லெனின் எழுதிய “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலுக்கு ஓர் அறிமுகம்

அ.கா.ஈஸ்வரன்

லெனின் எழுதிய “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலுக்கு ஓர் அறிமுகம்

லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலை 1908ஆம் ஆண்டு எழுதி முடித்தார். 1909 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. இந்த நூலை எழுதுவதற்காக லெனின் சுமார் 200 நூல்களைப் படிக்க வேண்யதாக இருந்தது. அப்படிக் கடுமையாகப் படித்து இந்த நூலை எழுத வேண்டிய தேவை லெனினுக்கு ஏன் ஏற்பட்டது, என்பதைப் புரிந்து கொள்வதின் மூலம், இந்த நூலின் இன்றைய தேவையையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அணுதான் அனைத்துக்கும் அடிப்படை என்று ஏற்றுக் கொள்கிற தத்துவங்கள் பண்டைய இந்தியாவிலும் கிரேக்கத்திலும் காணப்படுகின்றன. இந்தத் தத்துவங்கள் தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகக் கூறப்படுகிறது. அணுவை ஏன் தொடக்கமாக வைத்தார்கள் என்றால், ஒன்றை பிளந்து கொண்டு சென்றால் இறுதியில் பிளவுபடாமல் எது இருக்கிறதோ அதுவே அணு. அந்தப் பிளவுபடாத அணுவை பிளக்க முடியும் என்று லெனின் காலத்திய அறிவியலின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, அடிப்படையான பொருள் பிளக்கப்பட்டுவிட்டது, பொருள் அழிக்கப்பட்டது, அதனால் பொருளை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாத தத்துவம் தவறு என்று நிரூபணமானது என்று கூறுகிற பல புதிய தத்துவ அறிஞர்கள் தோன்றினர். அவர்கள் தத்துவத்தை இனி கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்று பிரிக்க முடியாது, இரண்டும் கலந்ததுதான் என்று கூறி, இரண்டுக்கும் நடுப்பாதையைப் பற்றிய விளக்கம் கொடுத்து. மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதத்தை விமர்சித்தனர். இதில் குறிப்பிடத்தக்க இருவர் எர்னஸ்ட் மாஹ், மற்றும் ரிச்சர்ட் அவெனாரியஸ் ஆவர்.

எர்னஸ்ட் மாஹ் என்பவர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிவியல் அறிஞர், ரிச்சர்ட் அவெனாரியஸ் ஜெர்மன் நாட்டு தத்துவ அறிஞர். இவர்கள் இரண்டு பேர்தான் முதலில் அணு பிளக்கப்பட்டவுடன் பொருள்முதல்வாத தத்துவம் தவறு என்று நிரூபிக்கப்பட்டதாக விமர்சித்தனர். பொருளை முதலாகவும் அடிப்படையாகவும் கொண்ட பொருள்முதல்வாதத்தை “அனுபவவாதம்” என்றும் கூறுவர். ஏனென்றால் அனுபவத்தின் அடிப்படையில் அறிவைப் பெறுவதினால் இவ்வாறு அழைக்கப்பட்டது. பொருள்முதல்வாதத்தை விமர்சிக்கும் மாஹ் போன்றோர்களின் விமர்சனம் “அனுபவவாத விமர்சனம்” என்று கூறப்படுகிறது.

அதனால்தான் லெனின் இந்த நூலுக்கு “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்று பெயரிட்டார். பொருள்முதல்வாதம் மீதான விமர்சனத்தை நிறைய ஆசிரியர்களின் நூல்களில் இருந்து சாரமாக லெனின் இந்த நூலில் திரட்டித் தந்துள்ளார். அந்த விமர்சனங்களின் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக்காட்டி இயக்கவியல் பொருள்முதல்வாதம் எவ்வாறு இன்றும் சரியானது என்பதை இந்த நூலில் நிறுவியுள்ளார்.

மாஹ், அவெனாரியஸ் ஆகியோரின் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மீதான அனுபவவாத விமர்சனக் கருத்து, அன்று பரவலாக அனைத்து நாடுகளிலும் பரவிக் கொண்டிருந்தது. குறிப்பாக ரஷ்யாவிலும் பரவியது. அந்த அனுபவவாத விமர்சனம் அதன் வடிவத்திலேயே ரஷ்யாவில் காணப்படவில்லை. மார்க்சியத் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை வெளிப்படையாக மறுக்காமல், மாஹிய கருத்துமுதல்வாதத் தத்துவத்துடன் மார்க்சிய சொற்களைப் பயன்படுத்தி மார்க்சியத் தத்துவதைச் சிதைத்தனர். இத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவர் அ.போக்தனோவ். இவரது தத்துவப் போக்கு “அனுபவவாத ஒருமைவாதம்” என்று அழைக்கப்படுகிறது. போக்தனோவ். தன்னை மார்க்சியவாதியாகக் காட்டிக் கொண்டே இந்தச் சிதைவு வேலையைச் செய்தார். இது எதிராளிகளைவிட ஆபத்தான போக்காகும். இந்தப் போக்குகள் அனைத்தையும் லெனின் இந்த நூலில் அம்பலப்படுத்தி விமர்சித்துள்ளார். ரஷ்யாவில் இத்தகைய போக்குடையவர்கள் பலர் இருந்தனர், பஸரோவ், லுனாசார்ஸ்கி, பெர்மன், ஹெல்பாண்ட், யுஷ்கேவிச், சுவோரோவ் ஆகியயோர்கள் ருஷ்யாவில் மாஹியின் தத்துவத்தைப் பின்பற்றினர்.

“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற இந்த நூலில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது.

முதல் மூன்று அத்தியாயங்களுக்கு ஒரே தலைப்புதான், “அனுபவவாத விமர்சனம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அறிவு பற்றிய கோட்பாடு” இந்த மூன்று தலைப்புகளில் லெனின் “அனுபவவாத விமர்சனம்” என்கிற கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் மார்க்சியத்தின் இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

நான்காவது அத்தியாயம், “அனுபவவாத விமர்சனத்தைப் பின்பற்றுபவர்களாகவும் அதன் தோழர்களாகவும் உள்ள கருத்துமுதல்வாத தத்துவவாதிகள். கருத்துமுதல்வாதத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் அப்பாற்பட்ட தத்துவமாக அனுபவவாத விமர்சனம் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அது கருத்துமுதல்வாதத் தத்துவத்துக்கே சேவை செய்கிறது என்பதை இந்த நான்காம் அத்தியாயத்தில் லெனின் விளக்கியுள்ளார்.

ஐந்தாவது அத்தியாயம், “இயற்கை அறிவியலிலும் கருத்துமுதல்வாதத் தத்துவத்திலும் அண்மையில் நடைபெற்ற புரட்சி.” இந்த ஐந்தாம் அத்தியாயத்தில், "பொருட்கள் பிளக்கப்பட்டது, இனி பொருள்முதல்வாத தத்துவம் பயனற்றது" என்று கூறுகிற தத்துவத்துக்குப் பதிலாகப் பருப்பொருள் பற்றிப் புதிய வரையறை தந்து பருப்பொருள் அதன் இயக்கம் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துக்களையும் லெனின் விளக்குகிறார்.

ஆறாவது தலைப்பு, “அனுபவவாத விமர்சனமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்.” அனுபவவாத விமர்சகர்கள் எப்படி மார்க்சின் தத்துவத்தைத் திருத்துகிறார்கள் என்பதையும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையையும் லெனின் இதில் சுட்டிக்காட்டுகிறார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைச் சிதைத்தால் மார்க்சியம் சிதைந்து போகும் என்று மார்க்சிய விரோதிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதனால் அவர்களின் தாக்குதல் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை நோக்கியே செல்கிறது.

ஒருவகையில் வரலாற்றியல் பொருள்முதல்வாதமே மார்க்சியத்தின் அடிப்படை என்று கூறுவது தவறில்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை நிலைநிறுத்துவதற்கே லெனின் இந்த நூலில் பாடுபட்டுள்ளார் என்பதை, முழுமையாகப் படிக்கும் போது அறியமுடிகிறது.

வளர்ச்சி அடைந்த மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் மட்டுமல்ல, இதற்கு முன்பான பழைய பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதத்தால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது, இதை எல்லாம் கடந்துதான் இன்று மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நூலில் ஜார்ஜ் பெர்கிலியைப் பற்றி லெனின் நிறையப் பேசுகிறார், அதுமட்டும் அல்லாது அவரது கருத்துக்களைப் அறிந்து கொள்வதென்பது, அனுபவவாத விமர்சனத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும், அதனால் பெர்கிலியைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்வோம்.

அனுபவவாதத்தை விமர்சனம் செய்கிற மாஹி போன்றவர்கள் பெர்க்கிலி கூறாத எந்த ஒரு வார்த்தையையும் முன்வைக்கவில்லை என்று லெனின் கூறியுள்ளார். அதனால் பெர்கிலியை முதலில் புரிந்து கொள்வோம்

ஜார்ஜ் பெர்கிலி இங்கிலாந்தில் உள்ள அயர்லாந்தில் பிறந்தார். இவர் ஒரு பாதிரியார்.

இருப்பு என்பது உணரப்படுவது என்கிறார் பெர்கிலி. அதாவது இருப்பு என்று எதுவும் இல்லை, இருப்பதாக உணரப்படுவதால் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பெர்கிலின் கருத்தாக லெனின் கொடுக்கும் மேற்கோளைப் பார்ப்போம்.

"வீடுகள், மலைகள், ஆறுகள் அல்லது ஒரே வார்த்தையில் புலன்கள் உணர்வுக்குட்படும் அனைத்துப் பொருள்களும் அவை பற்றிய உணர்வில் இருந்து வேறுபட்டு, இயல்பான அல்லது உண்மையான இருப்புடன் உள்ளது என்கிற விசித்திரமான கருத்து மனிதர்களிடையே இருக்கிறது"

பொருள்முதல்வாதிகளுக்கு உண்மையாகப்படும் இக்கருத்து பெர்கிலிக்கு அப்பட்டமான முரண்பாடாகத் தெரிகிறது.

 

புலன்கள் மூலம் உணரப்படும் பொருள்கள், நமது எண்ணங்கள் அல்லது கருத்துகள் தவிர வேறு எவற்றை நாம் உணர்கிறோம் என்கிறார் பெர்கிலி. அதாவது நமது எண்ணங்களே பொருட்களாகக் காட்சி தருகின்றன. வெளியில் தனித்த பொருள் என்பது இல்லை.

இதற்கு லெனின் பதிலளிக்கிறார். மனதுக்கு வெளியே பொருள் இருப்பதை அங்கீகரிக்கிறது பொருள்முதல்வாதம். மனம் இல்லாமல் பொருள்களுக்கு இருப்பில்லை என்று கூறுவது கருத்துமுதல்வாதம். இந்தக் கருத்துமுதல்வாதத்தின் பெயர் (Subjective Idealism) அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும்.

மேலைநாடுகளில் பொதுவாக புறநிலைக் கருத்துமுதல்வாதமே பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது. இந்தியாவில் புறநிலை கருத்துமுதல்வாதம், அகநிலை கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டும் காணப்படுகின்றன. ஹெகல் புறநிலைக் கருத்துமுதல்வாதியே. இந்தியாவைப் பொறுத்தளவில் விசிட்டாத்வைதியான ராமானுசர், துவைதியான மத்துவர், சைவ சித்தாந்தியான மெய்கண்டர் ஆகியோர் புறநிலை கருத்துமுதல்வாதிகள். ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் ஆகியோர் அகநிலை கருத்துமுதல்வாதிகள்.

பருப்பொருள் என்ற ஒன்று இல்லை, அது இல்லாதது என்பது பெர்கிலியின் அகநிலை கருத்துமுதல்வாதம். உலகம் என்பது இல்லை, அது ஒரு மாயை என்று கூறுவது ஆதிசங்கரரின் அகநிலை கருத்துமுதல்வாதம் (அத்வைதம்) ஆகும்.

இந்திய அகநிலை கருத்துமுதல்வாதத்தை மார்க்சிய வழியில் விமர்சிப்பதற்கு லெனின் எழுதிய இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும்.

மாஹ், அவெனாரியஸ் ஆகிய இருவரின் கருத்தை பற்றி லெனின் முதல் அத்தியாயத்தில் பேசுகிறார். அப்படிப் பேசும் போது தொடக்கநிலையிலேயே, மனப்படிமங்கள் அதாவது கருத்துக்கள் என்பவை புலன் உணர்வுகளின் மூலம் மட்டுமே பெறப்படுகின்றன, இந்தத் தெளிவான இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்கிற மார்க்சிய தத்துவத்தை மார்க்சியம் பேசுகிறவர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் மாஹியர்கள் போன்ற குழப்பவாதிகளைக் காணும் போது, தெரிந்ததை மறுபடியும் கூற வேண்டியிருக்கிறது என்று லெனின் எழுதியுள்ளார்.

எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு”, “லுத்விக் ஃபாயர்பாக்” ஆகிய இரு நூல்களில் எழுதப்பட்டவைகளைக் கொண்டு லெனின் கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் ஆகியவற்றைத் தெளிவுபடுத்துகிறார்.

பொருள்களில் இருந்து சிந்தனை மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டுமா? அல்லது சிந்தனை மற்றும் புலன் உணர்வு ஆகிவற்றில் இருந்து பொருளுக்குச் செல்ல வேண்டுமா?

இதுவே தத்துவத்திற்கான அடிப்படை கேள்ளிகளில் முதன்மையானது, இதற்கு விடையாக லெனின், பொருள்களில் இருந்து சிந்தனை மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றுக்குச் செல்லும் முதல் போக்கான பொருள்முதல்வாதத்தை எங்கெல்ஸ் பின்பற்றுவதாகவும், சிந்தனை மற்றும் புலன் உணர்வு ஆகிவற்றில் இருந்து பொருளுக்குச் செல்லும் இரண்டாம் போக்கான கருத்துமுதல்வாதத்தை மாஹி பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார்.

மாஹியின் தத்துவம் மனதில் இருந்து பொருள்களை அணுகுகிற அகநிலை கருத்துமுதல்வாதம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த அகநிலைக் கருத்துமுதல்வாதமானது புறநிலை எதார்த்தத்தை ஏற்காததால், உலகில் “நான்” மட்டும் இருப்பதாக முடிவுக்கு வருகிறது.

அடுத்து லெனின் அவெனாரியஸ் கருத்துக்களை அலசுகிறார்.

அவெனாரியசும் புலனுணர்வு என்ற ஒன்று மட்டுமே இருப்பதாகக் கருதுகிறார். அவருக்கு உலகம் என்பது புலனுணர்ச்சி மட்டும்தான். இந்தப் போக்குகளை ஏற்றுக் கொள்பவர்கள் தத்துவத்தை, கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்று பிரிப்பதை மறுத்து நடுநிலையான அல்லது இரண்டும் கலந்த தத்துவமாகக் காட்ட முயற்சிக்கின்றனர். அதற்கு உலக ஆக்கக் கூறுகளைக் கண்டறிவதாகக் கூறிக் கொண்டு, அவர்கள், இயற்பொருளான பௌதிக அனுபவங்களின் ஆக்ககூறுகள் அதாவது உடல், புற உலகம், பருப்பொருள் ஆகியவைகள் புலனுணர்ச்சிக்கு சமமானவை என்று கருதுகின்றனர். இப்படிச் சமப்படுத்துவதின் மூலம் பொருள்முதல்வாதத்தை மறைமுகமாகக் கருத்துமுதல்வாத தத்துவத்தினுள் நுழைக்கிறார்கள். (74)

இப்படியான குழப்பங்களைக் கொண்ட அனுபவவாத விமர்சகர்கள், மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை (77) இயக்க மறுப்பியல் தத்துவமாகத் திரித்துக் கூறுகின்றனர். இந்தப் பார்வை முற்றிலும் தவறானது என்பதை லெனின் இந்த நூலில் பல இடங்களில் விளக்குகிறார்.

முடிவாக லெனின் கூறுகிறார்:-

"நாம் பரிசீலிக்கும் மாஹ் அவெனாரியசின் போதனைகளில் அகநிலைக் கருத்துமுதல்வாதம் பற்றிய பொழிப்புரை தவிர வேறு எதுவும் இல்லை. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகியவற்றிற்கும் மேலாக சென்றுவிட்டதாக அவர்களால் இங்குக் கூறப்படுகிறது. அதாவது பொருளிலிருந்து உணர்வுக்குச் செல்லுகிற, உணர்விலிருந்து பொருளுக்குச் செல்லுகிற கண்ணோட்டத்தில் உள்ள எதிர் நிலையானது நீக்கப்பட்டுவிட்டது என்று உரிமை கோரப்படுகிறது.

வேறு விதமாகக் கூறினால், பெர்க்கிலிய விவாதம் திரும்பக் கூறப்படுகிறது என் புலன் உணர்ச்சிகளை மட்டுமே நான் உணருகிறேன்; அவற்றிற்கு அப்பால் "தானாகவே உள்ள பொருள்களை" (objects in themselves) அனுமானிக்க எனக்கு உரிமை இல்லை. 1710இல் பெர்க்கிலி, 1801இல் பிச்டே மற்றும் 1891-94இல் அவெனரியஸ், இதன் சாராம்சத்தை அதாவது அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் அடிப்படை தத்துவப் போக்கினை மாற்றி விடவில்லை. பல்வேறு முறைகளில் விளக்கம் அளித்தனர்.

உலகம் என்பது என் புலன் உணர்ச்சி; நான் என்பதன் மூலமாக, நான் - அல்லாததால் அனுமானிக்கப்படுகிறது (இது உருவாக்கப்பட்டது, படைக்கப்பட்டது); பொருள் என்பது உணர்வுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது. நானும் சுற்றுப்புறமும் பிரிக்க முடியாத இணைப்பு என்பது அனுபவவாத விமர்சனத்தின் முதன்மையான இணைப்பு என்ற கொள்கையாகும்; இது சிறிது சரி செய்யப்பட்ட, மறுபடியும் வண்ணம் பூசப்பட்ட அதே பழைய குப்பைத் தொட்டிதான், அதே பழைய கூற்றுதான்."

(84 - 85)

இதற்கு அடுத்து லெனின், மனிதனுக்கு முன்னரே இயற்கை இருந்ததா? என்கிற கேள்வியை எழுப்பி அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை விமர்சிக்கிறார்.

மனிதனுக்கு முன்னரே இயற்கை இருந்ததா? என்கிற இந்தக் கேள்விக்கு, மனிதர்களோ வேறு எந்த உயிரினங்களோ இல்லாத காலத்திலும் பூமி இருந்தது என்பதை இயற்கை அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது.

இயற்கை அறிவியல் அளிக்கின்ற இந்தப் பதில், இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்குச் சாதகமாக இருக்கிறது, பொருள்முதல்வாதத்தை மறுக்கிற அனுபவவாத விமர்சனப் போக்கிற்கு எதிராகவே இருக்கிறது.

அவெனாரியஸ். தத்துவக் கூற்றின்படி சுற்றுப்புறத்தோடு இணைந்திருக்கிற “நான்” இல்லாத போதே இந்தப் பூமி இருந்தது என்று இயற்கை அறிவியல் கூறுவதால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அனுபவவாத விமர்சகர்கள் தள்ளப்பட்டாகள்.

ஜெர்மன் மாஹியவாத தத்துவ அறிஞரான ருடோல்ஃப் வில்லி இந்தச் சிக்கலை மாஹியின் பாணியிலேயே விடுவிக்க முயற்சித்தார்.

மனிதன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்பு பூமி இருந்ததா? என்கிற கேள்விக்கு வில்லி கூறுகிறார், “நாம் மனதின்வழியே பழங்காலத்திற்குச் செல்கிறோம்” ஆனால் அந்த அனுபவத்தை மானிட அனுபவமாகக் கருதவேண்டியதில்லை என்கிறார்.

“விலங்கு வாழ்க்கையைப் பொது அனுபவத்தோடு மட்டுமே தொடர்புடையதாக நாம் கருதுவோமானால் விலங்கு உலகத்தை – அது மிகவும் முக்கியமற்ற புழுவாக (insignificant worm) இருந்தாலும்கூடத் தொன்மையான மனிதர்களாகக் கருத வேண்டும்” 

இதன் மூலம் வில்லி, மனிதனுக்கு முன்னால் ஒரு புழுவின் அனுபவமாக பூமி இருந்தது என்கிறார் இந்த முட்டாள்தனமான பதிலும் அவர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. மனிதன் மட்டுமல்ல, எந்த உயிரினமும் தோன்றுவதற்கு முன்பே பூமி இருந்தது என்பதையே இயற்கை அறிவியல் கூறியுள்ளது.

இதற்குப் பதிலளிக்க முடியாமையை உணர்ந்த வில்லி வேறுவிதமாக முயற்சிக்கிறார்.

காலம் என்பது ஒரு “தானாக உள்ள பொருளா?” என்று வில்லி கேள்வி எழுப்பி அதற்கு உறுதியாக “இல்லை” என்று பதிலளிக்கிறார்.

மனிதனுக்குப் புறத்தே உள்ள பொருள்கள் என்பது மனப்பதிவுகள் மட்டுமே, அவனைச் சுற்றிலும் பார்க்கின்ற சில துணுக்குகளின் உதவியினால் மனிதன் கட்டமைத்துக் கொண்ட கற்பனைத் துகள்களே அந்தப் பொருள்கள் என்கிறார். இந்தக் கருத்தில் இருந்து வில்லி விடுபடவில்லை, விரும்பவுமில்லை என்பது தெரிகிறது. தொடர்ச்சியாகக் கூறுகிறார், “தத்துவவாதி வாழ்க்கை நீரோட்டத்தைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? … ஆகவே, நான் என்னிடம் சொல்லிக் கொள்கிறேன்: அனைத்து ஒழுங்கு முறைகளின் மீதான பற்றைக் கைவிடுங்கள். இந்த உயிர் வாழ்கிற நொடி நேரத்தை மட்டுமே பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் வாழ்கிற, இந்த நொடி நேரம் மட்டுமே இன்பத்தை அளிக்கிறது.”

இந்திய அகநிலைக் கருத்துமுதல்வாதியான ஆதிசங்கரரும் இதே கருத்துக்குத்தான் வருகிறார்

“சென்றதை எதையும் நான் நினைவுப்படுத்திக் கொள்வதில்லை, பின்னால் வரப்போவதை ஆலோசித்துப் பார்ப்பதும் இல்லை. இப்போது நிகழ்காலத்தில் பிராப்த கர்மவசத்தினால் ஏற்படும் நல்லதோ கெட்டதோ எது கிடைத்தாலும், அதனை விருப்பு, வெறுப்பு இல்லாமல் அனுபவிக்கிறேன்”

(சதாசாரனுசந்தானம் 15)

புலனுணர்வை முதன்மைப்படுத்திப் புறவுலகை இரண்டாம் நிலையாக அல்லது புலனுணர்வின் உணர்தல் மட்டுமே புறநிலையான உலகம் என்று கருதுகிற மேலை நாட்டு அகநிலைக் கருத்துமுதல்வாதிகளைப் போலவே இந்திய அகநிலைக் கருத்துமுதல்வாத (அத்வைத) தத்துவவாதியான விவேகானந்தர் கூறுகிறார்.

"உலகம் இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன பொருள்? இந்த உலகம் இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதுதான். என் மனம். உங்கள் மனம் என்று எல்லோருடைய மனங்களையும் சார்ந்து தான் உலகம் இருக்கிறது."

(விவேகானந்தர் - ஞானத் தீபம் 3, பக்கம் 232)

அடுத்து ஒரு முக்கியமான தத்துவக் கேள்வியை எழுப்பி லெனின் விவாதிக்கிறார். புறநிலையான உண்மை என்பது இருக்கிறதா?

போக்தனோவ் போன்றோர்கள் புறநிலை உண்மை என்பது இல்லை, அது ஒரு கருத்தியல் வடிவம், மனித அனுபவங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பு என்கின்றனர். உண்மை என்பது மனிதனது அனுபவத்தின் ஒரு வடிவம் என்று அவர்கள் கருதுவதால், மனிதனைச் சாராமல் சுயேச்சையாக எந்த உண்மையும் இருக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகின்றனர். 

புறநிலை உண்மையை போக்தனோவ் மறுப்பது அகநிலைவாதம், அறிவொணாவாதம் என்கிறார் லெனின்.

அகநிலைக் கருத்துமுதல்வாதம், அறிவொணாவாதம் ஆகியவற்றுக்கு எதிரானது இயக்கவியல் பொருள்முதல்வாதம். மனிதனது புலனுணர்ச்சிகள் புறவுலகின் பிம்பங்கள் என்று பொருள்முதல்வாதம் கருதுவதின் மூலம் புறநிலை உண்மையை அங்கீகரிக்கிறது. இதுவே அறிவு பற்றிய பொருள்முதல்வாதக் கோட்பாடாகும். (162) இதற்கு ஆதாரமாகக் கருத்துமுதல்வாதியான ஹெகலிடம் இருந்து மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத்துக்கு மாறுவதற்கு வழிகாட்டிய ஃபாயர்பாக்கின் கருத்தை லெனின் இங்கே காட்டுகிறார்.

“என்னுடைய புலனுணர்ச்சி அகநிலையானது, ஆனால் அதன் அடிப்படை அல்லது காரணம் புறநிலையானது” என்கிற ஃபாயர்பாக்கின் கருத்தை முன்வைத்து லெனின் கூறுகிறார், “பொருள்முதல்வாதம் புலனறிவு உலகத்தை இறுதி நிலையான, புறநிலையான உண்மையாகக் கொண்டு தொடங்குகிறது.” (162)

அணுவை பிளக்க முடியும் என்பதை அறிந்தவுடன், இந்தப் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு பொருள்முதல்வாதத்தை எதிர்த்து அழித்திட முடியும் என்று பலர் கருதினர். அணு என்பது பிளக்கமுடியாதது என்கிற தன்மையை இழந்துவிட்டது, ஆகவே பருப்பொருள் மறைகிறது என்ற கருத்தை பரப்பினர். இந்த நிலையில்தான் லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலின் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாத எதிரிகளுக்குப் பதிலளித்தார்.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிராகப் பலபேர் செயல்பட்டனர், அதில் முக்கியமானவர் எர்னஸ்ட் மாஹ். இவரைப் பின்பற்றியே பலர் வந்தனர். உலகம் பற்றிய அறிவியல் விளக்கத்திற்கு உறுதியான ஆதாரத்தைப் பொருள்முதல்வாதம் மட்டுமே தருகிறது என்கிற கட்டுக்கதை இப்போது முடிவுக்கு வந்தது என்று மாஹியவாதிகள் கூறினர்.

அணு பிளக்கப்பட்டது, அதனால் பருப்பொருள் மறைகிறது என்று கூறுகிற அனைவருக்கும் பதிலாக, லெனின் பருப்பொருள் என்பதற்குப் புதிய வரையறை கொடுக்கிறார். பருப்பொருள் என்பது மனிதர்களுடைய உணர்வுகளுக்குப் புறத்தே, அவனைச் சாராமல் இருப்பது ஆகும்.

மனிதனிடம் பிரதிபலிக்கக் கூடிய அனைத்து புறநிலைகளும் பருப்பொருள் ஆகும்.

"பருப்பொருள் மறைந்து விடுகிறது'' என்றால் பருப்பொருளைப் பற்றி இதுவரை, நாம் அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம் அறிவு மேலும் ஆழமாகப் செல்கிறது என்று பொருள்; பருப்பொருளின் பண்புகளும் (ஊடுருவ முடியாத்தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன; முன்னர் அறுதியானவையாக, மாறாநிலை உடையவையாக, முதன்மையாக தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பருப்பொருளின் சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாளமானவையாகத் தம்மை வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் பருப்பொருளின் ஒற்றைப் 'பண்பு' புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற பண்பாகும்; அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் பிணைக்கப்பட்டுள்ளது.”

(320 - 321)

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் நுட்பமான வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் பயன்பட்டன என்பதே உண்மையாகும். இதற்கு மாறாக அனுபவவாத விமர்சகர்கள் மார்க்சியத்தைச் சிதைக்க, இந்தப் புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த முயற்சித்தனர்.

போக்தனோவ் என்கிற ருஷ்யர், மாஹிய அகநிலைக் கருத்துமுதல்வாத தத்துவத்தை, மார்க்சிய சொற்களுக்குள் மறைத்து “அனுபவ ஒருமைவாதம்” என்கிற தத்துவத்தை உருவாக்கினார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி மார்க்ஸ் எழுதிய புகழ்பெற்ற வரிகளைப் பயன்படுத்தியே போக்தனோவ் இத்தகைய திருத்தல் வேலைகளைச் செய்தார். மார்க்சிய திருத்தல் வேலையைச் செய்த போக்தனோவை லெனின் இறுதி அத்தியாயத்தில் விமர்சிக்கிறார்.

போக்தனோவ் அறிபவனையும் அறிபடுபொருளையும் சமப்படுத்துகிறார், அதாவது சமூக வாழ்நிலையும் சமூக உணர்வுநிலையும் சமமான ஒன்று என்று கூறுகிறார்.

பொதுவாக வாழ்நிலையும் பொதுவான உணர்வுநிலையும் எப்படி ஒன்று போல் இல்லையோ அதேபோலச் சமூக வாழ்நிலையும் சமூக உணர்வுநிலையும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இதைக் கூறிவிட்டு லெனின் ஒரு உதாரணத்தையும் காட்டுகிறார்.

ஒரு விவசாயி தானியத்தை விற்பனை செய்கிறான் என்றால், அந்த விற்பனை மூலம், உலகத் தானிய வணிகர்களுடன் உறவு கொள்கிறான். ஆனால் இதை அவன் உணர்ந்து செய்யவில்லை. பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகள் பற்றியும் அந்த விவசாயி உணர்ந்திருக்க முடியாது.

சமூக வாழ்நிலையின் பிரதிபலிப்பே சமூக உணர்வு என்பது மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. பிரதிபலிப்பு என்பது தோராயமாகப் பிரதிபலிக்கப்படுவதன் ஓர் உண்மையான பிரதியாக இருக்கலாம். அதனால் இரண்டும் ஒன்றுபோல் இருக்கிறது என்பது முட்டாள்தனமானது என்கிறார் லெனின். பொதுவாக உணர்வு என்பது வாழ்நிலையைப் பிரதிபலிக்கிறது. இது பொருள்முதல்வாதத்தின் பொதுவான கோட்பாடு ஆகும். சமூக வாழ்நிலையே சமூக உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்கிற வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டுடன் பிரிக்க முடியாதபடி நேரடியாகத் தொடர்பினைக் காணாமல் இருப்பது சாத்தியமில்லை என்று லெனின் கூறுகிறார்.

“தனது கருத்துகளின் அடிப்படையில் மார்க்சை மிக நுட்பமாகத் திருத்த போக்தனோவ் முயற்சிப்பது இந்தப் பொருள்முதல்வாத அடிப்படையைக் கருத்துமுதல்வாத உணர்வுடன் சிதைப்பதாகும்” என்கிறார் லெனின்.

இந்த நூலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையை மீண்டும் மீண்டும் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

“பொதுவாகப் பொருள்முதல்வாதம் புறநிலை உண்மையான வாழ்நிலை (பருப்பொருள்) என்பது மனிதனின் உணர்வுநிலை, புலனுணர்ச்சி, அனுபவம் ஆகியவற்றைச் சாராதது என்று கூறுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் சமூக வாழ்நிலை மனிதகுலத்தின் சமூக உணர்வு நிலையைச் சாராதது என்று ஏற்றுக் கொள்கிறது. இந்த இரண்டிலும் உணர்வுநிலை என்பது வாழ்நிலையின் பிரதிபலிப்பு மட்டுமே, சரியாகக் கூறினால், தோராயமான (போதுமான, சரியான) உண்மையான பிரதிபலிப்பாகும்.” (396 - 397)

உண்மையில் மாஹ், அவெனாரியஸ் ஆகியோர் கருத்துமுதல்வாதத்தை வளர்த்தெடுக்கவில்லை, இதற்கு மாறாகப் பழைய கருத்துமுதல்வாதப் பிழைகளை அலங்காரமான கலைச் சொற்களால் மூடிமறைத்தனர் என்கிறார் லெனின்.

இந்த நூலைப் பற்றிய அறிமுகத்துக்கு இது போதுமான அளவுக்கு இருக்கிறது. அதனால் பொருள்முதல்வாதத்துக்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் உள்ள வேறுபாடாக லெனின் கூறுவதோடு முடித்துக் கொள்வோம்.

“பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய தத்துவங்களைப் பின்பற்றுபவர்களுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடு பின்வருமாறு உள்ளது: பொருள்முதல்வாதி புலன் உணர்வுகள், புலன்–அறிவு, கருத்து, மனது ஆகியன புறவய உலகத்தின் பிம்பம் என்று கருதுகிறான். கருத்துகள், புலன் அறிவு போன்றவற்றின் இயக்கத்திற்குச் சமமாக, புறத்தே உள்ள பொருள் உள்ளது. 

உலகம் என்பது நமது உணர்வில் பிரதிபலிக்கும் புற எதார்த்தம் ஆகும். நமது புலன் உணர்வு மூலம் புற உலகம் பற்றி நமக்குக் கிடைக்கும் கருத்துதான் பருப்பொருள் என்பது. எனவே, இயக்கத்தைப் பருப்பொருளிலிருந்து பிரிப்பது என்பது புறவய எதார்த்தத்திலிருந்து சிந்தனையைப் பிரிப்பது, அல்லது எனது புலன் உணர்வுகளைப் புற உலகத்திலிருந்து பிரிப்பது என்பதற்குச் சமமாகும். சுருக்கமாகக் கூறினால், கருத்துமுதல்வாதத்திற்குச் செல்வதாகும். பருப்பொருளை மறுப்பது, பருப்பொருள் இல்லாமல் இயக்கம் பற்றிக் கூறுவது என்பதில் உள்ள தந்திரம் என்பவை பருப்பொருளுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவை மறுப்பதில் உள்ளது. இத்தகைய உறவே இல்லை என்பது போல இது கூறப்படுகிறது. ஆனால் இது கள்ளத்தனமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. விவாதத்தின் ஆரம்பத்தில் இது வெளிப்படாமலேயே இருக்கிறது. ஆனால் பின்னர், அது சற்று ஏறக்குறைய தெரியாத வண்ணம் உள்ளே நுழைகிறது.”

(328 - 329)

கருத்துமுதல்வாதத்தையும் பொருள்முதல்வாதத்தையும் கலந்து கதம்பமாக, ஒரு நடுநிலை தத்துவம் போல் காட்ட முயற்சித்த மாஹிவாதிகளின் அனுபவவாத விமர்சனத்தை லெனின் இந்த நூலில் விமர்சித்து, இயக்கவியல் பொருள்முதல்வாதமானது, இயற்கை அறிவியலோடு இணைந்து செழுமை அடைவதை நிரூபித்துள்ளார்.

இறுதியாக லெனின் கொடுக்கிற எச்சரிக்கையைப் பதிவுசெய்வோம்.

"பொருள்முதல்வாதத்தின் அடிப்படைக் கருதுகோள் என்பது புறவுலகின் இருப்பினை, மனதிற்கு வெளியே அதனைச் சாராமல் பொருள் இருப்பது என்பது ஆகியன பஸரோவிற்கு மெய்யாகவே தெரியாமல் இருந்தால் அது அப்பட்டமான அறியாமை ஆகும். மனதைச் சாராமல் 'வெளியே' இருக்கும் மனதினால் பிரதிபலிக்கப்படும் "தாமாகவே இருக்கும் பொருள்களை" ஏற்றுக் கொள்ளும் பொருள்முதல்வாதிகளை 1710 ஆம் ஆண்டு பெர்க்கிலி கண்டித்ததை நாம் நினைவுகூறலாம். ஒவ்வொருவருக்கும் பொருள்முதல்வாதிகளுக்கு எதிராகப் பெர்க்கிலியுடன் அல்லது வேறு எவருடனும் இணைந்து நிற்கும் உரிமை நிச்சயமாக உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால் அனைத்துப் பொருள்முதல்வாதிகள் பற்றியும் அவர்களது கொள்கை அடிப்படைகளைச் சிதைப்பதும் புறக்கணிப்பதும், இப்பிரச்சனையை மோசமாகக் குழப்புவது ஆகும். இதுவும் அதுபோன்றே மறுக்க முடியாததாகும்."

(102)

ருஷ்ய தத்துவவாதியான பஸசரவ், மாஹியவாத தத்துவத்தின் அடிப்படையில் மார்க்சியத்தைத் திருத்துவதற்கு முனைந்தார். இப்படிப்பட்ட பஸசரவைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். 

அகநிலைக் கருத்துமுதல்வாதியான பெர்கிலி போன்றவர்களைப் பின்பற்றுவதற்கு ஒவ்வொருக்கும் உரிமை கண்டிப்பாக இருக்கிறது ஆனால் பொருள்முதல்வாத அடிப்படைகளைச் சிதைப்பதற்கு உரிமை பெற்றவராகக் கூறிட முடியாது. அப்படிச் செய்பவர்களை மார்க்சிய அடிப்படையைக் கொண்டு அவர்களின் மார்க்சிய விரோதப் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.

அன்றைய ருஷ்ய போக்தனோவ் போன்று, இந்திய அகநிலைக் கருத்துமுதல்வாதமான அத்வைதத்தை, இயக்கவியல் பொருள்முதல்வாதத்துடன் தமிழக அத்வைதிகள் சிலர் இணைத்து மார்க்சியத் தத்துவத்தைச் சிதைக்க முயற்சித்தனர். இவர்கள் பரம்பொருளும் பருப்பொருளும் ஒன்று என்று கூறுகிற தொடக்க நிலையிலேயே நின்றுவிட்டனர்.

லெனின் காலத்திய போக்தனோவ் போன்ற மாஹிவாதிகள் புலனுணர்வுக்கும் பருப்பொருளுக்கும் உள்ள தொடர்பை விரிவாக விளக்கியதையே லெனின் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் விமர்சித்து வீழ்த்தியுள்ளார். அப்படி இருக்கையில் இவர்கள் போன்ற தொடக்கநிலையில் உள்ளவர்களை விமர்சிப்பது கடினம் அல்ல.

இயக்கவியல் பொருள்முதல்வாதம், லெனினது இந்த நூலின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் ஆகியோர்களின் அகநிலைக் கருத்துமுதல்வாதமான அத்வைதத்தை விமர்சிப்போமானால், இந்த புதிய அத்வைதிகளின் குழப்பமான வேலைகள் தொடக்கநிலையிலேயே தூக்கி எறியப்படும்.

லெனின் எழுதிய “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற இந்த நூலை இடதுசாரி தோழர்கள் அனைவரும் தனியாகவோ, பிறர் துணையுடனோ படிக்க வேண்டும். அப்போதுதான் திருத்தல்வாதத்தில் அகப்படாமல், மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் பயணித்துத் தொழிலாளர்களின் உண்மையான விடுதலையைப் பெறமுடியும்.

-அ.கா.ஈஸ்வரன்

9884092972

நூல் : பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்

ஆசிரியர் : லெனின்

தமிழில் : எஸ்.தோதாத்ரி – மணியம்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம், சென்னை

9841775112

விலை : ரூ.500/-