141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?

100 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ‘ஒட்டுமொத்தமாக களையெடுக்கும் நடவடிக்கை’ இது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். - சாரா ஷமிம்

141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?

டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குளறுபடி குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரியிருந்த நிலையில்,செவ்வாயன்று, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி நாற்பத்தொன்பது இந்திய எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியாதவாறு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.   

78 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எஞ்சியுள்ள முக்கியமான குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாதவாறு இடைக்கால தடை விதித்து ஏற்கனேவ அரசாங்கம் இடைநீக்கம் செய்திருந்ததைத் தொடர்ந்தே செவ்வாயன்று கூடுதலாக இடை நீக்கத்திற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 14 முதல், மொத்தம் 141 எம்.பி.க்கள்—மக்களவையில் 95 பேர் மற்றும் மாநிலங்களவையில் 46 பேர்—இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 இது "ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்" என்று அரசாங்கத்தின் இடைநீக்க நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஏனெனில் எந்தவொரு விவாதமும் இன்றி முக்கியமான சட்டங்களையெல்லாம் நிறைவேற்றிவிட முடியும். இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே குழிதோண்டி புதைக்கும் செயல் என்று விமர்சித்துள்ளனர். 

 டிசம்பர் 13 அன்று பார்வையாளர்கள் கேலரியில் இருந்து இரண்டு நபர்கள் மக்களவை அறைக்குள் நுழைந்து எரிவாயு குப்பிகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது, நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பினர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) எம்.பி. ஒருவரால் அவர்களுக்கு பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. 

 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் X சமூக ஊடகத்தில் (முன்னாள் ட்விட்டர்) இவ்வாறு பதிவிட்டிருந்தார், “ அர்த்தமுள்ள விவாதம் இல்லாமல் கொடூரமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகவே எதிர்க்கட்சி எம்.பி.க்களை வேண்டுமென்றே வெளியேற்றும் நோக்கில் இடைநீக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம், டிசம்பர் 13 ஆம் தேதி மக்களவைக்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைவதற்கு வழிவகுத்த பாஜக எம்.பி.யை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது”. 

 இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் விவாதம் நடத்தியாக வேண்டும் என்று போராடியதற்கு கண்டனம் தெரிவித்தார்.  

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் இங்கே. 

 இந்தியாவில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன்? 

 அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்களால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எம்.பி.க்கள் விவாதம் நடத்தக் கோரியதோடு, அறிக்கையை சமர்ப்பிக்க கோரியதைத் தொடர்ந்தே இந்த இடைநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே ஒரு ஆணும் பெண்ணும் புகைக் குப்பிகளை வீசிய நிலையில், இருவர் மக்களவைக்குள் நுழைந்து புகைக் குப்பிகளை வீசியுள்ளனர்.  

அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்றம் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. 

 மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு விவகாரம் என்பது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை விதிகளை மீறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் விசாரணை நடத்தி வருகிறது. 

 இந்த இடைநீக்கம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கல்வியாளரும் எழுத்தாளருமான அபூர்வானந்த், அல் ஜசீராவிடம், "எம்.பி.க்களுக்கு விளக்கங்களைக் கோருவதற்கும், நாடாளுமன்றத்திற்குள் அரசாங்கத்தின் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும் முழு உரிமை உள்ளது" என்று கூறினார். 

 நாடாளுமன்றத்தின் சுமூகமான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் சீர்குலைவு நடவடிக்கையே இடைநீக்கம் செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என அரசாங்கம் தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது என்று அவர் விளக்கினார். 

 எதிர்க்கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இல்லாமலேயே, தற்போதைய குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக சர்ச்சைக்குரிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

 கல்வியாளர் அபூர்வானந்தின் கூற்றுப்படி, எதிர்க்கட்சிகளுடனான விவாத்திற்கு பிரதமர் தயக்கம் காட்டுவதென்பது ஜனநாயகத்தை குழிதோண்டு புதைக்கும் செயலாகவே பார்க்கப்படும்; ஏனெனில் "பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினருக்கு இடையிலான உரையாடலை" என்ற அச்சாணியை சார்ந்தே ஜனநாயகம் இயங்கி வருகிறது. 

 இந்த இடைநீக்கம் நடவடிக்கைக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? 

 இந்த இடைநீக்க உத்தரவு நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத நிலை உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளது. இதுபோன்ற பெருமளவிலான இடைநீக்கம் செய்யப்படுவதென்பது முன்னெப்போதும் நிகழாத ஒன்றாகும். இந்த நிலை மோடியின் சர்வாதிகார ஆட்சி முறைக்கு ஒத்துப்போகும் வகையில் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

 தற்போதைய அரசாங்கம் புலனாய்வு அமைப்புகளையும் ஏனைய நிறுவனங்களையும் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை நியாயமற்ற முறையில் குறிவைப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 “எதிர்க்கட்சிகள் மட்டும்தான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதா?” என்று அபூர்வானந்த் கேள்வி எழுப்பினார். 

 "ED (அமலாக்க இயக்குநரகம்) அல்லது சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) போன்ற புலனாய்வு அமைப்புகள் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கும் பல நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்தாலும், மறுபக்கம் அதே அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்ந்தவுடன், முடுக்கிவிடப்பட்ட விசாரணைகள் திடீரென நிறுத்தப்படுகின்றன." 

 நாடாளுமன்றத்தில் கூர்மையான கேள்விக்கனைகளை தொடுப்பவர் என்று பெயர் பெற்ற கலகக்கார எதிர்க்கட்சி எம்.பி.யான, மஹுவா மொய்த்ரா, முறைமீறல் காரணமாக வெளியேற்றப்பட்டார். தன்னை நீக்கியதற்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும், அதை எதிர்த்து நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுகியதாகவும் அவர் கூறுகிறார். 

 பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டதால், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும், ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் இந்தத் தண்டனையை ரத்துசெய்ததோடு, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்டது. 

 எதிர்க்கட்சியினர் ஊழல்வாதிகள் என்றும் பதவி வெறி கொண்டவர்கள் என்று கூறிவதன் மூலம் ஆளும் கட்சியினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் நியாயபடுத்தி வருகின்றனர். 

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், நாடாளுமன்றம் எவ்வாறு இயங்கும்? 

 ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அமோகமான பெரும்பான்மையுடன் திகழ்வதால் குறைந்தபட்சமாக இருக்க வேண்டிய 10 சதவீத உறுப்பினர்கள் எண்ணிக்கையின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டாலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர முடியும். 

 பொதுவாக நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்ட முன்வரைவும் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பு விவாதத்திற்கு உட்படுத்தப்படும் என்றிருந்த நிலையில், எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. 

 "எதிர்க்கும் அனைத்து குரல்களையும் நசுக்குவதற்கு எண்ணிக்கை அளவிலான பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது" என்று கல்வியாளர் அபூர்வந்த் குறிப்பிட்டார். 

 இந்திய அரசாங்கம் அளிக்கும் விளக்கம் என்ன? 

 இந்தி மொழிப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலின் தீவிரத்தை ஒப்புக்கொண்ட மோடி, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எவ்வாறாயினும், “இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 எதிர்க்கட்சியினர் அளிக்கும் விளக்கம் என்ன? 

 இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இது "ஜனநாயகப் படுகொலை என்றும் பாராளுமன்றத்தின் கன்னியத்தை அவமதிக்கும் செயல்" என்றும் கண்டித்து அவர்கள் தொடர்ந்து அமைதிவழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்தத் தகவலை X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். 

 கார்கே X ஊடகத்தில் இவ்வாறு கூறினார், "முதலில், ஊடுருவல்காரர்கள் நாடாளுமன்றத்தைத் தாக்கினர். இப்போது, மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் தாக்குகிறது." அவர் தொடர்ந்து கூறியதாவது, "எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தில், மோடி அரசாங்கம் இப்போது எவ்வித விவாதமும், மாற்றுக் கருத்துகளும் இல்லாமல் நிலுவையில் உள்ள முக்கியமான சட்டங்களை நிறைவேற்றிட முடியும்." 

 மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, இடைநீக்கம் செய்யப்பட்டதை தான் கவுரவச் சின்னமாக கருதுவதாக கூறி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். "எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்கியதற்காக மோடி’ஜிக்கு வாழ்த்துக்கள்" என்று கிண்டலாக கூறியிருந்தார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2023/12/19/why-141-india-opposition-mps-suspended-from-parliament

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு