மறைக்கப்பட்ட ஆவணம்: ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த வேர்களும் வெளிச்சத்திற்கு வராத நாஜி தொடர்புகளும்
தமிழில்: விஜயன்

1948இல் கோவிந்த் சஹாய் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படைக் கருத்துகளை அம்பலப்படுத்தியதுடன், நாஜி ஜெர்மனியுடன் கொண்டிருந்த அப்பட்டமான தொடர்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். எண்பது ஆண்டுகள் கழித்து, இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முன்னெப்போதைக் காட்டிலும் பரவலும் செல்வாக்கும் பெற்றுத் தனது நூற்றாண்டு விழாவை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த அடிப்படை நூல் மறைக்கப்பட்டுவிட்டது என்ற போதிலும், ஒருபோதும் மறுக்கப்படவில்லை எனலாம். எம். எஸ். கோல்வால்கரின் இந்து மேலாதிக்கக் குரலில் இருந்து, 'மோடித்துவம்' என இன்று அறியப்படும் எதார்த்தம் வரை, இக்கட்டுரை ஒரு தொடர் போக்கை ஆவணப்படுத்துகிறது; மறுப்பு அல்ல, மாறாக கள்ள மௌனம்தான் அதே பிரிவினைவாத தத்துவத்தை தொடர்ந்த உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
1948ஆம் ஆண்டில், கோவிந்த் சஹாய் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பது போல நூலொன்றை எழுதினார். மகாத்மா காந்தி கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, “ஆர்.எஸ்.எஸ்.: சித்தாந்தம், உத்தி, பிரச்சாரம்” எனும் பெயரில் அந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) நுணுக்கமாக ஆய்வு செய்து, அதனை நாஜி கட்சியுடன் நேரடியாக ஒப்பிட்டது.
உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய சஹாய், முதலில் அதை ஒரு சிறிய துண்டுப் பிரசுரமாக எழுதினார்; பின்னர் அதனை ஒரு முழுமையான நூலாக விரிவுபடுத்தி எழுதினார். “நாஜி உத்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்” எனத் தலைப்பிடப்பட்ட ஓர் அத்தியாயம் அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமைந்தது.
சஹாய் தான் கண்டவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தார்: ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் நிகழும் தினசரி போர் பயிற்சிப் பாணி ஒத்திகைகள், கொடி வணக்கங்கள், தலைவர்களிடம் கேள்வியின்றி கீழ்ப்படிதல் ஆகியவை அவருக்கு ஹிட்லரின் இளைஞர் படையை நினைவூட்டியதாக குறிப்பிட்டிருந்தார். ஆவேசமூட்டும் சொற்பொழிவுகள், ஒரே மாதிரியான சீருடைகள், மட்டுமல்லாது சிறுபான்மையினர் உண்மையான குடிமக்களாக இருக்க முடியாது எனும் கருத்தாக்கம்– இவை அத்தனையும் நாஜி ஜெர்மனியின் வழிமுறைகளில் இருந்து நேரடியாகப் பெறப்பட்டவை என்று அவர் கூறினார்.
இது அன்றைய காலகட்டத்தில் ஒரு விசித்திரமான கருத்தாக இருக்கவில்லை. பல இந்திய அறிஞர்களும், அரசு அதிகாரிகளும் RSSன் நடைமுறைகளுக்கும் ஐரோப்பிய பாசிசக் குழுக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளை அப்போதே கண்டுகொள்ளத் தொடங்கியிருந்தனர். இப்போது திரும்பிப் பார்க்கையில், சஹாயின் நூல், அது புரட்சிகரமானது என்பதனாலல்ல, மாறாக அது புரிந்துகொள்ள எளிதாக இருந்ததனாலேயே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அடிப்படை நூல்
ஒவ்வொரு அமைப்புக்கும் அது எதை உண்மையாகவே நம்புகிறதோ, அதைப் பிரதிபலிக்கும் ஒரு அடிப்படை நூல் உண்டு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு, 1939-ஆம் ஆண்டு எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப்பட்ட "நாம் அல்லது நமது தேசியம் வரையறுக்கப்பட்டது" (We or Our Nationhood Defined) என்றொரு நூல் உண்டு. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் அதைச் சுருக்கமாக "நாம்" என்றே குறிப்பிடுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, இந்நூல் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதன்மை வழிகாட்டியாகத் திகழ்ந்தது.
அந்நூலில், கோல்வால்கர் இந்தியாவை ஒரு "தூய இந்து தேசம்" என்று வரையறுக்கிறார். இந்து கலாச்சாரத்தை ஏற்காதவர்கள் – அவர்கள் இந்தியாவிலேயே பிறந்திருந்தாலும்கூட – அந்நியர்களே என அவர் அறுதியிட்டுப் பதிவு செய்கிறார். விமர்சகர்களால் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டப்பட்டு வரும் முக்கியமான பகுதி பின்வருமாறு:
"இந்தியாவில் வாழும் அந்நியக் குழுக்கள், ஒன்று இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் தழுவிக்கொள்ள வேண்டும்; இந்து மதத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் போற்றிப் பாடுவது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்... அல்லது, மிக எளிமையாகச் சொல்லப்போனால், அவர்கள் அந்நியர்களாக இருப்பதை அறவே கைவிட வேண்டும்; இல்லையேல், இந்து தேசத்தின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் மட்டுமே இந்நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவர். எதற்கும் உரிமைகோராமல், எந்தவிதச் சிறப்பு உரிமைகளும் இன்றி, நிச்சயமாக எந்தச் சலுகையும் இல்லாமல் – ஏன், குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூடப் பெறாமல் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்" .
"முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையுமே" அந்நியக் குழுக்கள் என கோல்வால்கர் குறிப்பிட்டிருக்கிறார். இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற கருத்தை முற்றிலுமாக நிராகரிப்பதோடு நில்லாமல் – இந்துக்கள் மட்டுமே உண்மையான குடிமக்களாக இருக்க முடியும் என்பதை திட்டவட்டமாக நிலைநிறுத்தியது. கோல்வால்கர் முன்வைத்த சிந்தனை, பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் சகோதரத்துவத்தோடு இணைந்து வாழும் ஒரு தொலைநோக்குப் பார்வை அன்று. மாறாக, ஒற்றைச் சித்தாந்தத்தின் முழுமையான ஆளுகையின் கீழ் அனைத்தையும் அடக்கும் ஒற்றை தேசமே அவருடைய கனவாக இருந்தது. இது, ஒதுக்கி வைப்பதையும், அவர்களைத் தங்கள் விருப்பத்திற்குக் அடக்கி வைக்கும் நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தேசம் என்பதே நிதர்சனம்.
நாஜி தொடர்பு
ஆண்டாண்டு காலமாக விமர்சகர்களைக் கலங்கடிக்கச் செய்த கூற்று இதோ:
"இனத்தின் தூய்மையையும் அதன் பண்பாட்டையும் பேணிக்காக்கும் பொருட்டு, ஜெர்மனி செமிடிக் இனத்தவர் – அதாவது யூதர்களை – நாட்டிலிருந்து அகற்றி உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. இனப் பெருமையின் உச்சபட்ச வெளிப்பாடு இங்கு தெள்ளத்தெளிவாகக் வெளிக்காட்டப்பட்டுள்ளது... ஆழ்ந்த வேற்றுமைகளையுடைய இனங்களும் பண்பாடுகளும் ஒரே குடையின்கீழ் இணைந்து முழுமையாகச் செயல்படுவது அசாத்தியமானது என்பதையும் ஜெர்மனி உலகுக்கு உணர்த்தியது. இது இந்தியாவில் நாம் கற்றுப் பயனடைய வேண்டியதொரு நல்ல பாடமாகும்."
