இந்தியாவின் முதன்மை வர்த்தக கூட்டாளியாக இருந்த அமெரிக்காவின் இடத்தை பிடித்த சீனா
தமிழில் : சகா
செய்திச் சுருக்கம்
2023-24ம் நிதியாண்டில் இந்தியாவுடன் மிக அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடாக சீனா உருவாகியுள்ளது. மொத்தம் $118.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான வர்த்தகம் சீனாவுடன் நடந்துள்ளது. சீனாவிற்கு $16.67 பில்லியன் மதிப்பிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது; முன்பிருந்ததைவிட இது 8.7% அதிகமாகும். சீனாவிலிருந்து $101.7 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவிற்குள் சீனா இறக்குதி செய்துள்ளது; முன்பிருந்ததைவிட இது 3.24% அதிகமாகும். அதே நேரத்தில், அமெரிக்காவுடன் $77.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது; முன்பிருந்ததைவிட இது சற்று குறைந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து $40.8 பில்லியன் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது; முன்பிருந்ததைவிட இது 20% குறைவாகும்.
2023-24ம் நிதியாண்டில் இந்தியாவுடன் மிக அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடாக சீனா உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலும் $118.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் சென்ற நிதியாண்டில்(2023-24) நிகழ்ந்துள்ளது. இது அமெரிக்காவுடனான வர்த்தக பரிமாற்றத்தைவிட சற்று கூடுதலாக நிகழ்ந்துள்ளதால் சீனா முதல் இடத்திற்கு முந்தியுள்ளது என்று சர்வதேச அளவிலான வர்த்தக பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் GTRI-இன் புள்ளவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆய்வு மையம் வழங்கிய தகவலின்படி, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகம் $118.3 பில்லியன் ஆகும். 2021-22, 2022-23 ஆகிய காலங்களில் அமெரிக்காவே இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடாக இருந்தது.
ஆய்வறிக்கையின் படி, கடந்த நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து $16.67 பில்லியனாக உயர்ந்துள்ளது. முக்கியமான துறைகள், அதாவது இரும்புக் கனிமங்கள், பருத்தி நூல்/துணிகள், கைத்தறிகள், மசாலா பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பிளாஸ்டிக் மற்றும் லினோலியம் ஆகியவை அதிகரித்த அளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியோ 3.24 சதவீதம் அதிகரித்து $101.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், அமெரிக்காவுடனான ஏற்றுமதியைப் பொறுத்தமட்டில், 2022-23ம் நிதியாண்டில் $78.54 பில்லியனாக இருந்த நிலையில் 1.32 சதவீதம் குறைந்து $77.5 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு எற்றுமதி சரிந்துள்ளது. இறக்குமதியும் சுமார் 20 சதவீதம் குறைந்து $40.8 பில்லியனாக இருந்து வருகிறது.
2019-ம் நிதியாண்டு முதல் 2024 வரையில் பார்க்கும் போது இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் முதல் 15 நாடுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டன என்று GTRI அமைப்பு கூறுகிறது. இதன் விளைவாக ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன; பல துறைகளிலும் வர்த்தக உபரியையோ அல்லது பற்றாக்குறையையோ உருவாக்கிவிட்டுள்ளது.
சீனாவிற்கான ஏற்றுமதி 0.6 சதவீதம் குறைந்து $16.75 பில்லியனிலிருந்து $16.66 பில்லியனாக மாறியிருந்தாலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அளவு 44.7 சதவீதம் அதிகரித்து அதாவது $70.32 பில்லியனிலிருந்து $101.75 பில்லியனாக உயர்ந்துள்ளது.
"மேற்கண்ட இறக்குமதியின் அதீத வளர்ச்சியும், குறைவான ஏற்றுமதிகளாலும் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. வர்த்தக பற்றாக்குறை $53.57 பில்லியனிலிருந்து $85.09 பில்லியனாக உயர்ந்துள்ளது," என்று GTRI நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகமும் அதிகரித்துள்ளது; 47.9 சதவீதம் அதிகரித்து அதாவது $52.41 பில்லியன் டாலரிலிருந்து $77.52 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இறக்குமதியைப் பொறுத்தமட்டில் 14.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. பண மதிப்பின் அடிப்படையில் பார்க்கும் பொழுது $35.55 பில்லியனிலிருந்து $40.78 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதனால், அமெரிக்காவுடனான இந்தியாவின் உபரி வர்த்தகம் $16.86 பில்லியனிலிருந்து $36.74 பில்லியனாக உயர்ந்துள்ளது.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2013-14 முதல் 2017-18 மற்றும் 2020-21 வரை இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா இருந்துள்ளது. சீனாவுக்கு முன் UAE இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்துள்ளது. 2021-22 மற்றும் 2022-23ல் மிகப்பெரிய கூட்டாளியாக அமெரிக்கா இருந்துள்ளது தெரிய வருகிறது.
2023-24ல், UAE $83.6 பில்லியனுடன், இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா ($65.7 பில்லியன்), சவுதி அரேபியா ($43.4 பில்லியன்), மற்றும் சிங்கப்பூர் ($35.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடம் பிடித்தன.
- சகா (தமிழில்)