உலகு தழுவிய அளவில் வங்கியமைப்புகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனவா?

தமிழில்: தரணி - விஜயன்

உலகு தழுவிய அளவில் வங்கியமைப்புகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனவா?

கிரெடிட் சுயிஸ் மற்றும் சிலிக்கான் வேலி வங்கி: உலகு தழுவிய அளவில் வங்கியமைப்புகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனவா?

சந்தையில் கடுமையான ஏற்றஇறக்கங்கள் காணப்படுகிறது, இருந்தபோதிலும் 2007-08 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வங்கிகள் திவாலடைந்ததையும், தற்போது திவாலடைவதையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது எனக் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வங்கிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக திவலடைந்ததால் உலகளவில் வங்கியமைப்பு முறையே ஆட்டங்கண்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கிக் கொண்ட வங்கிகள் மீண்டு வருவதற்கு நிதி தேவைப்பட்டது. அரசாங்கமும், நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் நிதி உதவிகள் அளித்து எல்லாம் சீராகத்தான் இருக்கிறது என்று கூறிய போதிலும், உலக வங்கி அமைப்பு குறித்தான முதலீட்டாளர்களின் கவலை நீடிக்கவே செய்கிறது.   மார்ச் 10 ஆம் தேதி அன்று சிலிக்கான் வேலி வங்கி (SVB) திவாலானது முதல் இந்த பரபரப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் திவாலனதைத் தொடர்ந்து 2007-08 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடு தற்போதைய வங்கிகள் திவாலாவதை ஒப்பிட வேண்டியதில்லை என பொருளாதார வல்லுநர்கள் ஆறுதல் கூறிய போதிலும், வெகு விரைவில் பிற வங்கியமைப்புகளும் திவாவலடைந்துவிடுமோ என்று முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

வங்கி அமைப்பில் நிலவும் தற்போதைய நெருக்கடியின் பின்னணி என்ன?

சிலிகான் வேலி வங்கியிலும், கிரிப்டோ நாணய வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இயங்கிய சிக்நேச்சர் வங்கியும் சென்ற மாதத்தின்(மார்ச்) துவக்கத்தில் திவாலடைந்தது. அவ்வங்கியில் போடப்பட்டிருந்த பணம் கண்டிப்பாக திருப்பித் தரப்படும் என அமெரிக்க வங்கி அதிகாரிகள் நம்பிக்கையளித்திருந்த நிலையில், ஒரு வாரத்திற்குள்ளாகவே கிரெடிட் சுய்ஸ் என்ற வங்கி திவாலடைந்ததால், இன்னும் பல வங்கிகள் இதே போல திவாலடைந்து ஒட்டுமொத்த வங்கியமைப்பு முறையே பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

மிகப் பெரியதும் அல்லாது மிகச் சிறியதும் அல்லாது ஓரளவிற்கு பெரிய(இடைநிலை) வங்கியாக அறியப்படுகிற சிலிகான் வேலி வங்கியைப் போலல்லாமல் கிரெடிட் சுயிஸ் வங்கி என்பது மிகப் பெரிய பிரம்மாண்டமான வங்கியாகவும், உலகப்  பொருளாதாரம் சீராக இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்து வரக்கூடிய 30 வங்கிகளில் ஒரு வங்கியாகவும் இந்த கிரெடிட் சுயிஸ் வங்கி கருதப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி(S&P Global Ratings), 2021 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள கிரெடிட் சுயிஸ் வங்கி சுமார் 1.1 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்தது, அதன்படி அவ்வங்கி உலகளவில் இருந்து வரக்கூடிய மிகப் பெரிய வங்கியில் 45வது இடத்தில் உள்ளது. இதை சிலிகான் வேலி வங்கியோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 16வது பெரிய வங்கியாகவும், கடந்த ஆண்டு சுமார் 209 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களையும் கொண்டிருந்த வங்கியாக இருந்து வருகிறது.

கிரெடிட் சுயிஸ் வங்கி மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் பல வருடங்களாக  அதன் நிதி நிலைமைகள் கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 26) UBS என்று அறியப்படுகிற யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து  வங்கியிடம் விற்க்கப்பட்டதால், நிதி ஸ்திரத்தன்மைக்கு பேர்பெற்ற இடமாக அறியப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டின் பிம்பம் நொறுங்கியதோடு, நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்களையும் முடுக்கிவிட்டுள்ளது.

திங்களன்று சில வங்கியின் பங்குகள் உயந்துள்ளதாக செய்திகள் வந்த சமயத்தில்தான் HSBC மற்றும் Standard Chartered உள்ளிட்ட பெரிய வங்கிகளின் பங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளன. வெவ்வேறு பகுதிகளில் பங்கு விலைகள் குறித்து ஆராயும் மார்கன் ஸ்டான்லி பன்னாட்டு முதலீட்டு நிறுவனம்(MSCI) கடந்த செவ்வாயன்று, ஆசிய-பசிபிக் பகுதியில்(ஜப்பான் நீங்களாக) பங்குகளின் விலை 0.4 சதவீதம் உயர்ந்திருப்பது பதட்டத்தையும், அச்சத்தையும் சிறிது குறைத்துள்ளது என்று கூறியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் First Republic  என்ற வங்கி சில நாட்களாக நெருக்கடியில் தவித்து வருகிறது; இதே போல மாநில அளவில் இயங்கி வரும் பல வங்கிகளின் பங்குகளும் கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது. First Republic என்ற வங்கியின் பங்குகள் தடாலடியாக 50 சதவீதம் அளவிற்கு வீழ்சியடைந்த சமயத்தில் அமெரிக்காவில் முன்னணி வங்கியாக அறியப்படுகிற JP Morgan Chase, Bank of America மற்றும் Wells Fargo போன்ற வங்கிகள் 30 பில்லயன் டாலர்களை முதலீடு செய்து சில நாட்களுக்கு முன்பு தான் கைத்தூக்கிவிட்டன (Bailout). எனினும், தொடர் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு இன்னும் கூடுதலான அளவில் அரசின் நிதி உதவிகள்(second bailout) தேவைப்படும் எனக் கருதப்படுகிறது.

நிதிச் சந்தையில் நிலவிய பீதியைத் தணிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், கிரெடிட் சுயிஸ் வங்கி அடிமாட்டு விலைக்கு கைமாற்றப்பட்ட விவகாரம் சிலருக்கு அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

மீட்புத் திட்டத்தின் கீழ், சுயிஸ் அதிகாரிகள் 16 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான ($17bn) கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தவர்களின்(bondholders) பணமும், வட்டியும் திருப்பி தரப்படாது என்று அறிவித்த, அதே நேரத்தில் சுயிஸ் வங்கியின் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களின்(stockholders) முதலீடு சுமார் 3 பில்லியன் பிராங்குகளுக்கு ($3.2bn) எவ்வித பாதிப்புமில்லை என்று அறிவித்துள்ளனர்.

கடன் கொடுத்தவர்கள் வழக்கமாக கடனைத் திரும்பப்பெறும் முறையை இந்த அறிவிப்பு தலைகீழாக மாற்றிவிட்டது என்கிறார்கள். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களை(Bondholders) விட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்களே(Stockholders) அதிக லாபத்தையோ அல்லது நட்டத்தையோ ஏற்க வேண்டும் என்ற இயல்பை இந்த அறிவிப்பு தலைகீழாக மாற்றியுள்ளதால் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து மோசம் போனவர்கள் கொந்தளித்து வருகிறார்கள். 

கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் சிலர் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானது என்று ஆர்பரித்ததோடு சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் கார்ப்பரேட் சட்டம் மற்றும் நிதி ஒழுங்குமுறைத் துறையின் பேராசிரியரான ஐரிஸ் சியு என்பவர், 2008-க்குப் பின்பு கொண்டுவரப்பட்ட சில சீர்திருத்தங்களைத் தொடர்ந்து வங்கிகள் "சந்தை நிலவரம் குறித்து பரவும் தவறான செய்திகள் " மற்றும் அதனால் ஏற்படும் அச்சம் போன்றவற்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது வங்கிகளின் பங்கு மூலுதனத்தை கொண்டுள்ள பங்குதாரர்களுக்கு(Stockholders) பாதகமாகவும், வெகுமக்களுக்கு சாதகமாகவும் இருந்தது என்று ஐரிஸ் கூறினார்.

"இதன் பொருள் என்னவென்றால் வங்கிகள் சிறிதளவேனும் சறுக்குவது போல தெரிந்தாலும் முதலீட்டாளர்கள் பீதியடைந்து தாங்கள் முதலீடு செய்துள்ள பிற வங்கிகளும் இதே போல வீழ்ச்சியை நோக்கி போகிறதோ என்ற ஆராயத் தொடங்குவதன் மூலம் போட்ட முதலீடு நட்டமடைந்துவிடாமல் தவிர்ப்பதற்கு ஒன்று பங்குகளை விற்கிறார்கள் அல்லது திரும்பப் பெறுகிறார்கள்” என்று ஐரிஸ் அல் ஜசீரா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

"கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களில் பெரும்பகுதி வங்கிகள் திவால் நிலையை எதிர்கொள்ளும் வகையில் தங்களது மூலதனத்தை வலுப்படுத்துவதற்காக 'அரசின் உதவியின்றி தாமே மேலெழுந்து வரும் வகையிலான'(Bail-inable debt) கடன்களை அதிகம் வழங்கியதே இது போன்ற நெருக்கடிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். இவ்வகைக் கடன்கள் அரசு முதலீடுகள் மூலம் வங்கியை மீட்டெடுப்பதற்கு முன் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த பங்குதாரர்களையும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களையும் முதலில் பொறுப்புக்குள்ளாக்குவதோடு, ஏற்ற இறக்கம் அதிகமாக காணப்படும் காலங்களில் முதலீட்டாளர்களை அதிகம் பாதிக்கும் விசயமாக மாறிவிடுகிறது. துரதிருஷ்டவசமாக வங்கி திவாலடையப் போகிறது என்ற பீதியை இந்த ‘பெயில் இன்’ முறை அதிகப்படுத்துவதனால், பல முதலீட்டாளர்கள் இக்கருத்தை நம்புவதன் மூலம் போட்ட முதலீட்டை திரும்பப் பெற முயலுவதால் வங்கி உண்மையில் திவாலடைந்துவிடுகிறது”.

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான UBS வங்கியுடன் கிரெடிட் சுயிஸ் வங்கி இணைக்கப்பட்ட நிகழ்வானது, "பெரிய வங்கிகள் வீழ்ச்சியடைவே கூடாது(Too big to fail)" என்று சொல்லப்பட்ட நிறுவனங்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.

ஃபுளோரன்ஸ் ஸ்கூல் ஆஃப் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் தோர்ஸ்டன் பெக் என்பவர், இந்த வங்கி இணைப்பு என்பது "ஒரு படுமோசமான யோசனை என்றும்  விழக்கூடாது விழக்கூடாது என்று சொல்லப்பட்ட பெரிய நிறுவனங்களின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பதில் அதைவிட பெரிய நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சாராம்சத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியையே உருவாக்குகின்றனர்" என்று விவரித்தார்.

"எனினும் வங்கிகள் நெருக்கடியில் சிக்குவதற்கு முன்பு வரை மட்டுமே எல்லொரும் ‘பெயில் இன்’ முறை பற்றி பேசுகிறார்கள். எப்போது நெருக்கடி ஏற்படுகிறதோ அடுத்த நிமிடமே அதை மறந்து விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது" என்று பெக் அல் ஜசீராவிடம் கூறினார்.

பீதியைத் தடுக்க என்ன செய்யலாம்?

ஏற்கனவே பல வங்கிகளை கைத்தூக்கிவிட்ட பிறகு, நம்பிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் மேலும் பல நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளனர் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அமெரிக்காவில், அனைத்து வங்கி வைப்புகளுக்கும் தற்காலிகமாக உத்தரவாதம் அளிப்பது பற்றி நிதி ஒழுங்குமுறை ஆணையங்கள் பரிசீலித்து வருகின்றன. அங்கு தற்போது 2,50,000 டாலர்கள் வரையிலான வைப்புகளுக்கு மட்டுமே பாதுகாப்பு உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது என்று Bloomberg News திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சிலிக்கான் வேலி வங்கி(SVB) மற்றும் சிக்னேச்சர் வங்கி திவாலடைந்த்தை தொடர்ந்து அந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அனைத்து வைப்புகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் இதே போன்றதொரு உத்திரவாதமளிக்கும் திட்டத்தை நிதி ஒழுங்குமுறை ஆணையங்கள் அறிவித்தன.

வங்கியில் பணம் வைத்திருந்த அனைவருடைய பணத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது என்ற முடிவு அறம் சார்ந்த சிக்கலை எழுப்பக்கூடும். எவ்வளவு பணத்தை முதலீடு செய்தாலும் நமது பணம் மீண்டும் நமக்கு உத்திரவாதமாக கிடைத்துவிடும் என்று நிலையை இந்த அறிவிப்பு உருவாக்கிவிடும்.

"வங்கியின் கொடுக்கல்-வாங்கல் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய சிலிக்கான் வேலி வங்கியின் வீழ்ச்சி கட்டாயமாக தூண்டும் என்று நான் நினைக்கிறேன். காப்பீடு செய்யப்படாத வைப்புத்தொகைக்கு உத்திரவாதமளிப்பது என்பது வங்கி நெருக்கடியை சமாளிப்பதில் முக்கியமான அம்சமாகும்” என்று பென்சில்வேனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் கார்ப்பரேட் சட்டப் பேராசிரியரான டேவிட் ஸ்கீல் என்பவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

"சட்டப்படி பணம் போட்டவர்களுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட பணத்தை திருப்பித் தரவேண்டிய சட்ட ரீதியிலான சிக்கல்கள் நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு உண்டு என்றாலும் நிதி மூலதனத்தை நிர்வகிக்கும் அரசு நிறுவனங்கள் எப்போதும் அவர்களை பெயில் அவுட் செய்து (நிதியளிப்பதன் மூலமோ அல்லது வங்கி இணைப்பின் மூலமோ) கைத்தூக்கிவிடுகிறார்கள். கான்டினென்டல் இல்லினாய்(Continental Illinois) என்ற அமெரிக்க வங்கி 1984-ல் திவாலடைந்த போது இவ்வாறு தான் பெயில் அவுட் செய்தார்கள்;அன்று முதல் இந்த வழிமுறை தான் தொடர்கதையாக நிகழ்கிறது.  2008ல் சரிந்து கொண்டிருக்கும் பெரிய வங்கிகளை கைத்தூக்கி விட வேண்டுமா வேண்டாமா என்பதில் 'தெரிந்தே தெளிவின்மையை'கடைபிடிக்கப்பட்ட சூழல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது, அது உண்மையில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திச் சென்றது. எப்படியும் அரசு நிறுவனங்கள் கைதூக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்காமலிருப்பது என்பது நிலைமையை இன்னும் மோசமடையவே செய்யும். வங்கியில் யார் எவருடைய பணம் எல்லாம் காப்பீடு சட்டத்தின் கீழ் வருகிறது என்பது குறித்தான தெளிவான வழிகாட்டுதல்களை அரசு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பிறகு அமல்படுத்தப்பட்ட டாட்-ஃபிராங்க் சீர்திருத்தங்கள் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியிலிருந்த போது ரத்து செய்யப்பட்டது. அவற்றில் உள்ள முக்கியமான அம்சங்கள் உட்பட வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை இனி வருங்காலங்களிலாவது அதிகப்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜனநாயகக் கட்சியினர் போர்க் கொடித் தூக்கியுள்ளனர்

ஜனநாயகக் கட்சியினர் பல்வேறு மாற்றங்களை கோரி போர்க்கொடித் தூக்கியுள்ளனர்.பெரிய வங்கிகள் வீழ்ந்தால் நாடும் வீழ்ந்துவிடும்(too big to fail) என்று சொல்லப்படும் வங்கிகளுக்கு(50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ள வங்கிகள்) முன்பிருந்த வரையறையை மீண்டும் புகுத்த வேண்டும்; இது போன்ற வங்கிகள் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளுமா என்று அறிவதற்கு பல்வேறு அழுத்த பரிசோதனைகளுக்கு இவைகளை உட்படுத்திப் பார்க்க வேண்டும்; என்பன போன்ற கோரிக்கைகளுக்கு குடியரசுக் கட்சியினர் மத்தியிலிருந்து நிச்சயமாக எதிர்ப்புகள் வரக்கூடும். 

உலகு தழுவிய அளவில் வங்கியமைப்பு முறையே வீழுச்சியடையும் நிலைக்கு இட்டுச் செல்கிறதா?

உலகு தழுவிய அளவில் வங்கிகள் திவாலடைவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், நிதி நிறுவனங்கள் அதிகளவில் திவாலடையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுத்திருப்பது மட்டுமல்லாமல், இதற்கு முன்பு ஏற்பட்ட உலகு தழுவிய பொருளாதார நெருக்கடிக்குப் பிற்பாடு நிதி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை கணிசமாக அதிகரித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, 2007-08 ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடுமையான வீழ்ச்சியைச் சமாளிக்க வங்கிகள் அதிக மூலதனத்தைக் கையிருப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

"உலகு தழுவிய அளவில் வங்கி அமைப்பு முறையே வீழ்ச்சியடையும் என்று சொல்ல முடியாது" என்று பெக் கூறியுள்ளார். "நாம் இதுவரை பார்த்தது என்ன: அலை இறக்க காலக்கட்டத்தில், யார் எவருடைய சாயம் வெளுக்கிறது(பலவீனமானவர்கள் வீழ்கிறார்கள்) என்பதையே நாம் பார்த்து வருகிறோம். கிரெடிட் சுயிஸ் வங்கி வீழ்ச்சியடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் அந்த வங்கி முன்பிருந்தே நெருக்கடியில் தான் சிக்கியிருந்தது. அமெரிக்காவில் உள்ள பல நடுத்தர அளவிலான வங்கிகள் வீழ்ந்ததைப் போன்று வேறு சில ஐரோப்பிய வங்கிகளும் திவாலடையக்கூடுமா என்று கேட்டால் திவாலடையக்கூடும் என்பதே பதிலாகும். ஆனால் இது ஒருபோதும் உலகு தழுவிய அளவில் வங்கியமைப்பின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லாது. எல்லாவற்றுக்கும் மேலாக, வங்கி அமைப்புகள் 2008 இல் இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் வலுவாக உள்ளதோடு அதிகாரிகளும் ஆரம்பத்திலிருந்தே நெருக்கடியை எதிரிகொள்வதற்கு எப்போதும் தயாராகவே உள்ளனர்”

"சிலிகான் வேலி வங்கியின் வீழ்ச்சி நான் எதிர்ப்பார்த்ததை விட நீடித்திருந்ததோடு பரந்துவிரிந்த அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது" என்று ஸ்கீல் கூறியுள்ளார். "சிலிகான் வேலி வங்கியின் இயங்குமுறை என்பது விஷேசத் தன்மையைக் கொண்டதாக இருப்பதால் அதன் வீழ்ச்சி குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்குள்ளாகவே மீட்கப்பட்டுவிடும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் நான் எதிர்பார்த்தற்கு மாறாகவே நிகழ்ந்துள்ளது. எனினும், இது ஒரு உலகு தழுவிய அளவில் பெரும் நிதி நெருக்கடியைத் உருவாக்கும் என்று எனக்கு இப்போதும் தோன்றவில்லை.”

(ஜான் பவர்)

- தரணி - விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/economy/2023/3/21/credit-suisse-and-svb-is-global-banking-headed-for-crisis