மாஞ்சோலை தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

செந்தளம்

மாஞ்சோலை தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

இன்று ஜூலை-23 மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்! கருணாநிதி அரசு கூலி கேட்டு போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து அடித்தே படுகொலை செய்தது. ஸ்டாலின் அரசோ மாஞ்சோலை தொழிலாளர்களை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து இன்று முற்றாக துரத்தியுள்ளது. 

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் இருந்து பி.பி.டி.சி நிறுவனத்தின் கொடூர உழைப்பு சுரண்டலுக்கு ஆளான மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலைமைகள் சொல்லி மாளாது. 1947 அரைகுறை சுதந்திரத்திற்கு பின்பாகவும் அவர்களின் வாழ்வில் எந்த உரிமையும் இல்லாமல் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாகினர். தங்கள் உரிமைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். 1999இல் மிக சொற்பமான 50 ரூபாய் கூலியை உயர்த்தி 150 ரூபாயாக வழங்க கோரி போராடிய 600க்கும் மேற்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கருணாநிதி அரசு சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும் கூலியை உயர்த்தி வழங்க கோரியும் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை ஜூலை 23ல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து படுகொலை செய்தது கருணாநிதியின் போலீஸ் படை. இரண்டு வயது குழந்தை அதன் தாய் உள்ளிட்ட 17 பேரை படுகொலை செய்த கருணாநிதி அரசு தமிழகத்தில் ஒரு ஜாலியன் வாலாபாக்கை அரங்கேற்றி தனது கொடூர கோர முகத்தை காட்டியது. 

இந்திரா ஆட்சி காலத்திலிருந்து கார்ப்பரேட் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட வனச்சட்டத்தின் தொடர்ச்சியாக, ராஜுவ் ஆட்சியில் திருத்தப்பட்ட வன சட்டம் வனங்களின் மீதான மாநில உரிமைகளை பறித்தது. அதன் தொடர்ச்சியாக 1988 இல் மாஞ்சோலை வனப்பகுதியும் மேற்கு தொடர்ச்சி மலையின் 795 சதுர கிலோமீட்டர் பகுதியும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பி.பி.டி.சி நிறுவனம் இந்த அறிவிப்பிற்கு எதிராக வழக்குகளை தொடுத்தது. பிபிடிசி நிறுவனம் தொடந்த வழக்குகளை 2017 உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி 2028க்குள் மாஞ்சோலியிலிருந்து பிபிடிசி நிறுவனத்தை வெளியேறவும் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்தது 

2028ல் பிபிடிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று உத்தரவு கூறினாலும் கடந்த ஆண்டே தொழிலாளர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசும் ஆளும் வர்க்கமும் வேகமாக செய்ய துவங்கிவிட்டது. இந்த பாய்ச்சலுக்கான அடிப்படை, கடந்த 2023 ஆம் ஆண்டு பாசிச மோடி கும்பல் கொண்டு வந்த வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கச் சட்டமே காரணமாகும். வனங்களிலிருந்து பழங்குடிகளை விரட்டி  அடித்து விட்டு  அமெரிக்க ஏகாதிபத்திற்கு சேவை செய்யும் வகையில் உதான், சாகர்மாலா, பாரத்மாலா போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி கனிம வளங்களை கொள்ளையிடுவதும் அம்பானி அதானி போன்ற பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வன நிலங்களை கொள்ளை அடிக்க விடுவதும் அதற்காக காடுகளில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், வேலி அமைத்தல், பாலம் போன்றவற்றை நிறுவுதல் உயிரியல் பூங்கா, வன உலா மற்றும் சுற்றுலா வசதிகள் செயற்கை வனங்கள் போன்றவற்றை அமைப்பது என்ற திட்டத்திற்கு சேவை செய்வதுதான் மோடியின் வன (திருத்தச்) சட்டமாகும். முக்கியமாக ஆற்றல் துறைகளில் தேவையான கனிமங்களை மூல வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டியில் சீனாவிற்கு போட்டியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வளங்களை கைப்பற்றி கொள்வதற்கு இந்த வன (திருத்தச்) சட்டம் வழிவகுக்கிறது. 

இதன் நோக்கத்தில் இருந்துதான் மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வளங்களை ஏகாதிபத்திய கார்ப்பரேட் கொள்ளைக்களமாக மாற்றுவதற்கும் மாஞ்சோலை மக்களை விரட்டி அடிப்பதற்கும் ஆளும் வர்க்கங்கள் தீவிரம் காட்டி உள்ளன.

பிபிடிசி நிறுவனத்தின் மூலம் கட்டாய ஓய்வு கொடுத்து அந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களை பிபிடிசி நிறுவனத்தின் மூலமாக ஆளும் வர்க்கங்கள் விரட்டி அடித்துள்ளன. 

ஆரிய மாடல் + திராவிட மாடல் = கார்ப்பரேட் மாடல்!

ஒரு பக்கம் மோடி அரசு மலைவாழ் மக்களை நாடு முழுவதும் வேட்டையாடி வருகிறது. தற்போது ஆபரேசன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதாக கூறி மலைவாழ் பழங்குடிகளை கொன்றொழித்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சிதான் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை விரட்டி அடிப்பதும் ஆகும். ஆனால் பாஜகவிற்கு மாற்று என்று பேசி ஏமாற்றும் திராவிட மாடல் பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு துணை போகிறது.

நயவஞ்சகமாக மாஞ்சோலை தொழிலாளர்களையும் விரட்டி அடித்துள்ளது. 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் தங்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்றத் தடை விதிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் வழக்கு தொடுத்த நிலையில், மாஞ்சோலையை அரசு ஏற்று நடத்த முடியாது என்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி புலம்பெயர கூடியவர்கள் என்றும் நீதி மன்றத்தில் கூறியதுடன் மாஞ்சோலை தொழிலாளர்களை மாஞ்சோலை தேயிலை தோட்டத்திலிருந்து வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று  வாதாடி துரோகம் இழைத்தது திராவிட மாடல் அரசு. அதுமட்டுமின்றி மாஞ்சோலை மக்களுக்கான தண்ணீரையும் மின்சாரத்தையும் கூட தடை செய்தது. தற்போது மோடி அரசும் திராவிட மாடல் அரசும் நீதிமன்றமும் நான்கு தலைமுறைகளாக உழைத்து வந்த மாஞ்சோலை மக்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து முற்றாக துரத்தியடித்து இருக்கின்றன என்பது மிகப்பெரும் வேதனையாகும்.

ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்காக வனமக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி துரத்தியடிக்கும்  பாசிச மோடி அரசு மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்யும் பாசிச அரசுகளை வீழ்த்த மாஞ்சோலை தியாகிகள் நினைவு நாளில் சபதமேற்போம்!

- செந்தளம்