கலைத்துறையில் சிஐஏ வின் ஊடுருவல் குறித்து

இரா. முருகவேள்

கலைத்துறையில் சிஐஏ வின் ஊடுருவல் குறித்து

Hidden hands - A different history of modernism

சில இலக்கியவாதிகளை சி ஐ ஏ உளவாளி என்றும், சி ஐ ஏவிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறார் என்றும், சில கலை இலக்கிய இயக்கங்களையும் போக்குகளையும் சி ஐ ஏ பிரபலப் படுத்துகிறது என்றும் இருக்கும் குற்றச் சாட்டுகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

தமிழில் கூட க நா சு போன்ற எழுத்தாளர்கள் இலக்கிய விமர்சகர்கள் மேல் இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது உண்டு. க நா சு போன்றவர்களும் பொங்கிப் பொங்கி இது அபாண்டம், அநியாயம் என்று இடதுசாரிகளைத் திட்டி எழுதுவது வழக்கம்தான். இதில் எது உண்மை? ஜார்ஜ் ஆர்வெல் போன்றவர்கள் பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு வேலை செய்தது ஆதாரபூர்வமாக முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளியாகி விட்டது. இது ஆர்வெல் போன்ற தனிப்பட்ட ஒருவரின் செயலா? அல்லது ஒரு குறிப்பிட்ட கலை இலக்கிய இயக்கம் முழுவதுமே சி ஐ ஏவால் இயக்கப்பட்டதா? இது ஒரு அரசியல் போக்கா? சதியா? என்பது முழுமையாகத் தெரியாமலேயே இருந்தது.

ஒரு எழுத்தாளர் அல்லது ஓவியர் விரும்பி சி ஐ ஏவுக்கு வேலை செய்தாரா அல்லது இலக்கியவாதிகள், கலைஞர்களைத் திரட்டி சி ஐ ஏ கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் ஏதாவது நடத்தியதா? உண்மையிலேயே பணம் கொடுக்கப்பட்டதா? எப்படி கொடுக்கப்பட்டது? என்ன ஆதாரம்?

காலங்காலமாக ஆட்சியாளர்கள் கலைகளின் மீது செல்வாக்கு செலுத்த வெளிப்படையாக முயன்றே வந்துள்ளனர். சி ஐ ஏவும் இதையே செய்தது என்றால் கலைஞர்களுக்குப் பண உதவி ஏன் ரகசியமாகச் செய்யப்பட்டது? யார் யார் பணம் வாங்கினார்கள்? பணம் கொடுத்தவர்கள் யார்? ஏன் ஒரு குறிப்பிட்ட வகையான ஓவியங்கள் abstract expressionism வகையைச் சேர்ந்தவை சிறப்பானவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டன? குறிப்பிட்ட வகையான நாவல்கள், எழுத்துக்கள் மட்டுமே இலக்கியத்தன்மை வாய்ந்தவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது?

Hidden hands A different history of modernism என்ற ஆவணப்படம் இந்தக் கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்களை அளிக்கிறது. புதிய வெளிச்சங்களைத் தருகிறது. சி ஐ ஏ இலக்கியத்தையும் ஓவியத்தையும் மற்ற கலைகளையும் கம்யூனிசத்துக்கு எதிரான போரில் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. பல இலக்கியவாதிகளும் கலைஞர்களும் எந்த அளவுக்கு சி ஐ ஏவுடன் பின்னிப் பிணைந்து இருந்தனர் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்முன் வைக்கிறது.

அரை நூற்றாண்டுகால மர்மத்துக்கு விடை கண்டுபிடித்து விட்டது இந்தப் படம்.

மிகச் சிக்கலான மண்டையை பிய்த்துக் கொள்ள வைக்கும் கேள்விகளுக்கு பதில் மிக எளிமையானதாக இருந்து விடும். இந்த ஆவணப்படம் கூறும் பதில்களும் அப்படித்தான் இருக்கின்றன. அக்கால உலக அரசியலையும், சி ஐ ஏ அமைப்பின் செயல்பாடுகளையும் அணுவணுவாக ஆராய்கிறது படம். ஒவ்வொரு மர்மமாக விலக்குகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண்கிறது.

வெறும் ஊகங்களாக இல்லாமல் இந்த நடவடிக்கைகளை முன்னால் நின்று நடத்திய உளவுத்துறை அதிகாரிகளின் நேரடிப் பேட்டிகளுடன், ஆவணங்களுடன் விடைகளை முன்வைக்கிறது படம்.

ஆழமாக, அறிவு நுட்பத்துடன், அதே நேரம் ஒரு துப்பறியும் படத்தின் விறுவிறுப்புடன் சொல்கிறது படம்.

1952ஆம் ஆண்டு.

பாரிஸ் நகரில் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கலைவடிவங்கள் (Masterpieces of the twentieth century) என்ற பெயரில் நடந்த ஒரு கண்காட்சியில் அமெரிக்காவில் abstract expressionism அல்லது avant garde வகைப்படுத்தப்பட்ட ஓவியங்களுக்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாணி ஓவியங்கள் நம்மிடையே பொதுவாக மாடர்ன் ஆர்ட் என்று அழைக்கப்படுபவை, மாடர்ன் ஆர்ட் வருவதற்கு முன்பு ஓவியம் என்பது ஒரு புகைப்படம் போல இருப்பதை அப்படியே காட்டுவதாக இருந்தது. இதற்கு மாறாக மாடர்ன் ஆர்ட் மனித முகங்கள், நிகழ்வுகள், உணர்வுகளைக் குறியீடுகளாகக் காட்டுகிறது என்று சொல்லப்பட்டது. உதாரணமாக பழைய பாணி ஓவியங்களில் ஒரு ஜன்னல் என்பது ஜன்னல் மட்டுமே. இந்த நவீன ஓவியங்களில் அது விடுதலையைக் குறிக்கலாம். சிறையைக் குறிக்கலாம். வேறு பலவற்றையும் அதே போல ஜாக்சன் போலாக் போன்றவர்களின் ஓவியங்கள் தரையில் படுக்கப்போடப்பட்டுள்ள கேன்வாசில் பல்வேறு வண்ணக் குழம்புகளின் தீற்றலாக இருக்கும். ஜேக்சன் போலாக் நடனம் போன்ற அசைவுகளுடன் படுவேகமாக வண்ணங்களை கேன்வாஸில் விசிறியடிப்பார். இதைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. புரிந்து கொள்ள எதுவும் இல்லை. இவை பொருளற்றவை இது வெறும் முட்டாள்தனம். பேத்தல் என்ற விமர்சனமும் உண்டு முதல் பார்வைக்கு வெறும் வண்ணக் கலவை போலத் தெரிவது சிக்கலான மன உணர்வுகளைக் குறிப்பதாக இருக்கலாம். கனவைக் குறியீடாகச் சுட்டுவதாக இருக்கலாம் என்ற பார்வையும் உண்டு.

அது வேறு ஏரியா. நாம் அதற்குள் போக வேண்டும்.

ஜாக்சன் போல்லாக் போன்ற புகழ் பெற்ற ஓவியர்களின் இந்த பாணி ஓவியங்கள் இந்த மாடர்ன் ஆர்ட் அரங்கில் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கண்காட்சி நடத்துவதற்கான பெரும் செலவை சி ஐ ஏ ஏற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் இசையமைப்பாளரும் எழுத்தாளருமான நபக்கோவ் தனக்கு பாரிஸ் நகருக்கு பிசினெஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டதும் திகைப்படைந்தார். நபக்கோவ் போல்ஷிவிக் புரட்சியின் போது ரஷ்யாவை விட்டு வெளியேறிய பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர். தீவிரமான ஸ்டாலின் எதிர்ப்பாளர்.

ஆனால் இந்த நிதியுதவி மிகவும் ரகசியமாகச் செய்யப்பட்டது.

இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1. ஏன் அமெரிக்கா ரகசியமாக நிதியுதவி செய்ய வேண்டும்?

2. இந்த abstract expressionism எனப்படும் ஓவிய முறையை ஏன் கம்யூனிஸ எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு சி ஐ ஏ தேர்ந்தெடுத்தது?

முதல் கேள்விக்கான பதில்.

சோவியத் யூனியனின் புகழ்பெற்ற போல்ஷாய் தியேட்டர், நடனங்கள், கவிதைகள், நாவல்கள் ஐரோப்பா முழுவதும், உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்தன. உலகம் முழுவதும் இருந்த அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் இடதுசாரி அரசியலின் பால் அனுதாபம் கொண்டவர்களாக இருந்தனர். 1949 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உலக அமைதி மாநாடு இடதுசாரி கலைஞர்களால் நடத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.

நார்மன் மெய்லர், ஆர்தர் மில்லர், விலியன் ஹெல்மன், ஆரோன் கப்லேண்ட் போன்ற புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். சோவியத் யூனியன் உலக அமைதிக்காக நிற்கிறது. அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் உலகை ஆளும் வெறி கொண்டுள்ளன என்ற எண்ணம் இந்த நாடுகளிலிருந்த கலைஞர்களிடையே இருந்தது. கலைகளைப் பொறுத்தவரை அமெரிக்கா ஒரு பாலைவனம் என்ற சோவியத் பிரச்சாரம் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதை எதிர் கொள்ள அமெரிக்க அரசு மேலே குறிப்பிட்ட நவீன வகை ஓவியங்களுக்கு உதவியது. ஒரு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் அரசு வெளிப்படையாகத்தான் ஆதரவு தெரிவித்து உதவிகள் செய்தது.

ஆனால் இந்த ஓவியங்கள் அமெரிக்காவில் கடுமையாக வெறுக்கப்பட்டன. இது ஓவியமே அல்ல, கலையே அல்ல என்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த ஓவியர்கள் முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், டிராட்ஸ்கியிஸ்டுகள். பல மக்கள் இயக்கங்களில் பங்கு கொண்டவர்கள். இதுவும் இந்த பாணி ஓவியங்களின் மேல் வலதுசாரிகளிடையே கடும் பகைமையை ஏற்படுத்தியது.

மாடர்ன் ஆர்ட்டுக்கு பின்னால் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை குடியரசுத் தலைவர் ட்ரூமன் முன்வைத்தார். இது ஆர்ட் என்றால் நான் ஹாட்டெண்டாட் இனத்தைச் சேர்ந்தவன் (Hottentot - ஒரு ஆப்பிரிக்க நாடோடி இனம்) என்றார் அவர்.

அமெரிக்காவில் ஓர் உயர் மட்டக் கமிட்டி அமைத்து இந்த நவீன ஓவியர்களைக் கேள்வி கேட்டுத் துளைத்தனர். ஓர் ஒவியர் வரைந்த நங்கூரத்தை கத்தியும் அருவாளும் என்று குற்றம் சாட்டியது செனட் கமிட்டி மாடர்ன் ஓவியர்கள் தங்களையறியாமல் கம்யூனிஸ்டுகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று கூட கண்டுபிடிப்புகள் வைக்கப்பட்டன.

கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல்களை லைஃப் போன்ற பெரிய பத்திரிக்கைகள் வெளியிட்டன. கம்யூனிசம், ஷோஷலிசம் என்ற பெயர்களுடன் ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஒவ்வொருவரும் பொது சமூகத்தாலும், அரசாலும் வேட்டையாடப்பட்டனர். அமெரிக்க அரசு ஆதரித்த நவீன ஓவியர்கள் இடதுசாரி அரசியலில் இருந்து எப்போதோ விலகிச் சென்றவர்கள் என்றாலும் இந்த முத்திரையின் காரணமாகவும், ஓவியங்கள் புரியாததாலும் இதில் ஏதோ சதி இருக்கிறது என்ற கருத்து பரவி ஏற்பட்ட கடும் எதிர்ப்பினால் அரசு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த ஓவியங்கள் மிக மிக அற்ப விலைக்கே ஏலம் விடப்பட்டன.

இந்த சூழலில் காரணமாக abstract expressionism, avant garde என்றெல்லாம் அழைக்கப்பட்ட நவீன பாணி ஓவியக் கண்காட்சிக்கு வெளிப்படையாக நிதியுதவி செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே சி ஐ ஏ பின்னால் நின்று கொண்டு இந்த ஓவியக் கண்காட்சிகளை வழி நடத்தியது.ரகசியமாக விமர்சகர்களைத் தூண்டி இந்த ஓவியங்கள் பற்றி நல்ல விமர்சனங்களை வெளியிட்டு தனக்கு ஆதரவான பெரும் பணக்காரர்களை இந்த ஓவியங்களை வாங்க வைத்து இவற்றுக்கு சந்தையை ஏற்படுத்தியது. சி ஐ ஏ என்றாலே ரகசியம்தான், மர்மம்தான் என்பதற்கு மாறாக ஒரு தேவையின் காரணமாகவே கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை ரகசியமாக நடத்த வேண்டிய தேவை அமெரிக்க அரசுக்கும், சி ஐ ஏவுக்கும் ஏற்பட்டது என்று அழகாக விளக்குகிறது படம்.

இரண்டாவது கேள்வி

ஏன் இந்த avant garde பாணி ஓவியங்களை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு சி ஐ ஏ தேர்ந்தெடுத்தது என்பது. இதற்கான பதிலை டாம் பிரடன் இந்த ஆவணப்படத்துக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார். டாம் பிரடன் வேறு யாரும் இல்லை. அந்தக் காலத்தில் சி ஐ ஏவின் கலை இலக்கிய பிரிவின் இயக்குநராக இருந்து இந்த நடவடிக்கைகளை வழி நடத்தியவர்.

சோவியத் யூனியன் மற்றும் இடதுசாரிகளின் கலை இலக்கியப் பார்வையில் சமூகமே பிரதானமானதாக இருந்தது. தனி மனிதர்களின் வெற்றி தோல்வி செல்வம் வறுமை அறிவு அறிவின்மை போன்றவை சமூகத்தின் தாக்கத்தினாலே முடிவு செய்யப்படுகின்றன. எனவே தனிமனித வாழ்க்கையோடு சமூக சூழலையும், வரலாற்றுப் பின்னணியையும் பிரதிபலிப்பதே சிறந்த கலை வடிவம் என்று கருதப்பட்டது. இது நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் நம்பிக்கையுடன் அணுகியது.

ஒரு வீரம் மிகுந்த அறிவு மிகுந்த தனிநபர் ஜனாதிபதி, மருத்துவர் போன்றவர் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவார், எல்லோரையும் காப்பாற்றிவிடுவார் என்று நம்ப வைப்பது முதலாளித்துவ கலை.

இதே போல கொரோனா, பஞ்சம், போர், அரசு அடக்குமுறை போன்றவற்றை விட தனி மனிதர்களின் உணர்வுகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பது அமெரிக்க வறுமைக்கு காரணம் அநீதியான அரசாலும் சிஐஏவாலும் விரும்பப்பட்டது. சமூக அமைப்பு என்பதை பதிவு செய்வதைவிட வறுமையால் ஏற்படும் துயரம், வெறுமை, தனிமை ஆகியவற்றை மட்டும் தனிநபர் விஷயமாக எழுதுவதும், வரைவதும் வரவேற்கப்பட்டது. இதற்கான வாய்ப்பை மாடர்ன் ஆர்ட் வழங்கியது.

மாடர்ன் ஆர்ட் புத்தம் புதிதாக இருந்தது, படைப்பூக்கம் மிக்கதாக இருந்தது. தனி மனிதத் தன்மை கொண்டதாக இருந்தது. இதன் காரணமாகவே சி ஐ ஏ மாடர்ன் ஆர்ட்டை நோக்கி ஈர்க்கப்பட்டது என்று சி ஐ ஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜேம்ஸ் பாண்ட் தனிமனிதராக நின்று நாட்டைக் காப்பாற்றுகிறார். இதே போல மாடர்ன் ஆர்ட் தனி மனிதர்களின் குரலைக் கொண்டாடுவதாகும். இது போன்ற ஒற்றைத் தனிமனிதர்களின் குரலைக் காப்பாற்றுவதுதான் அமெரிக்க கருத்து சுதந்திரம் ஆகும்.

மிக நுட்பமான முறையில் இந்த பதில்களை சம்பந்தப் பட்டவர்களின் குரலிலேயே சொல்ல வைத்து சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது படம்.

படம் சொல்லும் காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் இருந்தன என்று பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஓவியர்கள் முன்னாள் இடதுசாரிகள் என்பதால் இவர்களைக் கொண்டு இடதுசாரி வட்டங்களுக்குள் ஊடுருவுவது சாத்தியம் என்று சி ஐ ஏ கருதியது. இடதுசாரி கலை இலக்கியம் என்ற போர்வையில் இடதுசாரி எதிர்ப்பு கலை இலக்கியங்களை கொண்டு சேர்த்து விடுவது என்ற உத்தி பயன்படுத்தப்பட்டது என்பது போன்ற கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படத்தின் இயக்குனரான பிரன்சிஸ் ஸ்டோனர் சாண்டர்ஸ் திட்டவட்டமான ஆதாரங்கள் உள்ள விஷயங்களுடன் நின்று கொள்கிறார்.

ஊகங்கள் படத்தில் உறுதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்த மாடர்ன் ஆர்ட்டை பிரபலப் படுத்தவும் அதற்கு சந்தையை உருவாக்கவும் பணக்காரர்கள், பவுண்டேஷன்கள், மியுசிய டைரக்டர்கள், விமர்சகர்கள், ஆகியோரை நாடியது சி ஐ ஏ.

மியுசியம் ஆப் மாடர்ன் ஆர்ட் அமெரிக்க நவீன ஓவியக் கலையை அரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. இந்த மியுசியத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ராக்பெல்லரும் வேறு பல டிரஸ்டிகளும், சேர்மன்களும் சி ஐ ஏவுடன் இணைந்து செயல்பட்டனர். இதே போல விட்னி மியுசியம் சி ஐ ஏவுடன் இணைந்து செயலாற்றியது. இந்த மியுசியங்களும் சி ஐ ஏவை போலவே கம்யூனிச எதிர்ப்பு அரசியல் கொண்டவையாக இருந்தன.

சி ஐ ஏ வும், இந்த அருங்காட்சியக அதிபர்களும், பெரும் தொழிலதிபர்களும் இணைந்து செயல்பட்டு பனிப்போர் காலத்தில் கலை இலக்கியப் போக்குகளை கட்டுப்படுத்தினர்.

நெல்சன் ரக்பெல்லர் தனது வங்கி மூலம் மாடர்ன் ஆர்ட்டில் கார்ப்பரேட் வணிகத்தை தொடங்கி வைத்தார். நவீன ஓவியங்களை வாங்கி கண்காட்சியில் வைக்க வருடத்துக்கு ஐந்து லட்சம் டாலர்கள் முதலீடு செய்தார். 13,000 ஓவியங்கள் இப்போது இந்த வங்கியின் கையிருப்பில் உள்ளன. இதன் மூலம் நவீன ஓவியங்களுக்கு நல்ல விலை இருக்கிறது என்ற எண்ணம் நாட்டில் உருவாக்கப்பட்டது. நவீன ஒவியங்களை விற்று வாங்குவது லாபகரமானதாக மாறியது. இப்படித் திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு மாடர்ன் ஆர்ட் பாணி ஓவியக் கலை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

கிளமாண்ட் கீர்ன்பர்க் அமெரிக்காவின் முக்கியமான கலை விமர்சகர். அப்ஸ்ட்ராக்ட் எக்ஷ்பிரஷனிம் எனப்படும் மாடர்ன் ஆர்ட்டுக்கு ஆதரவாக இருந்தவர். முன்னாள் டிராட்ஸ்கியிஸ்ட் இவர் இந்த கலை வடிவத்தை பெரிய அளவுக்குப் பிரபலப்படுத்தியவராவார். நவீன ஓவியரான ஜாக்சன் போலாக்கை அமெரிக்காவின் மிகச் சிறந்த ஓவியர் என்று புகழ்ந்தார் கிரீன்பர்க். இவர் பின்பு சி ஐ ஏ உருவாக்கிய காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் என்ற உலகு தழுவிய அமைப்பின் அமெரிக்கன் கிளையை உருவாக்கினார்.

இவர் சி ஐ ஏவின் விருப்பத்தை அறிந்தே இந்த நவீன ஓவியங்களை பிரபலப் படுத்தும் வேலையில் இறங்கினார் என்று ஆவணப்படத்தில் பல நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல கிரீன் பர்க் தற்செயலாக செய்த ஒன்றை சி ஐ ஏ பயன்படுத்திக் கொண்டது என்ற வாதத்தை வைப்பவர்களுக்கும் படம் இடம் அளிக்கிறது.

ஆனால் கீரீன் பர்க் சி ஐ ஏவின் நோக்கம் அறியாமல் எப்படி அமெரிக்காவில் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பை உருவாக்க முடியும்? முடிவை நம் சிந்தனைக்கே விட்டுவிடுகிறது படம்.

ஐரோப்பாவில் நடந்த பல கலை கண்காட்சிகளில் சி ஐ ஏவின் கரம் இருந்தது என்பது இப்போது வெளியாகி வருகிறது. நிக்கலஸ் நபகோவ் பாரிஸில் நடத்திய இருபதாம் நூற்றாண்டு கலைகளின் கண்காட்சி மிக முக்கியமான ஒன்று. நபக்கோவின் பாரிசுக்கான டிக்கெட் பிசினெஸ் கிளாச் டிக்கெட் சி ஐ ஏவால் வாங்கப்பட்டது என்று நபாக்கோவே கூறுகிறார். எல்லா தலை சிறந்த நவீன ஓவியர்களின் ஓவியங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாடர்ன் ஆர்ட் என்பது மன்னனின் ஆடைகள் போல. இல்லாத ஒரு ஆடை அற்புதமாக இருக்கிறது என்று புகழ் பெற்ற ஒருவர் அடித்துப் பேசினால் எல்லோரும் ஆமாம் அற்புதமாக இருக்கிறது என்று பேசுத் தொடங்கிவிட்டார்கள். இல்லாவிட்டால் தங்களுக்கு அறிவுஜீவி இமேஜ் கிடைக்காது என்று அஞ்சுவார்கள் என்று ஒரு விமர்சகர் ஆவணப்படத்தில் கூறுகிறார்.

கிரீன் பர்க், நபாக்கோவ் போன்றவர்கள் இந்த வேலையை செய்தனர்.

காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அதாவது பண்பாட்டு சுதந்திரத்துக்கான அமைப்பு என்ற கம்யூனிச எதிர்ப்பு அமைப்பை சி ஐ ஏ 1950 ஆம் ஆண்டுவாக்கில் உருவாக்கியது. இதன் முக்கிய பொறுப்பில் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவல்களை எழுதிய ஆர்தர் கோய்ஸ்ட்லர் இருந்தார்.

தொடங்கிய வேகத்தில் இந்த அமைப்பு 35 நாடுகளில் கிளைபரப்பியது. 280 முழு நேர ஊழியர்கள் இந்த அமைப்பில் இருந்தனர். ஏராளமான இலக்கிய ஏடுகளை சி ஐ ஏ இந்த அமைப்பின் பெயரில் தொடங்கி நடத்தியது. பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற என்கவுண்டர் இதழ், இந்தியாவின் க்வெஸ்ட் Tempo Presenti, quadrant, போன்ற ஏடுகளின் உண்மையான உரிமையாளர் சி ஐ ஏதான் என்று சி ஐ ஏ அதிகாரிகள் ஆவணப்படத்தில் ஒப்புக் கொள்கின்றனர்.

மேலும் பல இலக்கிய இதழ்களுக்கு சி ஐ ஏ நிதியுதவி செய்து வந்தது. போரால் பேரழிவுக்கு உள்ளாகியிருந்த ஐரோப்பாவில் ஒரு இலக்கிய இதழ் நடத்த வேறு வழி இருக்கவில்லை. சி ஐ ஏ பணம் கொடுத்தது. இந்த ஏடுகளிடம் இருந்து தனக்கு வேண்டியதை கோரிப் பெற்றது. ழீன் பால் சார்த்தர் மட்டுமே சி ஐ ஏ நிதியுதவியை பெற மறுத்து விட்டார்.

இந்த அமைப்பு, இதழ்கள், இவற்றோடு தொடர்பு கொண்டுள்ள இலக்கிய வாதிகளின் மூலம் சி ஐ ஏ தனக்கு விருப்பமான இலக்கியங்களை உன்னதமானவை, அற்புதமான கலை வடிவங்கள் என்று வெற்றிகரமாகப் பிரச்சாரம் செய்தது. சமூக உணர்வு கொண்ட எழுத்துக்கள் அழகியல் இல்லாதவை, வெறும் பிரச்சாரம், அவற்றில் அது இல்லை இது இல்லை என்று அடித்துப் பேசி நம்ப வைத்தது.

இந்த அமைப்பின் உதவி கொண்டே நவீன ஓவியங்கள் அறிவு ஜீவிகளுக்கானவை என்ற பிரச்சாரத்தை சி ஐ ஏ வெற்றிகரமாக நடத்தியது.

1967 லிலேயே கான்கிரஸ் பார் கல்சுரல் பிரீடம் சி ஐஏவால் நடத்தப்படும் அமைப்பு என்பது வெளியாகிவிட்டது. இந்த ஆவணப்படத்தில் சி ஐ ஏ அதிகாரிகளும் எப்படி இதை நடத்தினோம் என்று வெளிச்சமாகப் பேட்டி அளிக்கின்றனர். சி ஐ ஏ இந்த அமைப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுகிறது.

சி ஐ ஏ அதிகாரிகள் இதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதையும் ஆவணப்படம் அலசி ஆராய்கிறது.

சி ஐ ஏவிடமிருந்து நிதியுதவி பெற்ற கலை இலக்கிய வாதிகள் ஒரேயடியாக தன்னை சார்ந்து இருப்பதை சி ஐ ஏ விரும்பவில்லை. இடதுசாரிகளுடனான நேரடிப் போட்டியில் தனித்து அவர்கள் நிற்க வேண்டும் என்பதை சி ஐ ஏ விரும்பியது. எனவே இந்த உறவு குறித்து தகவல்களை தானே வெளியே கசிய விட்டது என்கிறது ஆவணப்படம்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த அமைப்பு, இதற்கு செய்து வந்த செலவு எல்லாம் தேவையற்றவை ஆகிவிட்டன. இனி இந்த மாதிரி உறவு சாத்தியம் இல்லை என்று உணர்த்த முந்தைய நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்று ஒரு கருத்தும் உள்ளது.

இன்று இலக்கியவாதிகளுக்கு வெளிப்படையாகவும், சட்டபூர்வமாகவும் போர்டு பவுண்டேசன் போன்றவை நிதியுதவி அளிக்கின்றன. எனவே பழைய ரகசிய முறைகள் அவசியமில்லை. அதே நேரம் கம்யூனிசத்தை வெற்றி கொண்ட சாதனை உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

இந்தப் படத்தின் உத்திகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் மிக செய்திகள் சொல்லப்படுகின்றன. பெரும்பாலும் செய்திப் படங்கள், பேட்டிகள், ஓவியங்கள், சிம்பாலிக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் மூலமே படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

படத்துக்காக செய்யப்பட்டுள்ள ஆய்வு, கொட்டப்பட்டுள்ள கடும் உழைப்பு, இடைவெளிகளை நிரப்ப, விடுகதைகளை அவிழ்க்க காட்டப்படும் அறிவு கூர்மை இதெல்லாம் இந்தப் படத்தை தனித்து நிற்க வைக்கிறது.

தேவையான தகவல்களை கொடுக்கக் கூடியவர்களை தேடித் தேடிக் கண்டறிந்து, ஆயிரம் முறை சரிபார்த்து ஆதாரபூர்வமாக வழங்கி எழுபது ஆண்டுகால குழப்பத்துக்கும் கேள்விகளுக்கும் விடையளித்து உள்ளது இந்த படம்.

மனதுக்கு அல்ல அறிவுக்கு எடுக்கப்பட்ட படம்.

தமிழக சூழலில் இந்தப் படம் முக்கியமானது.

இங்கும் க ந சு போன்றவர்கள் காங்கிரஸ் ஃபார் கல்சுரல் பிரீடம் அமைப்பில் செயல்பட்டனர் என்ற குற்றச் சாட்டு இருந்தது. இது உண்மையா வெறும் வதந்தியா தெரியாது. ஆனால் விலங்கு பண்ணை, 1984 போன்ற கம்யூனிச எதிர்ப்பு நாவல்களை க நா சு தமிழில் மொழிபெயர்த்தார்.

இது எப்படியோ இருக்கட்டும்.

தனி மனித உணர்வுகளை பேசும் இலக்கியங்கள் உன்னதமானவை, நுட்பமானவை, சமூக மாற்றத்தை பேசும் இலக்கியங்கள் ஆழமற்றவை, அழகியல் அற்றவை என்பது போன்ற தட்டையான வாதங்கள் வெறும் இலக்கிய ஆர்வத்தில் இருந்து மட்டும் வருவதில்லை. அதற்கு பின் ஒரு அரசியலும், பிரச்சாரமும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது கோஷ்டிகளாக பிரிந்து நிற்பது, குறிப்பிட்ட இலக்கியவாதியின்பால் அதீத அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இளைஞர்கள் மாறுவது ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய இந்தப் படம் உதவும்.

இயக்குநர் பிரான்சிஸ் ஸ்டோனர் சண்டர்ஸ் ஒரு ஆக்ஸ்போர்டு பட்டதாரி ஆவார். இந்த ஆவணப்படத்தை 1995 ஆம் ஆண்டு தனது 30 வது வயதில் எடுத்தார். பின்பு இதுவே நூலாகவும் வெளிவந்தது. தனது துல்லியமான ஆய்வுகளுக்காக புகழப் பட்டார். இந்தப் படம் இரக்கமின்றி வெளிப்படுத்திய ரகசியங்களினால் அதிர்ச்சியடைந்த இலக்கியவாதிகள், விமர்சகர்கள், இதழ்களால் கடுமையாகத் தூற்றவும் பட்டார்.

இந்த ஆவணப்படம் நூலாகவும் வந்துள்ளது. இதை இன்னும் விரிவுபடுத்தி The cultural cold war- who paid the piper என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இந்த ஆவணப்படம் நான்கு பாகங்கள் கொண்டது. சேனல் 4 க்காக எடுக்கப்பட்டது.

இரண்டாம் பாகம் A clean white world முதல் உலகப் போரின் கோரங்கள், அசிங்கங்கள் இவற்றிலிருந்து பஹுவாஸ் பள்ளி மற்று நவீனத்துவ கட்டிடக் கலைஞர்கள் ஆகியோரின் தூய்மையும் வெண்மையும் கொண்ட வாழ்விடம் என்ற கருத்தாக்கம் உருவாவதையும், கச்சிதமான உடலமைப்பு, ஆடம்பரமற்ற சுகாதாரமான வாழ்விடம் என்ற முழக்கம் உருவாவதையும் பின்பு நாஜிகள் இதை பயன்படுத்திக் கொள்வதையும் ஆவணப்படுத்தியிருப்பார்.

மூன்றாவது பாகம் Painting with the enemy இது நாஜிகளின் ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் இருந்த போது அவர்களுடன் ஒத்துழைத்த ஓவியர்கள், எதிர்த்து நின்ற பிக்காசோ போன்றவர்களைப் பற்றியது.நான்காவது பாகம் Is anybody there இதில் மேடம் பிளாவட்ஸ்கியின் அமானுஷ்ய அனுபவங்கள் பற்றிய எழுத்துக்களில் இருந்து கண்டின்ஸ்கி போன்றவர்கள் மாடர்ன் ஆர்ட்டை வளர்த்து எடுப்பதைப் பற்றியது.

இந்த நான்கு பாகங்களுமே கட்டாயம் பார்க்க வேண்டியவை.

இந்தப் படத்தில் ஒளி ஓவியரின் பங்கு நுட்பமானது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள், விசித்திர மனநிலைகளைப் பிரதிபலிக்கும் வண்ணக் கோர்வைகள் ஆகியவற்றை அவர் நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் காட்ட வேண்டியிருந்திருக்கிறது. அதை அற்புதமாகச் செய்து இருக்கிறார்.

ஆனால் படத்தில் மிகச் சிறப்பாகத் தனித்துத் தெரிவது வெரோனிகா ஹைய்க்ஸின் பின்னணி குரல். இனிமையான வசீகரமான உச்சரிப்பு, தங்கக் கம்பி சாரீரம் என்று இசை விற்பன்னர்கள் சொல்வார்களே அது போன்றதொரு பிசிறடிக்காத நேர்த்தி. கேட்க வேண்டும் நம்புவதற்கு.

வெரோனிகாவின் குரல் நம்மை அவ்வளவு கவர்வதற்குக் பிரான்சிஸ் ஸ்டோனர் சாண்டர்ஸின் கூர்மையும் புத்திசாலித்தனமும் ஆழமும் கொண்ட எழுத்தும் ஒரு காரணம்.

ஓர் ஆவணப்படம் எந்த எல்லைக்குப் போக முடியும், காட்சி ஊடகத்தைக் கொண்டு என்னவெல்லாம் காட்டமுடியும் என்பதற்கு என்பதற்கு இது ஓர் அட்டகாசமான உதாரணம். நமது அறிவு மட்டத்தை வேறு தளத்துக்குத் தூக்கியடிக்கிறது.

- இரா. முருகவேள்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு