அடேங்கப்பா! வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகிவிட்டாரய்யா!
சாவித்திரி கண்ணன்
எதற்காக இந்த பணம் என்றால்,
இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும்.
வேலைக்கு செல்ல கடினமான கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும்.
உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிக்க முடியும்…?
குடும்பத்தினருக்கு மாத்திரை மருந்து வாங்கித் தர முடியுமா?
குழந்தைகளுக்கான கல்விச் செலவை சமாளிக்க முடியுமா?
இதையெல்லாம் எண்ணி பார்த்துதான் முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.
அதன்படி மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3 ஆயிரத்துடன் கூடுதலாக கோடை கால செலவை கருத்தில் கொண்டு, ரூ.2 ஆயிரம் சிறப்பு தொகையும் சேர்த்து தற்போது ரூ.5 ஆயிரத்தை சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக உங்க வங்கி கணக்கில் போட்டுள்ளேன்.
அடடா! அடடா! ஐயா நீர் இவ்வளவு உருகி, உருகி காரணம் சொல்வானேன்?
‘’எங்களுக்கு ஓட்டுப் போடுவதற்காக இந்த பணத்தை தருகிறேன்’’ என்று சொல்ல அசிங்கமாக இருக்கு தானே! அதைச் சொல்ல வெட்கப்பட்டுத் தானே இப்படி பாசாங்குத்தனமாய் பேசுகிறீர்!
1.31 கோடி மகளிரின் ஓட்டை வேட்டையாடி அள்ளிக் கொள்வதற்கு ஆட்சியில் உள்ள ஒரு கட்சி அரசு கஜானாவில் இருந்து பல கோடிகள் எடுத்து தருவது துஷ்பிரயோகம் என்பதை மறைக்க, இத்தனை ‘ஜால்ஜாப்பு’ சொல்ல வேண்டி இருக்குது!
ஏழை, எளியோரின் துன்பத்திற்கு உருகுகிற முதலமைச்சராக நீர் உமது ஆட்சி நிர்வாகத்தில் அல்லவா, வெளிப்படுத்தி இருக்க வேண்டும்? அது சுத்தமாக இல்லையே!
உழைக்கும் மக்களின் போரட்டங்களுக்கோ, அழுகைக்கோ, கதறல்களுக்கோ சிறிதும் செவி சாய்க்காமல் உச்சபட்ச அராஜக ஆட்சியல்லவா, நடத்தினீர்கள்!
கடுமையான வெயிலிலும், மழையிலும், பனியிலும் வீதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தூய்மை தொழிலாளர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விலை பேசி விற்றுவிட்டு, உமது கமிஷனுக்காக அந்த எளியோர்கள் வாங்கிய சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்தீரே! இந்த அநீதிக்கு எதிராகப் போராடிய தூய்மை பணி செய்யும் தாய்மார்களை நடு ராத்திரியில் காவல்துறையை ஏவிக் கதறக் கதற கைது செய்துவிட்டு, ஏசி திரையரங்கில் ரஜினிகாந்தின் புதுப் படத்தை பார்த்து புகழுரை வழங்கிய மாகானுபவரல்லவா நீர்?
இவ்வளவு பெரிய நிதியை எந்த கோரிக்கையும் எழாமல் வலிந்து வந்து, தர முடிகிறதே எப்படி..?
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மின்சார வாரியப் பணியாளர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரின் உழைப்புக்கும் மதிப்பளிக்காமல் அத்துக் கூலிகளாக வேலைக்கு வைத்து, சுரண்டிய நிதி அல்லவா இது?
இப்படி அவர்களின் வயிற்றில் அடித்த பணத்தை நீர் ஓட்டை பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் தருவீர்கள். அதை வாங்கிக் கொண்டு உமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் இல்லையா..?
இந்த 131 கோடி குடும்பத்திற்குள் தன் மேற்படி அநீதிக்கு ஆளானவர்களும் அடங்குகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்! நீங்கள் இவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியத்தை உத்திரவாதப்படுத்த மறுத்து செய்த துரோகத்தை இந்த 5,000 த்தைக் கொண்டு சரி செய்ய முடியுமா? பார்ப்போம்!
உங்கள் ஐந்து வருட ஆட்சி குறித்து உங்களுக்கே எவ்வளவு அவ நம்பிக்கை இருந்திருந்தால், அரசு கஜானாவில் இருந்து பெரும் தொகையை அள்ளிவீசித் தான் ஓட்டு பெற முடியும் என்ற அச்ச உணர்விற்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என யோசித்து பார்க்கிறேன்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/34785369164387209/?rdid=L7Qn0VTeCInDXKp5
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு