தோழர் ரெட் [எ] மாணிக்கம் நினைவு நீடூழி வாழ்க!

முதலாம் ஆண்டு செவ்வஞ்சலி!

தோழர் ரெட் [எ] மாணிக்கம் நினைவு நீடூழி வாழ்க!

மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையையும், ஏ.எம்.கே வழியையும் இறுதிவரை உயர்த்தி பிடித்த தோழர் ரெட் [எ] மாணிக்கம் நினைவு நீடூழி வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! விவசாயிகளே! தொழிலாளர்களே! ஜனநாயகத்தை விரும்பும் சான்றோர்களே! தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தோழர் ரெட் (எ) மாணிக்கம் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனைகளை, ஏ.எம்.கே வழியையும் உயர்த்திப் பிடித்தவர். தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் மஜஇக-வின் சென்னை-செங்கை மாவட்ட அமைப்பாளராகச் செயல்பட்டார். ஏகாதிபத்திய அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்தை - தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார பிறபோக்கு ஆட்சியை எதிர்த்தும், இந்தியாவில் புரையோடிப் போயுள்ள சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டவும், உண்மையான விடுதலைக்கும் ஜனநாயகத்திற்காகவும் போராடிய ரெட் அவர்களின் முதலாம் ஆண்டு (19.10.2022) நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவரது தியாகத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் உயர்த்திப் பிடிப்போம்!

1970ஆம் ஆண்டு இ.க.க.(மா-லெ) அமைப்பு உருவாகியது. அது இந்தியா முழுவதும் ஒரு புரட்சிகர எழுச்சியை, அனைத்து உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் உருவாக்கியது. ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்திய துணைக் கண்டத்தை விடுதலை செய்யவும். தரகு முதலாளித்துவ நிலவுடைமை ஆதிக்கத்தைத் தகர்த்து மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஒரு சரியான திட்டத்தை முன்வைத்தது. இடது, வலது போலி கம்யூனிஸ்ட்டுகளின் 45 ஆண்டுக்கால திருத்தல்வாத வழிக்கு மரண அடி கொடுத்தது.

நிலவுடைமை சுரண்டல், சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைத்தது. இப்போராட்டங்களின் தொடக்க காலத்தில் தோழர் ரெட் அவர்களின் புரட்சிகர அரசியல் வாழ்வும் தொடங்கியது.

அதன் பிறகு, 1980 ஆம் ஆண்டு உதயமான மக்கள் யுத்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு முழுவீச்சுடன் செயல்பட்டார். மக்கள் யுத்த கட்சியில் நிலவிய போர் குணமிக்க பொருளதாரவாதம் மற்றும் அழித்தொழிப்பு என்ற இரு தன்னியல்பு வழியையும் ஏ.எம்.கே. முறியடித்து ஒரு சரியான மார்க்சிய-லெனினிய அரசியல் வழியை முன்வைத்து 1988ல் மக்கள் யுத்தம் (போல்ஷ்விக்) கட்சியைக் கட்டினார். அக்கட்சியில் தன் உயிர் மூச்சு உள்ள வரை மிகவும் அர்ப்பணிப்போடு தோழர் ரெட் செயல்பட்டார். தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதி, தலைமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை 30 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவு வாழ்வு, 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை என அளப்பரிய தியாகம், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர் தோழர் ரெட் ஆவார்.

சிறையிலிருந்து வெளிவந்த பின்பு 2000ஆம் ஆண்டிலிருந்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் முன்னணி தோழராகவும், எமது அமைப்பு எடுத்த எல்லா அரசியல் போராட்டங்களிலும் முன்னின்று அர்ப்பணிப்போடு போராடினார். பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள், தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள், தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான போராட்டங்கள், விவசாயிகளுக்கான போராட்டங்கள், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணித் தோழராக ஈடுபட்டார். இந்திய நாட்டை அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்காகவும், அதன் மறுபங்கீடு யுத்தவெறிகளுக்கு எதிராகவும், இந்திய இராணுவத்தை அமெரிக்காவின் ஒரு எடுபிடி படையாக மாற்றும் இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று போராடியவர் தோழர் ரெட் ஆவார்.

கோவையில் திமுக ஆட்சி நடத்திய செம்மொழி மாநாட்டை எதிர்த்து பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் அமைப்பு நடத்திய போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றார். தருமபுரி நாய்க்கன் கொட்டாய் பகுதியில் சுற்றியுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டியில் உள்ள தாழத்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி அமைப்பான பாமக தலைமையில் வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் திட்டமிட்டு நடத்திய சாதிவெறி தாக்குதலை எதிர்த்த போராட்டத்திலும் பங்கெடுத்து சிறை சென்றார்.

இவ்வாறு, அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் உறுதியாக நின்று போராடியவர். தன் குடும்பம் முழுவதையும் புரட்சிகர அரசியலில் ஈடுபடுத்தியவர். தோழர்களிடம் மிகவும் தோழமையுடன் பழகுபவர். அதே போல அமைப்பின் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைத்து வாதிப்பவர் தோழர் ரெட் ஆவார்.

தோழர் ஏ.எம்.கே. இருந்த போது, அமைப்பில் தோன்றிய கோஷ்டிவாத எய்ம் தொண்டு நிறுவன ஊடுருவலுக்கு எதிரான போராட்டத்தில், கட்சியின் பக்கம் நின்று கட்சியைப் பாதுகாக்க உறுதியாகத் தோழர் ரெட் போராடினார். ஏ.எம்.கே. மறைந்த பிறகு மார்க்சிய-லெனினியத்தின் மீதும், ஸ்டாலின் மீதும், ஏ.எம்.கே வழியின் மீதும் தாக்குதல் நடத்திய டிராட்ஸ்கிய கலைப்புவாத, கோஷ்டிவாத சதிகளை எதிர்த்து கட்சியைக் காக்க தோழர் ரெட் போராடினார். டிராட்ஸ்கியவாதிகள் கட்சியை உடைத்து பிளவுபடுத்த கட்சிக்குள் இருந்துகொண்டே புதிய கோஷ்டிவாத அமைப்பை கட்ட முயன்ற போது அது குறித்து தகவலை அமைப்புக்குத் தெரியப்படுத்தி அமைப்பைக் காப்பாற்றியதில் மிக முக்கிய பங்காற்றினார். இது மட்டுமின்றி அமைப்பில் இதுவரை தோன்றிய அனைத்து கலைப்புவாதப் போக்குகளையும் எதிர்த்து அமைப்பின் பக்கம் நின்று போராடினார்.

மரணம் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் அந்த மரணம் மக்களுக்காக போராடும் போது மட்டுமே மதிப்புக்குரியதாக மாறுகிறது. அந்த வகையில் தோழர் ரெட் அவர்களின் மரணம் என்பது இமயமலையை விட கணமானது. அவர் எந்த இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரோ அந்த இலட்சிய தீபத்தை உயர்த்திப் பிடிப்போம். மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளால் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டு வரலாறு காணாத வறுமை, வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலையை மூடிமறைக்கும் சதிகளை முறியடிக்கவும், அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாகக் காட்டும் இந்துத்துவ பாசிச் மோடி அமித்ஷா கும்பலின் ராமராஜ்ஜியத்தை வீழ்த்துவதற்கும் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்கவும் தோழரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சூளுரைப்போம்! தோழர் ரெட்டின் நினைவு நீடூழி வாழ்க! புதிய ஜனநாயக புரட்சி ஓங்குக! மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனை வெல்க!

மக்களுக்காக இறப்பது இமய மலையை விட கணமானது!

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கபடுகிறார்கள்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் 

- சமரன் 

(செப்டம்பர் - அக்டோபர் 2022 இதழிலிருந்து)