மேகமலை - வருசநாடு: பட்டா இல்லாதவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைக்கக் கூடாது-ஏன்?
வெண்பா (தமிழில்)
பட்டா இல்லாதவர்களை தமிழ்நாடு அரசு 'ஆக்கிரமிப்பாளர்கள்' என்று ஏன் அழைக்கிறது?
புவி வெப்பமயமாதல் காலத்தில், மலைவாழ் மக்களின் வாழ்க்கை முன்போல அமைதியானதாக இப்போது இல்லை.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ள மேகமலை-வருசநாடு மலைப்பகுதிகளின் 98 கிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், இயற்கை இடர்பாடுகளால் அல்லாமல், அதிகாரத்துவத்தால் (bureaucracy) கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.
படிக்கவும்: உலகை அச்சுறுத்தும் எல்-நினோ: ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பலியிடப்படும் பூகோளம்
ஆகஸ்ட் 29 அன்று வருசநாட்டின் மலைக் கிராமங்கள் முழுவதுமிலிருந்தும் மக்களை வெளியேற்றுவதை எதிர்த்தும் – அவர்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும் DYFI யால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஏராளமான வனவாசிகள் பங்கேற்றனர். அவர்கள், "அதிகாரிகள் காடுகளையும், அவற்றையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் மக்களையும் காலனியாதிக்கவாதிகளின் மனநிலையில் இருந்து பார்க்கிறார்கள்; அவர்களை[ பொறுத்தவரை நாங்கள் எந்த விலையாவது கொடுத்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஆக்கிரமிப்பாளர்களாகவே தோன்றுகிறோம்" என்று தெரிவித்தனர்.

மத்திய உயர்மட்டக் குழுவின் (CEC) பரிந்துரைகளின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தை ஆக்கிரமித்தவர்களாக கருதப்படும் 4,600 குடும்பங்களை அகற்றுவதற்குத் துணை ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும் என்று 2026 மே 29 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அவர்களுக்கான மின்சாரம் - குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கவும், இலவம் பஞ்சு (kapok) மரங்களை வெட்டி அகற்றவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான இணக்க விசாரணை (compliance hearing) செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தின் வருசநாடு மலைப்பகுதிகளின் கிராமங்கள் வழியாக இந்த அறிவிப்புக்கு எதிராகப் பெண்கள் பேரணியாகச் சென்றனர்;
"நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம். நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம், எங்கள் முன்னோர்கள் இந்த நிலத்தை புனிதமாகப் போற்றும்படி எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளனர். எங்களையெல்லாம் கொன்ற பிறகு அவர்கள் எங்கள் நிலத்தை எடுத்துக் கொள்ளட்டும்" என்று வருசநாடு நகரத்தை நோக்கி மலைச் சாலைகளில் பேரணியாகச் சென்ற நூற்றுக்கணக்கான பாரம்பரிய வனவாசிகள் மத்தியில் இருந்த முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உணர்ச்சிப் பொங்கக் கூறினர்.
இயற்கையோடு வாழ்தல்
பேரணியின் முன்னே சென்ற வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி, மக்கள் இந்த நிலத்தின் மீது கொண்டுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அன்பையும் பிணைப்பையும் போற்றும் பாடல்களை ஒலிபரப்பியது.
"பாருங்கள், இந்தக் காடுதான் எங்கள் ஆன்மா. இதிலிருந்து எங்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்தத் தாவரங்களும் விலங்கினங்களும், பறவைகளும் விலங்குகளும், காற்றும் நீரும்தான் எங்களை உருவாக்குகின்றன. நீதிமன்றம் எங்களை எப்படி வெளியில் இருந்து வந்தவர்கள் என்று அழைக்க முடியும்?" என்று வீர சின்னம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த 76 வயது சீனி மூப்பர் ஆவேசமாகக் கேட்டார். இவர் தனது ஐந்தாவது வயதிலேயே, தனது கொள்ளுத் தாத்தா காயக்குடியுடன் இந்த மலைப்பகுதிக்குத் தன் குடும்பம் குடிபெயர்ந்ததாகவும் தான் தனது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை என்றும் சீனி கூறுகிறார்.
"நாங்கள் இங்கு குடியேறியபோது இந்தக் காடு கண்டமநாயக்கனூர் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருந்தது" என்றும் அவர் குறிப்பிட்டார். "உசிலம்பட்டி, உத்தமபாளையம், தேனி, கம்பம் போன்ற இடங்களில் உள்ள வாரச்சந்தைகளில் தண்டோரா (முரசு) மூலம் வருசநாடு மலைப்பகுதியில் வந்து குடியேறுமாறு மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது" என்றார்.
அது கடுமையான வறுமை நிலவிய காலம், ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே மிகவும் கடினமாக இருந்தது. "எங்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை; நாங்கள் அனைவரும் விவசாயக் கூலிகளாக இருந்தோம். குடும்பமே அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை விவசாய வயல்களில் உழைத்தால் எங்களுக்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே கூலியாகக் கிடைக்கும்" என்று செல்லமுத்தையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சகம் (76) தெரிவித்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (82) இவ்வாறு நினைவுகூர்ந்தார்: "அன்றைய வறுமை மற்றும் பசியின் கொடூரத்தை உங்களால் இப்போது புரிந்து கொள்ள முடியாது. இந்தச் சொற்ப தொகையைக் கொண்டு நாங்கள் குடும்பத்தில் உள்ள 8 பேருக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. பல நேரங்களில், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு உணவளித்துவிட்டு, பசியை அடக்குவதற்காகத் தங்களின் வயிற்றில் ஈரத்துணியைச் சுற்றிக்கொண்டு உறங்குவார்கள்."
சீனியின் குடும்பத்தைப் போலவே, பஞ்சகம் மற்றும் கருப்பையாவின் கொள்ளுத் தாத்தாக்களும் வறுமையிலிருந்து தப்பிப்பதற்காகத் தங்கள் குடும்பங்களை கம்பத்திலிருந்து இந்த மலைகளுக்கு அழைத்து வந்தனர். ஆனால் இந்த மூன்று குடும்பங்கள் மட்டுமல்ல. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் (தற்போதைய தேனி மாவட்டத்தை உள்ளடக்கியது) உட்புறக் கிராமங்களிலிருந்து கடைக்கோடி மக்கள் (subalterns) - பெரும்பாலும் தினக்கூலிகள் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள மேகமலை, வருசநாடு மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளில் பரவியுள்ள 98 கிராமங்களில் ஆயிரக்கணக்கில் குடியேறினர். ஆகையால், அப்பகுதி வாழ் மக்களின் கூற்றுகள், இந்த இடப்பெயர்வு கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதை உணர்த்துகின்றன.
"நாங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற இங்கு வரவில்லை, வெறுமனே உயிர் பிழைப்பதற்காகவே வந்தோம்" என்று சின்ன அம்மாள் (80) கடந்த கால நினைவுகளில் மூழ்கியபடி சோகமான முகத்துடன் கூறினார். "நாங்கள் இங்கு வந்தபோது சாலைகளோ, கடைகளோ, மின்சாரமோ அல்லது வீடுகளோ இல்லை. நாங்களும் இந்த மலைகளும் மட்டுமே இருந்தோம்".
எங்கும் புதர்களும் மரங்களும் மண்டியிருந்தன. "நாங்கள் சில பகுதிகளைச் சீரமைத்து, உழுது சாமை, குதிரைவாலி, தினை மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை பயிரிட்டோம். ஒரு வருடத்தில் எங்களுக்கு வெறும் 10 மூட்டை தானியங்கள் மட்டுமே கிடைத்தன" என்று பஞ்சகம் கூறினார். "எங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இவை மட்டுமே போதுமானதாக இருந்தன. அதற்கு மேல் எதையும் நாங்கள் நினைத்துப் பார்த்ததில்லை".
எம்.ஜி.ஆரின் ஆட்சிகாலம்
ஆண்டுகள் செல்லச் செல்ல, தானியச் சாகுபடி பணப் பொருளாதாரத்தின் தேவைகளைச் சமாளிப்பதற்கான போதிய வருவாயை வழங்காததால், மக்கள் தினை வகைகளிலிருந்து எலுமிச்சைப் புல் (lemongrass), இலவம் பஞ்சு, பருத்தி மற்றும் முந்திரி போன்ற பணப்பயிர்களுக்கு மாறினர். இருப்பினும், அவர்கள் வெளி உலகத்திலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டே இருந்தனர்.
"அக்காலத்தில், வைகை ஆறு அது உருவாகும் இந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதங்கள் வரை ஓடும். விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக ஆற்றைக் கடந்து வருசநாடு அல்லது கடமலைக்குண்டு செல்வது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் டி. கண்ணன் (69) நினைவு கூர்ந்தார்.
வைகை அணைக்கு அருகிலுள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், முதன்முதலில் 1980களின் மத்தியில் இந்த மலைகளுக்குச் சென்றிருக்கிறார். அவரும் இதர சிபிஎம் தோழர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வீரையன் வருசநாடு மலைகளை ஆய்வு செய்துவிட்டு திரும்பியபோது, அவருடைய வெள்ளைச் சட்டையும் வேட்டியும் மண்ணால் முழுமையாகச் செந்நிறமாகி, நனைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். என்று அவர் நினைவு கூர்ந்தார். மேகமலை-வருசநாடு பகுதியின் 98 மலைகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்த மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்ட குழுவில் வீரையன் அங்கமாக இருந்தார்
எம்.ஜி.ஆர் அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே, 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு மற்றும் தும்மக்குண்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். "நோய்வாய்ப்பட்டு குணமடைந்த பிறகு ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது, இந்த மக்கள் காட்டிய அன்பினாலும் பாசத்தினாலும் எம்.ஜி.ஆர் நெகிழ்ந்தார், மேலும் அவர்களின் பின்தங்கிய நிலை குறித்தும் அவர் மிகுந்த கவலை கொண்டார்" என்று இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக வைகை ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டுதல், மின்சார இணைப்புகள் வழங்குதல், பட்டா நிலங்களில் சாலைகள் அமைத்தல் மற்றும் சில மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீட்டுப் பட்டாக்கள் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. "இப்போது நீதிமன்றம் கூறுவது போல் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் எங்களுக்கு வீட்டுப் பட்டாக்கள், பாலங்கள் மற்றும் மின்சார வசதிகளை எவ்வாறு வழங்கினார்?" என்று செல்லமுத்தையாபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளைக் காட்டி பஞ்சகம் (76) கேள்வி எழுப்பினார்.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் பல கிராமங்களில் பள்ளிகள், ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தந்தன, ஆனால் அந்த நேரத்தில் வனத்துறை இத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று கிராம மக்கள் கூறினர்.
தற்போது வில்லனாக மாறும் அரசு
வெளியேற்றத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட முதல் 1,595 ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில், வருசநாடு மலைப்பகுதியின் நொச்சியோடை பழங்குடியினக் கிராமத்தைச் சேர்ந்த பளியர் பழங்குடியினரின் 14 பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் முரண்பாடான அம்சம் என்னவெனில், அதிகாரிகள் அவர்களுக்கு 2018-2023ம் ஆண்டுக்கு இடையில் வன உரிமைச் சட்டம் (FRA) 2006 -ன் கீழ் பட்டாக்களை வழங்கியிருந்தனர்.
"நாங்கள் 2010-ல் நொச்சியோடை பழங்குடியினக் கிராமத்தில் வசிக்கும் 29 குடும்பங்களுக்கு வன உரிமைச் சட்டப் (FRA) பட்டாக்களுக்கு விண்ணப்பித்திருந்தோம். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 18 குடும்பங்களுக்கு எஃப்.ஆர்.ஏ பட்டாக்களையும், அனைத்து குடும்பங்களுக்கும் எஃப்.ஆர்.ஏ-வின் கீழ் சமூக உரிமைகளையும் பெற்றோம். இது பழங்குடியினருக்கு அவர்களின் பாரம்பரிய சமூக வன நிலம் மற்றும் வளங்களை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்குகிறது" என்று பழங்குடியின உரிமை ஆர்வலர் எஸ். தனராஜ் கூறினார்.
"மத்திய உயர்மட்டக் குழு இப்பகுதிக்கு வந்து, உண்மையான ஆக்கிரமிப்பாளர்களை எப்படிக் கண்டறிவது என்று அதிகாரிகளுடன் விவாதித்த பிறகுதான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்பதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிய அவர்கள் பின்பற்றிய வழிமுறை என்ன என்ற கேள்விகளை இது எழுப்புகிறது. அவர்கள் உண்மையில் எஃப்.ஆர்.ஏ (வன உரிமைச் சட்டம்) குறித்து ஆராய்ந்தார்களா?" என்று அவர் கேட்டார்.
"பழங்குடியின வனவாசிகளிடம் பட்டா இல்லை என்றாலும், எஃப்.ஆர்.ஏ-வின் கீழ் அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்படக் கூடாது".
இது பழங்குடியின மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற வனத்துறையின் நோக்கத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது.
தனராஜின் கூற்றுப்படி, இப்பிரச்சனை 2009 இல் மாநில அரசு இப்பகுதியை காப்புக்காடாக (Reserve Forest) அறிவித்ததில் இருந்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து 2009 இல் மேகமலை வனவிலங்கு சரணாலயமாகவும், பின்னர் 2021 இல் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது.
பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய வனவாசிகளுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. "எங்கள் பட்டா கோரிக்கைகளைத் தீர்ப்பப்பதற்காக அரசாங்கம் நீண்ட காலத்திற்கு முன்பே செட்டில்மென்ட் தாசில்தாரை நியமித்தபோது ஏன் நிலப் பட்டாக்களைப் பெறவில்லை என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு எங்களின் பதில் என்னவென்றால், நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள், நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்கள். மேலும், இந்தக் கோரிக்கைகளைத் தொடருவதற்கு எங்களிடம் போதுமான பணமும் இல்லை" என்று மலைப்பகுதியில் வாழும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பலர் தெரிவித்தனர்.
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு, நிலம் தமிழ்நாடு எஸ்டேட் (ஒழிப்பும் ரயத்துவாரியாக மாற்றலும்) சட்டம் 1948 இன் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, தகுதியுள்ள குடியிருப்பாளர்கள் ரயத்துவாரி பட்டாக்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆயினர். "1967 இல், திமுக ஆட்சிக் காலத்தில் எங்களுக்குப் பட்டாக்களை வழங்கினார்கள். அதற்காக செலவு செய்ய முடிந்த சிலரால் மட்டும் பட்டாக்களைப் பெற முடிந்தது, ஆனால் பெரும்பாலரால் பெற முடியவில்லை. இந்தச் செயல்முறை அப்போது மிகவும் கடினமானது" என்று பஞ்சகம் வருந்துகிறார்.
படிக்கவும்: கார்ப்பரேட்டுகளின் பிடியில் மேற்கு தொடர்ச்சிமலை! வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்!
முன்பே குறிப்பிட்டது போல, இந்த இடங்களுக்குச் சாலை வசதிகள் இல்லை. "அத்தகைய சூழ்நிலையில், நில அளவையர் (surveyor) எங்கள் நிலத்திற்கு வருவதற்கும், நிலத்தை அளப்பதற்கான சங்கிலியைக் கொண்டு அளப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது, அத்துடன் அவருக்கு உணவளிப்பதுடன் 25 ரூபாயும் வழங்க வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.
"நாங்கள் பிரதான நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் போது, உட்புற மலைகளில் வாழும் அனைத்து மக்களும் இந்த நடைமுறைகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?" என்று முதியவர்கள் கேள்வி எழுப்பினர். "நில உரிமை பற்றிய எங்கள் புரிதல் மிகவும் குறைவாகவே இருந்தது. நாங்கள் அறிந்ததெல்லாம் கடினமாக உழைத்து எங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க போதுமான அளவு சம்பாதிப்பது மட்டுமே".
வனத்துறை அதிகாரிகள் 15-20 நாட்களுக்கு ஒருமுறை தங்களது கிராமங்களுக்கு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். "நாங்கள் ஓரிரு மரங்களை வெட்டுவதைக் கண்டால், அவர்கள் பணம் கேட்பார்கள். நாங்கள் அவர்களுக்குப் பணம் கொடுப்போம், பின்னர் அவர்கள் சென்று விடுவார்கள். ஆனால் இப்போது எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைக்கிறார்கள். நாங்கள் ஒரு மரத்தை வெட்டினாலும், வேறு இடத்தில் பல மரங்களை நடுவோம், ஏனென்றால் இந்த காடுதான் எங்களுக்குத் தலைமுறை தலைமுறையாக வாழ்வளித்துள்ளது" என்று வந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த கிராமத்தில் ஒரு ரேஷன் கடை, அரசுப் பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. "2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்தியதால் நாங்கள் தொடர்ந்து அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். இப்போது, நாங்கள் பிறந்த நிலத்திலேயே இறக்கத் தயாராக இருக்கிறோம்" என்று சோகமான முகத்துடன் அந்தப் பெண் விவசாயிகள் குழுவினர் தெரிவித்தனர்.
எஃப்.ஆர்.ஏ (வன உரிமைச் சட்டம்) விதிமுறைகள்
மாநில அரசுகள் தங்களை தேர்தல் ஆதாயக் கண்ணோட்டத்திலேயே பார்த்துள்ளன. அதேபோல அதிகாரத்துவத்தினர் தொடர்ந்து காலனியாதிக்கவாதிகளின் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர், இதனால் 98 மலைகளில் வாழும் மக்கள் தங்களது வாழ்விடத்தை இழக்கும் கவலையில் உள்ளனர் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"இந்தியாவில் உள்ள காடுகள் பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களுக்குச் சொந்தமானவை, அதிகாரிகள் கூறுவது போல அவர்கள் அவற்றைச் சுரண்டாமல் பாதுகாத்து வந்துள்ளனர். நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக 1882 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசுதான் முதன்முதலில் தமிழ்நாடு வனச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது, மேலும் காடுகளை நம்பி வாழ்ந்த ஏராளமான பழங்குடியின மக்களையும் பிற பாரம்பரிய வனவாசிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது" என்று முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.ஆர். பிஜாய் விளக்குகிறார்.
"வைகை நதி உற்பத்தியாகும் மேகமலை-வருசநாடு மலைப்பகுதிகள், மனித குடியேற்றத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இன்றும் அங்கு தொல்பொருட்களைக் கண்டறிய முடியும். தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ஆகியவை 100 க்கும் மேற்பட்ட பெருங்கற்கால (megalithic) படிமங்களைக் கண்டறிந்துள்ளன" என்று வைகை தொல்லியல் மற்றும் கலாச்சார மன்றத்தின் நிறுவனர் பாவெல் பாரதி சுட்டிக்காட்டினார். "இந்தத் தளங்கள் சுமார் கிமு 1000 காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்".
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சமூகங்களையும் குற்றவாளிகளாக்கிய - உசிலம்பட்டி பகுதியில் உள்ள பிரமலைக் கள்ளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட பிரிட்டிஷ் அரசின் 1871 ஆம் ஆண்டின் கடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் (Criminal Tribes Act) தான் இங்குள்ளவர்களில் பலரை இந்த மலைகளுக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்தியது. "1876-78 ஆம் ஆண்டின் சென்னை பஞ்சத்தின் (Madras Famine) போது ஏராளமான மக்கள் இந்த மலைகளுக்கு இடம்பெயர்ந்தனர்" என்று பாவெல் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியின் பின்னணியில், பழங்குடியின மக்கள் மற்றும் வனவாசிகளின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு 2006 ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டத்தை (FRA) இயற்றியது. "இச்சட்டம் பாரம்பரிய வனவாசிகளை வனச் சூழல் அமைப்பின் ஒரு அங்கமாக அங்கீகரித்தது" என்று பிஜாய் கூறினார். "வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ், வன நிலத்திற்கான கோரிக்கைகள் முதலில் கிராம சபையால் (Gram Sabha) பரிசீலிக்கப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து துணைப் பிரிவு அளவிலான குழு (SDLC) மற்றும் இறுதியாக மாவட்ட அளவிலான குழு (DLC) மூலம் பரிசீலிக்கப்பட வேண்டும். ஒரு நபர் பாரம்பரிய வனவாசியாகத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளுக்கோ அல்லது நீதிமன்றங்களுக்கோ அதிகாரம் இல்லை".
மேலும், 1882 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டு பிரிவு 4 இன் கீழ் வனத்துறையினரின் அறிவிப்புகளின்படி, பட்டாவிற்கு வெறும் 168 கோரிக்கைகள் மட்டுமே பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன என்ற கூற்று பொய்யானது என்பதற்கான ஆதாரமாக, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் 1970 ஜூன் 16 அன்று மாநில அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், இப்பகுதியில் குத்தகைக்குப் பதிலாக பட்டா உரிமைகளைக் கோரும் 7,964 குடியிருப்பாளர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
"அதன்படி, ஆட்சியர் 1970 ஜூன் 30 அன்று பட்டா வழங்கப் பரிந்துரைத்தார். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் பிற்காலத்தில் ஆக்கிரமித்தவர்கள் என்ற வனத்துறை அதிகாரிகளின் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படையுமற்றது" என்று அந்த அதிகாரி கூறினார். "தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி அந்த 7,964 குடியிருப்பாளர்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை".
"118 அரசு ஊழியர்கள் உட்பட ஆக்கிரமிப்பாளர்களாகக் கண்டறியப்பட்டுள்ளவர்கள், வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் தங்களின் கோரிக்கைகளை நிறுவ நீதிமன்றம் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்று பாரம்பரிய வனவாசிகள் உரிமை சங்கத்தின் செயலாளர் மருதுபாண்டி தெரிவித்தார், மேலும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் காடுகளைப் பாதுகாப்பதற்கும் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றம் கூறியது என்ன?
• பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் உள்ள சட்டவிரோத தங்கும் விடுதிகள் (lodges), ரிசார்ட்டுகள் மற்றும் வணிகப் பண்ணைகளை (commercial plantations) இடிப்பதற்கும், அத்துடன் இப்பகுதிகளுக்கான மின்சாரம் - குடிநீர் விநியோகத்தைத் துண்டிப்பதற்கும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா உத்தரவிட்டனர்.
• புலிகள் காப்பகத்திற்குள் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், பொதுப் பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் 6 மாதங்களுக்குள் நிறுத்தப்பட வேண்டும், இடமாற்றம் செய்யப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்.
• ஆக்கிரமிப்பாளர்களாகக் கண்டறியப்பட்ட 118 தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.dtnext.in/news/tamilnadu/why-is-tamil-nadu-government-calling-people-without-pattas-encroachers
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு