டிராட்ஸ்கியின் துரோக வரலாறும் கலைப்புவாதமும்
சமரன்

1
டிராட்ஸ்கியின் துரோக வரலாறு
டிராட்ஸ்கி தனது அரசியல் வாழ்வின் துவக்கத்தில் மிதவாத பாப்புலிசவாதத்தை தழுவினான். ஆனால் 19ம் நுற்றாண்டின் முடிவில், அவன் தெற்கு இரசியாவில் (நிகோலயெவ் ஒதெஸ்தா பகுதியில்) தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சேர்ந்தான். அந்த சமயத்தில் டிராட்ஸ்கியின் நிலைபாடு 'பொருளாதாரவாதத்திற்கு' மிக நெருக்கமாக இருந்தது. பாப்புலிசவாதமும், பொருளாதாரவாதமும் லெனினால் தோற்கடிக்கப்பட்டது. இது டிராட்ஸ்கிக்கு கிடைத்த முதல் தோல்வியாகும். "தொழிலாளி வர்க்கம் தானே இயங்கும்; தானே சோசலிச உணர்வு பெற்று வளரும்" என்றான் டிராட்ஸ்கி. லெனினால் இதுவும் முறியடிக்கப்பட்டது. லெனினால் மார்க்சிய வகைப்பட்ட பாட்டாளி வர்க்க இயக்கம் உருவாக்கப்படும் பணி துவங்கியது.
மார்க்சியம் பற்றிய டிராட்ஸ்கியின் அறிவு பெயரளவில்தான் இருந்தது. கார்ல் மார்க்சின் குட்டி முதலாளித்துவ வர்க்க எதிரியும், பிரபல சந்தர்ப்பவாதியும், ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் குட்டி முதலாளித்துவ கருத்துக்களை பரப்பி அதை சீர்குலைத்தவருமான பெர்டினெண்ட் லாசேஸ் (1825-64) என்பவரின் நூலையே டிராட்ஸ்கி விரும்பி படிப்பான். மார்க்சியத்தின் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர சாரத்தில் டிராட்ஸ்கிக்கு உடன்பாடு ஏற்படவில்லை. டிராட்ஸ்கி 'லாசேஸின்' கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரை மார்க்சியத்தின் 'மூன்றாவது இளம் பெருநூல் வல்லார்' என்று அழைத்தான் டிராட்ஸ்கி. பார்வஸ் எனும் இடது சந்தர்ப்பவாதியிடமிருந்து திருடிய 'நிரந்தரப் புரட்சி' என்ற 'இடது சந்தர்ப்பவாத அபத்தக் கொள்கையை' லாசோஸின் நினைவாக எழுதிய ஓர் கட்டுரையில் முதன்முதலில் டிராட்ஸ்கி முன்வைத்தான். இக்கருத்து 'லாசோஸின்' கருத்துக்களின் விரிவாக்கம் என்று கூறி, மார்க்சு - எங்கெல்சுக்கு அடுத்து மார்க்சியவாதியாக தன்னைத் தானே முன்னிறுத்தி, தனது கொள்கைக்கு 'டிராட்ஸ்கிசம்' என்று தானே பெயரிட்டுக் கொண்ட இழிபிறவிதான் டிராட்ஸ்கி. மார்க்சு - எங்கெல்சால் முன்வைக்கப்பட்டு, லெனினால் வளர்த்தெடுக்கப்பட்ட 'நிரந்தரப் புரட்சி' கொள்கைக்கும், டிராட்ஸ்கியின் 'நிரந்தரப் புரட்சி'க்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை; இது மார்க்சியத்திற்கு நேர் எதிரானதாகும். இது குறித்து "லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள்" என்ற நூலில் மூன்றாவது தலைப்பில் (கோட்பாடு) ஸ்டாலின் மிக அழகாக விளக்கியுள்ளார்.
டிராட்ஸ்கியின் 'நிரந்தரப் புரட்சி' தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்றது. அது காவுத்ஸ்கியின் 'அதீத ஏகாதிபத்தியத்தின்' மற்றொரு வடிவமாக இருந்தது. ஏக கால சர்வதேச புரட்சி சாத்தியமென்றது.
டிராட்ஸ்கி, குட்டி முதலாளித்துவ வர்க்க சந்தர்ப்பவாதிகளின் மிகச் சிறப்பான பிரதிநிதியாக விளங்கினான். அவனது அனைத்து கருத்துக்களும் குட்டி முதலாளித்துவத்தின் சந்தர்ப்பவாதங்களிலிருந்து முளைத்து வந்தவையே.
டிராட்ஸ்கியின் குட்டி முதலாளித்துவ வர்க்கப் பண்பு, RSDLPன் (ருஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின்) இரண்டாவது காங்கிரசில் (1903) வெளிப்பட்டது. அவன் வலதுசாரி சந்தர்ப்பவாதிகளுடன் நின்றான். பாட்டாளி வர்க்க சர்வாதிகார கோட்பாட்டை தாக்கினான். தொழிலாளி வர்க்கம் நாட்டின் பெரும்பான்மை வர்க்கமாக மாறும்போதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சாத்தியம் என்றும்; இது இரசியாவின் முதலாளித்துவ வளர்ச்சியை பொறுத்ததால், இதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும் கூறினான்.
கட்சி உறுப்பினருக்கான தகுதிக்கான வாதங்களில் டிராட்ஸ்கி லெனினினை கடுமையாக தாக்கினான். அதாவது கட்சி உறுப்பினர் திட்டத்தை ஒப்புக்கொள்வதோடு, கட்சி அமைப்பில் பணியாற்ற வேண்டும் என்று கூறிய லெனினை மறுத்து மார்டோவின் (மென்ஷ்விக்) பக்கம் நின்றான் டிராட்ஸ்கி. அதாவது கட்சி அமைப்பில் ஏதேனும் ஒன்றில் கட்சி உறுப்பினர் பணியாற்ற தேவையில்லை என்பதே டிராட்ஸ்கி - மார்டோவின் வாதமாகும். "இது கட்சியின் கதவுகளை எல்லாவிதமான சந்தர்ப்பவாதிகளுக்கும் திறந்துவிடும் வாதமாகும்" என்றார் லெனின். இரண்டாவது காங்கிரஸ் முடிவுகளை டிராட்ஸ்கி உள்ளிட்ட மென்ஷ்விக்குகள் சகல வழிகளிலும் சீர்குலைத்ததை கண்டித்து லெனின் இவ்வாறு கூறினார்:
"கட்சியை நம்பவைக்க முடியாது என்பதை உணர்ந்த அவர்கள், கட்சியின் ஒழுங்கை சீர்குலைத்தும், அதன் வேலைகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டும் தமது நோக்கங்களை வென்றடைய முயன்றார்கள்" (LCW VOL: 7, P-358).
கட்சி விதிகள், ஸ்தாபனக் கோட்பாடுகள் மற்றும் கட்சி ஒற்றுமை பற்றிய லெனினிய கோட்பாடுகளை தாக்கும் பொருட்டு, 1904ல் டிராட்ஸ்கி 'எமது அரசியல் கடமை' என்ற பிரசுரத்தை வெளியிட்டு பிரச்சாரம் செய்தான். இந்தப் பிரசுரம் மென்ஷ்விக்குகள் மற்றும் பொருளாதாரவாதிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதில் டிராட்ஸ்கி, "போல்ஷ்விக்குகள் வடிவாக்கத்தையும் (formalism) மற்றும் கட்சி விதிகள் பற்றிய போலி பக்தியையும் பின்பற்றுவதாக" தாக்கி எழுதினான். "தொழிலாளி வர்க்கத்தின் மீது கட்சியை நிலை நாட்டவும், பாட்டாளி வர்க்கத்தின் மீது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தவும் போல்ஷ்விக்குகள் முயல்கின்றனர்" என்றான். மேலும் போல்ஷ்விக்குகள் கட்சியை ஒரு முதலாளித்துவ தொழிற்சாலையாகவும், RSDLPன் உறுப்பினர்களை எடுப்பிடியாக மாற்ற முயல்வதாகவும் கூறினான். டிராட்ஸ்கியின் இந்தப் பிரசுரம் RSDLPஐ ஒரு தொளதொளப்பான அமைப்பாக மாற்ற விரும்பிய மென்ஷ்விக்குகளின் திட்டத்தை ஆதரிக்கும் முயற்சியாகும். இந்த பிரசுரம் பற்றி லெனின் இவ்வாறு விமர்சித்தார்: "இந்தப் பிரசுரத்தை படிக்கும்போது மென்ஷ்விக்குகள் தங்களை பொய்யுடன் பிணைத்து கொண்டிருக்கிறார்கள்; புரட்டான முறையில் செயல்படுகிறார்கள்; அவர்களால் நிலையான எதையும் உருவாக்க முடியாது என்பதை தெளிவாக காணலாம்". (LCW VOL.46, P-389).
மென்ஷ்விக் தலைவர்களும், பூர்ஷ்வாக்களும் டிராட்ஸ்கிக்கு கர்வத்தை ஊட்டினர். தற்பெருமை, புகழ்ச்சிக்கு மயங்குதல் போன்ற இழிபண்புக்கு பெயர்போனவன் டிராட்ஸ்கி. மென்ஷ்விக் தலைவர்களில் ஒருவரான எப்.டானுக்கு எதிராக சதி புரிய துவங்கினான்; மென்ஷ்விக்குகளுக்கும் நேர்மையில்லாமல் அங்கும் கோஷ்டி கட்டினான்; வாழ்நாள் முழுவதும் கோஷ்டிக்குக்கு அப்பாற்பட்டவன் என்று கூறிக்கொண்டு, கட்சிக்குள் கோஷ்டிகள் அனுமதிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு, கோஷ்டி கட்டியவன்தான் டிராட்ஸ்கி.
'கோஷ்டிவாதமே' டிராட்ஸ்கியின் அரசியல் பதாகையாக இருந்தது. இந்தப் பதாகையின் கீழ்தான் லெனினிய எதிர்ப்பு கோஷ்டியை நிறுவும் நோக்கத்தோடு மார்க்சியத்திற்கு எதிரான அனைவரையும் திரட்ட முயற்சித்தான் டிராட்ஸ்கி.
முதல் இரசியப் புரட்சியின் துவக்கத்தில் டிராட்ஸ்கி 'இடது சந்தர்ப்பவாதம்' பக்கம் சாய்ந்தான். இடது சந்தர்ப்பவாதி பார்வஸ் என்பவனுடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்தான் டிராட்ஸ்கி. அப்போது ஜெர்மனிக்கு சென்று அங்கு ஜெர்மன் சோசலிச ஜனநாயக கட்சியின் 'இடது சாரி' பகுதியில் சேர்ந்தான். அங்குதான் பார்வஸ் என்பவனுடன் தொடர்பு கொண்டு, அவனிடமிருந்து 'நிரந்தரப் புரட்சி' போன்ற இரவலாகப் பெற்ற கருத்துக்களை, தனது புதிய கண்டுபிடிப்புகளாக மானவெட்கமின்றி சாகும்வரை பரப்பிக்கொண்டிருந்தான் டிராட்ஸ்கி. அவற்றில் முக்கியமான கண்டுபிடிப்பாக 'நிரந்தரப் புரட்சி' என்ற இடது சந்தர்ப்பவாத அபத்தக் கோட்பாட்டை லெனினியத்திற்கு எதிராக பயன்படுத்தினான்.
1905ம் ஆண்டு பார்வசும், டிராட்ஸ்கியும் இரசியா வந்த பிறகு மென்ஷ்விக்குகளுடன் நெருக்கமாக உறவு கொண்டார்கள். 1905ல் 'ஜனவரி 9க்கு முன்னால்' என்ற டிராட்ஸ்கியின் பிரசுரத்தை மென்ஷ்விக்குகள் வெளியிட்டனர். அதற்கு பார்வஸ் முகவுரை எழுதினார். இது குறித்து லெனின் கூறியதாவது:
"1905ல் டிராட்ஸ்கி மென்ஷ்விக்குகள் பக்கம் திரும்ப சேர்ந்துகொண்டார். அதிதீவிர புரட்சிகர சொல்லடுக்குகளை (வாய் வீச்சுகளை) மட்டுமே அவிழ்த்துவிட்டார்". (LCW VOL.6, P-391).
வலது சந்தர்ப்பவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு 'இடதுசாரி' வேடம் போடுவதிலும், இடது அதிதீவிர வாய்ச்சவடால்களிலும் பெரும் மோகம் கொண்டவனாக டிராட்ஸ்கி இருந்தான். அவன் எப்போதும் எந்த அமைப்பு கட்டுப்பாடுமற்ற ஒரு சுதந்திர தத்துவ இயலாளராக (Freelancer) இருக்க விரும்பினான். ஆனால் இது வெறும் மணல் வீடு என்றும், ஈனத்தனமான தற்பெருமை என்றும், மென்ஷ்விக் உள்ளிட்ட இதர சந்தர்ப்பவாதத்தின் பழைய பல்லவி என்றும், சுயமான சுதந்திரமான கருத்துக்கள் இல்லை எனவும், பெயரளவில்தான் டிராட்ஸ்கிக்கு ஆதரவாளர்கள் இருந்தார்கள் எனவும் லெனின் எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தினார். 1906ல் லெனின் எழுதினார்: "மென்ஷ்விக்குகளிடையே சில பர்வேஸியவாதிகளும், டிராட்ஸ்கியவாதிகளும் இருத்தல் சாத்தியமே. எப்படியும் எட்டுப்பேர் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவர்கள் தங்களை விளம்பரம் செய்து கொள்ள முடியவில்லை". (LCW VOL.10, P-324).
1905ம் ஆண்டு, முதல் இரசியப் புரட்சி தோல்வியடைந்த காலத்தில், கடும் அடக்குமுறையைக் கண்டு அஞ்சி, கட்சியை வெளிப்படையான கட்சியாக மாற்றும் முயற்சியில் 'கலைப்பாளர் குழு' (கலைப்புவாதிகளின் குழு) ஒன்று உருவானது. இது குட்டி முதலாளித்துவ ஊசலாட்டப் பேர்வழிகளின் குழுவாகும். மென்ஷ்விக்குகள் இக்குழுவுடன் உறவுகொண்டு போல்ஷ்விக்குகளுடனான மிச்சசொச்ச உறவுகளையும் முறித்துக்கொண்டனர். பிளக்கானவ் இதில் சேரவில்லை. மேலும், ஆக்டோவிஸ்ட்கள் (திருப்பி அழைத்தவர்கள்) என்ற குட்டி முதலாளித்துவ குழு சட்டப்பூர்வ வடிவங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கலைப்புவாதத்தை முன்வைத்தனர். இந்த இரு கலைப்புவாத குழுக்களையும் தீவிரமாக ஆதரித்தவன்தான் டிராட்ஸ்கி. அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தான். இவ்விரு குழுக்கள் உருவானதற்கு காரணம் கட்சியின் தவறான கொள்கையே என்றான். டிராட்ஸ்கி சிறந்த கலைப்புவாதியாக விளங்கினான். 1908 டிசம்பரில் லெனின் கொண்டுவந்த கலைப்புவாதம் பற்றிய தீர்மானத்தை எதிர்த்தான்.
லெனின் இவ்வாறு கூறினார்:
"கட்சி கலைப்புவாதிகள் சட்டபூர்வமான வெளியீடுகள் எழுதும்போது 'சங்கம் அமைக்கும் சுதந்திரம்' என்ற கோஷத்தை, 'தலைமறைவு கட்சி ஒழிக', 'குடியரசுக்கான போராட்டம் ஒழிக' என்ற கோஷங்களோடு இணைக்கிறார்கள் என்பதை டிராட்ஸ்கி அறிவார். தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத்தூவி கலைப்புவாதத்தை மூடி மறைப்பது டிராட்ஸ்கியின் முக்கியமான பணி.
இந்தப் பிரச்சனையின் தகுதி பற்றி டிராட்ஸ்கியுடன் விவாதிப்பது இயலாத காரியம்; ஏனென்றால் டிராட்ஸ்கிக்கு என்று சொந்தமான கருத்துக்கள் ஏதும் கிடையாது; திட்டவட்டமான கலைப்புவாதிகளுடனும், ஓட்சோவாதிகளுடனும் நாம் வாதிடலாம்; வாதிட வேண்டும். ஆனால் இவ்விரு போக்குகளின் தவறுகளை மறைப்பதையே தனது தொழிலாகக் கொண்ட ஒரு மனிதருடன் வாதிடுவதில் பயனில்லை; இவர் விசயத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம், இவர் ஒரு செல்லாக்காசு இராஜதந்திரி என்று அம்பலப்படுத்துவதே ஆகும்." (டிசம்பர் 1911, LCW VOL.17, P-360, 361, 362).
RSDLP நெருக்கடிகளுக்கு கட்சியின் கொள்கைகளே காரணம் என (கலைப்புவாத கட்டத்தில்) மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகளிடம் தவறான தகவல்களை பரப்பி, தான்தான் இரசிய சமூக ஜனநாயக் கட்சியின் ஒரே பிரதிநிதி போல காட்டிக்கொண்டான் டிராட்ஸ்கி. ஜெர்மன் சமூக ஜனநாயக் கட்சியின் சந்தர்ப்பவாதியான காவுத்ஸ்கியிடம் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்தான். 'வொர் வேர்ட்ஸ்', ' நியூ ஜீட்' போன்ற அக்கட்சி பத்திரிக்கைகள் டிராட்ஸ்கி எழுதிய போல்ஷ்விக் எதிர்ப்பு புராணங்களை பிரசுரித்தன. இதற்கு பதில் கூற விரும்பிய லெனினுக்கு எழுத அவை இடம் தரவில்லை. 'வொர் வார்ட்ஸ்' பத்திரிக்கையில் வெளிவந்த டிராட்ஸ்கியின் ஒரு கட்டுரையை "இரசிய சமூக ஜனநாயக இயக்கத்தை பொறுத்தவரை சர்வதேச ஒருமைப்பாட்டையும் சகோதரத்துவத்தையும் எதிர்க்கும் இக்கட்டுரை முன்பு என்றும் கண்டிராத ஒரு செயல்" என்று லெனினும், பிளக்கனேவும் வர்ணித்தார்கள். (LCW VOL.46, P-297). டிராட்ஸ்கியின் இரட்டை வேடத்தை லெனின் பின்வருமாறு அம்பலப்படுத்தினார்: "தாம் கட்சியின் பொதுவான போக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதாக டிராட்ஸ்கி ஜெர்மன் தோழர்களிடம் கூறும்போது, அவர் தமது சொந்த கும்பலை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதையும், ஆக்டோவிஸ்டுகளிடமும், கலைப்புவாதிகளிடமும் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதையும் பிரகடனம் செய்யக் கடமை பட்டிருக்கிறேன்." (LCW VOL.16, P-391).
கலைப்புவாதிகளின் முகாமில், லெனினை தாக்குவதில் டிராட்ஸ்கி எல்லோரையும் மிஞ்சிவிட்டதாக, அவரின் சகாக்களின் ஒருவரான மார்டோவே 1912ல் எழுதினார். லெனின் எழுதினார்: "டிராட்ஸ்கி குறிப்பாக ஒலியிடும் சொல்லடுக்களின் பின்னால் ஒளிந்து கொண்டு மென்ஷ்விக்குகளை பின்பற்றுகிறார்." (LCW VOL.16, P-374).
கலைப்பாளர்களையும், ஆக்டோவிஸ்டுகளையும், டிராட்ஸ்கியவாதிகளையும் 1912 ஜனவரியில் துவங்கிய அகில இரசியக் கட்சியின் 6வது காங்கிரசு (பிராக்கில் நடைபெற்றது) களையெடுத்தது.
உறுதியான போல்ஷ்விக் கட்சிக் கொள்கையை எதிர்த்து, ஒரு கூட்டான சந்தர்ப்பவாத அணியை நிறுவுவதில், கலைப்பாளர்கள், ஆக்டோவிஸ்டுகள், போல்ஷ்விக் கட்சியின் இதர எதிரிகள் என எல்லாரையும் 'ஒற்றுமை' என்னும் பெயரால் திரட்டி சேர்ப்பதில், லெனின் கூறியவாறு ஒரு இகழார்ந்த கடமையை டிராட்ஸ்கி தானே மேற்கொண்டான். லெனினிய விரோத சிந்தனைகளின், கோஷ்டிகளின் முதுகெலும்பாக இருந்தான் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கியின் 'ஒற்றுமை' ஆட்டம் படுதோல்வி அடைந்தது. லெனின் 1910ம் ஆண்டு சரியாகவே எழுதினார்:
"குழப்பம், சீர்குலைவு, ஊசலாட்டம் ஆகியவை நிலவிய இந்த சமயத்தில் டிராட்ஸ்கி 'அந்த நேரத்து வீரராக' எளிதில் முடிந்தது. எல்லா இழிவான சக்திகளையும் தன் பக்கம் அணிதிரட்ட முடிந்தது. இந்த முயற்சி எந்த அளவு பகிரங்கமாக செய்யப்படுகிறதோ, அதே அளவு அதன் தோல்வியும் அதிக படாடோபமாக இருக்கும்" (LCW VOL.17. P-21). அதேபோலவே டிராட்ஸ்கியின் 'ஒற்றுமை', 'ஐக்கியம்' போன்ற வேடங்கள் கலைந்து அவன் படுதோல்வி அடைந்தான்.
கலைப்பாளர்கள், பண்டிஸ்ட்டுகள், ஆக்டோவிஸ்டுகள் மற்றும் டிராட்ஸ்கியவாதிகளைக் கொண்டு 1912இல் நிறுவப்பட்ட ஒரு ஸ்தாபன கமிட்டி 1912 ஆகஸ்ட் இறுதியில் வியன்னாவில் சந்தர்ப்பவாதிகளின் மாநாட்டைக் கூட்டியது. இந்த மாநாடு ருசிய சமூக ஜனநாயகக் கட்சியில் ஒரு பிளவை உருவாக்கப்போவதாக பிரகடனம் செய்தது. இந்த சந்தர்ப்பவாதிகளின் 'ஆகஸ்ட் கூட்டணி', கட்சியை உள்ளிருந்தே சீர்குலைக்க துவங்கி, முதலாளித்துவ துணை அமைப்பாக கட்சியை மாற்ற முயற்சித்தது. இனி சட்டவிரோதமான கட்சியெல்லாம் தேவை இல்லை; அந்தக் காலம் மலையேறி விட்டது என்றான் டிராட்ஸ்கி. இது அப்பட்டமான கலைப்பு வாதமாகும். ஆனால் எழுச்சி பெற்று வந்த பாட்டாளிவர்க்க இயக்கத்தின் வளர்ச்சியால் 'ஆகஸ்ட் கூட்டணி' சீர்குலையத் தொடங்கியது. உடனே அதிலிருந்து முதலில் வெளியேறியவர்களில் டிராட்ஸ்கியும் இருந்தான். 1913இல் கலைப்பாளர்களின் குழுவில் இருந்து தந்திரமாக விலகி 1914இல் 'கோஷ்டியற்ற பத்திரிக்கை' என்று அறிவித்து 'போர்பா' எனும் பத்திரிக்கையை துவங்கினான் டிராட்ஸ்கி. இது பற்றி கூறும்போது லெனின், " டிராட்ஸ்கி கோஷ்டிவாதிகளுக்கு அப்பாற்பட்டவராக காட்டிக்கொள்ளும் கோஷ்டிவாதி" என்றார். முதல் 'ஏகாதிபத்திய போர்' ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் தனது பிளவுவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினான் டிராட்ஸ்கி. புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகள் சர்வதேச அளவில் ஐக்கியப்படுவதற்கு தடையாக இருந்த காவுத்ஸ்கி கும்பலுக்கு டிராட்ஸ்கி உதவிகரமாக இருந்தான். இது பற்றி 'ஆகஸ்ட் கூட்டணியின் சிதைவு' என்ற கட்டுரையில் லெனின் பின்வருமாறு கூறுகிறார்:
"ஆகஸ்ட் கூட்டணி கலைப்புவாதிகளுக்கு ஒரு மூடுதிரையாகவே இருந்தது. அந்தக் கூட்டணி உடைந்து நொறுங்கி விட்டது..."
"கட்சி கலைப்புவாதிகளுக்கு கூட சொந்த சாமுத்திரிகா லட்சணம் உண்டு; அது மிதவாத சாமுத்திரிகா லட்சணம். ஆனால் டிராட்ஸ்கிக்கு என்று எந்தவிதமான சொந்த சாமுத்திரிகா லட்சணமும் இருந்ததில்லை; அவருக்கு தெரிந்ததெல்லாம் கட்சி தாவுதல் மட்டுமே"
"அவரிடம் உள்ளதெல்லாம் அழகான கவர்ச்சியான சொற்களும், ஆடம்பரமான கிளிப்பிள்ளைவாத சொற்றொடர்களும், டமாரம் அடிக்கும் வழக்கம் மட்டுமே"
"உண்மையில் டிராட்ஸ்கி வர்க்க உணர்வு பெறாத தொழிலாளர்களை குழப்பும் படாடோபமான, கவைக்கு உதவாத தெளிவற்ற சொற்றொடர்களை ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்தி, கட்சி கலைப்புவாதிகளுக்கு ஆதரவு தந்து வருகிறார்....."
"கலைப்புவாதிகளும், டிராட்ஸ்கியும் மிக மோசமான பிளவுவாதிகள்; இவர்கள் சொந்த ஆகஸ்ட் கூட்டணியையே உடைத்தவர்கள்; கட்சியின் எல்லா முடிவுகளையும் மீறியவர்கள்; தலைமறைவு ஸ்தாபனத்தை துறந்தவர்கள்".... (LCW VOL.20, P-158 March 1914)
"புகழார்ந்த ஒற்றுமையாளர்கள் தமக்குள் ஒன்றுசேரவும்கூட தவறிவிட்டனர்" என்று விமர்சித்தார் லெனின். (LCW VOL.20, P-159).
"டிராட்ஸ்கி ஆகஸ்ட் கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவனது கட்டுரைகள் மீது மென்ஷ்விக்குகள் உரிய வகையில் கவனம் செலுத்தவில்லை என்பதாலும், தன்னை மதிக்கவில்லை என்பதாலுமே" என்று மார்டோவ் (மென்ஷ்விக்) கூறினார். புரட்சிகர சூழல் வளர்ந்துள்ளதை அடுத்து கலைப்பாளர்கள் உள்ளிட்ட ஆகஸ்ட் கூட்டணி சிதைந்து போனதால் தந்திரமாக அதிலிருந்து வெளியேறி, தன்னை புனிதனாக காட்டிக்கொள்ள முற்பட்டான் டிராட்ஸ்கி. அதேசமயம் தொடர்ந்து கலைப்புவாத கருத்துக்களுடன், கேந்திரமான எல்லா மார்க்சிய விரோத சித்தாந்த அரசியல் பிரச்சனைகளிலும் டிராட்ஸ்கி நெருக்கமாக உறவு கொண்டிருந்தான்.
1915 செப்டம்பரில் லெனின், "வேற்றுமைகளைப் பற்றி மேலோட்டமாக பார்த்து சந்தர்ப்பவாதிகளை காப்பாற்ற சகல முயற்சிகளையும் செய்துவரும் சந்தர்ப்பவாதத்தின் கையாள்" என்று டிராட்ஸ்கியை விமர்சித்தார். (LCW VOL.35, P-206).
1916 இறுதியில் டிராட்ஸ்கி அமெரிக்கா சென்றான். அங்கு அப்பட்டமான சந்தர்ப்பவாதிகளுடன் பகிரங்கமாக சேர்ந்தான். ருஷ்ய நாட்டை விட்டு வெளியேறிய 'சோசலிஸ்ட்' செய்தித்தாளான 'நோவிமிர்' அலுவலகத்தில் சேர்ந்துகொண்டு போல்ஷ்விக்குகளுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினான். இதைக் கண்டு கடுங்கோபமுற்ற லெனின் 1917 பிப்ரவரியில் இவ்வாறு சாடினார்: "டிராட்ஸ்கியின் லட்சணம் இதுதான்! தனக்கு மட்டுமே உண்மையாக திருகுதாளம் போடுகிறார்; ஏமாற்றுகிறார்; இடதுசாரி போல வேடமிட்டு தன்னால் முடிந்தவரை வலதுசாரிகளுக்கு உதவுகிறார்." (LCW VOL.35, P-288)
முதல் உலகப்போரின் போது, லெனின் எழுதிய 'ஏகாதிபத்தியம் -முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் (1916)' என்ற நூல் ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தத்தின் மார்க்சியமாக விளங்கக்கூடிய நூலாகும். அதை காவுத்ஸ்கியும், டிராட்ஸ்கியும் ஏற்கவில்லை. முதல் உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றி, ஏகாதிபத்திய முகாம்களுக்கு சேவை செய்யும் பிற்போக்கு ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிந்து புரட்சியை வெல்வது என்ற லெனினியத்தை டிராட்ஸ்கியும், காவுத்ஸ்கியும் ஏற்கவில்லை.
இரண்டாவது அகிலத்தில் 'தாய் நாட்டைப் பாதுகாப்போம்' என்ற பெயரில், பிற்போக்கு ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் முட்டுக் கொடுத்தான் டிராட்ஸ்கி. இது "ஏகாதிபத்தியத்திற்கு (ஜெர்மன்) சேவை செய்யும் 'சமூக தேசிய வெறிக் கோட்பாடாகும்' என்று 2வது அகில சந்தர்ப்பவாதிகளை சாடினார் லெனின். நடுநிலை வேடம் போட்ட 2வது அகில சந்தர்ப்பவாதத்தின் தலைவர்களில் ஒருவரான 'ஓடுகாலி' காவுத்ஸ்கியை 'கலைப்புவாதி' டிராட்ஸ்கி ஆதரித்தான். 'ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுக', 'சொந்த அரசின் தோல்வியை நாடுக!' என்ற போல்ஷ்விக் கட்சியின் கோஷங்களை எதிர்த்தான் டிராட்ஸ்கி. 'என்ன விலை கொடுத்தாலும் சமாதானம்' என்றான்; ஏகாதிபத்திய யுத்தம் முடிந்த பிறகே உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கு வாய்ப்புண்டு என்றான்; 'சமாதான வேலைத் திட்டத்தை'யும், 'வெற்றிகளும் இல்லை; தோல்விகளும் இல்லை' என்ற கோஷத்தையும் முன்வைத்தான். சொந்த நாட்டு (பிற்போக்கான எதிர்புரட்சிகர) தாயகத்தை பாதுகாப்பது என்ற கோஷத்தின் பெயரில் ஏகாதிபத்திய தாயகத்தை பாதுகாக்கும் சமூக தேசிய வெறியர்களுடன் நின்றான் டிராட்ஸ்கி. இவை வர்க்க சமரசம் என்றும், வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என கோருகிறது என்றும் லெனின் கூறினார். (LCW VOL.21, P-278).
சொல்லில் சோசலிசம், செயலில் சமூக தேசிய வெறியர்கள் என்று இவர்களைச் சாடினார் லெனின். "அலெக்சாந்த்ரா கொலந்தாய்க்கு" எழுதிய கடிதத்தில் லெனின் பின்வருமாறு கூறுகிறார்:
"ரோலந்த் -ஹோல்ஸ்த், ரகோவ்ஸ்கி, டிராட்ஸ்கி ஆகிய அனைவரும் எனது அபிப்ராயத்தில் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய காவுத்ஸ்கியவாதிகள்." (LCW VOL.35, P-200)
ஷென்ரிட்டே ரோலந்த் -ஹோல்ஸ்த்துக்கு எழுதிய கடிதத்தில் (8.3.1916) லெனின், டிராட்ஸ்கி 2வது அகில சந்தர்ப்பவாதியான காவுத்ஸ்கியை ஆதரிப்பது பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார்:
"(5) டிராட்ஸ்கியுடன் நமக்குள்ள வேறுபாடுகள் யாவை? இதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வம் காட்டலாம். சுருங்கக் கூறினால் அவர் ஒரு காவுத்ஸ்கியவாதி; அதாவது அகிலத்தில் காவுத்ஸ்கியவாதிகளுடனும், இரசியாவில் செஹெயித்லேயின் நாடாளுமன்ற கோஷ்டியுடனும் ஒற்றுமை ஏற்படுத்திக் கொண்டார்... நாம் இதனை எதிர்க்கிறோம்." (LCW VOL.43, P-515)
காவுத்ஸ்கி வழியைப் பின்பற்றிய டிராட்ஸ்கி, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் பண்பு ரீதியான ஒரு புதிய கூட்டம் அல்ல என்றும், மாறாக தமது பிரதேசங்களை விஸ்தரித்துக் கொள்ளவும், தேசியத் துண்டாடல்களை அகற்றி உலகப் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு முதலாளித்துவ அரசுகள் வகுத்த கொள்கையே என்றும் கூறினான். பல தேசங்களின் வளங்களை கொள்ளையடிக்கும் இக்கொள்கை முற்போக்கானது என்றும், பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட முடியாது என்றும் கூறினான்.
டிராட்ஸ்கி, உலகப் போர் முதலாளித்துவத்தின் மிக சமீபக் கட்டத்தின் (உச்சக்கட்டம்) சாரத்தை வெளிப்படுத்தவில்லை என்றும், போர் என்பது தற்செயலாக தோன்றி மறையும் கூறு என்றும் கூறினான். ஏகாதிபத்தியமானது, முதலாளித்துவத்தின் 'சமாதான பூர்வ' வளர்ச்சிக்கும், முதலாளித்துவ ஏகாபோகங்களை ஓர் அதி உயர் ஏகபோகமாக ஒன்றிணைக்கவும், முதலாளித்துவ ஏகபோகங்களை ஓர் ஐரோப்பிய ஐக்கிய நாடுகளாக இணைக்கவும் வேண்டிய நிலைமைகளை உருவாக்கியுள்ளது என்றும் டிராட்ஸ்கி கூறினான். உலகு தழுவிய ரீதியிலான பொருளாதார மையப்படுத்துதல் நோக்கியப் போக்கு ஏகாதிபத்தியத்திற்கு அடிப்படை என்று அவன் கூறினான். சுருங்கக் கூறின் டிராட்ஸ்கியின் கூற்றுப்படி, "ஏகாதிபத்தியம் என்ற கருத்தே ஓர் ஒன்றிணைந்த உலகப் பொருளாதாரத்தை கட்டுவதே" என்பதாகும். பெரிய தேசிய வல்லரசுகளின் இடத்தில், யுத்த பிற்கால முதலாளித்துவ காலகட்டத்தில் ஏகாதிபத்திய அதி வல்லரசுகள் ஏற்படும் என்றான். டிராட்ஸ்கியின் கருத்துக்கள் காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியக் கருத்துக்களோடு பொருந்திப் போவதை லெனின் அம்பலப்படுத்தினார்; இருவரும் முதலாளித்துவத்தின் ஆழமான உள் முரண்பாடுகளை காண தவறிவிட்டதாக கூறினார். லெனின் கருத்துக்களை "ஏதோ ஒரு வகையில் வாய் தவறிவந்த சொல்" என்றும், லெனின் தத்துவவாதி எல்லாம் ஒன்றுமில்லை; வெறும் நடைமுறைவாதிதான் என்றும் தாக்கினான் டிராட்ஸ்கி. வாழ்நாள் முழுதும் இறுதிவரை ஒரு நாட்டிலோ (அ) ஒருசில நாடுகளிலோ சோசலிசம் வெற்றி பெறுவது சாத்தியம் என்ற லெனினியத்தின் கொடிய விரோதியாக இருந்தான் டிராட்ஸ்கி.
பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற லெனினது கோட்பாட்டிற்கு ஏற்ப, மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை, பாட்டாளி வர்க்கம் - உழைக்கும் விவசாயிகளின் சோசலிச சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு தற்போது நிலவும் ஜனநாயக அமைப்புகளின் கரங்களில் அனைத்து ஆட்சி அதிகாரத்தையும் ஒருமுகப்படுத்துவது அவசியமாக இருந்தது. இதற்கான கோட்பாடுகளின் சாரத்தை லெனின் தனது புகழ்பெற்ற 'ஏப்ரல் ஆய்வுரைகள்' (April Thesis, 1917 ஏப்ரல்) மூலம் வழங்கினார். இதை போல்ஷ்விக் கட்சி ஏகமனதாக அங்கீகரித்தது. டிராட்ஸ்கி இதை ஏற்கவில்லை.
1917 மார்ச், ஏப்ரல் மாதங்களில் டிராட்ஸ்கியின் உத்திகள் யாவும் -அப்பட்டமான மூடத்தனமான துணிச்சல் நடவடிக்கைகள் என்றார் லெனின். "தொழிலாளர் அரசு என்ற கோஷத்தை போல்ஷ்விக்குகள் ஆதரித்திருந்தால், இன்றும் முழுமைபெறாத விவசாய இயக்கத்தை முழுவதுமாக பயன்படுத்தாத நிலையில், பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியைத் தாண்டி சோசலிச புரட்சிக்கு வரும் விருப்பத்தால் அவர்கள் தன் நிலைப் போக்கில் விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கும்" என்றார் (LCW VOL.24, P-48). அதாவது, உழைக்கும் விவசாயிகளின் புரட்சிகரப் பாத்திரத்தை டிராட்ஸ்கி ஏற்க மறுத்ததை லெனின் கண்டித்தார்.
2
டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேருதல்
டிராட்ஸ்கி போல்ஷ்விக்குகளின் பரம விரோதியாக அமெரிக்காவிலிருந்து இரசியாவிற்கு 1917 மே மாதம் திரும்பினான். அந்த சமயத்தில் அங்கீகாரம் பெற்ற தலைவர்களைக் கொண்டிருந்த கடுமையான நெருக்கடியின் பிடிப்பிலிருந்த எந்தவொரு மென்ஷ்விக் ஸ்தாபனத்திலும் கலந்துவிட மறுத்துவிட்டான் டிராட்ஸ்கி. சமரசத்தன்மை வாய்ந்த மத்திய நிலை மேற்கொண்டிருந்த, இரசிய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் பிராந்தியங்களுக்கு இடையிலான ஓர் ஐக்கிய அமைப்பில் டிராட்ஸ்கி உறுப்பினராக சேர்ந்தான். அதில் 4000 பேர் இருந்தனர். இந்த ஸ்தாபனத்தின் மாநாடு 1917 மே மாதம் நடைபெற்றபோது லெனின் இந்த அமைப்பு போல்ஷ்விக்குகளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த மாநாட்டில் கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்த டிராட்ஸ்கி லெனின் முன்வைத்த ஆலோசனையை தோற்கடித்தான். எல்லா சமூக ஜனநாயகவாதிகள் ஒற்றுமைக்கும் போராடுபவன்போல பாவனை செய்த டிராட்ஸ்கி, பிரதேச ரீதியிலான அமைப்பு மட்டுமின்றி அப்பட்டமான மென்ஷ்விக்குகளையும் கொண்ட ஒற்றுமை மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றான். கட்சி ஒரு டிராட்ஸ்கிய வழியில், மென்ஷ்விக் பாதையில் ஒருமுகப்படுத்தப் படுவதையே டிராட்ஸ்கி வலியுத்தினான். போல்ஷ்விக் கோட்பாடுகள் அடிப்படையிலான ஒற்றுமையை அவன் ஆதரிக்கவில்லை.
1917 ஜூலை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, இடைக்கால அரசாங்கம் டிராட்ஸ்கியை கைது செய்தது. அவன் சிறையில் இருந்தபோது, டிராட்ஸ்கி அங்கம் வகித்த பிராந்திய அமைப்பு போல்ஷ்விக் கட்சியுடன் இணைந்துவிட்டது. ஆகவே, டிராட்ஸ்கியும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அவ்வமைப்பில் செல்வாக்குப் பெற்றவன் என்ற முறையில் கட்சியில் சேர்க்கப்பட்டான். டிராட்ஸ்கி ஒரு போலியான சுயவிமர்சனத்துடன் கட்சியில் சேர்ந்ததே, கட்சிக்குள் ஊடுருவி கலைக்கும் நோக்கத்தோடுதான் என்பது பிந்தய ஆண்டுகளில்தான் தெரியவந்தது என்கிறது போல்ஷ்விக் கட்சி வரலாறு.
அக்டோபர் புரட்சி நடைபெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்புதான் டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்தான். ஆனால், லெனினுடன் சேர்ந்து டிராட்ஸ்கி புரட்சி நடத்தியதாக டிராட்ஸ்கிவாதிகள் இன்று வரை பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
போல்ஷ்விக்குகள் சர்வாதிகார செயல்களில் ஈடுபடுவார்கள் என்று பிராந்திய அமைப்பினை அச்சுறுத்தி, போல்ஷ்விக் கட்சியில் தனிக் குழுவாகவே இயங்கும்படி டிராட்ஸ்கி வலியுற்றுத்தியதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறினார். பின்னால் லெனினை எதிர்த்தப் போராட்டத்திற்குப் பயன்படும் என்று கருதியே டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சிக்குள் தான் சார்ந்த அமைப்பான அந்த பிராந்தியக் குழுவை தனியாகவே வைத்து இயக்கினான். எனவேதான் இந்த பிரதேச அமைப்பு, போல்ஷ்விக் கட்சியுடன் சேர்ந்த பிறகும் வெகுஜனங்களுடன் உணர்வு பூர்வமாக வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை டிராட்ஸ்கி தொடர்ந்து நிராகரித்து வந்தான்.
1917 அக்டோபரின் சோதனையான நாட்களில் உலக வரலாற்றின் திருப்பு முனையில், புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் உணர்வை சோர்வடையச் செய்ய டிராட்ஸ்கி இயன்றதனைத்தையும் செய்தான். புரட்சி என்பது தன்னியல்பான வெகுஜன எழுச்சியின் வடிவத்தை எடுக்கும்போதுதான் சாத்தியம் என்றும், அதன் நோக்கம் தற்போதுள்ள அரசாங்கத்தை அகற்றுவது என்பதைவிட, அதன் மீது ஆயுதமேந்திய நிர்ப்பந்தம் கொடுத்தால், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் "கொடுத்துவிடும்படி" அரசை கட்டாயப்படுத்தலாம் என்றான். அதாவது ஆயுதம் ஏந்திவிட்டாலே, பூர்ஷ்வா அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை தானாக முன்வந்து பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைத்து விடும் என்று பேசினான் டிராட்ஸ்கி. லெனின் வலியுறுத்திய ஆயுத எழுச்சிக்கான இராணுவத் தொழில்நுட்பத் தயாரிப்புகள், இராணுவ யுத்த தந்திர உத்திகள் அனைத்தையும் 'சதித் தன்மை வாய்ந்த சூழ்ச்சிகள்' என்றான். புரட்சி நடைபெறும்பொழுது முற்றிலுமான இராணுவ நடவடிக்கைகள் 'தற்காப்பு' அடிப்படையிலும், ஒரு வரையறைக்குட்பட்ட அளவிலும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது டிராட்ஸ்கியின் கருத்தாகும். அவன் பிரதானமாக சட்டப்பூர்வப் போராட்ட முறைகளையே சார்ந்து நின்றான். குறிப்பாக முற்றிலும் 'பாராளுமன்ற முறைகளையே' சார்ந்து நின்றான்.
1917 அக்டோபர் புரட்சியின்போது, சோவியத்துடன் காங்கிரஸ் கூட்டப்பட வேண்டும் எனவும், புரட்சிகர அரசியல் அதிகாரம் பற்றி முடிவு செய்யும் உரிமையுடைய புரட்சிகர மக்களை திரட்டுவது அவசியம் அல்ல எனவும் கருதினான் டிராட்ஸ்கி. காங்கிரசுக்காக புரட்சி காத்திருக்காது என்று லெனின் டிராட்ஸ்கியை கண்டித்தார்.
1917 அக்டோபரில் ஆயுதம் தாங்கிய புரட்சி ஏற்பட்ட சமயத்திலும், அதற்கு சிறிது முன்பும், தான் எழுதிய எண்ணற்ற கடிதங்களில் லெனின் டிராட்ஸ்கியின் போலிப் புரட்சிகர சாரத்தை, எதிர் புரட்சிகர கொள்கைகளை அம்பலப்படுத்தினார். லெனின் எழுதினார்: "இந்தக் கடமையை (அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் கடமையை) சோவியத்துகளின் காங்கிரசுடன் இணைப்பதும், அதை காங்கிரசுக்கு கீழடக்குவதும், திட்டவட்டமான தேதியை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டு அரசு படைகளை தயார் செய்து கொள்வதும், காங்கிரசு தீர்மானம் ஒன்றே வன்முறை மூலம் புரட்சி நடத்தும் பாட்டாளி வர்க்கம் தீர்வு காண வேண்டிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடும் என்ற பிரமையும், வெகுஜனங்களைக் குழப்புவதும் புரட்சி விளையாட்டு விளையாடுவதுமாகும்." (LCW VOL.26, P-143).
சோவியத்துகளின் 2வது காங்கிரசு துவங்கும்முன் வெடித்தெழுந்த வெற்றிகரமான புரட்சி, மார்க்சிய லெனினியத்தை நடைமுறையில் நிரூபித்தது. தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்ற டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியும், டிராட்ஸ்கியிசம் என்ற எதிர்புரட்சிகர 'இசமும்' படுதோல்வி அடைந்தது.
3
சோசலிச நிர்மாணம் பற்றிய டிராட்ஸ்கியின் முரட்டுத் துணிச்சல்வாதமும், மார்க்சிய லெனினிய விரோத கருத்துக்களும்
பிப்ரவரி புரட்சியை டிராட்ஸ்கியும் அவனது சீடர்களும் ஏற்கவில்லை. ஏனெனில் ஜனநாயகப் புரட்சியின் பூர்ஷ்வா தன்மையை (முதலாளித்துவத் தன்மையை) டிராட்ஸ்கி ஏற்கவில்லை. ஆனால் நவம்பர் புரட்சியை (சோசலிசப் புரட்சியை) ஜனநாயகப் புரட்சி என்றான் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி விவசாயிகளின் புரட்சிகரத் தன்மையை அங்கீகரிக்கவில்லை. "பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம்; அதுவும் தானாகவே புரட்சியின் இறுதியில் அதிகாரத்தில் அமரும்; எனவே ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து ஏககால ஐரோப்பிய புரட்சி நடத்தும்; அதுவரை தனியொரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்; தனியொரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை; ஜனநாயகப் புரட்சியும், சோசலிசப் புரட்சியும் ஒரே சங்கிலியின் அடுத்தடுத்த இரு கரணைகள் என்ற லெனினியம் தவறு; புரட்சி என்றால் ஏக கால உலக சோசலிச உலகப் புரட்சிதான்; புரட்சியில் இந்த கட்டங்களுக்கு (Phases) இடமில்லை" என்ற தனது அபத்தமான இடது வாய்வீச்சு நிரந்தரப் புரட்சிக் கருத்தை லெனினியத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தினான். (நவீன டிராட்ஸ்கியவாதிகள் இதுதான் லெனினியம் என்கின்றனர்.)
சோசலிசப் புரட்சி முடியும் வரை தனி நாட்டில் புரட்சி சாத்தியமில்லை; புரட்சி முடிந்த பிறகு தனி நாட்டில் சோசலிசக் கட்டுமானம் சாத்தியமில்லை; சோசலிசம் வெற்றி பெறாது என்று எப்போதும் தோல்வி (Defeatism) மனப்பான்மையின் சாரமாக இருந்தான் டிராட்ஸ்கி. தனது அபத்தக் கருத்துக்களின் தோல்வியை, லெனினியத்தின் தோல்வியாக, கட்சியின் தோல்வியாக காட்ட முயன்றான். போலிப் புரட்சிகர சாரத்தின் மொத்த உருவமாக டிராட்ஸ்கியிசம் விளங்கியது. புரட்சி காலத்தில் சமாதானம் பேசினான்; புரட்சி முடிந்த பிறகு சமாதான காலத்தில் புரட்சி பேசினான்.
சந்தர்ப்பவாதத்தின் ஆகச் சிறந்த உதாரணமாக டிராட்ஸ்கி விளங்கினான். பெரும்பான்மைக்கு கட்டுப்படுவதாக சொல்லிக் கொண்டு தனது மார்க்சிய லெனினிய விரோத கருத்துக்களை அணிகளிடம் கள்ளத்தனமாக பரப்பி கோஷ்டி கட்டுவதையும், குழப்புவதையும் தொழிலாகக் கொண்டிருந்தான். கட்சியில் (போல்ஷ்விக்) சேர்ந்தவுடன் மத்தியக் கமிட்டியில் புகாரின், ஜினோவிவ், ராடெக் போன்றவர்களுடன் ஓர் அணிச்சேர்க்கையை உருவாக்கிக் கொண்டான். அவ்வப்போது இவர்களுக்குள் முரண்பாடுகள் எழுந்தாலும், லெனினியத்திற்கு எதிராகவும், சோசலிசக் கட்டுமானத்தை சிதைத்து முதலாளித்துவப் பாதைக்கு ஆதரவாகவும் வலுவானதொரு கூட்டணியை அவர்கள் அமைத்தார்கள். புரட்சியின் பலன்களை உறுதிப்படுத்துதல், சோவியத் அரசை சோசலிசத்தின் கொத்தளமாக உருவாக்குதல், சோசலிசத்தைக் கட்டியமைத்துப் பாதுகாத்தல் இவையே புரட்சிக்குப் பிறகான கடமைகளாக லெனின் முன்வைத்தார். ஆனால் ஐரோப்பாவில் புரட்சியை 'தூண்டி விடுதல்' மூலம், ஐரோப்பா முழுதும் சோசலிசம் வென்றால்தான், சோவியத் இரசியாவில் சோசலிசம் சாத்தியம் என்றான் டிராட்ஸ்கி. "எல்லா நாடுகளிலும் புரட்சியை வளர்த்து, ஆதரித்து தட்டியெழுப்பும் பொருட்டு தனி ஒரு நாட்டில் சாத்தியமானது அனைத்தையும் செய்வதுதான் பாட்டாளி வர்க்கத்தின் தலையாயக் கடமை" என்று லெனின் நிறுவிய பிறகும், டிராட்ஸ்கி உள்ளிட்ட இடது சந்தர்ப்பவாத வாய்ச்சவடால் வீரர்கள், இரசியாவில் சோசலிச நிர்மாணம் சாத்தியமில்லை என்று லெனினியத்தை தாக்கினர். இந்த வாய்ச்சவடால் முட்டாள்தனத்திற்கும், மூடத் துணிச்சல்வாதத்திற்கும், எதிர் புரட்சிகர பிரச்சாரத்திற்கும் தலைமை தாங்கியவன் டிராட்ஸ்கியே. (LCW VOL.28, P-292).
ஆயுதம் தாங்கிய அக்டோபர் புரட்சி வெற்றியடைந்த மறுநாளே 1917 அக்டோபர் 26 அன்று, சோவியத்துக்களின் 2வது காங்கிரசில் டிராட்ஸ்கி இவ்வாறு சொன்னான்: ".... நம்முடைய புரட்சி ஐரோப்பியப் புரட்சிக்கனலை மூட்டிவிடும் என்று நாம் நம்புகிறோம். கிளர்ந்தெழும் ஐரோப்பிய மக்கள் ஏகாதிபத்தியத்தை நசுக்காவிடில் நாம் நசுக்கப்பட்டு விடுவோம். இதில் ஐயம் ஏதுமில்லை"
இரசிய பாட்டாளி வர்க்கத்தின் கடமையை உலக பாட்டாளி வர்க்கத்தின் மீது சுமத்திவிடுவதும், இதன் மூலம் ஐரோப்பிய சோசலிசம் வரும்வரை, இரசியாவில் சோசலிசம் சாத்தியமில்லை என்றும், அதுவரை சோசலிச நிர்மாணத்தை நிறுத்தி வைப்பதுமான 'வாய்வீச்சுகளில்' இறங்கினான் டிராட்ஸ்கி. தனியொரு நாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை என்று கூறி வந்தவன், சோசலிசப் புரட்சி முடிந்தவுடன் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்றும், நடந்தது சோசலிசப் புரட்சியே இல்லை; இது ஜனநாயக புரட்சிதான் என்றும் பிரச்சாரம் செய்தான் டிராட்ஸ்கி.
புரட்சி முடிந்ததும், போரிலிருந்து இரசியா உடனடியாக விலகிக் கொள்வதுதான் சோசலிச சமூகத்தைக் கட்டி நிர்மாணிப்பதற்கான பிரதான நிபந்தனையாக இருந்தது. ஜெர்மனியுடன் 'பிரெஸ்ட் லிட்டோவ்ஸ்க்" சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வது என்ற லெனினின் ஆலோசனைகளை, டிராட்ஸ்கியும் புகாரின் தலைமையில் இருந்த "இடதுசாரி கம்யூனிஸ்டுகளும்" கடுமையாக மறுத்தார்கள். சோவியத் இரசியாவில் சோசலிச சமூகத்தை நிர்மாணிப்பதற்கான நிலைமைகள் இல்லையென்று டிராட்ஸ்கி வாதிட்டான். எனவே, ஏகாதிபத்தியவாதிகளின் இராணுவத் தலையீட்டை முறியடித்தாலும் இரசியப் புரட்சி தோல்விதான் அடையும் என்றான். இது அப்பட்டமான தோல்வி மனப்பான்மையாகும். 1918 மார்ச்சில் நடைபெற்ற இரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது காங்கிரசில் டிராட்ஸ்கி கூறியதாவது: "நாம் எவ்வளவுதான் தத்துவம் பேசினாலும் அல்லது தந்திர சாகசங்களில் ஈடுபட்டாலும், அவை நம்மை காப்பாற்றாது. நறுக்குத் தெறித்தாற்போலக் கூற வேண்டுமெனில், ஐரோப்பிய புரட்சியினால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்" என்று லெனினியத்தை தாக்கினான். அயல்துறை மக்கள் கமிசாராக இருந்த டிராட்ஸ்கி சோவியத் தூதுக் குழுவிற்கு தலைமையேற்று ஜெர்மனியுடன் சமாதானப் பேச்சு நடத்த பிரெஸ்ட் லிட்டோவ்ஸ்க்கிற்கு சென்றபோது, சமாதானப் பேச்சுவார்த்தைகளை சீர் குலைத்தான். கடுமையான நிபந்தனைகளை கொண்ட இறுதி எச்சரிக்கையை ஜெர்மனி விடுத்தாலும்கூட, சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று லெனினும், மக்கள் கமிசார் அவையும் பிறப்பித்திருந்த உத்தரவுகளை டிராட்ஸ்கி நிறைவேற்ற தவறினான். எனவே ஜெர்மனி எல்லா போர்முனைகளிலும், இரசியாவை ஆக்கிரமிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தான் டிராட்ஸ்கி. "சமாதான ஒப்பந்தத்தில் இரசியா கையெழுத்திடாது; நாங்கள் போருக்குத் தயார்" என்றும், "இரசியா தனது படைகளை கலைத்துவிட்டு உலகப் பாட்டாளிகளின் பாதுகாப்பை நாடும்" என்றும் கூறினான்; அவ்வாறே சோவியத் இராணுவ தலைமைக்கு தந்திகூட அணுப்பினான். இந்த முட்டாள்தனமான உத்தரவை இரத்து செய்வதற்கு லெனினே நேரடியாக தலையிட வேண்டியிருந்தது. (LCW VOL.44, p-60-61).
டிராட்ஸ்கியின் இந்த முட்டாள்தனத்தை குரூப்ஸ்கையா பின்வருமாறு விமர்சிக்கிறார்: "நேர்த்தியாகப் பேசுவதையும், தோரணையுடன் பாவ்லா செய்வதையும் விரும்பினார் டிராட்ஸ்கி. சோவியத் குடியரசை எப்படி போரிலிருந்து மீட்பது, அது வலிமை பெற்று எழவும், மக்களை ஒன்று திரட்டவும் எப்படி அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவது என்று சிந்தப்பதைவிட தோரணையுடன் எப்படி நடந்து கொள்வது என்பதில்தான் அவர் அதிக கவனம் செலுத்துகிறார். கேவலமான சமாதானமும் செய்ய மாட்டோம்; போரும் செய்ய மாட்டோம் என்ற முழக்கத்தை பேசினார் டிராட்ஸ்கி. லெனின் இந்தப் போக்கை செருக்குடைய தோரணை என்று அழைத்தார். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி மகத்தான நிர்மாண வேலைகளைத் தொடங்கியிருக்கும் இரசிய நாட்டை, கொள்ளைக்கும் அராஜகத்திற்கும் நிலைக்களமாக செய்துவிடக் கூடிய டிராட்ஸ்கியின் கோஷத்தை லெனின் முரட்டுத் துணிச்சலான சூதாட்டம் என்று அழைத்தார்." (குரூப்ஸ்கையா 'லெனின் பற்றிய நினைவுகள்' மாஸ்கோ 1959, P-447).
பிரெஸ்ட் லிட்டோவ்ஸ்க் சமாதான ஒப்பந்தத்திற்கு பிறகு வெகுவிரைவில் செய்து கொள்ளப்பட்ட பிரேரணைகளில், டிராட்ஸ்கியினால் நிராகரிக்கப்பட்ட முந்தய சமாதான பிரேரணைகளில் கண்டிருந்ததைக் காட்டிலும் இதில் மிகக் கடுமையான நிபந்தனைகள் ஜெர்மனியால் விதிக்கப்பட்டன.
டிராட்ஸ்கியின் முரட்டு துணிச்சல்வாதக் கொள்கையை லெனின் வன்மையாகக் கண்டித்தார். சோவியத் ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை; உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தூண்டி விடுவோம் என்ற முயற்சியில் டிராட்ஸ்கியும் 'இடது கம்யூனிஸ்ட்' தலைவர்களும் முனைந்து நின்றது கண்டு நாட்டு மக்கள்
வெஞ்சினம் கொண்டனர். 'பிரெஸ்ட்' சமாதானத்திற்காக நடைபெற்ற போராட்டத்தின் போது கீழ்கானும் முக்கிய முடிவை எடுத்தார் லெனின்: "சோசலிசப் புரட்சியை ஏற்கெனவே தொடங்கியிருக்கும் நம் குடியரசைப் பேணிக் காப்பது நமக்கும், சர்வதேச சோசலிச இயக்கத்திற்கும் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது." (LCW VOL.26, P-452).
"இந்த முடிவுதான் சர்வதேச அரங்கில் சோவியத் கொள்கையின் அடிப்படை ஆதாரமாகத் திகழ்கிறது. இரசிய சோசலிசம் உலக சோசலிசத்தின் திறவுகோல் என்றார் லெனின். உலக சோசலிசமே இரசிய சோசலிசத்தின் திறவுகோல்" என்றான் டிராட்ஸ்கி. லெனினியத்தின் கொடிய விரோதியாக டிராட்ஸ்கி விளங்கினான்.
புறநிலை விதிகளுக்கேற்ப புதிய சமுதாயம் தோன்றவில்லையென்றும், தலைவர்களின் இஷ்ட அபிலாசைகளுக்கு ஏற்பவே புதிய சமுதாயம் உதயமாகிறது என்றும் நம்பினான் டிராட்ஸ்கி. இது எண்ணமுதல்வாதமாகும்; அக நிலைவாதமாகும். மூலதனம் நிதி மூலதனமாக மாறிய, முதலாளித்துவம் ஏகாத்திபத்தியமாக மாறிய சமூக வளர்ச்சி விதிகளை ஏற்க மறுத்ததன் மூலம் டிராட்ஸ்கி ஓர் இயக்க மறுப்பியல்வாதியாக, எண்ணமுதல்வாதியாக விளங்கினான்.
டிராட்ஸ்கியும், இதர 'இடதுசாரி' வாய்ச்சவடால்காரர்களும் எதார்த்த நிலையை அலட்சியம் செய்தனர். வெகுஜனங்களின் ஜீவாதார நலன்களையும், அவர்களது போக்குகளையும், அவர்களது கோரிக்கைகளையும் புறக்கணித்தனர். வரலாற்றை உருவாக்குவது மக்கள் அல்ல, தாங்களே என்று டிராட்ஸ்கியும் அவனது சீடர்களும் கற்பனாவாத சாகசவாதத்தில் இருந்தனர். 1920ம் ஆண்டில் நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் 9வது காங்கிரசில் "மனிதன் ஒரு சோம்பேறிப் பிராணி; அவனை கட்டுப்படுத்தி தூண்டிவிட வேண்டும்" என்றான் டிராட்ஸ்கி.
உள்நாட்டு யுத்தமானது 1918-20 வரை சோவியத் இரசியாவின் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் விவசாயிகளுக்கும், அக்டோபர் புரட்சியின் ஆதாரங்களை அழிக்க முயன்ற உள்நாட்டு எதிர்புரட்சிகர சக்திகள் மற்றும் அந்நிய தலையீட்டாளர்களுக்கும் இடையே நடந்தது. டிராட்ஸ்கி, உள்நாட்டு எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு அனுசரணையாக இருந்தான்.
சோவியத் ஆட்சியின் பகைவர்கள் ஒருமுறை கிராண்ஸ்டாடில் தாக்குதல் தொடுத்தார்கள். இங்கே கப்பற்படையின் தலைமையில் இருந்த டிராட்ஸ்கியின் ஆதரவாளர்கள், நான்கு மாதங்களாக தயாரிப்பில் இருந்துவந்த எதிர் புரட்சிகர கலகத்தை முன்னிறுத்தி உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால்தான் பகைவர்களால் தாக்குதல் தொடுக்க முடிந்தது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்பு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியான டிராட்ஸ்கி குழப்பமான கருத்துக்களை பரப்பினான்; தொழிற்சங்கம் பற்றிய லெனினியக் கோட்பாடுகளை தாக்கினான்; கோஷ்டிவாதப் பணிகளில் சுறுசுறுப்பானான். இவற்றின் மீதான அவசியமற்ற வாதங்களை கிளப்பிவிட்டு உட்கட்சி போராட்டம் நடத்தி, தன்னால் ஆனவரையில் சீர்குலைவு வேலைகளில் இறங்கினான். யுத்தத்திற்கு பிறகு பொருளாதாரச் சீர்குலைவினால் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடியான நிலைமையை இந்த உட்கட்சி விவாதங்கள் மேலும் மோசாமாக்கியது. 'தொழிலாளர்களின் எதிர்ப்பு கோஷ்டி', 'ஜனநாயக மத்தியத்துவ கோஷ்டி' போன்ற சண்டப் பிரசண்டமான பெயர்களை வைத்துக்கொண்ட லெனினிய எதிர்ப்பு கோஷ்டிகள், கோஷ்டிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும் என்று கோரின. சோவியத்துக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் மீது கட்சி தனது கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் கோரின. இவை அனைத்திற்கும் டிராட்ஸ்கி தூபம் போட்டான்; தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.
"தொழிற்சங்கங்களை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்" என்றும், அவற்றை பொருளாதார அமைப்புகளுடன் இணைத்துவிட வேண்டும் என்றும், இவ்வாறு புதிதாக உருவாக்கப்படும் நிறுவனங்களுக்கு ஆட்சி - நிர்வாக - பொருளாதாரப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினான். தொழிற்சங்கங்களுக்கு உத்தரவு போடவும், தண்டனை தரவும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினான். 'தொழிற்சங்கங்களின் பாத்திரமும் கடமைகளும்' என்ற பிரசுரத்தை வெளியிட்டான் டிராட்ஸ்கி. 'இதை கோஷ்டிவாத பிரசுரம் என்றார் லெனின்'. (LCW VOL.32, P-70 - 107). உழைப்பாளி மக்களின் நலன்களைப் பேணி காக்கவும், வெகு ஜனங்களை கம்யூனிச முறையில் வளர்த்து உருவாக்குவதில் கட்சிக்கு உதவி செய்யவும் பாடுபட்டுக் கொண்டிருந்த வெகுஜன அமைப்புகள் என்ற பாத்திரத்திலிருந்து தொழிற் சங்கங்களை அகற்றிவிட டிராட்ஸ்கி இந்தப் பிரசுரத்தில் திட்டம் தீட்டியிருந்தான். தொழிற்சங்க நிறுவனங்களை பொருளாதார உறுப்புகளுடன் 'ஒன்றிணைத்து விடுதல்', உற்பத்தி மீதான கட்டுப்பாடு முழுவதையும் தொழிற் சங்கங்களின் கைகளிலேயே ஒருமுகப்படுத்துதல், உழைப்பாளி மக்களை, அதாவது தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இராணுவ மயப்படுத்துவதற்கான உறுப்புகளாக தொழிற்சங்கங்களை உருவாக்குதல் போன்ற கருத்துக்களையும் முன்வைத்தான். சோவியத் சமுதாயத்தின் சகல துறைகளிலும் கட்டாய உழைப்பை புகுத்த வேண்டும் எனவும், பொருளாதார தூண்டுகோல் என்ற கோட்பாட்டை இரத்து செய்ய வேண்டும் எனவும் அறை கூவல் விடுத்தான். கட்சி மத்தியக் கமிட்டியின் பிளீனக் கூட்டத்தில் டிராட்ஸ்கியினுடைய கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டன. தொழிற்சங்கங்களை ஜனநாயகப்படுத்துதல், மக்களுடன் அவற்றிற்குள்ள பிணைப்புகளை பலப்படுத்துதல், அவற்றின் செயல்பாங்கில் அதிகார வர்க்க மனப்பான்மையோ அல்லது உருவவாத தோரணையோ எவ்வகையிலும் தலை தூக்காத வண்ணம் உறுதியுடன் எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றை வலியுறுத்தும் தீர்மானம் லெனினுடைய பிரேரணையின் பேரில் நிறைவேற்றப்பட்டது. "தவறான மேடையில் இருந்து கொண்டு கோஷ்டி சேர்க்கும் முயற்சி" என்று டிராட்ஸ்கியின் உரை பற்றி லெனின் விமர்சித்தார். (LCW VOL.32, P-46)
டிராட்ஸ்கியின் கருத்துக்கள் லெனினிய எதிர்ப்பிற்கு மேடை அமைத்துக் கொடுத்தன; சோசலிச இலட்சியத்திற்கு பெரும் தீங்கிழைப்பதாய் இருந்தன. கம்யூனிசத்தின் பயிற்சி பள்ளிகள் போல தொழிற்சங்கங்கள் திகழ வேண்டும் என்ற லெனினியக் கோட்பாட்டிற்கு நேர் எதிராக டிராட்ஸ்கியின் கருத்துக்கள் இருந்தன. பாட்டாளி வர்க்க அரசை பலவீனப்படுத்துதல், கட்சியின் ஒற்றுமையைச் சீர்குலைத்தல், சோவியத் சமூக வாழ்வில் அதனுடைய தலையாயப் பாத்திரத்தை குறைத்துப் பேசுதல் முதலியவை டிராட்ஸ்கியிசத்தின் இலட்சியங்களாக திகழ்ந்தன. "கம்யூனிசத்திலிருந்து தத்துவார்த்த ரீதியாக தீவிரமாக விலகிச் செல்லும் போக்கு, அராஜகத்தையும் சிண்டிகலிசத்தையும் நோக்கிச் செல்லும் போக்கு" என்று லெனின் டிராட்ஸ்கியை விமர்சித்தார். (LCW VOL.32, P-246)
கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து பொருளாதார உறுப்புகளை தனித்துப் பிரித்துவிடும் டிராட்ஸ்கியின் முயற்சிகளை அராஜகவாத - சிண்டிகலிசப் போக்கு என்று விமர்சித்த லெனின், அதற்கு "தொழிற்சங்க ஜனநாயகம்" என்ற ஜனநாயக முலாம் பூசுவதையும் வன்மையாக கண்டித்தார். டிராட்ஸ்கி சோவியத் அரசின் ஆழ்ந்த ஜனநாயகத் தன்மையை உணரவில்லை. அதை அதிகார வர்க்கப் போக்கு என்றும், லெனினை அதிகார வர்க்கப் போக்குடையவர் என்றும் டிராட்ஸ்கி பேசினான். சோசலிசப் புரட்சியையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் நிராகரித்தான்.
டிராட்ஸ்கி கட்சிக்குள் எழுந்த எல்லா முரண்பாடுகளையும் கையாண்டு தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்றான்; எல்லாவித பிளவுவாத கோஷ்டிவாதங்களையும் கலைப்புவாதத்தையும், லெனினிய எதிர்ப்புகளையும் ஆசிர்வதித்தான்.
1921 மார்ச் 8ம் தேதியன்று துவங்கிய இரசிய கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் 10வது காங்கிரசில் உரையாற்றுகையில், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் வலிமைக்கு கட்சியின் தலையாய பாத்திரம்தான் மூலாதாரம் என்று லெனின் மீண்டும் வலியுறுத்தினார்; இந்த பாத்திரத்தை கட்சி வகிக்க வேண்டும்; கட்சி பலமுடன் இருக்க வேண்டும் எனவும், அதற்கு 'கட்சி ஒற்றுமை மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்'. 'கட்சி ஒற்றுமைபற்றி' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை லெனின் முன்வைத்தார். மேலும், கட்சிக்குள் கோஷ்டி சேர்க்கும் போக்கை இந்த தீர்மானம் தடை செய்தது. டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதப் போக்குகளை கண்டித்தது. காங்கிரசின் இந்த முடிவை ஏற்று நடக்காதவர்கள் எத்தகைய நிபந்தனையுமின்றி உடனடியாக கட்சியிலிருந்து விலக்கப் படுவார்கள் என்று தீர்மானம் கூறியது. (LCW VOL.32, P-244)
இந்த தீர்மானத்தை காங்கிரசில் எதிர்த்து பேச டிராட்ஸ்கிக்கு துணிச்சல் இல்லை. பிறகு கோழைத்தனமாக கட்சியில் இருந்த காலம் முழுவதும் இந்த தீர்மானத்தை இரத்து செய்வதற்குப் போராடினான். 'கோஷ்டிகளை' கலைக்க வேண்டும் என்ற லெனின் தீர்மானத்தை இரத்து செய்வதற்கு ஈனத்தனமாக 'கோஷ்டி' கட்டினான். தொழிலாளர் எதிர்ப்புக் கோஷ்டியையும், ஜனநாயக மத்தியத்துவ கோஷ்டியையும் டிராட்ஸ்கி ஆதரித்தான். கட்சிக்குள் கோஷ்டிகளும் இருக்கலாம் என்பது டிராட்ஸ்கியின் வாதம். ஜனநாயக மத்தியத்துவத்தை தூக்கி குப்பையில் போடும் இந்த டிராட்ஸ்கியவாதம் கட்சியை முடக்கும் 'பக்கவாதம்' ஆகும். பிளவுவாதங்களும், எதிரும் புதிருமான பகைமைக் கோஷ்டிகளும் கொண்ட கதம்பம் போல கட்சியை உருமாற்றி விட அயராது பாடுபட்டான் டிராட்ஸ்கி. "மீண்டும் தொழிற்சங்கங்கள் பற்றியும், இன்றைய நிலை பற்றியும், டிராட்ஸ்கி புகாரின் ஆகியோரது தவறுகள் பற்றியும்" என்ற கட்டுரையில், லெனின் டிராட்ஸ்கி கோஷ்டியின் அபாயம் பற்றி இவ்வாறு எச்சரிக்கிறார்:
"தொழிற்சங்கங்களின் பாத்திரமும் பணிகளும்" என்ற டிராட்ஸ்கியின் பிரசுரம் கோஷ்டிவாதப் பிரசுரமா? அதன் உள்ளடக்கம் கட்சிக்கு ஏதும் அபாயமா? இத்தகைய பிரசுரத்தால் கட்சிக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றியெல்லாம் வாய் பேசாதிருப்பது மாஸ்கோ கமிட்டியின் உறுப்பினர்களுக்கு மிகவும் மனதிற்குப் பிடித்தமான பொழுது போக்காக உள்ளது" என்கிறார் லெனின்.
பிரசுரத்தில் "தொழிற்சங்க இயக்கத்தில் உள்ள இரு போக்குகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்" என்று டிராட்ஸ்கி எழுதியதைக் கண்டித்து லெனின் இக்கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:
"டிராட்ஸ்கியின் நகல் ஆய்வுரைகள் பற்றியும், கட்சி பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பும் தொழிற்சங்க கொள்கை பற்றியும் என்றுமில்லாதவாறு நீண்ட விரிவான காரசாரமான விவாதத்தில் இரு பிளீன கூட்டங்களை (நவம்பர், டிசம்பர்) மத்தியக் கமிட்டி செலவிட்ட பிறகு, மத்தியக் கமிட்டியின் ஓர் உறுப்பினர், பத்தொன்பது பேரில் ஒருவர் (டிராட்ஸ்கி) மத்தியக் கமிட்டிக்கு வெளியே ஒரு கோஷ்டியை கட்டுகிறார்; கோஷ்டியின் 'கூட்டு உழைப்பை' சமர்ப்பிக்கிறார். இரண்டு போக்குகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்சி காங்கிரசிற்கு கூறுகிறார். இரண்டே இரண்டு போக்குகள்தான் உள்ளன என்று 1920 டிசம்பர் 25ஆம் தேதி டிராட்ஸ்கி அறிவித்த போதிலும், தாங்கள் ஒரு 'மத்தியஸ்த குழு' என்று நவம்பர் 9ல் புகாரின் அறிவித்த போதிலும் மிகவும் மோசமான, மிகவும் தீங்கு பயக்கக் கூடிய கோஷ்டிவாதத்திற்கு துணைபோகும் பாத்திரத்தை புகாரின் கோஷ்டி வகிப்பதை இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது"' என்று டிராட்ஸ்கி - புகாரின் கும்பலின் கோஷ்டிவாதத்தை அம்பலப்படுத்தினார்.
டிராட்ஸ்கி - புகாரின் கோஷ்டியையும், டிராட்ஸ்கியை ஆதரித்த எதிர்ப்புக் கோஷ்டி மற்றும் ஜனநாயக மத்தியத்துவக் கோஷ்டியையும் களையெடுக்க வேண்டும் என பத்தாவது காங்கிரசு பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றியது:
"எனவே, ஏதேனும் ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்த எல்லாக் கோஷ்டிகளும் எத்தகைய விதிவிலக்குமின்றி (தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் ஜனநாயக மத்தியத்துவ கோஷ்டி) கலைக்கப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. அவற்றை உடனடியாக கலைக்கும்படி உத்திரவிடுகிறது." (LCW VOL.32, p-241-244)
பத்தாவது காங்கிரசில் எடுக்கப்பட்ட மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு புதிய பொருளாதார கொள்கை பற்றியதாகும். தொழிலாளி - விவசாயி கூட்டணியை வலுப்படுத்துவதையும் இந்தக் கூட்டணியை உறுதியான பொருளாதார அடிப்படையில் அமைப்பதையும்தான் புதிய பொருளாதாரக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. வழக்கம் போல் டிராட்ஸ்கி இதையும் ஏற்கவில்லை. விவசாயிகளின் புரட்சிகர பாத்திரத்தை மறுத்த டிராட்ஸ்கி, சோசலிச கட்டுமானத்திலும் விவசாயிகளின் பாத்திரத்தை புறக்கணித்தான். விவசாயிகளின் ஊசலாட்டங்களை இராணுவ ரீதியாக பலவந்தப்படுத்தி சமாளிக்க வேண்டும் என்றான் டிராட்ஸ்கி. இதை கட்சியின் மீது திணிக்க முயன்றான்.
பாட்டாளிகளின் அரசுக்கும் வெகுஜனங்களுக்கும் குறிப்பாக விவசாயி மக்களுக்கும் இடையே உள்ள உறவுகள் பற்றிய பிரச்சனையில் டிராட்ஸ்கி கொண்டிருந்த 'இராணுவ அதிகாரவர்க்க கண்ணோட்டத்தை' கட்சி வன்மையுடன் நிராகரித்தது. புதிய பொருளாதாரக் கொள்கை ஏகமனதாக நிறைவேறியது. விவசாயிகள் சோசலிசத்தின் பரம வைரிகள் (எதிரிகள்) என்றும், ஐரோப்பிய புரட்சியையே நாம் சார்ந்து நிற்க வேண்டும்; விவசாயிகளை சார்ந்து நிற்கத் தேவையில்லை என்றும் வாய்ச்சவடால் அடித்தான். 'ஏககால ஐரோப்பிய புரட்சி' பற்றிய கனவில், இரசிய புரட்சிக்கும், இரசியாவில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கும் எதிராக இருந்தான்; 'உலகப் புரட்சி', 'நிரந்தர புரட்சி' என்ற பெயரில் எதிர்ப் புரட்சியாளனாக இருந்தான் டிராட்ஸ்கி.
சோவியத் இரசியாவில் உள் நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவில் புரட்சியின் வேகம் தணிந்தது. லெனினிய அடிப்படையிலான புரட்சிகர கட்சி இரசியாவைப் போன்று பிற ஐரோப்பிய நாடுகளில் வளரவில்லை. எனவே, "பகையான முதலாளித்துவ நாடுகளால் சூழப்பட்டிருக்கும் புதிய சோவியத் அரசு நீண்ட காலத்திற்கு தனியாகவே நின்று சோசலிசத்தைக் கட்டி நிர்மாணிக்க வேண்டியிருக்கும்" என்றார் லெனின். ஐரோப்பிய பாட்டாளிவர்க்கம் 'துரிதமான' வெற்றி அடையாவிட்டால் இரசியாவில் சோசலிசத்தை நிர்மாணிக்க முடியாது என்று நம்பிக்கை கொண்டிருந்த டிராட்ஸ்கிக்கும், அவனது சீடர்களுக்கும் லெனினின் முடிவு பீதியைக் கிளப்பியது. ஆனால், வெற்றிகரமான அக்டோபர் புரட்சியினால் துவக்கப்பட்ட, இரசியாவில் சோசலிசத்தை நிர்மாணிப்பதையே ஒரே இலட்சியமாகக் கொண்டிருந்த போல்ஷ்விக்குகள், தங்கள் கொள்கையில் தளராத நம்பிக்கை கொண்டிருந்தனர். தனியொரு நாட்டில் சோசலிசம் வெற்றியடைய முடியும் என்ற சாத்தியப்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் நிரூபித்த சோசலிசப் புரட்சி பற்றிய லெனினிய தத்துவம் போல்ஷ்விக்குகளுக்கு இந்த நம்பிக்கையை அளித்தது. சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான போதுமான சகலவற்றையும் சோவியத் அரசு பெற்றிருக்கிறது என்பதை 'ஒத்துழைப்பு பற்றி' என்ற கட்டுரையில் லெனின் மீண்டும் சுட்டிக் காட்டினார். சோவியத் மக்கள் தம்முடைய சொந்த செல்வாதாரங்களைக் கொண்டு, ஏனைய நாடுகளின் உழைப்பாளி மக்களின் தார்மீக ஆதரவுடன் சோசலிச சமுதாயத்தை சிருஷ்டிக்க முடியும் என்று கூறினார். சோசலிச தொழில் மயப்படுத்தும் கொள்கையின் மூலம் அபிவிருத்திச் செய்யப்பட்ட நவீன பொருளாதாரத்தை அமைக்க முடியும் என்றும், இன்னும் எஞ்சியிருக்கும் சுரண்டல் வர்க்கங்களை அகற்றிவிட முடியுமென்றும், விவசாயிகளின் சிறிய அளவு பண்ட உற்பத்தி முறைகளை பெரிய அளவு சோசலிச பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம் சுரண்டல் வர்க்கங்கள் எதிர்காலத்தில் தலைதூக்கவே முடியாமல் தடுப்பது சாத்தியம் என்றும் லெனின் எடுத்துரைத்தார். நாட்டில் கலாச்சார புரட்சிக்கும் லெனினிய திட்டம் வழிவகுத்தது.
சோவியத் யூனியனில் சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது பற்றிய லெனினுடைய கருத்து எவ்வாவு சரியானது என்பதை வரலாறு நிரூபித்துக் காட்டியது. புதிய பொருளாதாரக் கொள்கை அமுலில் இருக்கும், அமுலில் இருந்த ஆண்டுகளில் சோவியத் தேசப் பொருளாதாரம் துரிதமாக முன்னேறுவது சாத்தியமாயிற்று. "வெளி உதவி இல்லாமல் தன்னந்தனியாகவே எழுந்து நிற்கிறோம்" என்று லெனின் அப்போது எழுதினார். (LCW VOL.36, P-586)
ஆனால், டிராட்ஸ்கி புறநிலை உண்மைகளை அங்கீகரிக்கவில்லை. தொடர்ந்து சோசலிச நிர்மாணம் மீது கண்டனக் கணைகளை தொடுத்துக் கொண்டே இருந்தான். இரசிய பாட்டாளிகள் ஏற்கனவே ஐந்தாண்டு காலம் அதிகாரத்தில் அமர்ந்திருந்த போதும், நாடு பொருளாதார முன்னேற்றம் அடைந்து வந்த போதும், "சோசலிசத்தை நோக்கி இரசியா ஓர் அங்குலம் கூட முன்னேறவில்லை" என்று டிராட்ஸ்கி கூறினான். 1922ம் ஆண்டில் வெளியிடப்பட்ட '1905ம் ஆண்டு' என்ற தனது நூலுக்கு எழுதிய முன்னுரையில் அவன் இந்த கருத்தை வெளியிட்டான். எப்போதும் போலவே செயற்கையாக உலகப் புரட்சியை தூண்டிவிட வேண்டும் என்று உளறினான்.
தேசப் பொருளாதாரத்தின் சுப்ரீம் கவுன்சிலின் துணைத் தலைவராகவும், டிராட்ஸ்கியின் ஆதரவாளராகவும் இருந்த பிய்ந்த்கோவ் "மிக அதிகபட்ச இலாபம் எடுக்கும்படி" 1923 கோடைக்காலத்தில் உத்திரவிட்டான். இதன் விளைவாக உற்பத்தியான பண்டங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்தன. இந்த விலையேற்றத்தின் காரணமாக 1923ம் வருட இலையுதிர் காலத்தில் 'சந்தை நெருக்கடி' ஏற்பட்டது. இதற்கு முழு பொறுப்பு கட்சிதான் என்று கட்சி மீது பழி போட்டான் டிராட்ஸ்கி.
லெனின் நோய்வாய்ப்பட்டு மத்தியக் கமிட்டியின் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட பொழுது, டிராட்ஸ்கி கட்சியின் மீதும் லெனினியத்தின் மீதும் தாக்குதல் தொடுத்தான். லெனின் மத்தியக் கமிட்டியில் இல்லாததால் கட்சி தன்னை எதிர்க்காது என்று 'லெனினிய சித்தாந்த தலைமை' பற்றிய புரிதல் இல்லாமல் முட்டாள்தனமாக நினைத்தான். எனினும் 1923ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மத்திய கமிட்டியின் பிளீனம் லெனினுடைய அரசியல் கொள்கைகளை ஆதரித்து வாக்களித்தது. கட்சி அணிகளைப் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிராட்ஸ்கியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஒதுக்கித் தள்ளியது. "ஐரோப்பாவின் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஜூவாலைகளைத் தூண்டிவிடும் பொருட்டு ஜெர்மனிக்கு இரசிய செம்படையை அனுப்பி "ஏற்றுமதிப் புரட்சி" செய்ய வேண்டும் என்ற டிராட்ஸ்கியின் முரட்டுத் துணிச்சல்வாத முட்டாள்தனத்தை மத்தியக் கமிட்டி இக்கூட்டத்தில் நிராகரித்தது. இராணுவத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை பலப்படுத்தும் பொருட்டு குடியரசின் புரட்சிகர இராணுவக் கவுன்சிலில் சில முக்கியமான கட்சி ஊழியர்களைச் சேர்த்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மத்திய கமிட்டியின் இந்த முடிவை டிராட்ஸ்கி வன்மையாக ஆட்சேபித்தான். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பாதியில் ஆவேசமாக வெளியேறினான்.
சில நாட்களுக்குப் பின்னர் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து மத்தியக் கமிட்டிக்கு அவன் ஒரு கடிதத்தை அனுப்பினான். இந்தக் கடிதத்தை தொடர்ந்து மத்தியக் கமிட்டிக்கு "நாற்பத்து ஆறு பேர்களின் அறிக்கை" என்ற தஸ்தாவேஜூம் வந்து சேர்ந்தது. "ஜனநாயக மத்தியத்துவ" கோஷ்டிவாதிகள், இடதுசாரிக் கம்யூனிஸ்ட்கள், டிராட்ஸ்கியவாதிகள் போன்ற பழைய எதிர்ப்புக் கோஷ்டிகளில் முன்பு இருந்தவர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்கள்... தொழிலாளர் எதிர்ப்புக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திடாவிட்டாலும், டிராட்ஸ்கியுடைய கடிதத்திலும், 46 பேர்களின் அறிக்கையிலும் உள்ள கருத்துக்களின்பால் அவர்கள் உடன்பாடு கொண்டிருந்தார்கள். லெனினுடைய உடல் நலக்குறைவை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லா எதிர்ப்புக் கோஷ்டிகளும் கட்சியின் மீது மிகவும் கொடிய தாக்குதலைத் தொடுத்தன. இந்த 46 பேர் கோஷ்டியில் லெனின் துணைவியார் குரூப்ஸ்கயாவும் சேர்ந்திருந்தார் என்று டிராட்ஸ்கியவாதிகள் கதைகட்டி விட்டனர்.
டிராட்ஸ்கியின் கடிதமும், 46 பேர் அறிக்கையும் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளைத் தாக்கின. நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், தேசப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டில் கட்சி எத்தகைய பொறுப்பும் ஏற்றிருக்கக் கூடாது என்றும் டிராட்ஸ்கியும் பிளவுவாதிகளும் கோரினார்கள். பொருளாதார முறைகள் மூலம் பொருளாதாரத்தை கட்டுப்பாடு செய்வது என்ற லெனின் கருத்திற்கு மாறாக, அப்பட்டமாக நிர்வாக நிர்பந்தத்தின் மூலம், அதிகார வர்க்க மனப்பாங்குடன் நிர்வாகத்தின் மூலம் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றான் டிராட்ஸ்கி.
முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு சமூகம் மாற்றமடையும் காலக்கட்டத்தில், சோசலிசப் பொருளாதாரத்திற்கும் விவசாயிகளின் சிறிய அளவு பண்ட உற்பத்தி முறைக்கும் இடையே ஓர் இணைப்பு போல விளங்கிய சுயேச்சையான சந்தையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதுதான் பொருளாதாரத் திட்டமிடுதலின் கேந்திரமான பிரச்சனை என்றார் லெனின். விவசாயப் பொருளாதாரத்தை மிக விரிவாக ஆராய வேண்டும் எனவும், தேசம் தழுவிய திட்டங்களை வரையறுக்கையில் விவசாயப் பொருளாதார அபிவிருத்தியில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் இதனால் விவசாய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் தொழிற் துறையின் வளர்ச்சியை விவசாயப் பொருளாதார நிலைமையுடன் ஒருங்கிணைக்க முடியுமென்றும் லெனின் சுட்டிக் காட்டினார்.
ஆனால், டிராட்ஸ்கி விவசாயப் பொருளாதாரம் 'தொழிற்துறையின் சர்வாதிகாரத்திற்கு' உள்ளடங்கியிருக்க வேண்டுமென்றான். விவசாயச் சந்தையுடன் எத்தகைய தொடர்புமின்றி சுயேச்சையாக அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் தொழிற்துறை வளர்ச்சியடைய வேண்டும் என்றான். இல்லையெனில் 'தொழிற்துறையின் பலவீனம்' காரணமாக விவசாயச் சந்தைக்கு அது உள்ளடங்கிப் போகும் நிலை ஏற்படும்; இவ்வாறு அது தன்னுடைய சோசலிசத் தன்மையை இழந்துவிடும்" என்றான்.
விவசாயப் பொருளாதாரத்தை, சோசலிசத்திற்கு சாதகமாக பாட்டாளிவர்க்க அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் 'ஆரம்ப நிலையிலான சோசலிச செல்வச் சேகரிப்பு' என்ற விதியை டிராட்ஸ்கியவாதி பிரியோபிரா ஷென்ஸ்கி வகுத்தார். குட்டி பூர்ஷ்வா உற்பத்தியாளர்களிடமிருந்து முதலாளித்துவம் எடுத்துக் கொண்டதை விட கூடுதலாக விவசாய சந்தையிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் டிராட்ஸ்கி. அதாவது உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் விலையை ஏற்றுவதும், வரைமுறையின்றி காகிதப் பணத்தை அச்சடித்து விநியோகம் செய்வதும் கூடுதலான நிதி சேர்ப்பதற்கான மூலவளங்கள் என்று டிராட்ஸ்கி கருதினான். கிராமப்புறங்களை 'காலனிகள்' போல ஆக்க வேண்டும் என்றும்; (விவசாயிகளின் உபரியை ஒட்டச் சுரண்டுவது) அப்போதுதான் மூலதனத்தைச் சேகரித்து தொழிற்துறையை வளப்படுத்த முடியும் என்றும் டிராட்ஸ்கி கூறினான். உண்மையில் இந்தக் கொள்கையை பின்பற்றினால் விவசாயிகள் உட்பட எல்லா உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் கட்சி நிர்மாணித்துக் கொண்டிருக்கும் சோசலிசத்தை கைவிடுவதற்கு ஒப்பாகும். ஆனால் டிராட்ஸ்கி 'சோசலிசத்தின் பாதுகாவலன்' போல நடித்தான். கனரகத் தொழில் துறையை கைவிட்டுவிட வேண்டும் எனவும், ஆலைகளையும் முழு தொழிற்துறைகளையும் மூடிவிடுவதால் ஏற்படும் சரக்குகளின் பற்றாக்குறையைத் தீர்க்க அந்நிய நாடுகளின் சரக்குகளை இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும் கூறினான். இது ஒட்டுமொத்தமாக சோசலிச சமூக அமைப்பையே அழித்துவிடும் 'அழிவுவாதம்' (Nihilism) ஆகும்.
சோசலிச நிர்மாணம் பற்றிய லெனினியக் கோட்பாடுகளை தாக்கியது மட்டுமின்றி, கட்சி ஸ்தாபன பிரச்சனைகள் பற்றியும் டிராட்ஸ்கியும், எதிர்ப்பு கோஷ்டிகளும் தங்கள் கருத்துக்களை மத்தியக் கமிட்டிக்குத் தெரியாமலேயே கட்சி நிறுவனங்களுக்குப் பரப்பத் தொடங்கின. கட்சி நிறுவனங்கள் பொருளாதார உறுப்புகளை கைப்பற்றி அபகரித்துக் கொண்டன என்று அவதூறு பரப்பினான் டிராட்ஸ்கி. பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை மறுத்து, குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தையே டிராட்ஸ்கி விரும்பினான். உறுதியான கட்சிக் கட்டுப்பாட்டை கைவிடுதல், கோஷ்டிகள் இயங்குவதற்கு சுதந்திரம் கோருதல், பெரும்பான்மை முடிவை புறக்கணித்து சிறுபான்மை சுதந்திரமாக செயல்படுவதற்கு உரிமைக் கொடுத்தல் போன்ற அம்சங்களே உண்மையான உட்கட்சி ஜனநாயகம் என்றான் டிராட்ஸ்கி. இது சம்பந்தமான கமிஷனில் டிராட்ஸ்கியை நியமித்து உட்கட்சி விவாதத்திற்கு மத்தியக் கமிட்டி அழைத்தபோது உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி வீட்டில் பதுங்கி கொண்டான் டிராட்ஸ்கி. அதனால், கமிஷன் நடவடிக்கைகளை டிராட்ஸ்கி வீட்டிலேயே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதால் தப்பிக்க முடியாமல் அதில் பங்கேற்றான். நகல் தீர்மானத்தில் இரண்டு அம்சங்களை வலியுறுத்தினான்: (1) தொழிற்சங்கத் தலைவர்களை வலிமை குன்றச் செய்தல் என்ற பழைய காலாவதியாகிப் போன சரக்கை மறுபதிப்பு செய்து அதை கட்சிக்கு விரிவுப்படுத்தினான்; அதாவது கட்சியில் ஜனநாயகத்தை அமல்படுத்தாத அனைவரும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றான்; (2) 'கோஷ்டிகள் பற்றிய' வாதத்தில், கோஷ்டிகள் கட்சிக்குள் இருப்பது இயல்பென்றும்; அந்த எதார்த்த உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்றும்; பத்தாவது காங்கிரசு கோஷ்டியை தடை செய்துள்ளது என்றாலும், கோஷ்டிகளை சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்றும் டிராட்ஸ்கி பிரேரணை ஒன்றை முன்வைத்தான். இந்த பிரேரணைகளை கமிஷன் நிராகரித்தது. மத்தியக் கமிட்டியின் பொலிட் பீரோ, கமிஷன் தயாரித்திருந்த நகல் தீர்மானத்தை விரிவான விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக்கொண்டது. நடைமுறை உத்தியாக டிராட்ஸ்கி இந்த தீர்மானத்தை ஆதரித்தான். ஆனால் மறு நாள் கட்சி நிறுவனங்களுக்கு டிராட்ஸ்கி இன்னொரு கடிதத்தை அனுப்பி வைத்தான்.
'கட்சி தீர்மானம் பற்றி' மத்திய கமிட்டி நிறைவேற்றியிருந்த தீர்மானத்திற்கு இந்த கடிதத்தில் டிராட்ஸ்கி தவறான விளக்கம் அளித்திருந்தான். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை 'அதிகார வர்க்க மனப்பான்மை' கொண்டது; 'நிறுவனத் தன்மை கொண்டது' என்று குற்றம் சாட்டினான். உட் குழுக்களும் கோஷ்டிகளும் இயங்குவதற்கு சுதந்திரம் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த கோட்பாடு என்று டிராட்ஸ்கி பிரகடனம் செய்தான்; கட்சியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றான்; கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றான்; பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது என்பது எதேச்சதிகாரம் என்றான்; கட்சிக்கும், சோவியத் அரசுக்கும் ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் மூல காரணம் 'கட்சி நிறுவனத்தின் நிர்ப்பந்தமே' என்றான். பழைய மென்ஷ்விக்குகள், சோசலிச புரட்சியாளர்கள், பண்டிஸ்டுகள் போன்றவர்களை கோஷ்டி சேர்க்க தீவிரமாக முயற்சித்தான். தலைமை வெறியில் கோஷ்டிவாதத்திலும், அராஜகவாதத்திலும் இறங்கினான். ஆனால் டிராட்ஸ்கியின் கோஷ்டிகள் படுதோல்வி அடைந்தனர்; கட்சி பொது விவாதத்தில் 10%க்கும் குறைவானவர்கள் மட்டுமே இவர்களை ஆதரித்தனர். இது குறித்த கட்சி தீர்மானம் (1924 ஜனவரி மாதம்) வருமாறு: "எதிர் தரப்பினர் போக்கானது போல்ஷ்விசத்தை மாற்றி திரிப்பதற்காகச் செய்யப்படும் வெறும் முயற்சி மட்டுமல்ல; லெனினியத்திற்கு எதிரானது மட்டுமல்ல; இது கேவலம் குட்டி பூர்ஷ்வா திரிபுவாதம் என்பது மிகத் தெளிவாக காணக் கிடக்கிறது. பாட்டாளி வர்க்க கட்சியின், அதனுடைய கொள்கையின் நிலைகளின் மீது குட்டி பூர்ஷ்வாக்கள் தொடுக்கும் நிர்ப்பந்தத்தை இந்த எதிர் தரப்பு பிரதிபலிக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை."
1924 ஜனவரி மாதத்தில் உலக பாட்டாளி வர்க்கம் தன் ஆசான் லெனினை இழந்தது. கடும் நோய் வாய்ப்பட்டிருந்த தோழர் லெனின் காலமானார். லெனினுடைய மறைவிற்குப் பின் கட்சியில் சேரும்படி இரசிய கம்யூனிஸ்ட் கட்சியில் ஸ்டாலின் தலைமையிலான கமிட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆயிரக்கணக்கான மக்கள் கட்சியில் இணைந்தார்கள். குறுகிய காலத்திற்குள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியது. இதன் விளைவாக கட்சியில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 44 சதத்திலிருந்து 60 சதம் உயர்ந்தது.
கட்சியில் அதிகார வர்க்க 'மனப்பான்மை' மலிந்து கிடக்கிறது என்றும், வெகுஜனங்களிடையே கட்சி தனிமைப்பட்டு விட்டது என்றும் பிரச்சாரம் செய்துவந்த டிராட்ஸ்கி கும்பலின் அவதூறுகளை லெனின் பெயரால் நடத்தப்பட்ட கட்சி உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் அம்பலப்படுத்தியது. கட்சி ஒற்றுமையைச் சீர்குலைக்க எதிர் தரப்பினர் வகுத்திருந்த சதித் திட்டங்களை முறியடித்தது. டிராட்ஸ்கியவாதிகளுடன் இருந்த இளைஞர்களும், ஊழியர்களும் அங்கிருந்து விலகி லெனினுடைய கருத்துக்களின்பால் தம்முடைய விசுவாசத்தைப் பிரகடனம் செய்தார்கள்.
1924 மே மாதத்தில் நடைபெற்ற 13வது காங்கிரசில் கட்சியின் லெனினியக் கொள்கை அடைந்த வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. கட்சியின் ஒற்றுமையை சற்றும் அயராது பேணிக் காக்கும்படி மத்திய கமிட்டிக்கு கட்சி காங்கிரசு ஆணையிட்டது.
4
லெனின் மறைவிற்குப் பிறகு
தோழர் லெனினுக்குப் பிறகு தோழர் ஸ்டாலின் கட்சி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்சிய லெனினியத்தைப் பாதுகாப்பதற்கும், கட்சியை பாதுகாப்பதற்கும், சோசலிசத்தை நிர்மாணித்து வளர்ப்பதற்கும், லெனினிய பதாகையை உயர்த்திப் பிடித்தார் ஸ்டாலின். அதற்காக தனது வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்தார். டிராட்ஸ்கியசத்தையும், புகாரின், ஜினோவிவ், காமனெவ், ராடெக், டிராட்ஸ்கி கும்பலின் முதலாளித்துவ மீட்சிக்கான அனைத்து குழிபறிப்பு சதிகளையும் முறியடித்தார்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் சோசலிச நிர்மாணப் பணிகள் தொடந்து நடந்ததால், வாழ்க்கையின் சகல துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு இரசியா முன்னேற்றம் அடைந்தது. ஏகாதிபத்திய நாடுகள் முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடிகளில் சிக்கியபோது, சோசலிசம் வீறுநடை போட்டு முன்னேறியது. டிராட்ஸ்கியும், அவனது சீடர்களும் இந்த புறநிலை உண்மைகளைக் காண்பதற்கு அஞ்சி கண்களை இறுக மூடிக்கொண்டார்கள். சோசலிசம் வெற்றி அடைந்ததைக் கண்டு அதிருப்தியுற்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பகையுணர்ச்சிகளை இவர்கள் பிரதிபலித்தார்கள். எனவே சோசலிசத்தின் வெற்றிகள் பல்கிப் பெருக பெருக, டிராட்ஸ்கியவாதிகளின் மூர்க்கத்தனமும் பல்கிப் பெருகி முதலாளித்துவ மீட்சிக்கான குழிபறிப்பு சதிகளில் மூர்க்கமாக ஈடுபட்டனர்.
1923ம் ஆண்டு அரசியல் விவாதங்களில் படுதோல்வி அடைந்ததால் மறு தாக்குதலுக்கு திட்டமிட்ட டிராட்ஸ்கி, லெனினுடைய வரலாற்றுப் பாத்திரத்தை இழிவுபடுத்தியும், அவருடைய போதனைகளை மாற்றித் திருத்தியும் ஏராளமான கட்டுரைகளைப் பிரசுரித்தான். இது போல்ஷ்விக்குகளின் நியாயமான கோவத்தை தட்டியெழுப்பியது. பிராவ்தா பத்திரிக்கையும், கட்சிப் பத்திரிக்கையான போல்ஷ்விக் உள்ளிட்ட ஏனைய பத்திரிக்கைகளும் இந்த வலது சந்தர்ப்பவாத கும்பலை வன்மையாக கண்டித்தன. "திருத்தல்வாதத்தை முளையிலேயே கிள்ளியெறியும் பொருட்டு, இத்தகைய தவறுகளை ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டும்." என்று 'போல்ஷ்விக்' பத்திரிக்கை எழுதியது.
1924ம் ஆண்டு இறுதியில் "அக்டோபர் படிப்பினைகள்" என்ற கட்டுரையை டிராட்ஸ்கி வெளியிட்டான். இதில் லெனினியத்திற்கு மாற்றாக டிராட்ஸ்கியிசத்தை அரங்கேற்றி 'இதுதான் லெனினியம்' என்று துரோகத்தனமாக எழுதினான். லெனினியத்தின் பெயரால் லெனினியத்தை திரித்தான். ஒட்டு மொத்தக் கட்சியும் இந்த துரோகம் கண்டு வெஞ்சினம் கொண்டு எதிர்த்துப் போராடியது. கூர்மையான தத்துவப் போராட்டம் துவங்கியது. '1917ம் வருடம்' என்ற தனது தொகுப்பு நூலுக்கு முன்னுரையாக டிராட்ஸ்கி, இந்தக் கட்டுரையை எழுதினான். இதன்மூலம் கட்சியின் மீது இன்னொரு உட்கட்சி விவாதத்தை திணிக்க முயற்சித்தான். 1923ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜெர்மனியில் புரட்சிகர நிகழ்ச்சிகள் மென்மேலும் உத்வேகம் பெற்ற பொழுது, கம்யூனிச அகிலத்தின் தலைமையும் போல்ஷ்விக் கட்சியும் 'அஞ்சி நடுங்கி விட்டன' என்று வாய் வீச்சாடினான். புரட்சியில் 'குதிக்கும்படி' ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்தை அகிலம் அறைகூவி அழைக்கவில்லை என்றும், செம்படையை ஜெர்மனிக்கு அனுப்பி போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு உதவி செய்யவில்லை என்றும் முட்டாள்தனமாக குற்றஞ் சாட்டினான். 'மத்தியக் கமிட்டியில் ஒரே ஒரு இரும்பு மனிதன் இருந்தார். அவரால்தான், உலகப் பாட்டாளி வர்க்கத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முடியும்; அந்த இரும்பு மனிதர் டிராட்ஸ்கிதான்" என்று ஈனத்தனமாக எடுத்துக்காட்டுவதே டிராட்ஸ்கி எழுதிய கட்டுரையின் குறிக்கோள்.
ஜெர்மன் புரட்சி தோற்றதற்கு காரணம், ஜெர்மன் பாட்டாளி மக்களில் கணிசமான பகுதியினர், பூர்ஷ்வாக்களை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியையும் கம்யூனிச அகிலத்தையும் எதிர்த்துப் போராடுவதில் அதிக முனைப்புக் காட்டிய ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் வலதுசாரி சந்தர்ப்பவாதத் தலைமையின் மீது அப்போது அதிக நம்பிக்கை வைத்திருந்ததேயாகும். மேலும் டிராட்ஸ்கியின் கொள்கையைக் கடைபிடித்த ஹின்ரீச் பிராண்ட்லர், ஆகஸ்ட் தால்ஹீமர் போன்ற ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியில் இருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதிகள் செய்த தவறுகளால் நிலைமைகள் மிகவும் மோசமடைந்தன. தன்னுடைய இவ்விரு சீடர்களின் துரோகம்தான் ஜெர்மன் புரட்சியின் பின்னடைவுகளுக்கு உண்மையான காரணம் என்பதை மூடி மறைக்கும் பொருட்டும், தன்னுடைய துரோகத்தனத்தையும், எதிர்ப்புரட்சிகர களங்கத்தையும் மூடி மறைக்கும் பொருட்டும், அகிலமும் போல்ஷ்விக் கட்சியும்தான் ஜெர்மன் புரட்சி தோல்விக்கு காரணம் என வீணாக பழி சுமத்த முயற்சித்தான். லெனினியக் கோட்பாட்டை ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் முரணின்றி கடைபிடித்து வந்தவர்களே ஜெர்மன் புரட்சிப் போராட்டத்தின் முன்னணிப் படையாக விளங்கினர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த சமயத்தில் ஹாம்பர்க் நகரில் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த எர்ன்ஸ்ட் தேல்மேன் ஹாம்பர்க் தொழிலாளர்களின் ஆயுதந்தாங்கிய எழுச்சிக்கு தலைமை தாங்கினார். 1923 அக்டோபரில் ஜெர்மனியில் நடைபெற்ற புரட்சிகர நிகழ்வுகளுக்கெல்லாம் இதுதான் சிகரம் வைத்தாற்போல் விளங்கியது. இந்த வரலாற்று உண்மைகளை மூடி மறைத்துவிட்டு, லெனினியம் சரி என்றால், ஏன் ஜெர்மனியில் புரட்சி பரவவில்லை? என்று கேட்டான் டிராட்ஸ்கி. அவனது அவதூறுகள் வெறுத்து ஒதுக்கப்பட்டன. தனியொரு நாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை என்ற வாதத்தை வீணாக கிளப்பிவிட்டு தோற்றுப் போனான் டிராட்ஸ்கி.
அகிலத்திலும், கட்சியிலும் வலதுசாரிகள் ஆதிக்கம் பெற்றுள்ளதாக வரலாற்றைப் புரட்டினான் டிராட்ஸ்கி. தனது 'அக்டோபர் படிப்பினைகள்' கட்டுரையில் நவம்பர் புரட்சி தயாரிப்பு நடந்த பொழுது, கட்சியானது முரண்பாடுகளில் சிக்கிக் கிடந்தது என்று எழுதினான். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி புரட்சி சென்றதால் இந்த முரண்பாடுகள் தோன்றின என்று எழுதினான். கட்சித் தலைமையில்லாமல் புரட்சி நடக்கும் காட்சியை நாம் கண்டிருக்க முடியும் என்றான். கட்சி தன்னுடைய தத்துவத்தை அதாவது உளுத்துப் போன டிராட்ஸ்கியிசத்தை ஏற்றுக் கொள்ளாததால்தான் அத்தகைய சம்பவம் நிகழவில்லை என்றான் டிராட்ஸ்கி.
லெனினியத்தின் சர்வவியாபகமான, சர்வதேசியத் தன்மையை டிராட்ஸ்கி மறுத்தான்: "இரசியாவின் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு" மட்டுமே பொருந்தக் கூடிய சில பிரத்தியேகமான குண இயல்புகளே லெனினியத்திற்கு உண்டு என்றான். ஒவ்வொரு விசயத்திலும் லெனினை, மார்க்சுக்கு எதிராக நிறுத்த முயற்சித்தான்; மார்க்சியத்திற்கு எதிரானதுதான் லெனின் கொள்கைகள் என்று காட்ட முயற்சித்தான். மார்க்ஸ் ஒரு தத்துவ ஞானி, கொள்கை மேதை என்று புகழ்ந்து பாடிய டிராட்ஸ்கி, லெனின் வெறும் நடைமுறையாளர் என்ற நிலைக்கு தாழ்த்தினான். லெனின் மறைவுக்குப் பிறகு, லெனின் தத்துவ மேதை என்று புகழ்பாடி, ஸ்டாலினை வெறும் நடைமுறையாளர்தான் என்று இழிவுபடுத்தினான். லெனினுக்கு எதிராக ஸ்டாலினை முன்நிறுத்தினான்.
லெனின் மீதும், லெனினியத்தின் மீதும் டிராட்ஸ்கி தொடுத்த தாக்குதல்களை எல்லாக் கம்யூனிஸ்டுகளும் ஒரு மனதாக கண்டித்தார்கள். "தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை தன்னகத்தே கொண்டிருக்கக் கூடிய, அக்டோபர் புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தை வெற்றிக்கு வழி நடத்திச் சென்ற லெனினுடைய போதனைகள் தாக்கப்படுவதை நாங்கள் சற்றும் சகித்துக் கொள்ள முடியாது என்பதைப் பிரகடனம் செய்கிறோம்!" என்று மாஸ்கோவிலுள்ள 'திரெக்கோர்ணயா மானுபேக்சரா' பஞ்சாலையில் நடைபெற்றக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் கூறியது. 'பாட்டாளி மக்களுடைய போராட்டத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வளர்ச்சியினை அலங்கோலமாகக் காட்டும் டிராட்ஸ்கிய உருக்கோணல் கண்ணாடியைக் களைந்தெறிய வேண்டும். சுக்கு நூறாக உடைத்து நொறுக்க வேண்டும்" என்று ட்ரான்ஸ்கா தேசிய பிராந்தியக் கட்சி கமிட்டியின் பிளீனம் தீர்மானம் நிறைவேற்றி பிரகடனம் செய்தது. பெருந்திரளான கட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று மத்தியக் கமிட்டியும், மத்திய கன்ட்ரோல் கமிஷனும் 1925 ஜனவரியில் நடைபெற்ற கூட்டு பிளீனமும் டிராட்ஸ்கியின் மார்க்சிய லெனினிய விரோத பிரச்சாரங்களை மிகப் பெருவாரியான வாக்குகள் மூலம் கண்டித்தன.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை மென்ஷ்விக் பாணியில் மறுப்பது, உழைக்கும் மக்கள் தொகுதியில் பாட்டாளி வர்க்கத்தைச் சாராதவர்களின் அரைகுறைப் பாட்டாளி வர்க்கப் பாத்திரத்தை தலைமைப் பாத்திரம் அளவுக்கு மிகைப்படுத்துவது, புரட்சியிலும் சோசலிச நிர்மாணத்திலும் கட்சியின் பாத்திரத்தை சிறுமைப்படுத்துவது, போலிப் புரட்சிகர சாரம், தோல்வி மனப்பான்மையின் சாரம், அராஜகவாத சிண்டிகலிசம், எதிர் புரட்சிகர சாரம், திருத்தல்வாத நாணயத்தின் இரு பக்கங்களான இடது-வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம், எண்ணமுதல்வாதம், ஏகாதிபத்திய ஆதரவு சமூக தேசியவெறி, குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதம், கோஷ்டிவாதம், மார்க்சிய லெனினிய விரோதம், தனி நாட்டில் புரட்சியை மறுப்பதன் முலம் 'புரட்சியையே' மறுப்பது என அனைத்துமாக டிராட்ஸ்கியிசம் விளங்கியது.
லெனினியத்திற்கு பதிலாக டிராட்ஸ்கியிசத்தை, போல்ஷ்விசத்திற்கு பதிலாக மென்ஷ்விசத்தை, புரட்சிக்கு பதிலாக எதிர்புரட்சியை அரங்கேற்ற முயலும் டிராட்ஸ்கியை கட்சி பிளீனம் வன்மையாக கண்டித்தது. (1925 ஜனவரி பிளீனம்). டிராட்ஸ்கி வகித்து வந்த தரைப்படை, கப்பற்படையின் மக்கள் கமிசார் பதவியிலிருந்தும், குடியரசின் புரட்சிகர இராணுவ கவுன்சில் தலைவர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவது என்று பிளீனம் தீர்மானித்தது. போல்ஷ்விக் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் கட்சிக் கட்டுப்பாட்டை வெறும் சொற்களில் மட்டுமின்றி நடைமுறையிலும் கடைபிடிக்க வேண்டும் எனவும், லெனினியத்திற்கு விரோதமான எல்லா நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் எனவும் பிளீனம் டிராட்ஸ்கியை எச்சரித்தது.
உலகமெங்குமிருந்த கம்யூனிஸ்ட்டுகள் தங்களிடையே இருந்த டிராட்ஸ்கியவாதிகளை முறியடிப்பதற்கு உறுதி பூண்டார்கள். டிராட்ஸ்கியிசத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த பிராண்ட்லர் தால்ஜீமர், பிரான்சிலிருந்த போரிசௌவரைன், இத்தாலியைச் சேர்ந்த அமாபாதியே போர்திகா, அமெரிக்க நாட்டவரான லுட்விக்ஸோரே ஆகிய சந்தர்ப்பவாதத் தலைவர்கள் டிராட்ஸ்கியவாதிகளுடன் உடன்பாடு கண்டிருந்தார்கள். இவர்களை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக போராடினார்கள். புரட்சியைக் கொல்லும் நச்சுப்பாம்புதான் டிராட்ஸ்கியிசம் என்று உலகெங்குமுள்ள கம்யூனிஸ்ட்கள் உணர்ந்திருந்தனர். லெனினியத்தைக் காக்க உறுதி பூண்டனர். லெனினியத்தை ஆழமாக கற்கத் துவங்கினர். பிரான்சு பிரிட்டன், ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் லெனின் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன.
1923-24ல் டிராட்ஸ்கியையும், டிராட்ஸ்கியவாதிகளையும் எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கட்சிக்கு கிடைத்த வெற்றியும், கட்சியின் நடவடிக்கைகளுக்கு சகோதரக் கட்சிகள் அளித்த ஆதரவும், ஒரு சித்தாந்தம் என்ற முறையில் டிராட்ஸ்கியிசத்தை அடியோடு முறியடிப்பதற்கான பாதையைச் செப்பனிட்டன.
- · லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் (Foundation of Leninism).
- · லெனினியத்தின் பிரச்சனைகளைப் பற்றி (On Problems of Leninism)
- · லெனினியமா? டிராட்ஸ்கியிசமா? (Leninism or Trotskyism)
போன்ற ஸ்டாலினின் படைப்புகள் டிராட்ஸ்கியிசத்தை குழி தோண்டி புதைப்பதற்கு 'தத்துவ ஆயுதங்களாக' விளங்கின.
மென்ஷ்விக் கருத்துக்களை மூடி மறைத்து வைத்திருந்த 'புதிய எதிர்ப்பு' கோஷ்டியினர், டிராட்ஸ்கி கும்பலுடன் சேர்ந்து கொண்டு, டிராட்ஸ்கியைப் போலவே லெனினுடைய உடல் நலக் குறைவையும், அவருடைய மரணத்தையும் பயன்படுத்திக்கொண்டு லெனினியத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர்.
'அக்டோபர் படிப்பினைகள்' என்ற டிராட்ஸ்கியின் லெனினிய விரோத பிரசுரத்தைக் கண்டு கொதித்தெழுந்த கட்சி ஊழியர்களின் கோவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்ற ஜீனோவிவும், காமனேவும் மத்தியக் கமிட்டியிலிருந்து டிராட்ஸ்கியை வெளியேற்ற வேண்டும் என்று நாடகமாடினார்கள்; ஸ்டாலினும், போல்ஷ்விக் கட்சியும் அவர்களின் நாடகத்தை நன்றாக அறிந்திருந்தார்கள். 1917ம் ஆண்டில் அவர்கள் கடைப்பிடித்த சந்தர்ப்பவாத சரணாகதிப் போக்குகளை நன்றாக நினைவில் வைத்திருந்த கட்சி, அவர்களின் கருத்துக்கள் மீது எத்தகைய பிரமைகளும் கொண்டிருக்கவில்லை. கட்சியின் 10வது காங்கிரசு முடிவுகளை அவர்கள் டிராட்ஸ்கியுடன் சேர்ந்துகொண்டு புறக்கணித்தார்கள் என்பதை ஊழியர்கள் அறிந்திருந்தார்கள். லெனின்கிரேடை மையமாகக் கொண்டு கட்சி விரோத பிளவு கோஷ்டியொன்றை அமைத்தார்கள். இந்த கோஷ்டிதான், 'புதிய எதிர்ப்பு' கோஷ்டியின் கேந்திரமாக திகழ்ந்தது.
'புதிய எதிர்ப்பு' கோஷ்டியின் அரசியல் கொள்கையானது 14வது அனைத்து யூனியன் கட்சி மாநாடு கூடுவதற்கு முன்பு நடைபெற்ற பொலிட் பீரோ கூட்டத்தில் நன்கு தெளிவாக வெளியாயிற்று. மாநாட்டில் "போல்ஷ்விக் கட்சியின் கடமைகள் பற்றி" என்ற அறிக்கை நகல் தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கை சோவியத் யூனியன் சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய லெனினுடைய கொள்கையை தெளிவாக எடுத்துரைத்தது. இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக ஜினோவிவ் மற்றும் காமனேவ் இருவரும் அறிவித்தார்கள். சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கு இரசிய பாட்டாளி வர்க்கம் சக்தியற்று இருப்பதாகவும், அது உலகப் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெறும் வரை காத்திருக்க வேண்டும் எனவும்; அதுவரை உலக முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கிக் கொள்ள வேண்டும் எனவும்; சோசலிசத்தை கைகழுவிட வேண்டும் எனவும் டிராட்ஸ்கியும் அவனது ஆதரவாளர்களும் மீண்டும் ஊளையிடத் துவங்கினர்.
14வது கட்சி மாநாட்டிற்குப் பிறகு (ஏப்ரல் 1925) புதிய எதிர்ப்புக் கோஷ்டியின் தலைவர்கள் கட்சிக் கொள்கையிலிருந்து மேலும் விலகிச் சென்றார்கள். 15வது கட்சி மாநாடு நடைபெறுவதற்கு சற்று முன்பு, மாஸ்கோ கட்சி ஊழியர்களிடையே புக்காரின் வெளியிட்ட சந்தர்ப்பவாதக் கருத்துக்களைச் சாக்காக கொண்டு இவர்கள் மத்தியக் கமிட்டியின் மீது மீண்டும் தாக்குதல் தொடுத்தார்கள். மாஸ்கோ கட்சி ஊழியர்களிடையே உரையாற்றுகையில், கிராமப் புறங்களில் சோவியத் ஆட்சிக்கு இருக்க கூடிய ஒரே பற்றுக்கோடு (ஆதாரம்) குலாக்குகள்தான் என்றும் குலாக்குப் பண்ணைகள் சோசலிசத்தின் அங்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் புகாரின் குறிப்பிட்டார். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சேர்ந்த குலாக்குகளின் நிலங்களை பறிமுதல் செய்தல், நடுத்தர -நிலமற்ற விவசாயிகள் மீது கூட்டுறவை பலப்படுத்துதல் என்ற லெனினுடைய கொள்கைகளுக்கு எதிராக புகாரின் 'செல்வந்தன் ஆகிக் கொள்' என்ற கோஷத்தை முன்வைத்தார். சோசலிசக் கட்டுமானத்திலும், கட்சியிலும் முதலாளித்துவத்தை புகுத்தும் முயற்சியில் டிராட்ஸ்கி -புகாரின் -ஜினோவிவ் -காமனேவ் கும்பல் தீவிரமாக முயற்சி செய்தது. சோசலிசக் கட்டுமானத்தை சீர் குலைக்கும் விதமாக 'குலாக்குகளின்' போராட்டத்தை தூண்டிவிட்டது.
1925ம் வருட இலையுதிர் காலத்தில் டிராட்ஸ்கி "சோசலிசத்திற்கா? அல்லது முதலாளித்துவத்திற்கா? என்ற பிரசுரம் வெளியிட்டான். லெனினின் சோசலிச பொருளாதாரத் திட்டத்தை கடுமையாக தாக்கினான். உலகின் ஏனைய பகுதியிலிருந்து 'தனித்து ஒதுங்கியுள்ள', 'பிரத்தியேகமான' தேசியப் பொருளாதாரத்தை கட்டியமைக்க கட்சி விரும்புகிறது என்ற குற்றம் சாட்டினான். கனரகத் தொழிலின் துரித வளர்ச்சிக்காக பணத்தையும் செல்வ வளங்களையும் ஒதுக்குவதன் மூலம், சோவியத் பொருளாதார முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு பதிலாக அதன் வேகத்தை குறைத்துவிடுவதற்கு கட்சி முனைந்துள்ளது என்று தாக்கினான். சோவியத் தொழிற்துறையை, "அரசாங்க முதலாளித்துவ தொழிற்துறை" (அரசின் வசமிருக்கும் இது 'பிரம்மாண்டமான ஏகபோகங்களுக்கு எல்லாம் ஏகபோகம் போன்றது) என்று டிராட்ஸ்கி அழைத்தான். சோவியத் பொருளாதார அமைப்பு உலக முதலாளித்துவ சந்தையுடன் சேர்ந்து 'வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று தாக்கினான்.
முதலாளித்துவத்தின் கீழ் உருவாகியிருக்கும் உலக உழைப்பு பிரிவினையை புறக்கணிக்க கூடாது என்று டிராட்ஸ்கி கூறினான். ஆனால், இதை நடைமுறையில் கட்சி கடைபிடித்திருந்தால் சோவியத் நாட்டின் தொழில்நுட்பம், பொருளாதாரம் பின்தங்கியிருக்கும். உற்பத்தியான பண்டங்களை அதிகம் இறக்குமதி செய்ய வேண்டுமென்றும், தனியார் மூலதனத்திற்கு குறிப்பாக அந்நிய மூலதனத்திற்கு கதவுகளை அகலத் திறந்துவிட வேண்டுமென்றும் டிராட்ஸ்கி முழங்கினான்.
நாட்டின் பொருளாதாரம் நீண்ட நெடுங்காலத்திற்கு விவசாயப் பொருளாதாரமாக இருக்க வேண்டியது அவசியம் என 'புதிய எதிர்ப்பு' கோஷ்டி பேசியது. தொழில்மயப்படுத்தும் கொள்கையை அது கடுமையாக எதிர்த்தது. இரசியா பின்தங்கிய விவசாய நாடாகவே இருக்கவேண்டும் என்றது. மென் இயந்திர தொழிற் துறையையும், விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்யக் கூடிய கன இயந்திரத் தொழிலின் ஒரு சில பிரிவுகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்து, நடுத்தர விவசாயிகளுடன் தொழிலாளி வர்க்கத்தின் கூட்டுமுறையைப் பலப்படுத்துதல் என்ற லெனினியக் கொள்கையை விமர்சிக்கையில் வெஞ்சினம் கக்கியது. கிராமங்களில் முதலாளித்துவ அம்சங்களைப் பாகுபடுத்தி பார்க்க வேண்டுமென்றும், அதோடு விவசாயிகளைப் பெருந்திரளாய் பாட்டாளி மக்களாக்க வேண்டும் என்றும், இந்தப் பாதை ஒன்றுதான் நகரத்திலும் கிராமப்புறங்களிலும் இருக்கும் உழைப்பாளி மக்களிடையே உண்மையான உறுதியான கூட்டுறவுக்கு உத்திரவாதமளிக்க முடியுமென்றும் வலியுறுத்தியது. இவ்வாறு "சோசலிசப் பொருளாதாரம்" பற்றிய லெனினியக் கொள்கையை தாக்கியது 'புதிய எதிர்ப்பு' கோஷ்டி.
1925 டிசம்பரில் நடைபெற்ற 14வது கட்சிக் காங்கிரஸ் 'புதிய எதிர்ப்பின்' கொள்கைகள் மறுத்து அறிக்கை வெளியிட்டது.
சோசலிச சமுதாயத்தைக் கட்டி நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்தையும் சோவியத் நாடு பெற்றிருக்கிறது என்ற லெனினுடைய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி விரைவில் வெற்றியடையாவிட்டால் கூட சோவியத் யூனியனில் சோசலிசம் வெற்றி அடைவது சாத்தியமே என்று காங்கிரசு பிரகடனம் செய்தது. சோசலிசத்தை நிர்மாணிப்பதில் சாதிக்கப்ட்ட வெற்றிகளையும் சோசலிசத்தின் எதார்த்த நிலையையும் நிரூபிக்க கூடிய எடுப்பான திரளான உண்மையை மத்தியக் கமிட்டியின் அரசியல் அறிக்கையும், பிரதி நிதிகளின் சொற்பொழிவுகளும் நன்கு சுட்டிக் காட்டின.
பல ஆண்டுகளால் கிடைத்திருந்த அனுபவத்தை காங்கிரசு தொகுத்து கூறியது. சோசலிசப் பொருளாதார புனரமைப்பாக திகழும் சோசலிச தொழில்மயப்படுத்தும் கட்டத்தினை நாடு எட்டியுள்ளது என்று காங்கிரசு பிரகடனம் செய்தது. சோவியத் யூனியனை வலிமை மிக்க தொழிலியல் அரசாக உருமாற்றுவதன் மூலம் சோசலிசத்தை கட்டி நிர்மாணித்தல் என்ற பொதுவான லெனினிய அரசியல் பாதையின் மீது தாம் கொண்டிருந்த விசுவாசத்தை, நம்பிக்கையை காங்கிரசில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஊர்ஜிதம் செய்தார்கள்.
பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியாது என்று வாதாடி வந்த சந்தர்ப்பவாதிகளுக்கும் வீண் கிலியைப் பரப்புவர்களுக்கும் இது ஆணித்திரமான பதிலாக அமைந்தது.
குலாக்குகளின் (கிராமப்புற முதலாளிகள்) அபாயத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று காங்கிரசு எச்சரித்தது. ஆனால் புனர் நிர்மாணப் பணிகளின் இறுதி கட்டத்தில், நடுத்தர விவசாயிகளின் ஆதரவைப் பெற்று அவர்களைக் கவர்ந்திழுப்பதுதான் கிராமப்புற பகுதிகளில் விவசாயக் கொள்கையின் மிக முக்கிய கடமையாக இருக்க கூடிய சமயத்தில், நடுத்தர விவசாயிகளுக்கு எதிராக செயல்படுத்தப்படும் 'இடதுசாரி திரிபுதான்' முக்கிய அபாயம் என்றும் காங்கிரசு வலியுறுத்தியது. டிராட்ஸ்கியும் அவனது சீடர்களும், 'புதிய எதிர்ப்பு' வாதிகளும் இந்த திரிபை பிரதிபலித்தார்கள்.
இதற்கிடையில் எதிர்ப்பு கோஷ்டியினர், கட்சி நிறுவனங்களை கட்சியிலிருந்து தனியே பிரித்துவிடும் சதித்தனத்துடன், பிளவுவாத நடவடிக்கையை தீவிரப்படுத்தனார்கள். லெனின்கிராடு நகரில் 'பிராவ்தா' மற்றும் மத்திய கமிட்டியின் கட்சிப் பத்திரிக்கையின் விநியோகத்தை சீர்குலைத்தார்கள். 14வது கட்சி காங்கிரசு இந்த பிளவுவாதத்தை எதிர்த்துப் போராடும்படி அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவலை செவிமடுத்து எதிர்ப்புக் கோஷ்டியின் பிளவுவாத நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்க்க 'லெனின் கிராடு' கம்யூனிஸ்ட்டுகள் முற்பட்டனர். இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் எதிர்ப்புக் கோஷ்டி கட்சி முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக நாடகம் ஆடியது. நடைமுறையில் தொடர்ந்து லெனினியக் கொள்கைகளை தாக்குவதன் மூலம் லெனினுக்கு மேலானவராக காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கியின் பைத்தியக்காரத்தனமான கொள்கையின் சாரமே எதிர்ப்புக் கோஷ்டியின் சாரமாக இருந்தது.
மார்க்சுக்கு எதிராக லெனினை நிறுத்திட லெனினிசத்தை தாக்கும் கொள்கையே டிராட்ஸ்கியின் கொள்கையாகும். டிராட்ஸ்கியசம் மார்க்சிய லெனினிசத்தின் பரம எதிரியாகவும்; அது மிகவும் ஆபத்தான எதிர் புரட்சிகர 'இசம்' ஆகவும் இருந்தது; இருந்து வருகிறது.
புதிய எதிர்ப்புக் கோஷ்டியினரும், டிராட்ஸ்கியும் அவனது சீடர்களும் இரகசியமான கட்சி விரோதக் குழுக்களை அமைத்தார்கள். தங்களது பிரதிநிதிகளை பல்வேறு கிளை நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். கட்சியை பிளவுபடுத்துவது எப்படி? என்று வகுப்பு எடுத்தார்கள். தொழிலாளர் எதிர்ப்புக் கோஷ்டி உட்பட ஆரம்ப காலத்தில் இருந்த லெனினிய எதிர்ப்புக் கோஷ்டிகள் அனைத்திற்கும் மீண்டும் உயிரூட்டி இயக்கினார்கள். இவ்வாறு எல்லா எதிர் புரட்சியாளர்களையும், ஓடுகாலிகளையும், கலைப்புவாதிகளையும், குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளையும் 'லெனினிய எதிர்ப்பு' பதாகையின் கீழ் ஒன்று திரட்டினான் டிராட்ஸ்கி.
அனைத்து யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ்விக்) மத்தியக் கமிட்டி, இரசிய மத்திய கன்ட்ரோல் கமிஷன் ஆகியவற்றின் ஒன்றிணைந்த பிளீனக் கூட்டத்தில் (ஜூலை, 1926), டிராட்ஸ்கி, ஜீனோவிவ், காமனேவ் மற்றும் எதிர்ப்புக் கோஷ்டியைச் சேர்ந்த பத்து முக்கியமான உறுப்பினர்களும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்கள். டிராட்ஸ்கியின் தலைமையில் இயங்கிய டிராட்ஸ்கி -ஜீனோவிவ் கட்சி விரோத கூட்டு அணியின் அரசியல் கொள்கையை இது பிரதிபலித்தது. எல்லோர் சார்பிலும் இந்த அறிக்கையை டிராட்ஸ்கிதான் வாசித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில் பழைய நைந்து கிழிந்துபோன டிராட்ஸ்கிய- மென்ஷ்விசக் கருத்துக்களை தவிர இதில் புதுமை ஏதுமில்லை. உலகப் புரட்சியை கட்சி கைவிழுவி விட்டது; தேசிய ஒதுக்கு நிலை, தனி நாட்டில் சோசலிசப் புரட்சியும்; சோசலிச நிர்மாணமும் சாத்தியமில்லை; புரட்சியை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தல் போன்ற அதே அபத்தங்களும், அவதூறுகளும், சூன்யவாதமும்தான் அறிக்கையில் நிரம்பியிருந்தன.
சோவியத் யூனியனில் சோசலிசம் வெற்றியடையும் சாத்தியப்பாடுகள் பற்றிய லெனினியத்தை எதிர்ப்புக் கோஷ்டி தாக்கியது. இது 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற மன்றோ கோட்பாட்டின் மற்றொரு மறுபதிப்பு என்று கூறியது. கனரகத் தொழில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று டிராட்ஸ்கி கும்பல் கூறியது. மென் இயந்திரத் தொழிலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் எனவும் கூறியது. சோசலிச மூலவளச் சேகரிப்பின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு விவசாயி மக்களைச் சுரண்ட வேண்டும் என்றும் வாதாடியது.
லெனினுடைய கூட்டுறவு திட்டத்தை எதிர்த்து, குறிப்பாக 'உற்பத்திக் கோட்பாடுகளின்' அடிப்படையில் விவசாயிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து டிராட்ஸ்கியின் 'எதிர்ப்புக் கோஷ்டி' போராடியது. அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்ட விவசாய முறைகளைப் போலவே, முதலாளித்துவ பாதை வழியே விவசாயம் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்கள் இவர்கள். சோசலிச நிர்மாணத்தில் சோவியத் அரசில் முதலாளித்துவ முறைகளை புகுத்தும் சதிகளையும், துரோகத்தனமான கொள்கைகளையும் அறிவித்து விட்டு, லெனினியம்தான் முதலாளித்துவ பாதை என்று ஈனத்தனமானது என்று பிரச்சாரம் செய்தது.
1927ம் ஆண்டு, சோவியத் உழைப்பாளி மக்கள் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களுக்கு அளித்த ஆதரவுக்காகவும், சீனப் புரட்சிக்கு சோவியத் உதவி செய்ததற்காகவும், பிரிட்டிஷ் அரசு சோவியத் யூனியனை எச்சரித்தது. இராஜ்ஜிய உறவுகளை முறித்துக் கொள்வதாக அச்சுறுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சோவியத் எதிர்ப்பு வெறியை தூண்டியது. பீகிங்கில் இருந்த சோவியத் தூதரகத்தை தாக்கியது. 1927 மே மாதத்தில், சோவியத் வர்த்தக குழு, அனைத்து இரசிய கூட்டுறவுக் கழகம் ஆகியவற்றின் அலுவலகங்களை பிரிட்டிஷ் போலீஸ் சேதப்படுத்தியது. பிறகு சோவியத் யூனியனுடன் அதிகார பூர்வமாக பிரிட்டிஷ் அரசு தனது இராஜ்ஜிய உறவுகளை துண்டித்து விட்டது. 1927ம் ஆண்டு ஜூன் மாதம் போலந்திலிருந்த சோவியத் தூதர் பி.ஒய்க்கோவ் படுகொலை செய்யப்பட்டார். இவை சோவியத் யூனியனுக்கு ஒரு யுத்த அபாயத்தை ஏற்படுத்தின.
இளம் சோவியத் அரசை இத்தகைய துன்பமான சூழ்நிலை எதிர் நோக்கியிருந்த போதுதான் டிராட்ஸ்கி -ஜீனோவிவ் தலைமையிலான 'எதிர்ப்பு' கோஷ்டி கட்சியின் மீது திட்டமிட்டு தாக்குதல் தொடுத்தது. கட்சி முழுக்க மீண்டும் ஒரு பொது விவாதத்தை துவங்க அனுமதிக்கவில்லை எனில் கட்சியை பிளவுபடுத்துவோம் என அறிவித்தது.
இந்த அறிக்கை டிராட்ஸ்கியின் துரோகத்தனத்தை அப்பட்டமாக பிரதிபலித்தது. பிரிட்டிஷ் அரசு சோவியத்தை தாக்கினால் கூட, சோவியத் சர்க்காரின் தலைமையை மாற்றுவதற்கான போராட்டம் தொடரும் என 'எதிர்ப்பு கோஷ்டி' அறிவித்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்போம் என்று அச்சுறுத்தி கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்த அச்சுறுத்தலைப் பயன்படுத்திக் கொண்டு கட்சிக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாய் அச்சுறுத்திக் கொண்டிருந்த டிராட்ஸ்கிய கும்பலுக்கும் இடையில் ஒருவிதமான ஐக்கிய முன்னணி இவ்வாறு உருவானது. டிராட்ஸ்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அனுசரணையாக நடந்து கொண்டதால் பிரிட்டனிலும் அதன் காலனியாக இருந்த இந்தியா போன்ற நாடுகளிலும் டிராட்ஸ்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டன. CPI (BL) (போல்ஷ்விக் லெனினியம்) என்ற பெயரில் இயங்கிய டிராட்ஸ்கிய குழு இங்கு காந்தியுடன் கைக்கோர்த்து கொண்டு செயல்பட்டது. போல்ஷ்விசம் ஒரு வன்முறைத் தத்துவம் என்பதில் காந்தியும் டிராட்ஸ்கியவாதிகளும் ஒன்றுபட்டனர்.
'உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உலகப் புரட்சி' என்று வாய்ச்சவடால் அடித்த டிராட்ஸ்கி இவ்வாறு ஏகாதிபத்தியங்களின் ஏவலாக இருந்து வந்தான்.
அரசியல் ரீதியாக பாட்டாளி வர்க்கம் "செயலற்றுப் போய்விட்டது" எனவும், 'அரசியல் அஸ்தமனத்தை' நோக்கி புரட்சி நழுவிக் கொண்டிருக்கிறது என்றும் எதிர்ப்புக் கோஷ்டியின் தலைவன் டிராட்ஸ்கி 'தோல்வி மனப்பான்மையையும், சூன்யவாதத்தையும், அழிவு வாதத்தையும் பிரகடனம் செய்தான். சோவியத் ஆட்சிக்கு எதிராக போராடுவதற்கு ஓடுகாலிகளுக்கும், எதிர் புரட்சியாளர்களுக்கும் டிராட்ஸ்கி விடுத்த அறைகூவலே இது.
எதிர்காலத்தில் டிராட்ஸ்கியக் கட்சியை தோற்றுவிக்கும் நோக்கமுடன், சோவியத் நாட்டின் பல பகுதிகளில் ஸ்தல கமிட்டிகளையும், தேசம் பூராவுக்குமான தலைமைக் கமிட்டியையும் கொண்ட பிளவுவாத ஸ்தாபனத்தை எதிர்ப்பு கோஷ்டி கள்ளத்தனமாக உருவாக்கி வந்தது. இந்த எதிர்ப்புக் கோஷ்டிகள் சோவியத்துக்களுக்கு எதிராக இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டன. சோவியத் ஆட்சிக்கு முற்றிலும் பகைமையான சட்ட விரோதப் பிரசுரங்களை பரப்பின. அவதூறான வதந்திகளை பரப்பிவிட்டன. மக்களிடையே கட்சிக் கொள்கை மீது அதிருப்தியை உண்டாக்க முயற்சித்தன. ஸ்தல கட்சி நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை அமல்படுத்த விடாமல் முட்டுக்கட்டைப் போட்டன.
'லெனினிய அடிப்படையில் அமைந்த எதிர்ப்புக் குழு' என்ற தம்மை அழைத்துக் கொண்டு லெனினியத்தின் பேராலேயே லெனினியத்தை இந்த எதிர்ப்புக் கோஷ்டி தாக்கியது. லெனினியம் என்ற பதாகையைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தங்களது எல்லா துரோகங்களையும் மூடி மறைத்து டிராட்ஸ்கியும், ஜீனோவிவும், அவர்களது கூட்டாளிகளும் முயன்றார்கள். ஒவ்வொரு நாளும் அப்பட்டமான எதிர்ப் புரட்சி நிலையை மேற்கொண்டார்கள்; தங்களது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
டிராட்ஸ்கியவாதிகளின், ஜினோவிவாதிகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைக் கண்ட மத்தியக் கமிட்டியும், மத்தியக் கன்ட்ரோல் கமிஷனும் 1927ம் வருடம் ஜூலை 29ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடத்திய பிளீனக் கூட்டத்தில் எதிர்ப்பு கோஷ்டியின் கட்சி விரோத நடவடிக்கையைப் பற்றி மீண்டும் வாதித்தது. எதிர்ப்புக் கோஷ்டியினர் கட்சி விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பிளீனம் கேட்டுக் கொண்டது. தங்களின் சீர்குலைவு வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், கட்சியின், கம்யூனிச அகிலத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் கொள்கையக் கைவிட வேண்டுமெனவும் வற்புறுத்தியது.
லெனினியத்தின் பரம வைரிகளான இவர்கள் இந்த ஆலோசனைகளை நிராகரித்தார்கள். எதிர்ப்பு கோஷ்டிகளுக்கு எதிரான போராட்டத்தை கட்சி கைவிட வேண்டும் என்று கோரினார்கள். டிராட்ஸ்கியையும், ஜீனோவிவையும் மத்திய கமிட்டியிலிருந்து அகற்றும் பிரச்சனை எழுப்பப்பட்ட போது, எதிர்ப்புக் கோஷ்டியினர் கட்சியின் கோரிக்கைகளை பின்பற்றுவதாக நாடகம் ஆடினார்கள். ஆனாலும் தங்கள் கொள்கைகளை கைவிடப் போவதில்லை எனவும், கட்சி விதிகளுக்கு உட்பட்டு அவற்றிற்காகப் போராடப் போவதாகவும் அறிவித்தார்கள். பிளவு நடவடிக்கைகளையும்; லெனினிய எதிர்ப்பு பிரச்சாரங்களையும் தொடர்ந்தார்கள்.
புதிய டிராட்ஸ்கிய எதிர் புரட்சிக் கட்சியை உருவாக்கவும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுட்டிக்காட்டி அந்தக் கட்சி சட்டபூர்வமாக இயங்குவதை ஒப்புக் கொள்ளும்படி கட்சியை நிர்ப்பந்தப்படுத்தவும் எதிர்ப்புக் கோஷ்டியினர் தமது முயற்சிகளை தீவிரப்படுத்தி வந்தார்கள் என்பது தெளிவாகியது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நீடிப்பதற்கே அச்சுறுத்தலாக விளங்கி வந்த எதிர்ப்புக் கோஷ்டியின் பிளவு நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு 1927 அக்டோபரில் நடைபெற்ற மத்தியக் கமிட்டி, மத்திய கன்ட்ரோல் கமிஷன் ஆகியவற்றின் கூட்டு பிளீனக் கூட்டம் ஏராளமான கட்சி நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, டிராட்ஸ்கியையும் ஜினோவிவையும் மத்தியக் கமிட்டியிலிருந்து நீக்கிவிடுவது என முடிவு செய்தது.
இவ்வாறு தனித்து ஒதுக்கப்பட்ட 'எதிர்ப்புக்' கோஷ்டி வசைமாரி பொழிந்தது. அச்சுறுத்தல்களில் ஈடுபட்டது. கடந்த காலங்களைப் போலவே, வருங்காலத்திலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோம் என்று டிராட்ஸ்கியும் ஜீனோவிவும் மிரட்டினர். ஒளிவு மறைவற்ற சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கட்சி நிறுவனத்தை எதிர்த்தும் சோவியத் அதிகார உறுப்புகளை எதிர்த்தும் போராடுமாறு கட்சிக் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்ட எல்லா நபர்களையும் அழைத்தனர். எதிர்ப்புக் கோஷ்டியினர் வெளியிட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த பிரசுரங்களின் வாசகங்கள் 'மத்தியக் கமிட்டி ஒழிக!" என்ற சொற்களுடன் முடிந்தன.
சோவியத் எதிர்ப்பு போராட்டப் பாதையை மேற்கொண்ட எதிர்ப்பு கோஷ்டியினரின் சீர்குலைவு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று கருதிய கட்சி நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு மத்தியக் கமிட்டி கட்சியிலிருந்து டிராட்ஸ்கியையும் ஜீனோவிவையும் வெளியேற்றியது. எதிர்ப்பு அணியின் பிரச்சனையைப் பற்றி 1927 டிசம்பரில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 15வது காங்கிரசில் விவாதிப்பது என முடிவு செய்தது.
கட்சியினாலும் சோவியத் மக்களாலும் நிராகரிக்கப்பட்ட தனது லெனினிய விரோத அரசியல் கொள்கையைக் கைவிட்டுவிட எதிர்ப்புக் கோஷ்டி இன்றும் மறுத்து வந்ததால், இந்தக் கோஷ்டியின் தீவிரமான உறுப்பினர்கள் பலரை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்று காங்கிரசு முடிவு செய்தது. டிராட்ஸ்கியை வெளியேற்றுவது என்றும் காங்கிரசு முடிவு செய்தது. டிராட்ஸ்கி -ஜினோவிவ் கும்பலில் சேர்ந்திருப்பதும், இதனுடைய எதிர்புரட்சிகர கருத்துக்களை ஆதரிப்பதும் பிரச்சாரம் செய்வதும் கட்சிக்கு எதிரானது; அத்தகையோர் கட்சி உறுப்பினர்களாக இருக்க முடியாது என்றும் முடிவு செய்தது.
மூன்றாவது அகிலம் டிராட்ஸ்கியவாதிகளை எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியிலும் அனுமதிக்கக் கூடாது; உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.
15வது காங்கிரசிற்கு பிறகு, ஏராளமான பேர் எதிர்ப்புக் கோஷ்டியிலிருந்து வெளியேறினார்கள். 1928ல் புதிய எதிர்ப்புக் கோஷ்டியின் அனேகமாய் எல்லா உறுப்பினர்களும் இவ்வாறு வெளியேறிவிட்டார்கள். எதிர்ப்புக் கோஷ்டியில் எஞ்சியிருந்த சீர்குலைவுக்காரர்கள் குறிப்பாக டிராட்ஸ்கியவாதிகள் எதிர்புரட்சி பிரசுரங்களை பரப்புவதன் மூலமும், கட்சிக்கும் சோவியத் சர்க்காருக்கும் எதிராக நடத்தும் கிளர்ச்சிப் பணிகள் மூலமாகவும் நாட்டின் தற்காலிக பொருளாதார கஷ்டங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் தம்முடைய பிளவு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளும், கட்சி உறுப்பினர் அல்லாத பொதுமக்களும் இவர்களுடைய கட்சி விரோத சீர்குலைவு நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர்த்துப் போராடினார்கள்.
சோவியத் ஆட்சிக்கு எதிராக ஆயுதந்தாங்கிய போராட்டத்தை தொடங்கும் பொருட்டு சட்ட விரோதமான சோவியத் எதிர்ப்புக் கட்சி ஒன்றை நிறுவுவதற்கு டிராட்ஸ்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததால், சிறப்பு அரசாங்க உத்தரவு மூலம் டிராட்ஸ்கி சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப் பட்டான். சோவியத் மக்கள் ஏகமனதாக இந்த முடிவை அங்கீகரித்தார்கள்.
சோவியத் யூனியனிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், துண்டு துண்டாய் பிரிந்து கிடந்த சந்தர்ப்பவாத கோஷ்டிகளை ஒருங்கிணைத்து 'ஒரு சர்வதேச நிறுவனமாக' உருவாக்கிட டிராட்ஸ்கி அதிதீவிர முயற்சிகள் மேற்கொண்டான். 1929 ஜூலையில், 'எதிர்ப்புக் கோஷ்டியின் செய்தி ஏடு' என்ற பிரசுரத்தை வெளியிடத் தொடங்கினான். இந்த
சஞ்சிகையின் உண்மையான தன்மையை மூடி மறைக்கும் பொருட்டு அதை 'போல்ஷ்விக்-லெனினிஸ்டுகளின்' அதிகாரபூர்வமான பத்திரிக்கை என்று அழைத்தான். எனினும் அப்பத்திரிக்கையின் லெனினிய விரோதப் போக்கை எதனாலும் மூடிமறைக்க முடியவில்லை. மேலும், இந்த
சஞ்சிகை எந்தக் கட்சியையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. டிராட்ஸ்கியுடைய சொந்த ஏடாகத்தான் இது திகழ்ந்தது. அதில் பிரசுரமான எல்லா கட்டுரைகளையும் டிராட்ஸ்கிதான் எழுதி வெளியிட்டான்.
தன்னுடைய சஞ்சிகையின் குறிக்கோள்களை கீழ் வருமாறு டிராட்ஸ்கி வர்ணித்தான்; எதிர்ப்புக் கோஷ்டி ஒரு சர்வதேசக் குழுவாகும். எனவே அது நிலைத்து நீடிப்பதற்கு உரிமை பெற்றுள்ளது என்றான். சித்தாந்த அரசியல் துறைகளில் டிராட்ஸ்கியவாதிகள் முற்றிலும் ஓட்டாண்டிகளாய் திகழ்ந்த போதிலும் தாங்கள் 'ஒரு சர்வதேச கோஷ்டி' என்று மானவெட்கமின்றி கூறிக் கொண்டார்கள். இந்த கோஷ்டிதான் 'போல்5ஷ்விசத்தின் வரலாற்று ரீதியான வாரிசு' என்று வர்ணிக்கவும் முயன்றார்கள். பாட்டாளி மக்களுடைய புரட்சிகர அனுபவத்தின் அடர்த்திச் செறிவான சாரம்போல, புரட்சிகர எதிர்காலத்தை பக்குவப் படுத்தும் கருப்பொருள் போல எதிர்ப்பு கோஷ்டி திகழ்கிறது என்று கூறிக் கொள்வதன் மூலம், சிறுபான்மையாய் இருப்பதும் கூட எவ்வளவு சிறந்தது என்று ஈனத்தனமாக பெருமையடித்துக் கொள்ள டிராட்ஸ்கியவாதிகள் முயன்றார்கள்.
உலக கம்யூனிஸ்டு, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைமையில் இடம் பிடித்துக் கொள்ள முயல்வதன் மூலமும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இழந்துவிட்ட அதிகாரத்திற்கும் செல்வாக்கிற்கும் ஈடு செய்ய முயன்றான் டிராட்ஸ்கி. இந்த நோக்கத்தை மனதில் கொண்டு அவன், மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேசப் புரட்சிகர நிறுவனமாகத் திகழ்ந்த லெனினால் தோற்றுவிக்கப்பட்ட கம்யூனிச அகிலத்தின் பகுதியான மார்க்சிய -லெனினியக் கட்சிகளின் அதிகாரத்தை உள்ளிருந்தே சீர்குலைக்க முயற்சித்தான். பல்வேறு நாடுகளிலிருந்த தனது ஆதரவாளர்களின் உதவியுடன் (இவர்களில் பலர் அவர்களுடைய கோஷ்டி நடவடிக்கைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து வெளியேற்றப் பட்டவர்கள்) லெனினிய எதிர்ப்பு பதாகையின் கீழ் அரசியல் ரீதியாக முதிர்ச்சியுறாத அனுபவமற்ற இளைஞர்களையும் உழைப்பாளி மக்களில் மிகவும் பின்தங்கிய பகுதியினரையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்திட டிராட்ஸ்கி அயராது பாடுபட்டான்.
1930ல் பாரிஸ் நகரில் சில டிராட்ஸ்கியவாதிகள் ஒன்றுகூடி தங்களை "சர்வதேச இடதுசாரிகளுடைய எதிர்ப்புக் கோஷ்டி" என்று பிரகடனம் செய்து கொண்டார்கள்.
ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒன்றுபட்ட பாசிச எதிர்ப்பு அணியை உருவாக்கி அமைக்க கம்யூனிச அகிலத்தின் தலைமையின் கீழ் எல்லா நாடுகளிலுமிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், டிராட்ஸ்கியும் அவனுடைய ஆதரவாளர்களும் நடைமுறையில் பாசிசத்திற்கு அனுகூலமாக விளங்கிய ஒரு வேலைத் திட்டத்தை பிரகடனம் செய்தார்கள். அகிலத்தின் ஐக்கிய முன்னணி கோஷத்தை நிராகரித்தார்கள். "பூர்ஷ்வாக்களுடன் கூட்டு சேர்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கம்யூனிச அகிலமும் சதி செய்து கொண்டிருக்கின்றன" என்றும், வெகுஜனங்களிடையில் சாத்வீகப் பிரமைகளை சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றன" என்றும் குற்றம் சாட்டினார்கள்.
பாசிசத்திற்கு எதிராக ஸ்பெயின் மக்கள் போராடிய போது, ஸ்பெயின் தேச டிராட்ஸ்கியவாதிகள் அங்கிருந்த ஐக்கிய முன்னணியை எதிர்த்தார்கள். உலகப் பிற்போக்கு சக்திகளின் "ஐந்தாம்படை"யாக டிராட்ஸ்கியம் உருவாகிவிட்டது என்பதை ஐயத்திற்கு இடமின்றி இது எடுத்துக் காட்டியது. மக்களுடைய போராட்டத்தை 'உண்மையான' பாட்டாளி வர்க்கப் புரட்சியாக மாற்றுவதற்கு தாங்கள்தான் தாங்கள் மட்டுமே பாடுபட்டுக் கொண்டிருப்பதாய் வெகு ஜனங்களை நம்பும்படி செய்ய முயன்றார்கள்.
ஸ்பெயின் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலம் முழுவதிலும் மக்களின் ஐக்கிய அணியைத் தகர்த்தெறிவதற்காக டிராட்ஸ்கியவாதிகள் பலதரப்பட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள்; குழப்பத்தையும் சீர்குலைவையும், பீதியையும் பரப்பினார்கள்; கட்டுப்பாட்டை மீறினார்கள்; ஆத்திர மூட்டும் செயல்களில் ஈடுபட்டார்கள்; பாசிச சக்திகளுக்கு உளவு பார்த்தார்கள்; குடியரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கிய தாக்குதல்களையும் தொடுத்தார்கள்.
இரண்டாவது உலகப் போர் தொடங்குவதற்கு சற்றுமுன்பு, டிராட்ஸ்கிய ஓடுகாலிகள் அனைவரையும் ஒரு சர்வதேச அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில் டிராட்ஸ்கி ஈடுபட்டான். இந்த நோக்கத்திற்காக 1938ல் பாரிஸ் நகரில் ஒரு மாநாடு நடந்தது. இதில் 22 டிராட்ஸ்கியவாதிகள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த மாநாட்டில் 4வது சர்வதேசியம் (அகிலம்) என்ற நிறுவனம் அமைக்கப்பட்டது. இதே பெயரில் ஒரு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. 'முதலாளித்துவத்தின் மரண வேதனையும் நான்காவது சர்வதேசியத்தின் கடமைகளும்' என்ற கொள்கை விளக்க அறிக்கையை டிராட்ஸ்கி வெளியிட்டான். சந்தர்ப்பவாதிகளுடைய இந்தப் புதிய நிறுவனத்தின் சித்தாந்த அடிப்படையானது 'நிரந்தரப் புரட்சி' என்ற செத்துப்போன அதே பழைய தத்துவமே ஆகும்.
இரண்டாவது உலகப் போரின் தொடக்கத்தில் பாசிசத்தின் இலட்சியங்களுக்கு உறுதுணையாக இருந்த நிலையை டிராட்ஸ்கியவாதிகள் நடைமுறையில் கடைபிடித்தார்கள். உதாரணமாக பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உதவி கோரிய ஜனநாயக நாடுகளின் வேண்டுகோளை இந்த டிராட்ஸ்கிய நிறுவனம் நிராகரிக்கிறது என்று நான்காவது சர்வதேசியம் வெளியிட்ட கொள்கை அறிக்கை தெளிவுபடுத்தியது. நாஜி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்த பின்னரும் போர் இன்றும் ஏகாதிபத்தியத் தன்மையைக் கொண்டுள்ளது என்றும், 'பாசிச எதிர்ப்பு போராட்டம்' என்ற கருத்து வெறும் பித்தலாட்டம் என்றும் டிராட்ஸ்கியவாதிகள் பிரகடனம் செய்தார்கள். அதாவது சோவியத் ரஷ்யாவின் பாசிச எதிர்ப்புப் போர் தவறானது என்றார்கள். ஹிட்லருக்கு எதிரான கூட்டணியையும் எதிர்த்தார்கள். 'இரசியப் புரட்சியின், உலகப் புரட்சியின் நலன்களுக்கு முற்றிலும் புறம்பான செயல் இது" என்று கூறி பாசிச எதிர்ப்புக் கூட்டணியை தாக்கினார்கள். (1943ம் வருட அறிக்கை). இரண்டாவது போர் முனையைத் துவக்கினால், ஐரோப்பிய புரட்சிகரப் போராட்டத்தின் அபிவிருத்திக்கு அது குந்தகமாக விளங்கும் என்றும் வாதாடினார்கள். பாசிச எதிர்ப்பு இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும்படி டிராட்ஸ்கியவாதிகள் அறைகூவினார்கள். போராடும் பாட்டாளி மக்களின் சுதந்திரமான நிறுவனத்தை அமைக்க வேண்டுமென்று கோரினார்கள்.
யுத்தத்தின்போது அவர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கு மேலும் அதிகமான கெட்ட பெயர் உண்டாக்கின. இதனால் டிராட்ஸ்கியம் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று "நான்காவது சர்வதேசியத்தின்" சில முக்கிய உறுப்பினர்களுக்கிடையே நீண்ட நெடிய தகராறுகள், சண்டைகள் முட்டி மோதிய பின்பு, நான்காவது சர்வதேசியம் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டும் ஏராளமான கோஷ்டிகளாய் பிளவுண்டது. இவ்வாறு 'ஓடுகாலிகளின்' சர்வதேசிய அகிலம் உடைந்து சிதறியது. பாசிசத்தின் வீழ்ச்சியுடன் இந்த கலைப்புவாத அகிலமும் வீழ்ந்தது.
நாடு கடத்தப்பட்டும் திருந்தாத டிராட்ஸ்கியின் துரோகத்தனத்தை பொறுக்காமல், மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரால் அவன் கொல்லப்பட்டான். இதை ஸ்டாலின் தான் செய்தார் என்று டிராட்ஸ்கியவாதிகள் இன்றுவரை பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் லெனினையும் ஸ்டாலினையும் கொல்ல முயற்சித்த கும்பலுக்கு டிராட்ஸ்கி உதவிகரமாக இருந்தான். இது பின்னாளில் மாஸ்கோ விசாரணையில்தான் வெளிப்பட்டது.
நம் காலத்தின் எல்லா முக்கியமான பிரச்சினைகளுக்கும் சரியான ஆக்க முறையான பதில்களை அளிக்கவல்ல தெய்வீகப் பிறவிகள் போல தம்மை நினைத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்த டிராட்ஸ்கியைப் போலவே அவனது இன்றைய சீடர்களும் கற்பனைகளில்
சஞ்சரிக்கிறார்கள். மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் மீது தாக்குதல் தொடுப்பதும், லெனினிய முகமூடி போட்டுக் கொண்டு "தனி நாட்டில் புரட்சி சாத்தியமல்ல, உலகப் புரட்சிதான் தீர்வு; நான்காவது அகிலம்தான் புரட்சி நடத்தும்" என்றும் மதவாதிகள் போல் அருள் பாலிக்கின்றனர். மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை என்பது சமூக வளர்ச்சியின் விஞ்ஞான விதிகள் என்பதும், அந்த சமூக விஞ்ஞானம் வென்றே தீரும் என்பதும் இந்த ஞானசூன்யங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரிய வாய்ப்பில்லைதானே!
- சமரன் (பிப்ரவரி - மார்ச் 2025 இதழில்)