குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-1

உலகமய, தாராளமய கொள்கைகளுக்குச் சேவை செய்வதில் குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே!

குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே!  - பகுதி-1

"இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது" என்றார் பேராசான் மார்க்ஸ்.

ஆனால் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய வல்லூறுகள் பூமியை அகண்டவெளியின் சிறிய நீலப் புள்ளியாகக் கருதி கபளீகரம் செய்யும் நோக்கில் 2019ம் ஆண்டு ஃப்ளூ டாட் நெட்வொர்க் (BDNBlue Dot Network) எனும் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கியது. இதை சீன ஏகாதிபத்தியத்தின் உலகத்தை கபளீகரம் செய்யும் நோக்கிலான இணைப்பு மற்றும் சாலை திட்டத்திற்கு (BRI – Belt and Road Initiative) போட்டியாக அமல்படுத்தி வருகின்றன.

இத்திட்டத்தின் நோக்கங்களாக கூறப்படுபவை:

1. பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவது;

2. பருவநிலை மாற்றங்களை கணக்கில் கொண்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பசுமை கட்டமைப்புகளை  உருவாக்குவது;

3. இந்தோ-பசிபிக், அட்ரியாடிக், பால்டிக், கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல் இவற்றை சுற்றியுள்ள நாடுகளை இத்திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களாக முதலில் இணைத்தல், அதை தொடர்ந்து இத்திட்டத்தை உலகம் முழுமைக்கும் விரிவுபடுத்துவது;

4. குவாட் திட்டத்தை பலப்படுத்துதல்

இத்திட்டம் பைடன் ஆட்சியில் "மீண்டும் மேலான உலகத்தை கட்டியமைப்பது (BBBW – Building Back Better world)" என ஜி7 ஏகாதிபத்திய கூட்டு மாநாட்டில் மறு வடிவம் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 40 டிரில்லியன் டாலர்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதில் தெற்காசியாவில் மட்டும் இத்திட்டத்திற்கு 1.7 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாபவெறிக்கும் போர்வெறிக்கும் இந்தியாவையும் தனது விரிவாதிக்க நலனிலிருந்து அண்டை நாடுகளையும் இத்திட்டத்திற்கு பலியிட ஒப்புதல் தெரிவித்துள்ளது மோடி கும்பல். மாநில அளவிலான தரகு முதலாளித்துவ நலன்களிலிருந்து இத்திட்டத்திற்குச் சேவை செய்ய திராவிட மாடலை முன்னிறுத்துகிறது மு.க.ஸ்டாலின் கும்பல்.    

இதை நடைமுறைப்படுத்தவே 'கதி சக்தி', 'ஆத்ம நிர்பார்', 'பணமாக்கல் திட்டம்' மற்றும் உள்கட்டமைப்பு (சாகர்மாலா, பாரத் மாலா, உதான்) திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது மோடி அரசு. 

குஜராத் மாடலை நாடு முழுவதும் விரிவு செய்யும் மோடி கும்பல்

2014 தேர்தலில் "பாரத் நிர்மான்" என்ற காங்கிரசின் முழக்கத்திற்கு எதிராக "குஜராத் மாடல்" வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஊழற்ற ஆட்சி, என்ற பொய்யான வாய்ச்சவடால் மற்றும் 'வளர்ச்சியுடன் சேர்ந்த இந்துத்துவம்'   என்ற அரசியல் கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தது மோடி கும்பல். உண்மையில் சத்துணவு, கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம், நுகர்பொருள்களின் விலைக் குறியீடு, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒட்டு மொத்தச் சமூகத்தின் ஆரோக்கியம் இவை அனைத்திலும் இந்தியாவில் குஜராத் மிகவும் பின்தங்கியே இருந்தது. அந்நிய மூலதனங்களை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றினாலும் அதிலும்கூட முன்னிலை வகிக்கவில்லை. அம்பானி, அதானி மற்றும் கார்ப்பரேட் ஊடக கும்பல்கள் தனது தரகு முதலாளித்துவ நலன்களிலிருந்து இதை ஊதிபெருக்கியது. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தடையாகவும், வேலையின்மை, கருப்புப் பண பொருளாதாரம் - ஊழல் இவற்றிற்கு வேராக இருக்கும் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே "நல்ல காலம் வருகிறது" என குடுகுடுப்பை ஆட்டி அப்போதே பொய் மோசடியில் இறங்கியது இந்த மோடி கும்பல். மாறாக, இசுலாமியர்களை கொன்று குவித்து இந்து மதவெறி. சாதிவெறி பாசிசத்தை கட்டியமைப்பதில் முன்மாதிரியாக திகழ்ந்தது "குஜராத் மாடல்".  அதையே தற்போது உ.பி.யிலும், கர்நாடகா உள்ளிட்ட தான் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கும், இதற்கு மாற்றாக தமிழகத்தில் முன் வைக்கப்படும் திராவிட மாடலுக்கும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்குச் சேவை செய்வதில் எவ்வித வித்தியாசமும் இல்லை. மத்திய அரசை சார்ந்து உலகமயக் கொள்கைகளை அமல்படுத்துவதாலும் அதன் ஊழல் மலிந்த ஆட்சியைக் காப்பாற்றி கொள்ளவும் மோடிகும்பலின் மதவெறிப் பாசிசத்துடன் சமரவாதப் போக்கை மேற்கொள்கிறது 'திராவிட மாடல்' திமுக அரசு. மேலும், சமூகநீதி பேசிக்கொண்டே சாதிவெறிப்பாசிசத்தை தலைமையேற்று நடத்தி வருகிறது.          

நிதி ஆயோக் - பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு (PMEAC) - முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு

திட்ட கமிஷனை கலைத்து விட்டு ஏற்படுத்தப்பட்ட நிதி ஆயோக் - பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு - மு.க.ஸ்டாலினின் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு, இம்மூன்றுமே ஏகாதிபத்திய சேவையில் சிறந்து விளங்கிய மற்றும் அதன் நிறுவனங்களில் பிரத்தியேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்ட புதிய தாராளவாதத்தின் வல்லுநர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அமெரிக்காவும் -,எம்.எஃப்.ம் எதை பரிந்துரைக்கிறதோ அத்திட்டங்களையேதான் குஜராத் மாடல் இந்தியிலும், திராவிட மாடல் தமிழிலும் பெயர் சூட்டிச் செயல்படுத்தி வருகின்றன. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து அரசு விலகி சந்தைக்கு திறந்துவிட வேண்டும்; பொதுத்துறைகள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட வேண்டும்; அரசு ஒரு ஒடுக்கும் கருவியாக இருந்தால் மட்டும் போதுமென்பதைதான் இந்த குழுக்களின் பரிந்துரைகள் வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தி வருகின்றன.    

கதி சக்தி திட்டம்

கதி சக்தி திட்டம் என்பது விரைவான (அல்லது உத்வேகமான) ஆற்றலுடன் இந்தியாவை அமெரிக்காவுக்கு பலியிடுவது என்பதை தவிர ஒன்றுமில்லை. இதற்கான நிதி திட்ட அளவீடு 100 லட்சம் கோடி என 2021 அக்டோபரில் மோடி அறிவித்தார். கதி சக்தி மாஸ்டர் திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி இப்போது செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் பாரத்மாலா (தரைவழி மார்க்கம்), சாகர்மாலா (கடல்வழி மார்க்கம்), உதான் (விமான தளங்கள்), ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் பாரத் நெட் போன்ற 16 துறைகளின் முதன்மைத் திட்டங்கள் அடங்கும். இதற்கான பல்வேறு துறைகளையும் ஒற்றைச் சாளர முறையில் (Single Window System) இணைப்பதற்கு தனி நிர்வாக அலுவலை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பொருளாதாரத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கதி சக்தியின் கீழ் அடையப்படும் பல்வேறு இலக்குகளானவன:

* தேசிய நெடுஞ்சாலை வலையமைப்புடன் 2 லட்சம் கி.மீ-ஐ தொடும் வகையில் சாலைகளின் திறன் அதிகரிக்கப்படும்.

* விமான போக்குவரத்து - சுமார் 200 புதிய விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர்நிலை ஏரோட்ராம்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

* ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து திறன் 2025க்குள் 1,600 டன்னாக அதிகரிக்கப்படும்

* பரிமாற்ற வலையமைப்புடன் கூடிய மின்சார அணுகல் 454,200 கிமீ ஆக அதிகரிக்கப்படும்

* புதுப்பிக்கத்தக்க திறன் 2025க்குள் 225 GW (ஜிகாவாட்) ஆக அதிகரிக்கப்படும்.

* அதே வருடத்தில் சுமார் 17,000 கிலோமீட்டர் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும்.

* 2022க்குள் கிராமங்களுக்கு 4G இணைப்பு

* 20 புதிய மெகா உணவுப் பூங்காக்கள்

* தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் 11 தொழில்துறை பூங்காக்கள் மற்றும் 2 புதிய பாதுகாப்பு பூங்காக்கள்

* 202 மீன்பிடி தளங்கள்/ துறைமுகங்கள்

இதன் அடிப்படையிலேயே இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) உள்ளிட்ட திட்டங்கள் போல தமிழகத்திலும் புராஜக்ட் ப்ளூ, சிங்காரச் சென்னை திட்டங்கள் தனியார்துறை பங்கேற்புடன் துரித கதியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பாசிச மோடி அரசு டெல்லியில் சட்டவிரோதமாக அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் என்று கூறி முதலில் மதத்தின் பெயரில் இடித்திருக்கிறது. இது போல் 750 குடியிருப்பு பகுதிகளை இடிக்க திட்டமிட்டுள்ளது.

அதைபோன்றே திராவிட மாடல் எனும் பெயரில் மு.க.ஸ்டாலின் அரசு இத்திட்டங்களுக்காகத்தான் கீழ்க்கண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது:

கடந்த தி.மு.க ஆட்சியில் சிங்காரச் சென்னை என்ற பெயரில் கூவம் ஆற்றையும், அடையாறு ஆற்றையும் அழகுபடுத்துகிறேன் என்று கூறி ஆற்றங்கரையோரம் பல ஆண்டுகளாக வசித்து வந்த சென்னை நகரின் உழைக்கும் மக்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். தற்போது அந்த சிங்கார சென்னை அமைப்பதற்கான வேலையை மீண்டும் துவங்கியுள்ளது திமுக அரசு.

சென்னை அரும்பாக்கத்திலுள்ள ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களின் வீடுகளை கடந்த ஜூலை 29-ம் தேதியன்று அகற்றியுள்ளது, மதுராந்தகத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை காலி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது மு.க. ஸ்டாலின் அரசு. அதுபோல ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படும் மதுரை, நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பெரும்பாலானவற்றை (சுமார் 25,000 வீடுகள்) இடிக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்குள் வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

மறுபுறம், பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல, 2,750 கி.மீ நீளத்திற்கு, 604.73 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்படும்; சென்னையில் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடங்கப்படும்; கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மெட்ரோ திட்டப் பணிகள் தொடங்கப்படும்; கோவை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும்; சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ. 75 கோடியில் புத்தொழில் உருவாக்க (ஸ்டார்ட் அப்) மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறியுள்ளது தமிழக அரசு.

நகரமயமாக்கலின் பெயரில் நாடெங்கும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் உள்நாட்டு அகதிகளாக்கபட்டுள்ளனர். காடுகள், வேளாண் விளைநிலங்கள், மீனவர் கிராமங்கள் / குப்பங்கள், நகர்ப்புற சேரிகள் போன்றவற்றை உள்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஊக வாணிப சூதாடிகளின் நலன்களுக்காக ஆக்கிரமித்து சிப்காட் அமைக்க, கனிம வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்க 8வழிச்சாலை, 6வழிச் சாலை என பாரத்மாலா திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன குஜராத் மாடல் மத்திய அரசும்  திராவிட மாடல் மாநில அரசும்.

சாகர்மாலா திட்டத்திற்குச் சேவை செய்யும் மீன் வள மசோதா

ப்ளூ டாட் நெட்வொர்க் திட்டத்திற்குச் சேவை செய்யும் வகையில் PMEAC மற்றும் நிதி ஆயோக் இணைந்து நீலப் பொருளாதாரக் கொள்கை (Blue Economy Policy) ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கடல் வழி பெயர்ச்சியல் (Logistics), மீன்வளம், கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகள் உள்ளிட்ட கனிமவளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துதல், தொடர்புடைய தொழில்துறைகளை இணைத்தல், இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியில் இதன் சதவிகிதத்தை உயர்த்துதல் போன்றவற்றை வழிகாட்டுகிறது. இதற்காக நீர் வளங்கள் மற்றும் கடல் மாசுபடுதலை தவிர்த்தல், புதிய மீன்பிடித்தளங்கள் அமைத்தல், துறைமுகங்களை இணைத்தல் எனும் சாகர்மாலா திட்டத்தையும் அதற்குச் சேவை செய்யும் மீன் வள மசோதாவையும் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது மோடி கும்பல்.

இம்மசோதாவின் படி, மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு (nautical mile) உட்பட்டே மீன்களை பிடிக்க வேண்டும். அதேவேளையில் எந்த வகையான மீன்களை பிடிக்கப்போகிறார்கள் என்பதையும் முன் கூட்டியே அரசு அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். கரையில் அரசு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட மீன் வகைகளை மட்டுமே பிடிக்க வேண்டும். இதை மீறினால் முதல்முறை அபராதமும்; இரண்டாவது முறை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும்; மூன்றாவது முறையும் மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும்; மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது முடக்கப்படும். மீதமுள்ள கடல் மைல்களில் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் மீன் பிடிப்பார்கள், கப்பற்படை தளங்கள் அமைப்பார்கள்.

இதற்கு ஒத்திசைந்தே அதிமுக அரசும், திமுக அரசும் மாறிமாறி மீனவர்களையும், விவசாயிகளையும் அவர்கள் குடியிருப்புகளிலிருந்து விரட்டியடிக்கின்றன. கார்ப்பரேட் சாமியார்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரேலி ஃபார் ரிவர்ஸ் (Rally for rivers) காவிரி காலிங் (Cauvery calling) போன்ற புராஜக்ட்டுகள் மூலம் நதியோரங்களிலிருந்து விவசாயிகளையும் குடியிருப்புகளையும் வெளியேற்றுகின்றனர். 

தேசிய பணமாக்கல் திட்டம்

நேஷனல் மானிடைசேசன் பைப் லைன் (National monetization pipe line) என்ற திட்டத்தின் பெயரில் தேசத்தின் சொத்துக்களை அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டத்திற்கும், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தாரைவார்க்க முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி கும்பல்.

நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் தற்போது இந்திய நாட்டின் கேந்திரமான செல்வ வளங்களை தனியாருக்குத் தாரை வார்க்க முனைப்புடன் களமிறங்கியுள்ளது மோடி அரசு. நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் இரத்தத்திலும் வியர்வையிலும் உருவான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட்களிடம் விற்கவுள்ளது. 

• ரயில்வே துறையில் 1,15,000 கிலோமீட்டர் ரயில்வே இருப்புப் பாதைகள், 4.75 ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான ரயில்வே நிலையங்களை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்த்து ரூ.1.5 லட்சம் கோடி பணம் திரட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் ரயில்வே பயணக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது இன்னும் உயர இருக்கிறது.

• 26,700 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளை விற்று ரூ.1,60,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுங்கக் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

• 42,300 கிலோமீட்டர் மின் வழித்தடங்கள் உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி, 6 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி, காற்றாலை என அனைத்து மின் உற்பத்திகளையும், மின் வினியோகக் கட்டமைப்பையும் விற்று பணமாக்க முடிவு செய்துள்ளனர்.

• இந்திய தொலைத்தொடர்பு சந்தை ஜியோ - பேஸ்புக் நிறுவனங்களின் ஏகபோகமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக BSNL, MTNL, BEML உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சொத்துகள் 600 கோடி ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

• ஜவகர்லால் நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் தனியார் வசம் கொடுப்பதன் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

• நாடெங்கிலும் உள்ள 31 துறைமுகங்களும் கார்ப்பரேட் வசம் செல்ல இருக்கிறது.

• 160 நிலக்கரி சுரங்கங்களைத் தாரைவார்த்து ரூ.30,000 கோடி திரட்டும் திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

• 25 விமான நிலையங்கள்

• 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்களிடம் உள்ள 1 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் பழங்குடி மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளனர்.

இவ்வாறு தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் 70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 13 பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கும்பல்களுக்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு நான்கு ஆண்டுளில் 6லட்சம் கோடி ரூபாய் நிதியை திரட்டவுள்ளது. அதன் மூலம் சுயசார்பு, வளர்ச்சி என்ற பெயரில் உள்கட்டமைப்புகளை உருவாக்கி அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டத்திற்குச் சேவை செய்கிறது மோடி கும்பல்.

இந்த தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு தமிழகத்திலுள்ள பொதுச் சொத்துக்களையும் விற்கவுள்ளது 

• தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.

• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான சூரிய மின் உற்பத்தி, சொத்துகள் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் உள்ள எரிவாயு குழாய் திட்டங்கள் அனைத்தும் தனியாரிடம் அளிக்கப்பட உள்ளது. அத்துடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், புதுச்சேரி மற்றும் சென்னை ரயில் நிலையமும் இத்திட்டத்தில் அடங்கியுள்ளது.

• வருகிற 2022-ம் ஆண்டுக்குள் திருச்சி விமான நிலையம் தனியாருக்கு அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் தனியாரிடம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிலங்களையும், பொதுச் சொத்துக்களையும் கூறுபோட்டு விற்கும் மோடி கும்பலுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாநில உரிமைக்காக போராடாமல், கிடைக்கும் பணத்தில் தனக்கும் பங்கு கேட்கிறது இந்த கேடு கெட்ட மு.க.ஸ்டாலின் அரசு.

இவ்வாறு அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டத்திற்குட்பட்டு பணமாக்கல் திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி அரசைப் போல மு.க.ஸ்டாலின் அரசும் நடைமுறைப்படுத்தியே வருகிறது.

குவாட் திட்டங்களுக்கு இந்தியாவை பலியிடும்  'குஜராத் மாடல்' மத்திய அரசும், தமிழகத்தை பலியிடும் 'திராவிட மாடல்' மாநில அரசும்

தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட இந்தியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பில் கோவிட்-19 க்கு எதிர்வினையாற்றல், உள்கட்டமைப்பு, விண்வெளித்துறை, பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் (Green Technologies), பேரிடர் மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, 5ஜி தொழில்நுட்ப கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பங்கள் ஆகியவை அமெரிக்கா இந்தியா இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ள தளங்களாக குறிப்பிடப்பட்டிருந்தன.

2020 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு அமைச்சகம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சர்வதேச சட்ட அம்சங்களைக் கையாளும் நெஸ்ட் (NEST - New, Emerging and Strategic Technologies) பிரிவை நிறுவுவதாக அறிவித்தது. அமெரிக்க செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய பாதுகாப்பு ஆணையம் (NSCAIUS National Security Commission on Artificial Intelligence) அதன் அக்டோபர் 2020 அறிக்கையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் முறையாக பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையை கேட்டுக் கொண்டது. இந்தியாவை அமெரிக்காவுக்கான உற்பத்தி கூடமாகவும், அதன் இந்தோ-பசிபிக் திட்ட நோக்கத்துடன், அமெரிக்க-இந்தியா போர்தந்திர தொழில்நுட்பக் கூட்டணியை (USISTAUS-India Strategic Tech Alliance) உருவாக்கியது. மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி எவ்வித தடையுமின்றி எளிமையாக வர்த்தகம் (Ease of doing Business) செய்வதற்காகவும், உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குழுவை (HTCGHigh Technology Cooperation Group) புதுப்பித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, பசுமை ஆற்றல் தொடர்பாக பிற நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டுறவிற்கான திட்டமாக, காலநிலை மற்றும் பசுமை ஆற்றல் கூட்டுத் திட்டம் (Strategic Clean Energy Partnership - SCEP) அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அமெரிக்க பிரதிநிதிகள் தங்களது இந்திய தரப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் பங்கேற்புடன் கூடிய ஹைட்ரஜன் ஆற்றல் தொடர்பான பணிக் குழுவையும், பயோ எரிபொருள் தொடர்பான பணிக்குழுவையும் உருவாக்கியுள்ளது அமெரிக்காவின் வர்த்தக மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள அமெரிக்க-இந்திய காலநிலை தொழில்நுட்பங்களுக்கான பணிக்குழு (US-India Climate Technologies Action Group - CTAG) இந்திய தொழிற் நிறுவனங்கள் இந்திய சந்தையில் பசுமை ஆற்றல் துறை மற்றும் பருவநிலை-ஸ்மார்ட் கட்டமைப்பு திட்டங்களில் வளர்ச்சியை எட்டுவதற்கு அமெரிக்க வணிக மாதிரியை வழங்கி உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய உலகம் வெப்பமடைவதற்கும், பருவநிலை மாற்றத்திற்கும், சுற்றுச்சூழல் சீர்கெடுவதற்கும் ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பல்களின் லாபவெறியே காரணம். ஆனால், பசுமைக் காவலர்கள் போல் வேடமிடுகின்றன.  கியட்டோ மாநாட்டு ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் மீண்டும் மூன்றாம் உலக நாடுகளின் தோள்களிலே சுமையை ஏற்றுகின்றன. பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கான எலக்ட்ரானிக் சிப்களுக்கு இன்றியமையாத குறைக்கடத்திகள் விநியோக வலையமைப்பும்  (Semiconductor Supply Chain) குவாட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட மிக முக்கியமான செயல்திட்ட அம்சமாகும். இதன் உற்பத்திக்காக மூன்றாம் உலக நாடுகளின் கனிமவளங்கள் சூறையாடப்படுவதுடன், அவற்றை குப்பத்தொட்டியாக்கி சுற்றுச் சூழலை மென்மேலும் பாழடையச் செய்கிறது. ஏற்கனவே, பசுமைபுரட்சியின் பேரில் இந்திய விளைநிலங்களையும் சுற்றுச்சூழலையும் சீரழிக்கத் துணைபோன  இந்திய ஆளும் வர்க்கங்கள் இதற்கும் துணை போகின்றன.     

இந்த நாசகரத் திட்டங்களுக்காகத்தான் அக்டோபர்'2021 நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். ஸ்டாலினுடனான இந்த சந்திப்பைப் பற்றி எரிக் சோல்ஹேய்ம் தமது ட்விட்டர் பக்கத்தில், "மின் வாகனங்கள், சூரிய மின் சக்தி, பசுமை ஹைட்ரஜன் என மாறிவரும் உலகின் புத்தாக்க எரிசக்தி நகர்வில் இந்தியாவும், தமிழ்நாடும் எப்படி தலைமை வகிக்க முடியுமென்ற சிறந்த உரையாடலாக அமைந்தது" என பதிவிட்டிருந்தார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்திகள் ஆய்வு மற்றும் உற்பத்தி மற்றும் சந்தைக்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 300 லட்சம் கோடி டாலர்களை ஒதுக்கியுள்ளது. அது மட்டுமில்லாமல், பசுமை ஆற்றல் சந்தையில் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் மின்சாரப் போக்குவரத்து வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டு சந்தையையும் உலக அளவில் கைப்பற்ற முனைப்புடன் இறங்கியுள்ளது அமெரிக்கா.

