சிறப்புக் கட்டுரை: கார்ப்பரேட்டுகளின் பிடியில் மேற்கு தொடர்ச்சிமலை! வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்!

சமரன்

சிறப்புக் கட்டுரை: கார்ப்பரேட்டுகளின் பிடியில் மேற்கு தொடர்ச்சிமலை!  வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்!

மாஞ்சோலை பெயருக்கேற்ப கண்களை குளிர வைக்கும் பசுமைப் போர்த்திய வனப்பகுதி. மாஞ்சோலையின் எழில்மிகு தேயிலைத் தோட்டத்தின் அழகினை தலைமுறைகளாக உழைத்துவரும், தொழிலாளர்களின் வியர்வையும், ரத்தமும் உயிர்பித்து வைத்திருக்கிறது. சமவெளிப் பகுதியைப் போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட கால சூழல் நிறைந்த வனப் பகுதி. அச்சூழலில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தேயிலைத் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாத அம்மக்களின் வாழ்வியல் முறை, சமவெளிக்கும் மலைக்குமான தூரத்தை அசலாக வெளிப்படுத்தக் கூடியதாகவுள்ளது மாஞ்சோலை வனப்பகுதி.

ஐந்து தலைமுறைக்கும் மேலாக தேயிலைத் தோட்டத்தில் உழைத்து வந்த அம்மக்கள் தங்கள் வாழும் உரிமை பறிக்கப்பட்டு - தங்கள் வாழ்விடமான மாஞ்சோலையிலிருந்து இன்று விரட்டப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசிற்கும் தேயிலைத் தோட்டத்தை நடத்தி வந்த பி.பி.டி.சி என்கிற பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் லிமிடெட்டிற்குமான குத்தகை காலம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், தற்போது விருப்ப ஓய்வின் பேரில் கட்டாய கையெழுத்து வாங்கப்பட்டு (பாஜக அரசின் உத்தரவின் பெயரில்) திமுக அரசால் வெளியேற்றப்படுகிறார்கள். இப்படி மாஞ்சோலை மக்களை அவசர அவசரமாக வெளியேற்றுவதன் நோக்கம் - அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் எழில் மிகு மாஞ்சோலை வனப்பகுதியை, தாரை வார்ப்பதே ஆகும். குறிப்பிட்டு சொல்வதெனில் வனத்திலிருந்து இயற்கையாக பெறப்படும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், தேன் உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிரினங்களிடமிருந்து பெறப்படும் மருந்துகள் இவற்றின் மீதான உரிமையினை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கவும், சுற்றுலா மையாக மாற்றி உயிரியல் பூங்கா, வன உலா, மற்றும் சுற்றுசூழல் சுற்றுலா வசதிகள் போன்றவற்றை அமைப்பதற்காக - கார்ப்பரேட் வனச்சட்டம் மற்றும் பல்லுயிர் பெருக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே - மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். இதுவே இதன் உள்ளிருக்கும் மர்மமாகும்!

ஆம்! குமரி முதல் குஜராத் வரை பரந்து விரிந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், அகத்தியர் மலை எனக் கூறப்படுகின்ற குமரி முதல் குமுளி வரையிலான மலைப்பகுதியானது பல்லுயிர் மையமாகும். இப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. மேலும், தாமிரபரணி ஆற்றுடன் 14 உப ஆறுகளும் உருவாகும் பகுதியாகும். இந்த பகுதியில்தான் 225 அரிய வகை தாவரங்களும், ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகளும் இருக்கின்றன. இப்பகுதியின் மையத்தில்தான் மாஞ்சோலையும் உள்ளது. இத்தகு பகுதியின் வனச் சூழலையும் மேற்சொன்னவற்றையும் பொருத்திப் பார்த்தால் மாஞ்சோலை தொழிலாளர்களின் வெளியேற்றம் ஏன் என்பது எளிமையாக புரியும்! பல்லுயிர் பெருக்க மண்டலமான மாஞ்சோலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையினை வனச்சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம் என்ற பெயரில் மோடி அரசு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க போகும் திட்டம் விளங்கும்!

உண்மையில் நாடு முழுவதும் காட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிட சுற்றுசூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, எனும் பெயரில் வன மக்களை வனங்களிலிருந்து வெளியேற்றி காட்டை கார்ப்பரேட் காமுகன்கள் கொள்ளையிட உள்நாட்டு மக்கள் மீது பாசிச மோடி கும்பல் காட்டு வேட்டை நடத்தி வனமக்களை வெளியேற்ற வருவதன் ஒரு பகுதிதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விரட்டியடிப்பு ஆகும்!

மாஞ்சோலை வரலாறு:

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் என்பது, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய ஊர்களை உள்ளடக்கி குறிப்பிடப்படுவதாகும். 18-ம் நூற்றாண்டில் திருவாங்கூர் இளவரசனாக இருந்த மார்த்தாண்ட வர்மனுக்கும், அவனது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் ஏற்பட்ட சண்டையில், மார்த்ததாண்ட வர்மன், சிங்கம் பட்டி ஜமீனின் உதவியை நாடினான். சிங்கம்பட்டி ஜமீனோடு போரில் வெற்றிப் பெற்ற மார்த்தாண்ட வர்மன், போரில் இறந்துப் போன சிங்கம்பட்டி இளவரசன் நல்லப் புலிக்குட்டிக்கு கைமாறு செய்யும் விதமாக, மாஞ்சோலை உள்ளடக்கிய சுமார் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நல்லப் புலிக்குட்டிக்கு வழங்கினான். அன்றிலிருந்து அப்பகுதியானது சிங்கம்பட்டி எஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 

1929இல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ் இந்த பகுதியின் சுமார் 8,000 ஏக்கர் நிலமானது பி.பி.டிசி நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் 1947- அரைகுறை சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கம்பட்டி ஜமீனின் இரயத்துவாரி நிலம் அரசுடமை ஆக்கப்பட்டதாக பொய்யாக அறிவித்துவிட்டு, குத்தகை காலத்தை நீட்டித்தல் என்ற பெயரில் பி.பி.டி.சி நிறுவனத்திடமே மாஞ்சோலையை ஒப்படைத்தது அன்றைய காங்கிரசு அரசு. 

பி.பி.டிசி எனும் இந்நிறுவனமானது, ஸ்காட்லாந்தைச் சார்ந்த வாலஸ் பிரதர்ஸ் குழுமத்தால் 1863ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பத்தில் பர்மா மரங்களைக்கொண்டு வந்து வர்த்தகம் செய்தது. 1913ல்தான் அந்நிறுவனம் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டது. முதலில் ஆணைமலையில் தேயிலைத் தோட்டத்தை வாங்கி நடத்திய நிறுவனம் 1920ல் மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தை வாங்கியது. இதன் பின்னரே அப்பகுதியில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு உள்ளிட்டவற்றை பயிரிட ஆரம்பித்தது, இப்பணிகளுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் தொழிலாளர்கள் அழைத்து வந்து வேலையில் ஈடுபடுத்தியது இந்நிறுவனம். கடும் மலையை தங்கள் ரத்தத்தாலும், வியர்வையாலும் வளம் நிறைந்த விளை நிலமாக மாற்றினர் அத்தொழிலாளர்கள். 1947 வாக்கில் இந்நிறுவனம் விஷன்ஜி என்ற தரகுமுதலாளித்துவ குழுமத்திடம் கைமாறியது. 1992 வாக்கில் பிசிஎல் ஸ்பிரிங்ஸ் நிறுவனத்துடன் இது இணைக்கப்பட்டது. அதன் பிறகு அந்நிறுவனம் வால்டியா குழுமத்திற்கு கைமாற்றப்பட்டது. தற்போது வரை - நஸ்லி வாடியா என்ற தரகுமுதலாளியின் - வாடியா குழுமத்தின் கையில்தான் உள்ளது. காலனிய ஆட்சியில் தொடங்கப்பட்டு தரகுமுதலாளிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டிருந்தாலும், குத்தகை ஒப்பந்தம் பிபிடிசியின் பெயரில் இருப்பதால் அது தொடர்ந்து அதே பெயரிலேயே இயங்கி வருகிறது.

பி.பி.டி.சி நிறுவனத்தின் கொடூர உழைப்பு சுரண்டலும் தொழிலாளர் போராட்டமும்:

பி.பி.டி.சி நிறுவனம் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைகள் கடித்து உறிஞ்சியதை விட பன்மடங்கு உறிஞ்சி குடித்து லாபம் பார்த்தது. தொழிலாளர்களுக்கு எந்தவித உரிமையையும் தரமறுத்த நிறுவனம் படுமோசமான கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தி வந்தது. விசப் பாம்புகள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், என இவற்றையெல்லாம் தாண்டி, உழைத்துக் கொட்டிய தொழிலாளர்களை பி.பி.டி.சி நிறுவனம் படுத்திய கொடுமைகள் சொல்லி மாளாது! குழந்தை பெற்ற தாய்மார்கள் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூட அனுமதிக்காமல் கொடூர உழைப்பு சுரண்டலை நிகழ்த்தியதோடு, பெண் தொழிலாளர்கள் மாதவிடாய் துணி மாற்றுவதற்குக்கூட அனுமதிக்காமல் கடந்த காலங்களில் இந்நிறுவனம் புரிந்த கொடுமைகளால், வரலாற்றுப் பக்கங்களில் உதிரம் சொட்டுகிறது. 1947 அதிகார மாற்றத்தால் கிடைத்த அரைகுறை உரிமைகளும் கூட மாஞ்சோலை மக்களுக்கு கிடைக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலைமை மோசமானதாகவே பார்க்க முடிகிறது. வாய்க்கும் கைக்கும் எட்டாத கூலியால் குமுறிக் கொண்டிருந்த மாஞ்சோலை தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக குரல் உயர்த்தினர். 

1951ல் முன்முதலாக தொழிற்சங்கம் துவக்கப்படுகிறது. இந்த தொழிற்சங்க துவக்கம், பி.பி.டி.சி நிறுவனத்திற்கும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்குமான நேரடி மோதலாக வெடித்தது. இதன் பின்பாக 1968ஆம் ஆண்டு "இட்லி ஸ்ட்ரைக்"கை தொழிலாளர்கள் நடத்தினர். மூன்று ஷிப்ட்டாக வேலை வாங்கப்பட்ட தொழிலாளர்களில் அதிகாலை 5மணி முதல் மதியம் 2மணிவரை ஷிப்ட் பார்க்கும் தொழிலாளர்களுக்கு, நிறுவனம் காலை உணவு கொடுக்காமல் பட்டினிப்போட்டு வேலை வாங்கியது. இதற்கு எதிராக காலை உணவு கொடுக்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள வைத்தனர்!

பின்பு 1978ல் தேயிலைக் கொழுந்தை கிள்ளிப் போடுவதற்கு ட்ராலி வண்டியை பயன்படுத்தச் சொல்லி நிறுவனம் கட்டாயப்படுத்தியதற்கு எதிராக போராடிய போது, நிறுவனம் மூன்று தொழிலாளர்களை சஸ்பென்ட் செய்தது. இதனை கண்டித்து ஆறு மாதகால தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பின்பே, சஸ்பென்ட் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். நிறுவனத்தின் ட்ராலி வண்டி திட்டமும் தோற்கடிக்கப்பட்டது.

1988ல் நடந்த டைம் ஸ்ட்ரைக்கிலும் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி கண்டது. இதனைத் தொடர்ந்து தொழிலார்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 ரூபாய் கூலியை 150 ஆக உயர்த்தி வழங்கக் கோரி போரடினர்.

அதை கண்டு சகிக்க முடியாத கபடதார நரியான கருணாநிதியின் தி.மு.க அரசு 600க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சிறைக் கொட்டடியில் அடைத்தது மட்டுமின்றி, 17 தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி சாகடித்து. தமிழகத்தில் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியது. 

1999-மறக்க முடியாத பச்சை படுகொலைகள்:

மத்தியில் பா.ஜ.க.விற்கு கருணாநிதி முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. மாநிலத்தில் தி.மு.க.வின் ஆட்சி. பல தலைமுறைகளாக, வேலை பார்த்து வந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பி.பி.டி.சி நிறுவனம் வெறும் 50 ரூபாய் மட்டுமே கூலி கொடுத்து வந்தது - இந்த சொற்ப கூலிக்கு மாறாக, 150 ரூபாயாக கூலியை உயர்த்தி வழங்க தொழிலாளர்கள் கோரினர். இத்தொழிலாளர்கள் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் பின் திரண்டனர். இந்த கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து 1999-ம் ஆண்டு ஜீன் மாதம் 8-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியிர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிற கட்சிளும் முன்னெடுத்தன.

போராடிய தொழிலாளர்களை தி.மு.க. அரசு கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தது. இதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட தங்கள் கணவன்மார்களை விடுவிக்கக் கோரி மறுநாள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் தி.மு.க. அரசு கைது செய்தது. கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரியும், கூலியை உயர்த்தி தரக் கோரியும் ஜூலை 23-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொழிலாளர்கள் அணி வகுத்தனர். தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை ஆட்சியர் வாங்க மறுத்துவிட்டார். கிட்டத்தட்ட 5,000 தொழிலாளர்கள் பங்கெடுத்த இந்த போராட்டத்தில், கூட்டத்தை கலைக்க போலீஸ் தொழிலாளர்களை கற்களை வீசியும், லத்தியைக் கொண்டும் தாக்கியது-வானத்தை நோக்கி துப்பாக்கியால் போலீஸ் படை சுட்டது. அச்சமடைந்த தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றைக் கடந்து தப்பிக்க முயன்றனர். ஆற்று தண்ணீரில் மூழ்கிய தொழிலாளர்களை கரையேறி தப்பித்து விடாமல் கரையில் நின்றபடியே வெறிகொண்ட போலீஸ் படை லத்தியால் அடித்து ஆற்று நீரில் மூழ்கடித்து கொன்றது. தொழிலாளர்களை காப்பாற்றவும், படம் பிடிக்கவும் முயன்ற பத்திரிக்கையாளர்களும் கொலை வெறியோடு தாக்கப்பட்டனர். இப்படி கூலி உயர்வு கேட்டுப் போராடிய - இரண்டு வயது குழந்தை அதன் தாய் உள்ளிட்ட - 17 பேரை தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து அடித்தே சாகடித்தது கருணாநிதி அரசு. ஈவிரக்கமற்று மிகக் கொடூரான அரச பயங்கரவாதத்தை ஏவி தொழிலாளர்களை திட்டமிட்டு கொலை செய்த துரோகி கருணாநிதி அரசு, இங்கேயும் ஒரு ரத்த ஞாயிறை அரங்கேற்றியது.

பின்னர் போராட்டக்காரர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டு கற்களை வீசினர். காவலர்களை தாக்கினர். எனவே காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர் என கருணாநிதி நாகூசாமல் கூறியதை தமிழினமும் தொழிலாளி வர்க்கமும் என்றென்றும் மறவாது.

இந்த நேரத்தில் தமிழக சட்டமன்றத்தில் இன்றைய சபாநாயகராக இருக்கும் தி.மு.க.வின் அப்பாவு அவர்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர். தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அன்று அவர் பேசியதை இங்கே குறிப்பிடுவது முக்கியமானதாகும், அவர் பேசியதாவது...

"மாஞ்சோலை கலவரத்துக்கு காரணம் கருணாநிதிதான். முதுகுளத்தூர் கலவரத்தை ஜாதி ரீதியாக ஆக்கியது கருணாநிதிதான். மாஞ்சோலை கலவரத்துக்குப் பிறகு, கலெக்டரையும், டி.ஐ.ஜி.யையும் மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால் அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? இருவரையும் மாற்றினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என்று கூறினார். அவர் சொல்வதை வைத்து பார்த்ததால், தவறு செய்பவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் இருக்கிறது. 'இவ்வளவு பெரிய மனிதனுக்கு எவ்வளவு சின்ன புத்தி பாருங்கள்'" 

என்று பேசி அன்று கருணாநிதியின் துரோகத்தை அம்பலப்படுத்தினார். இன்று அதே அப்பாவு - கருணாநிதியின் துரோக அடிசுவட்டிலிருந்து ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் - சபாநாயகராக இருந்து மவுனிக்கிறார்.

அன்று போராட்டத்தை முன்னெடுத்த கிருஷ்ணசாமியின் இயக்கமோ அம்மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, நாடு முழுவதும் வனமக்களை வேட்டையாடிவரும் இந்துத்துவப் பாசிச மோடிக்கும்பலின் அனுமார் படையாகவும் மாறி போயுள்ளது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்நிலையைப் போக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத அதிமுக அரசும் இதுவரை வனங்களின் மீதான மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்ததே இல்லை. மோடி கும்பல் கொண்டு வந்த அனைத்து கொடூரச் சட்டங்களையும் எடப்பாடி கும்பல் ஆதரித்தே நின்றது. போலி கம்யூனிஸ்ட்டு கட்சிகளோ திமுகவின் கையடக்க அட்டை கத்திகளாகி காலஞ்சென்றுவிட்டது. 

மாஞ்சோலை தொழிலாளர்களோ, தங்கள் வாழ்வு பறிக்கப்பட்டு, வாழ்விடத்திலிருந்தே முற்றாக துரத்தப்படும் நிலையில் கண்ணீர் வடிக்கின்றனர்.

அகதிகளாக விரட்டப்படும் மாஞ்சோலை மக்கள்:

மாஞ்சோலையில் தபால் அலுவலகம், தொலைபேசி டவர்கள், ரேசன் கடைகள், அரசின் உயர்நிலைப் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளிகள், கூட்டுறவுப் பண்டகச் சாலை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தையும் காலி செய்துவிட்டு செல்லுமாறு விரட்டப்படும் அம்மக்கள் எங்கே செல்வார்கள்? தேயிலைத் தோட்டத் தொழிலைத் தவிர பிற தொழில் தெரியாத சுமார் 5000 மக்கள் எங்கு சென்று எப்படி பிழைப்பார்கள்? படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி அளிப்பார்கள்?

மாஞ்சோலை தொழிலாளியான ஜெயா என்பவர், எங்களுடைய ரேசன் கார்டு, ஓட்டுரிமை எல்லாம் இங்கே இருக்கிறது. பிள்ளைகள் இங்கே படிக்கின்றனர். இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்கிறார்கள் எல்லாவற்றையும் வேறொரு இடத்திற்கு எப்படி மாற்றுவது என்கிறார்? 46 வயதாகிவிட்டது எனக்கு இனிமேல் எங்கே போய் என்ன வேலை என்னால் கற்றுக்கொண்டு செய்ய முடியும்? என்கிறார் ஜெயாஸ்ரீ.

மாஞ்சோலை என்பது வெறும் தேயிலை எஸ்டேட் அல்ல, இங்கே வேலை பார்ப்பவர்கள் பலர் நான்கு தலைமுறையாக இங்கே வேலை செய்கின்றனர். இவர்களில் பலருக்கு 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தவிர வேறு ஊரையே தெரியாது. தெரிந்தாலும் அங்கே போய் வாழ்வது சாத்தியமற்றது என்கிறார் ராபர்ட். 

இம்மக்களின் வாழ்வியல் மொத்தத்தையும் இப்படி அடியோடு பெயர்த்தெறிந்தால் அவர்களின் கதி என்னாவது? எந்த மாற்றையும் அம்மக்களுக்கு ஏற்படுத்தி தாராத தி.மு.க. அரசு, மாஞ்சோலை தொழிலாளர்களை அவசர அவசரமாக விரட்டியடிக்கும் பி.பி.டி.சி. நிறுவனத்தின் பின்னிருந்து செயல்படுகிறது.

சுற்றுச்சூழலை காரணம் காட்டி தொழிலாளர்கள் வெளியேற்றம்:

1980ல் பாசிச இந்திராவின் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்ட வனச்சட்டத்தை, உலகமய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் விதமாக 1988ல் ராஜூவ் அரசு திருத்தி வனங்களின் மீதான மாநிலங்களின் உரிமையை பறித்தது. வனங்களை தனியார் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் துரோகத்தை தொடங்கி வைத்தது. அதன் ஒரு பகுதியாகதான் 1988ல் மாஞ்சோலை வனப்பகுதியையும் மேற்கு தொடர்ச்சி மலையின் 895 சதுர கிலோ மீட்டர் பகுதியையும் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகமாக தமிழக அரசு அறிவித்தது. இவ்வறிவிப்பிற்கு எதிராக, மாஞ்சோலை பகுதியை தங்களுக்கு சொந்தமானதாக பட்டா வழங்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் வனத் துறைக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தது பி.பி.டி.சி. நிறுவனம். 1995-ல் தொடர்ந்த இவ்வழக்குகளின் மீதான விசாரணையில் 32 ஆண்டுகளுக்குப் பின்னால் 2017-ல் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இவ்வுத்தரவின் மேல் முறையீட்டையும் 2018-ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மட்டுமின்றி 2028க்குள் பி.பி.டி.சி. நிறுவனம் மாஞ்சோலையிலிருந்து வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாஞ்சோலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் சுமார் 57,000 ஏக்கர் வனப்பகுதியை தமிழ்நாடு அரசு காப்புக் காடாக அறிவித்தது. இந்நிலையில்தான் அதாவது 2028 வரை இன்னும் நான்கு வருடம் பி.பி.டி.சி. நிறுவனம் வெளியேற அவகாசம் இருக்கும் பட்சத்தில்தான், தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப் படுகிறார்கள். 

உண்மையில் பார்க்குமிடத்து மாஞ்சோலைப் பகுதி பி.பி.டி.சி. நிறுவனத்திற்குத்தான் சொந்தமில்லையே ஒழிய, அம்மண்ணின் மைந்தர்களான தொழிலாளர்களுக்கு சொந்தமானதே ஆகும். வெளியேற வேண்டியது பி.பி.டி.சி நிறுவனம் தானே ஒழிய அம்மக்கள் அல்ல! ஆனால் மாஞ்சோலை மக்களை வெளியேற்றுவதில்தான் அரசு எந்திரம் முழுவதும் குறியாக இருக்கிறது. உண்மையில் சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி, வனச் சட்டங்களை காரணம் காட்டி நாடு முழுவதும் உள்ள வனப் பாதுகாவலர்களான மக்களை விரட்டியடித்துவிட்டு - பெரும் கார்ப்பரேட்டுகள் வன வளங்களை கொள்ளையடித்துச் செல்ல வழிவகுக்கும் மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சியே, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் வெளியேற்றம் ஆகும்.

வனப்பாதுகாப்புச் சட்டம்! வனங்களை வசப்படுத்தும் கார்ப்பரேட் திட்டம்!

கடந்த 2023ம் ஆண்டு பாசிச மோடி கும்பலால் கொண்டுவரப்பட்ட வனப்பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கச் சட்டமானது, இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழி வகுக்கக்கூடியதாகும். 1980-வனப்பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி மோடி அரசானது பல்வேறு திருத்தங்களை சென்ற ஆண்டு கொண்டு வந்தது. "வன் சன்ரக்சன் அவும் சம்வர்தன் அதிநியாயம்" என இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இச்சட்டம், மிகக் கொடூரமானதாகும். இச்சட்டதின் பெயரை இந்தி மொழியில் மாற்றி மொழியாக்கம் செய்வதோடு, வனங்களை பேணுதல் எனும் பொருள் தரும் சொல்லிற்கு மாறாக அதை நீக்கிவிட்டு மேம்படுத்துதல் எனக் கூறுவதன் முலம் வனத்தை வணிகமாக்கும் நோக்குடையது. 2030-க்குள் 2 பில்லியன் டன் அளவிற்கு கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தத்தான் இச்சட்டத்தை கொண்டு வருவதாக சவடால் அடித்தாலும் உண்மையில், இப்படி சொல்லி பன்னாட்டு நிறுவனங்களின் மின்சார வாகனச் சந்தைக்கும் அதற்கு தேவையான செமி கண்டக்டர், லித்தியம் பேட்டரி, ஈ.வி. ஜார்ஜிங் போன்ற தொழிற்கூடம் அமைப்பதற்கும் காட்டை திறந்து விடுவதாகும். மேலும் வனப்பரப்புகளை குவாரிகள் மற்றும் சுரங்கங்களாக மாற்றிட கார்ப்பரேட்டுகளின் கொள்கைக்கு துணைப் போவததாகவும் உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் எல்லைப் பகுதியில் இருந்து 100 கி.மீ.க்குள் உள்ள பரப்புகளுக்கு இச்சட்டத்தில் விலக்கு அளிப்பதன் மூலம், இராணுவக் கட்டமைப்புகளை உருவாக்க வனங்கள் அழிக்கப்படும். மேலும் வனங்களிலிருந்து பழங்குடிகளை விரட்டியடித்து விட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் எனும் பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய வகையில் உதான், சாகர் மாலா, பாரத் மாலா, போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி, கனிம வளங்களை கொள்ளையிடுவதற்கும் வித்திடுகிறது. அம்பானி, அதானி, போன்ற பெரும் கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு கார்ப்பரேட்களும் வன நிலங்களை கொள்ளையடிக்க ஏதுவாக காடுகளில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், வேலி அமைத்தல், பாலம் போன்றவற்றை நிறுவுதல், உயிரியில் பூங்கா, வன உலா, மற்றும் சுற்றுச் சூழல் சுற்றுலா வசதிகள், செயற்கையான வனங்கள், தோட்டங்கள் அமைப்பதற்கும் வழி வகுப்பதோடு வனங்களின் மீதான மாநில உரிமைகளை பறித்து மத்தியில் குவிக்கிறது.

முக்கியமாக இன்று ஆற்றல் துறைகளில் அத்தியாவசியமான கனிமங்களான லித்தியம், மாங்கனிசு, கிராஃபைட், நிக்கல் உள்ளிட்ட 30 வகையான அதிமுக்கிய கனிமங்கள் இன்று ஏகாதிபத்தியங்களுக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களாக உள்ளன. இந்த மூலவளத்தை கைப்பற்றுவதில் உலகெங்கும் ஏகாதிபத்தியங்கள் போட்டியில் உள்ளன. குறிப்பாக சீனாவிற்கு போட்டியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கண்ட கனிம வளங்களை கைப்பற்றிக் கொள்ளவே இச்சட்டம் வழிவகுக்கிறது. 

ஏற்கனவே காங்கிரசு அரசு கார்ப்பரேட்டுகள் மலைவளங்களை கொள்ளையடித்துச் செல்ல தடையாக இருந்த வனமக்களை அவர்களின் இடத்திலிருந்து விரட்டியடித்து வந்தது. மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி, பசுமை வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களை கொன்றொழித்து பாசிச தாண்டவமாடியது. தற்போதைய மோடிகும்பலின் வனசட்டம் மற்றும் பல்லுயிர் பெருக்க சட்டமானது, கார்ப்பரேட்டுகளின் கால்கள் காடுகளை நோக்கி செல்வதற்கான பாதையில் உள்ள சிறிய கற்களையும் முட்களையும் கூட அகற்றி அவர்களுக்கான பாதையை பதப்படுத்தியுள்ளது. இப்படி காட்டு வளங்களை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வதற்காகத்தான் மணிப்பூரில் குக்கி மக்களை குதறி கடித்து வருகிறது. குக்கி பெண்களை அம்மண ஊர்வலம் நடத்தியது. இன்று மாஞ்சோலை தொழிலாளர்களும் விரட்டப்படுகிறார்கள்.

பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின் பலிபீடத்தில் மாஞ்சேலை அகத்தியர்மலை:

இந்தியக் காடுகள் உலகின் 12 மிகப்பெரிய பல்லுயிர் மண்டலங்களில் ஒன்றாகும். மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளும் கிழக்கு இமயமலை பகுதிகளும் உலகில் உள்ள 32பல்லுயிர் பெருக்க மையங்களில் சிறந்தவையாக உள்ளன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கணக்கெடுப்பின்படி கடந்த 20ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் 11சதவீதம் அழிந்து போயுள்ளதாக கூறப்படுகிறது. இனி நிலைமை இன்னும் மோசமாகும்!

நாம் துவக்கத்தில் கூறியவாறு வனத்திலிருந்து இயற்கையாக பெறப்படும் தேன் உள்ளிட்ட - தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிரினங்களிடமிருந்து பெறப்படும் - மருந்துகள் இவற்றின் உரிமையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவும், சுற்றுலா மையமாக மாற்றி உயிரியல் பூங்கா வன உலா மற்றும் சுற்றுசூழல் சுற்றுலா வசதிகள் போன்றவற்றை அமைத்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவும் மேற்குதொடர்ச்சி மலை மேல் மாஞ்சோலை மக்கள் இடையூறாக இருக்கின்றனர். எனவே மாஞ்சோலை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள மருத்துவ பொக்கிஷங்கள் நிறைந்த பல்லாயிரம் மருத்துவ தாவர செடிவகைகளைக் கொண்ட அகத்தியர் மலை உள்ளடங்கி மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் விரிவடைந்து செல்வதற்கான மோடி கும்பலின் கார்ப்பரேட் வனக்கொள்ளை திட்டத்திற்கு மாஞ்சோலை மக்களை வெளியேற்றுவது இதற்கு அவசியமாகியுள்ளது!

எனவேதான் பி.பி.டி.சி நிறுவனத்தின் குத்தகை கால அவகாசம் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையிலும் மாஞ்சோலை மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள்!

படிக்கவும்: கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை சூறையாட அனுமதிக்கும் புதிய காலனிய வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்க சட்டங்களை எதிர்ப்போம்!

குமரியிலிருந்து குஜராத் வரை மேற்கு தொடர்ச்சி மலையையும் கிழக்கு தொடர்ச்சி மலையையும் கொள்ளையிட மலைமக்களை துரத்தியும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தும் வருகிறது பாசிச மோடி கும்பல். நாடாளுமன்றத்தின் மூலம் பாசிச வனச்சட்டங்களை கொண்டுவந்து கார்ப்பரேட்டுகள் மலைவளங்களை கொள்ளையிட சட்டப்பூர்வ அங்கிகாரம் வழங்கி, வனமக்களை தேசவிரோதியாக்கியுள்ளது மோடிகும்பல். அரசியல் பொருளாதார கொள்கைகளில் பா.ஜ.விற்கு மாற்றான கொள்கையற்ற தனியார்மய தாராளமய அதே கொள்கைகளை ஆதரித்து அமல்படுத்தும் அனைத்து மாநில தரகுமுதலாளிய கட்சிகளும் மோடியின் வனச்சட்டங்களை ஆதரித்து அமல்படுத்தி பாசிச மோடியுடன் இணைந்து ஏகாதிபத்திய சேவையினை செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் இந்துத்துவ மாடலுக்கு மாற்று திராவிட மாடல் என்று கூவினாலும் இந்துத்துவ மாடல் எனும் பெயரில் செயல்படுத்தப்படும் ஏகாதிபத்திய கொள்கைகளை அமல்படுத்தும் மாடலே திராவிட மாடலும் ஆகும். மோடி அரசு கொண்டு வரும் எந்த சட்டத் திட்டங்களையும் முதல் ஆளாக வரிந்துக் கட்டிக் கொண்டு நிறைவேற்றி வருகிறது ஸ்டாலின் அரசு. எனவே இன்று தரகு முதலாளிய அம்பானி அதானி பெரும் கார்ப்பரேட்டுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டின் வனங்களை தாரை வார்க்க கார்ப்பரேட் வனச்சட்டங்களை செயல்படுத்த நயவஞ்சகமாக மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றும் மோடிக் கும்பலுக்கு தி.மு.க அரசு துணை நிற்கிறது. 

தொழிலாளர்கள் தொடுத்த வழக்கில் மாஞ்சோலையிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டாம் என இடைக்கால தடை விதித்த நீதிமன்றம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் டான் டீ நிறுவனமே ஏற்று நடத்தவும் ஆலோசனை வழங்கியது. இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சம்பளமின்றி தவிக்கும் அம்மக்கள் கீரைகளை பறித்து தின்று உயிர் வாழும் பேரவலத்திற்கு அவர்களை திராவிட மாடல் அரசு தள்ளியதோடு குடிநீர் மின்சாரம் ஆகிவற்றையும் துண்டித்து விட்டது. கடந்த 21/7/2024 அன்று மாஞ்சோலை தொழிலார்களின் வழக்கு மீதான விசாரனையில் "தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி புலம்பெயரக் கூடியவர்கள் என்றும், அவர்கள் மலையை சார்ந்து வாழக்கூடிய மக்கள் இல்லை என்றும் கூறியதுடன் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏற்று நடத்த முடியாது" என்றது. மேலும், "பொய்யான ஆதாரங்களை கொடுத்து அரசியல் ஆதாயம் அடைவதற்காக முயற்சிக்கிறார்கள். எனவே நீதிமன்றம் அவர்களை வெளியேற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" எனவும் நீதிமன்றத்தில் நிலையறிக்கை தாக்கல் செய்துள்ளது. தொழிலாளர்களை தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து கொன்ற தி.மு.கவின் கருணாநிதி மகன் ஸ்டாலினின் இந்த அரசு, "இருந்தால் தானே பிரச்சனை எங்காவது சென்று செத்தொழியுங்கள்!" என்று தனக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான உறவை அப்பட்டமாக வெளிக்காட்டி விட்டது.

எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்திடவும், தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் உள்ளிட்ட தொழிற்சங்க உரிமையுடன் மாஞ்சோலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சொந்த வீடு கட்டி தருவது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுதும் உள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் ஜனநாயக சக்திகள் போராடுவது அவசியமாகும். மேலும், அங்கு போராடும் மக்கள் தங்களது பொருளாதார கோரிக்கைகளுக்காக போராடுகிறார்கள். அதை ஆதரிக்க வேண்டிய சூழலில் இப்போராட்டத்தை, கார்ப்பரேட் நலுனுக்காக வனமக்களை வேட்டையாடும் வனச்சட்டம் பல்லுயிர் பெருக்கச்சட்டத்தை எதிர்த்த போராட்டமாகவும் ஏகாதிபத்திய - கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்யும் பாஜக ஆட்சியை தூக்கியெறிவதற்கான போராட்டங்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். 

- சமரன்

(ஜூலை - ஆகஸ்ட் 2024 இதழில்)