வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம் நூல் அறிமுகம்

அ.கா.ஈஸ்வரன்

வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம்   நூல் அறிமுகம்

(MELS இணையவழிப் பயிலரங்கில் 04.11.2026 அன்று ஆற்றிய உரை)

ருஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் வரலாற்று நாள் இன்று.

உலக வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய நாள். இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்த நிகழ்வை எந்தளவுக்குக் கொண்டாடுகிறோமோ அதே அளவுக்கு அதன் வீழ்ச்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படித் தெரிந்து கொள்வதற்குத் தேவையான ஒரு நூலையே இன்று அறிமுகமாகப் பார்க்கப் போகிறோம்.

1917ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி (புதிய நாட்காட்டியின்படி நவம்பர் புரட்சி) உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும். இந்தப் புரட்சி உருவாக்கிய சோசலிசக் கட்டுமானத்தின் அனுபவங்களையும், பின்னர் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களையும் ஆராய்வது இன்றைக்கு அவசியமானதாக இருக்கிறது.

வீழ்ச்சியின் காரணத்தை அறிந்து கொள்வதற்கு உதவும் வகையிலான நூலையே இன்று அறிமுகமாகப் பார்க்கப் போகிறோம்.

"வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம்" என்பது இந்த நூலின் தமிழ்ப் பதிப்பின் தலைப்பு. 

விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றை நாம் பாராமல் பல  ஆண்டுகளைக் கடத்திவிட்டோம். சுந்தரசோழன் மொழியாக்கம் செய்யப்பட்ட "திருத்தல்வாதமும் சோவியத் வீழ்ச்சியும் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு படிப்பினை", அதே போல "குருசேவ்வின் பொய்யுரைகள்" இந்த இரண்டு நூல்களும் சோவியத் வீழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய நூல்களாகும் இந்த இரண்டு நூல்களையும் பொன்னுலகம் புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிறது. பேராசிரியர் கோ.கேசவன் இதுபற்றி ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் “சோசலிசமும் முதலாளித்துவ மீட்சியும்” இந்த நூல் 1990ஆம் ஆண்டிலேயே   தமிழில் நேரடியாக எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. 

இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகள் சிறு முயற்சி செய்துள்ளது, ஆனால் விரிவாகச் செய்யவில்லை.

பாரிஸ் கம்யூனின் எழுச்சி - வீழ்ச்சி பற்றி  மார்க்ஸ் எவ்வாறு எழுதினாரோ அதே போல ருஷ்யப் புரட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி விரிவாக எழுத வேண்டும். முப்பது ஆண்டுகள் கடந்த பின்பும் சர்வதேச இடதுசாரிகள் இது பற்றி விரிவாக எழுதாமல் இருக்கிறது. இன்று காணப்படுகிற இடதுசாரிகளின் பலவீனங்களைப் போக்க வேண்டுமானால் இது போன்ற ஆய்வுகளைக் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும்.

"வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம்" என்கிற இந்நூலைத் தமிழ் மார்க்ஸ் அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது, இதனை மொழியாக்கம் செய்தவர் தோழர் இரா.சிசுபாலன். இப்படிப்பட்ட ஒரு நூலைக் கொண்டுவந்த தமிழ் மார்க்ஸ் அறக்கட்டளைக்கும் மொழியாக்கம் செய்த தோழர் இரா.சிசுபாலன் அவர்களுக்கும் முதலில் நாம் நன்றியினைச் செலுத்த வேண்டும்.

இதுபோன்ற சிறிய நூல்களைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்து, தமிழில் கொண்டுவரும் பணியையாவது நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இந்த நூலை 2004ஆம் ஆண்டு ரோஜர் கீரன், தாமஸ் கென்னி என்கிற இரண்டு அமெரிக்கர்கள் எழுதியுள்ளனர். இதில் ஒருவர் அமெரிக்க வரலாற்று ஆசிரியர் மற்றொருவர் தொழிலாளர் மற்றும் பொருளாதார வல்லுநர். 

தமிழில் இந்த நூல் சுமார் 350 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. அறிமுகம், நிறைவு உரையினையும் சேர்த்து எட்டு இயல்களைக் கொண்டுள்ளது.

அறிமுகத்துக்கு அடுத்த இரண்டாவது இயலில், சோவியத் வீழ்ச்சிக்கு வழிவகுத்த உள்முரண்பாடுகளும் கொள்கைத் தவறுகளும் பற்றி பேசுகிறது. மூன்றாவது இயல், சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குக் கட்சித் தலைமையின் பங்குபற்றிப் பேசுகிறது, இதில் இரண்டாவது பொருளாதாரம் என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்த இரண்டாவது பொருளாதாரம் என்று கூறப்படுவதை நன்றாக அறிந்து கொண்டால் சோவியத் வீழ்ச்சியினைப் புரிந்து கொள்ளவது எளிதாகும். நான்காவது இயல், வெளிப்புற அழுத்தங்கள், அதாவது பனிப்போர் பற்றி பேசுகிறது. ஐந்தாவது இயல், கருத்தியல் மாற்றமும் சோவியத் சமூகத்தின் மீதான அதன் தாக்கமும் பற்றி பேசுகிறது. ஆறாவது இயல், சோவியத் நிறுவனங்களின் வீழ்ச்சியும் வஞ்சிக்கப்பட்ட சோசலிசத்தின் மரபும் பற்றி பேசுகிறது. ஏழாவது இயல், கற்றுக்கொண்ட பாடங்களும் சோசலிசத்தின் எதிர்கால வாய்ப்புகளும் பற்றிப் பேசுகிறது. இறுதி இயலான எட்டாவதாக, நிறைவுரையில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படும் ஆறு கருத்துகளை எடுத்துரைத்து, அவற்றில் எது அதிகப் பொருத்தமானது என்பதைப் பற்றி சுட்டிக்கிறது.

நூலின் அனைத்து இயல்களையும் பொறுமையாகப் படித்து, அவற்றில் இடம்பெற்றுள்ள விவரங்களையும் விளக்கங்களையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். கண்டிப்பாக இந்த நூலை மேலோட்டமாகப் படிக்க முடியாது. ஒவ்வொரு இயலும் அதில் முன்வைக்கும் கருத்துகளையும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளையும் ஆராய்ந்து படிப்பதே நூலின் முழுமையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும். 

Betrayed (பிட்ரேட்) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இந்நூலில் “வஞ்சிக்கப்பட்ட” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. “காட்டிக்கொடுக்கப்பட்ட” என்றும் மொழிபெயர்க்கலாம். ஆனால், இந்நூலின் விவாதிக்கும் வரலாற்று சூழலை வைத்துப் பார்க்கும்போது “வஞ்சிக்கப்பட்ட” என்பதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

“வஞ்சகத்தோடு காட்டிக்கொடுக்கப்பட்ட சோசலிசம்” என்றும் பொருளை விரித்துக் கூறலாம். எனினும், சுருக்கமாகவும் ஆங்கிலச் சொல்லின் பொருளைச் சூழலுக்கு ஏற்றவாறும் வெளிப்படுத்தும் வகையில் “வஞ்சிக்கப்பட்ட சோசலிசம்” என்பது பொருத்தமான தேர்வாக இருக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்பது சோசலிச அமைப்பின் தவிர்க்க முடியாத தோல்வி அல்ல; கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் ஏற்பட்ட கொள்கைத் தவறுகள், சோசலிசக் கொள்கைகளிலிருந்து விலகுதல், முதலாளித்துவ ஆதரவு நோக்கங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட வரலாற்று தோல்வி என்பதே நூலின் மைய வாதம். அதனால் வஞ்சிக்கப்பட்ட என்கிற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

முதல் இயல், நூலைப் பற்றிய அறிமுகத்தைச் சுருக்கமாக வழங்குகிறது. இந்த அறிமுகம், நூல் எத்தகைய நோக்கத்தையும் கருத்துநிலையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அதாவது இந்த நூல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையும் அதன் தாக்கத்தையும் பற்றியது என்பதை வெளிப்படுத்துகிறது. 

இந்தப் பெரும் வீழ்ச்சியை, பனிப்போர் முடிவடைந்து முதலாளித்துவம் வெற்றி பெற்றதன் அடையாளமாக வலதுசாரி அரசியல் விளக்குகிறது. இதனை வரலாற்றின் முடிவாகச் சித்தரிக்கிறது. அதாவது, முதலாளித்துவத்திற்கு இனி மாற்று இல்லை; அதற்கு முடிவும் இல்லை என்ற கருத்தை நிலைநாட்டும் வகையில், இந்த நிகழ்வை மிகைப்படுத்துகிறது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில்தான் இந்த நூல் அமைந்துள்ளது. இதை எப்படிச் செய்துள்ளது என்பதை முதல் அத்தியாயத்தில் எழுப்பிய கேள்விகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சோவியத் ஒன்றியம் ஏன் சரிந்தது என்ற கேள்வியுடன் தொடர்புடைய பல துணைக் கேள்விகளும் உள்ளன. அவற்றுக்கான பதில்களைக் கண்டறிவதன் மூலமே சோவியத் ஒன்றியம் ஏன், எவ்வாறு வீழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் கேள்விகளை மட்டும் முதலில் பார்ப்போம்.

பெரிஸ்த்ரோயிகா தொடங்கியபோது சோவியத் சமூகத்தின் நிலை என்ன? 1985 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் நெருக்கடியை எதிர்கொண்டதா? கோர்பச்சேவின் பெரிஸ்த்ரோயிகா எத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியிருந்தது? அவர் தேர்ந்தெடுத்த சீர்திருத்தங்களுக்குச் சாதகமான மாற்று வழிகள் இருந்தனவா? முதலாளித்துவத்திற்கு இட்டிச்செல்லும் சீர்திருத்தப் பாதையை எந்தச் சக்திகள் விரும்பின? எந்தச் சக்திகள் எதிர்த்தன? 

சீர்திருத்தம், பொருளாதாரப் பேரழிவையும் தேசியச் சிதைவையும் உருவாக்கத் தொடங்கியபோதும், கோர்பச்சேவின் இப்போக்கை மாற்றவில்லை? அல்லது கம்யூனிஸ்டுக் கட்சியின் மற்ற தலைவர்கள் ஏன் அதனை மாற்றவில்லை? 

சோவியத் சோசலிசம் ஏன் மிகவும் பலவீனமாக இருந்தது? சோசலிசத்தைப் பாதுகாப்பதற்குத் தொழிலாளர் வர்க்கம் ஏன் எதுவும் செய்யவில்லை? 

சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளில் சோசலிசம் — குறைந்த பட்சம் ஏதாவது ஒரு வடிவில் — நிலைத்து நிற்கும் இன்றைய சூழலில், ஆழவேரூன்றி வளர்ந்த சோவியத் ஒன்றியம் தோல்வியுற்று வீழ்ந்தது ஏன்? சோவியத் வீழ்ச்சியைத் தவிர்க்கவியலாததா? சோசலிசத்திற்கு எதிற்காலம் இருக்கிறதா?

இந்த இறுதிக் கேள்வி மிகவும் முக்கியமானது. சோசலிசத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா? சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்த வீழ்ச்சி தவிர்க்க முடியாததா அல்லது தவிர்த்திருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்தே சோசலிசத்தின் எதிர்காலம் குறித்த மதிப்பீடு அமைகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்ற வலதுசாரிகளின் கூற்றிலிருந்து மாறுபட்ட விளக்கத்தை முன்வைப்பதுடன், அந்த விளக்கத்திற்கான காரணங்களையும் இந்த நூல் ஆராய்கிறது.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்த நூல் என்ன கூறுகிறது என்பதைப் படித்தாலே போதுமானது. இந்த நூலில் என்ன கூறப்பட்டுள்ளது, அது எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

அதற்கு முன் ஒர் அடிப்படை புரிதலைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அது எந்தளவுக்கு பொருளாதார வளர்ச்சியை அடைந்தது என்பதை மட்டும் பார்த்தால் போதாது. அந்த வளர்ச்சி எந்த வர்க்க நலன்களுக்குச் சேவை செய்தது, கட்சியின் அரசியல் திசை எவ்வாறு மாறியது, சோசலிசக் கட்டுமானத்திற்குள் முதலாளித்துவ உறவுகள் எவ்வாறு வளர அனுமதிக்கப்பட்டன என்பதையும் ஆராய வேண்டும். 

சோவியத் அரசியலின் இரு போக்குகள் பற்றிய விவாதம் நமக்கு முன்வைக்கும் முக்கியமான கேள்வி இதுதான்: சோசலிசத்தைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் தேவையான அரசியல் திசையை எவ்வாறு உறுதிப்படுத்துவது?

சோசலிசத்தைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் முதலில், சோசலிசத்தின் அடிப்படை நோக்கங்களையும் அதனை அடைவதற்கான வர்க்க அடிப்படையிலான அரசியல் திசையையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாவதாக, மார்க்சியக் கோட்பாட்டின் வழிகாட்டுதல் அவசியம். இரண்டாவதாக, வர்க்கப் போராட்டத்தின் தேவையை உணர வேண்டும். மூன்றாவதாக, பொருளாதாரக் கொள்கைகளை அவற்றின் வர்க்க உள்ளடக்கத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். நான்காவதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குத் தெளிவான சோசலிச நோக்கம் இருக்க வேண்டும். ஐந்தாவதாக, மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆறாவதாக, கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும்.

இவை அனைத்தையும் இங்கே நாம் விரிவாகப் பார்த்திட முடியாது. இருந்தாலும் சிலவற்றையாவது பார்ப்போம்.

சோவியத் அரசியலின் இரு போக்குகள் என்று குறிப்பிட்டோம் அல்லவா, அது என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

இந்த நூல் குறிப்பிடும் இரண்டு போக்குகளில் ஒன்று பாட்டாளி வர்க்கம், மற்றொன்று குட்டி முதலாளித்துவ வர்க்கம். இவ்விரு போக்குகளையும் இந்நூல் இடதுசாரிப் போக்கு, வலதுசாரிப் போக்கு என்று குறிப்பிடுகிறது. இங்கு இடது, வலது என்ற சொற்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அரசியல் அடையாளங்களைக் குறிக்கவில்லை. அதாவது நாம் பொதுவாக இடது, வலது என்று கையாள்வோமே அந்தப் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் பின்பற்ற வேண்டிய கொள்கைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றில் நிலவும் வேறுபாடுகளின் அடிப்படையில் அவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

பாட்டாளி வர்க்கப் போக்கு எதைச் செய்ய விரும்புகிறது என்பதைப் பார்ப்போம். 

தொழில்மயமாக்கலை விரைவுபடுத்துதல். விவசாயத்தில் கூட்டுடைமையை வளர்த்தல். தனியார் உடைமையை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல் வர்க்கங்களின் செல்வாக்கைக் குறைத்தல். பொருளாதாரத் திட்டமிடலில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை வலுப்படுத்துதல். சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் முதலாளித்துவச் சந்தை உறவுகளைச் சார்ந்திருக்காமல் இருத்தல்.

அதே போல் குட்டிமுதலாளித்துவப் போக்கு எதைச் செய்ய விரும்புகிறது என்பதைப் பார்ப்போம். 

சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் தனியார் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடமளித்தல். சந்தைப் போட்டியைப் பயன்படுத்துதல். லாப ஊக்குவிப்பின் வழியாக உற்பத்தியை வளர்த்தல். முதலாளித்துவத்துடன் சமரசம் செய்து படிப்படியாகச் சோசலிசத்தை நோக்கிச் செல்லுதல். வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, வெவ்வேறு பொருளாதார நலன்களைக் கொண்ட பிரிவுகளுக்கு இடையிலான சமரசத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்.

குட்டி முதலாளித்துவப் போக்கின் அரசியல் மரபுடன் புகாரின், குருசேவ் ஆகியோரை நூல் தொடர்புபடுத்துகிறது. கோர்பசேவின் பிற்காலச் சீர்திருத்தங்களும் இந்தப் போக்கை நோக்கி நகர்ந்ததாக நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர்.

மூன்றாம் அத்தியாயத்தில் பேசப்படுகிற இரண்டாம் பொருளாதாரம் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமானது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு, அங்கு வளர்ந்த இரண்டாவது பொருளாதாரத்தை ஆராய்வது அவசியம் ஆகும்.

சோவியத் ஒன்றியத்தில் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த சமூகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துடன் இணையாக, தனிப்பட்ட லாபத்திற்காகச் செயல்பட்ட தனியார் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ந்தன. இவை சட்டவழியாகவும் சட்டவிரோதமானவையாகவும் இருந்தன. தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்களுடைய முதன்மைப் பணிகளுக்கு அப்பால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காலப்போக்கில், இவற்றின் அளவும் செல்வாக்கும் அதிகரித்து, தனியார் பொருளாதார நலன்களைக் கொண்ட புதிய குட்டி முதலாளித்துவச் சமூகப் பிரிவு உருவானது.

இந்தக் குட்டி முதலாளித்துவப் போக்கு வளர்வதற்கு, மக்களின் அதிகரித்துவரும் தேவைகளை நிறைவேற்றுவதில் சோவியத் பொருளாதாரம் எதிர்கொண்ட குறைபாடுகளும், சட்டவிரோதப் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டிய தளர்வும், கட்சியின் அலட்சியமும் பின்னணியாக அமைந்தன என்று நூல் விளக்குகிறது.

இரண்டாவது பொருளாதாரம் கள்ளச் சந்தை, ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவை பெருகுவதற்குக் காரணமாக அமைந்ததோடு, தனியார் உடைமை மற்றும் சந்தைப் பொருளாதாரத்திற்கு ஆதரவான கருத்துகள் சமூகத்தில் வேரூன்றுவதற்கான அடித்தளத்தையும் உருவாக்கியது. இத்தகைய தனியார் பொருளாதார நலன்கள் கட்சிக்குள்ளும் அரசுத் துறைகளிலும் செல்வாக்கு பெறத் தொடங்கின என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோர்பசேவின் சீர்திருத்தங்கள் தனியார் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சந்தை உறவுகளுக்கும் கூடுதல் இடமளித்தன. இதனால், இந்தப் பிரிவுகள் தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொண்டன. இதனால் சமூகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் அடித்தளம் பலவீனமடைந்து, முதலாளித்துவத்தை மீண்டும் நிறுவுவதற்கான சக்திகள் வலுப்பெற்றன என்பது நூலாசிரியர்களின் அடிப்படை வாதமாகும். 

இந்த நூல் எந்த வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை இப்போது ஓரளவுக்குப் புரிதல் நமக்குக் கிடைத்திருக்கும்.

முன்பு எழுப்பப்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் உரிய பதில்களை வரிசையாகப் பார்ப்போம்.

பெரிஸ்த்ரோயிகா தொடங்கியபோது சோவியத் சமூகத்தின் நிலை என்ன?

1985-இல் பெரிஸ்த்ரோயிகா தொடங்கியபோது சோவியத் ஒன்றியம் உடனடியாக வீழ்ச்சியடையும் நிலையில் இருக்கவில்லை. பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்திருந்தாலும், 1980களின் தொடக்கத்தில், ரஷ்யாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சுமார் 3.2 விழுக்காடு வளர்ந்து கொண்டிருந்தது. அதேவேளையில், சமூகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் குறைபாடுகள், இரண்டாவது பொருளாதாரத்தின் வளர்ச்சி, ஊழல், கட்சியின் அரசியல் தேக்கம் ஆகிய பிரச்சினைகள் நிலவின. 

கட்சியின் அதிகாரப் பதவிகளில் நீண்டகாலமாக மாற்றங்கள் இல்லாத நிலை நீடித்தது, கட்சி அமைப்புகளில் அதிகாரத்துவப் போக்கு வளர்ந்தது, மார்க்சியக் கோட்பாட்டின் மீதான பற்றுதல் பலவீனமடைந்தது ஆகியவையும் சோவியத் ஒன்றியம் எதிர்கொண்ட சிக்கல்களாக இருந்தன. இவற்றுடன், அமெரிக்காவுடனான பனிப்போர் ஏற்படுத்திய அரசியல், இராணுவ, பொருளாதார அழுத்தங்களும் சோவியத் ஒன்றியத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின

1985 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் நெருக்கடியை எதிர்கொண்டதா?

1985ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் ஏற்கெனவே வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது என்று கூறுவது சரியானதல்ல. அதேவேளையில், அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறிட முடியாது. நீண்டகாலமாகத் திரண்டுவந்த பொருளாதார, அரசியல் சிக்கல்கள் அப்போது நிலவின.

பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்திருந்தது. கட்சி அமைப்புகளில் அதிகாரத்துவப் போக்கு வளர்ந்திருந்தது. ஊழல் அதிகரித்திருந்தது. சமூகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துடன் இணையாகத் தனியார் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது பொருளாதாரமும் வளர்ந்துகொண்டிருந்தது. கட்சிக்குள் மார்க்சியக் கோட்பாட்டின் மீதான பற்றுதல் பலவீனமடைந்திருந்ததும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்தது. இதனுடன் அமெரிக்காவுடனான பனிப்போர் அழுத்தங்களும் இணைந்திருந்தன.

ஆனால், இந்தச் சிக்கல்கள் இருந்தன என்பதற்காகவே சோசலிசம் தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடைந்திருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வர முடியாது. உண்மையில், அந்தச் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொண்டார்கள், அவற்றைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் எந்தத் திசையில் சென்றன என்பதுதான் முக்கியமான கேள்வி.

எனவே, 1985ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் நீண்டகாலமாகத் திரண்டுவந்த பொருளாதார, அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது; ஆனால் அதன் வீழ்ச்சி அப்போதே தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று கூற முடியாது. பெரிஸ்த்ரோயிகா தொடங்கியபோது இருந்த நிலைமையையும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்களின் விளைவுகளையும் நாம் தனித்தனியாக ஆராய வேண்டும்.

கோர்பச்சேவின் பெரிஸ்த்ரோயிகா எத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியிருந்தது?

1985ஆம் ஆண்டு கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, அங்கு நிலவிய பொருளாதார, அரசியல் சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய தேவை இருந்தது. அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவே பெரிஸ்த்ரோயிகா எனப்படும் மறுசீரமைப்புக் கொள்கை முன்வைக்கப்பட்டது.

முதலாவதாக, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் கூட்ட வேண்டியிருந்தது. சோவியத் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருந்தாலும், அதன் வளர்ச்சியின் வேகம் குறைந்திருந்தது. உற்பத்தித் திறனை உயர்த்துவது, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது, பொருளாதாரத்தின் செயல்திறனை மேம்படுத்துவது ஆகியவை முக்கியமான தேவைகளாக இருந்தன.

இரண்டாவதாக, அரசு நிர்வாகத்திலும் கட்சி அமைப்புகளிலும் நிலவிய அதிகாரத்துவப் போக்கையும் ஊழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சி அமைப்புகளில் நீண்டகாலமாக அதிகாரப் பதவிகளில் நீடித்தவர்கள், நிர்வாக நடைமுறைகளில் ஏற்பட்ட தேக்கம், பொறுப்பற்ற செயல்பாடுகள் ஆகியவை சோசலிசக் கட்டுமானத்தின் முன்னேற்றத்தைப் பாதித்தன. எனவே, கட்சி மற்றும் அரசு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியிருந்தது.

மூன்றாவதாக, சமூகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்குள் வளர்ந்துவந்த இரண்டாவது பொருளாதாரத்தையும் அதன் தொடர்புடைய ஊழல், தனியார் லாப நலன்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தத் தனியார் பொருளாதார நடவடிக்கைகள் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி அமைப்புக்கு வெளியிலும் அதனுடன் இணைந்தும் வளர்ந்தன. அவற்றைக் கட்டுப்படுத்துவதும், பொருளாதாரத்தின் மீதான சமூகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதும் முக்கியமான சவால்களாக இருந்தன.

நான்காவதாக, மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. நுகர்வுப் பொருட்கள் கிடைப்பதை மேம்படுத்துவது, மக்களின் தேவைகளுக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது, பொருளாதாரத்தின் செயல்பாட்டை மக்களின் நலன்களுடன் இணைப்பது ஆகியவை அவசியமானவையாக இருந்தன.

ஐந்தாவதாக, கட்சியின் அரசியல் மற்றும் கருத்தியல் உறுதியைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. மார்க்சியக் கோட்பாட்டின் மீதான பற்றுதல் பலவீனமடைந்து இருந்தது, கட்சி அமைப்புகளில் ஏற்பட்ட தேக்கம் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக இருந்தன. சோசலிசத்தைக் கட்டமைப்பதில் கட்சியின் பங்கு என்ன, பொருளாதாரத்தை எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில் வழிநடத்த வேண்டும் என்பவை அடிப்படையான கேள்விகளாக இருந்தன.

ஆனால், இங்கேதான் நாம் ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய தேவை இருந்தது என்பது ஒருபுறம்; அவற்றைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறை சரியானதா என்பது மறுபுறம்.

பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டிய தேவை இருந்தது என்பதற்காகவே, சமூகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மீதான கட்சியின் வழிநடத்தும் பங்கைக் குறைப்பதும், சந்தை உறவுகளுக்கும் தனியார் உடைமைக்கும் கூடுதல் இடமளிப்பதும் அவசியமாகிவிடாது. சீர்திருத்தங்கள் எந்தத் திசையில் முன்னெடுக்கப்பட்டன, அவை சோசலிசத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினவா? அல்லது பலவீனப்படுத்தினவா? என்பதுதான் ஆராயப்பட வேண்டிய அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

எனவே, பெரிஸ்த்ரோயிகாவை மதிப்பிடும்போது, சோவியத் ஒன்றியத்தில் பிரச்சினைகள் இருந்தனவா என்பதோடு நின்றுவிடக் கூடாது. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் எத்தகைய பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின என்பதையும் ஆராய வேண்டும். இதுவே பெரிஸ்த்ரோயிகையின் வரலாற்று பாதையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையாகும்.

கோர்பசேவ் தேர்ந்தெடுத்த சீர்திருத்தங்களுக்குச் சாதகமான மாற்று வழிகள் இருந்தனவா? முதலாளித்துவத்திற்கு இட்டிச்செல்லும் சீர்திருத்தப் பாதையை எந்தச் சக்திகள் விரும்பின? எந்தச் சக்திகள் எதிர்த்தன? 

இதற்கான பதிலைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கோர்பச்சேவ் தேர்ந்தெடுத்த சீர்திருத்தங்களுக்கு மாற்று வழிகள் இருந்தனவா? 

மாற்று வழிகள் இருந்தன என்று இந்த நூல் கூறுகிறது. பொருளாதாரத்தின் மீதான மையத் திட்டமிடலையும் சமூக உடைமையையும் வலுப்படுத்துவது, உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, கட்சி நிர்வாகத்தில் நிலவிய அதிகாரத்துவத்தையும் ஊழலையும் எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றின் வழியாகச் சோசலிசப் பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியும் என்பதே நூல் முன்வைக்கும் வாதமாகும்.

முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லும் சீர்திருத்தப் பாதையை யார் விரும்பினார்கள்? 

இரண்டாவது பொருளாதாரத்தின் மூலம் தனியார் லாப நலன்களைக் கொண்ட பிரிவினர் உருவாகி வளர்ந்தனர். சந்தை உறவுகளையும் தனியார் முன்முயற்சியையும் விரிவுபடுத்த விரும்பியவர்களும், கட்சிக்குள் சந்தைச் சார்பான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்களும் இத்தகைய மாற்றங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

மறுபுறம், மையத் திட்டமிடலையும் சமூக உடைமையையும் பாதுகாக்க விரும்பியவர்கள், சோசலிசப் பொருளாதாரத்தின் மீதான கட்சியின் வழிநடத்தும் பங்கைத் தக்கவைக்க வலியுறுத்தியவர்கள் அந்த மாற்றங்களை எதிர்த்தனர். எதிர்ப்பு இல்லாமல் இல்லை, ஆனால் அது வலுவாகவும் இயக்கமாகவும் செயல்படவில்லை.

சீர்திருத்தம், பொருளாதாரப் பேரழிவையும் தேசியச் சிதைவையும் உருவாக்கத் தொடங்கியபோதும், கோர்பச்சேவ் இப்போக்கை ஏன்மாற்றவில்லை? அல்லது கம்யூனிஸ்டுக் கட்சியின் மற்ற தலைவர்கள் ஏன் அதனை மாற்றவில்லை?

பெரிஸ்த்ரோயிகாவின் விளைவாகப் பொருளாதாரச் சீர்குலைவு அதிகரித்தபோதும், தேசியப் பிரிவினைப் போக்குகள் வலுப்பெற்றபோதும், கோர்பச்சேவ் தனது கொள்கைப் பாதையைத் தொடர்ந்து முன்னெடுத்தார். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள, பொருளாதார மாற்றங்களையும் கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போராட்டத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த நூல் சுட்டிக்காட்டும் முக்கியமான காரணங்கள் மூன்று.

முதலாவது, கட்சிக்குள் இருந்த எதிர்ப்பாளர்கள் ஒருங்கிணைந்த, உறுதியான மாற்றுத் தலைமையை உருவாக்கவில்லை. கோர்பச்சேவின் கொள்கைகளை எதிர்த்த தலைவர்களிடம் அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்குப் போதிய ஆதரவு இருந்தபோதிலும், அவர்கள் அதற்கான தீர்மானமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இரண்டாவது, கட்சியின் அரசியல் மற்றும் கோட்பாட்டு திறன் பலவீனமடைந்திருந்தது. கோர்பச்சேவின் சீர்திருத்தங்கள் சோசலிசத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் திசையில் சென்றபோதும், அவற்றின் முழுமையான விளைவுகளை உணர்ந்து எதிர்கொள்ளும் திறன் கட்சித் தலைமையிடம் போதுமான அளவில் இல்லை என்று நூல் பதிவு செய்கிறது.

மூன்றாவதாக, கோர்பச்சேவ் கட்சிக்குள் தனது எதிர்ப்பாளர்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தினார். அரசியல் சீர்திருத்தங்களையும் ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்பட்ட கருத்தியல் மாற்றங்களையும் பயன்படுத்தி, கட்சிக்குள் அதிகாரச் சமநிலையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார். இதன் விளைவாக, அவரது கொள்கைகளை எதிர்த்தவர்கள் படிப்படியாகச் செல்வாக்கை இழந்தனர். 1990ஆம் ஆண்டு மையக் குழுவில் கோர்பச்சேவுக்கு எதிராகப் பலர் இருந்தபோதிலும், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அவர்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை. இதனால் அவரை மாற்றுவதற்கான முயற்சி தோல்வி கண்டது.

சோவியத் சோசலிசம் ஏன் மிகவும் பலவீனமாக இருந்தது? சோசலிசத்தைப் பாதுகாப்பதற்குத் தொழிலாளர் வர்க்கம் ஏன் எதுவும் செய்யவில்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் மட்டும் விளக்க முடியாது. கட்சியின் அரசியல் நிலை, மார்க்சியக் கோட்பாட்டின் வழிநடத்தும் பங்கு, தனியார் பொருளாதார நலன்களின் வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்துக்கும் கட்சிக்கும் இடையிலான உறவு ஆகியவற்றையும் ஆராய வேண்டும்.

சோவியத் சோசலிசம் ஏன் பலவீனமாக இருந்தது?

இந்த நூலில் கூறப்பட்ட கருத்தின்படி, சோசலிசத்தின் பலவீனம் அதன் பொருளாதார அமைப்பில் மட்டுமல்ல; அதை வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டிலும் இருந்தது. 

இரண்டாவது பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தவறியது, கட்சிக்குள் ஊழல் பரவியது, ஜனநாயக மத்தியத்துவம் பலவீனமடைந்தது, கூட்டுத் தலைமை சிதைந்தது, மார்க்சியக் கோட்பாடு நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகி வெறும் சடங்காக மாறியது ஆகியவை முக்கியக் காரணங்களாக நூல் குறிப்பிடுகிறது. 

தனியார் உடைமைக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் ஆதரவான சமூகப் பிரிவுகள் வளர்ந்ததையும் நூல் வலியுறுத்துகிறது. 

நூல் முன்வைக்கும் முக்கியமான கருத்து இதுதான்: முதலாளித்துவம் தன்னியல்பாக வளர்கிறது. ஆனால், சோசலிசம் அரசியல் வழிநடத்தல், திட்டமிட்ட செயல்பாடு ஆகிவற்றை உணர்வுவழியாகக் கட்டமைக்கப்பட வேண்டிய சமூக அமைப்பாகும். எனவே, சோசலிசத்தைக் கட்டமைக்கும் கட்சியின் கோட்பாட்டு தெளிவும் அரசியல் உறுதியும் பலவீனமடைந்தால், சோசலிசக் கட்டமைப்பின் அடித்தளமும் பாதிப்புக்கு உள்ளாகும்.

முதலாளித்துவம் சோசலிசம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவம் முந்தைய சமூக அமைப்புகளின் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளைவாகத் தோன்றி வளர்ந்தது. ஆனால், முதலாளித்துவத்தை வீழ்த்தி உருவாக்கப்பட்ட சோசலிசம் அதற்கு நேர்மாறான திசையில் பயணிக்க வேண்டியிருந்தது. 

முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவச் சமூகத்திற்குள்ளேயே புதிய உற்பத்தி உறவுகள் படிப்படியாக வளர்ந்ததன் விளைவாக உருவானது. ஆனால், சோசலிசம் முதலாளித்துவத்திற்குள் இயல்பாக வளர்ந்து உருவானதல்ல. முதலாளித்துவத்தின் தனியார் உடைமை உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றி, சமூக உடைமையின் அடிப்படையில் புதிய உற்பத்தி உறவுகளையும் சமூக அமைப்பையும் கட்டியமைக்க வேண்டியிருந்தது. இத்தகைய சமூக அமைப்பைக் கட்டியமைப்பதற்கு, இதற்கு முந்தைய வரலாற்றில் முன்மாதிரி எதுவும் இருக்கவில்லை. எனவே, புதிய சமூக அமைப்பை நடைமுறையில் உருவாக்க வேண்டிய வரலாற்று பொறுப்பு சோசலிசப் புரட்சியின் முன் இருந்தது.

அடுத்த கேள்வி: சோசலிசத்தைப் பாதுகாக்கத் தொழிலாளர் வர்க்கம் ஏன் போதுமான அளவில் செயல்படவில்லை?

இதற்கு நூல் ஒரே காரணத்தை மட்டும் முன்வைக்கவில்லை. கட்சிக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் பலவீனமடைந்திருந்தன. தொழிற்சங்கங்கள், சோவியத்துகள் உள்ளிட்ட அமைப்புகள் வழியாகத் தொழிலாளர்கள் கட்சியின் முடிவுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் குறைந்திருந்தன. கட்சிக்குள் விமர்சனமும் சுயவிமர்சனமும் குறைந்து வந்தன. இதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் பங்கேற்புக்கும் கட்சியின் முடிவெடுக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்தது.

தொழிலாளர் வர்க்கம் சோசலிசத்தைப் பாதுகாக்க விரும்பவில்லை என்று கூறிவிட முடியாது. சோசலிசத்தைப் பாதுகாப்பதற்கான அரசியல் வழிநடத்தல், கட்சியுடனான உயிரோட்டமான உறவு, தெளிவான மாற்றுத் திட்டம் ஆகியவை பலவீனமடைந்திருந்தன என்பதே இந்த நூலின் விளக்கத்திலிருந்து பெறக்கூடிய முக்கியமான முடிவுகளாகும். 

தொழிலாளர்களின் செயலற்ற தன்மை குறித்த கேள்விக்கு நூல் அளிக்கும் விளக்கம் முக்கியமானது. கட்சிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவின் சிதைவையும் அன்றைய அரசியல் சூழலையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இங்கு இக்கருத்துகளைச் சுருக்கமாகவே பார்த்துள்ளோம். இவை தொடர்பான விரிவான விளக்கங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. எனவே, அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள நூலை படிக்க வேண்டும்.

சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளில் சோசலிசம் — குறைந்த பட்சம் ஏதாவது ஒரு வடிவில் — நிலைத்து நிற்கும் இன்றைய சூழலில், அது ஆழ வேரூன்றி வளர்ந்த சோவியத் ஒன்றியத்தில் தோல்வியுற்று வீழ்ந்தது ஏன்?

சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளில் சோசலிசம் வெவ்வேறு வடிவங்களில் இருந்தது என்று இங்கே வாதத்துக்கு வைக்கப்படுகிறது. 

இந்த நாடுகள் சோசலிச நாடுகளா? என்கிற விவாதம் இங்கே தேவையில்லை. அதைத் தனியாக வைத்துக் கொள்வோம், இங்கே விவாதத்துக்கு இவ்வாறு கூறப்படுகிறது என்பதை மனதில் கொள்வோம்.

சோசலிசம் மிகவும் வேரூன்றியிருந்த சோவியத் ஒன்றியம் ஏன் வீழ்ச்சியடைந்தது?

சோவியத் ஒன்றியத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தன என்பது மட்டுமே பதிலாகிவிடாது. அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக எத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் ஆராய வேண்டும்.

கோர்பச்சேவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், மையத் திட்டமிடலைப் பலவீனப்படுத்தின; தனியார் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அதிக இடமளித்தன; கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வழிநடத்தும் பங்கையும் குறைத்தன. இதன் விளைவாகப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டதுடன், தேசயங்களுக்கிடையிலான ஒற்றுமையும் சிதைந்து, சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது.

மற்ற சோசலிச நாடுகளின் அனுபவங்கள், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது அல்ல என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. சோசலிசத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பல்வேறு வழிகள் இருந்தன. எனவே, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்ளும்போது, அதன் சிக்கல்களை மட்டும் ஆராயாமல், அவற்றைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீர்திருத்தப் பாதையையும் ஆராய வேண்டும்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி நமக்கு எழுப்பும் முக்கியமான கேள்வி இதுதான்: சோசலிசத்தைச் சீரமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்கள், இறுதியில் சோசலிச அமைப்பையே பலவீனப்படுத்தி வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது ஏன்?

நூலின் கருத்தின்படி, கோர்பச்சேவ் 1987–1988 காலங்களில் சீர்திருத்தங்களின் திசையை மாற்றினார். மையத் திட்டமிடலையும் அரசுடைமையையும் பலவீனப்படுத்தி, சந்தை வழிமுறைகளுக்கும் தனியார் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அதிக இடமளித்தார். அதேவேளையில், கம்யூனிஸ்ட் கட்சியின் வழிநடத்தும் பங்கும் குறைக்கப்பட்டது. இந்த மாற்றங்களை எதிர்த்து, சோசலிசப் பாதையைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மாற்றுப் பாதையைக் கட்சித் தலைமையால் முன்னெடுக்க முடியவில்லை.  இதனால் பொருளாதாரச் சீர்குலைவும் தேசியப் பிரிவினைவாதமும் தீவிரமடைந்து, இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது.

சோவியத் வீழ்ச்சியைத் தவிர்க்கவியலாததா?

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வு அல்ல.

1980களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியம் பொருளாதாரத் தேக்கம், அதிகாரத்துவப் போக்குகள், ஊழல், சர்வதேச அழுத்தம் ஆகிய சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால், இந்தச் சிக்கல்கள் மட்டுமே சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை கட்டாயமாக்கவில்லை.

முன்பே கூறியதுபோல, கோர்பச்சேவ் 1987–1988 காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் திசைமாற்றம், மையத் திட்டமிடலையும் அரசுடைமையையும் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிநடத்தும் பங்கையும் பலவீனப்படுத்தியது. 

இதனைத் தடுத்து மாற்றுப் பாதையை முன்னெடுக்க வேண்டிய கட்சித் தலைமையாலும் முடியவில்லை. இதன் விளைவாகப் பொருளாதாரச் சீர்குலைவும் தேசியப் பிரிவினைவாதமும் தீவிரமடைந்தன.

எனவே, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்பது சோசலிசத்தின் தவிர்க்க முடியாத முடிவல்ல. மாறாக, குறிப்பிட்ட அரசியல் முடிவுகளும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பாதையும் உருவாக்கிய வரலாற்று விளைவாகும் என்பதே இந்த நூலின் நிலைப்பாடு.

இறுதியான கேள்வி, சோசலிசத்துக்கு எதிர்காலம் இருக்கிறதா?

சோசலிசத்துக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதே இந்த நூலின் முடிவு. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி சோசலிசத்தின் தவிர்க்க முடியாத தோல்வியைக் குறிக்கவில்லை; சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, கருத்தியல் தவறுகளின் விளைவாகவே அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வீழ்ச்சியிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்து, வர்க்கப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரத்தையும் பொதுவுடைமை அடிப்படையிலான பொருளாதாரத் திட்டமிடலையும் வலுப்படுத்த வேண்டும். இவற்றின் வழியாகவே எதிர்காலச் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்வது கடந்தகாலத்தை மதிப்பிடுவதற்கு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் வெற்றிபெறுவதற்கும் அவசியமானது என்ற நம்பிக்கையை இந்நூல் நமக்கு அளிக்கிறது.

இதனுடன், கோர்பசேவின் அரசியல் வீழ்ச்சியையும், எல்ட்சினின் எழுச்சியையும் இந்த நூல் எவ்வாறு விளக்குகிறது என்பதையும் ஆராய வேண்டும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியில் கோர்பசேவ் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களின் பங்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் பலவீனமடைந்த விதம், எல்ட்சின் அதிகாரத்தைக் கைப்பற்றிச் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததில் வகித்த பங்கு ஆகியவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும்.

"உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" எப்படி ருஷ்யப் புரட்சியை விவரிக்கும் நாவலாக இருக்கிறதோ அதே போல் கோர்பசேவின் வீழ்ச்சியையும் எல்ட்சினின் எழுச்சியைப் பற்றி ஒரு நாவலை உருவாக்கலாம். அந்தளவுக்குப் பரபரப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

கோர்பச்சேவின் வீழ்ச்சியும் எல்ட்சினின் எழுச்சியும் சோவியத் ஒன்றியத்தின் இறுதிக்கட்ட அரசியல் மாற்றங்களில் ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகளாகும்.

கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தைச் சீரமைப்பதாகக் கூறிப் பெரெஸ்த்ரோயிகா, கிளாஸ்னாஸ்ட் ஆகிய கொள்கைகளை முன்னெடுத்தார். ஆனால், 1987–1988 காலங்களில் சீர்திருத்தங்களின் திசை மாறியதால், மையத் திட்டமிடலும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரமும் பலவீனமடைந்தன. பொருளாதாரச் சீர்குலைவு, மக்கள் அதிருப்தி, தேசியப் பிரிவினைவாதம் ஆகியவை தீவிரமடைந்தன. இவற்றைத் தடுத்து மாற்றுப் பாதையை உருவாக்குவதிலும் கட்சித் தலைமை தோல்வியடைந்தது. 

இந்தச் சூழலில், ரஷ்யக் குடியரசின் போரிஸ் எல்ட்சின் தலைவரானார்.

சோவியத் ஒன்றியத்தின் அதிபராக இருந்த கோர்பச்சேவுக்கும் சோவியத் ஒன்றியத்தின் மத்திய அரசுக்கும் எதிரான அரசியல் சக்தியாக அவர் உருவெடுத்தார். ரஷ்யக் குடியரசின் அதிகாரத்தை விரிவுபடுத்தி, சோவியத் ஒன்றியத்தின் மத்திய அதிகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தினார். 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தபோது, எல்ட்சினின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது.

இறுதியில், எல்ட்சினும் பிற குடியரசுத் தலைவர்களும் ஒன்றியத்தில் தொடர்வதற்குப் பதிலாக அதைக் கலைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 1991ஆம் ஆண்டு டிசம்பரில் சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்தது

இங்கே நாம் மிகவும் சுருக்கமாகப் பார்த்துள்ளோம், நூலில் விரிவாகவே இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் சித்தாந்தப் பலவீனத்தைப் பற்றி சுருக்கமாகப் பேசினோம், இதனுடன் ஒன்றைச் சேர்த்துப் பேச வேண்டும் அதற்கு நேரம் இல்லை. அது ஐரோப்பியச் சமூக ஜனநாயகவாதிகளின் கருத்து.

இந்த நூலின் விளக்கத்தின்படி, ஐரோப்பியச் சமூக ஜனநாயகக் கருத்துகளின் தாக்கம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் சந்தைப் பொருளாதாரத்துடன் சமரசம் செய்துகொள்ளும் ஒர் அரசியல் போக்கை வலுப்படுத்தியது. இந்தப் போக்கு, சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, முதலாளித்துவத்தின் சில பொருளாதார வழிமுறைகளையும் அரசியல் அணுகுமுறைகளையும் சோசலிசத்திற்குள் இணைக்க முயன்றது என நூல் வாதிடுகிறது. 

முக்கியமாக, இது மூன்று தன்மைகளைக் கொண்டுள்ளது.

1. மூன்றாவது பாதை என்ற கருத்து: சோசலிசத்தையும் மேற்கத்திய முதலாளித்துவத்தையும் இணைத்து, சமூகப் பாதுகாப்புடன் கூடிய சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கலாம் என்ற கருத்து கோர்பச்சேவின் அணுகுமுறையில் செல்வாக்கு செலுத்தியது. 

2. அலெக்சாண்டர் யாக்கோவ்லேவ் உள்ளிட்ட கோர்பச்சேவின் ஆலோசகர்கள் சமூக ஜனநாயகக் கருத்துகளை ஆதரித்தனர். கட்சியின் அதிகாரத்தைக் குறைத்து, சந்தை வழிமுறைகளையும் அரசியல் பன்மைத்துவத்தையும் விரிவுபடுத்தும் மாற்றங்களுக்கு அவர்கள் ஆதரவளித்ததாகத் தெரிகிறது. 

3. நூலின் மதிப்பீட்டின்படி, இந்தச் சிந்தனைப் போக்கு படிப்படியாக மையத் திட்டமிடலையும் அரசுடைமையையும் கட்சியின் வழிநடத்தும் பங்கையும் பலவீனப்படுத்தியது. 



இதுபோன்ற பலவேறு சீரழிக்கும் போக்கால் சோசலிசத்தைச் சீரமைக்கும் நோக்கில் தொடங்கிய மாற்றங்கள், இறுதியில் முதலாளித்துவம் மறுபடியும் கொண்டுவருவதற்கு வழிவகுத்தன. 

ஐரோப்பியச் சமூக ஜனநாயகத்தின் தாக்கத்தால், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தையும் முதலாளித்துவச் சந்தை முறையையும் இணைக்கும் மாற்றுப் பாதை சாத்தியம் என்ற கருத்து வலுப்பெற்றது. இதுவே இந்த நூலின் வாதமாகும். இருப்பினும், சமூக ஜனநாயகக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட அனைவரும் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்த விரும்பினர் என்று நூல் நிரூபிப்பதாக இதைப் புரிந்துகொள்ளக் கூடாது.

இருப்பினும், ஐரோப்பாவில் உருவாகியுள்ள பின்னை மார்க்சியக் கருத்துகளையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பேராசிரியர் இரா.முரளி பின்னை மார்க்சியம் அறிமுகம் என்கிற நூலை அண்மையில் எழுதியுள்ளார். அதனைத் தனியாக எடுத்துப் பேச வேண்டும்.

ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாடும், குருசேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ் ஆகியோரின் தொடர்பும், சோவியத் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாடும், குருசேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மாற்றங்களும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பங்களித்தன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, கோர்பச்சேவ் தனது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்களை மீண்டும் முன்வைத்தார் என்பதையும் அறிய வேண்டும்.

ஸ்டாலினுக்குப் பிறகு குருசேவ் முன்னெடுத்த கொள்கை மாற்றங்கள், சோசலிசக் கட்டுமானம் குறித்த மார்க்சிய–லெனினிய அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தின. பிரஷ்னேவ் காலத்தில் அதிகாரத்துவப் போக்குகளும் அரசியல் தேக்கநிலையும் வலுப்பெற்றன. கோர்பச்சேவ் காலத்தில், இவற்றைச் சீரமைப்பதாகத் தொடங்கிய பெரெஸ்த்ரோயிகா, சந்தை வழிமுறைகளுக்கு இடமளித்து, கட்சியின் வழிநடத்தும் பங்கையும் மையத் திட்டமிடலையும் பலவீனப்படுத்தியது.

இவ்வாறு, ஸ்டாலின் எதிர்ப்புக்குப் பிந்தைய கொள்கை மாற்றங்கள், அதிகாரத்துவத் தேக்கநிலை, கோர்பச்சேவின் சீர்திருத்தத் திசைமாற்றம் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஆராய்வது சோவியத் வீழ்ச்சிக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள உதவும். இருப்பினும், இவற்றை ஒரே நேர்கோட்டு தொடர்ச்சியாகக் கருதாமல், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களையும் தனித்தனியாக ஆராய வேண்டும்.

இந்த நூல் யூரி ஆண்ட்ரோபோவ் பற்றி நேர்மறையான கருத்துகளை முன்வைக்கிறது. விரிவாகப் பேசவில்லை என்றாலும் அவற்றையும் படித்தறிய வேண்டியது அவசியம் ஆகும். 

இந்த நூல் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில், நம் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள அறிவுத்துறையினர் சோவியத் ஒன்றியத்தின் வரலாறு, சோசலிசக் கட்டுமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், காலப்போக்கில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய வேண்டும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை ஒரு நிகழ்வாக மட்டும் அணுகாமல், அதற்குப் பின்னால் செயல்பட்ட பொருளாதார, அரசியல், சித்தாந்தக் காரணங்களைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். 

குறிப்பாக, கட்சியின் வழிநடத்தும் பாத்திரம், ஜனநாயக மத்தியத்துவம், கூட்டுத் தலைமையின் செயல்பாடு, திட்டமிட்ட பொருளாதாரத்தின் நிலை, சந்தை வழிமுறைகளுக்கு அளிக்கப்பட்ட இடம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எத்தகைய விளைவுகளை உருவாக்கின என்பதை ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.

இத்தகைய ஆய்வுகள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் புரிந்துகொள்வதோடு நின்றுவிடக் கூடாது. நம் நாட்டின் இடதுசாரி இயக்கங்களின் பின்னடைவுக்கான காரணங்களும் இப்பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்பதை நாம் உணர வேண்டும்.

நம்நாட்டில் பின்னை மார்க்சியக் கருத்துகள் தலையிடத்திலும் காணப்படுகிறது. சோசலிசச் சந்தை என்றெல்லாம் பேசப்படுகிறது. அதனால் மார்க்சிய அடிப்படையில் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சோவியத் வீழ்ச்சியை ஆராய்வதன்மூலம் நம்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் சுயவிமர்சனம் செய்ய வேண்டும்.

உலகச் சோசலிச இயக்கத்தின் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதுடன், நமது நாட்டின் வரலாற்று சூழல், வர்க்க உறவுகள், அரசியல் நிலைமைகள் ஆகியவற்றையும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும். அப்போதுதான் கடந்தகால அனுபவங்களை வெறுமனே புகழ்வதோ, குறை கூறுவதோ என்ற நிலைகளைக் கடந்து, தவறுகளுக்கான உண்மையான காரணங்களை அடையாளம் கண்டு, எதிர்கால அரசியல் நடைமுறைக்குத் தேவையான சித்தாந்தத் தெளிவைப் பெற முடியும்.

சித்தாந்தமே நமக்கு வழிகாட்டுகிறது. அரசியல் நடைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய சித்தாந்தத்தில் தெளிவின்மை ஏற்படும்போது, கொள்கை முடிவுகளிலும் அமைப்புச் செயல்பாடுகளிலும் தடுமாற்றங்கள் உருவாகின்றன. இந்தத் தடுமாற்றங்கள் நீடிக்கும்போது, இயக்கத்தின் இலக்குகள் குறித்த தெளிவு குறைவதுடன், அதன் வர்க்க அடிப்படையும் அரசியல் வலிமையும் பாதிக்கப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் பற்றிய இந்த நூலின் ஆய்வு நமக்கு உணர்த்தும் முக்கியமான படிப்பினை இதுவாகும்.

எனவே, சோவியத் ஒன்றியத்தின் அனுபவத்தை ஆழமாகப் படிப்பதும், அதன் வெற்றிகளையும் தவறுகளையும் அறிவியல் அடிப்படையில் மதிப்பிடுவதும், அவற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அறிவுத்துறைப் பணிகளில் முக்கிய இடம் பெறுகின்றன. 

சித்தாந்தத் தெளிவு என்பது வெறும் கோட்பாட்டு அறிவல்ல; அது சரியான அரசியல் நடைமுறைக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் தேவையான வழிகாட்டியாகும்.

"வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம்" என்கிற நூலை வெளியிட்ட தமிழ் மார்க்ஸ் அறக்கட்டளைக்கும் மொழியாக்கம் செய்த தோழர் இரா.சிசுபாலன் அவர்களுக்கும் மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை அறிமுகப்படுத்துவதற்கு வாப்பளித்த  MELS பயிலரங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலின் நிறைவு இயலில், சோவியத் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன, அதனைக்குறிப்பிட்டு எது முதன்மைக் காரணமல்ல எது முதன்மைக் காரணம் என்பதைத் தெரிவிக்கிறது.

முதலாவது சோசலிசத்தின் குறைபாடுகள் என்று கூறப்படுவது காரணமல்ல என்று இந்த நூல் கூறுகிறது. இரண்டாவதாக மக்கள் எதிர்ப்பு என்று கூறுவதை மறுக்கிறது. மூன்றாவதாக வெளிப்புறக் காரணங்கள் ஓரளவுக்கு இருந்தது உண்மைதான் ஆனால் அது முதன்மைக் காரணமல்ல என்கிறது. நான்காவதாக அதிகாரவர்க்க எதிர்ப்புரட்சி, என்பதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்கிறது இந்த நூல். ஐந்தாவதாக ஜனநாயகமின்மையும் கூடுதல் மையப்படுத்தலும் என்பதையும் இந்த நூல் காரணமாகக் கொள்ள முடியாது என்கிறது. ஆறாவதாகக் கோர்பசேவின் செயல்கள். கோர்பச்சேவின் சித்தாந்த விலகல்கள் முக்கியப் பங்கு வகித்தன என்பதைப் பொதுவாக இந்த நூல் ஏற்றுக் கொள்கிறது. அதையே விவரிக்கவும் செய்கிறது.

இந்த நூலின் இறுதி இயல் சோசலிசத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் முடிவடைகிறது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதற்காகச் சோசலிசத்தைக் கட்டியமைக்கும் முயற்சியே தோல்வியடைந்துவிட்டது என்று முடிவுசெய்ய முடியாது என்பதே நூலின் மைய வாதமாக இருக்கிறது.

நூலாசிரியர்களின் பார்வையில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றல்ல. குறிப்பிட்ட அரசியல் முடிவுகளும், சந்தைக்கு முன்னுரிமை அளித்த கொள்கை மாற்றங்களும், சோசலிசப் பொருளாதார உறவுகளைப் பலவீனப்படுத்திய செயல்முறைகளும் அதன் வீழ்ச்சிக்குப் பங்களித்தன. எனவே, சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றை ஆராய்வது சோசலிசத்தின் எதிர்காலத்தை மறுப்பதற்காக அல்ல; எதிர்காலச் சோசலிசக் கட்டுமானத்திற்குத் தேவையான படிப்பினைகளைப் பெறுவதற்காகவே என்று நூல் வலியுறுத்துகிறது.

சுருக்கமாகச் சொன்னால், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைச் சோசலிசத்தின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியாக இந்த நூல் கருதவில்லை. மாறாக, வீழ்ச்சிக்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, வர்க்க முரண்பாடுகளின் தன்மையையும் சித்தாந்தப் போராட்டத்தின் தேவையையும் புரிந்துகொண்டு, கடந்தகாலத் தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான படிப்பினைகளைப் பெற வேண்டும் என்பதே இறுதி இயல் முன்வைக்கும் மையச் செய்தியாகும்.

இந்த நூல் நம்பிக்கையூட்டும் வகையிலேயே முடிகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியிலிருந்து படிப்பினைகளைப் பெற்று, சோசலிசத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் நாமும் செயல்படுவோம். வெற்றி பெறுவோம் என்று கூறி, நூலின் அறிமுக உரையினை முடித்துக் கொள்கிறேன்.

- அ.கா.ஈஸ்வரன்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு