கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - பகுதி 2

மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழக்கை வரலாற்று சுருக்கம்

கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - பகுதி 2

முந்தைய பகுதியை படிக்க: கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின்

மார்க்ஸின் போதனை

மார்க்ஸின் கருத்துக்களின், போதனையின் முழுத்தொகுப்பு முறையே மார்க்ஸியம். 19ம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத்தில் தலைசிறந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிப் போதனை களுடன் கூடவே பிரெஞ்சு சோஷலிஸம் என்பனவாம். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றிற்கு முழுநிறைவு அளித்த மேதைதான் மார்க்ஸ். மார்க்ஸின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும் முழுமையும் பெற்றிருப்பவை. அவரது எதிரிகள்கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கருத்துக்கள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள் முதல்வாதமாகவும் நவீனகாலத்திய விஞ்ஞான சோஷலிஸ மாகவும் உள்ளன. இவ்விரண்டும் உலகிலுள்ள நாகரிக நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கத்தின் தத்துவமாகவும் வேலைத்திட்டமாகவும் திகழ்கின்றன. இப்படி மார்க்ஸின் கருத்துக்கள் முரணற்ற தன்மையும் முழுமையும் கொண்டிருப்பதனால், மார்க்ஸியத்தின் முதன்மையான உள்ளடக்கமாகிய மார்க்ஸின் பொருளாதாரப் போதனையை விரித்துச் சொல்லுமுன்னர், அவரது உலகக் கண்ணோட்டத்தைப்பற்றிப் பொதுப்படையான கட்டுரையைத் தீட்ட வேண்டிய கடமை நமக்கு ஏற்படுகிறது.

தத்துவஞானப் பொருள்முதல்வாதம்

1844-45 ஆண்டு காலத்தில் மார்க்ஸின் கருத்துக்கள் உருவம் பெற்றன. அக்காலம் முதல் அவர் ஒரு பொருள்முதல்வாதி; லு. ஃபாயர்பாக் என்பவரைப் பின்பற்றியவர். ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் போதுமான அளவுக்கு முரண்பாடின்றியும் முழுமை எய்தியும் இருக்கவில்லை என்பது மட்டுமே ஃபாயர்பாகின் பலவீனமாகுமென்று பிற்காலத்திலுங்கூட மார்க்ஸ் கருதினார். ஹெகலின் கருத்துமுதல் வாதத்திலிருந்து மனத் திண்மையுடன் தொடர்பை அறுத்துக் கொண்டு பொருள்முதல்வாதத்தை ஃபாயர்பாக் பிரகடனம் செய்தார்; இந்தப் பொருள்முதல்வாதம் "ஏற்கெனவே பதினெட்டாம் நூற்றாண்டில், குறிப்பாக பிரான்ஸில், அன்று இருந்து வந்த அரசியல் நிறுவனங்களையும்... மதத்தையும் இறையியலையும் மட்டும் எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருக்கவில்லை; மேலும்... எல்லா இயக்கமறுப்பு இயலையும்" "நிதானப் புத்தியுள்ள தத்துவஞானம்' என்பதிலிருந்து திட்டமாக வேறுபட்டிருக்கும்படியான "போதையேறிய தத்துவ விசாரம்" என்ற அர்த்தத்தைத்தான் இது இங்கே குறிக்கிறது) "எதிர்த்து அது போர் புரிந்து கொண்டிருந்தது'. (லிடெராரிஷேர் நாக்லஸ் என்ற சஞ்சிகையில் புனிதக் குடும்பத்தைப் பார்க்க.) அதில் தான் ஃபாயர்பாக் உலக வரலாற்றுக்குரிய "சகாப்தகரமான" முக்கியத்துவம் பெறுகிறார் என்று மார்க்ஸ் கருதினார். "ஹெகலுக்கு... சிந்தனையின் இயக்கப் போக்கு என்பது— அதற்கு 'மூலக்கருத்து' என்று பெயர் சூட்டி அதை ஒரு சுயேச்சையான அகப்பொருளாக உருமாற்றிவிடும் அளவுக்கு ஹெகல் சென்றுவிடுகிறார் - எதார்த்த உலகைப் படைக்கும் படைப்பாளியாக, அகப்பொருளாக இருக்கிறது.... அதற்கு மாறாக, கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத் உலகமே தவிர வேறு எதுவுமில்லை என்பது என் கருத்து'' என்று மார்க்ஸ் எழுதினார். (மூலதனம், தொகுதி 1, இரண்டாம் பதிப்பின் முன்னுரை.) மார்க்ஸின் இந்தப் பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தை முற்றாகப் பின்பற்றி எங்கெல்ஸ் விளக்குகையில், டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில்  இந்நூலின் கையெழுத்துப் பிரதியை மார்க்ஸ் வாசித்துப் பார்த்திருக்கிறார்-பின்வருமாறு எழுதினார்: "...உலகின் ஒற்றுமை என்பது அதன் வாழ்நிலையில் அடங்கியிருக்கவில்லை.... உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில் அடங்கியிருக்கிறது. தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம் ஆகியவற்றின் நீண்ட நெடிய வளர்ச்சி... இதை நிருபிக்கிறது...." "இயக்கம் என்பது பொருளின் வாழ்முறையாகும். இயக்கம் இல்லாமல் பொருள் எங்கும் என்றைக்கும் இருந்ததில்லை. அதேபோல் பொருளின்றி இயக்கம் என்பதும் எங்கும் என்றைக்கும் இருந்ததில்லை. அப்படி அவை இருக்கவும் முடியாது..... ஆனால்... சிந்தனை, உணர்வு என்பவை என்ன, அவை எங்கிருந்து தோன்றுகின்றன என்று கேள்வி கேட்டுக் கொள்வோமேயானால், அவை மனித மூளை விளைக்கும் பொருட்களே என்பதும், மனிதனே இயற்கையில் அதன் சூழ்நிலையுடன் கூடவே வளர்ந்து வந்திருக்கிற ஒரு விளைபொருள் தான் என்பதும் தெளிவாகத் தெரிந்து விடுகிறது. இதிலிருந்து இன்னொன்றும் வெளிப்படையாகிறது; அதாவது, முடிவுவரை பகுத்தாராயும் போது, மனித மூளையின் விளைபொருட்கள் இயற்கையின் விளைபொருட்களாகவே இருப்பதினால் அவை இயற்கையின் மற்றெல்லா அம்சங்களோடும் முரண்பட்டிருக்கவில்லை; அதற்கு மாறாக அவற்றுக்குப் பொருத்தமாகவே அமைந்துள்ளன." "ஹெகல் கருத்து முதல்வாதி. அதாவது, அவரது மனத்திற்குள் இருக்கும். எண்ணங்கள் யதார்த்தமான பொருட்களின். இயக்கப் போக்குகளின் ஓரளவு சூட்சம உருவங்கள் (Abbilder என்றால் உரு நிழல்கள், சில சமயம் எங்கெல்ஸ் "பதிவுகள்'' என்றும் சொல்கிறார்) அல்ல என்பது அவர் கருத்து; அதற்கு மாறாக, உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே எங்கோ ஓர் இடத்தில் இருந்து வந்திருக்கிற 'மூலக்கருத்து' என்பது யதார்த்த வடிவம் பெற்றதின் உருவங்கள்தான் பொருட்களும் அவற்றின் வளர்ச்சியும் என்று அவர் கருதினார்.' லுத்விக் ஃபாயர்பாக் என்ற தமது நூலில் எங்கெல்ஸ் ஃபாயர்பாகின் தத்துவ ஞானத்தைப் பற்றித் தாமும் மார்க்ஸும் கொண்டுள்ள கருத்துக்களை விளக்கி விவரித்தார். ஹெகல். ஃபாயர்பாக் பற்றியும் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் பற்றியும் 1844-45ல் மார்க்ஸும் தாமும் சேர்ந்து எழுதியிருந்த பழைய கையெழுத்துப் பிரதியைத் திரும்பவும். படித்த பிறகுதான் எங்கெல்ஸ் இந்நாலை அச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்நூலில் ஃப்ரீட்ரிஸ் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: "எல்லாத் தத்துவஞானத்துக்கும், குறிப்பாக அண்மைக்காலத்திய தத்துவஞானத்திற்கெல்லாம், அடிப்படையான மாபெரும் கேள்வியாக இருப்பது சிந்தனைக்கும் வாழ்நிலைக்குமிடையேயுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயமே, ஆன்மாவுக்கும் இயற்கைக்குமிடையேயுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயமே... இவ்விரண்டில் ஆன்மா முதலில் இருந்ததா, இயற்கை முதலில் இருந்ததா என்ற விஷயமேயாகும்.... இந்தக் கேள்விக்குத் தத்துவ ஞானிகள் தந்த விடைகள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்துவிட்டன. ஆன்மாதான் இயற்கைக்கு முன் இருந்து வந்தது என்று அடித்துப் பேசி, அதன் காரணமாக, முடிவில், உலகம் யாரோ ஒருவரால் படைக்கப்பட்டது என்று ஏதாவது ஒரு வடிவத்தில் அனுமானம் செய்து கொண்ட நபர்கள் எல்லோரும்... கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இயற்கைதான் முதலில் இருந்து வந்தது என்று கருதிய மற்றவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாயினர்.' (தத்துவஞான ரீதியான) கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற கருத்து வடிவங்களை வேறு எந்த விதத்தில் உபயோகித்தாலும் குழப்பம்தான் உண்டாகும். ஏதாவது ஒரு வழியில் மதத்தோடு எப்போதும் சம்பந்தப்பட்டிருக்கும்படியான கருத்துமுதல்வாதத்தை மார்க்ஸ் தீர்மானமாகத் தள்ளிவிட்டார் என்பது மட்டுமல்ல; குறிப்பாக நம் காலத்தில் பரவலாகக் காணக்கிடக்கும் ஹியூம், கான்ட் என்போரின் கருத்துக்களையும் பல்வேறு வடிவங்களிலுள்ள அறியொணாவாதத்தையும் விமர்சனவாதத்தையும் நேர்காட்சிவாதத்தையும் அவர் தீர்மானமாகத் தள்ளிவிட்டார். இந்த விதத் தத்துவஞானம் எல்லாம் கருத்துமுதல்வாதத்துக்கு விட்டுக்கொடுக்கும் ஒரு "பிற்போக்கான" சலுகையேயாகும். என்று மார்க்ஸ் கருதினார்; மிகச் சிறந்த நிலையிலும் இந்த விதமான தத்துவஞானம் "பொருள்முதல்வாதத்தைப் பகிரங்கமாக மறுத்துவிட்டு இரகசியமாய் அதை ஏற்றுக் கொள்ளும் வெட்ககரமான போக்காகும்'' என்று மார்க்ஸ் கருதினார். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் மேலே சொன்ன நூல்களோடு கூடவே 1866 டிசம்பர் 12 என்று தேதியிட்டு மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க. அந்தக் கடிதத்தில் மார்க்ஸ் தாமஸ் ஹக்ஸ்லி என்ற பிரபலமான இயற்கை விஞ்ஞானி ஆற்றிய வழக்கத்தைவிட "அதிக அளவு பொருள்முதல்வாதப் போக்கு கொண்ட'' உரையைக் குறிப்பிட்டு, அத்துடன் "உண்மையில் நாம் கவனித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கும் வரை பொருள்முதல்வாதத்திலிருந்து விலகிச் செல்வது சாத்தியமல்ல" என்று அவர் ஏற்றுக் கொள்வதையும் சுட்டிக்காட்டி, ஹக்ஸ்லி அறியொணாவாதத்துக்கும் ஹியூம்வாதத்துக்கும் "தப்பிக்கும் வழி'' ஒன்றை விட்டு வைப்பதற்காக அவரை மார்க்ஸ் கடிந்து கொள்கிறார். சுதந்திரத்துக்கும் அவசியத்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தைக் குறிப்பிடுவது சிறப்பான முக்கியத்துவமுள்ளதாகும். "அவசியத்தை அறிந்தேற்றுக் கொள்வதுதான் சுதந்திரம் என்பது. 'அவசியம் என்பது நாம் புரிந்து கொள்ளாதவரையில் மட்டுமே கண் மூடித்தனமானதாக இருக்கும்' '' (எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு). இதற்கு அர்த்தம், இயற்கையிலுள்ள புறநிலை வகைப்பட்ட விதியை ஏற்றுக் கொள்வது, அவசியம் என்பது இயக்கவியல் ரீதியிலே சுதந்திரமாக மாற்றம் பெறுவதை ஏற்றுக் கொள்வது என்பதுதான் (அறியப்படாததாயிருந்தும், அறியப்படக் கூடியதான “தானேயாகிய பொருள்'' (a thing in itself) என்பது 'நமக்கான பொருளாக" (a thing for us] எப்படி மாற்றம் அடைகிறதோ "பொருட்களின் சாராம்சம்'' எனப்படுவது "தோற்றங்களாக" எப்படி மாற்றம் அடைகிறதோ, அதுபோலத்தான்). ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதத்தை (அதைவிட அதிக அளவில் புஹ்னர், ஃபோக்ட், மொலிஷோட் என்போர்களின் "விஞ்ஞானக் கேடான" பொருள்முதல்வாதத்தை) உள்ளிட்ட “பழைய பொருள் முதல்வாதத்தின் அடிப்படையான குறைபாடு பின்வருமாறு என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் கருதினர்: (1) இந்தப் பொருள்முதல்வாதம் "பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டது'': இரசாயனவியல் துறையிலும், உயிரியல் துறையிலும் (நம் காலத்திற்கு வரும் போது, பொருளைப் பற்றிய மின் தத்துவத்திலும் என்று சேர்த்துக் கொள்வது அவசியமாகும்) ஏற்பட்டிருக்கிற மிகமிக நவீனமான முன்னேற்றங்களை அது கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகிறது; (2) பழைய பொருள்முதல்வாதம் வரலாற்றுக்குப் புறம்பானது. இயக்க இயலுக்குப் புறம்பானது (இயக்க இயலுக்கு விரோதமானது என்ற அர்த்தத்தில் இயக்க மறுப்பு இயல் வகைப்பட்டது); வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை அது முரணின்றியும் முழுமையாகவும் பின்பற்றவில்லை; (3) "மனித சாரம்" என்கிற விஷயத்தைச் சூட்சுமமாகப் பார்த்ததேயொழிய, (வரலாறு வகையில் ஸ்தூலமாக வரையறுக்கப் பெற்ற சகல ''சமுதாய உறவுகளின்'' ஒரு '"சேர்மமே" இந்த "மனித சாரம்" என்று அது கருதவில்லை; ஆகவே உலகத்தை "மாற்றியமைப்பதே முதன்மையான வேலையாயிருக்கையில். அது உலகத்தைப் பற்றி இவ்வாறு "வியாக்கியானம்" செய்வதோடு நின்றுவிட்டது. அதாவது, "புரட்சிகரமான நடைமுறை நடவடிக்கையின்" முக்கியத்துவத்தை அது புரிந்து கொள்ளவில்லை.

இயக்கவியல்

 

ஹெகலின் இயக்கவியல், வளர்ச்சியைக் குறித்து மிகவும் முழுமையான. உள்ளடக்கத்தில் மிகமிக வளம் நிறைந்த, மிகுந்த ஆழமுள்ள தத்துவம் என்ற முறையிலே மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் மிகப் பெரிய சாதனையாகும் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் கருதினர். வளர்ச்சி, பரிணாமம் சம்பந்தமான கோட்பாட்டைப் பற்றிய மற்ற வரையறுப்புக்கள் எல்லாம் ஒருதலைப்பட்சமானவை, உள்ளடக்கத்தில் வளக் குறைவுள்ளவை, இயற்கையிலும் சமுதாயத்திலும் உள்ள (அடிக்கடி திடீர்ப் பாய்ச்சல்கள் மூலமாக, பெருவிபத்துகள் மூலமாக, புரட்சிகள் மூலமாக முன்னே போகும்படியான) வளர்ச்சியின் உண்மையான போக்கைத் திரித்துக் காட்டுபவை, உருக்குலைப்பவை என்று அவர்கள் கருதினார்கள். (ஹெகல்வாதம் அடங்கலான கருத்துமுதல்வாதத்தால் அழிக்கப்படுவதிலிருந்து) ''உணர்வுபூர்வமான இயக்க இயலைக் காப்பாற்றி அதனை இயற்கை பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திலே நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் அநேகமாக மார்க்ஸும் நானும் மட்டும்தான்.... இயக்கவியலைப் பரீட்சிப்பது இயற்கைதான். அந்தப் பரீட்சைக்கு மிகவும் வளம் பொருந்திய விஷயாதாரங்களை, தினசரி பெருகிக் கொண்டே போகும் விஷயாதாரங்களை. நவீனகால இயற்கை விஞ்ஞானம் தந்து கொண்டேயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்' (ரேடியம், மின்னணுக்கள், தனிமங்கள் ஒன்று மற்றொன்றாக மாற்றப்படுவது, முத லானவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே எழுதப்பட்டது இது); "அப்படி விஷயாதாரங்களைத் தந்து, முடிவில் இயற்கையின் இயக்கப் போக்கு இயக்க இயல் வகைப்பட்டதே தவிர இயக்க மறுப்பு இயல் வகைப்பட்டதல்ல என்று நவீனகால இயற்கை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

எங்கெல்ஸ் எழுதுகிறார்: "அப்படியப்படியே தயார் நிலையில் கிடைக்கும் பொருட்களின் தொகுதியாக உலகத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது, இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இயக்கப் போக்குகளின் தொகுதியிலே மாற்றம் அடையாதவை போல் வெளிக்குத் தோன்றுகிற பொருட்களும், அதேபோல் அந்தப் பொருட்களைப் பற்றி மூளைக்குள்ளே நிழலாடுகிற சிந்தனையுருவங்களும், அதாவது கருத்துருவங்களும், தோன்றியபடியும் மறைந்தபடியும் இருக்கும்படியான இடையறாத மாறுதலுக்கு உட்படுகின்றன—இது மகத்தான அடிப்படைக் கருத்தாகும்.... குறிப்பாக ஹெகல் காலத்திற்குப் பிறகு இந்த மகத்தான அடிப்படைக் கருத்து மனிதர்களின் பொது உணர்வில் முற்றாகப் பரவிப் பதிந்து விட்டிருக்கிறபடியால் பொதுவான ரீதியிலே இதை யாரும் அநேகமாக மறுப்பதேயில்லை. ஆனால் இந்த அடிப்படைக் கருத்தைச் சொல்லளவிலே ஏற்றுக் கொள்வது ஒன்று, அதை ஒவ்வோர் ஆராய்ச்சித் துறையிலும் யதார்த்தத்தில் செயற்படுத்துவது வேறொன்று." “இயக்க இயல் வகைத் தத்துவ ஞானத்துக்கு இறுதியானதோ, பரமமானதோ. புனிதமானதோ எதுவுமே கிடையாது. எல்லாவற்றின் தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்குள்ளேயுமுள்ள தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. உருவாகிக் கொண்டும் மறைந்து கொண்டும்  இருக்கிற, கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு முடிவில்லாமல் ஏறிச் சென்றபடியேயிருக்கிற, இடையறாத இயக்கப் போக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் அதன்முன் நிலைத்து நிற்க முடியாது. மேலும் இயக்க இயல் வகைத் தத்துவஞானம் என்பதே சிந்திக்கும் மூளையில் தோன்றுகிற இந்த இயக்கப் போக்கின் உருநிழலே தவிர வேறில்லை' எனவே, மார்க்ஸின் கருத்துப்படி. இயக்க இயல் என்பது "புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டினுடைய இயக்கத்தின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம்' ஆகும்.

 

ஹெகல் தத்துவஞானத்தின் இந்தப் புரட்சிகரமான அம்சத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு அதை வளர்த்தார். இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்கு "இதர விஞ்ஞானங்களுக்கு மேலே நின்று கொண்டிருக்கும்படியான தத்துவ ஞானம் ஒன்றும் இனிமேல் தேவையில்லை'. முந்திய கால தத்துவஞானத்தில் மிச்சமுள்ளது "சிந்தனை, அதன் விதிகள் பற்றிய தத்துவம்- அதாவது, விதிமுறைத் தாக்க இயலும் இயக்கவியலும்தான்.'' மேலும் மார்க்ஸின் கருத்துப்படியும், ஹெகலுக்குப் பொருத்தமான விதத்திலும் இயக்க இயலில் இப்பொழுது அறிவியல் அல்லது 'எபிஸ்டமாலஜி" என்று சொல்லப்படுவதும் அடங்கும். அறிவு பற்றிய இந்தத் தத்துவமுங்கூடத் தானெடுத்துக் கொள்ளும் ஆராய்ச்சி விஷயத்தை வரலாற்று ரீதியாகத்தான் கவனித்துத் தீர வேண்டும்; அறிவின் தோற்றுவாய், வளர்ச்சி. அறிவுக்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்து அறிவு நிலைக்கு மாறிவருவது ஆகியவற்றை அது பரிசீலித்துப் பயின்று பொதுமைப்படுத்த வேண்டும்.

 

இப்போதெல்லாம் வளர்ச்சி பற்றிய, பரிணாமம் பற்றிய கருத்து அநேகமாக சமுதாய உணர்வு முழுவதிலும் நுழைந்து விட்டிருக்கிறது; ஆனால் ஹெகல் தத்துவஞானத்தின் வழியாக அல்ல, வேறான வழிகளில். எனினும் ஹெகலின் அடிப்படையில் மார்க்ஸும் எங்கெல்ஸும் வரையறுத்தபடி அமைந்துள்ள இந்தக் கருத்து இன்று வழக்கிலுள்ள பரிணாமக் கருத்தைவிட எவ்வளவோ முழுமையானது உள்ளடக்கத்தில் எவ்வளவோ வளம் பொருந்தியது. ஏற்கெனவே தாண்டி விட்ட கட்டங்களே திரும்ப வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும் அந்தக் கட்டங்கள் வேறு வகையில், முந்தியதைவிட மேல் படியில் திரும்ப வந்து கொண்டிருப்பதான வளர்ச்சி ("நிலை மறுப்பின் நிலை மறுப்பு'); ஒரு வகையில் சொல்லப்போனால் செங்குத்தாக இல்லாமல் சுழன்று சுழன்று மேலேறும் வளர்ச்சி:-  திடீர்ப் பாய்ச்சல்கள், பெருவிபத்துகள். புரட்சிகள் மூலம் ஏற்படும் வளர்ச்சி:-தொடர்ச்சியில் துண்டிப்புகள்''; அளவு பண்பாக உருமாறுதல்;- குறிப்பிட்ட பொருளின் மீதோ. குறிப்பிட்ட தோற்றத்துக்குள்ளோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்குள்ளோ செயல்படுகிற பல்வேறு சக்திகள், போக்குகள் ஆகியவற்றின் முரண்பாட்டினாலும் மோதலினாலும் ஏற்படுகிற வளர்ச்சிக்கான உள்தூண்டுதல்கள்;- (வரலாறு புதிய புதிய அம்சங்களை என்றென்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே) ஒவ்வொரு தோற்றத்தின் எல்லா அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு கொண்டிருப்பது, இந்தத் தொடர்பு நியதிக்குட்பட்ட, உலகுமுழுவதற்குமுரிய பொதுமையான இயக்கத்தின் ஓர் இயக்கப் போக்கை ஏற்படுத்தித் தருகிறது- இவையெல்லாம் வளர்ச்சியைப் பற்றிய (வழக்கமானவற்றைக் காட்டிலும்) அதிக வளம் பொருந்திய தத்துவமான இயக்கவியலின் இயல்புகளில் சிலவாகும் (1868 ஜனவரி 8ம் தேதி மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க; அதில் அவர் ஷ்டைன் என்பவரின் "இறுகிப் போன முப்பிரிவுகள்'' பற்றி கேலி செய்கிறார்; அவற்றைப் பொருள் முதல்வாத இயக்க இயலுடன் போட்டுக் குழப்புவது அபத்தமாகும்).

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்

 

பழைய பொருள்முதல்வாதத்தின் முரண்பாடுள்ள தன்மையையும், முழுமையற்ற தன்மையையும், ஒரு சார்பான தன்மையையும் உணர்ந்து கொண்ட பிறகு மார்க்ஸ் “சமுதாயத்தைப் பற்றிய விஞ்ஞானத்தை... பொருள்முதல்வாத அடிப்படைக்கு இணக்கமாகக் கொண்டுவந்து இந்த அடிப்படை மீது அதை மீண்டும் அமைப்பது'' அவசியம் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டார். வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்விலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை என்று பொருள்முதல்வாதம் பொதுவாக விளக்குகிறதாகையால் மனிதகுலத்தின் சமுதாய வாழ்வு விஷயத்திலும், சமுதாய உணர்வு சமுதாய வாழ்நிலையிலிருந்தே தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதம் விளக்கித் தீரவேண்டியிருக்கிறது. மார்க்ஸ் எழுதுகிறார் (மூலதனம், தொகுதி 1): "தொழில்நுட்பவியல் மனிதன் இயற்கையுடன் கொண்டுள்ள தொடர்புகளுக்கான வழிமுறையை, மனிதன் உயிர்வாழ்வதற்குரிய உற்பத்தி முறையை வெளிப்படுத்துவதுடன், அதன் மூலம் அவனது சமுதாய உறவுகளின் அமைப்பு முறையையும் அந்த உறவுகளிலிருந்து தோன்றும் மனக் கருத்துருவங்களையும் புலப்படுத்துகிறது.'' தமது அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு என்கிற நூலின் முன்னுரையில் மனித சமுதாயத்தையும் அதன் வரலாற்றையும் பற்றிய பொருள் முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறித்துப் பின்வரும் சொற்களில் மார்க்ஸ் வரையறுப்பு ஒரு முழுமையான தருகிறார்:

"மனித வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய உற்பத்தியில் குறிப்பிட்ட உறவுகளில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை; மனிதர்களின் சித்தத்தின்படி அமையாமல் சுதந்திரமாக அமைபவை. இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருளாயத உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்துக்குப் பொருத்தமாக அமைகின்றன.

'இந்த உற்பத்தி உறவுகளின் மொத்தத் தொகைதான் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக ஏற்படுகிறது; உண்மையான அடித்தளமாக அமைகிறது. அதன்மீதுதான் சட்டம், அரசியல் வகைப்பட்ட மேல்கட்டுமானம் எழுகிறது. அந்த அடித்தளத்துக்குப் பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் குறிப்பிட்ட வடிவங்கள் ஏற்படுகின்றன. பொருளாயத வாழ்வின் உற்பத்தி முறைதான் பொதுவாகவே சமுதாய- அரசியல் - அறிவுத்துறை வாழ்வின் இயக்கப் போக்கை வரையறுக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்நிலையை வரையறுப்பதில்லை; அதற்கு மாறாக, அவர்களுடைய சமுதாய வாழ்நிலைதான் அவர்களின் உணர்வை வரையறுக்கிறது. சமுதாயத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது, அவை நடப்பிலிருக்கும் உற்பத்தி உறவுகளுடன் அல்லது அதையே சட்ட மொழியில் குறிப்பிடுவதென்றால் அவை அதுவரை எவற்றுக்குள் இயங்கி வந்தனவோ அந்தச் சொத்து உறவுகளுடன் மோதுகின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினுடைய வடிவங்களாக இருந்து வந்த இந்த உற்பத்தி உறவுகள் அந்த உற்பத்திச் சக்திகளுக்கே விலங்குகளாக மாறிவிடுகின்றன. அதன் பிறகுதான் சமுதாயப் புரட்சியின் சகாப்தம் துவங்குகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன் கூடவே பிரம்மாண்டமான மேல்கட்டுமானம் முழுவதும் ஏறத்தாழ விரைவாக மாற்றமடைகிறது. இத்தகைய மாற்றங்களைக் கவனிக்கும் போதெல்லாம், உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பொருளாயத மாற்றத்தையும்—இதை இயற்கை விஞ்ஞானமானது துல்லியமாக வரையறுக்க முடியும் சட்டம், அரசியல், மதம், அழகு இயல் அல்லது தத்துவஞானம் போன்றவற்றில்-சுருங்கச் சொன்னால், எந்தச் சித்தாந்த வடிவங்களில் மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து போராடித் தீர்க்கிறார்களோ அந்தச் சித்தாந்த வடிவங்களில்- ஏற்படும் மாற்றத்தையும் வேறு பிரித்துக் காண வேண்டும்.

 

'ஒரு மனிதனைப் பற்றிய நமது கருத்து அவன் தன்னைப் பற்றித் தானே கொண்டிருக்கும் நினைப்புக்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. அதே மாதிரிதான், மாறுதலடைகிற இத்தகைய ஒரு காலப்பகுதியைப் பற்றியும் அக்காலப் பகுதிக்குரிய உணர்வைக் கொண்டு தீர்ப்புச் சொல்ல முடியாது. அதற்கு மாறாக, சரியான முறையில் விளக்குவதற்கு, பொருளாயத வாழ்விலுள்ள முரண்பாடுகளைக் கொண்டுதான், சமுதாய உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே இருந்து வருகிற சண்டையைக் கொண்டுதான் அவ்வுணர்வை விளக்க வேண்டும்.... பொதுவாகப் பார்க்குமிடத்து, ஆசிய உற்பத்தி முறை, பண்டைக்கால உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, நவீன-முதலாளித்துவ-உற்பத்தி முறை ஆகியவற்றைச் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பில் வளர்ந்து முன்னேறிய சகாப்தங்கள் என்று கூறலாம்."

(1866 ஜூலை 7ம் தேதி மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் தந்துள்ள சுருக்கமான வரையறுப்பை ஒப்பு நோக்குக!  உழைப்பின் ஒழுங்கமைப்பை உற்பத்திச் சாதனங்களே நிர்ணயிக்கின்றன என்ற நமது தத்துவம்.")

 

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைக் கண்டுபிடித்ததானது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், பொருள்முதல்வாதத்தைச் சமுதாயத் தோற்றங்கள் என்ற துறையிலும் தொடர்ந்து செலுத்தி விரிவுபடுத்தியதானது, முந்தைய வரலாற்றுத் தத்துவங்களிலே இருந்த இரண்டு முதன்மையான குறைபாடுகளை நீக்கிவிட்டது. முதலாவதாக, அந்த முந்தைய வரலாற்றுத் தத்துவங்கள்— மிகச் சிறந்த நிலையிலுங்கூட-மனிதர்களின் வரலாற்று நடவடிக்கைகளின் சித்தாந்த நோக்கங்களை மட்டுமே ஆராய்ந்தனவேயன்றி இந்த நோக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தவற்றைப் பரிசீலிக்கவே இல்லை; சமுதாய உறவுகளின் அமைப்பு முறையின் வளர்ச்சியை ஆளும் புறநிலை விதிகளைப் புரிந்து கொள்ளவே இல்லை; பொருளாயத உற்பத்தி அடைந்துள்ள வளர்ச்சிநிலையில் இந்தச் சமுதாய உறவுகளின் மூலவேர்கள் இருப்பதைக் கண்டறிந்து கொள்ளவே இல்லை. இரண்டாவதாக, முந்தையத் தத்துவங்கள் மக்கள்திரளின் நடவடிக்கைகளைப் பரிசீலிக்கவேயில்லை. வரலாறு வகைப்பட்ட பொருள்முதல்வாதம்தான், மக்கள் திரளினுடைய வாழ்க்கையின் சமுதாய நிலைமைகளையும், இந்த நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களையும் இயற்கை விஞ்ஞானத்தின் துல்லியத்துடன் பரிசீலித்தறிவதை முதல் முதலாகச் சாத்தியமாக்கியது. மார்க்ஸுக்கு முந்தைய “சமுதாய விஞ்ஞானமும்', வரலாற்றியலும் மிக உயர்வாகச் சொல்வதென்றால்-இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொறுக்கிச் சேர்த்த பச்சையான விபரங்களின் ஒரு திரட்டைத் தந்தன; வரலாற்றின் இயக்கப் போக்கின் தனிப்பட்ட சில அம்சங்களைச் சித்திரித்தன. எதிரெதிரான எல்லாப் போக்குகளின் முழுத்தொகை முறையையும் பரிசீலித்ததின் மூலமாகவும், சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் வாழ்வு, உற்பத்தி பற்றிய திட்டமாக வரையறுக்கக் கூடிய நிலைமைகளாக அந்தப் போக்குகளை வகுத்துத் தந்ததின் மூலமாகவும், தனிப்பட்ட 'தலையாய கருத்துக்களைப் பொறுக்குவதிலும், அல்லது அவற்றை விளக்குவதிலும் அகநிலைப் பார்வையையும் தான்தோன்றித்தனத்தையும் கைவிட்டதின் மூலமாகவும், விதிவிலக்கு எதுவுமின்றி எல்லாக் கருத்துக்களும் பலவகையான எல்லாப் போக்குகளும் பொருளாயத உற்பத்திச் சக்திகளின் நிலைமையிலேதான் வேர் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியதின் மூலமாகவும், சமுதாய-பொருளாதார அமைப்பு முறைகளின் தோற்றம், வளர்ச்சி, நலிவு என்ற இயக்கப் போக்கைப் பற்றி முழுதளாவிய, முழுமையான பரிசீலனைக்கு மார்க்ஸியம் வழி காட்டியது. மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உண்டாக்கிக் கொள்கின்றனர். ஆனால் மனிதர்களின். மக்கள் பெருந்திரளின் செயல் காரணங்களை நிர்ணயிப்பது எது? எதிரெதிரான கருத்துக்கள், வேட்கைகளுக்கு இடையே மோதலை உண்டாக்கி வைப்பது எது? மனித சமுதாயங்களின் மொத்தத் திரளின் இந்த எல்லா மோதல்களினுடையவும் மொத்தத் தொகை என்ன? மனிதனின் வரலாற்று நடவடிக்கை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைகிற பொருளாயத வாழ்வின் உற்பத்திக்கான புறநிலைமைகள் யாவை? இந்தப் புறநிலைமைகளின் வளர்ச்சிக்குரிய விதி எது?- இவற்றின் மீதெல்லாம் மார்க்ஸ் நமது கவனத்தைத் திருப்பி, வரலாறு பல்வகை வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டிருந்த இயக்கப் போக்காயிருந்த போதிலும் அதை விதிக்குட்பட்ட, ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையிலே பயில்வதற்கு வழி காட்டினார்.

வர்க்கப் போராட்டம்

 

எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் அதன் சில உறுப்பினர்களின் வேட்கைகள், இதர உறுப்பினர்களின் வேட்கைகளுடன் மோதிக்கொள்கின்றன என்பதும், சமுதாய வாழ்வில் முரண்பாடுகள் மலிந்து கிடக்கின்றன என்பதும், தேசங்களுக்கிடையிலும் சமுதாயங்களுக்கிடையிலும் அதே போல் அவற்றிற்கு உள்ளேயும் போராட்டம் நடப்பதை வரலாறு வெளிப்படுத்துகிறது என்பதும், அது தவிர புரட்சிக் காலப்பகுதி, பிற்போக்குக் காலப்பகுதி ஆகியவை, போர்க் காலப்பகுதி, சமாதான காலப்பகுதி ஆகியவை, தேக்கக் காலப்பகுதி, வேகமான முன்னேற்றக் காலப்பகுதி அல்லது நலிவுக் காலப்பகுதி ஆகியவை என்று காலப்பகுதிகள் மாறிமாறி வருவதையும் வரலாறு வெளிப்படுத்துகிறது என்பதும் எல்லோரும் அறிந்த விவரங்களாகும். தடமறியாக் குகைப் பாதை போல், குழப்படிபோல் தோன்றும் இதை ஆளும் விதிகள் என்னவென்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழிகாட்டியை, அதாவது வர்க்கப் போராட்டம் என்ற தத்துவத்தை, மார்க்ஸியம் தருகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின், அல்லது சமுதாயத் தொகுதியின் எல்லா உறுப்பினர்களுடைய வேட்கைகளின் மொத்தத் தொகை முறையைப் பரிசீலிப்பதின் வழியாகத்தான் இந்த வேட்கைகளின் விளைவைப் பற்றி ஒரு விஞ்ஞான வகைப்பட்ட வரையறுப்புக்கு வந்து சேர முடியும். மேலும், வர்க்கங்களாகப் பிளவுண்டிருக்கிற ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்த வர்க்கங்கள் வகிக்கும் நிலை, வாழ்வு நிலைமை ஆகியவற்றில் இருக்கும் வேறுபாட்டில்தான் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் வேட்கைகளின் தோற்றுவாய் இருக்கிறது. "இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்'' என்று கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார் (புராதனச் சமுதாயத்தின் வரலாறு தவிர என்று பின்னால் எங்கெல்ஸ் சேர்த்துக் கொண்டார்) "சுதந்திரமுடையானும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று. பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவச் சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை. ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் ஒட்டுமொத்தமாய் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய்-முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் - பிளவுண்டு வருகிறது. "மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் காலந்தொட்டு ஐரோப்பிய வரலாறானது நிகழ்ச்சிகளுக்கு உண்மையிலே அடிப்பரப்பாக உள்ள வர்க்கப் போராட்டத்தை, பல நாடுகளிலே மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. பிரான்ஸில் முடியரசு முறையை மீண்டும் ஏற்படுத்திய காலப்பகுதி, (தியெரீ, கிஸோ, 21 மின்யே, தியேர் போன்ற) பல வரலாற்றாசிரியர்களை ஏற்கெனவே தோற்றளித்திருக்கிறது. அவர்கள் நிகழ்ச்சிகளின் ஆதாரத்தில் பொது உண்மைகளைக் காணப் புறப்பட்ட பொழுது வர்க்கப் போராட்டம்தான் பிரெஞ்சு வரலாறு முழுவதையும் புரிந்து கொள்வதற்குரிய அடிப்படை என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. நவீன சகாப்தம்- முதலாளி வர்க்கத்தின் பூர்ண வெற்றியைக் குறிக்கும் சகாப்தமாகும்; பிரதிநிதித்துவ நிறுவனங்கள், (எல்லோருக்கும் இல்லாவிட்டாலும்) பரந்த அளவில் உள்ள வாக்குரிமை. மலிவான, மக்களைக் கவர்ந்த தினப் பத்திரிகைகள் முதலானவை இருக்கிற சகாப்தமாகும்; எப்போதும் விரிவடைந்து கொண்டே போகும், பலம் வாய்ந்த தொழிலாளர் சங்கங்கள். முதலாளிகள் சங்கங்கள் முதலானவை இருக்கிற சகாப்தமாகும். இந்தச் சகாப்தம் (சில சமயங்களில் மிகவும் ஒருசார்பான "அமைதியான", "சட்ட அமைப்புக்குட்பட்ட" வடிவத்திலே இருந்தாலும்), வர்க்கப் போராட்டம்தான் நிகழ்ச்சிகளின் மூலவிசை என்று முன்னைவிட மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டிருக்கிறது. ஒவ்வொரு வர்க்கத்தின் வளர்ச்சிக்குரிய நிலைமைகளைப் பற்றிய பகுப்பாய்வு சம்பந்தமாக, நவீன சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கமும் வகிக்கும் நிலையைப் பற்றிய புறநிலைப் பகுப்பாய்வு விஷயத்தில் சமுதாய விஞ்ஞானம் என்ன செய்ய வேண்டுமென்று மார்க்ஸ் எதிர்பார்த்தார் என்பதை மார்க்ஸின் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையிலிருக்கிற பின்வரும் வாசகம் நமக்குக் காட்டுகிறது: "இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது. மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லோரும் தொடர்ந்து தாம் மத்தியதர வர்க்ககூறுகளாய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட; ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்ய முயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய் இவர்கள் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்தக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறர்கள் என்பதே அதற்குக் காரணம்; இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல: பாட்டாளி வர்க்கத்தின் நோக்குநிலையை ஏற்கும் பொருட்டு, தமது சொந்த நோக்குநிலையைக் கைவிடுகிறார்கள்.'' வரலாற்றுத் துறையிலான பல நூல்களில் (பார்க்க: நூல் பட்டியல்) பொருள்முதல்வாத வகைப்பட்ட வரலாற்றியலுக்கு மார்க்ஸ் ஒளி மிகுந்த, ஆழம் மிக்க எடுத்துக்காட்டுகள் தருகிறார்: "ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாக" ஏன், எப்படி இருக்கிறது என்று தெளிவாகக் காட்டும் வண்ணம் ஒவ்வொரு தனித்தனி வர்க்கத்தின் நிலையைப் பற்றியும், சில சமயங்களில் ஒரே வர்க்கத்திற்குள்ளிருக்கும் பல்வேறு குழுக்களின், பகுதிகளின் நிலையைப் பற்றியும் பகுப்பாய்வுக்கு மார்க்ஸ் ஒளி மிகுந்த, ஆழம் மிக்க எடுத்துக்காட்டுகள் தருகிறார். வரலாற்று வளர்ச்சியின் மொத்த விளைவை நிர்ணயிப்பதற்காகச் சமுதாய உறவுகளையும் ஒரு வர்க்கத்திலிருந்து மற்றொரு வர்க்கத்துக்கு, இறந்த காலத்திலிருந்து வருங்காலத்துக்கு மாறும் போதுள்ள இடைநிலைப் பகுதிகளையும் கொண்ட எத்தகைய சிக்கலான வலைப்பின்னலை மார்க்ஸ் பகுத்தாராய்கிறார் என்பதற்கு மேலே காட்டிய வாசகம் ஓர் உதாரணமாகும். மார்க்ஸின் தத்துவத்தை மிகவும் ஆழ்ந்த, முழுமையான வகையிலும், விபரமாயும் உறுதிப்படுத்திச் செயல்படுத்த வழி காட்டுவது அவருடைய பொருளாதாரப் போதனைதான்.

வி.இ.லெனின்

(1914 - ஜூலை நவம்பரில் எழுதப்பெற்றது, நூல்திரட்டு, தொகுதி 26, பக்கங்கள் 43- 81லிருந்து)

(தொடரும்....)

அடுத்த பகுதியை படிக்க