வேங்கைவயல்: ஆதிக்க சாதியவாத மல நீரில் மிதக்கும் திமுக அரசு

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

வேங்கைவயல்: ஆதிக்க சாதியவாத மல நீரில் மிதக்கும் திமுக அரசு

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க: இங்கே சொடுக்கவும்

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலந்த “பீ” வாடை நம் மூச்சுக் காற்றை விட்டு அகலவில்லை. 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளின் இரத்த வாடையையும் தாண்டி “பீ” நாற்றமெடுக்கும் இந்த ஆதிக்க சாதி வெறி நமக்கு குமட்டலை உண்டாக்கி வருகிறது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வக்கற்ற - ஆதிக்க சாதிவெறி கும்பலின் கூடாரமாகத் திகழும் - திமுக அரசு பாதிக்கப்பட்ட மக்களான வேங்கைவயல் மக்களையே குற்றவாளிகளாக்கி தனது பாசிச கோர முகத்தை வெளிபடுத்தியுள்ளது.

திமுக அரசு - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையின் பொய்யுரைகள் 

2025 குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வேங்கைவயல் மக்கள் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிப்பதாகவும், திமுக அரசின் சிபிசிஐடி தூங்கிக் கொண்டிருப்பதாகவும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒரு பேனரை வைத்த நிகழ்வானது வலைதளங்களில் பரவலாகியது. அதே நேரத்தில், பரந்தூர் மக்களை பார்க்கச் சென்ற தவெக தலைவர் நடிகர் விஜய், அடுத்து நான் வேங்கைவயல் மக்களையும் சந்திக்க செல்லவிருக்கிறேன் என்று பேட்டியளித்த பின்பு வேங்கைவயல் விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில் விவாத பொருளாகியது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற ஒரு வழக்கில் வழக்கின் நிலை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஜனவரி 24 அன்று அரசு தரப்பிலிருந்து, குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி – CBCID) சார்பாக ஜனவரி 20 அன்றே குற்றப் பத்திரிக்கை – நிலை அறிக்கையை (Status report) வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்தது. அதோடு, வேங்கைவயல் கிராமத்தில் யாருக்கும் செல்ல அனுமதி கிடையாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. 

அந்த குற்றப்பத்திரிக்கையில், 

பாதிக்கப்பட்ட வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா, சுதர்சன், முத்து கிருஷ்ணன் ஆகிய 3 இளைஞர்களையே குற்றவாளிகளாக்கியுள்ளது. 

சுதர்சன் என்பவரின் மொபைல் போனில் இருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் மீட்டெடுக்கப்பட்டு ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளன என்கிறது சிபிசிஐடி. அதில், குடிநீர் தொட்டி நிரம்பியுள்ள புகைப்படம், தொட்டியின் மேல் பாலீத்தின் பையில் மலம் இருந்த புகைப்படம், தொட்டிக்குள் மலம் மிதக்கும் புகைப்படம், முத்துகிருஷ்ணன், சுதர்சன் சிரித்து பேசும் வீடியோ, சுதர்சனிடம் அவர் உறவினர் “தம்பி குற்றத்தை ஒப்புக் கொள்ளாதே” என பேசும் ஆடியோ என ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பலால் வெட்டிக் கத்தரித்து பரப்பட்ட தகவல்ககளை வைத்து ஒரு பொய்யான கதையை ஜோடித்துள்ளது. 

இது சாதிய வன்கொடுமை அல்ல; ஊராட்சி தலைவரை பழிவாங்கும் நோக்கில் தனிநபர் முன்விரோதம் காரணமாக இந்த காரியத்தை இவர்கள் செய்ததாக மிகமிக அருவருப்பான ஆதிக்க சாதியவாத குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், 

திமுக அரசின் ஐந்தாம் படையான நியூஸ்18 உள்ளிட்ட முதன்மை ஊடகங்களின் வாயிலாகவும், ஐ.டி விங் மூலமாகவும் பீ நாற்றமெடுக்கும் விவாதங்களையும் கட்டுக்கதைகளையும் அவிழ்த்துவிட்டு இம்மூவரையும் குற்றவாளிகளாக்கிவிட்டது.

டிசம்பர் 26 அன்று காலை 7.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள்தான் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. வேங்கைவயல் மக்கள் மலம் கலந்த நீரை குடிக்கவே இல்லை என்கிறது திமுக அரசு. 

உண்மையான குற்றவாளிகளை நேர் நிறுத்தி தண்டைனை பெற்றுத் தர திராணியற்ற - ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என பீற்றிக்கொள்ளும் திமுக அரசின் சிபிசிஐடி கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளது. சிபிசிஐடியின் இந்த பொய்யுரைகள் திமுக அரசின் சாதிவெறி பாசிசத்திற்கு துணைபோவதோடு ஆதிக்க சாதியவாத நலன்களை எவ்வாறு வெளிபடுத்துகின்றன? உண்மையில் நடந்தது என்ன? என்பதை ஒவ்வொன்றாக சுருக்கமாக பார்ப்போம்.

மலம் கலந்தநீரை வேங்கைவயல் மக்கள் குடிக்கவே இல்லை என்பது உண்மையா?

2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதிதான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்த விவரம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வருகிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அந்த கிராமத்தை சேர்ந்த யோகஸ்ரீ உள்ளிட்ட சில குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அப்போது மருத்துவர், குடிநீரில் மாசுபாட்டின் காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து 26ம் தேதி குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த முரளிராஜா (இவர் ஆயுதப்படை காவலர், விடுப்பில் ஊருக்கு வந்தவர்) என்பவர் தன் தாயிடம் நீரில் அடிக்கும் துர்நாற்றத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அக்கம்பக்கம் இருக்கும் அனைவரும் இதே நிலையை எதிர்கொள்ள சந்தேகம் எழுந்து குடிநீர் தொட்டியில் காக்கா குருவி போல ஏதும் செத்துக் கிடக்கிறதா என்று பார்க்கலாம் என கிராமத்தினர் முடிவெடுக்கின்றனர். அதனடிப்படையில் கிராம மக்களின் முன்னிலையில் இளைஞர்களான சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் ஏறி பார்க்கின்றனர். அப்போது அவர்கள் அதில் மலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். கீழே உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்கின்றனர். 

இதை உறுதிபடுத்தும் விதமாக 11.01.2023 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “வேங்கைவயல் கிராமத்தைச் சார்ந்த 2 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். மேலும் அந்த கிராமத்தில் இருந்து இதே போன்று நோய்தொற்றுடன் வந்த நோயாளிகள் அதிகரித்த நிலையில் பயன்படுத்தும் குடிநீரை பரிசோதிக்க மருத்தவர்கள் வலியுறுத்தியதின் அடிப்படையில் வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது மனிதக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது” என்று பேசியுள்ளார்.

ஆனால், தற்போதோ திமுக அரசு வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை. டிசம்பர் 26 2022 அன்று காலை 7.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள்தான் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது என அப்பட்டமான பொய்யை கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது.

அழிக்கப்பட்ட முதல்நிலை சாட்சிகள்

குடிநீர்தொட்டியில் இருந்து எடுத்த மலத்தை குப்பையில் வீசியெறிந்துவிட்டது; வேங்கைவயல் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் தாண்டி தொட்டியில் இருந்த நீரை முழுமையாக வெளியேற்றியது; விசாரணை நிலுவையில் இருக்கும்போதே, சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த குடிநீர் தொட்டியை இடித்தது என சம்பவத்தின் முதல்நிலை சாட்சிகள் அனைத்தையும் அழித்து, இந்த பிரச்சினையை ஊத்தி மூட நினைத்தது திமுக அரசு. 

வேங்கைவயல் மக்கள் இந்த சம்பவத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்காக பதிய கோரிய போது, முத்தையா தலையிட்டு பஞ்சாயத்து தலைவர் சார்பில் வழக்கு கொடுப்பதாகவும் அப்போதுதான் அது முறையாக விசாரிக்கப்படும் என்று கூறி ஏமாற்றியுள்ளார். முதல் நிலை சாட்சியாக இருந்து மலம் கலந்த நீரை அவசர அவசரமாக வெளியேற்ற செய்துள்ளார். சம்பவம் தெரிய வந்து 2 நாட்களுக்கு பின்பும் வழக்குப் பதிய படாத நிலையில்தான் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையான கனகராஜ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்காக பதியப்பட்டுள்ளது. மக்களின் தொடர் கேள்விகள் மற்றும் போராட்டங்களின் காரணமாக விசாரணையை துவங்கியது அரசு. 

ஆனால், அதை பாதிக்கப்பட்ட மக்கள் மீதே திருப்பியதுதான் கொடுமை! யார் தொட்டியில் மலத்தைக் கொட்டி இந்த குற்றத்தை செய்தார் என்ற நோக்கில் இருந்து ஆராயாமல், யாருடைய மலம் இது ஆராய்ச்சியில் ஈடுபட துவங்கியது. ஒரு வாளி அளவுக்கான மலம் தொட்டியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்பதால்தான் ஒரு வார காலமாகியும் மலம் தொட்டியில் இருந்துள்ளது. மேலும், முதல் நிலை வேதியியல் ஆய்வில், தொட்டியில் இருந்த மலம் தனியொரு நபருடையதல்ல, அது பல்வேறு நபர்களின் மலங்களின் கலவையாக இருப்பது தெரிய வந்தது. அதனால் அதை இன்னார்தான் செய்தார் என ஆய்வின் மூலம் நிரூபிக்க முடியவில்லை. இதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மலம் கழிக்க ஒதுங்கும் பகுதிகளில் இருந்து மலத்தை எடுத்து வந்து அதை அவர்களின் டி.என்.ஏ மாதிரியோடு ஒப்பிடுவது என பல்வேறு தகிடுதத்த வேலைகள் அனைத்திலும் ஈடுபட்டது. ஆனால், பத்மா-முத்தையா கும்பல்களின் டி.என்.ஏ மாதிரிகளையோ மலங்களையோ சோதனைக்கு உள்ளாக்கவே இல்லை. இதனால், டி.என்.ஏ. சோதனைகள் அனைத்தும் அரசுக்கு தோல்வியையே தந்தன; அந்த சோதனை முடிவுகளை வைத்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்க அதனால் முடியவில்லை. இந்நிலையில்தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் – சாதி சங்கங்களின் துணையோடு பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கியுள்ளது. 

பாஜகவின் ஐ.டி.விங் 2 ஆண்டுகளுக்கு முன்பே மலம் கலந்த விசயம் தொடர்பாக வேங்கைவயல் மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வலைதளங்களில் பரப்பியது. வழக்கு விசாரணையில் இருக்கும் போதே இது போன்ற கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது அக்கும்பல். அவற்றை அடக்காமல், இந்த பொய்ப் பிரச்சாரங்களையே தனக்கான ஆதாரங்களாக திரட்டியுள்ளது திமுக அரசின் சிபிசிஐடி. 

இது தனிநபர் விரோதம்; சாதிய வன்கொடுமை இல்லை என்பது உண்மையா?

முதலில் இப்பகுதியில் சாதிய வன்கொடுமைகள் ஏதுமில்லை என்பது பொய்யான வாதம். 

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்ல தடை, இரட்டைக் குவளை முறை, கடைகளில் பொருட்களை கொடுக்க மறுப்பது, கல்விநிலையங்களில் பாகுபாடு என பல்வேறு வன்கொடுமைகள் அன்றாடம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்ந்து வருகிறது. சாதி வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் மாவட்டமாக புதுக்கோட்டை நீடித்து வருகிறது என்பதே உண்மை.

குறிப்பாக வேங்கைவயல் பகுதியில் எடுத்துக் கொண்டால், ஐயனார் கோவில் நிலங்கள் உம்பளம் (ஒரு வகையான நிலமானிய முறை) என்ற முறையில் பறையர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், குயவர்கள், முத்திரையர்கள் ஆகியோருக்கு நிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கு ஈடாக கோவில்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற முறை இருந்து வந்தது. ஆனால் அப்பகுதியின் கள்ளர் மற்றும் முத்திரையர் சாதிகளிலுள்ள ஆதிக்க வர்க்க கும்பல் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் இருந்த உம்பள நிலங்களை அபகரித்து வந்துள்ளனர். இதனால் சுமார் 60 வருடங்களாக, தாழ்த்தப்பட்ட மக்கள் ஐயனார் கோவிலின் திருவிழாக்களில் பங்கேற்க முடியாத நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்களை கோவிலுக்குள் நுழைய விடுவதும் இல்லை. மேலும், அப்பகுதியிலும் கூட தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்து வருகிறது. 

இவை மலம் கலந்த சம்பவத்திற்கு பிறகு கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையிலே அம்பலத்திற்கு வந்ததை நாம் நேரில் கண்டோம். அவை அச்சமயத்தில் ஊடகங்களில் பேசு பொருளாகியது. ஆனால் அப்பகுதியில் சாதிய வன்கொடுமையே இல்லை என்பதும் இதன் மூலம் அப்பட்டமான பொய் என்றாகியுள்ளது. 

மேலும் இது தனிநபர் விரோதமா? என்றால் அதுவும் இல்லை; இது சாதிய வன்கொடுமைதான் என்பதும் நிரூபணமாகிறது. இது ஆதிக்க சாதிவெறியின் நீட்சியே ஆகும். 

வேங்கைவயல் பகுதியைச் சார்ந்த சதாசிவம் பேசுகையில், முத்திரையர் சாதியைச் சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக எங்களை சாதிய பாகுபாட்டுடன்தான் நடத்தி வந்தனர். சாதி ரீதியாக இழிவாக பேசி தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்துதான் வந்துள்ளனர். ஜீவானந்தத்தின் மகனான முரளிராஜா தனது அப்பாவின் மீதான தாக்குதலுக்கு பழிவாங்க இதனை செய்தார் என்பது அப்பட்டமான பொய் என்கிறார். 

முந்தைய பஞ்சாயத்து தலைவர் கள்ளர் சாதியைச் சார்ந்த சிதம்பரம் என்பவர் இந்த மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பவராக இருந்துள்ளார். முத்திரையர் சாதியைச் சார்ந்த பத்மா – முத்தையா கும்பலோ இவர்களின் அடிப்படைத் தேவைகளையும் பிரச்சினைகளை கண்டுகொள்வதே இல்லை. இதனால் வேங்கைவயல் மக்கள் முத்தையா கும்பலுக்கு பஞ்சாயத்து தேர்தலில் ஆதரவளிக்கவில்லை. இந்த காழ்ப்புணர்ச்சியில் அவர்கள் மீது மேலும் சாதிய வன்கொடுமைகளை தீவரப்படுத்தியே வந்துள்ளது பத்மா-முத்தையா கும்பல். 

2017ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் அடிப்படையில் முத்துக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இறையூரில் ஏற்கெனவே 30ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள தொட்டி இருப்பது, அங்கு இன்னொரு தொட்டி அமைக்க தோதான இடம் இல்லாதது, வேங்கைவயல் பகுதி மேடாக உள்ளதால் நீர் சரிவர செல்லாதது போன்ற காரணங்களால் வேங்கைவயல் கிராமத்தில் இந்த மேல்நிலைத் தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் 2021ம் ஆண்டு வரை அத்தொட்டி பயன்பாட்டுக்கே வரவில்லை. அத்தொட்டிக்கென ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நிதி சுமார் ரூ. 7லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதையும் முத்தையா கும்பல் அபகரித்துள்ளது. இந்த உண்மை 2022ல் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் பதிக்கும் வேலைகள் நடைபெறும் போதுதான் இவர்களுக்கு தெரிய வருகிறது. அச்சமயத்தில் தொட்டி ஆப்பரேட்டராக வேலை பார்த்த முத்திரையர் சாதியைச் சார்ந்த சண்முகம் என்பவர் முத்தையாவிடம் வேங்கைவயல் மக்கள் முன்னிலையில் கேள்வி எழுப்புகிறார். இவர் சி.ஐ.டியு. தொழிற்சங்கத்திலும் செயல்பட்டு வருபவர். “ஏற்கெனவே இறையூரில் இருந்து வரும் குழாய் உடைந்து வேங்கைவயலுக்கு தண்ணீர் சொட்டு சொட்டாக வருகிறது, அல்லது பெரும்பாலும் வருவதே இல்லை. ஒதுக்கப் பட்ட நிதியில் ஆழ்துளை கிணறு அமைத்து புதிய தொட்டியில் மேலேற்றலாமே” என அவர் கேட்டுள்ளார். இதனால், கடுப்படைந்த முத்தையா, “ஏன்டா பறப் பயலுகளுக்கு முன்னாடியே என்னை கேள்வி கேட்கிறீயா? என்னை அசிங்கப்படுத்துறியா?” என்று சாதிய வன்மத்தைக் கொட்டியதுடன் சண்முகத்தை வேலையை விட்டும் நீக்கியுள்ளார். அவர் தொழிற்சங்கத்தின் மூலம் கலெக்டரிம் முறையிட்டுள்ளார், வேங்கைவயல் மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். கலெக்டரும், வேலையிலிருந்து நீக்கும் அதிகாரம் முத்தையாவுக்கு இல்லை எனக்கூறி வேலையில் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் முத்தையாவோ, கலெக்டர் சொன்னால் நான் கேட்க வேண்டுமா என மறுத்து தனக்கு விசுவாசமான காசி விஸ்வநாதன் என்பரை தனது மனைவி பஞ்சாயத்து தலைவி பத்மா மூலம் ஆப்ரேட்டராக நியமித்துள்ளார். மேலும் காந்தி என்ற சாதிவெறியனும், “ஏன்டா பறத் தெருவில் ஒவ்வொருத்தன் வீட்டுக்கு தனிக் குழாயா? நீங்க எப்படி தண்ணி பிடிக்கிறீங்க என்று நான் பார்த்து விடுகிறேன்” என்று சவால் விட்டு சென்றுள்ளான்.

இந்நிலையில்தான், 2022 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின் தீர்மானத்தில், வேங்கைவயல் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிய வகையில் என்று சில தொகை செலவிடப்பட்டதாக தீர்மானம் வாசிக்கப்பட்டுள்ளது. காலையிலும், மாலையிலும் இரு வேளையிலும் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வரும் உப்புத் தண்ணீர்தான் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் இது குறித்து ஆட்சேபனை தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத முத்தையா, “ஏன் டா பறப் பயலுகளுக்கு நாங்கள் எவ்வளவு செஞ்சாலும் நீங்க நன்றியவே நெனச்சுப் பார்க்க மாட்டீங்கடா, உங்களால முடிஞ்சதப் பார்த்துக்கங்கடா” என மிரட்டியுள்ளார். அதற்கு சதாசிவம், “நீ தலைவரா? உன் பொண்டாட்டிதானே தலைவர் அவரை கூட்டத்தை நடத்த சொல்” என்றவுடன் அந்த கோபம் அதிகமாகி மோதலாக உருவாகியுள்ளது.

எனவே இது தனிநபர் ரீதியான மோதல் அல்ல; அப்பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வந்த ஆதிக்க சாதிவெறியின் நீட்சியே இந்த சம்பவம் என்பது அப்பட்டமாகியுள்ளது. 

முத்தையாவால் ஆப்பரேட்டராக பணியமர்த்தப்பட்ட காசி விஸ்வநாதன் மலம் கலந்த சம்பவத்திற்கு பிறகு கடந்தாண்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது முத்தையாதான் குற்றவாளி என்ற சந்தேகத்தை அப்பகுதி மக்களிடம் அதிகரித்துள்ளது.  

மேலும் சதாசிவம் பேசுகையில், பராமரிப்பு பணிகளை வேங்கைவயல் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஏன் செய்யாமல் அதை களவாடிக் கொள்கிறீர்கள் என ஊராட்சி தலைவியின் கணவர் முத்தையாவை பார்த்து நான்தான் கேள்வி எழுப்பினேன். அதை முரளிராஜாவின் அப்பாவாகிய ஜீவானந்தம் பேரில் சுமத்துவது தவறு. அப்படியே ஒரு வாதத்திற்கு பழி வாங்குவது என்று வைத்துக் கொண்டாலும் அவர்களின் தொட்டியில்தானே கலந்திருக்க வேண்டும். நாங்கள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் நாங்களே கலந்து கொள்வோமா? முத்தையாதான் ஆட்களை ஏவிவிட்டு குடிநீர் தொட்டியில் இந்த கேவலமானச் செயலை செய்துள்ளார். ஆனால், நன்கு படித்து எங்கள் கிராமத்தின் அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையாக இருக்கும் இந்த 3 இளைஞர்களையும் இந்த கொடிய சம்பவத்தை வெளிக் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காகதான், சிபிசிஐடி காழ்ப்புணர்ச்சியுடன் அவர்களை குற்றவாளிகளாக்கியுள்ளது என்கிறார். 

மலம் கலந்தவர்களை விட மோசமான வன்கொடுமையை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்த்தியுள்ளது திமுக அரசு

இந்த கொடுமையை வெளியுலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் சுதர்சன் என்பவரின் மொபைல் போனில் தண்ணீர் தொட்டியில் மலம் மிதக்கும் புகைப்படத்தை எடுக்கிறார். அதை ஜூம் (zoom) செய்து வீடியோ எடுக்க வேண்டிய நிலையில், இதையெல்லாம் ஜூம் செய்து எடுக்க வேண்டியுள்ளது என தங்களுக்கு நேர்ந்த அவலத்தையும் நினைத்து வேதனையுடன் சிரித்துக் கொண்டதாக கூறுகின்றனர். அதன் பின் மலம் எடுத்து தொட்டி மேல் பாலீத்தின் பையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் போனில் எடுத்துள்ளனர். இந்த படங்களையும் வீடியோவையும் வாட்சப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். அதன் பின்னர், ஓரிரு நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரமான சம்பவம் பரவி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சமூக நீதி வேசத்தை கேள்விக்குள்ளாக்கியது. 

இவை அனைத்தும் ஊர் மக்களின் முன்னிலையில்தான் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ. போன்றோர் முன்னிலையில்தான் நடந்துள்ளது. பற்றாக்குறைக்கு எம்.எல்.ஏ.வின் டிரைவர் டேவிட் உள்ளிட்ட அவர்களின் உதவியாளர்களை மேலே ஏறி பார்க்க செய்து மலம் கலந்திருப்பதை உறுதி செய்து கொண்டுள்ளனர். 

ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்கவில்லை திமுக அரசு. இதுவரை அந்த மக்களை முதல்வர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூட கூறவில்லை. ஆனால் அதற்கு மாறாக, தொடக்கத்திலிருந்தே வாக்குவங்கியை மனதில் கொண்டு செயல்படும் இந்த கேடுகெட்ட கும்பல் குற்றவாளிகளான ஆதிக்க சாதிவெறி கும்பலை பாதுகாக்க – இக்கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய அந்த 3 இளைஞர்களை குறிவைத்தே விசாரணையை முடுக்கி விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல் ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களாலும் குற்றஞ்சாட்டப்படும் இறையூர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரான முத்திரையர் சாதியைச் சேர்ந்த முத்தையா உள்ளிட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவே இல்லை இந்த காவல்துறை. அனைத்து சாதி உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு இத்தகைய சாதிவெறி கும்பலும் வாக்கு வாங்கிக்காக அலையும் அரசியல் கட்சிகளும் தடையாக உள்ளன. தனிநபருக்கு எதிரான பழிவாங்கல் என்று ஒருபுறம் பேசிக் கொண்டு அந்த தனிநபரான முத்தையா பெயரை, 370 பக்க குற்றப்பத்திரிக்கையில் ஓர் இடத்தில் கூட குறிப்பிடவில்லை இந்த வெட்கங்கெட்ட கும்பல். ஆதிக்க சாதியினர் நல்லவர்கள் – அவர்கள் இத்தகைய செயல்களை செய்ய மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர்தான் செய்வார்கள் என்ற அருவருப்பான சாதிவெறி கண்ணோட்டத்திலிருந்துமே இந்த சம்பவத்தை அணுகியது திமுக அரசு. 

ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பலைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம், தடா பெரியசாமி போன்ற கோடாரிக் காம்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நின்றன. அந்த இளைஞர்கள் வாட்சப் குழுவில் பதிவிட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் கத்தரித்து வெட்டி ஒட்டி அதை அவர்களுக்கு எதிராகவே பிரச்சாரம் செய்யும் வேலையை பாஜகவின் நிர்மல் குமார் என்பவனும் ஐ.டி. விங்கும் அப்போதே தொடங்கின. ஆர்.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட ஆதி முத்திரையர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் இந்த பொய்பிரச்சாரங்களை பரப்பத் தொடங்கின. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போதைய திமுக அமைச்சர் மெய்யநாதன் போன்றோரின் ஆதிக்க சாதிவெறி ஆதரவின் காரணமாகவும் முத்திரையர் சாதியைச் சார்ந்த குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் ஈட்டியை திருப்பியது அரசு. திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். – பாஜக, அதிமுக, சாதி சங்கங்கள் என அனைத்தும் கூட்டாகச் சேர்ந்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டன. 3 இளைஞர்களையும் அழைத்து விசாரணை எனும் பெயரில் மிரட்டியது; அடித்து துன்புறுத்தியது; பணம் தருவதாக கூறி செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தியது. ஆனால் அந்த இளைஞர்கள் உறுதியாக மறுத்து விட்டனர். மறுபக்கம் விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள், ம.ஜ.இ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது திமுக அரசு. 

