முதல் “மேதின போராட்டத்தை முன்னெடுத்த” தொழிலாளி வர்க்க தோழன் சிங்காரவேலு…..
செந்தளம் செய்திப் பிரிவு
மலையபுரம் சிங்காரவேலு 18 பிப்ரவரி 1860- ல் சென்னையில் ஒரு மீனவர் குடும்பத்தில், வெங்கடாசலம் மற்றும் வள்ளியம்மை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அவர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியிலும் பின்னர், 1907- ல் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றார். அதன்பிறகு சிங்காரவேலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இந்தியாவில், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் முன்னோடியாகயாகவும் ஏகாதிபத்திய எதிப்பாளராகவும் திகழ்ந்த அவர் 1918 இல், இந்தியாவில் முதல் தொழிற்சங்கத்தை நிறுவினார். 1923 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நாட்டில் முதன்முறையாக மே தினப் போராட்டத்தை முன்னெடுத்த பெருமைக்குரியவர். சிங்காரவேலர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவராக இருந்தார், ஆரம்பத்தில் காந்தியின் தலைமையின் கீழ் போராட்டத்தை மேற்கொண்டாலும், பின்னர் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் போன்றோருடன் சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்டார். 1925 இல், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தந்தைகளில் ஒருவரானார்; மற்றும் கான்பூரில் அதன் தொடக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மகுடத்திற்கு எதிராகப் போரை நடத்த சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மற்ற தலைவர்களுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். சுயராஜ்ஜியம் தனது பிறப்புரிமை என்றும் தொழிலாளிவர்க்க சுதந்திர போராட்டமே தீண்டாமையின் தீமைக்கு எதிரான ஆயுதமாகக் இருக்கும் என்றும் கருதினார். குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான சம உரிமைக்காகப் போராடிய சென்னை மாகாணத்தில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணி தலைவராகவும் திகழ்ந்தார். அவர் உடல்நிலை காரணமாக தனது தீவிர அரசியலில் நடைமுறையிலிருந்து இருந்து விலகி இருந்தாலும், தனது இறுதி மூச்சுவரை சுதந்திர போராட்டவீரராக இருந்து, 11 பிப்ரவரி 1946 ல் இறந்தார். அவர் இறந்தாலும், இந்தியாவில் முதல் மேதின போராட்டத்தை முன்னெடுத்த தொழிலாளி வர்க்க தோழன் சிங்காரவேலுவின் பிறந்த நாளில் அவர் கனவை நினைவாக்குவோம் பாட்டாளி வர்க்க புதுஉலகம் படைப்போம் வாருங்கள் ! வெற்றிகொள்வோம் ஒன்றுச் சேருங்கள் !!
- செந்தளம் செய்திப் பிரிவு