அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சங்கராச்சாரியார்

தமிழில் : விஜயன்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சங்கராச்சாரியார்

'அரசியல் ஆதாயம் தேடும் இந்துக்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்': அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சங்கராச்சாரியார் கூறியவை.

|தி வயர் ஊடகம் நடத்திய நேர்காணலின் முழு உரை |

கரண் தாபருடனான நேர்காணலின் போது, ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியாராக இருக்கும் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி, இன்னும் முழுமையாகக் கட்டப்படாத ஒரு இடத்தில் கும்பாபிஷேகம் செய்யப்போவது குறித்து பேசும்போது, இந்து சாஸ்திரங்களைக் பயபக்தியுடன் பின்பற்றும் இந்துக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைச் சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 22 அன்று கும்பாவிஷேகம் நடக்க உள்ளது. இந்த நேரத்தில், ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியாராக இருக்கும் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியைப் பேட்டி காணும் வாய்ப்பு கரண் தாப்பருக்கு கிடைத்தது. நான்கு சங்கராச்சாரியார்களும் இந்த நிகழ்வைப் பற்றிய தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையடையாத கோவிலில் ஒரு கடவுளுக்கு கும்பாபிஷேகம்(பிரதிஷ்டை) செய்வதை இந்து சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை என்பதை அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கும்பாவிஷேக நாளான ஜனவரி 22 என்பது  சந்திர மாதமான தை(பவுஸ்-சமஸ்கிருதம்) மாதத்தில் வருகிறது, பாரம்பரியமாக இதுபோன்ற விழாக்களுக்கு இம்மாதம் ஏற்றதல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நேர்காணலில், அவரது ஆதங்கம் தெளிவாக வெளிப்பட்டது, மேலும் எண்ணற்ற "ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள இந்துக்கள்"  மகிழ்ச்சியடையவில்லை, "அரசியல் ஆதாயம் தேடும் இந்துக்கள்" மட்டுமே கும்பாவிஷேகத்தினால் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி சுட்டிக்காட்டுகிறார். 40 நிமிட உரையாடலில், ஒரு மத நிகழ்வை அரசியலாக்குவது குறித்த உள்ளக் குமுறலை முன்னிலைப்படுத்தி, பல பிரச்சினைகள் குறித்து அவர் உரையாற்றுகிறார்.

பின்வரும் உரை நேர்காணலின் முழுமையான எழுத்து வடிவமாகும், மொழி நடை, பொருள் தெளிவு மற்றும் வாக்கிய அமைப்பின் நேர்த்திக்காக சிறு சிறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹிந்தியில் இருந்த வாக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் முழு நேர்காணலையும் மொழிபெயர்ப்பு செய்ததோடு அதற்கு எழுத்து வடிவத்தையும் சாகரிகா சவுத்ரி வழங்கியுள்ளார்.

வணக்கம். தி வயர்  ஊடகம் நடத்தும் சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று, ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி நமது விருந்தினராகக் கலந்து கொண்டிருப்பதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். சுவாமி ஜி, இங்கு வந்ததற்கு நன்றி. எனது கேள்விகளை ஆங்கிலத்தில் முன்வைத்தால் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன், ஏனெனில் மற்ற மொழியைவிட எனக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது கொஞ்சம் வசதியாகும் இருக்கிறது. இப்போது, ஒரு நேரடியான கேள்வியுடன் ஆரம்பிக்கலாம்.

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அழைப்பிதழை ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள்?

எந்த அழைப்பையும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. உண்மை என்னவென்றால், எங்களுக்கு இன்னும் எந்த அழைப்பும் வரவில்லை.

இப்போது வரையிலும் உங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லையா?

ஆம். எங்களுக்கு அழைப்பிதழும் வரவில்லை என்பதால், நாங்கள் அழைப்பை நிராகரித்ததாக யாரும் எங்களை குற்றம் சாட்ட முடியாது.

உங்களுக்கு ஏன் இன்னும் அழைப்பிதழ் வரவில்லை?

அழைப்பிதழ்களைக் யார் யாருக்கு கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிப்பவர்களிடமே இந்த கேள்வியைக் கேட்க வேண்டும்; அவர்கள்தான் அழைப்பிதழ் வழங்கப்படாததற்கு சரியானக் காரணம் கூறமுடியும்.

மற்ற மூன்று சங்கராச்சாரியார்களுக்கும் அழைப்பிதழ் வரவில்லையா அல்லது உங்களுக்கு மட்டும்தானா?

மற்றவர்களுக்காக என்னால் பேச முடியாது, ஆனால் எனது சொந்த சூழ்நிலையைப் பற்றி எனக்குத் தெரிந்ததை மட்டுமே என்னால் பகிர்ந்து கொள்ள முடியும்.

அழைப்பிதழ் வழங்கப்படாத்தை நீங்கள் அவமரியாதையாக உணர்கிறீர்களா?

அப்படி சொல்ல முடியாது. அறக்கட்டளை மட்டுமே இந்த விஷயத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். ராமர் பிறந்த இடத்தில் கோவிலை அமைப்பதில் நாங்கள் எங்கள் பங்கை ஆற்றியுள்ளோம், அதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்.

அழைப்பை எதிர்பார்த்தீர்களா? மாறாக, அழைப்பிதழ் வழங்கப்படாதது உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அழைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோ விருப்பங்களோ எங்களுக்கு இல்லை. அழைப்பிதழ் வந்திருந்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம்.

