அமெரிக்காவின் நிதிமூலதன கட்டுப்பாட்டில் இயங்கும் அதானியின் இலங்கை துறைமுகம்

சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அதானியின் இலங்கை துறைமுகத்தில் 553 மில்லியன் டாலர்களை அமெரிக்கா முதலீடு செய்துள்ளது

அமெரிக்காவின் நிதிமூலதன கட்டுப்பாட்டில் இயங்கும் அதானியின் இலங்கை துறைமுகம்

அமெரிக்காவும் இந்தியாவும் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த,  இலங்கையிலுள்ள அதானி துறைமுகத்திற்கு அமெரிக்கா 553 மில்லியன் டாலர் நிதியினை வழங்குகிறது.

கொழும்பில் உள்ள மேற்கத்திய சரக்கு முனையத்திற்கான சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம் (DFC) வழங்கும் நிதியுதவியானது, ஆசியாவில் அமெரிக்காவின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு முதலீடு ஆகும். இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கும் கூட்டாளியான இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கும் ஊக்கமளிக்கும் என்று DFC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நெருக்கடிக்கு முன்பாக சீனத் துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஊடாக இலங்கைக்கு அதிக கடன் வழங்கும் நாடாக சீனா திகழ்ந்தது. இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை தளர்த்துவதற்கான இந்த புது முயற்சிகளையும் அமெரிக்கா எடுத்து வருகிறது. இந்தியாவும் தனது அண்டை நாடுகளின் மீது மேலாதிக்கம் செலுத்த விரும்புகிறது.

இந்த நிதியுதவியானது 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய DFC யின் மூலதன ஏற்றுமதியின் (மொத்தமாக 9.3 பில்லியன் டாலர்) ஒரு பகுதியாகும். அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்தோ-பசிபிக் திட்டங்களில் அமெரிக்காவின் அதிகளிவிலான ஈடுபாட்டின் அடையாளமாக இலங்கை துறைமுக நிதியுதவியை விவரித்தார்.

மேலும், கடந்த ஆண்டு இறுதி வரை மட்டும் சீனா இலங்கையில் சுமார் 2.2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நீடித்து நிலைக்க முடியாதது என்றும் அது சீனாவின் "கடன்-பொறி இராஜதந்திரம்" என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதி என்றும் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.

DFC ஸ்பான்சரான John Keells Holdings Plc நிறுவனம் Adani Ports & Special Economic Zone Ltd. நிறுவனத்துடன்  அதன் "உள்ளூர் அனுபவம் மற்றும் தரநிலைகள்" காரணமாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகாமையில் இருப்பதால், இலங்கையின் துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகவும் பரபரப்பான ஒன்றாகும். அனைத்து சரக்கு கப்பல்களில் கிட்டத்தட்ட பாதி அதன் நீர்வழித்தடத்தில் செல்கிறது. இரண்டு ஆண்டுகளாக 90%க்கும் அதிகமான பயன்பாட்டில் இயங்கி வருவதாகவும், புதிய திறன் தேவைப்படுவதாகவும் DFC கூறியது.

அதானி குழுமம்

அமெரிக்காவின் இந்த நிதியுதவி பங்குச்சந்தை மோசடி குறித்து வந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள அதானி குழுமத்தின் மீட்சிக்கு பயன்படலாம். அக்குழுமம் தான் இந்த சர்ச்சைக்குரிய துறைமுக திட்டத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது. 

இலங்கையில் அதானியின் ஆற்றல் மற்றும் துறைமுக முதலீடுகள் இந்திய அரசுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு சிலரால் விமர்சிக்கப்பட்டது. அவர் - தனது உரைகளில் சீனாவுக்கு சவால் விடுத்த மோடியின் நீண்டகால நண்பர் - இந்த முதலீடுகள் இலங்கையின் தேவைகளை நிவர்த்தி செய்ததாகக் கூறினார். அமெரிக்க அதிகாரியின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்; திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் DFC மிக கவனத்துடன் செயல்பட்டதாகவும் கூறினார்.

DFC, டிரம்ப் அரசால் தொடங்கப்பட்ட ஒரு மேம்பாட்டு நிதி நிறுவனம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இலக்குகளை வளரும் நாடுகள் மீது திணிக்க நிறுவப்பட்டது. கொரோனாவால் உலகெங்கிலும் முடங்கியிருந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது முதலில் முயற்சித்தது.

ஆனால் சமீபத்தில் நிதியுதவி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் & மேரியின் தகவல் உதவிமைய அறிக்கை, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கெதிராக அமெரிக்கா தரப்பிலிருந்து ஏற்பட்ட பொருளாதார இடைவெளியை நிரப்பி வருகிறது என்கிறது.

DFC இன் நிதியுதவியானது, "இறையாண்மையைக் கட்டுபடுத்தும்  கடனாக இல்லாமல் - இலங்கைக்கு அதிக செழுமையை உருவாக்கும், அதே நேரத்தில் பிராந்தியம் முழுவதிலும் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் நிலையை பலப்படுத்தும்" என்று DFC இன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் நாதன் கூறியுள்ளார்.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை : https://m.economictimes.com/industry/transportation/shipping-/-transport/us-invests-553-million-in-adanis-sri-lanka-port-to-curb-chinas-influence/amp_articleshow/105055458.cms