மேலே உள்ள படங்கள்: 2023 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேங்கைவயல் மக்களை சந்தித்து அவர்களுக்கு நடந்த அநீதி குறித்து ம.ஜ.இ.க தோழர்கள் உரையாடியபோது

2025 ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி  திமுக அரசு - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையை கிழித்தெறிவோம் என கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

சிபிசிஐடியும் உண்மையை மறைத்து அந்த 3 இளைஞர்களையே கட்டம் கட்டியது. 2 ஆண்டுகளாக இவர்களை விசாரணை என்ற பெயரில் பல்வேறு வகையில் துன்புறுத்தியும் வந்துள்ளது. உண்மையில் இந்த கும்பலில் தலையில் மூளையே இல்லை போல, சாதிவெறி “பீ”யால்தான் நிரம்பியுள்ளது. அதனால்தான் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி இத்தகைய பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. முந்தை ஆய்வு அதிகாரியின் பாணியிலேயே சிபிசிஐடியும் பிரச்சினையை அணுகியுள்ளது. 

முத்து கிருஷ்ணனிடம் 2 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் மற்ற இருவர்தான் செய்தார்கள் என ஒத்துக்கொள்ள கூறி பேசியுள்ளது; ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். 

அதே போல், முரளி ராஜாவிடம் உனக்கு எஸ்.ஐ.யாக புரோமசன் தருகிறோம் குற்றத்தை ஒத்துக்கொள் என ஆசை காட்டியுள்ளது; அதற்கு அவர் நான் செய்யாத இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டால் நான் குற்றவாளியாக தண்டனைதானே பெறமுடியும்; பதவி உயர்வு எவ்வாறு பெற முடியும் என செருப்பால் அடித்தது போல் கேட்டுள்ளார். 

சுதர்சனிடமும் இவ்வகையில் மிரட்டி பார்த்து எடுபடவில்லை. கடைசியில் விசாரணைக்கு கூட்டிச்சென்ற காலத்தில், அவரது அம்மாவிடம் போனில் பேசிய ஆடியோ பதிவை வைத்து அவரையே குற்றவாளியாக்கியுள்ளது. அதில் அப்பெண், “தம்பி போலீஸ் விசாரணைக்கும், அவர்களின் எவ்வித ஆசை வார்த்தைக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விடாதே” என்ற தொணியில் கோரும் பதிவை கத்தரித்து அதையே குற்றத்திற்கான ஆதாரமாக்கியுள்ளது.

அதுபோல அவர்களின் மொபைல் ஃபோனை கைப்பற்றி வைத்துக் கொண்டு அதில் உள்ள புகைப்படங்களையும், வீடியோக்களையும் சேமித்து வைத்துக் கொண்டு அழித்து மீட்கப்பட்டதாக கதையளந்து அவற்றையும் ஆதாரமாக கொண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழக்கின் நிலவரங்களை அவ்வவ்வபோது வழங்காமல், அவர்களுக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை திரட்டி அதை செய்தி ஊடகங்களுக்கு கொடுத்துள்ளது. நேர்மையான விசாரணையை அரசு நடத்தும் என நம்பிய மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது இந்த அரசு. இவ்வாறிருக்க சாதிவெறியால் மூளைமழுங்கிய திமுக அரசின் சிபிசிஐடி, பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் கொடுமைக்கு சாட்சியாக இருக்கும் இந்த மூவரையே குற்றவாளிகளாக்கியுள்ளது. அதாவது, ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் மீது தாங்களே சாதிய வன்கொடுமை செய்து கொண்டதாக கூறுகிறது திமுக அரசு. வாக்குவங்கிக்காக சாதிவெறி பாசிசத்தை பாதிக்கப்பட்ட மக்கள் மீதே ஏவிவிட்டுள்ளது. 

“பழி போடுவதற்கு பதிலாக எங்களை கொன்று விடுங்கள்”

நந்தன் சினிமா பட இயக்குநர் இரா.சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நாங்கள் வேங்கைவயல் போயிருந்தபோது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கச் சொல்லி கதறிய பெண்மணி… இப்போது அவர்களில் சிலரையே குற்றவாளியாக்கி இருக்கிறது காவல்துறை. அவர்களே மலம் கலந்து அவர்களே பருகுவார்களா? பாதிக்கப்பட்டவர்களே பலிகடா ஆக்கப்படுவது நியாமாரே?” என வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், “குற்றவாளி யார் என பார்ப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். அவன் காலில் விழுந்தாவது… இதை கையில் எடுக்கக் கூட யாரும் யோசிக்கும்போது அதை தண்ணிரில் கலந்து குடிக்க வச்சிருக்கானா… எங்களால வெளியில சொல்லக் கூட முடியல… அரசு சார்பில் அடிப்படை வசதி செய்துதருகிறோம், அது தருகிறோம், இது தருகிறோம் என்கிறார்கள். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் நிம்மதியை கெடுத்த -சந்தோசத்தை பறித்த அந்த குற்றவாளியை மட்டும் காட்டுங்கள்” என கலங்குகிறார். 

மேலும், அந்த 3 இளைஞர்கள் தலைமறைவாகிவிட்டனர் என்ற கட்டுக்கதையை கட்டி வரும் நிலையில் அவர்களை பேட்டி எடுத்து விகடனில் பிரசுரிக்க செய்துள்ளார் இரா.சரவணன். குற்றவாளியாக்கப்பட்டுள்ள அந்த அப்பாவி இளைஞர்கள் அளித்த பேட்டியில் இருந்து…

சுதர்சன் பேசுகையில், “…விசாரணை அதிகாரியான கல்பனா, என்னைய கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயி, நீயே குற்றத்தை ஒத்துக்கனு சொன்னாங்க. நாங்க தப்பு பண்ணினோம்னு கண்டுபிடிச்சிட்டதாகவும், ஆதாரம் இருக்குன்னும் சொல்றவங்க, ஏன் எங்களை ஒத்துக்கச் சொல்லிக் கெஞ்சணும்… சிபிசிஐடி-ங்கிறது பெரிய அமைப்பு… அவங்களுக்கு இல்லாத அதிகாரம் இல்ல. ஆனாலும், எங்களுக்கு எதிரா எந்த ஆதாரத்தையும் அவங்களால சொல்ல முடியல. ஏன்னா, நாங்கதான் தப்பே பண்ணலயே… அவங்க பார்வையில் குடிக்கிற தண்ணியில் மலம் கலந்தது தப்பில்ல… அதை வெளியே சொன்னதுதான் தப்பு. இப்பவும் சாதியச் சொல்லி நாங்க இரக்கப்பட வெக்கிறோம்னு நினைக்காதீங்க… உண்மையாகவே நாங்க செஞ்ச ஒரே தப்பு. இந்தச் சாதியில பொறந்ததுதான்…” என்று பிறப்பால் தாங்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுவதை வெளிப்படுத்தி நொந்தார்.

முத்து கிருஷ்ணன் பேசுகையில், “…அந்த தண்ணியைக் குடிச்ச எங்க மேலேயே பழிபோட்டு வழக்கை முடிக்கப் பார்க்கலாமா… சிபிசிஐடி என்கொயரியில், அன்னிக்கு என்ன நடந்ததுனு ஒரு அதிகாரி கேட்பார். அவருக்கு பதில் சொல்லி முடிச்சா, அடுத்து ஒரு அதிகாரி வருவார். அவரும் அதே கேள்வியைக் கேட்பார். நாங்க பதில் சொல்வோம். ஒரே நாள்ல 17 அதிகாரிங்க இப்படி அடுத்தடுத்து வந்து ஒரே கேள்வியைக் கேட்டு, நாங்க மாத்திச் சொல்றோமான்னு பார்பாங்க. நீங்க தண்ணியில் மலம் கலந்த காட்சிகளை நாங்க சாட்டிலைட் மூலமா எடுத்துட்டோம். உங்களால் தப்பவே முடியாதுனு கூட சொன்னாங்க. அந்தத் தண்ணிய மொத்த வீடும் ஊரும் குடிச்சிருக்காங்க. நாங்களே மலம் கலந்து நாங்களே எப்படிக் குடிப்போம்…” என்றவர் மேலும், “பாதிக்கப்பட்டவங்க நாங்க… நியாயமான விசாரணைக்குப் போராடினவங்க நாங்க… குற்றவாளிகளைச் சீக்கிரம் கண்டுபிடிக்கச் சொல்லி வற்புறுத்தினவங்க நாங்க… கடைசியில் குற்றவாளிகளும் நாங்க…” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முரளி ராஜா, “… தண்ணியில் மலம் கலந்த கொடுமையை நாங்கதான் பெரிய பிரச்சனையா பார்த்தோம். வெளியில எல்லோருக்கும் அது சாதாராணப் பிரச்சனையாத்தான் தெரிஞ்சிருக்கு. குடிக்கிற தண்ணியில் மலத்தைக் கலந்தும், பிள்ளைங்க தொடங்கி பெத்தவங்க வரைக்கும் அதைக் குடிச்சதும் யார் மனசாட்சியையும் உலுக்கல. இதை ஏன் வெளிய சொல்லிப் பரபரபாக்குனீங்கன்னு மட்டும்தான் எல்லாரும் கேட்குறாங்க. கலந்தவங்களை விட்டுட்டு, சொன்னவங்களைக் குற்றவாளி ஆக்குறாங்க. நல்ல சட்டம், நல்ல விசாரணை… வேறென்ன சார் சொல்றது?... அதிகாரமும் ஆதிக்க வெறியும் எங்களைச் சூறையாடுது. இப்படி, பழி போடுவதற்கு பதிலாக, எங்களைக் கொன்னுடுங்க..! …ஏற்கெனவே இந்த மண்ணுல தலித் மக்களை எப்படிப் பார்க்குறாங்கன்னு தெரியும். இந்தச் சம்பவத்தை நாங்கதான் செஞ்சோம்னு பழிபோட்ட பின்னால், இன்னும் எவ்வளவு கேவலமா பார்பாங்க… எங்கே தலித் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அவங்களே செஞ்சுட்டு பழி போடுறதா பரப்புவாங்க. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் இருக்கோம்ன்னு நினைக்கிறப்ப செத்துடலாம்போல இருக்கு சார். தண்ணியில் மலத்தை கலந்தவங்களை விட, இந்த கதிக்கு எங்களை ஆளாக்குனவங்கதான் மோசமானவங்க..!” என்று திமுக அரசை நோக்கியும், பொதுபுத்தி எனும் மக்களின் மனசாட்சியை உலுக்கு விதமாகவும் கேள்விகளை முன்வைத்துள்ளனர் அந்த அப்பாவி இளைஞர்கள். 

வெண்மணி முதல் வேங்கைவயல் வரை தொடரும் திமுக அரசின் துரோகம்

திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டு காலமாக சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 75க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை மறுப்பு, கோவில்களுக்கு நுழைய தடைவிதித்து கோவிலுக்கு சீல் வைப்பது, அவர்களின் வாழ்விடங்களுக்கு தீ வைப்பது, அவர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை கூட பறித்து மூன்றாம் தர குடிமக்களுக்கு கீழாக நடத்தி வருகிறது திமுக அரசு. தமிழகத்தில் ஆண்டுக்கு 2000க்கும் மேற்பட்ட சாதி ரீதியான வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது. முந்தைய ஆட்சியை விட 40% சதவிகிதத்திற்கும் அதிகமாக இவை அதிகரித்து வந்துள்ளன என்பதை நாம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறோம். அப்போதெல்லாம், இதற்கு திமுக அரசுதான் காரணமா? முந்தைய ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையா என கேள்வி எழுப்பியவர்கள்… இன்று பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீதே அரச வன்முறையை ஏவிவிட்டிருப்பதை என்னவென்று சொல்வார்கள்? ஆதிக்க சாதிவெறி அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு இந்த கூட்டு வன்கொடுமையை திமுக அரசு நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் இதைப் பற்றி பேசக்கூடாது என்கிறார்கள்; பாசிச எதிர்ப்பு பாயாசமாகி விடும் என்கிறார்கள் இந்த அறிவாலய எடுபிடிகளான பெரியாரிய அமைப்புகளும் திமுகவுக்கு சொம்பு தூக்கும் சில மா.லெ. அமைப்புகளும். பாஜக அரசு இசுலாமியர்களை மையப்படுத்தி பாசிசத்திற்கு மதவெறி வடிவம் கொடுக்கிறதென்றால், அதை எதிர்ப்பதாக நாடகமாடும் திமுக அரசு தனது பாசிசத்தை சாதிவெறியாக வெளிபடுத்துகிறது. 

படிக்கவும்: திராவிட மாடல் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகள்

இன்று நேற்றல்ல! திமுகவும் அதன் மூலகர்த்தாவான நீதிக் கட்சியும் தொடக்கத்திலிருந்தே தாழ்த்தப்பட்ட மக்கள் விரோத கட்சிகளே ஆகும். பூசாரி பார்ப்பன எதிர்ப்பு பேசிக் கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் பொப்பிலி ராஜாக்களுக்கும் சேவகம் செய்தது நீதிகட்சி. இன்று பாசிச எதிர்ப்பு என பேசிக் கொண்டு அமெரிக்க அதானிகளுக்கும், டிவிஎஸ் முதலாளிகளுக்கும், எஸ்.வி.சேகர்களுக்கும் சேவை செய்து கொண்டுள்ளது திமுக அரசு. வெண்மணியில் விவசாயக் கூலிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட போது, கோபாலசாமி நாயுடு பண்ணையார், பெரிய நிலச்சுவான்தார் அவர் இந்த மாதிரியான செயல்களை செய்ய மாட்டார்; இவர்களே தீவைத்துக் கொண்டு அவர் மீது பழியை போடுகின்றனர் என்று பேசி ஆதிக்க சாதிவெறி கும்பலுக்கு ஆதரவாக நின்றது அண்ணாதுரை அரசு. அதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம் சுமத்தினார் பெரியார். வேங்கைவயலிலும் அதேபோல் ஆதிக்கச் சாதியினர் மலத்தை கையால் எடுக்க மாட்டார்கள், அவர்களை கைது செய்தால் சாதிக் கலவரம் ஏற்படும் என பொய் கூறி ஏதுமறியா ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர்களை குற்றவாளிகளாக்கியுள்ளது மு.க.ஸ்டாலின் அரசு. திக, திமுக, அதிமுக என அனைத்து திராவிட கட்சிகளும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு அநீதியே இழைத்துள்ளன. வெண்மணியில் ராமய்யா என்ற விவசாயக் கூலி அவன் குடிசையை அவனே கொளுத்திக் கொண்டான்; மாஞ்சோலை தோட்ட கூலித்தொழிலாளிகள் தாமிரபரணி ஆற்றில் நீச்சல் தெரியாமல்தான் மூழ்கி செத்தனர்; பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்களே சுட்டுக்கொண்டார்கள்; இளவரசன் தண்டவாளத்தில் தானே தலைவைத்து படுத்துக் கொண்டான்; சங்கர் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டான்; வேங்கைவயல் கிராம மக்கள் தங்கள் குடிநீரில் தாங்களே மலம் கலந்துக் கொண்டனர்… இன்னும் எத்தனை எத்தனை பழிச்சொற்கள் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில்… போதும்டா உங்க சமூக நீதி(!!)

வேங்கைவயல் கிராமத்தில் யாரும் உள்நுழைய முடியாதபடி போலீசாரை குவித்தும் பல்வேறு செக்போஸ்ட்களை போட்டும் அப்பகுதியை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியுள்ளது. பெண்கள் காலைக் கடன்களை முடிக்க ஒதுங்க கூட முடியாமல் அவர்களை கண்காணிக்கிறது. ஊடகங்கள், மாற்று கட்சியினர் என யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறது. அந்த பகுதி மக்களை பார்க்கச் சென்ற விசிகவினர் இருவரை கைது செய்துள்ளது. இந்த துயரச் சம்பவங்களால், மன உளைச்சலில் முரளிராஜாவின் பாட்டி இறந்ததற்கு கூட அவரின் உறவினர்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள்ளது. அதை கண்டித்து அந்த மக்கள் போராடியதை அடக்கியுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை அப்பகுதியில் கட்டவிழ்த்து விட்டுள்ளது திமுக அரசு. அம்மக்கள் மீது சமூகத் தீண்டாமையை கடைபிடித்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த பாசிச அரசு. 

சாதி வெறி பாசிசத்திற்கு துணை போகும் நீதிமன்றங்கள் 

விசிக சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, “வேங்கைவயலில் உள்ள மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வழக்கில் சம்பவ நாளன்று காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்து மின்னனு பதிவுகள், அறிவியல் பதிவுகளை அரசு தரப்பில் முன்னிலையான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த வழக்கில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம்” எனக் கூறி சாதி வெறி பாசிசத்திற்கு துணை சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நியாயம் கேட்டு நீதிமன்றத்தின் வாயிலாகவும், ஆர்ப்பாட்டம், பிரச்சாரங்கள் போன்ற வடிவங்களில் போராடுவதும் அரசியலமைப்பு வழங்கியிருக்கும் குறைந்தபட்ச ஜனநாயகம் அதைக் கூட பறித்துள்ளது. 

மேலும், 2025 பிப்ரவரி 3ல் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் சிபிசிஐடியின் இந்த கேடுகெட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்டதோடு கனகராஜின் மணுவை தள்ளுபடி செய்தது. இனி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு வராது என முடிவு செய்து வழக்கு விசாரணையை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதன் பிறகு அந்த இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு பாசிசத்துடன் கைக்கோர்த்துள்ளன இந்த அநீதிமன்றங்கள். 

அரசும் ஆளும் வர்க்கமும் தங்களது பாசிச ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தவும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒட்டச்சுரண்டி பிழைக்கவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்றவை தடையாக உள்ளதாகவே கருதுகின்றன. அதனால்தான், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏட்டளவிலாவது பாதுகாப்பு வழங்கும் அத்தகைய சட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இது மிகவும் ஆபத்தான பாசிச நடவடிக்கை என்பதை நாம் உணரவேண்டும். 

பிறகட்சிகளின் நிலைபாடு

ஆர்.எஸ்.எஸ். –பாஜக, அதிமுக கும்பல்கள் எவ்வாறு திமுக அரசின் இந்த ஆதிக்க சாதியவாத ஒடுக்குமுறைகளுக்கு துணை போயின என்பதை முன்பே பார்த்தோம். அரசு நிர்வாகம், ஆளுங்கட்சி எதிர்கட்சி என இவ்விரு கும்பலும் சேர்ந்தே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்துள்ளன. 

திமுக அரசு ஒருபக்கம், திருச்சியில் பெரும்பிடுகு முத்திரையருக்கு மணிமண்டபம் திறந்து வைத்து தாங்கள் ஆதிக்க சாதியின் பக்கம் என்றும் நிற்பவர்கள் என காட்டிக் கொள்கிறது. மறுபக்கம் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் கல்விகடன் ரத்து என சமூகநீதி வேசம் போடுகிறது. இன்னொரு பக்கம், ஆதி திராவிடர்களுடன் முத்திரையர் சாதியைச் சார்ந்த திமுக அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் உணவு அருந்தும் நிகழ்ச்சி என ஒடுக்கப்பட்ட சாதி மக்களை இழிவுபடுத்துகிறது. திமுகவின் இந்த நாடகங்களுக்கு துணைப் போகும் விசிக, சிபிசிஐடி விசாரணையை ஏற்க முடியாது; சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு ஒரு பக்கம் பேசிக்கொண்டு வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஏமாற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வலுவான போராட்டங்களை முன்னெடுக்காமால் கூட்டணி தர்மம் (?!) பேணுகிறது. தங்கள் கட்சிகாரர்கள் மீதே அடக்குமுறை ஏவப்படும் போது கூட திமுக வை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்க கூட தயாராக இல்லை. சேரி என்றால் சிறுத்தை என்று பேசும் விசிக, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை தங்களது வாக்கு வங்கிக்காக இந்த திராவிட ஆளும் வர்க்க கட்சிகளிடம் அடகு வைத்துவிட்டது. 

சிபிஎம் கட்சி அரசின் இந்தப் போக்கை கண்டித்துள்ளது வரவேற்கத்தக்கதே. இருப்பினும், அவை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொண்டுள்ளன. சிபிஐ விசாரணையின் தன்மை குறித்து விமர்சனமின்றி ஏற்கின்றது. அதுவும் வலுவான போராட்டங்களை கட்டியமைக்காமல் அமைதி காப்பது விமர்சனத்துக்குரியது. 

சமூக நீதியை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள திகவின் வீரமணியோ ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவான தனது கருத்தை பெரியார் பாணியில் வெளிபடுத்தியுள்ளார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறதாம்; அரசு முறையாக விசாரணை நடத்தியுள்ளதாம்; இதை அரசியலாக்கக் கூடாதாம். இந்த வெளக்கமாறுக்குதான் பட்டுக்குஞ்சம் என்று பேரு…(!!). பெரியாரிய கூட்டமைப்பு மற்றும் திமுகவின் சிவப்பு விங்கை சேர்ந்த சில மா.லெ. இயக்கங்கள் திமுக அரசு உத்தமமான அரசு. அரசு நிர்வாகத்தில் சில ஆர்.எஸ்.எஸ், சங்கிகள் ஊடுருவிட்டன என பேசிய இவர்கள் – இன்று திமுக அரசின் காவல்துறை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை வைத்திருப்பதாக காவல்துறையையும் திமுக அரசையும் புனிதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. சீமானின் பெரியார் எதிர்ப்பை முதல்நிலைப்படுத்தி வேங்கைவயல் பிரச்சினையை பின்னுக்குத் தள்ளுகின்றன. 

இவர்தான் இப்படியென்றால் சிபிஐ-ன் முத்தரசன் ஒரு மாதத்திற்கு முன்பாக, “வேங்கைவயலா? அப்படினா? அதுவா? அது பழைய பிரச்சினை அதைபோய் இப்போது ஏன் பேசுகின்றீர்கள், அரசு விசாரித்து வருகிறது” என்றார். இப்போது, “வேங்கைவயல் விவகாரத்தில் அந்த இழிச்செயலை செய்ததாக, 3 பேரை போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு, வி.சி.க-மா.கம்யூ., தலைவர்கள் சிபிஐ விசாராணை வேண்டுமென கேட்டுள்ளனர். அது, அவர்களுடைய நிலைபாடு; நாங்கள் கேட்கவில்லை” என அறிக்கை வெளியிட்டுள்ளார். நான்கைந்து எம்.எல்.ஏ சீட்டிற்காக தங்களையும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு திரிகிறது இந்தக் கூட்டம். திமுகவுடன் சேர்ந்து சிபிஐயும் உடன்கட்டை ஏற தயாராகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் நிற்பார்கள் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. வெண்மணி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நின்ற பெரியார் மீது விழுந்த வரலாற்று பழியைப்போல வேங்கைவயல் வன்கொடுமை விசயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக நிற்காமல் ஆதிக்க சாதியவாதிகள் பக்கம் நின்று ஒரு வரலாற்றுப் பழியை சுமக்க தயார் ஆகிவிட்டது சிபிஐ கட்சி. 

வீடியோ: ம.ஜ.இ.க மாநில அமைப்பளார் தோழர் தெய்வசந்திரனின் கண்டன உரை

ஆதிக்க சாதியவாத குற்றப் பத்திரிக்கையை கிழித்தெறிவோம்!

எனவே, ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான திமுக அரசு- சிபிசிஐடியின் ஆதிக்க சாதிய நலன்களிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது என்று போராடுவதோடு, உயர்நீதிமன்றத்தின் நேரடி தலைமையில் நீதிபதிகள், புரட்சிகர ஜனநாயக சக்திகள், தலித்திய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளைக் கொண்டு உண்மை அறியும் குழுவையும், சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து மறு விசாரணை நடத்தக் கோரி போராடுவதும் இன்றைய உடனடி கடமையாகியுள்ளது. 

அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் உள்ளடக்கியதொரு வலுவான மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். இந்த சாதிய வன்கொடுமைகளுக்கு பொருளியல் அடிப்படையாக விளங்கும் அரை நிலப்பிரபுத்துவ புதிய காலனிய உற்பத்தி முறையை உடைத்து நொறுக்கி மக்கள் ஜனநாயக குடியரசமைக்கப் போராடும் வகையில் அந்த இயக்கத்தை மேலெழுப்ப வேண்டும். 

ஆகையால் கீழ்க்கண்ட முழக்கங்களின் பால் திமுக அரசை எதிர்த்துப் போராட அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்…

* வேங்கைவயல்: ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் மீது தாங்களே சாதிய வன்கொடுமை செய்ததாக கூறும் திமுக அரசின் சாதிவெறிப் பாசிசத்தை வேரறுப்போம்!

* ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான திமுக அரசு - சி.பி.சி.ஐ.டி.யின் ஆதிக்க சாதியவாத குற்றப்பத்திரிக்கையை கிழித்தெறிவோம்!

* வேங்கைவயல் மக்கள் மீதான திமுக அரசின் காவல்துறை, ஆதிக்க சாதிவெறி அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூட்டு வன்கொடுமையை எதிர்த்துப் போராடுவோம்!

* உயர் நீதிமன்றத்தின் நேரடி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து மறுவிசாரணை நடத்தக் கோரி போராடுவோம்! 

* நீதிபதிகள், புரட்சிகர ஜனநாயக சக்திகள், தலித்திய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளைக் கொண்டு உண்மை அறியும் குழுவை நியமித்து நீதி விசாரணை நடத்தக் கோரி போராடுவோம்! 

* வேங்கைவயல் கிராமத்தையே சிறைப்படுத்தி சமூகத் தீண்டாமையை கடைபிடிக்கும் திமுக அரசின் அரசியலமைப்புச் சட்ட விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்துவோம்! 

* மலநாற்றமெடுக்கும் திமுக அரசின் சாதிவெறிப் பாசிசத்தை ஆதரிக்கும் தி.க உள்ளிட்ட "கருப்பு ஆடுகளை" இனம் காண்போம்! 

* திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம்! 

* ஆதிக்க சாதிவெறி கும்பல்களின் கூடாரமாகத் திகழும் "திராவிட மாடல்" பாசிச ஆட்சியை வீழ்த்த அனைத்து சாதி உழைக்கும் மக்களும் அணிதிரள்வோம்! 

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்