கண் தெரியாத இசைஞன் - விளாதீமிர் கொரலேன்கோ

உதய சங்கர்

கண் தெரியாத இசைஞன் - விளாதீமிர் கொரலேன்கோ
மன்னியுங்கள் கொரொலொன்கோ!
உங்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளாததற்காக எங்களை மன்னியுங்கள்.
எங்கள் இளமையின் திமிரில் உங்களைக் கொண்டாட மறந்து விட்டோம். கண்முன்னே கொட்டிக்கிடந்த ருஷ்ய இலக்கியங்களில் எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது, என்று புரியாமல் போய்விட்டது. அதுவரை ஒருபோதும் கண்டிராத விருந்தில் எல்லாவற்றையும் ஒருவாய் தின்று எந்த ருசியும் நிலைத்திராமல் போய்விடும் அனுபவம் தான் எங்களுக்கு இருந்தது.
அத்துடன் மூத்த தோழர்களின் வழிகாட்டலில் கார்க்கி, பஸிலி வஸ்யேவ், ஒஸ்திராவ்ஸ்கி, அலெக்ஸி டால்ஸ்டாய், வசுலீ சுக்‌ஷீன், மிகயீல் ஷொலொகோவ், இன்னும் இப்போது ஞாபகத்திலிருந்து மங்கிப் போன புரட்சிக்குப் பிந்தைய பல எழுத்தாளர்களை வாசித்தோம்.
இவர்களுடன் இவர்களறியாமல் வந்த டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, சேகவ், லெர்மந்தேவ், துர்கனேவ், கொரொலேன்கோ, போன்றவர்களையும் வாசித்தோம். அப்படித்தான் நல்ல கெட்டி அட்டையில் ரா.கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் வெளிவந்த கண் தெரியாத இசைஞனையும் வாசித்தோம்.
உன்னதமான படைப்பு என்று உணர்ந்தாலும் முதிர்ச்சியில்லாத அந்தப் பருவத்தில் எத்தனை பேரில் நீங்களும் ஒருவரென்று நினைத்தோம் அல்லது போதுமான அளவுக்குப் பேசவில்லையென்று நினைக்கிறேன்.
இப்போது வாசிக்கும்போது கண் தெரியாத இசைஞன் ஒரு காவியமாகத் தெரிகிறது. இருண்ட , தரை காணா முடியாத மனித மனதின் ஆழத்திலிருந்து அவ்வளவு முத்துகளை அள்ளித் தந்திருக்கிறீர்கள் கொரொலேன்கோ. காவியத்தின் கட்டமைப்பும், கதைப்பின்னலும், ஏன் கதை முடியும் விதம்கூட அப்படியே காவியப்பாங்குடன் இருக்கிறது.
1885 - ஆம் ஆண்டு எழுதத்தொடங்கி 1886 ஆம் எழுதி முடித்த இந்த நாவல் உங்கள் வாழ்நாளிலேயே 15 முறை பத்திரிகைகளில் தொடராக வெளிவந்திருக்கிறதென்பதும் ஒவ்வொரு முறையும் திருத்திக் கொண்டேயிருந்திருக்கிறீர்களென்பதும் ஆச்சரியமூட்டுகிறது.
புகழ்பெற்ற புனைவு எழுத்தாளராகவும் அபுனைவு எழுத்தாளராகவும் திகழ்ந்திருக்கிறீர்கள். ஜார் ஆட்சிக்கெதிராக போராடி ஊர் கடத்தல் உட்பட பல தண்டனைகளைப் பெற்றிருக்கிறீர்கள். 1853 ஆம் பிறந்த நீங்கள் 1921 ஆம் ஆண்டு மறைந்திருக்கிறீர்கள்.
200 க்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், விமரிசனங்கள், கடிதங்கள் நாட்குறிப்புகள், கையேடுகளை எழுதிக் குவித்திருக்கிறீர்கள். நாங்கள் கண் தெரியாத இசைஞனோடு உங்களைச் சுருக்கி விட்டோம். அதற்காக எங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
கண் தெரியாத மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய இதிகாசமாக உங்கள் நாவல் திகழ்கிறது. உங்கள் பியோத்தரின் பிறப்பு முதல் ஒவ்வொரு கட்டமாக உளரீதியான அவனுடைய ஆன்ம வளர்ச்சியை இத்தனை அற்புதமாக யாரும் எழுதியதில்லை. கண் தெரியாதவர்களுக்கு நிறங்கள் தான் தலையாயப் பிரச்னையாக இருப்பதைப் பற்றி, நிறங்களைப் பற்றி மக்சீம் அவருடன் பேசுகிற அந்தக் காட்சி இதுவரை வாசித்த படைப்புகளில் சிகரம். எங்கள் தோழர். தேனி சீருடையான் தேனிசீ ருடையான் கூட நிறங்களின் உலகம் என்றொரு அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார். தமிழின் கொரொலேன்கோ அவர் தான்.
பியோத்தரின் மாமா மக்சீம் தான் பியோத்தரின் ஆன்மகுருவாக இருந்து வழிநடத்துகிறார். கவைக்கோலை ஊன்றிக்கொண்டு கடுகடுப்பாகவும் முரட்டுத்தனமாகவும் தெரியும் மக்சீம் தான் பியோத்தரின் ஒவ்வொரு மன அசைவையும் புரிந்து கொள்கிறார். இப்படியொரு கதாபாத்திரத்தை எப்படி உருவாக்கினீர்கள் கொரொலேன்கோ? ஒருவேளை அது நீங்கள் தானோ. உங்கள் உயிரை பியோத்தரிடம் வைத்திருந்தீர்களென்றால் அதன் உடலாக மக்சீம் இருக்கிறார்.
அறிமுகமாகும் காட்சியிலேயே மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறாள் சிறுமி இவெலினா. அவள் பியோத்தரை விட்டுப் பிரிந்து விடக்கூடாதேயென்று ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வேண்டிக் கொண்டிருந்தேன் கொரொலேன்கோ. தன்னையே தருகிற அன்பின் முன்னால் இந்த உலகம் எம்மாத்திரம்? கண் தெரியாத காரணத்தால் பியோத்தர் சுயநலமிக்கவனாக, இந்த உலகை, அவனுடைய பிறப்பைச் சபிக்கிறவனாக இருக்கலாம். ஆனால் இவெலினா அவன் தரும் இம்சைகளைப் பொறுத்துக் கொண்டு அவனுடன் வாழ்நாள் முழுவதும் நடைபோட சித்தமாயிருக்கிறாளே. காதலின் மகத்துவம் இவெலினா.
பியோத்தரின் துயருறும் ஆன்மாவின் அடையாளத்தைக் காட்டிய குதிரைக்காரன் இயோஹீமும் சரி, பியோத்தருக்கு இந்த உலகத்தைப் புரியவைக்கும் வயதான கண்பார்வை தெரியாத பிச்சைக்காரன் சந்தீபாவும் சரி அன்புக்குரியவர்களாகி விடுகிறார்கள்.
பியோத்தர் புல்லாங்குழல் வாசிக்கும்போதும் சரி, பியானோ வாசிக்கும் போதும் சரி இசைக்கோர்வை நம்முடைய காதுகளில் ஒலிப்பதைக் கேட்க முடியும். மொழியின் மூலம் இசையை மீட்டியிருக்கிறீர்கள் கொரொலேன்கோ.
பியோத்தரின் தாய் ஆன்னாவின் பதற்றம் நாவல் தொடங்கிய பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை நம்மையும் தொற்றிக் கொள்கிறதே.
கண் தெரியாத இசைஞனை வாசித்து முடித்ததும் எதுவும் யோசிக்கமுடியவில்லை. அப்படியே ஐந்து நிமிடங்களுக்கு மனம் அமைதியாகிவிட்டது. பியோத்தரின் ஆன்மீக நெருக்கடியையும் அவனுடைய மீட்சியையும் நானே அனுபவித்ததைப் போல ஆகிவிட்டது.
இதோ அருகிலுள்ள வேப்பமரத்திலிருந்து ஒரு குயில் கூவுகிறது. மைனாக்கள் விட்டு விட்டுக் கத்துகின்றன. தவிட்டுக்குருவிகள் சலம்புகின்றன. எனக்கு நிறங்கள் தெரிகின்றன. வானின் நீலம், மரங்களின் பச்சை, காற்றில் பரிதவிக்கும் சிவப்புத்துணி, எல்லாம் தெரிகிறது. ஒளியின் விளையாட்டான நிறங்களை நல்வாய்ப்பு பெற்றவனாக நான் பார்க்கிறேன். நீயும் பார்த்தாயல்லவா பியோத்தர்!.
வாழ்க்கையின் அர்த்தம் என்ன? மகிழ்ச்சியாக இருப்பது தானே. அந்த மகிழ்ச்சிக்காகத்தானே மனிதர்கள் போராடுகிறார்கள்.
எங்கே கொஞ்சம் திரும்புங்கள் கொரொலேன்கோ! உங்களை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கைகளைக் கொடுங்கள். என் நெஞ்சில் வைத்துக் கொள்கிறேன். உங்களைப் போல ஒரு வரியாவது எழுத முடியுமா என்று பெருமூச்சு விடுகிறேன்.
கொரொலேன்கோ எங்கள் மூத்தோனே!
-உதயசங்கர்.
கண் தெரியாத இசைஞன்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:240/-
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு