செப் 12 - அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!

செந்தளம்

செப் 12 - அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!

1980 ம் ஆண்டு செப் – 12, நக்சல்பாரிப் புரட்சித் தோழர் பாலன், கபட வேடதாரி எம்.ஜி.ஆரின் ஆட்சியில் கயவாளி தேவாரம் தலைமையில் தருமபுரி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட நாளாகும். 

மார்க்சிய-லெனினிய ஒளியில் மக்கள் யுத்தக் கட்சியால் வழிகாட்டப்பட்ட போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டுவதில் தருமபுரி மாவட்டத்தில் முன்னணித் தோழராக செயல்பட்டவர் பாலன். ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ-தரகு முதலாளித்துவ என்ற மூன்று தளைகளை எதிர்த்த களப் போராட்டங்களில் தலைமைத் தாங்கினார். பாட்டாளி வர்க்க தலைமையில் ஒரு புதிய ஜனநாயக இந்தியாவை உருவாக்கும் லட்சியப் போராட்டத்தில் சாதி கடந்து மதம் கடந்து மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதில் முன்னணி தலைவராக செயல்பட்டார். கந்து வட்டி கொடுமை, கட்டப் பஞ்சாயத்து, இரட்டை குவளை முறை உள்ளிட்ட சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்  தோழர் பாலன். ஏழை, எளிய மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் கொண்ட புரட்சிகர இளைஞர் சங்கங்களை கட்டியமைத்தார். ஊழியர்களின் முன் முயற்சியையும் மக்களின் முன் முயற்சிகளையும் தட்டி எழுப்புவதில் அபார திறமைக் கொண்டவராக திகழ்ந்தார். அழித்தொழிப்புப் பாதை ஒன்றே ஒரே வழி என்ற நிலையை அமைப்பு கைவிட்டு மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தபோது மக்களை அரசியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக அணி திரட்டும் பணிக்கு புத்துயிர் தந்தவர்தான் தோழர் பாலன்.

அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று அர்ப்பணிப்போடு செயல்பட்டதோடு இல்லாமல், ஆளும் வர்க்கங்களின் கொடூர அடக்குமுறைகளுக்கும் சிறைக் கொடுமைகளுக்கும் சிறிதும் அஞ்வில்லை அவர். தான் படித்த எம்.எஸ்.சி பட்டப்படிப்பை துச்சமென நினைத்து தன் சொந்த வாழ்க்கையை பின்னுக்கும், மக்களின் விடுதலைக்கான புரட்சிகர வாழ்வை தனது இறுதி மூச்சு வரை உயர்த்திப் பிடித்தார் மக்களின் அன்புக்குரிய இந்த தலைவர்.

மக்களின் உண்மையான விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் தன் உயிரை அர்ப்பணித்துக் கொண்ட பாலனை ஆளும் வர்க்க கும்பல் செப்-12ல் படுகொலை செய்தது. அத்தகையதொரு தியாக நாளை, இந்திய புரட்சிகரப் போராட்டத்தில் உயிர் நீத்த சாரு மஜூம்தார், அப்பு, ஏ.எம்.கே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நக்சல்பாரி தோழர்களின் நினைவாகவும்; சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த ஏனைய அனைத்து தியாகிகளின் கனவை நனவாக்க சபதம் ஏற்கும் நாளாகவும் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாண்டு தியாகிகள் தினத்தை பாசிச மோடி கும்பலை தூக்கியெறிய சபதம் ஏற்கும் நாளாக அனுசரித்து வருகிறோம். குறிப்பாக, மக்கள் விரோத - அம்பானி அதானிகளுக்கு ஆதரவான மத்திய பட்ஜெட்டை எதிர்த்தும், புதிய காலனிய, கார்ப்பரேட் நலன்களிலிருந்து போலீஸ் ராஜ்ஜியத்தை கட்டியமைக்கும் குற்றவியல் நடைமுறை பாசிச சட்டங்களை எதிர்த்தும், அரசு எந்திரத்தை வெளிப்படையாக பாசிசமயமாக்கும் - அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் பங்கேற்க அனுமதிக்கும் -அரசாணையை எதிர்த்தும், சமூக அநீதி ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகவும், பாசிச எதிர்ப்பு வேடமிட்டு ஆட்சிக்கு வந்த திமுக - பாஜகவின் கள்ள உறவை அம்பலப்படுத்தியும் வருகிறோம்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டை ஆளும் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவை அடிமைப்படுத்துவதில் நான்கு கால் பாய்ச்சலில் செயல்படுகிறது. உலகமய-தனியார்மயக் கொள்கைகள் மூலம் நாட்டின் விவசாயம், தொழிற்துறை, உற்பத்தித்துறை, உள்கட்டமைப்பு, இராணுவம், ரயில்வே, துறைமுகம், விமானம், விஞ்ஞானம், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறைகள், விலை மதிக்க முடியாத இயற்கை மற்றும் கனிம வளங்கள் என அனைத்தையும் பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்து வருகிறது. நாட்டின் கஜானாவுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்களை மடைமாற்றி அதானி அம்பானியின் சொத்துக்களாக மாற்றியுள்ளது. மேலும் லஞ்ச ஊழலில் திளைப்பதில் அதன் உச்சத்தையே எட்டிவிட்டது. இவ்வாறு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதே மோடி கும்பலின் அடிப்படை கொள்கையாக மாறிவிட்டது. 

நாட்டின் நெருக்கடிகளை மூடிமறைக்கும் பட்ஜெட்

கடந்த ஜூலை 23 தேதி நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை கவனத்தில் கொண்ட அல்லது இதயத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு-செலவு திட்டம் என கூறுகிறார்.

ஆனால் மக்கள் நலன் திட்டங்களை புறக்கணித்தும், வறுமை, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பெரும்பான்மை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மூடிமறைத்து, நாட்டின் வளங்களை சூறையாடும் கார்ப்பரேட் நலன்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கப் போர் வெறிக்கு சேவை செய்யும் ராணுவப் பொருளாதாரமாகவும், மோடி ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையிலும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பாசிச மோடி அரசு 140 கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும், உயிரோடு சமாதி கட்டும் வகையில், உலக வர்த்தக கழகத்தின் ஆணைகளையும், புதிய கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நாடு இது வரை சந்திக்காத அளவில் உணவு பஞ்சமும், ஊட்டச்சத்து குறைபாடுகளும், வறுமையும் அதிகரித்து வருகின்றன. மேலும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வேளாண் நிலத்திலிருந்து வெளியேறுவதும் தற்கொலை செய்து மடிவதும் அதிகரித்து வருகின்றன. 

வேளாண் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி, கார்ப்பரேட் விவசாயம், மானிய மறுப்பு, வங்கிக் கடன் மறுப்பு, உரம் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு, வேளாண் உற்பத்திப் பொருள்களை அரசு கொள்முதல் செய்வதை கைவிடுவது போன்ற உலக வர்த்தக கழகத்தின் – கட்டளைகளை செயல்படுத்தியதால், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்துள்ளனர். 

5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி, உலகில் 5 வது பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடு, வல்லரசு நாடு என மார்தட்டும் மோடி ஆட்சியில், 80 கோடி மக்கள் ஒருவேளை உணவுக்காக ரேஷன் பொருள்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். 67 லட்சம் குழந்தைகள் 24 மணி நேரமும் உணவு இன்றி வாடுவதாகவும், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மூன்று வேளை உணவில்லாமல் வாடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுகளிலும், இரத்த சோகையாலும், பட்டினி சாவுகளிலும் மக்கள் உழல்கின்றனர். வறுமை நிலையில் உள்ள நாடுகள் பட்டியலில் கினியா (21.8 சதவீதம்), மாலிநாடு (20.5 சதவீதம்) உள்ளிட்ட நாடுகளுடன்  இந்தியா (19.3 சதவீதம்) போட்டி போடும் அவல நிலைக்கு நம்மை மோடி அரசு தள்ளியுள்ளது. 

இவ்வாறு பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணி தாய்மார்கள் வரை ஊட்டச்சத்துக்கள் இன்றியும், இரத்த சோகையாலும், பசிப்பிணியாலும், மனநலம் பாதிக்கப்பட்டு மடிந்து வரும் சூழலில், நாட்டுக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு மானியம், கடனுதவி, கடன் தள்ளுபடி, நிதி ஒதுக்குதல் போன்றவை விவசாயிகளுக்கு அளிக்கும் பிச்சை அல்ல! மாறாக 140 கோடி மக்களும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கான அடிப்படை பிரச்சினையோடு சம்பந்தப்பட்டதாகும்.

ஆனால் உலக வர்த்தக கழகத்தின் நலன்களிலிருந்தும் கார்ப்பரேட் வேளாண் கொள்கையிலிருந்தும், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு வெறும் 2.5 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு முன்பு 2.72 லட்சம் கோடியாக இருந்த நிதியை, 2023-ல் ரூபாய் 2.12 லட்சம் கோடி ஆகவும், தற்போது ரூ 2.5 லட்சம் கோடியாக வெட்டி சுருக்கி உள்ளது மோடி அரசு. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உணவு மானியத்திற்கான நிதியை ரூ.84 ஆயிரம் கோடியை குறைத்துள்ளது.

இவ்வாறு விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டியும், கடனுதவிகளை நிறுத்தியும், ஒட்டுமொத்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் ரூ.25 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கார்ப்பரேட் வரியை 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் உழைக்கும் மக்களிடமிருந்து வரியாக சுமார் ரூ.25 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது “விவசாயிகளின் காவலன்” மோடி ஆட்சி.

பாசிச மோடி கும்பலின் 10 ஆண்டுகால ஆட்சியில் 45 ஆண்டுகள் இல்லாத அளவில் வேலையின்மை 9 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து 40 கோடிக்கு அதிகமான மக்கள் வேலையில்லாப் பட்டாளமாக மாறியுள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்களில் 80 சதவீதம் இளைஞர்கள் படித்ததற்கு சம்பந்தமில்லாமல் அத்துக் கூலியாக மாற்றப்பட்டுள்ளனர்.

15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களின் வேலையில்லாத இளைஞர்களின் கூட்டம் 1) பாகிஸ்தானில் 11 சதவீதமும், 2) பங்களாதேஷில் 12 சதவீதமும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய மோடி ஆட்சியில் 24 சதவீதமாக உள்ளது. மேலும் 10 இளைஞர்களில் எட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற அவலநிலை உருவாகியுள்ளது. மற்றும் இனவஅழிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் இந்தியர்களை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளது மோடி கும்பல்.

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் மூலம் சிறுகுறு வணிகத்தை மோடி அரசு சீரழித்ததன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். கையில் காசு இல்லாமல், செயல்பாட்டு மூலதனம் கரைந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். பாசிச மோடி கும்பலின் இந்த கொடூர திட்டத்தால் தூக்குக் கயிற்றில் தொங்கியவர்கள் அதிகம். அவர்களில் தெரு வியாபாரிகள் 36 சதவீதம் பேரும், சிறு வர்த்தகர்கள் 37 சதவீதம் பேரும் அடங்குவர். பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை உண்ண உணவின்றி, இருக்க இடமில்லாமல் அவர்களை பஞ்சப் பராரிகளாக மாற்றியுள்ளது இந்த மோடி அரசு.

ஏழை எளிய கிராமப்புற மக்களின், ஆதரவற்றவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு குறைந்தபட்ச உத்திரவாதமான வேலைவாய்ப்பை வழங்கி வந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் ஆண்டுக்கு 25 நாள் அல்லது 50 நாள் கூட வேலை வழங்க முடியாத அளவிற்கு தற்போது 86 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது. இவ்வாறு கடந்த 10 ஆண்டுகால பாசிச மோடி ஆட்சியில், இருக்கும் குறைந்தபட்ச வேலை வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேலாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறித்து வேலை நேரத்தை 12 மணி நேரமாக கட்டாயமாக்கி கார்ப்பரேட்களின் உழைப்பு சுரண்டலுக்கு மக்களை ஆளாக்கியுள்ளது மோடி அரசு.

மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கிறது. திறன் மேம்பாடு பயிற்சி என்ற பெயரில் 4.1 கோடி பேருக்கு பயிற்சி அளிப்பதாக கூறி 5 ஆண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. புதிதாக வேலையில் சேரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஐந்தாயிரம் ரூபாயும், வேலை அமர்த்தும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒவ்வொரு தொழிலாளி வீதம் 72 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உண்மையில் இந்தத் திட்டம் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் இல்லை மாறாக நவீன தொழில்நுட்பத்தை கையாளும் மூளை உழைப்பாளிகளின் சந்தையை உருவாக்கும் திட்டமாகும். மெக்காலே கல்வி முறை உடலாலும் உள்ளத்தாலும் வெள்ளை ஏகாதிபத்திய அடிமைகளை உருவாக்கியது போல, இந்த திறன் மேம்பாடு பயிற்சி குறைந்த கூலிக்கு தனது மேலான உழைப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் திட்டமே ஆகும்.

ராணுவ பொருளாதாரத்தை கட்டியமைக்கும் நிதிநிலை அறிக்கை 

2024-25 க்கான மத்திய பட்ஜெட்டில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 6.22 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை இவ்வாறு ராணுவ பொருளாதாரமாக கட்டியமைப்பதின் உண்மையான நோக்கம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும் போர் வெறிக்கும் சேவை செய்வதே ஆகும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிக்கும் வகையில் குவாட், குவாட் பிளஸ் மற்றும் ஆக்கஸ் ஒப்பந்தங்களுக்கு சேவை செய்யும் வகையில் நாட்டின் பாதுகாப்புத் துறைகளை அம்பானி அதானி போன்ற பெரும் கார்ப்பரேட்களுக்கு அகல திறந்து விட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கங்களை பாசிச முறைகளில் ஆயுதம் கொண்டு ஒடுக்குவதற்காகவே மோடி கும்பல் ராணுவ பொருளாதாரத்தை கட்டியமைத்து வருகிறது.

ஏற்கனவே அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா என்ற பெயரில் அமெரிக்காவின் லாங்கிட்-மாட்டின் போன்ற பகாசுர கும்பல்களுக்கும், அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களின் சுரண்டலுக்கும் பாதுகாப்புத் துறையை திறந்துவிட்டது.  41 ராணுவ தளவாட உற்பத்தித் துறைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி தாரை வார்த்தது மோடி அரசு. குறிப்பாக, தளவாட உற்பத்தி துறையில் டாங்குகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்கள், ராணுவ சீருடைகள், கூடாரங்கள், காலணிகள் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தேவையான அனைத்து உற்பத்திகளையும் பெரும் கார்ப்பரேட் கும்பல்களுக்கு குத்தகைக்கு தாரை வார்த்து விட்டது. இப்போதைய இந்த நிதி ஒதுக்கீடும் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நலங்களுக்கானதே ஆகும். 

மறுபுறம் அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களை ராணுவ மயமாக்குவதும் ராணுவத்தை தேசபக்தி என்ற பெயரில் காவி மயமாக்குவது இதன் உள்ளார்ந்த நோக்கமாகும்.

இந்திய-அமெரிக்க ராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் பறித்துவிட்ட நிலையில், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த ஜி 20 மாநாட்டில் நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய பிடியில் இருக்கும் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் பாசிச போக்குகளை தீவிர படுத்துகிறது. ராம ராஜ்ஜியமான அமெரிக்க மாமன் ராஜ்ஜியத்தை கட்டி அமைக்க மோடி-அமித்ஷா கும்பல் ராணுவ பொருளாதாரத்தை கட்டியமைத்து வருகிறது.

அம்பானி அதானிகளை இதயத்தில் வைக்கும் பட்ஜெட் 

மோடியின் கடந்த 10 ஆண்டுகால பாசிச ஆட்சியில், தாக்கல் செய்யப்பட்ட மக்கள் விரோத பட்ஜெட்களும், மக்கள் விரோத மசோதாக்களும், வரிக் கொள்கைகளும், அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை இதயத்தில் வைத்து உருவாக்கப்பட்டவையே ஆகும்.

2014 இல் இருந்து 2024 வரை அம்பானி அதானி வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாகவும், அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான தாக்குதலை தனது ஆட்சியின் மீதான தாக்குதலாகவும், தேசத்தின் மீதான தாக்குதலாகவும் காட்டி நம்மை இன்று ஏமாற்றி வருகிறது மோடி அரசு.

கடந்த 2000 ஆம் ஆண்டில் 9 பெரும் பில்லியனர்கள் இருந்தார்கள். 2017 ல் 119 பில்லியனர்களாகவும்,  2024 - தற்போது 142 பில்லியனர்களாகவும் மோடி அரசு உருவாக்கியுள்ளது. கொரோனா பொது முடக்க காலத்தில் மோடி அரசு அறிவித்த ரூபாய் 20 லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டம், ரூபாய் 100 லட்சம் கோடியிலான கதிசக்தி திட்டம், ரூபாய் 6 லட்சம் கோடியிலான பணமாக்கல் திட்டம், இவை யாவும் அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களிலிருந்தும், அம்பானி அதானிகளை இதயத்தில் கொண்டும் உருவாக்கப்பட்ட திட்டங்களே ஆகும்.

மேலும் இயற்கை வளங்களையும், நாட்டின் பொதுச்சொத்துக்களையும் அம்பானி அதானிகள் சூறையாட தடையாக இருந்த அனைத்து அரைகுறை பாதுகாப்புச் சட்டங்களையும் மோடி அரசு தகர்த்துள்ளது. மற்றும் திட்ட கமிஷன் முதல் அந்நிய மேம்பாட்டு வாரியத்தை கலைத்தது வரை, 200க்கும் மேற்பட்ட மசோதாக்களை கொண்டு வந்து நாட்டின் பொதுச்சொத்துக்களை கார்ப்பரேட்கள் சூறையாட வழி வகுத்துள்ளது மோடி அரசு.

குறிப்பாக வனச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், நில சீர்திருத்த சட்டம், நிலப்பறிப்புச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், புதிய மின்சார சட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம், ஜிஎஸ்டி சட்டம், பண மதிப்பு நீக்க சட்டம் உள்ளிட்ட நாசகர சட்டங்களையும் மசோதாக்களையும் கள்ளத்தனமாக எதேச்சதிகார முறையில் கொண்டு வந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு திறந்து விட்டுள்ளது மோடி அரசு.

இதன் விளைவாக உள்கட்டமைப்பு துறை, வங்கித் துறை, ராணுவ துறை, தேசிய நெடுஞ்சாலை துறை, தொலைதொடர்பு துறை, மின்சார துறை, சாகர்மாலா திட்டம், உதான் திட்டம், பாரத் மாலா திட்டம் மூலம் நாட்டின் பொதுச் சொத்துக்கள் கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களாக மோடி அரசால் மாற்றப்பட்டுள்ளது. 

அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் நலன்களுக்காக வரிக் கொள்கைகள் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் என அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய நான்கு பெரும் கார்ப்பரேட் கும்பலிடம் ரூபாய் 210 லட்சம் கோடி அகப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் அந்நிய கடனுக்கு இணையான தொகை அம்பானி அதானிகளிடம் இருக்கிறது. 2024-25 க்கான மத்திய பட்ஜெட்டின் ஒட்டுமொத்த நிதியே 48 லட்சம் கோடி தான். ஆனால் நாட்டின் 4 ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டையும் இந்த 4 பெரும் முதலாளித்துவ கும்பல் கையில் சேர்த்துள்ளது மோடி அமித்ஷா கும்பல். அனைத்து உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்களின்  வாழ்வாதாரத்தை பறித்து வறுமைக்கும், தற்கொலைக்கும், பட்டினி சாவுக்கும் தள்ளுகிறது இந்த மோடி அரசு.

எனவே, இந்துத்துவ பாசிச மோடி ஆட்சியை எதிர்த்தும், அம்பானி அதானி நலன்களை இதயத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது. நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் பாசிச மோடி ஆட்சியை தூக்கி எறிய தியாகிகள் தினத்தில் சபதமேற்போம்! மார்க்சிய லெனினிய அடிப்படையிலான ஏஎம்கே வழிகாட்டுதலில் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!!

- செந்தளம்