கட்சியே அழிஞ்சாலும் சரி கம்யூனிசம் மட்டும் பேச மாட்டேன் - அறிவாலய கம்யூனிஸ்ட்கள்
துரை. சண்முகம்
"காங்கிரஸ் தமிழ்நாட்டின் துரோகி! தமிழர் நலன்களுக்கு எதிரி! மாநில உரிமைகளுக்கு பகை! அதிகாரத்திற்காக எல்லா வேலையும் செய்யும்!"
என்று அறச்சாபங்களுடன் திரும்பவும் தேய்ந்த ரெக்கார்டை சிலர் சுழற்றி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாடு தமிழர் நலன் என்பதிலிருந்து மட்டும் இவர்கள் ஆத்திரம் இப்படி ஊற்றெடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவை கவுத்துவிட்ட கடுப்பில் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து போடுகிறார்கள்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சார காலகட்டத்திலேயே பாசிச எதிர்ப்பு!
அதற்குத் தேவையானது இந்தியா கூட்டணி! திமுக காங்கிரஸ் உறவு
என்பதை முதன்மைப்படுத்தி களமாடியவர்களும் இவர்களே.
அப்போது காங்கிரஸ் திமுகவின் நோக்கம் பாசிச எதிர்ப்பு அல்ல பதவி அரிப்புதான் என்பதை வெளிப்படையாக எழுதுபவர்கள் மீது பாய்ந்து இவர்கள் பாஜகவின் ஆட்கள் என முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்.
பாஜகவும் காங்கிரசும் சமமா? என மடக்கினார்கள். இவர்கள் எதிர்பார்க்கும் பதிலில் ஒன்றைத்தான் சொல்ல வேண்டும் மூன்றாவதாக ஒரு அரசியல் நிலைப்பாட்டை பேசினாலே அவர்கள் பாஜக எனும் அளவுக்கு
காங்கிரஸ்- திமுக- இந்தியா கூட்டணி என்று வகுப்பெடுத்தார்கள்.
ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள்
ராகுல் காந்தி பாசிச பாஜக எதிர்ப்பில் அந்த நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார். அவர் காங்கிரசிலேயே ஒரு முற்போக்கு பிரிவு என்பது போல வண்ணம் பூசினார். அவர் வந்ததிலிருந்து காங்கிரசுக்கு ஒரு புது தென்பும் திசையும் கிடைத்ததாக அளந்து விட்டார்கள்.
இப்போது என்னவென்றால் அவந்தாயா குடிய கெடுத்தவன் என்று குமுறுகிறார்கள்.
திமுக காங்கிரஸ் இந்தியா கூட்டணி முழக்கங்களின் மூலம் தேர்தலை எதிர்கொண்ட பிரிவினர் பலரும் அண்ணன் தம்பியாக ஸ்டாலின் ராகுல் உறவு என்று பாசமலர் படமும் காட்டினார்கள்.
இதெல்லாம் தேர்தல் ஆதாய அரசியலுக்கான பம்மாத்து, பாசிச எதிர்ப்புக்கான செயல்திட்ட அடிப்படையிலான எந்த நோக்கமும் இவர்களுக்கு கிடையாது என வர்க்கக் கண்ணோட்டத்தில் விவரித்ததை
வெட்டி விவாதமாக பேசினார்கள்.
இன்றைக்கு அந்தக் கூட்டணி பாசிச எதிர்ப்புக்கு ஆனது அல்ல பதவி அரிப்புக்கானதாக அம்பலப்பட்டு போய் நிற்கிறது.
திமுகவின் காங்கிரஸ் பிரிவாக செயல்பட்ட நிலைமை மாறியவுடன் ராகுல் தொடங்கி உள்ளூர் காங்கிரஸ் 'காரிய' கமிட்டி வரை உங்கள் கதை தெரியாதா என உட்டுக் கடாசுகிறார்கள்.
திமுகவின் அரசியல் ஆதாயங்களுக்கு உடன்படும் வரை நல்ல காங்கிரஸ்! ஆதாயம் பார்த்து அது பாய்ந்து விட்டால் கள்ள காங்கிரஸ்! என்பதுதான் இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் பார்வை.
காங்கிரசை திமுக தோழமையாக கொள்ளும் போதும் இந்த காங்கிரசை நம்பலாமா? என்று திமுகவுக்கு இவர்கள் புத்தி சொல்லவும் இல்லை. திமுகவின் நோக்கத்திற்கு பயன்படாமல் காங்கிரஸ் இப்போது கழண்டுவிட்ட பிறகும் அதை ஆதரித்த தங்கள் அரசியல் பார்வையின் தவறுகளை இவர்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவும் இல்லை.
ஆனால் இவர்கள்தான் தமிழகத்தின் முற்போக்கு பாதைக்கு புத்தி சொல்பவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்கிறார்கள்.
மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவம் தனக்குத்தானே தவக்குழி வெட்டிக் கொள்கிறது!
என்பது வளர்ச்சி போக்கில்தான்.
அந்தப் போக்கில் தங்களுக்கு தாங்களே சவக்குழி வெட்டிக் கொள்ளும் கட்சிகளையும் கூட காலம் அடையாளம் காட்டுகிறது.
ஜென்மப் பகை என்று சொல்லிக் கொண்ட திமுகவும் அதிமுகவும் குழைகிறது. என்ன இருந்தாலும் ஸ்டாலின் தோற்று இருக்கக் கூடாது எனவே எடப்பாடியின் கண்களில் இரண்டு சொட்டு வழிகிறது. நடுராத்திரியில் கலைஞரை கதறவிட்ட அம்மாவின் அரண்மனை காவலன் டிடிவி தினகரன் திமுகவின் பிரியசகி யாகி உறவாடுகிறார்.
நேற்று வரை அறிவாலய மாடலாக இருந்த கட்சிகளை சோபா மாடல் என உதயநிதி நகைக்கிறார்.
பதிலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி நீங்க புடலங்காய் கொள்கை! என்று பொளக்கிறது.
நேற்றைய நண்பர்கள் இன்றைய பகைவர்கள் ஆனார்கள்.
நீ எப்படி ஆனது? ஏன் ஆனது?
பாசிச எதிர்ப்பு நோக்கத்திற்காக சேர்ந்த கட்சிகள் என்றால் இதன் தகுதி அரசியலால் கெட்டதா? இல்லை யாராவது தகடு வைத்து குடும்பத்தை பிரித்து விட்டார்களா?
இதுவெல்லாம் முழுக்க முழுக்க தேர்தல் அரசியலில் வர்க்க அணிச் சேர்க்கைகள் என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொண்ட அளவுக்கு கூட, மூளை வீங்கிகள் புரிந்து கொள்ள விரும்பவில்லை.
ஏனென்றால் அவர்களின் வர்க்க
கண்ணோட்டம் அப்படி.
இப்போதும் வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் தமிழக அரசியல் சூழலை அதன் பல படித்தான பரிமாணங்களை மக்களிடம் அரசியலாக புரிய வைக்க இவர்கள் முயற்சி செய்யவில்லை.
மாறாக இப்போதும் திமுக × தவெக இரு துருவ அரசியலுக்குப் பின்னே
தமிழக அரசியலை இழுத்துக்கட்ட பார்க்கிறார்கள்.
கட்சியே அழிஞ்சாலும் சரி கம்யூனிசம் மட்டும் பேச மாட்டேன்!
என்ன இருந்தாலும் திராவிடத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது!
என்று ஆரம்பித்து விட்டார்கள்.
என்னது?
திரும்பவும் மொதல்லேந்தா?!
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு