லெனின் நினைவுநாளில் ஸ்டாலின்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க அறைகூவல்

லெனின் நினைவுநாளில் ஸ்டாலின்

1924 ஜனவரி 21 அன்று சோவியத்துக்களின் மாநாடு நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் ஆற்றிய உரை: 

தோழர்களே!

கம்யூனிஸ்ட்களாகிய நாம் தனிச் சிறப்பு மிக்க வார்ப்புகள். தோழர் லெனின் அவர்களது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தினர்கள். இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருந்து நெருக்கடிகள், தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது எல்லோராலும் முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்களாலும், ஏழ்மை அதிலும் போராட்ட உணர்வு கொண்டவர்களால் தான் முடியும்.

இதனால் தான் லெனினியவாதிகளாக உள்ள நம் கட்சி கம்யூனிஸ்ட்களின் கட்சி, உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என அழைக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழர் லெனின் கட்சியின் உறுப்பினர் என்ற பெரும் பொறுப்பை தூய்மையுடன் பாதுகாக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

இம்மாநாட்டின் மூலம் அவருக்கு நாம் கூறுகிறோம். தோழர் லெனின்! உங்களது கட்டளையை நிறைவேற்றுவோம். நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். கண்ணின் மணிபோல் கட்சி ஒற்றுமையைக் காக்கக் கோரி இருக்கிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்க வலுப்படுத்தக் கோரி இருக்கிறார்.

தொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பை முழு ஆற்றலுடன் வலுப்படுத்தக் கோரி உள்ளார். சோவியத் ஒன்றியங்களின் குடியரசுகளை வலிமைப்படுத்தக் கோரி உள்ளார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளுக்கு உண்மையுடன் நடந்துகொள்ளக் கோரியுள்ளார்.

தோழர். லெனின் அவர்களே! இக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்.

மேற்கண்ட நோக்கங்களை வலிமைப்படுத்த விரிவாக்கம் செய்திட எம் உயிரைத் துச்சமெனக் கருதிடுவோம்!