குவாட்டின் இந்த நாசகர செயல்திட்டங்களுக்கு கேந்திரமாக இந்தியாவும்-தமிழகமும் மத்திய-மாநில அரசுகளால் மாற்றப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் திட்டத்தின் அடிப்படையிலேயே மோடியின் 'ஆத்மநிர்பார்' 'மேக் இன் இந்தியா (Make in India)' திட்டங்கள் உருவாக்கப்பட்டு இதற்கேற்றவாறு சுரங்கச் சட்டம், வனச் சட்டம், சுற்றுச் சூழல் சட்டங்கள், வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.

மின் வாகன உற்பத்திக்கான கூடமாக மற்றும் சந்தையாக மாற்றும் நோக்கில் 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய பொருட்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்திய வாகனப் போக்குவரத்து முழுவதும் மின் வாகனப் போக்குவரத்தாக மாற்றியமைக்கப்படவுள்ளது.  இதற்காக, இந்திய அரசின் கனரக தொழிலுற்பத்தி அமைச்சகத்தால் மின் வாகன உற்பத்திக்கு விரைவாக மாறுதல் திட்டம் I & II  (FAME- Faster Adoption and Manufacturing of Hybrid and EV schemes I and II) அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மின் வாகனப் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளாக நெடுஞ்சாலை வழித்தடங்களில் 6000 மின்னேற்ற நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. அமெரிக்க நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் 680மில்லியன் டாலர் முதலீட்டில் தென்னிந்தியாவில் சோலார் தகடுகள் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்நிறுவனத்துடன் திமுக அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது. 

குறைக்கடத்திகள் (Semi-Conductor) எனும் எலக்ட்ரானிக் சில்லுகளின் (Electronic chips) உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு

1985ல் ராஜீவ் காந்தி கடைப்பிடித்த புதிய பொருளாதார கொள்கைகளினால் அமெரிக்க நலன்களுக்கு இங்கு சிலிக்கான் சில்லுகளின் (Silicon based Electronic chips) உற்பத்தியை அப்போதே தொடங்கியது. 2021 டிசம்பரில் ரூ.76,000 கோடி செலவில் செமிகண்டக்டர் (Semi-conductor) மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சூழல் அமைப்புக்கான ஊக்கத் திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்திய செமிகண்டக்டர் மிஷனாக (ISMI) அது வளர்ந்துள்ளது.

இதற்காக

• சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்திற்கு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க அழைப்பு விடுத்து அதற்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தி தர  மு.க. ஸ்டாலின் அரசு உறுதியளித்துள்ளது

• ஸ்ரீபெரும்புதூரில் புதிய கம்ப்ரஸர் உற்பத்தி நிலையம் அமைக்க 1800 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

• டாடா குழுமம் 300 மில்லியன் டாலரில் செமிகண்டக்டர் வசதியை அமைப்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுடன் விவாதித்துள்ளது.

• டாடா குழுமம் ஓசூரில் எலக்ட்ரானிக் உதிரிபாகங்களுக்காக கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

• உலகின் மிகப்பெரிய ஒப்பந்த மின்னணு உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழகத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளது. EV ஆலையை நிறுவவும், செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யவும் நிறுவனத்தை அரசு அழைத்துள்ளது. இந்நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐபோன்களை ஸ்ரீபெரும்புதூரில் தயாரித்து வருகிறது (ஏற்கனவே இந்நிறுவனம் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தியதற்கு எதிராக எழுந்த போராட்டத்தை ஒடுக்க திமுக அரசு அதன் ஏவல்படையாக செயல்பட்டது).

• 28 நானோமீட்டர் சில்லுகளை (28 nanometre chips) உருவாக்க வேதாந்தா நிறுவனம் ஹோன் ஹாய், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளது.

• 24எம் என்ற அமெரிக்க நிறுவனம் மின் வாகனங்களுக்கு, பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்குப் பயன்படும் சேமிப்பு மின்கலன்களுக்கான (Rechargeable Battery) ஆலை அமைப்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

• தமிழ்நாடு, இப்போது ஓலா எலக்ட்ரிக், ஆம்பியர் எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் எனர்ஜி மூலம் மின்சார வாகன உற்பத்திக்கான மையமாகவும் உள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா உள்நாட்டு சந்தைக்கு ஆறு EVகளை வெளியிடுவதற்கான அதன் மெகா திட்டத்தை வெளியிட்டது.

• இந்திய சார்ஜ் பாயின்ட் ஆபரேட்டர் (சிபிஓ) நிறுவனமான மெஜந்தா, மாநிலத்தில் EV சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் உற்பத்திக்கான பிரத்தியேகக் கொள்கையை வெளியிட்ட தமிழக அரசு, இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 25 சதவீதத்தை உலகிற்கு வழங்குவதையும், தொழில்துறையின் உற்பத்தியை 2025க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குவாட்டிற்கான இராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு

மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அடியாள் படையான இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், ராணுவத் தளவாட உற்பத்தி முனையம் அமைக்கப்படவுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ராணுவத் தளவாடங்கள், குவாட் ஆதரவுடைய இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு விற்பனை செய்யப்படவிருக்கிறது.

இதற்காகவே, தமிழ்நாட்டு இராணுவத் தளவாட உற்பத்தி முனையத்தை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் நோக்கில், தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பிற்காக கடந்த பட்ஜெட்டில் 1.03 லட்சம் கோடி ஒதுக்கியது. தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் தொடங்க, ஆயத்த பணி நடக்கிறது. சேலத்தில் 1,000 ஏக்கருடைய மூன்று இடங்கள், ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ராணுவத்துக்கு தேவையான பாராசூட், சீருடைகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏவியேசன் நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (டிட்கோ - TIDCO) இணைந்து சென்டர் ஆப் எக்சலன்ஸ் (Centre of Excellence) எனும் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தை உருவாக்கியுள்ளது. இது இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு ஆடிட்டிவ் மேனுஃபேக்சரிங் (AM) அல்லது 3டி பிரிண்டிங் எனும் தொழில்நுட்ப அடிப்படையில் விண்வெளி, விமானம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவையில் ஈடுபட இருக்கிறது.      

இவ்வாறு அமெரிக்கா தலைமையிலான குவாட் திட்டங்களுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாயை நேரடியாக ஒதுக்கியுள்ளது திமுக அரசு. வரி ஏய்த்து, சுற்றுச்சூழலை சீரழித்து, கனிம வளங்களையும், மனித ஆற்றலையும், கட்டமைப்புகளையும் கார்ப்பரேட்டுகள் சுரண்டி கொழுக்க தமிழகத்தை குவாட்டின் கேந்திர மையமாக மாற்றி வருகிறது இந்த கேடுகெட்ட திராவிட மாடல். 

சில பிற துறைகளிலும் அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் திராவிட மாடல்

அதிகப்படியான அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதே திராவிட மாடல் என்கிறார் மு.க.ஸ்டாலின், ஆக பிற துறைகளிலும் தமிழகத்தை அந்நிய மூலதனத்துக்கு அகல திறந்துவிட சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது திமுக அரசு. அமெரிக்க நிறுவனப் பங்குடன் இயங்கும் ஐக்கிய அரபு நாடுகளைச் சார்ந்த லுலு நிறுவனம், ஆஸ்டர் DM ஹெல்த்கேர், ஷெராப் குழும நிறுவனம்  உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் 6500 கோடி ரூபாயில்  வணிக வளாகங்கள், ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்துதல், மருத்துவமனை நிறுவுதல் - மக்களை தேடி மருத்துவம், சரக்குப் போக்குவரத்துப் பூங்கா போன்ற சந்தை நலத்திட்டங்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுத்து வரவேற்றுள்ளது.

இந்நிறுவனங்கள் செய்யும் முதலீட்டில் பாதியை மானியமாக அரசே வழங்கும், தேவையான நிலத்தை மிக மலிவான விலையில் வழங்கும், மானிய விலையில் மின்சாரம், முதலீடு செய்யப்படும் மூலதனத்துக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு, போன்ற எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி கார்ப்பரேட் சேவையில் மோடி  அரசின் நடவடிக்கைகளுடன் போட்டியிடுகிறது 

சமரன் – 2022 - ஏப்ரல்-மே இதழ்

தொடர்ச்சி - பகுதி-2 ல்