நாஜி ஜெர்மனி யூதர்கள் மீது மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கையை 'ஒரு நல்ல பாடம்' என்று குறிப்பிட்டது வெறும் சாதாரணமாகக் கடந்துசெல்லும் கூற்று அல்ல –இந்த நடவடிக்கையின் மீது RSS அமைப்பு கொண்டிருந்த முழுமையான அங்கீகாரத்தின் அசைக்க முடியாத சாட்சியமாகும். அக்காலத்தில், யூதர்களும் முஸ்லிம்களும் "செமிடிக் இனத்தவர்" – தேசத்தின் ஒருமைப்பாட்டிற்குப் பொருந்தாத அன்னிய இனத்தவர் – என்றே கருத்தப்பட்டனர்.
இவர்களுக்கிடையிலான இந்த ஒத்த மனப்பான்மையை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம், குறிப்பாக சிலர் இத்தொடர்பின் ஆழத்தைக் குறைப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ முயலும் இக்காலகட்டத்தில் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமானது. நாஜி இனக் கொள்கைகளை கோல்வால்கர் பாராட்டியிருப்பது ஒரு தற்செயலான நிகழ்வு அன்று. ஒற்றுமை என்பது அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றக் கட்டாயப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்றவொரு சிந்தனைப் போக்கையே இது வெளிப்படுத்தியது.
முரண்பாடும் - முரண்பாடின்மையும்
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில், குறிப்பாக 1990களிலிருந்து, ஒரு வியத்தகு திருப்பம் அரங்கேறியது. ஒருகாலத்தில் இனத்தூய்மைக் கொள்கைகளால் இழித்துப் பேசப்பட்ட அதே யூத இனத்தாருக்குத் தாயகமாய் உருவான இஸ்ரேலை, ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளும் புகழ்பாடத் தொடங்கின. இஸ்ரேலின் இராணுவ வல்லமை, யூத அடையாளம், தற்காப்பு வழிமுறைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியப் பேசுபொருட்களாயின.
இத்தகைய முரண்பாடான நிலைப்பாடு ஒருபோதும் விளக்கப்படவோ, தெளிவுபடுத்தப்படவோ இல்லை. ஒருபுறம், RSSன் அடிப்படைக் கருத்தியல் வழிகாட்டியாகத் திகழ்ந்த ஓர் மூல நூல் அப்படியே நிலைபெற்றிருக்க, மறுபுறம், யூதர்கள் மற்றும் இஸ்ரேல் குறித்த அவர்களின் பேச்சுக்களில் ஓர் முழுமையான, ஆழமான மாற்றம் ஏற்ப்பட்டிருப்பது பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, "நாம்" என்ற நூலை மீண்டும் அச்சிடவுமில்லை, நாஜி கொள்கைகளைப் பாராட்டும் பகுதிகளை அதிகாரப்பூர்வமாக மறுதலிக்கவும் இல்லை. மாறாக, கள்ள மௌனமே நிலவுகிறது.
எனினும், இந்த முரண்பாடு ஒருவேளை முரண்பாடாகக்கூட இல்லாமலிருக்கலாம். இது வேறொன்றை வெளிப்படுத்துகிறது: ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தனை மதம் சார்ந்த கலாச்சார தேசியவாதத்திலேயே ஆழமாக வேரூன்றியுள்ளது. இஸ்ரேலுடனான அதன் ஈடுபாடு, வரலாற்று உண்மையுடன் பொருந்திப் போவதை விட, அதன் முன்னுதாரணத்தை முன்னிறுத்துகிறது—அதாவது, ஓர் இராணுவமயமாக்கப்பட்ட, மதவாத-இனவாத அடையாளத்தை முதன்மைப்படுத்தும் தேச-அரசை முன்னிறுத்துகிறது. இக்கோணத்தில் பார்க்கும்போது, நாஜி இனவாத அரசின் மீதான ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடக்ககாலப் போற்றுதலும், இஸ்ரேலுக்கான அதன் பிற்கால ஆதரவும் முரண்பட்டவை அல்ல. மாறாக, அவை தேசியத் தூய்மை, கட்டுப்படுத்தப்பட்ட எல்லைகள், மதத்திற்கு முதன்மை என்ற அதே அடிப்படைக் கருத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகளே எனலாம்.
கோல்வால்கரின் "நாம்" என்ற நூலில் முன்வைத்த பிறரை ஒதுக்கும் கோட்பாடு, ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு செலுத்தும் அரசின் கீழ் இயற்றப்படும் சட்டங்களில் இன்றும் எதிரொலிக்கிறது. 2014ஆம் ஆண்டு முதல், இஸ்லாமியர் அல்லாதோருக்கான குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், அசாமில் உருவாக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவை இஸ்லாமியர்கள் நாடற்றவர்களாக மாற்றப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தின. இத்தகைய நடவடிக்கைகள், பல்வேறு அடுக்குகளிலான குடியுரிமை குறித்த கோல்வால்கரின் கண்ணோட்டத்தையே எதிரொலிக்கின்றன.
RSSன் அடிப்படைச் சித்தாந்தம், மீண்டும் மீண்டும் நிகழும் மதக் கலவரங்களிலும் தெளிவாகப் புலப்படுகிறது. உதாரணமாக, மதப் பண்டிகைகளின்போது இஸ்லாமிய மக்கள் மீது தொடர்ச்சியாக நிகழும் தாக்குதல்களின் போதும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகள் கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடவடிக்கைகளை (moral policing) அதிகரிக்கும்போதும் கலவரங்ள் அடிக்கடி நிகழ்கின்றன. இவை வெறும் கோட்பாட்டுத் தொடர்புகளால் மட்டுமல்ல, பிறரை ஒதுக்கும் சித்தாந்தத்தின் யதார்த்த விளைவுகளுமாகும்.
ஒதுங்கிக்கொள்ளுதல்
காந்தியின் படுகொலைக்குப் பின், ஆர்.எஸ்.எஸ். தற்காலிகமாகத் தடை செய்யப்பட்ட சமயத்தில், கோல்வால்கரும் RSS அமைப்பும் 'நாம்' (We) எனும் நூலிலிருந்து சூசகமாக ஒதுங்கிக் கொண்டன. அது தாம் எழுதிய மூல நூல் அல்ல; மாறாக, பாபாசாகேப் சாவர்க்கரின் ராஷ்டிர மீமாம்சா என்ற நூலின் சுருக்கப்பட்ட பதிப்பே என்று கோல்வால்கர் வாதிட்டார். ஆனால், 1939 ஆம் ஆண்டுப் பதிப்பில், கோல்வால்கர் இவ்வாறு குறித்து வைத்திருந்தார்:
"மராத்தியில் உள்ள ராஷ்டிர மீமாம்சா எனக்கு உத்வேகமளித்த, வழிகாட்டிய முக்கிய நூலாக இருந்துள்ளது. இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும்."
ராஷ்டிர மீமாம்சா உத்வேகமளித்த நூலாக இருந்தது என்றால், ஒரு புதிய நூலை(நாம்) இயற்றியிருப்பதற்கு வாய்ப்பு உண்டுதானே? மேலும் "நாம்" வெறும் மொழிபெயர்ப்பாகவே இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்படுவதற்கு முன்பே மொழிபெயர்ப்பு என்று அறிவிக்காமல் உத்வேகமளித்த நூல் என்று கூறிவிட்டு, பின்னர் அதற்கான பொறுப்பை, ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்?
இந்த விலகல் வெறும் தற்காப்பு நடவடிக்கை மட்டுமல்ல. அது கடந்த காலப் பதிவுகளையும், நினைவுகளையும் புனிதப்படுத்தும் தந்திரமாகவும் அமைந்தது. பிந்தைய பதிப்புகளில், மூத்த தலைவரான எம்.எஸ். அனே எழுதியிருந்த முன்னுரை கூட முற்றிலுமாக நீக்கப்பட்டது. அந்த முன்னுரையில், அனே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
"எந்தவொரு நாட்டிலும் பிறந்த எவருக்கும், பெரும்பான்மையினரின் மதத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரே காரணத்திற்காக, குடியுரிமை மறுக்கப்படலாகாது. சிறுபான்மையினருக்கு எதிராகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியதன் மூலம், நூலாசிரியர் நவீன அரசியல் மற்றும் அடிப்படை அறநெறிக் கோட்பாடுகளை மீறியுள்ளார்."
பிறர் பார்வையில்
1951 ஆம் ஆண்டில், ஜே.ஏ. குர்ரான் ஜூனியர், தான் எழுதிய ‘இந்திய அரசியலில் தீவிரவாத இந்துத்துவம்’ (Militant Hinduism in Indian Politics) என்ற நூலில், "நாம்" என்ற புத்தகத்தை "ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பைபிள்" என்று குறிப்பிட்டிருந்தார். "இப்புத்தகம், ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆழமான அடிப்படைக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்துவதோடு, இந்திய அரசு குறித்த அதன் தொலைநோக்குப் பார்வையையும் முழுமையாக உள்ளடக்கியுள்ளது," என்று அவர் மேலும் எழுதியிருந்தார்.
1993 ஆம் ஆண்டில், ஷம்சுல் இஸ்லாம் தனது ‘ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சித்தாந்தம்’ (RSS and Its Ideology) என்ற நூலில், அதை "ஃபாசிசத்தின் இந்திய வடிவம்" எனத் தீர்க்கமாக விவரித்தார். பொது நூலகங்களிலிருந்து இப்புத்தகத்தின் பிரதிகளை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் முறையற்ற வகையில் அகற்றி வந்ததாகவும் அவர் எடுத்துரைத்தார்.
கோல்வாக்கரில் இருந்து மோடித்துவா வரை: ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டுக் காலப் பயணம் - நாம் இன்று எங்கு நிற்கிறோம்?
இன்று, ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டை எட்டும் தறுவாயில் நிற்கிறது. 1925-இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலப்பயணத்தில், இந்திய அரசின் நிர்வாக இயந்திரத்தையே இன்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வலிமையான சமூக, அரசியல் தளத்தைக் கட்டமைப்பதில் தனது காலத்தைச் செலவிட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய பத்தாண்டுகளில், ஆர்.எஸ்.எஸ். பெரும்பாலும் அரசியல் சாய்வு அற்றதாகவே வெளித்தோற்றத்தில் காட்டிக்கொண்டது. ஆனால், பள்ளிகள், நிவாரணப் பணிகள், கலாச்சாரப் பாதுகாப்பு எனும் வழிமுறைகளின் ஊடாக, மெல்ல மெல்ல தனது சமூக ரீதியானத் தாக்கத்தை ஆழமாகப் பதித்தது. 1990கள் அதன் அரசியல் ஆதிக்கத்திற்கான ஒரு திருப்புமுனையாக அமைந்தன. குறிப்பாக, 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு அதன் வளர்ச்சி வேகமெடுத்தது– 2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அதன் அதிகாரம் உச்சத்தை அடைந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை (சரத்து 370) ரத்து செய்தல், 2019-இல் முத்தலாக் தடைச்சட்டம் மட்டுமல்லாது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA) கொண்டு வருதல் போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் நெடுங்கால முன்னுரிமைகளை, சட்ட வடிவமாக்கி மோடி அரசு நடைமுறைப்படுத்தியது.
மத்திய அரசு இந்துத்துவா கொள்கைகளை முழுமையாக வரிந்து கொண்டதால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் சிந்தனைத் திட்டங்கள்—அதன் மிகத் தீவிரமான கூறுகளும் கூட—பொதுமக்கள் கேள்வி கேட்க இயலாத வகையில், அரசாங்கச் செயல்பாடுகளாகவே உருமாறிவிட்டன. "நாம்" நூலை சுற்றியிருக்கும் அதே கள்ள மௌனங்கள்தான், நீதிமன்றத் தீர்ப்புகளிலும், சட்டமன்ற அவை விவாதங்களிலும் கள்ள மௌனமாக எதிரொலிக்கின்றன.
தற்போது தனது நூற்றாண்டுப் பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். இந்த மைல்கல்லை ஆரவாரம் ஏதும் இல்லாமல் கொண்டாடப் போவதில்லை. 2025ஆம் ஆண்டு ஜூலை 4–6 தேதிகளில், நாடு தழுவிய அளவில் பிராந்தியத் தலைவர்கள் கூட்டம் நடத்தி, நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை பரிசீலினை செய்தது. அதாவது, மக்கள் தொடர்புத் திட்டமான 'கிரிஹ் சம்பர்க் அபியானைத்' தொடங்குதல், 1.03 லட்சம் ஷாகாக்களை நிறுவுதல், 1,500 இந்து சம்மேளனங்களுடன் 11,360 "சமூக நல்லிணக்க" நிகழ்வுகளைத் திட்டமிடுதல் குறித்து அக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. இந்த நூற்றாண்டு விழா இயக்கம் 'அனைவரையும் உள்ளடக்கிய மக்கள் தொடர்பு' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது—ஆனால், வீடுவீடாக, ஒவ்வொரு குடும்பத்திடமும் சென்று செய்யப்படும் இந்த பிரச்சாரம் கருத்தியல் ரீதியிலான ஊடுருவலை இன்னும் வலுப்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பொதுவெளியில் தம்மை அனைவருக்குமான, பண்பாட்டுச் செயல்பாடுகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக காட்டிக்கொள்வது பொருளற்றதாகவே தோன்றுகிறது. RSS தனது கடந்த காலத்தை நேர்மையாக எதிர்கொள்ள துணிவிருந்தால், அதன் நூற்றாண்டுக் கொண்டாட்டம் ஒரு நாடு தழுவிய மக்கள் தொடர்புப் பிரச்சாரத்தை விடவும் ஆழமானதாக அமைய வேண்டும். வெளிப்படைத்தன்மை, மூல நூல்கள் குறித்து நேர்மையான அறிவுசார் உரையாடல் மட்டுமல்லாது அந்நூல்கள் தூண்டிய சமூகப் பிளவுகளுக்கு முழுப் பொறுப்பேற்கும் ஒரு முக்கியத் தருணமாக நூற்றாண்டுக் கொண்டாட்டம் இருக்க வேண்டும்.
கள்ள மௌனம்
இன்றைய ஆர்.எஸ்.எஸ். அரசியலில் இஸ்ரேல், தனிப்பெரும் இடத்தைப் பிடித்துள்ள இத்தருணத்தில், 'நாம் அல்லது நமது தேசியம் வரையறுக்கப்பட்டது' எனும் நூல் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், அது ஒருபோதும் மறக்கப்படவே இல்லை. அது வெளியுலகிற்குக் காட்சிப்படுத்தப்படாமல் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் நிராகரிக்கப்படவுமில்லை.
கோல்வால்கர் எழுதியவையும், அவற்றைப் பற்றிப் பிற்காலத்தில் எழுதப்பட்ட பதிவுகளும் ஒரு மகத்தான உண்மையை நமக்கு உணர்த்துகின்றன: பொதுவெளியில் வெளிப்படுத்தப்படும் அறிக்கைகளை மட்டும் கொண்டு ஒரு சித்தாந்தத்தின் சாராம்சத்தை நாம் மதிப்பிட்டுவிட முடியாது. எழுதப்பட்ட நூல்களையும், அமைப்புகள் உண்மையில் எவ்வாறு இயங்கின என்பதன் வரலாற்றுப் பதிவுகளையும் நாம் கூர்ந்து ஆராய்ந்தறிய வேண்டும்.
வரலாறு புறக்கணிக்கப்படுவதால் ஒருபோதும் காணாமல் போய்விடுவதில்லை. அது கள்ளத்தனமான மௌனத்தின் அடியாழத்திலிருந்தும்கூட தனது கதையை உரக்கச் சொல்லும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://theaidem.com/en-parallels-in-ideology-between-nazi-germany-and-indias-rss/