மருத்துவச் சேவையை தனியார் மயமாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சுகாதார அறக்கட்டளை( Health Foundation) அமைப்பதை கைவிட வேண்டும்

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

மருத்துவச் சேவையை தனியார் மயமாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சுகாதார அறக்கட்டளை( Health Foundation) அமைப்பதை கைவிட வேண்டும்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

ஊடகங்களுக்கான செய்தி.

 நாள் : 29.06.2026        

   அரசு மருத்துவர்கள் அரசுப்பணியை கைவிடுவதற்கான காரணங்களை போக்கிட வேண்டும்.

மருத்துவச் சேவையை தனியார் மயமாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சுகாதார அறக்கட்டளை( Health Foundation) அமைப்பதை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் .

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் இன்று (29.06.2026) சென்னையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி.

வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்த இன்றைய காலக் கட்டத்தில், பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக அரசு வேலையை  சில  மருத்துவர்கள் கைவிடுகின்றனர். இத்தகைய மருத்துவர்களை மிகப் பெரும் சமூகக் குற்றவாளிகள் போல் சித்தரிக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். மருத்துவர்கள் , சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்கக் கூடிய அரசுப் பணியை விட்டு ஏன் விலகுகிறார்கள் என்ற காரணங்களை கண்டறிந்து போக்கிட வேண்டும்.

அரசு மருத்துவர்களின் உழைப்பை கடுமையாகச் சுரண்டும் அரசே இதற்குக் காரணம்.

தமிழ்நாட்டில் அரசுப்பணிக்கு மருத்துவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆயிரம் அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு 25 ஆயிரம் மருத்துவர்கள் போட்டியிடுகின்றனர்.எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு,எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு கொடுக்கப் படும் குறைவான ஊதியத்திற்கு,முதுநிலை மருத்துவம் MD/MS படித்த மருத்துவர்கள் மட்டுமல்ல உயர் சிறப்பு மருத்துவம் DM/Mch படித்த மருத்துவர்களும் கூட வேலைக்கு வரத் தயாராக உள்ளனர்.அந்த அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மருத்துவர்களிடம் அதிகரித்து உள்ளது.

வேலை இல்லாத்திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,புதிய மருத்துவக் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்பொழுது  78 க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். தவிர வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு 1500 பேர் வருகின்றனர்.உலக நலநிறுவனம் 1000 மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் வேண்டும் என பரிந்துரைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் 495 பேருக்கு ஒரு நவீன அறிவியல் மருத்துவர் உள்ளார்.  இந்த விகிதம் பீகாரில் 1:2148  ,உத்திரபிரதேசத்தில்1: 2363 என உள்ளன. தமிழ்நாட்டில் அதிக மருத்துவர்கள் இருப்பது, வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதோடு, தனியாக மருத்துவத் தொழில் புரிவதிலும் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது.அவர்களின் ஊதியத்தையும்,சராசரி வருமானத்தையும் குறைத்து வருகிறது.அவர்களின் சராசரி மாத வருவாய் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 1.5 லட்சமாகும்.

இன்றைய  நான்காவது தொழிற்புரட்சிக் காலக்கட்டத்தில், நவீன அறிவியல் தொழில் நுட்பம், டெலிமெடிசின்  போன்றவை  மருத்துவர்கள் தேவையை குறைத்துவருகிறது.கடுமையான வேலை இழப்பை உருவாக்கிவருகிறது. இதுவும் வேலைவாய்ப்பின்மையை அதிகரித்துவருகிறது.

கார்ப்பரேட் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவது மிகவும் கடினமானமாக உள்ளது. அங்கு மனித உரிமைகள் மீறல்கள்,தொழிலாளர் விரோதப் போக்குகள், மருத்துவ நெறிமுறை மீறல்கள் அதிகரித்து வருகின்றன.கார்ப்பரேட் மருத்துவமனைகளும் மருத்துவர்களின் உழைப்பை கடுமையாகச் சுரண்டுகின்றன.தனியார் துறையிலும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது.வேலை தேடுவோரின் போட்டி அதிகரிப்பதால், ஊதியத்தை குறைக்கின்றன.எனவே , அரசுப்பணிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இத்தகைய நிலைமையின் காரணமாக ,  கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பணியை விட்டு விலகும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது .20 ஆண்டுகளுக்கு முன்பு இது அதிகமாக இருந்தது.

ஒருபுறம் ,அரசு மருத்துவப் பணிக்கு போட்டி கடுமையாக உள்ளது.அதே நேரத்தில் மறுபுறம் , கிடைத்த வேலையில் தொடர முடியாமல் , அரசுப் பணியிலிருந்து சிலர் விலகுகின்றனர்.

அரசு இடஒதுக்கீடு மூலமாக முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள், பணி ஓய்வு பெறும் வரை (60 வயது வரை)  அரசுப் பணியில் தொடர்வோம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பத்திரத்தை அரசிடம் ஒப்படைக்கின்றனர். அந்த ஒப்பந்தத்தை மீறினால் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி.

அவ்வாறு அபராதம் செலுத்தாமல் வெளியேறிய மருத்துவர்கள், அதாவது, unauthorised absent ல் சிலர் இருக்கின்றனர். அத்தகைய மருத்துவர்களே இப்போது விவாதப் பொருளாகியுள்ளனர். சமூக ரீதியான இழிவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மருத்துவர்கள் அரசுப் பணியை விடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

தனியாக மருத்துவத் தொழில் செய்வதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ள நிலையில் ஏன் அரசுப் பணியையும் விடுகிறார்கள் ?

இது மிக முக்கியமான கேள்வியாகும்.தனியாக மருத்துவத் தொழில் செய்வதில் உள்ள சிக்கல்கள்:

மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டம்(Clinical Establishment Act ) ,நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer protection Act ) உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு  மருத்துவர்கள்  தொழில்

செய்ய வேண்டி இருக்கிறது.அதன் பொருட்டு தொடர்ச்சியாக பல துறைகளிடமிருந்து பல்வேறு சான்றிதழ்களைப்‌ பெற வேண்டியுள்ளது .அதை புதுப்பிக்க வேண்டியுள்ளது.நோயாளிகளின் தகவல்களை பாதுகாக்க வேண்டி உள்ளது.அதற்காக அதிக நேரமும் - பணமும் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.அவ்வாறு தொழில் செய்பவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.இவை தவிர சிறிய கிளினிக்குகளால்,மருத்துவமனைகளால்,பெரிய  கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டிப்போட முடியாமல் மூடப்படுகின்றன.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் காப்பீட்டை நடைமுறைப் படுத்த வாய்ப்பு கிட்டாத  மருத்துவமனைகள் கடும் பொருளாதார இழப்புகளை சந்தித்து  மூடப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்து செல்கின்றனர். ஆயினும், நோயின் தன்மையினால் ஒரு சிலருக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை, மருத்துவமனையை தாக்குகின்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தனியார் துறையில் மருத்துவர்கள் எப்போதும் அச்சம் மற்றும் பதட்டத்துடன் பணி புரியும் சூழல் உள்ளது.

இந்நிலையில் அரசு மருத்துவர்கள் பணியை விட்டு ஏன் செல்கிறார்கள் என்பதே கேள்வி.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

மிக முக்கியமானது .

# தொடர்ச்சியான 24 மணி நேர பணி நேரமாகும் (Continuous 24 hours duty ). பல மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. எனவே, பல இடங்களில் மகப்பேறு மருத்துவர்கள் போன்றோர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை 24 மணி நேர duty பார்க்க வேண்டியுள்ளது.இதன் காரணமாக பலர் கடும் மன ,உடல் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மகப்பேறு மருத்துவத் துறை போன்ற பல துறைகளில் 24 மணி நேர தொடர் duty என்பது, மனிதத்தன்மையற்ற செயலாகும். தொழிலாளர் விரோதப் போக்காகும். மனித உரிமை மீறலாகும்.இவர்களில் பல மருத்துவர்கள் குடும்பங்களை பிரிந்து, குழந்தைகளைப் பிரிந்து வெவ்வேறு ஊர்களில் பணி புரிகிறார்கள். விடுப்பெடுக்க முடியாத சூழலிலும் பணிபுரிகிறார்கள். இதில் பலர் கர்ப்பிணிகள் ,கைக்குழந்தைகள் உடையோராக உள்ளனர்.அரசு மருத்துவர்களின் ஊதியமும் மிகக் குறைவாகவே உள்ளது. அதே சமயம் விலைவாசி உயர்ந்து கொண்டேச் செல்கிறது. வீட்டு வாடகை , குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் போன்ற பல செலவுகளை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.ஆனால், அவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை.

ஊதியப் பட்டை நான்கை, பணியில் சேர்ந்த 12 ஆவது ஆண்டில் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.அடுத்து நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்கி , அவ்விடங்களில் மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் போராடியதற்காக 128 மருத்துவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

திமுக ஆட்சியிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.போராடிய மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை , போன்றோருக்கு 17(B) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.டாக்டர் பெருமாள் பிள்ளைக்கு punishment transfer ம் திமுக அரசால் வழங்கப்பட்டது.பணியிடங்களில் பாதுகாப்பற்றச் சூழல், மோசமான பணிக் கலாச்சாரம் (Toxic working culture ), ஏராளமான மருத்துவ முகாம்கள் , விவிஐபிக்களுக்கான டியூட்டிகள்,காலமுறை பதவி உயர் இல்லாமை ,நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் தாக்குதலுக்கு ஆளாவது போன்ற பல காரணங்களால் மருத்துவர்கள் ,தவிர்க்க முடியாமல் அரசுப் பணியை கைவிடுகின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் அரசுப் பணியே வேண்டாம் என விலகிவிடுகின்றனர்.

அது மட்டுமல்ல, தற்பொழுது மகப்பேறு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரவே பெண் மருத்துவர்கள் தயங்குகின்றனர்.

தமிழ்நாடு அரசு ,மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS )வழங்க மறுக்கிறது. இதனால் புற்றுநோய் போன்ற சீரியஸான உடல் நலப் பிரச்சினைகள் உள்ள மருத்துவர்கள் கூட விருப்ப ஓய்வு பெற முடியவில்லை. ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்தியுள்ளது. இவை மருத்துவர்களை மேலும் பாதிக்கிறது.

குறைந்த ஊதியம், விருப்ப ஓய்வு இல்லாதது, ஓய்வு பெறும் வரை உழைக்க வேண்டும், ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு, பழைய ஓய்வூதியமும் கிடையாது என்பவை ,அரசு மருத்துவர்களை ,தமிழ்நாடு அரசின் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது.

கடுமையான உழைப்புச் சுரண்டல், பதட்டமான வாழ்க்கை முறையால் மருத்துவர்கள் இளம் வயதிலேயே இறக்கின்றனர்.

தமிழ்நாட்டின் பொதுமக்களின் சராசரி ஆயுட்காலம்  74 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், அரசு மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் 59 ஆண்டுகளாக மட்டுமே உள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அவல நிலையிலும் கூட , 20 ஆயிரம் மருத்துவர்கள் அரசுப்பணியில் தொடர்கின்றனர்.

பல ஆண்டுகளாக வெறும் 1420 மருத்துவர்கள் மட்டுமே அரசுப் பணியிலிருந்து அனுமதியின்றி விடுபட்டுள்ளனர்.இதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கைச் சூழல். மோசமான குடும்பப் பொருளாதார நிலைமைகள் மற்றும் மருத்துவத் தொழிலில் உள்ள கடும் போட்டி என்பதை உணர வேண்டும்.

அடுத்து,மத்திய அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவத்தை ,அரசு ஊதியத்துடன் படித்தால் அவர்கள் படிப்பை முடித்த பிறகு 5 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்தால் போதும்.

விருப்ப ஓய்வும்  பெற முடியும. ஊதியமும் அதிகம். ஆனால் தமிழ்நாடு அரசோ , ஓய்வு பெறும்வரை பணி செய்ய வேண்டும் என்கிறது.விருப்ப ஓய்வை மறுக்கிறது.ஊதியத்தையும் குறைவாக வழங்குகிறது. இது என்ன நியாயம்?

இத்தகைய காரணங்களைப் போக்க , உரிய பங்களிப்பை செலுத்தாமல் , மருத்துவர்களை சமூகக்குற்றவாளிகளாக்குவது அறமாகாது.

20-25 ஆண்டுகள் அரசுப் பணியில் சேவையை முடித்தவர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் உரிமையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இதனால் அரசு மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படாது.

ஏனெனில் ,தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்களே ஏராளமானோர் ,அரசுப் பணிக்காக  காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கும் வேலை கிடைக்கும்.பல மாநிலங்களிலும் ,மத்திய அரசிலும் இந்த விருப்பப் பணி ஓய்வு பெறும் நடைமுறை இருக்கிறது. தமிழகத்தில் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்ற காரணங்களுக்காக கொண்டுவரப்பட்ட விருப்ப ஓய்வு கிடையாது என்ற பழையத் ட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

அடுத்து ,அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள் மேற்கண்ட பல காரணங்களால் அரசுப்பணியை கைவிட்டால், அதற்கான இழப்பீட்டையும் கட்டிவிடுகிறார்கள்.கடந்த சில வருடங்களாக தமிழக அரசு வருவாய் துறை மூலம் ,Revenue Recovery Act-ன் கீழ் அத்தகைய மருத்துவர்கள்மீது  தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முறையாக தொடர்ச்சியாக அந்த மருத்துவர்கள் கட்ட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை செய்து வருகிறது.

இதில் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தோர் உடனடியாக அத்தகைய செலுத்திவிடுகின்றனர்.

அவ்வாறு அரசுக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டாதவர்கள் மீது அரசு அதிகாரிகள் அதற்கென உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் .‌

அதே சமயம், இப்பிரச்சினையில் ஒடுக்கப்பட்டச் சமூகங்களைச் சேர்ந்த , ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மருத்துவர்கள் தான் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களே பெரும்பாலும் அரசுப் பணியிலிருந்து முறையாக விலக முடியாமல், அனுமதி பெறாத பணி விலகலை மேற்கொள்கின்றனர் ( Un authorized absence). அவர்களின் பிரச்சினைகளை ஆழ்ந்து ,கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

ஆனால், இவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல் ,சமூக விரோதிகள் போல் சித்தரிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதே சமயம்,  ஒரு சில மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்வதில் அதிக வருவாய் ஈட்டுகின்றனர்.

எனவே, அரசுப்பணியை கைவிடுகின்றனர். பணிக்கு தொடர்ந்து வராவிட்டால் ,அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.அவர்களது பணியிடங்களில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் .

இதற்கென ஏற்கனவே இருக்கும் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.அது கடந்த சில ஆண்டுகளாக முறையாக பின்பற்றப்படுகின்றன.

அதைவிடுத்து ,அரசுப் பணியை விட்டு விலகிய அனைவரின் பதிவு எண்களையும் ரத்து செய்ய வேண்டும், அவர்களை மருத்துவத் தொழில் செய்யாமல் தடுக்க வேண்டும், அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும், அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அராஜகப்போக்காகும். சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய அறிதல் இல்லாத போக்காகும்.

மருத்துவர்களை ,மருத்துவத் தொழிலை செய்ய விடாமல் தடுப்பது ,தொடர்புடைய மருத்துவர்களுக்கு மட்டும் இழப்பல்ல;  இச்சமூகத்திற்கே இழப்பாகும்.

மருத்துவர்கள் அரசுப் பணியை விட்டுவிட்டு, தனியாக மருத்துவத் தொழில் செய்யும் போக்கிற்கு, மருத்துவம் தனியார் மயமானதும்,வியாபாரமயமானதும் காரணமாகும்.

அதற்கு இன்றைய முதலாளித்துவ அரசு கடைபிடிக்கும் கொள்கைகளே காரணமாகும்.முதலாளித்துவத்தை ஒழிக்காமல் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது .

ஊழலுக்கு எதிரான செயல்பாடு என்ற பெயரில், முதலாளித்துவ அரசின் உழைப்புச் சுரண்டல் நடவடிக்கைக்கு  துணை நிற்பது தொழிலாளி வர்க்க அறமாகாது.

அரசு மருத்துவர்களை தமிழ்நாடு அரசு கொத்தடிமைகள் போல் நடத்துவதற்கு துணைபோவது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதற்காக அரசு மருத்துவமனைகளிலேயே கொத்தடிமைகள் போல் மருத்துவர்கள்  பணியாற்ற வேண்டும் என்ற வாதம், உழைப்புச் சுரண்டலில் ஈடுபடும் அரசுக்கு துணை போகும் கேடு கெட்டச் செயலாகும். தொழிலாளர் விரோதப் போக்காகும்.அந்த வாதத்தை முன் வைப்போர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த அனைத்து மருத்துவர்களுக்கும் , தமிழ்நாடு அரசு நிரந்தர அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி போராடுவார்களா?

அரசுக் கல்லூரிகளில் படித்த தற்காலிக,ஒப்பந்த  மருத்துவர்கள், பல்மருத்துவர்கள்,செவிலியர்கள் ,பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் எனப் போராடுவார்களா?

அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைவருக்குமே அரசு செலவு செய்கிறது. பல்வேறு உதவித் தொகைகளையும் வழங்குகிறது. எனவே, அவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும், அரசுப் பணிகளில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனக் கூறுவார்களா?

தற்போது அரசு மருத்துவமனைகளே தனியார்மயமாகின்றனவே, வணிக மயமாகின்றனவே அதை எதிர்த்துப் போராடுவார்களா?

மருத்துவர்கள் மட்டுமல்ல, ஏராளமான முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட கடும் உழைப்புச் சுரண்டலின் காரணமாக தங்கள் படிப்பை கைவிடுகின்றனர். ஒரு சில தற்கொலைகளும் நடைபெறுகின்றன.கடந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 332 முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை விட்டு விட்டு விலகியுள்ளனர்.இதே போன்ற நிலை தமிழ்நாட்டிலும்,இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கும் பல காரணங்கள் உள்ளன.எனவே, தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் பணியிலிருந்து விலகுவதும், முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை விட்டு விலகுவதும் மிகப் பெரும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்பதையும், இன்றைய முதலாளித்துவ அரசின் தவறான கொள்கைகள் காரணம் என்பதையும் அனைவரும் உணரவேண்டும்.

எந்த ஒரு பிரச்சினை குறித்தும் பல்வேறு கோணங்களில் முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்வுகளை காண்பதே சரியான அணுகு முறையாக இருக்கும் என்பதை அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறோம்.

பணி நேரத்தில் பணியில் இல்லாதோர் குறித்து:

அரசு மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் பணியில் இல்லாமல் தங்களது சொந்த அல்லது தனியார் மருத்துவமனையில் பணி புரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது.சிலர் இதுபோல் செய்கிறார்கள். இவர்கள் ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு அரசையும், மக்களையும் ஏமாற்றுகிறார்கள்.இது போன்ற சில மருத்துவர்கள் தொடர்ந்து பணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் இல்லாததை கண்காணித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் ஒரு நாள் பணி நேரம் 8 மணி நேரமாக இருப்பதையும், ஒரு வாரப் பணி நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.ஒரு வாரத்திற்கு 56 மணி முதல்72 மணி நேரத்திற்கு மேலும் பணி வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கக்கூடாது .24 மணி நேர மருத்துவமனை என அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பணியில் மருத்துவர்கள் அங்கேயே இருப்பது போல் floor duty ல் நியமிக்க வேண்டும்.நோயாளி வந்த பின் , மருத்துவர்களை வீட்டிலிருந்து வரவழைத்து ( call duty ) சிகிச்சை அளிக்கும் முறை கூடாது . இதனால் மருத்துவர்களின் பணி நேரம்,பணிச் சுமை,மன உளைச்சல் அதிகரிக்கிறது. நோயாளிகள் அவசர நேரத்தில் சிகிச்சை பெறுவதில் காலதாமதமும் ஏற்படுகிறது.ஒரு மருத்துவமனைக்கு floor dutyக்கு சுழற்சி முறையில் தேவைப்படும் 6 மருத்துவர்களை நியமிப்பதற்கு பதிலாக , இரண்டு அல்லது மூன்று மருத்துவர்கள் மட்டுமே நியமித்து call duty என மருத்துவர்களை அலைக்கழித்து துன்புறுத்துவது சரியல்ல.அரசின் சிக்கன நடவடிக்கையே இதற்குக் காரணம்.இதனால் மருத்துவர்கள் மட்டுமல்ல நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.இத்தகைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும்.

# மருத்துவச் சேவையை தனியார் மயமாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சுகாதார அறக்கட்டளை( Health Foundation) அமைப்பதை கைவிட வேண்டும். அரசு மருத்துவக் கட்டமைப்பு தனியார்மயமாவது ஏழை - எளிய மக்களை பாதிக்கும். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும், பரிசோனைகளையும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்திட வேண்டும்.

# அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான  ஊதிய உயர்வு,காலமுறை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ஊதியப்பட்டை நான்கை பணியில் சேர்ந்த 12 ஆம் ஆண்டில் வழங்கிட வேண்டும் .GO 354 ல் இத்திருத்தங்கள் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

பணியிடங்களில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, பணியிடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு,பயிற்சி மருத்துவர்கள்,பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு  24 மணி நேரம் தொடர்ச்சியாக பணிவழங்குவதை கைவிட வேண்டும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

# உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்.நமது இடங்கள் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

# நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதால்,தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை,முது நிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு  நீட் தேர்விலிருந்து ஒன்றிய அரசு  விலக்கு வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு நகர்புற நல்வாழ்வு மற்றும் சுகாதார மையங்களில்

( Health and Wellness Centres)தற்காலிக பணிபுரியும்  மருத்துவர்கள் ,நகர்புற நல்வாழ்வு மற்றும் சுகாதார மையங்களில் பணி புரியும் மருத்துவர்களுக்கு காலையில் 4 மணி நேரம் வேலை ,மாலையில் 4 மணி நேரம் வேலை என ,வேலை நேரத்தை பிரித்து ( Split Duty ) வழங்குவதை கைவிட வேண்டும். அவர்களுக்கு ஊதிய உயர்வையும் வழங்கிட வேண்டும்.

# அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 ஆண்டுகளாக தற்காலிகமாக பணி புரியும் பல்மருத்துவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்.

# தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் பயிற்சி மருத்துவர்களுக்கு

( CRMI ) கட்டணம் வசூலிக்கக் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. பல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் CRMI காலத்தில் கூட கட்டணமாக ரூ 4.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதை அரசுஉடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

# தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் பயிற்சி மருத்துவர்களுக்கு

( CRMI ) பயிற்சி கால உதவி ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும் என்.எம்.சி கூறியுள்ளது. அவற்றையும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடைமுறை படுத்திடவில்லை.எனவே,உடனடியாக அதையும் நடைமுறைப்படுத்திட  நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

# முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள  தனியார் மருத்துவர்களுக்கு  Non Service PG bond period யை ஓர் ஆண்டாக குறைத்துள்ளதை, அனைத்துத் துறை முதுநிலை மருத்துவப் படிப்பை  தனியார் மருத்துவர்களுக்கும் வழங்கிட வேண்டும். இந்த பிணை ஒப்பந்த முறை என்பதே ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு எதிராகவும், வசதி படைத்த மருத்துவர்களுக்கு சாதகமாகவும் உள்ளது. வசதிபடைத்தோர் படித்து முடித்துவிட்டு பிணைத் தொகையை கட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். வசதியற்றோர் கொத்தடிமை போல் வேலை செய்கின்றனர்.

வேலையின்மை பெருகி உள்ள இன்றைய நிலையில் ,தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு ,தமிழ்நாட்டில் பிணை ஒப்பந்தம் அவசியமற்றது. இது குறித்து கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.

# 2025 ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களில், ஒரு பகுதியினருக்கு மட்டும் bond period ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை கார்ப்பரேஷனில் பணிபுரிய‌ வைக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவர்கள், உயர் சிறப்பு மருத்துவம் படித்துவிட்டு சிறிய தாலுக்கா மருத்துவமனைகளில் பணிபுரியவைக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு bond period  ஓராண்டாக குறைக்கப்படவில்லை.

# 22.04.2025 அன்று அரசு நடத்திய கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள், கலந்து கொண்டு எந்த இடத்தையும் தேர்வு செய்யாதவர்கள் (opt out), இடத்தை தேர்வு செய்து விட்டு பணியில் சேராதவர்கள் என்று தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்காத மதிக்காத மருத்துவர்களுக்கு எல்லாம் Bond period ஓராண்டாகக்

குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசை மதித்து அதன் கட்டுப்பாடுகளை , விதிமுறைகளை ஏற்று பணியில் சேர்ந்து கடினமாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு bond period ஓராண்டாக குறைக்கப்படவில்லை.உடனடியாக 2025 இல் படிப்பை முடித்த அனைத்து மருத்துவர்களுக்கும் bond period ஐ ஓராண்டாக குறைக்க வேண்டும்.

# சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில்  உள்ளது. இருப்பினும், படித்து முடித்தவர்களுக்கு அசல் சான்றிதழ்களை உடனடியாக  வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை உடனடியாக தமிழ்நாடு அரசு  நடைமுறைப் படுத்திட வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவின் செயலாளர் எஸ். வசந்த் பிலிப் அபிஷேக்  மற்றும் மருத்துவ மாணவர்கள் உடன் இருந்தனர்.

இவண்,

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

Disclaimer: இது சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு