கவிதை: லெனின் என்பது பெயர் மட்டுமல்ல

துரை. சண்முகம்

கவிதை: லெனின் என்பது பெயர் மட்டுமல்ல

தோழர் லெனின் நினைவு நாள்!
   ஜனவரி- 21.

பூ என்பது
வண்ணம் மட்டுமல்ல
வாசத்தோடும் 
பொருள் கொண்டது.

நதி என்பது
நீர் மட்டுமல்ல
பல்லுயிரோடும்
உறவானது.

லெனின் என்பது
பெயர் மட்டுமல்ல
பாட்டாளி வர்க்க
விடுதலையின்
உயிரோட்டமானது!

உழைக்கும் வர்க்க 
நிலைமைகளை 
நினைவூட்டுவது!

அரபு நாட்டில் 
அநாதையாக மாட்டிக்கொண்ட
 தமிழக பணிப்பெண்ணின்
 இதயம்
“அம்மா” என 
அலறுகிறது!
தமிழ்நாட்டில் 
பாய்லர் வெடித்து அலறும்
 வடநாட்டு தொழிலாளியின்
 இதயம்
அவன்
தாய்மொழியில் 
கருகுகிறது.

செங்கல் சூளைக்கு 
கொத்தடிமையாக்கப்பட்ட
குடும்பத்தின் ரத்தம்
அந்தச் செங்கல்லில் உறைந்திருக்கிறது;

சூப்பர் மார்க்கெட் வாசலில்
 காவலாளியாக நிற்கும் 
கூலி விவசாயியின் பாதங்களில்
நிலம் வெடித்திருக்கிறது!

கோடிகளில் புரளும் 
கரைவேட்டி
முதலாளியின் 
புதிய முதலீடுகளில்;
கனவுகள் சுண்டிய 
பொறியியல் பட்டதாரி
 ‘பிரெஷ்ஷர்களின்’ இதயம்
எலுமிச்சை பழங்களாய் 
காவு வாங்கப்பட்டுக் 
கிடக்கிறது!

வேலையின்மை 
உரிய கூலியின்மை 
பணிப் பாதுகாப்பின்மை
இளைஞர்களின் கண்களில்
 எரியும்
வெறுப்பின் புகை
பாராளுமன்றம் வரை
 பரவுகிறது!

பாலஸ்தீனத்துக்கு பீரங்கி
காஷ்மீருக்கு அரசியல் சட்டம்.

உக்ரைனுக்கு எறிகனை
மணிப்பூருக்கு அரசாணை!

ராமனுக்கு கோயில்
மூலதனத்துக்கு 
மூலை முடுக்கெல்லாம்
 நுழைவாயில்!

தேச வளர்ச்சி!
அனைவருக்குமான வளர்ச்சி!
நாட்டின் முன்னேற்றம்..
எனும்,
 
நாடகத் திரைகளுக்கு
 பின்னால்,
நாடு முழுக்க
உழைக்கும் மக்களின்
உதிரம் துடிக்கிறது!

இனி 
வேறு என்னதான் வழி?
எனின்..
வழக்கமான பாதையை
 அனுமதிக்காத

அந்த வழிதான் 
லெனின்!

       • துரை. சண்முகம்.

https://www.facebook.com/share/17naci8pWC/