ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி - பாரதி
செந்தளம் செய்திப் பிரிவு
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?….
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில், சின்னசாமி ஐயர் - இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882- இல் பாரதியார் பிறந்தார். தம் தாய்மொழி தமிழின் மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்"
எனப் பாடினார்.
சுப்பிரமணிய பாரதி, வங்காளம், இந்தி, சமற்கிருதம், பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் தன்மைகளுடன் பரிணமித்தவர். இவர் தனது கவித்திறனால் சுதந்திர போருக்கான எழுச்சி கவிதைகளை பல இயற்றினார், 1907 ஆம் ஆண்டில் “இந்தியா”, “விஜயா” என்னும் வார ஏட்டையும் “பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். இந்தியா விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். உ.வே. சாமிநாத ஐயர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, அரவிந்தர், பகத்சிங் ஆகிய இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் சமகாலத்தில் பயணித்தவர். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிக்கையை விடுதலைப் போராட்டத்திற்காகவே பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது.
பாரதியும் சோவியத் ஒன்றியமும்:
1905 ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:
"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்
பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்
உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக”
இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்:
“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்”
இந்தக் கட்டுரையைப் பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7-ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. பல மொழி பேசும் இந்திய நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் அனைவரிலும், அப் புரட்சியை முதன் முதலில் வாழ்த்தி வரவேற்றுப் பாடிய கவிஞராகத் திகழ்ந்தார் பாரதி :
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”
என்று கூறி,
"வையகத்தீர், புதுமை காணீர்"
என்று உலகினரையும் அறைகூவி அழைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு கனலை கக்கினார் தனது கவிதையால்:
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்.
அடிமைக்குத் தளையில்லை, யாரும் இப்போது
அடிமையில்லை அறிக என்றார்.
இடிபட்ட சுவர் போல கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!
எனவே அவர் மனிதகுலத்துக்கு ஒரு புதிய யுகத்தைக் கொண்டு வந்த அந்தப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார் என்பது தெளிவு.
மேலும், இந்திய ஒற்றுமைக்கும், சுதந்திர போராட்டத்திற்கும்;
முப்பது கோடி முகமுடையாள் உயிர் -
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்
என பாடி, அனைத்து மக்களையும் தனது கவித்திரானால் ஒன்றிணைத்து சுதந்திரக்கனலை மூட்டினார்.
சாதி தீண்டாமை மூடநம்பிக்கைக்கு புரட்சி தீ மூட்டினார்:
"சாதியத் தன்னலக் கொள்கையின் உள்மன நிலைமை ஜனத்திற்கு ஏற்பட்ட மூளைவியாதியைத் தவிர வேறில்லை"
என்றும்
உதட்டளவில் மட்டும் சாதியை ஒழிப்பதாகக் கூறிவிட்டு உள்ளுக்குள்ளே சாதிவெறியை வளர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் சாதி என்ற நச்சுணர்வை விதைத்து விடுகின்றனர். அவர்கள் வளர வளர அந்தத் தீய உணர்வும் வளர்கிறது. அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் சாதிகள் இல்லை என்ற உணர்வை விதைக்க வேண்டும் என்றும்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்
என்றும்
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே ….
என்றும் மூட நம்பிக்கையும் அகற்ற பாடினார் பாரதி.
தன் பேனா எழுத்துக்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் பாரதியார். அவரது பத்திரிக்கை பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்தது. இதனை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த பத்திரிகையை படிக்க தடை விதித்தது. இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த “இந்தியா” பத்திரிகையும் பாதை அறியாது பாதியில் நின்றது. 1918 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார் பாரதியார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அக்காலகட்டத்தில் பாரதியாரை வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டபோதும் யானையால் தூக்கிவீசப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் சுதந்திர போராட்டத்திலும் நிலைத்து நின்று “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று யுகப் புரட்சிக்கான ராகம் தனது இறுதி மூச்சுவரை பாடினார். இறுதியில், அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவுலக வாழ்வை நீத்தார். அவர் இறந்தாலும், அவர் கண்ட கனவான பாட்டாளி வர்க்க யுகப்புரட்சியை அவர் பிறந்த நாளில் முன்னெடுப்போம் வாருங்கள் ! வெற்றிகொள்வோம் ஓர் அணியாக சேருங்கள் !!
- செந்தளம் செய்திப்பிரிவு