பெயரளவிலான ஒரு போர்நிறுத்தம்: காசாவின் நீண்டகால நரக வேதனை

வெண்பா (தமிழில்)

பெயரளவிலான ஒரு போர்நிறுத்தம்: காசாவின் நீண்டகால நரக வேதனை

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தைப் பொறுத்தவரை, விதிமீறல்கள் இரு தரப்பிலும் இருப்பினும், இஸ்ரேலே இதில் முதன்மையான அத்துமீறல்களைச் செய்யும் நாடாக உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இஸ்ரேலின் விலகல்கள் எவ்வளவு கொடூரமானவை என்றால், அவை அந்த ஒப்பந்தத்தையே சிதைக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறது  என்று நோக்கர்களால் விமர்சிக்கப்படுகிறது. அக்டோபர் 10 முதல் கசாவில் 136 குழந்தைகள் உட்பட 347 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கு அமைதிக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்பதையே காட்டுகிறது.

அக்டோபர் 28 அன்று, ஒரே நாளில் குறைந்தது 104 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரிக்குமொரு மோசமான மீறலாகக் கருதப்பட்டது. இருந்தபோதிலும், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, இரு தரப்பினரும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

தற்போது வெளிப்படையாகத் தெரிவது என்னவென்றால், இந்த போர்நிறுத்தச் சூழலானது இஸ்ரேலியப் படைகள் காசா மக்கள் மீது வன்முறையை ஏவ மிகப்பெரிய சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ஐ.நா சபையின் மனிதாபிமான நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் சோபியா கால்டோர்ப் கூறுகையில், காசா பெண்கள் தன்னிடம், "போர்நிறுத்தம் இருக்கலாம், ஆனால் போர் இன்னும் முடியவில்லை; தாக்குதல்கள் குறைந்திருக்கலாம், ஆனால் கொலைகள் தொடர்கின்றன" என்று மீண்டும் மீண்டும் கூறியதாகத் தெரிவிக்கிறார். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் கால்மார்ட், இந்த போர்நிறுத்தம் காசா இயல்பு நிலைக்குத் திரும்புவது போன்றதொரு "ஆபத்தான மாயையை" உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். உண்மையில் நடந்தது என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்களின் அளவு மட்டுமே குறைந்துள்ளது; மிகக் குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட ஒரு அமைப்பின் குறிப்பில், இஸ்ரேலிய அதிகாரிகள் பாலஸ்தீனியர்களை கொன்றழிப்பதற்கான சூழலைத் திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம், காசாவில் இன்னும் இனப்படுகொலையைத் தொடர்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்றுவது தொடர்கிறது,  இஸ்ரேலியப் படைகளின் போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. வெடிக்காத வெடிபொருட்கள், மாசுபட்ட இடிபாடுகள் மற்றும் கழிவுநீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதும் முடக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு ரீதியான சிக்கல்களும் இதில் இணைந்துள்ளன. இஸ்ரேலியப் படைகள் காசாவின் 58% க்கும் அதிகமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஐ.நா நிபுணர்களின் கூற்றுப்படி, 40 இஸ்ரேலியத் தளங்கள் போர்நிறுத்த விதிமுறைகளை மீறி, எல்லை தாண்டி அச்சுறுத்தி வருகின்றன. புதிய சர்வதேச நிலைநிறுத்தப் படையை (ISF) குவிப்பதானது, மேற்கு கரையில் இஸ்ரேல் அமைத்த குடியேற்றவாத நிறவெறி ஆட்சியை (settler-colonial apartheid regime) மீண்டும் உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதாபிமான உதவிகள் மிகமிகச் சொற்பமாக கிடைக்கின்றன; காசாவில் 85% நீர் மற்றும் சுகாதார வசதிகளும், 92% வீடுகளும் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்பாம் (Oxfam) கூறுகையில், உணவு, மருத்துவம், தங்குமிடம் மற்றும் சுகாதாரச் சேவைகளே தற்போதைய மிக அவசரத் தேவைகளாக உள்ளன என்று குறிப்பிடுகிறது. உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் பொருட்களும்  விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு  விற்கப்படுகின்றன.

அக்டோபர் 10 முதல் 21 வரை, 17 சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன. தன்னார்வ அமைப்புகளின் 99 உதவி கோரிக்கைகளும், ஐ.நா அமைப்புகளின் 6 கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, காசா மற்றும் மேற்கு கரையில் ஒரு வகையான மிருகத்தனமான நடைமுறை உள்ளது. ஜெனினில் சரணடைந்த இருவரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக் கொன்றதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். பாலஸ்தீனியர்கள் அடங்கி நடக்க வேண்டும்; இந்த பெயரளவிலான போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு நரக வேதனைகளைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் மறைமுகச் செய்தியாக உள்ளது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.globalresearch.ca/ceasefire-gaza-prolonged-purgatory/5907615

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு