கவிதை: தோழர் ஏங்கல்ஸ் நினைவை நெஞ்சில் பதிப்போம்!

ரண தீபன்

கவிதை: தோழர் ஏங்கல்ஸ் நினைவை நெஞ்சில் பதிப்போம்!

அவனது பெயரை ஒவ்வொரு தொழிலாளியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்!

பத்தொன்பதாம் நூற்றாண்டு
பொதுவுடமை கருவை சுமக்க
இரு இளைஞர்களை 
தகுதிபடுத்தியது!
உடல்கள் இரண்டாகவும்
உணர்வுகள் ஒன்றாகவும்
சிந்தித்து வளர்ந்த இருவரில்
இரண்டாமவன் இவன்!

அவன் தாங்கிய சுமை
அத்தனை கனமானது
ஆனால் அது
அவனுக்கு சுகமானது!

தனது மற்றொரு பிரதியென
மார்க்ஸ் கூறியதை
வரலாறு அவனை மார்க்ஸாக்கி
அவனது மரணம் வரை 
மெய்பித்தது!

ஆலை முதலாளியின் மகனாக பிறந்து
உலக பாட்டாளி வர்க்கத்தின்
தலைவனாக ஔிபாய்ச்சிய
தத்துவச் சுடர்!
தியாக பெருநெருப்பு அவன்!

ஜென்னி இறந்ததும் மார்க்ஸ்
இறந்துவிட்டதாக கூறிய
அவன்தான்
மார்க்சின் இறப்பிற்கு பிறகு
மார்க்சாக உயிர்வாழ்ந்தான்!

அவனின்றி மார்க்சையோ
மார்க்சின்றி அவனையோ
எழுதுவதற்கு வரலாற்றில்
வார்த்தைகள் இல்லை!

தன் ஆருயிர் நண்பன்
மார்க்சின் குடும்பத்திற்காக
இருபதாண்டுகள் உழைத்தான்
என்று உரைப்பதை விட
மார்க்சியம் செழிக்க
தன்னை ஒப்புவித்துக்கொண்டான்
என்று கூறுதலே தகும்!

முலதனம் முதல் தொகுப்போடு
மார்க்ஸ் தன் மூச்சை முடித்துக் கொள்ள
மொத்த சுமையெல்லாம்
அவனது முதுகிலும் மூளையிலும் ஏறிக்கொண்டது!
மூலதனம் இரண்டையும் மூன்றையும்
மார்க்சின் பெயரால்
செப்பனிட்டு செதுக்கித் தந்தான்!

இடையே...

குடும்பம் தனிச்சொத்து அரசு
நூலினை நூற்றப்போதிலும்
மார்க்ஸ் விட்டுச்சென்ற பணியை
செய்து முடிப்பதாக கூறி மகிழ்ந்தான்!

தன் இறுதி மூச்சு 
இவ்வுலகில் உள்ளவரை 
தொழிலாளி வர்க்கத்திற்கு
தோழனாகவும்
அறிவுச்சுடர் விடும் கலங்கரை விளக்கமாகவும் வாழ்ந்து மறைந்து
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்!

மார்க்சுடனான தன் வாழ்வு காலத்தில்
பக்கவாத்தியம் வாசித்ததாக 
மார்க்ஸின் மரணத்தின் போது கூறினான்!
ஆனால் தான் தான் இன்னொருவனாக
இருப்பதாக அவனை பார்த்து 
மார்க்ஸ் கூறியதே 
பொருத்தமான வரையறுப்பாக
நிலைபெற்று நிற்கிறது!

அவனது பெயரை 
ஒவ்வொரு தொழிலாளியும்
தெரிந்து வைத்திருக்க வேண்டுமென
லெனின் கூறியவாறு...
உலக தொழிலாளி வர்க்கம்
அவனது பெயரை தனது 
இதயங்களில் எழுதிவைத்து
என்றென்றும் பூஜிக்கும்!
இங்கே கடைசி மனிதன்
இருக்கும் வரை 
அவனது நினைவு நீண்டிருக்கும்!

தோழர் ஏங்கல்ஸ் நினைவை நெஞ்சில் பதிப்போம்!

- ரண தீபன்