

தனது இறுதிகாலத்தில் மளிகை கடை நடத்தியும், மண்ணெண்ணெய் விற்றும் வாழ்ந்தார். காந்தியின் சமரச தலைமையிலான காங்கிரசின் அரசியல் மீது நம்பிக்கையற்றிருந்தவர்  இறுதி வரை சமரசமற்ற சுதந்திர போராட்ட வீரராகவே வாழ்ந்து மறைந்தார்.

1947ல் ஆட்சி மாற்றத்தால் கிடைத்த அரைகுறை உரிமைகளும் இன்று பறிக்கப்பட்டுவிட்டது. இந்திய நாடு ஒரு புதியகாலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு நாட்டின் செல்வங்கள் நாள்தோறும் சுரண்டபடுகிறது. நாட்டின் மக்கள் பாசிச ஆட்சியாளர்களின் கொடுங் கரங்களால் நெரிக்கப்படுகிறார்கள். இன்று நேரடியாக துப்பாக்கியை வைத்துக்கொண்டு வெள்ளையன் இல்லையே தவிர, காலனியாதிக்கம் புதிய வகையில் தொடர்கிறது. ஏகாதிபத்திய சுரண்டல் தீவீரம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. எப்படிப்பட்ட சுதந்திரம் வேண்டி வ.உ.சி போன்ற வீரர்கள் போராடினார்களோ அந்த சுதந்திரம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. அவர்களின் வழியில் உண்மையான சுதந்திரப் போராட்டத்தை நடத்தி நாட்டை விடுவிக்க நாம் வ.உ.சியை போல் நெஞ்சுரம் கொள்வோம்!

என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்

என ஏங்கிய வ.உ.சியின் சுதந்திர தாகத்தை

ஆடுவோமே பள்ளு பாடுவோமே 

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்ற பாரதியின் ஆனந்த வரிகளால் தீர்த்துவைப்போம்.

வீர சுதந்திரப் போரை தொடர்வோம்!

- செந்தளம் செய்திப் பிரிவு