நூல் அறிமுகம்: "புதிய பீடாதிபதி சாவர்க்கரும்- உண்மைகளும்" என்கிற பொருள்தரக்கூடிய அருண்ஷோரியின் புத்தகம்
பட்டாபி ராமன்

‘புதிய பீடாதிபதி சாவர்க்கரும்- உண்மைகளும் ‘ என்கிற பொருள்தரக்கூடிய அருண்ஷோரியின் புத்தகம் சுவையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த ஜனவரி 2025ல் வந்த அருண்ஷோரியின் நூல் The New Icon Savarkar and the Facts. அளவில் சற்று பெரிய 540 பக்க நூல்.
அருண்ஷோரி வலது பத்திரிகையாளர் என அறியப்பட்டவர். பல நூல்களின் ஆசிரியர். முடிந்தவரை ஆதாரங்களை திரட்டி, அவற்றிலிருந்து , தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை கோர்த்து தருபவர். அம்பேத்கரை கடுமையாக expose செய்து- மறையகற்றுதல் அல்லது மாயை மாய்த்தல் என்கிற முறையில் தன் ஆய்வை அவர் Worshipping False Gods என்பதில் செய்திருந்தார். அதேபோல் குவிட் இந்தியா கால கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகளை திரை விலக்கித் தருதல் என்பதை ‘only Fatherland ‘ என்பதில் செய்தார். புகழ்வாய்ந்த வரலாற்றாய்வாளர்கள் குறித்து, அவர்களின் மேற்கித்திய செல்வாக்கின் மாயை கலைத்தல் என்கிற எழுத்தையும் அவர் தந்தவர். இந்த நூல்களுக்கெல்லாம், அவர் கடுமையான எதிர் விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது.
இந்த ‘நியு அய்கான் சாவர்க்கர்’ அப்படிப்பட்ட மாயை தகர்ப்பு முறையிலான, திரை விலக்குதலை செய்யக்கூடிய நூல். கரன் தாப்பர்- அருண் ஷோரி பேட்டியை நான் கேட்கவில்லை. என் சொந்த வாசிப்பை அது தொந்தரவு செய்துவிடக்கூடாது என தள்ளி வைத்துள்ளேன். இந்த நூலுக்கு வலது பகுதியிலிருந்து என்ன மாதிரி எதிர்வினை எழும், வலதல்லாதவர் எப்படி எடுத்துக்கொள்ளப் போகின்றனர் என இனித்தான் பார்க்க வேண்டும்.
நான் இந்த நூலில் 20 சத அளவிற்கு போயுள்ளேன். அந்த அளவில் இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம். அடுத்து போகக்கூடியவற்றை குறித்து , போன பின்னர் தோன்றினால் சொல்லக்கூடும் .
அப்பா, கொஞ்சம் அவர் சொன்னதைப் பாருங்கப்பா- கற்றுக்கொள்ளுங்கப்பா என - சாவர்க்கரை கொண்டாடக் கூடியவர் எடுத்துக்கொள்ள வேண்டிய பகுதி முதல் இரு இயல்கள். Much to Learn, Rakshasi and Rakshas என ஷோரி தலைப்பிட்டு இதில் ஆதாரங்களை பெரும்பாலும் சாவர்க்கரின் மராத்தி எழுத்துக்களிலிருந்து தந்துள்ளார்.
அடுத்த இரண்டு இயல்கள் Much Not to Learn- History is made up, Self Image and its Consequences எனத் தலைப்பிடப்பட்ட இயல்கள். இதில் சாவர்க்கர் மீதான மாயை கலைப்புகளை அவர் செய்கிறார்.
இந்த முதல் 4 இயல்கள் 113 பக்கங்கள் எனக்கு சொல்லக்கூடிய செய்திகள்
நூல் சாவர்க்கரை பீடமமைத்து, தங்கள் அரசியல் வாழ்விற்கான கலங்கரை விளக்கமாக்குவோர்க்காக - குறிப்பாக எழுதப்பட்டுள்ளது.
சாவர்க்கர், மூடநம்பிக்கைகள், தீண்டாமை ஒழிப்பு, ஏற்ற இறக்க சாதி வேறுபாடுகளை தூர வைத்து இந்து என்கிற மேடையில் ஒன்றாதல் என்பதற்காக ஏராளம் எழுதியுள்ளார் என ஆதாரங்களுடன் காட்டுவது. இதில் ‘இந்து அணிசேர்க்கை’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு , சாதி சாமி கோயில் என ஆடிக்கொண்டிருக்கிறீர்களே என்பதை ஷோரி கேட்க வருகிறார். இந்தப் பகுதி Much To Learn - சில நேரங்களில் நம்மூர் பெரியார் மாதிரி பேசுகிறாரே சாவர்க்கர் என நினைக்க வைக்கும் பகுதி இது.
சாவர்க்கர் பற்றி அவரே என்ன எழுதினார், எப்படியெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டார், வரலாறு என்கிற பெயரில் கற்பனை புருடா விட்டார் , தன் சுய பிம்ப உயர்த்தலுக்கு எப்படியெல்லாம் பிரயத்தனப்பட்டார் என்பதை Much Not To Learn இயல்கள் , திரை விலக்கம் செய்கின்றன.
முதல் இயலில் ‘பசு பக்தி ‘ என்பதை கடுமையாக சாடுகிறார் சாவர்க்கர். ‘பஞ்ச காவ்யம்’ குறித்து கிண்டல் கேலி செய்துள்ளார். Madness, vulgarity, Stupidity, unadulterated foolishness என்கிற கடுமையான மராத்தி பதங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். ‘சாவர்க்கர் சமகிரா’ என்கிற அவரின் நூல் தொகை வால்யூம்களிலிருந்து - எந்த வால்யூம் எந்த பக்கம் என ஆதாரத்துடன் ஷோரி இப்பகுதியில் எழுதுகிறார்.
‘சாவர்க்கர் வழிபாட்டாளர்’ இதை எடுத்துக்கொள்கிறீர்களா என ஷோரி கேட்கிறார்
Undermine the stamp of religion that was being put on such beliefs and practices and to encourage people to learn to test everything on the touchstone of evidence, of science and to worship the new deity , the Goddess of Reason.
மாட்டுக்கறி சாப்பிடுவது- அதை மதம் சார்ந்த பிரச்சனையாக்குவதை சாவர்க்கர் விமர்சித்துள்ளார். சாவர்க்கர் இதை எப்படி பார்த்தார் என ஷோரி சொல்கிறார்
Should one eat beef? Should one eat Pork? This is a matter not of religion, but of your stomach. What doctors advise, what you can digest, best of your body that should be the determinants
இதை சாவர்க்கர் வழிபாட்டாளர்கள் சொல்லிக்கொடுப்பார்களா என கேள்வி எழுப்புகிறார் ஷோரி.
மனுஸ்மிருதி முழுமையாக படித்துவிட்டு, அது குறித்தும் சாவர்க்கர் பேசியுள்ளார். சிரார்த்த காலத்தில் இறைச்சி என்பது சாஸ்திரோத்தமானது. அப்படி புலால் உணவு மறுப்பவர் அடுத்த 21 ஜென்மங்களுக்கு மிருக வயிற்றில் பிறப்பர், ஆமாம் பார்த்துக்கங்க.. இதற்கு மனு ஸ்மிருதி அத்யாயா 3 - ஸ்லோகங்களை சாவர்க்கர் அடுக்குகிறார். யாகம், சிரார்த்தம் புலால் தொடர்பை அவை பேசுகின்றன.
அதேபோல் அரச மரம் புனிதம், இந்த மரம் புனிதம் என்கிற மூடநம்பிக்கைகளை சாடியுள்ளார் சாவர்க்கர். சடங்குகளை கடுமையாக கேலி செய்துள்ளார். சந்திரன் சூரியன் கொண்டாடுங்கள்- அதில் வாழ்க்கை ஜாதகத்தை பார்க்காதீர். காயத்ரி பிடித்தால் சொல்- ஆனால் மழை வரும் என ஏமாறாதே போன்ற தகர்ப்புகளை அவர் தந்துள்ளார்.
அடுத்த இயலான ‘ராட்சசன் ராட்சசி’ இயல் தீண்டாமை, சாதி உயர்வு தாழ்வுகள் குறித்து சாவர்க்கர் எழுதியவை, செயல் பணிகள் பற்றிய இயல். இந்த இரண்டு இயல்களும் பாஜக வினர் மட்டுமல்ல, எவரும் படிக்க வேண்டியவை. தீண்டாமை அனுசரிப்பது , சாதி ஏற்றத்தாழ்வுகளை அனுசரிப்பது இந்து மதத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கூட நல்லதல்ல என்பது தான் இந்த இயலின் சாரம்.
அடுத்த இரண்டு இயல்கள் சாவர்க்கர் சொன்னார் என நம்பி ஏமாறாதே தம்பி என பேசுகிற இயல்கள். அவர் தீர வீர சாகசங்கள் பற்றிய ஜோடனைகளை ,பெரிது படுத்தல்களை, சுய தம்பட்டங்களை திரை விலக்கி காட்டும் பகுதிகள்.
Life of Barrister Savarkar என அவரே எழுதிக்கொண்டு அதில் சொல்லிய தம்பட்டம். அதை ராஜாஜி எழுதினார் என விசிறிவிட்ட கட்டுக்கதை. ஷோரி , ராஜாஜி- காந்தி பேரனான ராஜ்மோகன் காந்திக்கு மெயில் அனுப்பி பதில் பெற்று இந்த புருடாவை உடைக்கிறார். எழுதிய சித்திர குப்தன் ராஜாஜியல்ல சாவர்க்கரே என நிறுவுகிறார்.
இன்னொரு அரசியல் கதை நாடு முழுக்க போய்க்கொண்டிருக்கிறது. அது நேதாஜி தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அவர் INAஅமைத்து பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பெரிய சவாலாக இருந்தார். இப்படி நேதாஜிக்கு செய்யச் சொல்லி அறிவுரை தந்ததே சாவர்க்கர் தான் என்கிற பெரும் கதை கட்டலை கந்தலாக்குகிறார் அருண் ஷோரி.
சுபாஷின் Indian Struggle, Leonard Gordon Brothers Against Raj லிருந்து ஆதாரங்களை ஷோரி அடுக்குகிறார். கோர்டானுக்கு மெயில் அனுப்பி, நேதாஜிக்கு சாவர்க்கர் அப்படி ஆலோசனை கொடுத்தாரா என்ன உறவு எனக் கேட்டு, இந்த மாயை கலைப்பை ஷோரி செய்கிறார். ஶ்ரீநாத் ராகவன் எழுதிய India’s War The Making of Modern South Asia விலிருந்து நேதாஜி அமைத்த இராணுவம் அதன் லிமிட்டேஷன், இந்தியர் பற்றி ஹிட்லரின் கேலிகள் என ஷோரி விவரிக்கிறார். இப்படி வரலாற்றை மோசமாக தயாரித்தவர் சாவர்க்கர் என History is Made Up இயலில் போட்டுடைக்கிறார் ஷோரி.
அடுத்த இயல் Self image and its consequences.சாவர்க்கர் தன் 80 ஆம் வயதில் எழுதிய Six Glorious Years நூல். இந்தியாவின் விடுதலை காவியமாக வழிபாட்டாளர் காட்டக்கூடிய நூல். எல்லா புரட்சிக்காரர்களுக்கும், பகத்சிங் உட்பட, சாவர்க்கரே ஆதர்ஷ மாவீரன் என்கிறமாயை. பிரிட்டிஷ் எதிர்த்த இந்திய விடுதலைப் போரில் ‘காந்தி ‘ என்பது காட்டப்படாமலேயே எழுதப்பட்டது சாவர்க்கரின் மேலே சொன்ன நூல். 80 வயதிலும் அவ்வளவு பகைமை வெறுப்பு வேண்டுமா?
இந்த இயல் சாவர்க்கர் சாகசங்கள் எனப்பேசப்படுவதை பற்றி படு ஜோக்காக fun ஆக்கும் இயல் எனலாம்.
நீள்கிறது. நிறுத்துகிறேன். மீதி பக்கங்கள் குறித்து வாய்ப்பு உள்ளபோது எழுத சித்தம்..
23-3-2025
=================================
சாவர்க்கர்- அருண்ஷோரி 2
சாவர்க்கர் குறித்து அருண்ஷோரி எழுதி 2025 ஜனவரியில் வந்த நூலான The New Icon Savarkar And the Facts பற்றி ஓர் இடுகை செய்திருந்தேன். அந்நூலின் முதல் 4 இயல்களின் சாரத்தை நான் உணர்ந்த அளவில் தந்திருந்தேன்.
சாவர்க்கரிடம் எடுத்துக்கொள்ள வேண்டியதென்ன- அவரின் எடுத்துக்கொள்ளக்கூடாத ‘கப்சாக்கள்’என்ன என்பதை, அருண்ஷோரி அவர் அறிந்துகொண்ட வகையில் இந்த இயல்களில் தந்திருப்பார்.
இப்போது அடுத்த இரு இயல்கள் பற்றி சிறிது சொல்லப் பார்க்கிறேன். ஒன்று ‘புரட்சிக்காரர் எழுதுகிறார்’, அடுத்தது ‘ புரட்சிக்காரர் வழி காண்கிறார்’ என்பது- Revolutionary writes, Revolutionary sees the way.
இந்த ‘புரட்சிக்காரர் வழி காண்கிறார்’ என்கிற கட்டுரை, ‘ஒரு புரட்சிக்காரர் செயல்படுகிறார்’ என வேறு கட்டுரைகளும் இணைந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சரி. இந்த இரு இயல்களின் சாரத்தை நான் உள்வாங்கிய வகையில் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.
சாவர்க்கர் அந்தமான் கொட்டடியில் துன்பம் அனுபவித்தார். கொடும் சிறைவாசம். அங்கிருந்து வெளியேற 1911 முதல் தொடர்ந்து கருணை மனுக்கள் போட்டார். அவரின் உறவினர்களும் போட்டனர். பிரிட்டிஷ் அரசுக்கு நிபந்தனையற்று ஒத்துப்போகும் வாக்குறுதிகளை வழங்கி, பொறுப்புடன் ஒத்துழைக்க இணங்கினார். ரத்னகிரி மாவட்டம் தாண்டாமல், இந்துத்துவாவிற்கான சில செயல்ளை செய்து கொண்டிருந்தார் என்பதையெல்லாம் ஷோரிக்கு முன்னரே பலர் சொல்லிவிட்டனர். ஏ ஜி நூரணி போன்றவர் கடும் விமர்சனத்துடன் எழுதிவிட்டனர். பகத்சிங், திங்கராவுடன் ஒப்பிட்டும் பலர் எழுதியுள்ளனர். ஷோரியும் எழுதுகிறார்.
ஆனால் ஷோரி, ‘உலகப் புரட்சிக்காரர்கள் எல்லாம்’ சாவர்க்கர் திசை நோக்கியே கும்பிடுகின்றனர் என்பது போல் எழுந்த கதைகளை, விளாசித் தள்ளுகிறார். புரட்சிக்காரனாக ‘எழுதோ எழுது என்று’ ஏராளம் ஊருக்கு சொல்லிவிட்டு, சாவர்க்கர் வீழ்ந்த கதையை ஷோரி ஆதாரங்களைக் காட்டி எழுதுகிறார். எதற்கெடுத்தாலும் புரட்சி, ஆயுதம் ஏந்து எனச் சொல்லி, காந்தியின் அகிம்சையை படு மோசமாக கேலி செய்த சாவர்க்கர், தான் ஊருக்கு சொன்னபடி நடந்து காட்டவேயில்லை என்பதை ஷோரி நிறுவப் பார்க்கிறார்.
கருணை மனுவை காந்தி சொன்னபடிதான் , சாவர்க்கர் போட்டார் என பழியை வேறு காந்தி மீது போடும் அவரது வழிபாட்டாளர் வாதங்களை திரைவிலக்கம் செய்கிறார் ஷோரி.
ஆயுதம், சாகசம், எதிரியின் உயிரை மாய்த்தப்பின் புரட்சியாளர் வீர மரணம் என - உரக்க உரக்க பேசிய சாவர்க்கர் எழுத்துக்களை, அவரது நூல்களிலிருந்து ஷோரி அடுக்குகிறார். எதிரி கொடூரனாக இருந்தால், புரட்சியாளன் படு கொடூரனாக மாறு. எதிரி ஏமாற்றுக்காரனாக இருந்தால், புரட்சியாளன் அவனை விஞ்சக்கூடிய ஏமாற்றுக்காரனாக இரு என்பதே ‘ ரூல்’ என்றவர் சாவர்க்கர்.
To a brute we have to be super brute, to a cheat we have to be super cheat. வெறுப்பு உள்ள எந்த மனமும் சிக்கென இந்த உபதேசத்தை பிடித்துக்கொள்ளும்.
நீ சிங்கமாக இருப்பதா, எலியாக இருப்பதா என்பதை - தேசத்திற்கு எப்படி தொண்டு செய்யப்போகிறாய் என்பதில் உரசிப்பார்த்து முடிவெடு. அகிம்சை எனச் சொல்லி, தியாகம் எனச் சொல்லி, அசடு போல சிறை முகாம் சித்திரவதை அனுபவிக்காதே. பதுங்கி இருந்து கூட நாட்டுக்கு வேலை பார் போன்ற உபதேச மொழிகள் சாவர்க்கரிடம் கிடைப்பதாக ஷோரி அவரின் எழுத்துக்களை கோர்த்து தருகிறார்.
உனது இலக்கில் நீ சுத்த தங்கமாக இருந்தால், நீ செய்வது அனைத்துமே தர்மமே என்பதை அவர் ‘தங்க விதியாக ( golden rule)’ ஆக்கினார் என்கிறார் ஷோரி. ‘புரட்சி புரட்சி என’ அவர் பிள்ளை விளையாட்டையே செய்ததாக ஷோரி மதிப்பிடுகிறார்.
சிவாஜியின் ‘டாக்டிக்ஸ்’ என - ‘பாய்வதா- பதுங்குவதா’ ( சிங்கமாக இருக்க வேண்டிய கட்டம்- எலியாக ‘பதுஷாக’ பவ்வியமாக நிற்க வேண்டிய கட்டம்) பற்றி சாவர்க்கர் புரட்சியாளர்களுக்கு பாடமெடுக்கிறார். இங்கு அருண்ஷோரி கொடுக்கும் வரி ஒன்றை தருகிறேன்
Drawing Moral Savarkar wants to stress “ Being like a rat was valour, at that time to roar like a lion would have been the height of foolishness.
சாவர்க்கர், தான் ‘மெர்சி பெட்டிஷன்’ போட்டு வந்ததை நியாயப்படுத்தவே, இப்படியெல்லாம் தந்திர உபாயங்களை எழுதி பொதுமைப்படுத்தி , தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறாரோ என ஷோரி சந்தேகப்படுவதை இந்த இயலில் பார்க்க முடிகிறது. அப்புறம் என்ன எதற்கு ‘வீர் சாவர்க்கர்’ பட்டமெல்லாம் என ஷோரி வினவுவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.
நான்கு முக்கியமான கேள்விகளை அருண்ஷோரி எழுப்புகிறார். அவற்றின் தீவிரம் கருதி, வரிகளை அப்படியே தருகிறேன். நான்காவது கேள்வியை சற்று கவனமாக பார்த்தால் தெரியும், அருண் ஷோரி சாவர்க்கரின் சாமர்த்தியம் என்ன எனச் சொல்ல வருவதை..
Should one be deemed to be a ‘revolutionary’ just because one believes and write essays asserting an objective of getting Independence?
Independence can be achieved only by violence- is that the only way?
If large scale violence is not possible, then the only way is assassination?
Then, be careful not to undertake such task oneself, and exhorts others to carry out assassinations?
இந்த நான்கு கேள்விகளில் சாவர்க்கரை அளந்து தந்துவிடுகிறார் ஷோரி. சாவர்க்கருக்கு மட்டுமல்ல, வேறு எவருக்குமான கேள்விகளும் கூட இவை.
இன்னொரு கேலியை ஷோரி செய்கிறார். புரட்சிக்காரர் எவருக்கும் உள்ள மிக முக்கிய ‘traits mark’ - அவர்களுக்கு மட்டுமே எப்போதும் ‘what is going to happen’ - so plan it’ என்பது தெரியும். வரப்போவதைப் பற்றி அவர்கள் துல்லியமாக கணிப்பவர்கள் என்கிற நம்பிக்கையுடன், திட்டமிடவும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதனால் தான் இரண்டாம் உலகப்போர், நேதாஜி படை பற்றியெல்லாம் சாவர்க்கரால் முன் கூட்டியே சொல்லமுடிந்தது என படு கிண்டலை ஷோரி செய்கிறார்.
மஜும்தார் போன்ற வரலாற்றாய்வாளர் எல்லாம் எப்படித்தான் சாவர்க்கரை ‘இந்தியாவின் பெரும் புரட்சிக்காரர் ‘ என வர்ணித்தாரோ தெரியவில்லை. நீங்கள் இந்த வழிபாட்டாளர்கள் சொன்னதையெல்லாம் அல்லது மூல விக்கிரகத்தை கேள்விக்கு உட்படுத்தினால் உங்களை தேசத்துரோகிகள், இந்துத்துவ விரோதிகள் என்பார்கள், ஜாக்கிரதை என அந்த இயலை முடிக்கிறார் ஷோரி. இது சாவர்க்கருக்கு மட்டுமல்ல, எவரெல்லாம் பீடாதிபதியோ - அதிகார இறையோ- அவரை கேள்வி கேட்டால் வரும் எதிர்வினைகள் தான்.
‘புரட்சிக்காரர் வழி காண்கிறார்’ இயலில் மூஞ்சே இத்தாலி பாசிஸ்ட் முசோலினியை சந்தித்தது, சாவர்க்கர் இந்து மகாசபாவின் தலைவராக ஆற்றிய முக்கிய உரை ஒன்றின் சாரத்தை ஷோரி விளக்குகிறார். இரண்டாம் உலகப்போர் நேரத்தில், சாவர்க்கர் நேருவை கிண்டல் செய்தார். ஜெர்மனிக்கு வேண்டியது என்ன என்பதை நேருவை விட ஹிட்லருக்கு நன்றாகத் தெரியாதா? நம்ம நாட்டிற்கு என்ன அரசாங்கம், அதற்கு நாம் செய்ய வேண்டியதை பேசு என்றார்.
போல்ஷ்விசம் ருஷ்யாவிற்கு உகந்தது என்றால், நாசிசம் ஜெர்மனிக்கு, பாசிசம் இத்தாலிக்கு என அவரவர் சோதனையை அவரவர் செய்யட்டும். நாம் யார் அவர்களை விமர்சிக்க என்கிற கேள்வியை அவர் எழுப்பினார். இங்கிலாந்து நம்மை அடிமையாக வைத்திருப்பதில் மனசாட்சி பார்க்காமல், ஹிட்லரைப் பார்த்து ‘ஜனநாயகத்திற்கு நீ ஆபத்து’ எனச் சொல்லும் அபத்தத்தை ஏற்க முடியாதென்றார் சாவர்க்கர். என்னைப் பொறுத்து இந்தியாவிற்கு எவர் உதவ முன் வந்தாலும், அவர் என் நண்பர் என வெளிப்படையாக ஹிட்லர் ஆதரவை சாவர்க்கர் முன் வைக்கும் எழுத்துக்களை ஷோரி எடுத்து தருகிறார்.
சாவர்க்கர் கல்கத்தாவில் ‘உண்மையான அரசியல்’ என பிப் 20, 1939ல் ஆற்றிய சொற்பொழிவில் உதிர்த்த சில வரிகள்
“ There is no such thing as morality in relations between countries. Words like truth, non violence may be nice to ear, but they are utterly useless in determining foreign policy.. Morality is found only in text books. It does not exist in international relations.” அப்புறம் உரையில் வரக்கூடிய கிண்டல் கேலியைப் பாருங்கள்
We must remember that Hitler is not a Gandhi who constantly pleads for Hindu Muslim unity..” எங்கே கொண்டுவந்து இணைக்கிறார் பாருங்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமை எனப் பேசுவதை எவ்வளவு எள்ளலுக்கு உள்ளாக்குகிறார்.
நன்னெறி என எழுதி வேண்டுமானால் வைத்துக்கொள். நடைமுறைக்கு ஒத்துவராது. யார் உங்கள் இங்கிலாந்திற்கு நன்னெறி போதிப்பார்கள்- பிரான்சா, அமெரிக்காவா . இவர்கள் எவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் எனத் தெரியாதா? போன்ற காந்தி மீதான தாக்குதல்களை சாவர்க்கர் தந்தார்.
ஜூலை 1939 ல் ஆர் எஸ் எஸ் அமர்வு ஒன்றில் சாவர்க்கர் பேசியதாக அருண்ஷோரி குறிப்பிடும் வரிகள்
..in effect that Hedgewar is doing in India what Hitler has accomplished in Germany..
Whatever be the view of persons belonging to different political factions about nationality, it is my firm belief that Hindustan is of the Hindus. It is on this very feeling of nationhood Sangh is working. That its work should succeed fully and the longing of Bharat should fructify- this must be thought of everyone “
நாட்டை இத்திசை நோக்கி அவர்கள் அழைத்துச் செல்லத் தொடங்கி ஆண்டுகள் ஆகிவிட்டன.
அருண்ஷோரி மேலும் சாவர்க்கர் மாயை தகர்ப்பில் வேறு என்ன திரை விலக்கம் செய்கிறார் என வாய்ப்புள்ளபோது எழுத உத்தேசம். பார்க்கலாம்
31-3-2025
- பட்டாபி ராமன்
https://www.facebook.com/share/p/1Zw1ZRbsr2/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு