வரலாற்றில் பொய்கள்

தேமொழி

வரலாற்றில் பொய்கள்

பண்டைய உலகின் சிறந்த நகர நாகரீகங்களிலும் தலைசிறந்ததாக விளங்கிய அரப்பா நாகரீகம் குறித்து நாம் அனைவருமே பேருவகை அடைகிறோம். ஆனால் வேதங்களில் இருந்து தான் உலகமே தொடங்குகிறது, வேதங்களின் உதவியோடு தான் இறைவனால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்றெல்லாம் கதைத்துத் திரிந்த இந்துத்துவவாதிகளுக்கும் அது சார்ந்த சில ஆய்வாளர்களுக்கும் அரப்பா நாகரீகம் உவகையளிப்பதற்கு பதிலாக தாங்க முடியாத நெருடலை அளித்தது. ஏனெனில் அரப்பா நாகரீகத்திற்கும் வேத கலாச்சாரத்திற்கும் இடையில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருந்தது. 

அதனால், அரப்பா நாகரீகத்தை எப்படியாவது வேத சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரண்டும் ஒன்றென நிறுவிட வேண்டும் என்று அவர்களில் சிலர் மிகப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்விரு சமூக அமைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மாறாக, பொய்கள், மோசடிகள், போன்றவற்றைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. அப்படிப்பட்ட மிக லாவகமாக ஜோடிக்கப்பட்டு ஆனால் ரொம்பக் கேவலமாக அம்பலப்பட்டுப் போன ஒரு வரலாற்றுப் பொய்யைத் தனது பேசுபொருளாகக் கொண்டது “சிந்து சமவெளியில் குதிரை முத்திரை என்றொரு மோசடி” என்னும் கட்டுரை.

"வரலாற்றில் பொய்கள்" நூலில் மூன்றாவது கட்டுரையாக இது இடம் பெற்றுள்ளது. கருத்துச் செறிவுடைய, இலகுவான மொழியில் பதினைந்து பக்கங்களுக்குள் எழுதப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அதன் நூலாசிரியர் இந்த மோசடியை மிகத் தெளிவாக, துல்லியமாக அம்பலப்படுத்துவதில் வெற்றியடைந்து விட்டார் என்று நான் சொல்வேன்.

நல்லது, அரப்பா நாகரீகத்திற்கு முன்னுரை எதுவும் தரத்தேவையில்லை, நம்மில் மிகப்பலர் அதைப் பற்றி நன்கறிவோம். அது ஒரு திராவிட நாகரீகம் என்று ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வாளர்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தி உள்ளனர்.

அது ஒரு திட்டமிடப்பட்ட நகர நாகரீகமாக, சமகாலத்தைச் சேர்ந்த தொலைதூர சமூகங்களுடன் பெருமளவிலான கடல் வர்த்தமும் மேற்கொண்ட செம்புயுக நாகரீகமாக இருந்தது. யூனிகார்ன் எனப்படும் (கற்பனை?) விலங்கு அம்மக்களின் போற்றுதலுக்கு உரியதாக இருந்தது. அவர்கள் குதிரையையோ, குதிரையின் பயன்பாட்டையோ அறிந்திருக்கவில்லை. அரப்பா நாகரீக வசிப்பிடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் மாடுகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ள அதே சமயம் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை. 

நூற்றுக் கணக்கான அரப்பா முத்திரைகள் கிடைத்துள்ள போதிலும் அவற்றில் குதிரையின் உருவம் காணப்படவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால், அரப்பா மக்கள் (இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் முதிர் அரப்பா நாகரீக மக்கள்) குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே இதன் சத்தும் சாரமும் ஆகும்.

மறுபுறத்தில் ரிக் வேத ஆரியர்கள். அவர்கள் அரப்பா நாகரீகம் வீழ்ச்சியை எதிர்நோக்கி இருந்த காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்த வந்தேறிகள் (நாமனைவரும் வந்தேறிகள் தான் என்பது வேறு விசயம்) மட்டுமே.

அவர்கள் அரப்பா நாகரீகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள், நகர நாகரீகத்தை அறியாத, அரை மேய்ச்சல் நில சமூகத்தில் வாழ்ந்த, பின்னாளில் குறைந்தபட்ச விவசாயத்தை மேற்கொண்ட (அதுவும் பூர்வகுடிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது தான்) கூட்டத்தினர்.

ஒன்றை மட்டும் மிக உறுதியாக கவனத்தில் நிறுத்திக் கொள்வது அவசியம். ரிக்வேத சமூகத்தைக் குறிப்பிடும் போது நாம் அதனை கலாச்சாரம் (culture) என்று மட்டுமே கூற முடியும். ஆனால் அரப்பாவோ நாகரீகம் (civilization) ஆக இருந்தது. இதனை மாற்றிக் குறிப்பிட முற்படுபவர்கள் யாராக இருப்பினும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம். 

குறைந்தபட்ச வரலாற்று அறிவு உடைய யாரும் இந்த இரண்டையும் எந்த வகையிலும் பொறுத்திப் பார்க்க முடியாது. ஆனால் இந்துத்துவவாதிகள் இதைத் தான் செய்ய முற்பட்டனர்.

அரப்பா நாகரீக வசிப்பிடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான முத்திரைகள் கிடைத்தன. அவற்றில் சில உடைந்து, முழுமையானவையாக அல்லாமல் இருந்தன.

இத்தகைய ஒரு பாதி உடைந்த நிலையில் கிடைத்த Mackay 453 என்னும் அரப்பா முத்திரையை எடுத்துக் கொண்ட N.S. ராஜாராம் என்னும் “ஆய்வாளர்” (சிரிக்கக் கூடாது, ஓகே), அரப்பா முத்திரை ஒன்றில் குதிரை உருவம் இருப்பதாகவும், ஆகவே அரப்பா நாகரீகம் வேத கலாச்சாரமே என்னும் கருத்தை வம்படியாக நிறுத்த முற்பட்டார். 

பின்னர் இந்த முத்திரையைச் சரிபார்த்த உண்மையான அறிஞர்கள், இது மிக மோசமானதொரு பித்தலாட்டம், குதிரையைப் பற்றி அறிந்திராத அரப்பா நாகரீக மக்களை குதிரையை மையமாகக் கொண்ட ஆரிய கலாச்சாரத்துடன் பிணைக்க முற்படும் மோசடி என்பதைத் தெளிவாக விளக்கினர். கையும் களவுமாகப் பிடிபட்ட இந்த மோசடி நபர், கணிணி உதவியுடன் அந்த முத்திரையை "மேம்படுத்தியதாக" ஒப்புக் கொண்டார்!

இவ்வாறாக N.S. ராஜாராம் வகையறாவின் மோசமான பித்தலாட்டம் முடிவுக்கு வந்தது.

இதன் நோக்கம், ஏடறியாக் காலம் தொட்டு (வேதங்களில் இருந்து தான் வரலாறு தொடங்குகிறது என்னும் கருத்தை ஒட்டி) இந்தியா இந்து நாடாக இருந்து வந்துள்ளது, இழை அறுபடாத ஒரு கலாச்சாரப் பிணைப்பு பல்லாண்டுகளாக இங்கே தொடர்கிறது என்னும் கருத்தை நிறுவுவதே ஆகும்.

இந்தக் கருத்தை முன்னிறுத்தும் விதமாகவே இந்த குதிரை முத்திரை என்னும் மிகக் கேவலமான, அதே சமயம் மிகக் குறுகிய காலத்தில் அம்பலப்பட்டுப் போன மோசடி அல்லது பித்தலாட்டத்தை இந்துத்துவ ஆதரவுக் கூட்டம் அரங்கேற்றியது.

இது பற்றிய உண்மைகளை, உரிய பின்புலத்துடன் பேசுகிறது இக்கட்டுரை.

இந்தக் கட்டுரை அடங்கிய நூலை எழுதிய தேமொழி அவர்கள் ஒரு கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்று அறிகிறேன்.

அந்த வகையில் தான் எடுத்துக் கொண்ட பணியை – இந்த மோசடியை அம்பலப்படுத்தும் பணியை – சிறப்பாகவே அவர் செய்திருக்கிறார். இது பற்றிய தகவல்களை ஆர்வமூட்டும் வகையில், எளிமையான மொழியில், சலிப்பை ஏற்படுத்தாதவாறு எளிதாகக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தக்கட்டுரையை விரிவாக விவரித்து விமர்சனம் செய்து அதனை வாசிக்கும் ஆர்வத்தைக் குலைத்துவிடக் கூடாது என்பதால் இது குறித்து மேலும் குறிப்பிடவில்லை. அவரது இந்தக் கட்டுரையில் சில இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் அவை விவாதத்திற்கு உரியவை என்று கடந்து போகிறேன். என்றாவது அவரை நேரில் சந்தித்துப் பேச முடிந்தால் அவற்றை விவாதிக்கலாம்

வரலாற்றை நேர்மையுடன் நோக்குகிற ஆய்வாளர்கள் உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்கள். அந்த வகையில் இந்த நூலாசிரியரும் அமைகிறார்.

இந்துத்துவவாதிகளின் பித்தலாட்ட முயற்சிகளைத் தெளிவாக,  தயக்கமின்றி வெளிப்படுத்துகிற அதே சமயம், அதன் அரசியல் நோக்கம், அதன் முக்கியத்துவம், அது ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் ஆகியவற்றை இது பேசவில்லை. அது வரலாற்றுப் பொருள்முதல்வாதிகளின் வேலை என்பதும் உண்மை தான். வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல முடிந்தால் (ஒருவேளை முடிந்தால்) நாம் அதைச் செய்யலாம்.

- சுந்தர சோழன்

(முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02c1iePpobp4oUgYQGHcGsgXTu8SfVtUGQquKA19YyHS9AofYaSjUDjg3JGDexu29Jl&id=100000795086291&sfnsn=wiwspwa