மேகமலை மலை கிராம மக்களின் போராட்டம் என்பது இயற்கையின்- நீதியின் குரலாகும்
துரை. சண்முகம்
வன உரிமை என்பதை மனிதரற்ற வனவளங்கள் வன உயிரிகள் என்று வகை பிரிப்பது கொடுமையானது.
மனித நடவடிக்கைகளால் வனச் செல்வங்கள் வன உயிரினங்கள்
போன்றவைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கக் கூடாது என்பதுதான் சரி. வனம் சார்ந்து வாழும் வாழ்வை மனித நீக்கம் செய்வது அல்ல.
உயிரின கோட்பாடு படி மனிதரும் வன வாழ்விடத்தின் ஒரு பகுதி தான். உயிரோட்டம் உள்ள எல்லா இடங்களிலும் வாழத் தகுதியும் உரிமையும் படைத்தவன் ஆகிறான் மனிதன். அதே வேளையில் இயற்கையை மனித இயற்கையாக மாற்றி அமைக்கும் போக்கில் அதன் இருப்பையே சிதைக்கும் அளவுக்கான கொடூர நடவடிக்கைகள் கூடாது என்பதுதான் விசயம்.
தேவை வரன்முறை. காட்டையும் மலைகளையும் வரைமுறை இல்லாமல் சிதைத்ததும் கொள்ளையடித்ததும் மக்கள் அல்ல. கொடிய முதலாளித்துவ கயவர்களும் அவர்களின் கூட்டாளிகளான ஓட்டுக் கட்சிகளும் தான்!
தமிழன் தமிழர் பெருமை சங்க காலம் கீழடி என்று பெருமை பேசிக்கொண்டே தமிழர் நிலங்களை வளங்களை மலைகளை இன்றளவும் வெடிவைத்து குவாரி கொள்ளையடிக்கும் கயவர்கள் யார்?
திராவிட கட்சிகள், தேசிய நாட்டாமைகள் கூட்டு களவாணித்தனத்தால்
தீர்ந்து போனது மணல் !
தூர்ந்து போனது மழை!
பெயர்ந்து போனது காடு!
எனவேதான் ஆழப் பதிய வேண்டியது சுற்றுச்சூழல் இயற்கையை காக்கும் போராட்டம் என்பது கொடிய அரசியல் சூழலை எதிர்த்த போராட்டத்தோடு தொடர்புடையது. சரியான அரசியல் கொள்கையால் மட்டுமே சரியான இயற்கை பாதுகாப்புக் கொள்கையை உருவாக்க முடியும்.
இல்லையேல் முதலாளிகளும் கூட்டுக் களவாணி கட்சிகளும் தாங்கள் இயற்கையை அழித்துவிட்டு மக்களின் மீது பழியை போட்டு மிச்சம் இருக்கும் வாழ்வாதாரத்தையும் அழிப்பது தொடரும். இதுதான் இன்று நாட்டில் நடப்பது.
தொடக்க காலத்தில் இருந்து மழை காடுகள் சமவெளி என வாழும் மனிதர்கள் அவர்களின் இயற்கையான வாழ்க்கைச் சூழல்கள் இயற்கையை சுரண்டும் நோக்கமாகக் கொண்டதாக பெரும்பாலும் இல்லை.
முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் மலைவாழ் வனம் வாழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கிருக்கும் கனிம வளங்களை ஒட்டச்சு சுரண்டி இயற்கையின் முகத்தை கோரப்படுத்துவது முதலாளிகளும் கார்ப்பரேட் கண்காணி அரசுகளும்தான்.
அதிகபட்சம் எளிய மனிதர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடு விறகு என்பதை தாண்டி மறுசுழற்சிக்கு வழியில்லாதவாறு உயிரினங்களை அழிப்பதில்லை.
அவைகளை வெட்டியும் உயிரினங்களை கொன்றும் ஏற்றுமதி பணத்தாசை நோக்கி இயற்கையை சூறையாடுவது ஏகாதிபத்தியமும் அதன் லாப நோக்கிலான கொள்கைகளும் தான் உலகம் முழுக்க இயற்கையின் சமநிலையை குலைக்கிறது.
இந்தப் பின்னணியில் காட்டை காப்பாற்றுகிறேன் மலையை காப்பாற்றுகிறேன் கடலைக் காப்பாற்றுகிறேன் எனும் பெயரில் அது சார்ந்து வாழும் பெரும் பகுதி உழைக்கின்ற மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை தட்டிப் பறிப்பதுதான் முதலாளித்துவ சுரண்டலின் நோக்கம்.
இயற்கை ஆதாரங்களை பாதுகாக்கும் வரைமுறைகள்
வழிமுறைகள் அதன் ஒரு பகுதியான மனிதர்களை நீக்கம் செய்யாத மனித இயற்கை கொள்கைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.
மாறாக,
நூறு ஆண்டுகளுக்கு மேல் அங்கே வாழும் மக்களை வனச் சட்டத்தை காட்டி விரட்டி அடிப்பதும் வாழ்வுரிமையை பறிப்பதும் , உழைக்கும் வெகு மக்களிடமிருந்து
முதலாளித்துவமுறை நிலப்பறிப்பை இயற்கையாக்க விரும்பும் நோக்கத்தின் பாற்பட்டது.
எனவே,
தேனி மேகமலை மலை கிராம மக்களின் போராட்டம் என்பது இயற்கையின்- நீதியின் குரலாகும்!
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு