கச்சத்தீவை மீட்போம்! தமிழர்நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!
ஏஎம்கே
தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை 1974, 76ஆம் ஆண்டு இருதரப்பு ஒப்பந்தங்களின்படி இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்துக் கொடுத்தது. அதன் விளைவாக கச்சத்தீவு பகுதிகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமை பறிக்கப்பட்டு விட்டது. பாரம்பரியமான உரிமையின் அடிப்படையில் அப்பகுதிகளில் மீன்பிடிக்கும் மீனவர்களை சிங்கள இராணுவம் எல்லை தாண்டினார்கள் என்று கூறி சுட்டுக் கொல்வதும், சிறைபிடிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
சிங்கள கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழக மீனவர்கள் 600 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் சிங்கள கடற்படையிடம் அடிப்பட்டு முடமாகிப்போயினர். சென்ற காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கச்சத்தீவு இநதியாவின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை என்றும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும் கூறி இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தமது தலைமையில் ஆட்சி அமைந்தால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் என்பதால்தான் அண்டை நாடுகள் வாலாட்டுகின்றன. தமது ஆட்சி இதை அனுமதிக்காது என வீரம் பேசினார்.ஆனால் தற்போது காங்கிரஸ் ஆட்சியைப் போலவே கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமில்லை என மோடி ஆட்சியும் கூறுகிறது.
மோடியின் தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் ஒரு வலிமையான ஆட்சி அமைந்தும் கூட தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் இப்படி தாக்கப்படுவதும், நடுக்கடலில் பிடித்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதும், மத்திய அரசாங்கம் கேட்ட பிறகு விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகள், வலைகள் மற்றும் பிற உபகரணங்களை இலங்கை அரசு திருப்பிக் கொடுப்பதில்லை. இவ்வாறு இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களை கைது செய்தும், அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்தும் அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடிப்பு உரிமையை மறுக்கிறது.
கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகும். எனவே வரலாற்று ரீதியாக கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பதையும் தமிழகத்தின் பகுதியான கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்பது பற்றியும், கச்சத்தீவை மீட்பதற்கான வழி என்ன என்பது பற்றியும் பரிசீலிப்போம்.
விரிவாதிக்க நோக்கத்திற்கான கச்சத்தீவு ஒப்பந்தம்
இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும், இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயகாவிற்கும் இடையே 1974 ஆம் ஆண்டு, ஜூன் 28 ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இவ்வொப்பந்தப்படி பாரம்பரிய நீர் பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து ‘பாக் நீரிணை’ வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அது இந்திய எல்லைக்குப்பட்ட பகுதி அல்ல என்ற அடிப்படையில் எல்லை வகுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் 5வது மற்றும் 6வது பிரிவுகள் கச்சத்தீவு இலங்கைக்கு உரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுமதிக்க வழி செய்தது. அப்பிரிவுகள் பின்வருமாறு கூறுகிறது.
பிரிவு : 5
“மேற்குறிப்பிட்டவற்றிக்கு உட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகளும் இதுவரை அனுபவித்து வந்தது போல கச்சத் தீவுக்கு செல்லும் உரிமையை பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பயண ஆவணங்களோ, விசாக்களோ இலங்கையிடமிருந்து பெற வேண்டுமென்ற தேவையில்லை. இதற்கு அவசியமில்லை. இலங்கை இதற்கு நிபந்தனை விதிக்கமுடியாது”.
பிரிவு : 6
“இலங்கையினதும், இந்தியாவினதுமான படகுகள் மற்றவரின் நீர்பரப்பினதும், ஒவ்வொருவரினதும் நீர்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்துவந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிப்பர்”.என்றும் கூறுகின்றன.அதாவது கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளை அங்கீகரித்தது.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழக எம்.பி.கள் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலளித்து அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் பின்வருமாறு பதிலளித்தார். “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடிப்பு எல்லை (Fishery Line) வகுக்கப்பட்டு, கச்சத்தீவின் மேற்கு பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன்பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத்தீவு. இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட இந்தியாவுக்கும் கச்சத்தீவுக்கும் உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு தவறான விளக்கங்கள் கொடுத்து கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு சப்பைக்கட்டு கட்டினார். தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவை ஒட்டி மீன்பிடிக்கும் உரிமை உண்டு” என்றெல்லாம் விளக்கமளித்து தமிழ் மக்களை சமாதானப்படுத்தியது மத்திய காங்கிரஸ் ஆட்சி.
ஆனால், 1976 ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை பறித்துவிட்டது. 1976ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங் என்பவருக்கும், இலங்ககை அரசின் பாதுகாப்புச் செயலாளர் W.T.ஜெயசிங்கேவுக்கும் இடையில் கச்சத்தீவில் மீன்பிடிப்பு உரிமை பற்றி கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதத்தில் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்லக் கூடாது. மீன்பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழாவிற்கு மக்கள் செல்லக்கூடாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இவ்வாறு 1974, 76ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததுடன் தமிழக மீனவர்களின் பாராம்பரிய மீன்பிடிப்பு உரிமைகளையும் பறித்துவிட்டன.
கச்சத்தீவு இந்தியாவின் எல்லைக்குட்பட்டதல்ல என்ற இந்திய அரசாங்கத்தின் நிலைபாடு உண்மை அல்ல. கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசர்களின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. 1947 ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, ஜமீன்முறை ஒழிக்கப்பட்ட பின்பு இராமநாத மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தத் தீவின் சர்வே எண்.1250, பரப்பளவு 285.2 ஏக்கர் என்றும், ஆவணங்களில் இந்தத்தீவு இராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக உள்ளது.
ஆனால், இந்திய ஆட்சியின் எல்லைக்குட்பட்ட தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை, இந்தியாவிற்கு சொந்தமில்லை என்று கூறி அன்றைய காங்கிரஸ் ஆட்சி இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு காரணம் என்ன? அதற்கு உண்மையான காரணம் இலங்கைத் தீவு முழுவதையும் இந்தியாவின் மேலாதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதேயாகும். இலங்கை மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் விரிவாக்க நலன்களைப் பாதுகாப்பதற்கும், தென் ஆசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகவும்தான் கச்சத்தீவு இலங்கைக்கு சட்டவிரோதமாக தாரைவார்க்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அவசியம் பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இவ்வாறு கூறினார்.
“இந்து மகா சமுத்திரத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறலும், இந்தியாவை சூழ நிலவும் பதட்டமும் இந்தியாவை இலங்கையோடு நட்பாக நடந்து கொள்ளத் தூண்டியது. இந்துமகா சமுத்திரம் வழியாக இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்துகளை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.” என்று அறிவித்தார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பு என்ற பேரில் கச்சத்தீவை தாரைவார்த்து இலங்கையை தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்தோம் என்பதைத்தான் மறைமுகமாக இந்திராகாந்தி இவ்வாறு கூறுகிறார். இந்திய அரசின் விரிவாதிக்க நோக்கத்திற்காக கச்சத்தீவை தாரைவார்ப்பது என்பது சட்டப்படி சாத்தியமல்ல என்பதால்தான் காங்கிரஸ் கட்சி, கச்சத்தீவு இந்தியாவின் பகுதியே அல்ல என்று தொடர்ந்து பொய் கூறிவருகிறது.
சட்டவிரோத ஒப்பந்தம்
கச்சத்தீவு போன்றே மேற்குவங்கத்தின் பகுதியாக இருந்த “பெருபாரி யூனியன்” என்ற பகுதியை 1958 செப்டம்பரில் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியது. அவ்வாறு வழங்கியது குறித்து 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அவ்வாறு வழங்கியது அரசியல் சட்டப்படி தவறு என்று 1960 மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கிலும் “சர்ச்சைக்குரிய எல்லைச் சிக்கலை தீர்த்துக் கொள்ளுவதற்கான ஒப்பந்தமே தவிர, இந்திய ஆட்சி பகுதி எதையும் பாகிஸ்தானுக்கு வழங்கவில்லை” என்றே மத்திய அரசு வாதிட்டது. ஆனால் ‘பெருபாரி யூனியன்’ பகுதி இந்திய ஆட்சி பகுதியாக இருந்தது என்பதை உறுதி செய்து, அப்பகுதியை பாகிஸ்தானுக்கு அளித்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வொப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் அரசியல் அமைப்புச் சட்டக் கூறு 385ன் படி அரசமைப்புச் சட்டக் கூறு 1ல் திருத்தம் செய்ய வேண்டும் என வழிகாட்டியது. இதே நிலைதான் கச்சத்தீவுக்கும் பொருந்தும். 1974 இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்திருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவே இல்லை. எனவே இந்த ஒப்பந்தம் சட்டத்திற்கு விரோதமாக அன்றைய தமிழக அரசின் அனுமதியையும் பெறாமல் தமிழர்களின் கருத்தையும் அறியாமல் போடப்பட்ட ஒப்பந்தமேயாகும். சட்டப்படி இந்த ஒப்பந்தம் செல்லாது என்பதே உண்மையாகும்.
1974 இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை வகுப்பது குறித்த பன்னாட்டு சட்டங்களுக்கும் எதிரானதாகும். “கடல்பரப்பு குறித்த ஐ.நா. ஒப்பந்தம், 1958” இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லைகளை வகுத்துக் கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முன்வைக்கிறது. ஐ.நா.வின் இந்த ஒப்பந்தத்தின் விதி 6(2) பின்வருமாறு கூறுகிறது.
“இரண்டு அண்டை நாடுகளுக்கிடையில் கடல் எல்லை வரையறுப்பு நடப்பதென்றால் அவ்வாறான எல்லை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்படவேண்டும். ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அது சிறப்பு சூழல்களை விளக்கி நிலைநாட்டாது போனால் எல்லைப் பிரிப்பின் போது சம தொலைவு (Equidistance principle) என்ற கோட்பாடே பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறுகிறது.
1974 இந்திய-இலங்கை ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே சம தொலைவு என்ற கோட்பாட்டை பின்பற்றவில்லை. அல்லது கச்சத்தீவின் மீது இலங்கைக்கு உள்ள சிறப்பு சூழல்கள் எதையும் முன்வைக்கவும் இல்லை. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல்மைல்கள் ஆகும். சமதொலைவில் எல்லைக்கோடு வகுப்பது என்றால் 15 மைலில் அக்கோடு வரையப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருந்திருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவும் உள்ளது. மாநிலங்களின் எல்லை வகுக்கும்போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளைக் கூட இந்த ஒப்பந்தம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. வேண்டுமென்றே சமதொலைவு கோட்பாடு மீறப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணாகவும், பன்னாட்டு எல்லை குறித்த சமதொலைவு கோட்பாடு சட்டவிதிகளை மீறியும் உண்மைகளை மூடிமறைத்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பது, இந்திய ஆளும் வர்க்க விரிவாதிக்க நலன்களுக்காகத்தான். அந்த சட்டவிரோத இந்திய இலங்கை ஒப்பந்தம்தான் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையையும், வாழ்வாதாரத்தையும், உயிர்வாழும் உரிமையையும் பறித்துள்ளது. அது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமன்று அது தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பறிக்கும் பிரச்சினையுமாகும்.
தாராளக் கொள்கைகளால் பறிபோகும் மீனவர்களின் வாழ்வாதாரங்கள்
கச்சத்தீவு ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமையை கச்சத்தீவு பகுதிகளில் பறிக்கிறது என்றால், இந்திய அரசு செயல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் தாக்கல் செய்ய இருந்த ”மீன்வள மசோதா (2009)” இந்திய அளவில் மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடிப்பு உரிமைகளை பறிக்கிறது. 2010 ஜனவரி 1க்குள் கடல் மீன்வள (ஒழுங்காற்று மற்றும் மேலாண்மை) சட்டம் இயற்றப்படவேண்டும் என இந்திய அரசுக்கு உலக வர்த்தகக் கழகம் (WTO) நிர்ப்பந்தம் கொடுத்தது. அதன் அடிப்படையில்தான் இம்மசோதா கொண்டுவரப்பட்டது. இம்மசோதா இந்திய கடற்பரப்பின் மீது பன்னாட்டு உள்நாட்டு பெரும் நிறுவனங்கள் ஏகபோகமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு உரிமை வழங்குகிறது.
”மீன்வள மசோதா-2009” வின் ஒழுங்காற்று மற்றும் மேலாண்மை விதிகளின்படி மீன்பிடி படகுகளின் நீளம் 12 மீட்டருக்குள் இருக்கவேண்டும். 12 கடல்மைல் தொலைவிற்கு அப்பால் மீன் பிடிக்கக் கூடாது. பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது. மேற்கண்ட விதிகளை மீறினால் 9 லட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படுவதோடு சிறை தண்டனையும் வழங்கப்படும். அதாவது ஏற்கனவே இந்திய மீனவர்கள் தங்களின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்த மசோதா பறிக்கிறது.
தீபகற்ப இந்தியாவின் கடற்பரப்பு 7600 கி.மீ. கடற்கரையை தொட்டு 200 கடல்மைல் தொலைவு வரை பரந்து விரிந்துள்ளது. 20.2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த பொருளாதார முற்றுரிமை மண்டலத்திலுள்ள (Exclusive Economic Zone) எல்லா வளங்களும் நமது முற்றுரிமையாகும். 12 கடல் மைல்களுக்குட்பட்ட பிரதேச கடற்பரப்பில் என்று கூறுவது அதில் வெறும் எட்டு விழுக்காடு உள்ள சிறு பகுதியேயாகும்.
35 ஆண்டுகளாக உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்ததன் விளைவாக நமது பிரதேசக் கடலில் மீன்வளம் வற்றிப்போய் விட்டது. 2,80,000 படகுகள் தற்போது இந்த குறுகிய கடற்பரப்புக்குள் தொடர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருக்க முடியாது. 12 கடல் மைல் கட்டுப்பாடு என்பது கன்னியாகுமரியிலிருந்து 20 கடல்மைல் தொலைவில் உள்ள அதிக மீன்வளம் உள்ள “வெட்ஜ் பாங்க்” பகுதிகளுக்கும் கூட இந்திய மீனவர்கள் செல்லுவதைத் தடுத்துவிடும். மீன்வள மசோதா (2009) செயலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய கடற்கரையிலுள்ள 60,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கும் எதிர்காலம் இல்லை என்றாகிவிடும்.
2009ஆம் ஆண்டு தாக்கல் செய்ய முயற்சித்த மீன்வள மசோதாவின் நோக்கங்கள் இரண்டுதான். ஒன்று, சர்வதேச நல்லுறவையும், எல்லைப் பாதுகாப்பையும் காரணம் காட்டி, உள்நாட்டு மீனவர்களை துரத்தியடித்துவிட்டு நமது கடலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதாகும். இரண்டு, பன்னாட்டு உள்நாட்டு மீன்பிடிப்பு ஏகபோக நிறுவனங்கள் பெரும் சந்தையை பெறுவதற்கும், கொள்ளை லாபம் பெறுவதற்கும் வழி செய்கிறது.
1976ல் மத்திய அரசு கொண்டுவந்த பிரதேச கடல், கண்டத்திட்டு நடத்தை, பொருளாதார முற்றுரிமை மண்டலம் மற்றும் கடற்பகுதிகள் சட்டத்தின்படி உள்நாட்டு மீனவர்கள் (சுதேசி மீனவர்கள்) பொருளாதார முற்றுரிமை மண்டலத்தில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படிருந்தது. அத்துடன் ஐ.நா. அவையின் (மீன் இருப்புகள் ஒப்பந்தம் 1995) ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் பொறுப்பார்ந்த மீன்வள நடத்தை விதிகள் (1995) வெளியிடப்பட்டது. அது முற்றுரிமை மண்டலத்தில் சுதேசி மீனவர்களின் மீன்பிடி மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது.
ஆனால், 1990களில் நரசிம்மராவ் அரசாங்கம் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியவுடன் மீன்வளக் கொள்கையை (Fisheries Policy) அறிமுகப்படுத்தி “கூட்டு முயற்சி” (Joint Venture) என்னும் பேரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு (ஆலை கப்பல்கள்) இந்தியக் கடலில் மீன்பிடிக்கும் உரிமம் வழங்கியது. நரசிம்மராவின் இம்முடிவு பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அன்றே சாவுமணி அடித்தது.
இன்று இந்தியக் கடல்களில் மீன்பிடிக்கும் பெரும்பான்மையான கப்பல்கள் 15 பெரும் வணிக நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இந்நிறுவனங்கள் 1,85,000 டன் உயர் ரக மீன்களை ஆண்டுதோறும் அறுவடை செய்கின்றன. மீனவர் தரப்பிலிருந்து எவ்வித இடையூறுமின்றி மீன்பிடிப்பதற்கு பொருளாதார முற்றுரிமை மண்டலத்தின் மொத்தப் பரப்பையும் குறிவைக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் முயற்சிதான் “2009ன் மீன்வள மசோதாவாகும்”.
பல்வேறு கொள்கைகளை வகுத்தும், நொண்டிக் காரணங்களைச் சொல்லியும் படிப்படியாக பாரம்பரிய மீனவர்களை கடற்கரை பகுதியிலிருந்து விரட்டப்படும் நிலையில், மீன்வள மசோதா இவர்களுக்கு இனிமேல் உட்கடலும் இல்லை என்று உரக்கச் சொல்கிறது.
தாராளமயக் கொள்கையின் விளைவாக சுதேசி விவசாயிகள் ஆதரவிழந்தனர். நாடு வேளாண் உற்பத்தியின் மீதான கட்டுப்பாட்டினை இழந்து நிற்கிறது. மீன் வளச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மீன் உற்பத்தியும் மீன் சந்தையும் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் ஏகபோகமாகும். மீனவர்கள் தங்கள் படகுகளை விட்டொழித்து கப்பல்களில் தினக் கூலிகளாகலாம். அல்லது கடற்கரையிலிருந்து காணாமற்போகலாம். இவ்வாறு ஒரு கோடி இந்திய கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான வாயில்களும் மூடப்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு மோடி கும்பலின் தலைமையிலான பா.ஜ.க.வின் மத்திய ஆட்சி அன்னிய மூலதனத்திற்கு சேவை செய்வதிலும், நாட்டை திறந்துவிடுவதிலும் மூர்க்கத்தனமாக செயல்பட்டுவருகிறது. மீன்வள மசோதா என்கிற கொலைவாள் இந்திய கடலோர மீனவ சமூகத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
மோடி ஆட்சியின் துரோகம்
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி கும்பல், சிங்கள இனவெறி இராஜபட்சே அரசாங்கத்துடன் கூடிக் குலாவுவதோடு கச்சத்தீவு பகுதி இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என்றும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமை இல்லை என்றும், மீனவர்கள் எல்லைதாண்டி கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கப் போகக்கூடாது என்றும் கூறி வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சி உள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா - இலங்கைக்கு இடையில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தங்களால் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2002 ஆம் ஆண்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. இந்த வழக்கில் கச்சத்தீவு குறித்த ஆவணங்களை தன்வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையை இணைத்துக் கொள்வதற்காக தமிழக சட்டப்பேரவையில் 2011 ஜுன் 9 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் தமிழக வருவாய்த்துறையின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கில் ஒரு வாதியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
அந்த வழக்கில் 30.08.2013ல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி பதில் மனுதாக்கல் செய்தது. அதில் ‘இந்தியாவிற்கு சொந்தமான எதையும் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு கொடுக்காததால் கச்சத்தீவை மீட்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று இலங்கை அரசாங்கம் சொல்லிவரும் கருத்தையே கூறியது. “இந்தத்தீவு தொடர்பான சச்சரவுகள் இந்தியாவுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்துக்கும், இலங்கைக்கும் இடையில் நடந்தது. அப்போதே இருநாடுகளுக்கிடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லை எதுவும் இல்லை. 1974ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அனைத்து வரலாற்று சான்றுகளையும் சரிபார்த்துதான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது என்று கூறி கைவிரித்து விட்டது.
தற்போது மோடி ஆட்சியும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக, கச்சத்தீவு பிரச்சினைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டையே முன்வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், மீனவர் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் “கச்சத்தீவிற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்” என்று தொடுத்துள்ள வழக்கில் 01.08.2014 அன்று பதில் அளித்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கச்சத்தீவு இந்தியாவிற்கு செந்தமான தீவு இல்லை என்று கூறியுள்ளது.
“இந்தியா-இலங்கை கடல் எல்லை, 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் நடந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுவிட்டது. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 6வது பிரிவின்படி பாரம்பரிய கப்பல் உரிமை என்பது வர்த்தகக் கப்பலைத்தான் குறிக்குமே ஒழிய மீன்பிடிக்கும் படகினை குறிக்காது. இவ்வொப்பந்தங்களின்படி தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். அங்குள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தலாம். மீனவர்கள் தங்களது மீன்வலைகளை அங்கு காயவைக்கலாம். ஓய்வு எடுக்கலாம். மற்றப்படி கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை எதுவும் தமிழக மீனவர்களுக்குக் கிடையாது” என்று மோடி அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வாறு கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமும் அல்ல, கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிப்பு பாரம்பரிய உரிமையும் இல்லை என்று இலங்கை அரசின் நிலைபாட்டையே மோடி அரசாங்கமும் கூறி தமிழக மீனவர்களின் முதுகில் குத்தியுள்ளது.
கச்சத் தீவை மீட்போம்
வெளிவிவகாரக் கொள்கையில் அது ஈழப் பிரச்சினை என்றாலும், மீனவர்கள் பிரச்சினையாக இருந்தாலும், கச்சத்தீவு பிரச்சினை என்றாலும் காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளையே பாஐக-வும் செயல்படுத்துகிறது. எனவே மோடி ஆட்சியின் துரோகத்தை எதிர்த்தும் இந்திய அரசாங்கத்தின் விரிவாதிக்கக் கொள்கைகளை எதிர்த்தும் கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.கச்சத்தீவு மீட்பு என்பது மீனவர் பிரச்சினை மட்டுமன்று.அது ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கையுமாகும்.எனவே தமிழ் மக்கள் அனைவரும் இக்கோரிக்கைக்கு ஆதரவளிப்பது அவசியமாகும்.அத்துடன் புதிய தாராளக் கொள்கைகள் காரணமாக அகில இந்திய அளவில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மீனவர்களோடு இணைந்து போராடுவது இப்போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, உடனடியாக கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பு உரிமையை பெறுவதற்கும், மீனவ சங்கங்கள் கோருவதைப்போல அந்தமான் நிக்கோபர் தீவுகள் அருகில் சென்று மீன்பிடிப்பதற்கும், தொலைதூரத்தில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கும் வசதியாக இராமேஸ்வரம் மற்றும் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலில் ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆழ்கடலில் பன்னாட்டு உள்நாட்டு பெரும் கார்ப்பரேட்டுகள் மீன்பிடிப்பதற்கான உரிமங்களை தடைசெய்ய வேண்டும். மீனவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் தற்போது பயன்படுத்திவரும் படகுகள், வலைகளைத் திரும்பப் பெற்று பல நாட்கள் கடலில் பயணம் செய்து மீன்படித்துக் கொண்டுவரும் வசதியுள்ள படகுகள், மீன்பிடி வலைகள், கருவிகளை நீண்டகால தவணை கடன்களில் வழங்க வேண்டும். ஏற்கனவே மாநில அரசு இது தொடர்பாக ரூ.975 கோடி செலவில் தீட்டியுள்ளத் திட்டத்திற்கு, மத்திய அரசாங்கம் உடனடியாக நிதி உதவி செய்து, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும்.
எனவேதான் மோடி ஆட்சியின் துரோகத்தை எதிர்ப்போம். கச்சத்தீவை மீட்போம் என தமிழக மக்களை கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளவேண்டும் என அறைகூவி அழைக்கின்றோம்.
-
- இந்திய அரசின் விரிவாதிக்கத்தை எதிர்ப்போம்! கச்சத் தீவை மீட்போம்!
- தமிழக மீனவர்களின் நலன்களைக் காப்போம்!
- சுப்பிரமணியசாமி போன்ற ஆளும்வர்க்க துரோகிகளை முறியடிப்போம்!
- ஏஎம்கே
(செப்டம்பர் 2014)