மனிதனுக்கான வளங்களை கொள்ளையடிக்கும் AIயும் அதன் மூளையாக செயல்படும் தரவு மையங்களும்…

இது AIயின் குற்றமா? அல்லது கார்ப்பரேட் முதலாளிகளின் வெறியாட்டமா? - செந்தளம்

மனிதனுக்கான வளங்களை கொள்ளையடிக்கும் AIயும் அதன் மூளையாக செயல்படும் தரவு மையங்களும்…

அமெரிக்காவின் Ratepayer Protection Act முதல் இந்தியாவின் தரவு மைய விரிவாக்கம் வரை — AI-யும் ஏகாதிபத்தியங்களின் புவிசார் அரசியலும்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மனித சமூகத்தின் எதிர்காலத்தையே மாற்றப்போவதாக தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசுகளும் தொடர்ந்து சொல்லிவருகின்றன. ஆனால் யாருக்காக இந்த மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்? யார் பலனடையப் போகிறார்கள்? இன்று AI, சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் இருப்பதால், அவர்களின் இலாப வெறியின் காரணமாக அது மனித சமூகத்திற்கே எதிராகச் செயல்படும் ஆபத்து இருக்கிறது. இதை இன்றைய முன்னணி AI நிறுவனத்தின் நிறுவனர்களும் இயக்குணர்களுமே பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளனர். 

AI-ஐ நாம் ஒரு "மெய்நிகர்" (Virtual) வடிவமாக காண்கிறோம். இதை உணர முடியும் ஆனால் காணமுடியாது. ஆனால் அந்த மெய்நிகர் உலகத்திற்குப் பின்னால், மிகவும் பௌதிகமான (Physical) ஒரு பெரிய உலகம் மறைந்திருக்கிறது. நிலம், நீர், மின்சாரம், கட்டிடங்கள், சிப்கள், சர்வர்கள், ஒளியிழை வலையமைப்புகள் (fibre networks), குளிர்விக்கும் இயந்திரங்கள், இவை அனைத்தையும் இயக்கும் தொழிலாளர்கள் — இவை இல்லாமல் AI இல்லை. இல்லாமல் என்று சொல்வதைவிட இவைகள் அபிரிமிதமாக இல்லாமல் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கேயும் பொருள்முதல்வாதம் மெய்ப்பிக்கப்படுகிறது. அதாவது பௌதிக பொருள் (Physical material) இல்லாமல்  மெய்நிகர் கருத்தாக்கம் (Virtual concept) இல்லை..

AI உலகை கட்டுப்படுத்தும் அமெரிக்காவும் சீனாவும்:

சீனாவும் அமெரிக்காவும் — இரு வெவ்வேறு பாதைகள்

இன்று AI துறையில் இரண்டு நாடுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன — சீனாவும் அமெரிக்காவும். சீனா, AI-ஐ பயன்பாட்டுடனான ரோபோக்களையும் இயந்திரங்களையும் உருவாக்கி, உற்பத்தித் துறையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவோ, சேவைத் துறையில் AI-ஐ பயன்படுத்தி பெரும் மாற்றத்தை உண்டாக்கி வருகிறது. இதில் சீனா அமெரிக்காவையும் மிஞ்சி உற்பத்தியில் சாத்தியப்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்த தொழில்நுட்ப வளர்ச்சிதான் இன்று அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

தரவு மையம்: AI-யின் மூளை

AI-யின் மூளையாக இருப்பது தரவு மையங்கள் (Data Centre) தான். இவற்றைக் கட்ட நிலம், மின்சாரம், நீர் என பெரும் அளவு வளங்களும் மூலதனமும் தேவைப்படுகின்றன. இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: AI நிறுவனங்களின் லாபத்திற்காகக் கட்டப்படும் இந்த தரவு மையங்களின் செலவை யார் ஏற்பது? அதற்குத் தேவையான மின்சார கட்டமைப்பின் செலவை யார் தலையில் போடுவது? இந்தக் கேள்விக்கான ஒரு பதிலாகத்தான் அமெரிக்க காங்கிரஸில் Ratepayer Protection Act என்ற மசோதா கொண்டுவரப்பட்டது.

அமெரிக்க காங்கிரஸில் ஒரு புதிய மசோதா

செப்டம்பர் 16, 2026 அன்று, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) இதற்கான வாக்கெடுப்பு நடந்தது. AI-யால் இயக்கப்படும் பெரிய அளவிலான (hyperscale) தரவு மையங்களால் ஏற்படும் மின்சார செலவை சாதாரண குடிமக்களின் வீட்டு மின்சார கட்டணத்தில் திணிக்கக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட "Ratepayer Protection Act" (H.R. 9340), 417 உறுப்பினர்கள் ஆதரவும் வெறும் 3 பேர் எதிர்ப்பும் தெரிவிக்க பெரும்பான்மையுடன் நிறைவேறியது. AI தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய முதல் முக்கியமான மசோதா இதுவே. ஆனாலும், இது இன்னும் முழு சட்டமாக மாறவில்லை.

அமெரிக்காவின் இந்த மசோதாவை இந்திய, தமிழக மக்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? இதற்கான பதிலை புரிந்துகொள்ள, முதலில் இந்த மசோதாவை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

Ratepayer Protection Act-ன் முக்கிய அம்சங்கள்

1978-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Public Utility Regulatory Policies Act (PURPA) என்ற பழைய சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்க்கவே இந்த மசோதா முயல்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்:

• 100 மெகாவாட் வரம்பு: 100 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட மின் தேவை கொண்ட AI தரவு மையங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

• முழு செலவையும் தரவு மையமே ஏற்க வேண்டும்: புதிய மின் உற்பத்தி, பகிர்மானம் (transmission), விநியோகம் ஆகியவற்றுக்கான கூடுதல் செலவுகளை, தரவு மைய நிறுவனங்களே ஏற்குமாறு மின் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரத்தை இந்த மசோதா தருகிறது. இதன் மூலம், தரவு மையங்களுக்கான மின் கட்டமைப்புச் செலவு சாதாரண குடிமக்களின் கட்டணத்தில் ஏறாமல் தடுக்க முடியும் என ட்ரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

• நிதி உத்தரவாதங்கள்: தரவு மைய திட்டம் ரத்தானாலோ, வேறு இடத்திற்கு மாறினாலோ, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை பொதுமக்கள் மீது சுமத்தாமல் இருக்க, மின் நிறுவனங்களுக்கு தரவு மைய நிறுவனங்கள் நிதி உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

• மாகாணங்களுக்கு கட்டாயம் இல்லை — "பரிசீலனை" மட்டுமே: இதுவே இந்த மசோதாவின் மிக முக்கியமான குறை. மாகாண (இந்தியாவில் மாவட்டம் போன்றது) ஒழுங்குமுறை ஆணையர்களை இந்த விதியை கட்டாயம் பின்பற்றச் சொல்லும் அதிகாரம் இந்த சட்டத்தில் இல்லை. அதைப் "பரிசீலிக்கச்" சொல்வதற்கான வழிமுறை மட்டுமே இதில் உள்ளது. மசோதா நிறைவேறி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மாகாணங்கள் ஒரு கூட்டம் நடத்தி இதுவரையிலான அனுபவத்தை தொகுக்க வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம். அதாவது, தரவு மைய நிறுவனங்கள் செலவை ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் எந்த நிர்பந்தமும் இந்த சட்டத்தில் இல்லை.

• வெள்ளை மாளிகையின் தன்னார்வ உறுதிமொழியை சட்டமாக்கும் முயற்சி: மார்ச் 4, 2026 அன்று Amazon, Google, Meta, Microsoft, OpenAI, Oracle, xAI ஆகிய ஏழு பெரு நிறுவனங்கள் கையெழுத்திட்ட "Ratepayer Protection Pledge" எனும் தன்னார்வ உறுதிமொழியே இந்த மசோதாவின் அடிப்படை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது ஆடு நினையுதேன்னு ஓநாய்கள் கவலைப்படுகிறதாம் என்ற சொல்லாடல்தான் நினைவுக்கு வருகிறது.

மேலே இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தோம். இதன் பின்னணியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், இதை இந்திய, தமிழக மக்களும் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாகும்.

ஒரு வாகனத் தொழிற்சாலைக்கு 10-30 மெகாவாட் மின்சாரம் போதுமானது. ஒரு எஃகு ஆலைக்கு 100-200 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் ஒரே ஒரு தரவு மையத்திற்கோ 500 மெகாவாட் முதல் 1 ஜிகாவாட் (1000 மெகாவாட்) வரை மின்சாரம் தேவை!

இவ்வளவு பெரிய தரவு மையங்களுக்கு மின் இணைப்பு தர, புதிய மின் உற்பத்தி நிலையங்கள், மின் கடத்தும் கட்டமைப்புகள் (transmission), மின் பகிர்மான அமைப்புகள், துணை நிலையங்கள் (substations) என பல புதிய கட்டமைப்புகளைக் கட்ட வேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குத் தேவைப்படும் மின் கட்டமைப்பை, ஒரே ஒரு பெரிய தரவு மைய நிறுவனம் மட்டுமே நுகர்கிறது!

NC State, Carnegie Mellon, Pittsburgh, Toronto ஆகிய பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வு (மே 2026) என்ன சொல்கிறது தெரியுமா? தரவு மையம் மற்றும் கிரிப்டோ தேவையால், 2030-க்குள் அமெரிக்காவின் சராசரி மின் கட்டணம் தேசிய அளவில் 6% முதல் 29% வரை உயரும். மிக மோசமாகப் பாதிக்கப்படும் பகுதிகளில் இது 57% வரை கூட உயரலாம்!

சாதாரண மக்களின் தலையில் விழும் சுமை

இதன் விளைவாக என்ன ஆகிறது? இன்று இந்தக் கட்டுமானச் செலவுகள் அனைத்தும், மின் பகிர்மான நிறுவனங்களால் எல்லா நுகர்வோர்களுக்குமாகப் பங்கிடப்பட்டு சுமத்தப்படுகிறது. இதனால் சாதாரண குடும்பங்களின் வீட்டு மின் கட்டணமும் கடுமையாக உயர்கிறது. வாஷிங்டன், மேரிலாந்து போன்ற மாகாணங்களில் கடந்த சில ஆண்டுகளில் மின் கட்டணம் 70% முதல் 90% வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 மாகாணங்களுக்கு மின் வழங்கும் PJM என்ற நிறுவனம், தரவு மையங்கள் காரணமாக $9.3 பில்லியன் அளவுக்கு அதிக விலையில் மின் ஏலத்தை எடுத்திருக்கிறது. Fortune பத்திரிகையின் பகுப்பாய்வுப்படி, தரவு மையங்கள் ஏற்கனவே பொதுமக்களின் மின் செலவில் $23 பில்லியன் அளவுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த எண்கள் என்ன காட்டுகின்றன? AI தரவு மைய நிறுவனங்கள், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் பெரும் சுமையை ஏற்றியிருக்கின்றன என்பதே உண்மை. இதற்கு Ratepayer Protection Act தீர்வாகுமா என்றால், இல்லை என்பதே பதில். அமெரிக்க குடும்பங்களும், சிறு உற்பத்தியாளர்களும், வணிகங்களும் இதுவரை தரவு மைய மின் கட்டுமானச் செலவைத் தானே ஏற்று வந்திருக்கின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் நலனுக்காக செயல்படும் Public Citizen என்ற அமைப்பு இந்த மசோதாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அவர்களின் கருத்துப்படி, இந்த மசோதா மாகாணங்களை செலவு ஒதுக்கீட்டை "பரிசீலிக்கச்" சொல்கிறதே தவிர, நுகர்வோருக்கு நேரடியான, கட்டாயமான பாதுகாப்பை உருவாக்கவில்லை. "தரவு மைய நிறுவனங்களே முழுச் செலவையும் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்ற சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை?" என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்கள் ஏன் தரவு மையங்களை எதிர்க்கிறார்கள்? — இது மின்சாரப் பிரச்சினை மட்டுமல்ல

அமெரிக்க மக்கள் இன்று தரவு மைய நிறுவனங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஏன்? தரவு மையங்கள் என்பவை, மின்சாரம் + நீர் + நிலம் என பல வளங்களையும் ஒரே நேரத்தில் பெருமளவில் விழுங்கும் ஒரு துறை:

• மின்சாரம்: AI பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, தரவு மையங்களின் மின் தேவையும் உயர்கிறது.

• நீர்: தரவு மையங்கள் இயங்கும்போது அதிக வெப்பம் உண்டாகிறது. அதைக் குளிர்விக்க பெருமளவு குடிநீர் தேவைப்படுகிறது.

• நிலம்: பெரிய hyperscale தரவு மையத்திற்கு பரந்த இடம் வேண்டும் — கட்டிடங்களுக்கும், துணை மின் நிலையங்களுக்கும்.

• மின் கட்டமைப்பு: புதிய மின் உற்பத்தி நிலையங்களும் விநியோக அமைப்புகளும் தேவை. இவை பெரும் ஒலி மாசையும் உண்டாக்குவதால், அருகில் வசிப்பவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது.

• கனிம வளங்கள்: சர்வர்களுக்கும் சிப்களுக்கும் தேவையான உலோகங்களைச் சுரங்கமெடுத்துச் சுத்திகரிக்கும் செயல்முறை பெரும் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்துகிறது.

இத்தனை வளங்களையும் சேர்த்து விழுங்கும் ஒரு துறைதான் AI-யும், அதன் மூளையாக இருக்கும் தரவு மையங்களும். அதாவது மக்கள் சார்ந்திருக்கும் முக்கிய இயற்கை ஆதாரங்களும், மனித சமூகம் தனது தேவைக்காக ஏற்கெனவே போராடிக் கொண்டிருக்கும்போது, அதற்கு போட்டியாக AI-யும் தரவு மையங்களும் வந்துவிட்டன.

இந்தியா — அதே கதை, வேறு பெயர்

அமெரிக்க பாடம் நமக்கு சொல்லும் கதை என்ன?

இப்போது விஷயத்திற்கு வருவோம். அமெரிக்க மக்களின் பிரச்சினையை நாம் ஏன் இவ்வளவு விரிவாகப் பார்த்தோம் தெரியுமா? ஏனெனில், அமெரிக்காவில் எதிர்ப்பைச் சந்திக்கும் இந்த தரவு மையங்களைத்தான், இந்தியாவிற்குள்ளும் தமிழகத்திற்குள்ளும் கொண்டுவருவதை நமது ஆளும் அரசியல்வாதிகள் பெருமையாக பேசிவருகிறது இந்த எருமைகள். (எருமைகள் நம்மை மன்னிக்கவும்!!)

அமெரிக்காவில் மக்கள் தரவு மையச் செலவு குறித்து கேள்வி கேட்கத் தொடங்கிய அதே நேரத்தில், அந்த முதலீடுகள் இந்தியா போன்ற தெற்குலக நாடுகளை (Global South) நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன. அட்லாண்டிக் கவுன்சில் (Atlantic Council) நிறுவனத்தின் 2026 ஆய்வின்படி, AI மற்றும் cloud computing வளர்ச்சியால் தரவு மையங்களின் புவியியல் இருப்பிடமே மாறி வருகிறது. மின்சார உற்பத்தித் திறன், நிறுவன அனுமதிகளை எளிதாகப் பெறும் வசதி, நிலம் பெறுவதில் உள்ள எளிமை போன்ற காரணங்களால், இந்த முதலீடுகள் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் பிராந்தியங்களை நோக்கி நகர்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இப்படி கார்ப்பரேட் கைக்கூலி வார்த்தைகளில் சொல்லலாம். ஆனால் எளிமையாக மக்கள் மொழியில் சொன்னால்: ஏகாதிபத்திய மூலதனம் தன் லாப விகிதத்தைக் காப்பாற்றிக் கொள்ள, தனக்கு லாபகரமான இடத்தை நோக்கி தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும். முன்பு தொழிற்சாலைகள் வளர்ந்த நாடுகளிலிருந்து (Global North) வளரும் நாடுகளுக்கு (Global South) நகர்ந்தன. காரணம் — குறைந்த கூலி, மலிவான நிலம், குறைவான கட்டுப்பாடுகள், வரிச் சலுகைகள். இப்போது AI கட்டுமானமும் அதே பாதையைப் பின்பற்றுகிறது — மக்கள் வரிப்பணத்தில் நீர், மின்சார, கட்டிட கட்டுமானச் செலவுகள், மானிய விலையில் பயன்பாட்டு மின்சாரம், நீர் போன்ற தினசரி பயன்பாட்டு தேவைகள், இதன்மீது ஈட்டப்படும் இலாபத்திற்கு பெரும் வரிச் சலுகைள், அரசு உத்திரவாதத்துடன் கூடிய டிஜிட்டல் சந்தை, தரவு உள்ளூர்மயமாக்கல் (data localisation) ஆகியவற்றைத் தேடி மூலதனங்கள் பறக்கின்றன.

இந்தியாவில் குவியும் தரவு மைய முதலீடுகள்

இந்திய ஆளும் அரசியல்வாதிகள் இந்த AI மூலதனத்தை ஈர்க்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்த தரவு மைய முதலீடுகளும். இந்தியாவில் 270க்கும் மேற்பட்ட தரவு மையங்கள் உள்ளன. இந்தியாவின் தரவு மையங்களில் 75% ஐந்தே மாநிலங்களில் குவிந்திருக்கிறது — மகாராஷ்டிரா 85க்கும் மேற்பட்ட தரவு மையங்களுடனும் தமிழ்நாடு - 35, கர்நாடகா – 30, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் என்று அடுத்தடுத்து உள்ளன. WRI India அமைப்பின் 2026 ஆய்வின்படி, இந்தியாவின் தரவு மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில்தான் அமைந்திருக்கின்றன.

அப்படிவந்த இந்தியவிற்கு வந்த சில முதலீடுகளைப் பார்ப்போம்:

• Google: 2026 பிப்ரவரியில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் $15 பில்லியன் (சுமார் 15 இலட்சம் கோடி ரூபாய்) AI கட்டுமான முதலீட்டை அறிவித்தது. இதனுடன் America-India Connect என்ற பிணையக் கட்டமைப்புத் திட்டமும் இணைந்துள்ளது. இதன் மூலம் விசாகப்பட்டினம் ஒரு சர்வதேச கடலடி கேபிள் மையமாக மாறும் என Google கூறுகிறது.

• Microsoft: 2026 ஆகஸ்டில் ஹைதராபாத்தில் India South Central cloud region-ஐ செயல்படுத்தியது. இதனுடன் Microsoft இந்தியாவில் மொத்தம் நான்கு cloud regions-ஐ இயக்குகிறது.

• Amazon AWS: ஏற்கெனவே இந்தியாவில் பெரிய அளவில் இயங்கி வருகிறது. 2030-க்குள் $12.7 பில்லியன் கூடுதல் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.

• Meta: முகநூல், இன்ஸ்டாகிராம் நடத்தும் இந்த நிறுவனம், 2026 ஜூனில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தின் ஜாம்நகரில் 168 மெகாவாட் திறன்கொண்ட AI தரவு மையத்தை குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தமிட்டது.

விவசாயிகளின் எதிர்ப்பும், அரசின் எகத்தாளமும்

2026-ல் Google, Microsoft போன்ற நிறுவனங்களின் தரவு மைய திட்டங்களால் நிலம் கையகப்படுத்தல், நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததாக Rest of World செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதே நேரத்தில் இந்திய அரசோ, வெளிநாட்டு cloud நிறுவனங்களை ஈர்க்க இன்னும் அதிக வரிச் சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: எங்கள் விவசாயத்திற்கே தண்ணீர் கிடைக்காதபோது, AI கட்டுமானத்தைக் குளிர்விக்க தண்ணீர் எங்கிருந்து வரும்? விவசாயத்திற்கும் சிறு தொழிற்சாலைகளுக்கும் தேவையான மின்சாரமே சரிவர கிடைக்காதபோது, AI கட்டுமானத்திற்கு மட்டும் தடையற்ற மின்சாரம் எப்படி சாத்தியமாகும்? இப்படி ஒரு உத்தரவாதத்துடன் இந்த நிறுவனங்களை அழைத்து, அதன் சுமையை யார் தலையில் கட்டுகிறார்கள்?

தானே, மகாராஷ்டிரா (Amazon AWS): Amazon Data Services India, தானேவின் பால்கும்-மஜிவாடா பகுதியில் 54 ஏக்கர் நிலத்தில் (அக்டோபர் 2022-ல் கல்பதரு குழுமத்திடமிருந்து வாங்கியது) ஒரு hyperscale தரவு மையத்தை கட்டிவருகிறது. ஜூலை 2026-ல் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அந்த திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி அமைத்து போராடினர்; அந்த வசதி நாளொன்றுக்கு 1.2 கோடி லிட்டர் குடிநீரை பயன்படுத்தலாம் என்று அஞ்சி. அந்த நகரமே தினமும் 3-3.1 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது. Amazon, தங்கள் வசதி குளிரூட்டலுக்கு தண்ணீர் பயன்படுத்தாது என்று கூறியது, ஆனால் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தத் திட்டம் இப்போது மாநில அளவில் மறு ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் அனுராதா என்பவர், 22 மாடி தரவு மைய கட்டிடத்திலிருந்து வெளியேறும் வெப்பம் படுக்கையறை ஜன்னலுக்கு 40 மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளை அனைத்தையும் பாதிப்பதாக கவலை தெரிவித்திருக்கிறார். 

விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் (Google–Adani): அக்டோபர் 2025-ல், ஆந்திரப் பிரதேச அரசு Google-ன் துணை நிறுவனமான Raiden Infotech India உடன் ஒப்பந்தம் செய்து, விசாகப்பட்டினம்-அனகாபள்ளி மாவட்டங்களில் பெரிய அளவிலான AI தரவு மைய வளாகத்தை ரூ.1.35 இலட்சம் கோடி முதலீடு, 2026-2030 அறிவித்துள்ளது; AdaniConneX, Airtel Nxtra, Adani Power இணை நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து மொத்தம் 8.7 ஜிகாவாட் திறன்கொண்ட வசதிகள் 2,151 ஏக்கர் நிலத்தில் கட்டப்படுகின்றன — இது தனி திட்டமாக இந்தியாவிலேயே மிகப் பெரியது

நில விவகாரம் கடுமையானது: பாதிக்கப்பட்ட தலித் விவசாயக் குடும்பங்கள், "இது எங்கள் தாத்தா பாட்டன் காலத்திலிருந்து 57 ஆண்டுகளாக எங்களுக்குச் சொந்தமான நிலம், தரவு மையம் பற்றி எங்களிடம் யாரும் சொல்லவே இல்லை" என்று குற்றம் சாட்டினர். ஏப்ரல் 23, 2026-ல், தர்லுவாடா கிராம விவசாயிகளை சந்திக்கச் சென்ற தலைவர்களை போலீஸ் கைது செய்ததற்கு எதிராக CPI(M) கட்சி போராட்டம் நடத்தியது. அந்த நகரிலேயே 25 லட்சம் மக்களுக்கு தண்ணீர் ரேஷன் வழக்கமான ஒரு விஷயம் என்பது, தண்ணீர் பற்றாக்குறை நடுவே இப்படி ஒரு பெரும் திட்டம் வருவதன் முரணை காட்டுகிறது.

சுவாரஸ்யமானது என்னவென்றால் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தலைமையிலான பாராளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவே (31-வது அறிக்கை, ஆகஸ்ட் 6 2026), 2047 வரையிலான வரி விலக்கை கேள்விக்குள்ளாக்கி, மின்சாரம்/தண்ணீர் தேவை "இறையாண்மை AI உள்கட்டமைப்பு" இலக்கிற்கே இடையூறாக அமையலாம் என்று எச்சரித்து, சுற்றுச்சூழல் நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. 

இந்த நிறுவனங்களின் முதலீடுகள் தரும் சமூக நன்மையைவிட, அவை ஏற்படுத்தும் பாதிப்புகளே அதிகம். மேலும், இந்த முதலீடுகளை ஈர்க்கும் செலவு பல மடங்கு சாதாரண குடிமகன் மீதே சுமத்தப்படுகிறது. இது தொழில்நுட்பத்திற்கு எதிரான வாதம் அல்ல — நமது வளங்கள் யாருக்காக, எப்படி பங்கிடப்படுகின்றன என்ற கேள்வியே பிரதானமானது.

அமெரிக்க பாடம் — விரிவடைய வேண்டிய கேள்வி

அமெரிக்க விவாதம் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. அமெரிக்க மக்கள் "தரவு மைய மின் கட்டமைப்பை ஏன் சாதாரண குடிமகன் செலுத்த வேண்டும்?" என்று கேட்கிறார்கள். அதே கேள்வியை இந்திய, தமிழக மக்களும் கேட்க வேண்டும்: "AI தரவு மையங்களுக்கான மின் தேவை, தண்ணீர் தேவை போன்றவற்றுக்கான கட்டமைப்பை உருவாக்கும் செலவு யார் தலையில் விழும் — பயன்படுத்துபவர்கள் என்று மக்கள் மீதா, அல்லது மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலா?"

இந்தியாவில் இந்தக் கேள்வி இன்னும் விரிவடைய வேண்டும்: "வெளிநாட்டு AI/cloud மூலதனத்தை ஈர்க்க கொடுக்கப்படும் வரிச் சலுகை, ஊக்கத்தொகை, நிலம், மின்சாரம், தண்ணீர் மானியம், கட்டுமான உதவி — இவை அனைத்தின் மொத்த சமூகச் செலவு எவ்வளவு? இதற்குப் பதிலாக இந்திய மக்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த நன்மை என்ன?"

"வேலைவாய்ப்பு" என்ற பொய்யான வாக்குறுதி

அரசு "அந்நிய மூலதனத்தை ஈர்த்து தொழில்மயமாக்குகிறோம்" என்று சொல்லலாம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் "மக்களுக்கு வேலை உருவாக்குகிறோம்" என்று சொல்லலாம். ஆனால் மக்கள் கேட்க வேண்டிய அடிப்படைக் கேள்வி: "இந்த முதலீட்டால் கிடைக்கும் பயனில் எத்தனை சதவீதம் மக்களுக்குப் போய்ச் சேருகிறது?" என்பதே.

'இது பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்' என்பது முற்றிலும் தவறான வாதம். $15 பில்லியன் (15 இலட்சம் கோடி ரூபாய்!) AI, தரவு மைய முதலீடு என்று வைத்துக்கொண்டாலும், அது சம்பளத்துடன் கூடிய நிரந்தர, நேரடி உயர் தொழில்நுட்ப வேலைகளை 15,000 பேருக்குக் கூட உருவாக்காது. இவர்கள் காட்டும் "வேலை வாய்ப்பு" தோராய எண்கள் எப்போதும் மிகைப்படுத்தப்பட்டவை. ஏனெனில், நிறுவனம் வந்தபின் அதைச் சுற்றி உருவாகும் தேநீர் கடை, உணவகம், துணிக்கடை என எல்லாவற்றையும் சேர்த்துத்தான் அந்த எண்ணிக்கையைக் காட்டுகிறார்கள். அந்நிய மூலதன வருகையால் தேநீர் கடையும் பஜ்ஜி கடையும்கூட இன்று "மேக் இன் இந்தியா" ஆகிறதே ஒழிய, உண்மையான சமூக முன்னேற்றம் நடக்கவில்லை.

அப்ப, தரவு மையங்களே வேண்டாமா? 

'அப்போ இந்தியாவுக்குத் தரவு மையங்களே வேண்டாமா?' என்று கேள்வி எழலாம். இல்லை — தொழில்நுட்பங்களைக் கட்டாயம் நாம் பெற்றாக வேண்டும். ஆனால் முக்கியமான கேள்வி: இதற்கான செலவை யார் ஏற்கிறார்கள்? பலனை யார் அறுவடை செய்கிறார்கள்? இந்தியாவிற்குத் தரவு மையங்கள் தேவை என்பதற்கு பல முக்கியமான காரணங்களும் உண்டு — அதிகரித்துவரும் இணைய பயனாளர்கள், இணைய வர்த்தகம் (e-commerce), AI தேவைகள், தரவு உள்ளூர்மயமாக்கல், அரசு இணைய சேவைகள் என பலவும். மேலும், நம் நாட்டு மக்களின் தரவு நம் நாட்டிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம். சாதாரண மக்களின் அன்றாட இணைய பயன்பாடு முதல் ஆதார், அரசு கோப்புகள், நிறுவனங்களின் ரகசிய தரவு வரை அனைத்துமே இந்த தரவு மையங்களில்தான் சேமிக்கப்படுகிறது. அதனால் தனி நபர் மற்றும் இந்திய நிறுவனங்களின் Confidential தரவுகளை, அரசு நிறுவனங்களின் தரவுகளையும் கட்டாயமாக நாம் இங்கேயே பாதுக்காக்கப்பட வேண்டும். 

ஆனால் இந்திய அரசும் பெரு நிறுவனங்களும் இந்தியாவை வெறும் "மலிவான தரவு மைய இடமாகவும்", பெரிய இணைய சந்தையாகவும் மட்டுமே பார்க்கிறார்கள். அதாவது வியாபாரமாக மட்டுமே பார்க்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தரவு மையங்களுக்குத் தேவையான ஒழுங்குமுறை, கட்டுப்பாடு, கண்காணிப்பு அமைப்புகள் அவசியம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.

இந்திய அரசின் 21 ஆண்டு வரிச் சலுகை

இப்படி முக்கியமான தரவுகளைக் கொண்ட தரவு மையங்களைக் கட்ட, இந்திய அரசு பெரு நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. 2026-27 மத்திய பட்ஜெட்டில் ஒரு பெரிய ஊக்கத்தொகையை அரசு அறிவித்தது — இந்தியாவில் தரவு மையம் அமைத்து, உலகளாவிய cloud சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரி விலக்கு! இது சாதாரண சலுகை இல்லை — 2026 முதல் 2047 வரை, 21 ஆண்டுகளுக்கான நீண்டகால வரி விலக்கு. இந்தியாவை உலகின் cloud மற்றும் AI கட்டுமான மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என அரசு விளக்கம் தருகிறது.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தற்போதைய தரவு மைய திறன் சுமார் 6.5 மெகாவாட். 2030-க்குள் இது 6.5 ஜிகாவாட்டாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே $70 பில்லியன் முதலீடு நடந்துகொண்டிருக்க, கூடுதலாக $90 பில்லியன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 'தரவு மைய மின் கட்டமைப்புச் செலவை சாதாரண பயனாளி ஏற்க வேண்டுமா?' என்ற கேள்வி எழுந்ததையே இந்த பயனாளர் பாதுகாப்பு மசோதா நமக்குக் காட்டுகிறது. அதே போல இந்தியாவிலும் ஒரு கேள்வி எழுப்பப்பட வேண்டும்: 'உலக cloud நிறுவனங்களை ஈர்க்க, இந்தியாவின் சாதாரண குடிமக்கள் இந்த வரி இழப்பை ஏன் ஏற்க வேண்டும்?' இந்த பெரு நிறுவனங்களின் வளர்ச்சி, உலக மக்களைச் சுரண்டுவதன் மூலமேதான் சாத்தியமாகிறது என்பது இதிலிருந்து புரிகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் சுமைகளை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் கூடுதலாகச் சுமக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தரவு மையங்கள் - அரசு கொள்கை

தமிழ்நாடு அரசு 2021-ல் தனி "Tamil Nadu Data Centre Policy (TNDCP)" கொண்டு வந்து, கடலடி கேபிள் இணைப்புகளுக்கு அருகாமை மற்றும் கடலோர அமைவிடத்தை முன்னிறுத்தி, தன்னை "தரவு மைய தலைநகராக" மாற்ற முயற்சிக்கிறது. தரவு மையங்களின் (Data Centres) தேவைகளை பூர்த்தி செய்து, அவற்றை ஈர்ப்பதற்கான சிறப்பு சலுகைகளை அளித்து, வணிகச் சூழலை உத்தரவாதம் வழங்குவதன் மூலம், தமிழ்நாட்டைத் தரவு மையங்களுக்கான முதன்மை இலக்காக (numero uno destination) உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முன்னர் திமுக அரசும் இன்றைய தவெக அரசும் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு தரவு மையக் கொள்கையின் (TNDCP) கீழ், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் தரவு மையப் பூங்காக்களை (Data Centre Parks) அமைத்ததோடு, தடையற்ற குடிநீர்/நீர் விநியோகத்தை உறுதி செய்தது; மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எந்தவொரு உள்வாடகை அல்லது உரிமை மாற்றக் கட்டணங்களும் (sublease or transfer charges) செலுத்தத் தேவையின்றி, நிலம்/கட்டடங்களைத் தரவு மையப் பிரிவுகளுக்கு உள்வாடகைக்கு (sub-lease) விடவும் அனுமதித்து இருக்கிறது.

மாவட்ட வாரியான முத்திரைத்தாள் கட்டணச் சலுகைகள், நில விலைக் கூடுதல் மானியம், மின்சாரம் தொடர்பான ஊக்கத்தொகைகள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புச் சட்டங்களின் கீழான தளர்வுகள் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearances) போன்ற பல்வேறு கூடுதல் பலன்களையும் TNDCP வழங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய தரவு மைய மாநிலமாக (மகாராஷ்டிராவுக்கு அடுத்து) உள்ளது. சுமார் 35 தரவு மையங்களுடன் முன்னணியில் இருப்பதாக 2025ன் அறிக்கை கூறுகிறது. சென்னை நகர்தான் பிரதானமான மையங்களாக இருக்கின்றன. டிசம்பர் 2025-ல் AdaniConneX நிறுவனம் 400 மெகாவாட் திறன்கொண்ட சென்னை வளாகத்தை (200 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன், Tier 4 சான்றிதழுடன்) செயல்படுத்துவதாக அறிவித்துள்லது; Iron Mountain நிறுவனத்தின் அம்பத்தூர் வளாகம் — 42 மெகாவாட் திறனுடைய இரு தரவு மையங்கள் வரும் ஆண்டுகளில் நிறைவடையும் என்று அறிவித்துள்ளது.

2030-க்குள் தமிழ்நாட்டில் மட்டும் கூடுதலாக 700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் தரவு மையங்களுக்காகவே ஒதுக்கப்பட உள்ளது என்பது, மாநிலத்தின் மின் திட்டமிடலிலேயே தரவு மையங்கள் எவ்வளவு முன்னுரிமை பெறுகின்றன என்பதைக் காட்டுகிறது

தரகு முதலாளித்துவம் என்றால் என்ன? — இந்தியாவின் உண்மை நிலை

"அந்நிய மூலதனத்தை ஈர்க்கிறோம்" என்ற பெயரில், சிக்கலான, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புத் தரக்கூடிய, பெரும் மூலதனம் தேவைப்படும் தொழில்களைத்தான் இந்திய ஆளும் கட்சிகள் நம் நாட்டிற்குக் கொண்டு வருகின்றன. ஏன் தெரியுமா? வளர்ந்த, ஏகாதிபத்திய நாடுகளில் மாசு உண்டாக்கும் உற்பத்தியைக் கடுமையான சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன. அதனால் அவர்கள் தங்கள் நாட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, அந்தத் தொழில்களை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். நம் நாட்டு ஆட்சியாளர்களோ, இதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, அந்தத் தொழில்களை இழுத்துக்கொள்கிறார்கள்.

இதற்கு உதாரணம்: அதிக தண்ணீர் தேவைப்படும், அதிக கட்டுமானம் தேவைப்படும், அல்லது பெரிய தொழில்நுட்பமற்ற பெரும் உழைப்பு தேவைப்படும் தொழில்கள்தான் மூன்றாம் உலக நாடுகளுக்கு வருகின்றன. நம் திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களிலிருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகளே இதற்கு நல்ல உதாரணம். இத்தொழிலுக்கு மலிவான உழைப்பும், அதிக தண்ணீரும் தேவை. அதன் சாய கழிவுகள் நம் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பாக மாறியிருக்கிறது. வேலூர், ஆற்காடு போன்ற ஊர்களின் பிரதான தொழிலான தோல் பொருள் ஏற்றுமதியும் இதே கதைதான். சுருக்கமாகச் சொன்னால் — வளர்ந்த நாடுகளுக்குச் சேவை செய்வதையே நாம் பெரிய தொழிலாகக் கட்டமைத்திருக்கிறோம். அதையே இந்திய ஆளும் கட்சிகளும் பெரு நிறுவனங்களும் பெருமையாகவும் பேசுவருகிறது. இந்தியாவின் மிகப் பெரும் துறையாக விளங்கும் நமது IT துறையும் இதே நிலைதான். இந்திய IT நிறுவனங்களுக்குச் சொந்த அடித்தளமே கிடையாது — அவற்றுக்குத் தேவையான மென்பொருளோ (Software) வன்பொருளோ (Hardware) இந்தியாவில் உருவாக்கப்படுவதில்லை. இந்திய IT நிறுவனங்கள் ஏகாதிபத்திய கட்டுமானத்தை நம்பியே பிழைத்து வருகின்றன. ஆனாலும் 'இந்தியா IT-யில் முன்னணியில் இருக்கிறது' என்று நம் ஆளும் வர்க்கம் பெருமையடித்துக்கொள்கிறது.

இந்தச் சொந்த அடித்தளம் இல்லாத நிறுவனங்களால்தான், இந்தியா தன் சொந்த முடிவுகளை இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், உழைக்கும் மக்களுக்கு சாதகமான முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக மூன்று வேளாண் சட்டம், நான்கு தொழிலாளர் சட்டம், மக்கள்-தனியார் கூட்டு (Public Private Partnership) பொருளாதார கொள்கை, GST, கல்வி தனியார்மயமாக்கம், நீட், க்யூட், மருத்துவமனை, மருத்துவம் போன்ற அனைத்தும் ஏகாதிபத்திய நிர்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படுவதுதான். அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தகத் தடைக்கு இந்தியாவை அஞ்சி வாழ்கிறார்கள் — ஏனென்றால் இந்த அண்டி பிழைப்பு நடத்தி வருவது தடைபடும். இந்த அண்டி பிழைப்புதான் இவர்களின் பிரதான தொழில் மற்றும் நிறுவனத்தின் பெரும் இலாபங்கள். அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சேவை செய்வதுதான் இவர்களின் பிரதான தொழிலும் இலாபமும். இதைதான் நாம் தரகு வேலை அதாவது தரகு முதலாளிகள் என்று குறிப்பிடுகிறோம். தரகு முதலாளித்துவம் என்பது உற்பத்தியின் முக்கிய சாதனங்களும், பொருட்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளை நம்பியிருத்தல், அந்த அதி முக்கிய பொருட்களை பயன்படுத்துவதற்கு பெறுவதற்கும் இராயல்டி அல்லது பெரும் ஈடு செலுத்துதல், இந்த நிறுவன உற்பத்தியும் சேவையும் ஏகாதிபத்திய நாட்டு உற்பத்திக்கும் தொழிலுக்கும் சேவை செய்தல்; இந்த சேவையில் கிடைக்கும் இலாபமே, அந்த நிறுவனத்தின் பிரதான இலாபமாக இருத்தல் போன்ற பண்புகள்தான் தரகு முதலாளித்துவம்.

சுருக்கமாகச் சொன்னால் — ஏகாதிபத்திய நிறுவனங்கள் இராமராக இருந்தால், தரகு முதலாளிகள் ஹனுமானாகச் செயல்படுகிறார்கள். ஏனெனில் தங்கள் வாழ்வாதாரத்திற்கே ஏகாதிபத்தியத்தின் அருள் தேவைப்படுகிறது.

மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு — ஒரே பாதையின் இரு பெயர்கள்

இதை நாம் சொல்வதால், இந்தியாவை இழிவுபடுத்துவதாகவும் சிறுமைப்படுத்துவதாகவும் கதை கட்டுகிறார்கள். நம் உடம்பில் நோய் பரவியிருக்கும்போது, அதை மறைத்து பூசி மெழுகுவதால், நோய்தான் தீவிரமடையும். அதை சரியாக இனம்காண எல்லா உடற்கூறு ஆய்வுகளை எடுத்து, சரியாக இனம்கண்டால்தான் சரியான மருந்து உட்கொண்டு, நோயை குணப்படுத்த முடியும். அதேபோல்தான் நம் நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நோயை இந்த பெரு நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் சீர்கேட்டை கண்டறியாமல், உழைக்கும் மக்கள் நம்மால் அதைக் குணப்படுத்த முடியாது. இந்தியா என்றால் இந்திய மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய, இவர்கள் கூறும் கார்ப்பரேட் இந்தியா அல்ல. ஆனால் இன்று இந்தியாவை – உழைக்கும் மக்களாகிய நம்மையும் உட்பட அந்நிய நாடுகளுக்குச் சேவை செய்வதாக நம் ஆளும் வர்க்கம் மாற்றிவிட்டது.

இந்திய உழைக்கும் மக்களின் இந்த நிலைமைக்குக் காரணம் யார்? நம் நாட்டின் 0.01% பேராக இருக்கும் ஆளும் கட்சிகளும், அதிகாரிகளும், பெரு முதலாளிகளும்தான். இவர்கள் இந்தியாவையும் — அதாவது இந்திய மக்களையும் வளங்களையும் — அமெரிக்க-ஐரோப்பிய, ரஷ்ய-சீன ஏகாதிபத்தியங்களை மேலும் மேலும் சார்ந்திருக்கும்படி மாற்றி வருகிறார்கள். அவர்களுக்காக நமது உழைப்பையும், வளங்களும் தாரை வார்க்கப்படுகின்றன. இதனால் மக்கள் போராடி உருவாக்கிய நமது சொந்த தொழில்நுட்பங்களும் தொழில்களும் உரிமைகளும், கட்டமைப்புகளும் மேலும் மேலும் சிதைக்கப்பட்டு பறிக்கப்பட்டு ஏகாதிபத்தியத்திற்கும் பெரு நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

மோடி பாஜகவின் 14 ஆண்டுகால ஆட்சி 'சுதேசி உற்பத்தி' என்ற இலக்கை வைப்பதற்குப் பதிலாக, 'மேக் இன் இந்தியா' என்ற பெயரில் அந்நிய சார்பு உற்பத்தியையே பெருமையாகப் பேசி வருகிறது. இதே பாதையில், இன்று 'மேக் இன் தமிழ்நாடு' என்ற முழக்கத்தை விஜயின் தவெக அரசும் முன்வைக்கிறது. இப்படி மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் தவெகவும் போட்டி போட்டுக்கொண்டு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு — குறிப்பாக அமெரிக்காவிற்கு — சேவை செய்யும் நாடாக நம்மையும் நமது வளங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாம் பெறுவதற்கு ஒன்றும் இல்லை; இழப்பதுதான் அதிகம். பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் கொள்ளையையும் முறியடிக்க உழைக்கும் மக்கள் வர்க்க அமைப்புகள் கட்டி ஒன்றிணைந்து போராடுவது மூலம்தான் அரசியல் பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்க முடியும். 

மேற்கோள் ஆதாரங்கள்

https://www.cnbc.com/2026/09/15/congress-ai-data-center-utility-costs.html

https://reason.org/commentary/the-ratepayer-protection-act-protects-against-higher-household-energy-bills-when-data-centers-connect-to-the-grid/

https://www.washingtontimes.com/news/2026/sep/17/senate-democrats-block-bill-protect-electricity-consumers-data-center/

https://www.foxnews.com/politics/first-data-center-bill-clears-house-republicans-democrats-scramble-answers-affordability-energy

https://wltreport.com/2026/09/16/just-in-house-votes-to-protect-homeowners-from-ai-data-center-power-costs/

https://thehill.com/policy/energy-environment/6096398-heinrich-blocks-husted-data-center-bill/

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026214790001.pdf

https://www.ahlawatassociates.com/blog/india-data-centre-policy-by-state

https://indiadatamap.com/2025/12/13/data-centers-in-india/

- செந்தளம்