ஜென்னி - மார்க்ஸ் காதல், காதலுக்கு ஓர் புது இலக்கணம்
“காதல் ஒரு மனிதனை மேலும் மனிதனாக்குகிறது” - காரல் மார்க்ஸ்
ஜென்னி வொன் வெஸ்ட்பாலன் வடக்கு ஜெர்மனியில் உள்ள சால்ஸ்வெடெல் என்ற சிறிய நகரத்தில் ஒரு சாதாரண பிரபுக் குடும்பத்தில் பிப்ரவரி 12, 1814 பிறந்தார். அவரது தந்தை லுட்விக் வான் வெஸ்ட்பாலன், ஒரு அரசு ஊழியராக பணியாற்றினார். அவர் மார்க்சின் தந்தையின் நண்பர். மார்க்ஸ் அடிக்கடி தனது தந்தையின் நண்பரான லுட்விக் வான் வெஸ்ட்பாலன் வீட்டிற்கு செல்வார். எனவே ஜென்னி மற்றும் கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ் ஆகியோர் பால்ய நண்பர்களானார்கள். ஜென்னி, மார்க்ஸுடன் அடிக்கடி நடைபயிற்சி செல்வார், அங்கு அவர்கள் தத்துவம் மற்றும் ஆங்கில இலக்கியம் பற்றி விவாதிப்பார்கள். அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் இருந்தனர். மார்க்ஸை விட நான்கு வயது மூத்தவளான ஜென்னி, மார்க்சின் ஆழ்ந்த சிந்தனையாலும் முற்போக்கு தன்மையாலும் ஈர்க்கப்பட்டு காதலிக்கத் தொடங்கினார். ஜென்னி - மார்க்ஸ் திருமணம் 19 ஜூன் 1843 இல் ஜெர்மனியின் பாலடினேட்டில் நடந்தது.
ரோமியோ- ஜூலியட், லைலா- மஜ்னு போன்று தங்களுக்கான காதலை நிலை நிறுத்திக்கொள்ள முடியாத வர்ணனை கதை காவியம் போல் அல்லாமல் ஜென்னி - மார்க்ஸ் காதலானது மனித குலத்தின் அடுத்த வளர்ச்சிக்கான ஒரு பாட்டாளி வர்க்க வளர்ச்ச்சிக்கான (காவியம்) காதலாக திகழ்ந்தது என்பது மிகையல்ல. ஆம், காதல் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதுமான இயற்கையானதுமான ஒன்று. மனித குல வளர்ச்சியில் இது ஒரு அத்தியாயம் எனலாம். உயிர்களின் தோற்றத்திற்குப் பின்பு, உயிரினங்களின் இனவிருத்தி அவசியமானது, இயற்கையானது; அவ்வினவருத்தியானது, அனைத்து உயிர்களுக்கும் இடையேயும் வெறுமனே இனவிருத்திக்காக மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையின் வளர்ச்சியிலும் பங்கு கொள்ள வேண்டியுள்ளதால், அவை ஆண் பெண் இரு உயிர்களும் சேர்ந்த காதலாக, அடுத்த தன் வாரிசுக்கான வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாய் இருந்து வருகிறது. தனது இளம் பருவத்தில் எல்லோரையும் போல காரல் மார்க்சின் அறிவு, ஆழ்ந்த சிந்தனையால் ஈர்க்கப்பட்டு காதலித்த ஜென்னியின் காதலானது வித்தியாசமானது. தனது குடும்பம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி என்பதை கடந்து மனித குலத்தின் வளர்ச்சி அதற்கான தத்துவம், அதற்கு தடையாக உள்ள முதலாளித்துவ கோட்பாடு (உபரி மதிப்பு) போன்ற பொருளாதார, அரசியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காரல் மார்க்சுக்கு துணையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் ஜென்னி மார்க்ஸ்.
1845 இல், பிரெஞ்சு அரசியல் காவல்துறை காரல் மார்க்ஸ் மற்றும் கர்ப்பிணி ஜென்னியை வெளியேற்றியது; இதனால் லாராவின் பிறப்பு பிரஸ்ஸல்ஸில் நடந்தது. 1848 ஆம் ஆண்டில், பிரஸ்ஸல்ஸ் காவல்துறை ஜென்னியைத் தடுத்து நிறுத்தி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நாடுகடத்துதல் உத்தரவை வழங்கியது. மார்க்ஸ் பாரிஸுக்குத் திரும்பி, பின்னர் கொலோனுக்குச் சென்றார். 1848 இல் ஜெர்மன் மாநிலங்கள் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகர எழுச்சிகள் நடந்தன. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காரல் மார்க்சால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிரஷ்ய அதிகாரிகள் கார்ல் மார்க்ஸை பிரான்சுக்கு நாடு கடத்தினார்கள். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் உள்ள லண்டனுக்கு புறப்பட்டார். 1856 இல், பல நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு இறுதியில் லண்டனில் வாழ்ந்து வந்தனர். மார்க்ஸ் குடும்பம் லண்டனில் இருந்த காலத்தைப் பற்றி தத்துவஞானி லெஸ்ஸெக் கோலாகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்: “மார்க்ஸ் கணக்குகளை வைக்கத் தெரியாதவர், மேலும் ஜென்னி லண்டன் அடகு வியாபாரிகளின் வழக்கமான வாடிக்கையாளராக இருந்தார்”. பிரான்சிலுள்ள தனது 67வது வயதில் 1881 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி லண்டனில் இறந்தார் ஜென்னி மார்க்ஸ்.
தன் பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுக்க, தனது மார்பில் இரத்தம் கசிந்த வறுமையிலும், குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில், சவப்பெட்டி வாங்க தனது வீட்டு சாமானங்களை விற்ற அளப்பரிய வறுமையின் பிடியிலும் கூட தனது இறுதி மூச்சுவரை பாட்டாளி வர்க்க ஆசான் கார்ல் மார்க்சின் துணை நின்று, மனித குல பாட்டாளி வர்க்க வளர்ச்க்கு வித்திட்ட, காதலுக்கு புது இலக்கணம் படைத்த, உலக பாட்டாளி வர்க்க மக்களின் ‘மகத்தான தாய்’ ஜென்னி மார்க்ஸின் நினைவை போற்றுவோம்! பாட்டாளி வர்க்க பூவுலகம் படைப்போம் !! வாருங்கள் ஓர் அணியில் !!!
- செந்தளம் செய்திப் பிரிவு