நீங்கள் ஏன் அழைப்பை நிராகரிப்பீர்கள் என்பதை விளக்க முடியுமா?

சங்கராச்சாரியார் முன்னிலையில் வேதத்திற்கு எதிராக ஏதாவது நடந்தால் நாங்கள் கலந்து கொள்ள முடியாது. அனைத்து மத நடவடிக்கைகளும் வேதங்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. ஏனெனில் வேதங்கள் என்பது கடவுளின் கட்டளைகளாகும். மதச் சடங்குகளை செய்வதற்கான சரியான வழியை ஸ்ருதிகள், ஸ்மிருதிகள் உள்ளிட்ட வேதங்களே,கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை கடவுள் கட்டளைகயாகவே வலியுறுத்துயிருக்கிறார். இந்தக் கட்டளைகளிலிருந்து விலகிச் செல்பவர்கள், அவர்கள் பக்தியுடன் இருந்தாலும், கடவுளால் அவர்களுக்கு முக்தியும், வெற்றியும் கிட்டுவதில்லை என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை ஒப்பிக்கிறார். சாராம்சத்தில், வேதக் கட்டளைகளை அப்படியே கடைபிடிப்பிடிக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு, ஏனெனில் நமது வேதங்களும் கடவுளும் அதற்குரிய வழிமுறையில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துயிருக்கின்றன.

ஸ்வாமி ஜி, "நான் மோடிக்கு எதிரானவன் அல்ல, அதே சமயத்தில் தர்மசாஸ்திரத்திற்கு விரோதியாகவும் இருக்க முடியாது" என்று நீங்கள் கூறும் வீடியோ பலரும் பார்க்கும் வகையில் வைரலானது. இதுவே உங்களின் மிக முக்கியமான கருத்து எனச் சொல்ல வருகிறீர்களா?

சரியாக, அதைத்தான் நான் தெரிவிக்க முயற்சித்தேன். இந்தச் சூழலில் 'மோடி எதிர்ப்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பொருத்தமானதெனக் கருதினேன். நான் வேதத்தின் பக்கம் நிற்பதே மிகவும் முக்கியமானது, நான் இருக்கும் போது சமயச் சடங்குகளை சரியாக நடத்த விரும்புகிறேன்.

எனவே, இது குறிப்பாக மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி, மதம் அல்லாத விசயங்களில், நான் இவ்வாறு கருத்து தெரிவிக்க மாட்டேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பொறுத்தமட்டில், சிகரம் (கோவில் கோபுரம்) இன்னும் கட்டப்படவில்லை. ஒரு கோவில் முழுமையடையாமல் இருந்தால் அல்லது முழுமையாக நிர்மானிக்கப்படாமல் இருந்தால் கும்பாபிஷேகம் (பிரான் பிரதிஷ்டை) நடத்தக்கூடாது என்று வேதசாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றனவா? 

நமது சாஸ்திரங்கள் அனைத்தும், கோவிலை கடவுளின் உடலாகவும், சிலையை ஆத்மாவாகவும் கருகிறது என்பதை தெளிவாகக் கூறுகின்றன. ஒரு உடலைப் போல கோயிலும், தலையைப் போல கும்பக்கலசமும் குறிக்கப்படுகிறது. அதன்படி தற்போது வரை, சிகரம் அல்லது தலை கட்டப்படவில்லை.

நம் உடல் எப்படி தலை முதல் கால் வரை முழுமையாக உருபெற்றுள்ளதோ அது போல், கோயில் என்பது கடவுளின் உடலைக் குறிக்கிறது. இந்த ஒப்புமையின்படி, கோயில் கோபுரம் (சிகர்) கட்டப்படாததால், தலை, கண்கள் மற்றும் வாய் முழுமையாக உருப்பெறவில்லை என்பதே அர்த்தமாகும். இந்த நிலையில், ஆன்மாவை உடலுக்குள் வைத்து உயிர்பெறச் செய்வதென்பது பெருங்குற்றமாகும், மேலும் வருந்தத்தக்க விசயம் என்னவென்றால், இந்த பிழையைச் சரிசெய்வதற்கு எந்த தீர்வையும் அவர்கள் தேடுவதாகத் தெரியவில்லை.

கர்பக் கிரஹம் ( கருவறை) தயாராக இருப்பதாக செய்தித்தாள்களில் படித்திருந்தேன். இந்நிலையில் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்யலாம்தானே?

கர்ப கிரஹம் என்பது தாயின் கருவறை போன்றது, அதாவது கருத்தரிப்பதற்குத் தயாராக உள்ளது என்று அர்த்தமாகும். கருவறைக்குள் உயிர் இருந்தாலும், அதை நம்மால் பார்க்க இயலாது, மேலும் உலகுக்கு வெளிவருவதற்கு முன்பு உடல் முழுமையாக உருவாக ஒன்பது மாதங்கள் ஆகும்.

தொடர்ந்து, அவரது கைகளும், கால்களும் வளரும், மேலும் காலப்போக்கில், அவரது புலன்கள் செயல்படத் துவங்கும். முழு ஒன்பது மாத காலமும் முடிந்த பிறகுதான், அவரது உடலை முழுமையாக உருவாக்க அனுமதித்த பிறகுதான், மக்களால் அவரை தரிசிக்க முடியும்.

எனவே, கர்ப க்ரிஹா தயாரிக்கப்படுகிறது, இது கருத்தரிப்பைக் குறிக்கிறது, ஆனால் உடல் (கோயில் அமைப்பு) இன்னும் முழுமையாக உருப்பெறவில்லை. கோவில் கட்டுமானம் முழுமையாக முடியும் வரை பிரான் பிரதிஷ்டை நடத்த முடியாது.

ஜனவரி 22ஆம் தேதி கோயில் திறப்பு விழாவுக்கு உகந்த நாள் என்ற தகவலையும் படித்தேன். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இது மங்களகரமானதாகக் கருதப்பட்டால், இந்தியாவில் சுமார் 100 கோடி இந்துக்கள் அல்லது சனாதனிகள் உள்ளனர், மேலும் ஒவ்வொருவரும் புனிதமான நாட்களைக் கண்டறிய ஒரு நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால், பெரும்பாலான செயல்களுக்கு ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று 80% மக்கள் நம்புகிறார்கள்.

கிரிகோரியன் நாட்காட்டியின் பரவலான பயன்பாடு இருந்தபோதிலும், மக்கள் ‘இந்து’ நாட்காட்டிகளையே வாங்க விரும்புகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கூட, தனிநபர்கள் புனித நாட்கள் மற்றும் பண்டிகைகளின் முக்கியத்துவம் கருதி அதன்மீது நம்பிக்கை வைத்துள்ளனர், இதன் காரணமாகவே ‘இந்து’ நாட்காட்டிகளைப் வாங்குகிறார்கள்.

அனைத்து மங்களகரமான நாட்களையும் இந்த நாட்காட்டிகள் காண்பிப்பதோடு, கோவில் கட்டுதல், திருமணங்கள் போன்ற நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது. ஜனவரி 22-ம் தேதியை பிரான் பிரதிஷ்டைக்கு உகந்த நாளாகக் குறிப்பிடும் இந்திய நாட்காட்டியை எவரேனும் எனக்கு காட்ட முடியுமா என்பதை சவாலாகவே கேட்கிறேன்.

10-15 நாட்காட்டிகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தும், பல்வேறு நபர்களுடன் கலந்தாலோசித்தும் பார்த்துவிட்டேன், இந்த நாள் பிரான் பிரதிஷ்டைக்கு சிறப்பானது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாட்காட்டி தயாரிப்பதில் நிபுனத்துவமுடைய மதகுருமார்கள் ஜனவரி 22-ம் தேதி மங்களமானதுதான் என்பதை ஏன் அங்கீகரிக்கவில்லை என்ற கேள்வியை இது எழுப்புகிற அதே நேரத்தில் ஒருவர் மட்டுமே இதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நாளை மங்களகரமானதாகக் கருதும் மதகுரு காசியைச் சேர்ந்தவர்; அவருடைய ஞானத்தின்மீது நமக்கு மரியாதை உள்ளது. அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், ஜனவரியில் ஒரு நல்ல நாளைக் கண்டறிந்துக் கூறும்படி தனக்குப் பணிக்கப்பட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

அவரை நிர்பந்தித்துள்ளார்களா?

ஆம், அதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆக, அடிப்படையில், ஜனவரியில் ஒரு நாளைத் தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் அறிவுறுத்தப்பட்டதா?

ஆம், ஜனவரியில் ஒரு நாளைக் குறிப்பிடும்படி அவரை கேட்டுக் கொண்டனர் என அவர் சொல்வதைப் பார்க்கும் போது ஜனவரியில் அவருக்கு எந்த நாள் பொருத்தமானதாகத் தெரிந்ததோ அதைத் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு நாளைக் குறித்துத் தரும்படி யாரோ அவரைத் தூண்டியுள்ளனர் என்பதே இதன் மூலம் நமக்கு தெரியவரும் விசயமாகும்.

உங்கள் பார்வையில், நீங்கள் ஏன் கலந்துகொள்ள தயங்குகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் கூட, ஏன் கலந்து கொள்ள மாட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் அழைக்கப்பட்டிருந்தாலும் அயோதிக்கு சென்றிருக்க மாட்டீர்களா? 

இல்லை, எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருந்தால், நான் அயோத்திக்குப் போயிருப்பேன், ஆனால் நான் கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்க மாட்டேன். கடவுளிடமிருந்து வரும் அழைப்பை நிராகரிக்கக்கூடாது என்பதே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதனைகளாகும், அவ்வகையில் நாங்கள் அழைப்பை மதித்து அயோத்திக்குப் போயிருப்போம்.

அயோத்தி வரையா?

ஆம், நாங்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டோம் என்றும், வேதங்களுக்கு புறம்பான ஒன்றைப் பார்ப்பதற்கு எங்களுக்கு உடன்பாடில்லை என்பதால் விழா நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனிருக்க முடியாது என்பதையும் சேர்த்துத் தெரிவிக்க அயோத்தி வரை போயிருப்போம்.

பூரி, துவாரகா, ஷங்கேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சங்கராச்சாரியார்களும் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது. இது உண்மைதானா?

ஆம், நாங்கள் யாரும் போகவில்லை.

அப்படியானால், நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளவில்லையா?

இதுவரை நான் அறிந்த வரையில், யாரும் போவதாக இல்லை. இருப்பினும், இனி எப்படியிருக்குமென இப்போது கூற முடியாது.

இன்னும் ஏழு நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், சங்கராச்சாரியார் ஜி, மக்களின் எண்ணங்களும் உணர்வுகளும் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் தானே?

நொடிபொழுதில் எதுவும் மாறலாம் என்றாலும், தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் யாரும் போவதாகயில்லை.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளவில்லையா?

ஆம், யாரும் கலந்து கொள்ளவில்லை.

சந்தேகத்திற்கு இடமின்றி பிரான் பிரதிஷ்தா நடக்கப்போகிறது, பிரதமர் நரேந்திர மோடி அதில் மிக முக்கிய பங்கு வகிப்பார் இல்லையா..

பூரி மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் பின்வருமாறு கூறினார்: "சிலையை யார் தொடலாம் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. கும்பாபிஷேகத்தின் போது நான் என்ன செய்வேன்? பிரதமர் சிலையைத் தொடுவார். என்னால் அங்கு நின்று கைதட்டி அவரைப் பாராட்ட முடியாது. எனக்குத் தெரியும். எனது பதவியின் கண்ணியம் எதுவென்று; இது ஈகோ அல்ல." அவரது கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

நிச்சயமாக. அவர் சொல்வது சரிதான். வார்த்தைகள் வேறுபட்டாலும், வேத சாஸ்திரங்கள் பின்பற்றப்படாமல் இருப்பதால், நாங்கள் அங்கு இருப்பது பொருத்தமற்றதாக மாறிவிடுகிறது என்பதே அதன் சாராம்சம். இது விதிமீறல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புறநிலையில் பல அழுத்தங்கள் வருவதற்கு வாய்ப்புள்ள நிலையில் எங்களால் அவரைத் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், போகாமல் இருப்பதே நல்லது, அதைத்தான் அவர் பரிந்துரைக்கிறார்.

நீங்கள் நான்கு பேரும் இந்த பதவியை வகிக்கிறீர்களா?

ஆம், இது இயற்கையானது. எங்கள் வேதங்கள் ஒன்றே, எங்கள் விதிகள் ஒரே மாதிரியானவை; அந்தந்த பகுதிகளில் மட்டுமே வேறுபாடு உள்ளது.

ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். புகைப்படத்தில் மோகன் பகவத் மற்றும் ஆனந்திபென் படேலும் உள்ளனர். புகைப்பட ஆதாரம்: PIB.

பிரான் பிரதிஷ்டா நிகழ்வு மதம் சார்ந்தது என்பதை விட அரசியல் ரீதியானதாக மாறிவிட்டது என்ற எண்ணமே நாட்டில் உள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

கோவிலை சுற்றி நடக்கும் விவாதம் முழுவதும் மதம் சார்ந்ததாக இல்லாமல் அரசியலாக மாறிவிட்டது. மதம் சம்பந்தமாக இருந்தால் எங்களிடம் கலந்தாலோசித்திருப்பார்கள்.

ஆரம்பத்தில், ராமல்யா அறக்கட்டளை என்று அழைக்கப்படும் தர்மாச்சாரியார்களின் அறக்கட்டளை ஒன்று ஏற்கனவே இருந்தது. 1997ல், கோவிலை சுற்றியுள்ள நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியபோது, உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கூறியது. இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் வழிபாட்டுத் தலத்தை நிறுவ நிலம் வழங்கப்படும் என்று நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

இருப்பினும், உச்ச நீதிமன்றம் முன்பிருந்த அறக்கட்டளையை அதாவது இந்துக்கள் நிலத்தை பெறுகின்றபட்சத்தில் ராமல்யா அறக்கட்டளையிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றி நிலைப்பாட்டை நிராகரித்தது. இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, பிரதமர் தனது கட்சிக்காரர்களைக் கொண்டு அறக்கட்டளையை உருவாக்கினார். ஆன்மீக விஷயங்களில்  கடவுளின் நம்பிக்கைக்குரிய, கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நபர்கள் என்பதால், தர்மாச்சாரியார்களுக்கே முதன்மை பொறுப்பு உள்ளது என்பதைக் ஒப்புக்கொள்ளும் வகையில், அவர்களைக் உள்ளடக்கியே கோயில் கட்டும் நோக்கம் முன்பு இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், மத நடவடிக்கைகளுக்கான பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்பதே பொருத்தமாக இருந்திருக்கும். இருப்பினும், சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுகள் வந்த பிறகே அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று கூறியதோடு, அப்போது பிரதம மந்திரியாக இருந்த நரசிம்மராவ், தன்னிச்சையாக அறக்கட்டளையை நிறுவவில்லை.

நரசிம்மராவ் நினைத்திருந்தால் அவரே ஒரு அறக்கட்டளையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், மோடி தன்னிச்சையாக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். ஆரம்பத்தில், அனைத்து முக்கிய மதகுருமார்களும் சேர்க்கப்பட்டாலும், பின்னர் அவர்களுக்கு பதிலாக கட்சி ஊழியர்களை கொண்டு வந்தார். அந்தக் கட்டத்தில்தான் மதம் புறக்கணிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

கோயில் கட்டுமான விசயங்களில் யாருடைய ஆலோசனையும் கேட்கப்படாமலிருப்பது, மத குருமார்களின் ஆலோசனைகளும் கேட்கப்படாமல் விடுவது போன்ற அசட்டையான போக்கு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. அவர்கள் யாரிடமும் கலந்தாலோசித்ததாகத் தெரியவில்லை.

மதகுருமார்களிடம் எப்போதாவது கலந்தாலோசிக்கப்பட்டதா?

கட்டுமான விசயங்கள் மட்டுமின்றி, பிரான் பிரதிஷ்டையில் கூட அவர்கள் எங்களை கலந்தாலோசிக்கவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறோம் என்று எல்லோரிடமும் சொல்லி எல்லாவற்றையும் அவர்களாகவே செய்தார்கள் என்பதே இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

கோயில் கட்டுவதில் அரசியலும் அரசியல்வாதிகளும் எப்படி தலையிட்டார்கள் என்று சொல்கிறீர்கள். பூரி மடத்தின் சங்கராச்சாரியார் சனிக்கிழமை வங்காளத்தில், தி இந்து நாளிதழில் கூறியதை இப்போது படிக்கிறேன்: "அரசியல்வாதிகளுக்கு அவர்களின் வரம்புகள் உள்ளன, அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் பொறுப்புகள் உள்ளன. மதம் மற்றும் ஆன்மீக விவகாரங்களுக்கென்று தனி விதிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. மேலும் இந்த விதிகள் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். அரசியல்வாதிகள் ஒவ்வொரு விவகாரங்களிலும் தலையிடுவது பைத்தியக்காரத்தனம். ஒரு தனிமனிதனின் பெயரைப் பிரச்சாரம் செய்வதற்காக இந்த விதிகளை மீறுவது கடவுளுக்கு எதிராக கலகம் செய்யும் வேலையாகும்.” இந்த கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நான் 100% ஒப்புக்கொள்கிறேன், ஏனென்றால் எங்கள் மனதில் இருந்ததை பூரியின் சங்கராச்சாரியார் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மட்டும் நான் தெளிவுக்காக சேர்த்துக் கூறுகிறேன். நான் அரசியலில் தலையிட ஆரம்பித்தால், நானும் என் எல்லையை தாண்டிவிடுவேன், அதே போல், அரசியல்வாதிகள் மதத்தில் தலையிடக்கூடாது. எப்போதாவது ஒருவருக்கொருவர் உதவுவதைத் தவிர, இருவரும் தங்கள் வரம்புகளைப் புரிந்துகொண்டு அவரவர்களுக்கான எல்லையில் மட்டுமே பயணிக்க வேண்டும். நமது மதத்தில், தர்மாச்சாரியார்களே முக்கியமானவர்களாக இருப்பார்கள், வேறு எந்த மனிதரும் முக்கியமானவராக இருக்க முடியாது; இதை எவரும் மறுக்க முடியாது. ராமர் பிறந்த புண்ணிய பூமியில் இதை இப்போது தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில் இந்து மதத்திற்கு தீங்கு நேரக்கூடும், இது மட்டுமல்லாது மக்களும் இதையே காரணமாக வைத்து வேதங்களை அவமதிக்கத் தொடங்குவார்கள்.

ஆனால் பூரி சங்கராச்சாரியார் பயன்படுத்திய வார்த்தைகள் அதிக அழுத்தமாக உள்ளது. அவர் கூறுகிறார், "அரசியல்வாதிகளுக்கு அவர்களின் வரம்புகள் உள்ளன, மேலும் அரசியல்வாதிகள் ஒவ்வொரு பகுதியிலும் தலையிடுவது பைத்தியக்காரத்தனம்." பின்னர் அவர் கூறுகிறார், "ஒரு மனிதனின் பெயரைப் பிரச்சாரம் செய்வதற்கான இந்த விதிகளை மீறுவது கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதே ஆகும்." பூரியின் சங்கராச்சாரியார் திரு மோடியைக் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

இந்த கருத்து திரைமறைவில் இரகசியமாக சொல்லப்பட்டது அல்ல; அதன் அர்த்தம் என்னவென்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எல்லா இடங்களிலும் திரு மோடியை மட்டுமே பார்க்க முடிகிறது என்பது உண்மைதானே.

உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா?

அனைவருக்குமே அப்படித்தான். ஒரு மனிதன் எல்லாவற்றையும் இயக்குகிறான் என்பது ஒளிவுமறைவான விசயமல்ல.

அப்புறம் சொல்லுங்க சங்கராச்சாரியார் ஜி, ராமர் கோயில் விவகாரத்தை அரசியல் ஆக்கியது, பிரான் பிரதிஷ்டாவைச் சுற்றி நடக்கும் அதிகமான அரசியல் பிரச்சாரம் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? மேலும் இது இந்தியாவை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக இந்தியாவைப் பிளவுபடுத்துமா?.

ஆம், அதுதான் எனது கவலை. அவர்கள் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள் என்பதுதான் கவலை. அவர்கள் மத-ஆன்மீக நலனை விரும்பும் இந்துக்களையும், அரசியல் ஆதாயம் தேடும் இந்துக்களையும் பிரிக்கிறார்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி மதத்தைப் புரிந்துகொண்ட மதகுருமார்களை கலந்தாலோசிப்பதில்லை.

இந்தியாவில் உள்ள இந்துக்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைக்கக் காரணமாக இருக்கவேண்டிய நபரிடம் இருந்து இந்த மாதிரியான பிரிவினை உணர்வு வருகிறது.

இந்தியக் கோவில் கட்டப்பட்டு வருவதாக ஒருவர் கூறியிருந்தார். இப்படித்தான் தேசத்திற்கானக் கோவிலை உருவாக்குவீர்களா? மத வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களையும் நீங்கள் ஒன்றிணைத்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் இந்துக்களை பிரிக்கவே செய்துள்ளீர்கள்.

இந்து மதத்தில், ராமர் மரியாதை புருஷோத்தம் என்று போற்றப்படுகிறார் அதாவது சிறந்த மற்றும் மிகவும் நேர்மையான மனிதர் என்ற போற்றப்படுகிறார். பிரான் பிரதிஷ்டையின் போது ராமர் பெயரில் நடப்பதை அவர் எப்படி பார்ப்பார்?

ராமரின் சிலையை மட்டும் கொண்டு வராமல், அவரது நேர்மை, இலட்சியங்கள், நீதி, தியாகம், அவரது வீட்டுப்பற்று மற்றும் மக்கள் மீதான அன்பு ஆகியவற்றை சேர்த்தே கொண்டுவர வேண்டியுள்ளது. ராமரை அழைத்து வருவது என்பது அவரது போதனைகளை தழுவுவதாகும். ராமாயணத்தில், இலங்கை தங்கத்தால் ஆன செல்வச் செழிப்புமிக்க நகரமாக இருந்தாலும், போர் வெற்றிக்குப் பிறகு விபீஷணன் கெஞ்சியபோதும், ராமர் விஜயம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார். 

அவர், "இலங்கை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டாலும், அது என் மனதை பறிக்கவில்லை. அயோத்திதான் நான் பிறந்த இடம், என் மனம் உண்மையாகவே அங்குதான் உள்ளது, அங்குதான் நான் திரும்ப விரும்புகின்றேன்." என்றே கூறியுள்ளார்.

அவர் பிறந்த அயோத்தியை எல்லா செல்வங்களுக்கும் மேலாக மதிப்பவர். ராமரின் போதனைகளை நாம் கற்றுக் கொள்ளத் தவறினால், அவரை அயோத்திக்கு அழைத்து வருவது அர்த்தமற்றதாகிவிடும். ஒருவரின் நல்லெண்ணத்தையும் அல்லது நற்குணத்தையும் ஒப்பிடும்போது ராஜ்யம் எல்லாம் ஒன்றுமேயில்லை என்ற அவரது போதனைகளை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த போதனைகள் போதிக்கப்படாவிட்டால், நமது கோவில்களால் எந்த பயனும் இல்லை.

எனக்கு புரிகிறது. சங்கராச்சாரியார் ஜி, அயோத்தியில் கோவில் கட்டப்பட்டு வருகிறது. காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகளுக்குப் பதிலாக இதுபோன்ற கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஆம், நான் அந்த கருத்தை ஆதரிக்கிறேன். நாங்கள் ஒரு தேசத்தில் வாழ்கிறோம், எந்தவொரு மோதலுக்குரிய விசயங்குளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். சில இடங்களில், பல்வேறு காரணங்களுக்காகப் சர்ச்சை நிலவுகிறது, ஆனால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். 

சமய ஸ்தலங்கள் தங்களது பூர்வீகக் குடிகளிடமே ஒப்படைக்கப்படுவதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்பதால் இரு மதங்களுக்கிடையில் எந்தப் பகைமையும் இருக்கப்போவதில்லை. 1950-களில் ராம ராஜ்ய பரிஷத் கட்சிக்காக, தரம் சாம்ராட் வெளியிட்ட அறிக்கையின்படி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், முதலில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அதாவது இந்துக்கள் கைப்பற்றிய அனைத்து இடங்களும் அவர்களின் அசல் குடிமக்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுவதை உறுதி செய்வதாகக் கூறப்பட்டது.

காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகளுக்குப் பதிலாக இந்துக் கோயிலை நிர்மானிப்பது அவசியமானது, முக்கியமானது என்று சொல்ல வருவதாக நான் புரிந்து கொள்கிறேன்; அது மட்டும் நடக்க வேண்டுமா. இல்லை, நாம் இன்னும் மேலே சென்று கோவில்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதிகளை அடையாளம் கண்டு, அவற்றையும் இடிப்பதா? அல்லது காசி, மதுராவுக்குப் பிறகு இவையனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படுமா?

நாங்கள் முன்னெடுத்துள்ள விவாதத்தின் மூலம் மட்டுமே இது நம்மை எங்கு இட்டுச் செல்லும் என்பதை தீர்மானிக்க முடியும். உச்ச நீதிமன்றம் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்துக்களும் முஸ்லிம்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம், சண்டையிடுவது ஒரு தீர்விற்கு வழிவகுக்காது என்பதை முஸ்லிம் மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் எங்களுக்கு நல்லதே நடந்தது.

நீதிமன்றம் தனது முடிவை அறிவிப்பதற்கு முன், நாங்கள் முஸ்லிம்களுடன் (சன்னி மத்திய வாரியம்) சமரசம் செய்துகொண்டோம், அங்கு அவர்கள் பாபர் மசூதி மீதான எந்தவொரு உரிமைகோரலையும் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார்கள். இந்த உடன்படிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பல பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்திய, இந்த சமரசம்கூட பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்டதே.

பகைமையை நாம் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே போனால், ஒரு சில தனிநபர்கள் மட்டுமே தங்கள் வெறியை தீர்த்துக் கொள்ள முடியும், மாறாக மற்ற எல்லோரும் பாதிக்கப்படுவர். நாட்டின் நீண்டகால நல்வாழ்வை கணக்கில் கொண்டு இந்த மோதல்களை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர அறிவார்ந்த முஸ்லிம்களும் முன்வர வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

சங்கராச்சார்யா ஜி, இந்த பேட்டியை பாஜக தலைவர்கள், பாஜக அமைச்சர்கள் மற்றும் ஒருவேளை பிரதமரும் பார்க்கலாம். ராமர் கோவில் விவகாரத்தில் நீங்களும் மற்ற சங்கராச்சாரியாரும் அரசியலை புகுத்துகிறீர்கள் என்று பாஜக கூறுகிறது, மேலும் உங்களைப் பற்றிய போலியான கூற்றுகள் இணையத்தில் பரவி வருகின்றன. அஜ்மீர் ஷெரீப் தர்காவிற்கு பொன்னாடை போர்த்துவதற்கு நீங்கள் சென்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பாஜகவின் இதுபோன்ற அனுகுமுறையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

இந்து மதத்தின் நான்கு பெரிய மதகுருமார்களில் ஒருவராக, ஒரு சங்கராச்சாரியாராக இருக்கும் நீங்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறீர்கள் என்று அரசாங்கம் கூறுவதைப் பற்றியும் இணையத்தில் உங்களைப் பற்றிய பொய்யானத் தகவல்கள் பரப்பப்படுவது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உண்மை என்னவெனில், இப்போதுவரை என்னால் அஜ்மீர் நகருக்குச் செல்ல முடியவில்லை. அஜ்மீர் நகருக்கே போகாத நான் எப்படி அங்குள்ள ஷெரீப் தர்காவிற்கு சென்றிருக்க முடியும்? நான் ராஜஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன், அவ்வகையில் நான் அஜ்மீர் நகருக்கும் செல்வேன், இருந்தபோதிலும், இப்போது வரை என்னால் அங்கு செல்ல முடியவில்லை, இதனால் தர்காவிற்கும் செல்ல முடியவில்லை. நான் ஏதாவது ஒரு காரணத்திற்காக தர்காவுக்குச் சென்றாலும், நான் முஸ்லிமாக மாற மாட்டேன். நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டேன். நான் ஏன் சென்றேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சங்கராச்சாரியார்களை விட மகாப்பெரிய இந்துவாக நமது பிரதமரை மக்கள் கருதுகின்றனர். பகவான் விஷ்ணுதான் நமது பிரதமர் என்று சம்பத் ராய்கூட கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட பிரதமர் தர்காக்களுக்கு செல்லவில்லையா?

அவருடைய காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பல்வேறு தர்காக்களுக்கு பொன்னாடைகளை அனுப்புவதோடு, போர்த்தவும் செய்துள்ளார். அப்படி இருக்கையில் நரேந்திர மோடி ஜி முஸ்லிமாகி விட்டாரா? நீங்கள் அப்படி சொல்ல முடியாது தானே. 

அதேபோல, சங்கராச்சாரியார் சில இடங்களுக்குச் சென்றால், அவர் மீது இவ்வளவு விரைவாக ஒரு குற்றச்சாட்டு வைப்பதென்பது, அவரது மதிப்பை களங்கப்படுத்துவதற்கான வழியாகவே இருக்கும். ராம்தேவ் பீர் என்ற ஒரு துறவியை மட்டுமே எனக்குத் தெரியும். அவரது பக்தரான அரவிந்த், ராமர் சேதுவைப் பாதுகாக்கும் எங்கள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எங்களைக் காண வந்தார். பின்னர் அவர் பீரின் சமாதி அமைந்துள்ள அவரது ஆசிரமத்திற்கு எங்களை அழைத்தார். நான், பூரி சங்கராச்சாரியார் மற்றும் மற்றொரு மதிப்பிற்குரிய மதகுரு ஒருவருடன் ஆசிரமத்திற்குச் சென்றோம். இவை தொடர்பான படங்களே பரப்பப்பட்டு வருகின்றன.

நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளர் என்று பா.ஜ.க. கூறுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஆதாரமற்ற கூற்றுக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். உண்மைக்கு ஆதாரம் தேவை. நான் எப்போதாவது காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்ததாகவோ, அவர்கள் தரப்பில் இருந்து தேர்தலில் போட்டியிட்டதாகவோ அல்லது கட்சிக்காக பிரச்சாரம் செய்தததாகவோ ஏதேனும் ஆதாரம் இருந்தால் எனக்கு காட்டுங்கள். இவ்வாறு பேசுபவர்கள் பாஜகவோ அல்லது காங்கிரஸோ அல்ல, அவர்கள் வெறும் சந்தர்ப்பவாதிகள் என்பதுதான் உண்மை.

ஒரு நிகழ்வை நினைவூட்டுகிறேன், சந்தர்ப்பவாதிகள் என் குருஜியை காங்கிரஸ் ஆதரவாளர் என்று சொன்னார்கள்; உண்மையில் அப்போது அவர்கள்தான் காங்கிரஸ்காரர்களாக இருந்தனர். 1992ல் நரசிம்ம ராவை பிரதமராக்க விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது. பூட்டா சிங் உள்துறை அமைச்சராக இருந்தார், தாவூத் தியால் காங்கிரஸிலிருந்து விலகி விஎச்பியில் சேர்ந்தார், அங்கு அவர்கள் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே பிரச்சனையைத் தூண்டினர்.

நிச்சயமாக, நீங்கள் அந்த நிகழ்வுகளைப் பார்வையிட்டு செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். எனது குருஜி அந்த நடவடிக்கைகளை எதிர்த்தபோது, காங்கிரஸ் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டார். காங்கிரஸுடன் கைகோர்த்துக்கொண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் செல்லாத வகையில் அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்று காசியிலும், மதுராவிலும் உள்ள கோவில்களை உதாரணம் காட்டினார். இது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும், வேறு யாரும் செய்யாதபோது அவர் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மத விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று பாஜக கூறுவதால் யாரும் நீதிமன்றம் செல்லவில்லை, ஆனால் அவர் நீதிமன்றம் செல்வதை ஊக்குவித்து வெற்றி பெற்றார். நாங்கள் அவர்களை கோவில் கட்ட அனுமதிக்கிறோம், ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் வேதத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நம் மதத்தில் இந்தளவிற்குச் சொல்வதற்குக்கூட நமக்கு உரிமை இல்லையா?

சங்கராச்சாரியார் ஜி, இந்த நேர்காணல் மூலம், பார்வையாளர்கள் உங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெளிவாக புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு இந்துவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய இந்தத் தருணம், சங்கராச்சாரியார்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் தருணமாக அமைந்துவிட்டது. இந்த தருணம் உங்களுக்கு மகிழ்ச்சியை விட வருத்தமானதாகவே இருக்கிறது இல்லையா…

எங்களுக்கு மட்டுமல்ல, அரசியலை விட மதத்தை முதன்மைப்படுத்தும் எங்களைப் போன்ற பல ஆன்மீக இந்துக்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். பாஜகவில் மிஸ்டு கால் மூலம் 10-15 கோடி மக்களை திரட்டியதாக பாஜக தலைவர் அமித் ஷா ஜி குறிப்பிட்டுள்ளார், இவர்களோடு ஆர்எஸ்எஸ்-ல் உள்ளவர்களையும் சேர்த்தால் 22 கோடியாகிவிடும். 100 கோடி இந்துக்களில், 25-30 கோடி வரையிலான சிறு அளவிலான இந்துக்களே இவர்களின் அரசியல் பக்கம் நிற்கிறார்கள். 25 கோடி பேர் இவர்களை ஆதரித்தாலும், மீதமுள்ள 75 கோடி பேர் தங்கள் மத நம்பிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி, அரசியல் சாக்கடைகளிலிருந்து விலகி இருக்கிறார்கள். இந்த பெரும்பான்மையான ஆன்மீக இந்துக்களே அதிருப்தியில் உள்ளனர். ஏனெனில் அவர்கள் இந்து வேத சாஸ்திரங்களை ஆழமாக மதிக்கிறார்கள்.

அரசியல்மயமான, அரசியல் ஆதாயம் தேடும் இந்துக்கள்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; ஆன்மீக இந்துக்கள் மகிழ்ச்சியடையவில்லை, ஏனென்றால் பிரதமர் ஒரு முடிவுக்கு வர வேண்டும், கும்பாவிஷேகத்திற்கான தேதியை பிறிதொரு நாளுக்கு மாற்ற வேண்டும். அவ்வகையில் வேதங்களின்படி கோயிலை கட்டி முடிக்கவும், அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யவும் முடியும்.

பிரதமருக்கு உங்கள் செய்தி இதுதானா?



இதையே மோடி எதிர்ப்பாக யாராவது சித்தரித்தால் அது உண்மையல்ல என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் தேடுவது புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் பிரதமரைத்தான். உங்கள் பேச்சாற்றல், வேதங்களைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சர்வாதிகாரப் போக்கைத் தவிர்க்கும் தலைமைத்துவ பாணி ஆகியவையே உங்களை உண்மையில் பாராட்டத்தக்க தலைவராக மாற்றும்.

வாரணாசியில், முக்கியமான பழங்கால கோவில்கள் அழிக்கப்பட்டபோது, அதற்கு காரணமானவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட ஒரு துறவி முன்வந்தார். கோவில்களை இடித்ததாகக் கூறப்படும் ஔரங்கசீப் மீதான நமது வெறுப்பு இப்போது இந்தக்  கேள்வியை எழுப்புகிறது: இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நம்மில் ஒருவரை நாம் ஏன் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும்?

நீங்கள் காசி வழித்தடத்தைக் குறிப்பிடுகிறீர்களா?

காசி வழித்தடம் அமைக்கப்படும் போது, கோவில்களும், சிலைகளும் சேதப்படுத்தப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம், மேலும் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம். இருப்பினும், நாட்டில் உள்ள ஒவ்வொரு தந்தையும் தனது மகனை தவறுகளுக்காக திட்டுவதால், நான் மோடிக்கு முற்றிலும் எதிரானவன் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டால் எல்லாம் சரியாகும். எங்கள் எதிர்ப்பு குறிப்பாக உங்கள் தவறுகளை நோக்கியே உள்ளது.

சங்கராச்சார்யார் ஜி, பிரான் பிரதிஷ்டை நிகழ்வை ஒத்திவைப்பதை முன்னிறுத்தி, திரு. மோடியை உங்கள் மகனாகக் கருதி நீங்கள் ஆலோசனை வழங்குவது போல் தெரிகிறது. தற்போதைய நேரம் அல்லது நாள் சிறப்பாக இல்லாததால் இவ்வாறு சொல்கிறீர்களா? கோவில் கட்டி முடிக்கப்படும் வரை காத்திருந்து, சாஸ்திரப்படி விழா நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறீர்களா? இப்போதைக்கு கும்பாபிஷேகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நீங்கள் அறிவுறுத்த விரும்புகிறீர்களா?

நிச்சயமாக, இந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம், வேதவசனங்களுக்கு உண்மையாக இருப்பதற்காக மக்கள் உங்களை இன்னும் அதிகமாகப் பாராட்டுவார்கள், எந்தவொரு சங்கடத்திலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவார்கள்.

சங்கராச்சாரியார் ஜி, இந்த நேர்காணலுக்கு மனமார்ந்த நன்றி.

எனது கருத்துக்களை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

- விஜயன் (தமிழில்)

Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு