காஷ்மீரில் நடந்த கொடூரத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) குழு பற்றி

அல் ஜசீரா

காஷ்மீரில் நடந்த கொடூரத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)  குழு பற்றி

2019ஆம் ஆண்டு தோன்றிய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) எனும் ஆயுதக் குழு, இந்திய அரசுகும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் தற்போது மையமான பங்கு வகிக்கிறது. இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில், பல தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு மிகக் கொடூரமான தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்த்தப்பட்டதாக சமூக ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டவுடன், டெலிகிராம் தளத்தில் ஒரு அறிவிப்பு பரவியது. அந்த அறிவிப்பில், TRF செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்கு உரிமை கோரியது—இதில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். சமீப ஆண்டுகளில், காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்தெடுக்கப் போராடும் ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் சுற்றுலாப் பயணிகளை இலக்காக்குவதைத் தவிர்த்து வந்தனர். ஆயினும், செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சம்பவம் அவர்களின் உத்திகளில் ஒரு மோசமான மாற்றத்தைக் குறிக்கிறது. இது சில முக்கிய கேள்விகளை எழுப்புகிறது: TRF என்றால் என்ன? காஷ்மீரில் இதன் செல்வாக்கு எத்தகையது? இத்தாக்குதல் இப்பகுதியின் இந்திய நிர்வாகத்திற்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

செவ்வாய்க்கிழமை என்ன நிகழ்ந்தது?

காஷ்மீரின் பஹல்காம் நகருக்கு அருகிலுள்ள பைசரான் புல்வெளியில், பட்டப்பகலில், திடீரென ஆயுதமேந்திய தாக்குதலாளர்களின் குழு சுற்றுலாப் பயணிகள் மீது பாய்ந்தது. அருகிலுள்ள காட்டிலிருந்து தோன்றிய இவர்கள், தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். இதில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள்—அனைவரும் ஆண்கள்—உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர். உலகத் தலைவர்களிடமிருந்து இரங்கற் குரல்கள் எழுந்தன; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் தங்கள் துயரத்தைப் பதிவு செய்தனர். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்பகுதியின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகருக்கு சென்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகத்தில், “இந்தக் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்; அவர்களுக்கு தப்பிக்க வழியில்லை!” என பேசினார். இந்நிலையில், TRF தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது, ஆனால் தாக்குதலாளர்கள் இன்னும் பிடிக்கப்படவில்லை.

TRF என்றால் என்ன?

டெலிகிராம் வழியாக தாக்குதலில் தனது பங்கை அறிவித்த TRF, “வெளியாட்களுக்கு” வசிப்பிட உரிமைகள் வழங்குவதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளியிட்டது—இது இப்பகுதியின் நிலவமைப்பை மாற்றும் நோக்கம் கொண்ட சர்ச்சைக்குரிய கொள்கை என விமர்சகர்கள் கருதுகின்றனர். சட்டவிரோதக் குடியேற்ற முயற்சிகள் வன்முறையால் எதிர்கொள்ளப்படும் என அது எச்சரித்தது. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும், புதிய குடியேறிகள் அல்ல எனினும், பாதுகாப்பு அதிகாரிகள் TRF-ன் டெலிகிராம் அறிவிப்பால் அதிர்ச்சியடையவில்லை. காஷ்மீரின் பாதுகாப்பு வட்டாரங்களில், TRF “மெய்நிகர் முன்னணி” என சிலசமயங்களில் அழைக்கப்படுகிறது—இது அதன் ஆன்லைன் தொடர்பு முறைகளால் உருவான பெயர்.

2019 ஆகஸ்டில், இந்திய அரசு காஷ்மீரின் பகுதி சுயாட்சியை ஒருதலைபட்சமாக ரத்து செய்து, பல மாதங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த பின்னர், TRF முதல்முறையாக சமூக ஊடகங்களில் தோன்றியது. அதேவேளை, வெளியாட்களுக்கு வசிப்பிட உரிமைகளை—நில உரிமை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியவை—விரிவாக்கியது அரசு. இந்தக் கொள்கை மாற்றம், பஹல்காமில் நிகழ்ந்த தாக்குதலுக்கு வித்திட்டதாகக் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” என்ற பெயர், காஷ்மீரி கிளர்ச்சியாளர் குழுக்களின் பாரம்பரிய இஸ்லாமிய பெயர்களிலிருந்து வேறுபடுகிறது. ஒரு தசாப்த காலமாக ஆயுதக் குழு வழக்குகளை கையாண்ட அனுபவமுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் (பெயர் வெளியிட விரும்பாதவர்), இப்பெயர் காஷ்மீரிய தேசியவாதத்தை மட்டும் மையப்படுத்திய நடுநிலைப் பிம்பத்தை உருவாக்கும் உத்தியாக இருக்கலாம் என்கிறார். ஆயினும், இந்திய அதிகாரிகள் TRF-ஐ பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அல்லது முன்னணியாகக் கருதுகின்றனர். காஷ்மீரில் ஆயுதக் கிளர்ச்சிக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்திய அரசு குற்றம்சாட்டினாலும், பாகிஸ்தான் இதை மறுத்து, காஷ்மீரி மக்களுக்கு தார்மீக மற்றும் இராஜதந்திர ஆதரவு மட்டுமே வழங்குவதாகக் கூறுகிறது. பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. சில இந்திய அதிகாரிகள், இத்தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பாவின் செயலாக இருக்கலாம் எனவும், TRF பொறுப்பேற்று விசாரணையை சிக்கலாக்க முயல்கிறது எனவும் நம்புகின்றனர்.

TRF முன்னர் தாக்குதல்களை நடத்தியுள்ளதா?

2020 முதல், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) சிறு அளவிலான தாக்குதல்களையும், குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்ட துல்லியமான கொலைகளையும் நடத்தி, அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டது. இது பல்வேறு பிளவுபட்ட கிளர்ச்சிக் குழுக்களிலிருந்து திரண்ட போராளிகளால் நிரம்பியுள்ளது. இந்தியப் பாதுகாப்புப் படைகள் காலப்போக்கில் TRF-இன் பல கூடாரங்களை அழித்தாலும், இந்த அமைப்பு உயிர்ப்புடன் தப்பி, தனது செல்வாக்கை விரிவாக்கியது. 2022 வாக்கில், காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டைகளில் மாண்ட ஆயுதப் போராளிகளில் பெரும்பான்மையினர் TRF உடன் இணைந்தவர்கள் என அரசு ஆவணங்கள் வெளிப்படுத்தின. இக்குழு, ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளையும், உளவு தருவோர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் இலக்காக்கி, கைத்துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி நுண்ணிய கொலைகளை நிகழ்த்துவதில் தேர்ச்சி பெற்றது.

அதே ஆண்டில், TRF, இந்திய அரசுடன் கூட்டிணைந்ததாக குற்றம்சாட்டப்பட்ட “காஷ்மீரி பத்திரிகையாளர்களின் துரோகிகள் பட்டியல்” என்ற அறிக்கையை வெளியிட்டு பேசுபொருளானது. இப்பட்டியலில் பெயரிடப்பட்ட 5க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உடனடியாக பதவி விலகினர்—இது முந்தைய வன்முறைச் சம்பவங்களின் நிழலை எழுப்பியது. உதாரணமாக, ஜூன் 14, 2018 அன்று, காஷ்மீரின் மதிப்புமிக்க பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீர் ஆசிரியருமான ஷுஜாத் புகாரி, ஸ்ரீநகரில் தனது அலுவலகத்துக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார். இதற்கு காஷ்மீர் காவல்துறை, லஷ்கர்-இ-தொய்பாவை காரணமாகக் கூறியது. மேலும், ஜூன் 2024 இல், TRF, ஜம்மு மண்டலத்தின் ரியாசி பகுதியில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீதான உயர்மட்டத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததால், இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர்.

TRF எவ்வாறு தனித்துவமானது?

TRF, நவீன உத்திகளைப் பாரம்பரிய முறைகளுடன் கச்சிதமாக இணைத்து, தனது கொடூரத் தாக்குதல்களால் தனித்த முத்திரையைப் பதித்துள்ளது. அதன் ஆங்கிலப் பெயரும், தகவல் பரிமாற்றத்திற்கு சமூக ஊடக தளங்களை நம்பியிருப்பதும், காஷ்மீரின் பழைய கிளர்ச்சிக் குழுக்களிலிருந்து இதை வேறுபடுத்துகின்றன. TRF தோன்றுவதற்கு முன், 2014 முதல், காஷ்மீரி கிளர்ச்சித் தலைவர்கள் சமூக ஊடக வீடியோக்கள் மூலம் பொது உருவத்தை உருவாக்கினர். இவை, ஆப்பிள் தோட்டங்களில் உலாவுவது, கிரிக்கெட் விளையாடுவது, அல்லது ஸ்ரீநகரில் சைக்கிள் ஓட்டுவது போன்ற அன்றாடக் காட்சிகளை வெளிப்படுத்தின. இத்தகைய நட்பார்ந்த, வெளிப்படையான சித்தரிப்பு, ஆட்சேர்ப்பை உயர்த்தியது. இவ்வண்ணம், புர்ஹான் வானி, இத்தகைய உத்தியின் சின்னமாக உருவெடுத்தார்; 2016 ஜூலையில் ஏற்பட்ட அவரது மரணம் கலவரத்தை தூண்டியது, இது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கு வித்திட்டது.

ஆயினும், 2019-இல் விதிக்கப்பட்ட கடுமையான ஒடுக்குமுறைகளால், இந்த வெளிப்படையான உத்திகளை மாற்றிக் கொண்டது TRF. புதிய TRF போராளிகள், மாறாக, மரபார்ந்த அணுகுமுறையைத் தழுவினர்—தங்கள் அடையாளங்களை மறைத்து, குறைவான ஆனால் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டனர். 1996-இல் கிளர்ச்சியில் இணைந்ததாகக் கருதப்படும் காஷ்மீரின் மூத்த போராளி முகமது அப்பாஸ் ஷேக்கின் தலைமையில் TRF ஸ்ரீநகரைச் சுற்றிய நடவடிக்கைகளை மையப்படுத்தியது. 2021-இல் ஷேக்கின் மரணத்தையும், 2022-இல் பல போராளிகளின் இழப்பையும் தொடர்ந்து TRF தனது எஞ்சிய உறுப்பினர்களுடன் தொலைதூர மலைப்பாங்கான காடுகளில் தலைமறைவானது. 2023 ஜனவரியில், இந்திய அரசு TRF-ஐ “பயங்கரவாத அமைப்பு” என பகிரங்கமாக அறிவித்தது, இது கிளர்ச்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியது. பாதுகாப்புப் படைகளால் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டதால், TRF-இன் எண்ணிக்கை குறைந்தாலும், காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இது மிகுந்த பயிற்சி பெற்று, உயரமான மறைவிடங்களில் தலைமறைவாக உள்ளது.

இந்தத் தாக்குதல் மோடியின் காஷ்மீர் கொள்கைக்கு என்ன உணர்த்துகிறது?

இந்த சமீபத்திய தாக்குதல், இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைகளுக்கு—குறிப்பாக, 2019-இல் சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டதற்குப் பின் இயல்பு நிலை திரும்பியதாகக் கூறும் வாதத்திற்கு—ஆழமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இத்தாக்குதல், இந்தியப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளை திகைப்பில் ஆழ்த்தியிருந்தாலும், சில அறிஞர்கள், இந்தக் கவனக்குறைவு மோடியின் காஷ்மீர் கொள்கையின் அடிப்படைக் குறைபாடுகளில் வேரூன்றியுள்ளதாக வாதிடுகின்றனர். மோடியும், அமித்ஷாவும் காஷ்மீரில் இயல்பு நிலை மீண்டும் நிலைநாட்டப்பட்டதாக கதையளந்தனர்.

இந்த “இயல்பு நிலை” வாய்வீச்சு, சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளுடன் இணைந்து, குஜராத்தைச் சேர்ந்த கைலாஷ் சேத்தி போன்ற குடும்பங்களை இக்கோடையில் காஷ்மீருக்கு வரத் தூண்டியது. ஆயினும், தாக்குதலுக்குப் பின், ஸ்ரீநகரிலிருந்து அல் ஜசீராவுக்கு பேசிய சேத்தி, தனது பீதியை வெளிப்படுத்தினார்: “நான் எவ்வளவு அச்சமடைந்துள்ளேன் என்பதை விவரிக்க இயலாது; என் குடும்பத்தை உடனே வெளியேற்ற விரும்புகிறேன்.” இச்சம்பவம், சுற்றுலா குறித்த பரவலான அச்சத்தைத் தூண்டியுள்ளது—பலர் முன்பதிவுகளை ரத்து செய்து அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர், இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குச் செல்லும் பாதைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகி, விமானக் கட்டணங்கள் 300 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன.

தெற்காசிய பயங்கரவாத இணையத்தளத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சஹ்னி, அரசின் இந்தக் கதையை கடுமையாக விமர்சித்தார். “இயல்பு நிலை” எனும் வலியுறுத்தல், யதார்த்தமற்றதாகவும், எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளதாக அவர் கூறினார். அரசியல் தீர்வு இன்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பது சாத்தியமற்றது என வாதிடும் சஹ்னி. இந்த “இயல்பு நிலை” வாய்வீச்சுதான், கிளர்ச்சிக் குழுக்களை மீண்டும் தாக்குதல்களுக்கு தூண்டுவதாகக் கருதுகிறார் அவர். “இயல்பு நிலை” வாய்வீச்சு பயணிகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பொய்யான உணர்வை அளித்திருந்தது. இதுவரை, கிளர்ச்சியாளர்கள் சுற்றுலா பயணிகளை இலக்காக்குவதைத் தவிர்த்திருந்தனர். ஆனால், TRF-இன் செவ்வாய்க்கிழமை திடீர்த் தாக்குதல், இந்த அமைதியை முற்றிலும் சிதைத்தது. அன்று மாலை, உயிரிழந்தோரும் காயமடைந்தோரும் குதிரைகள் மற்றும் இராணுவ வாகனங்களில் வெளியேற்றப்பட்டபோது, பஹல்காமின் சுற்றுலா நகரம் முற்றாக மூடப்பட்டது. வணிகர் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இரங்கலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீரின் பல பகுதிகள் முடங்கின. பஹல்காமில் விருந்தோம்பல் துறையில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளி ரவுல், எதிர்காலம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்: “மீண்டும் ஒடுக்குமுறைகளும், ஆயுதப் படைகளின் தீவிர நிலையும் திரும்பும். என் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரும் காஷ்மீரை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர்.”

(யஷ்ராஜ் சர்மா)

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/4/23/what-is-the-resistance-front-the-group-behind-the-deadly-kashmir-attack

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு