நெல் கொள்முதலில் தனியார் ஆதிக்கம்! பல மாதங்களாக பண நிலுவை!

அறம் இணைய இதழ்

நெல் கொள்முதலில் தனியார் ஆதிக்கம்! பல மாதங்களாக பண நிலுவை!

நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த தீபாவளி துன்பத் திருநாளாகிவிட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் பல மாதங்களாக தரப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் துக்கத்தில் உள்ளனர். மத்திய பாஜக அரசு நெல் கொள்முதலில் தமிழ் நாடு அரசை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களை வலிந்து நுழைத்ததில் ஏற்படும் விளைவுகள், விவசாயிகளை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது;

எல்லாத் தளங்களிலும் வலுவாக உள்ள அரசு கட்டமைப்பை தகர்த்து தனியாரை நுழைப்பதில் தணியாத தாகம் கொண்டிருக்கும் பாஜக அரசு, விவசாயிகள் வாழ்க்கையில் படுபாதகங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை விவசாயிகள் தலையில் வலிந்து கட்டி பெரும் மோசடிகளுக்கு வித்திட்டது போதாது என்று தற்போது நெல்கொள் முதல் செய்வதில் இருந்து அரசு அமைப்புகளை விலக்கி தனியார்களிடம் தந்ததில் நெல் கொள்முதல் செய்தும் ஐந்தாறு மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யாமல் தனியார்கள் விவசாயிகளை தவிக்க விடுகிறார்கள்.

வட்டிக்கு கடன் பெற்று விவசாயம் செய்தவர்கள், நகையை அடகு வைத்து விவசாயம் செய்தவர்கள், நெல்லைக் கொடுத்தும் பணம் கிடைக்காமல் தொல்லையில் உழல்கிறார்கள்! ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிரம் விவசாயிகளுக்கு பல்லாயிரம் கோடிகள் பாக்கி வைத்த இந்த தனியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் சொல்கிறார்கள். தமிழகம் முழுமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தும் பயனின்றி போவதால் போராட்ட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்தினால் ஒரு சிலருக்கு நிலுவைத் தொகையை விடுவிக்கின்றனரே அன்றி, ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் நிலுவைத் தொகையை தந்துவிடுவதில்லை.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள் முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதலைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) தமிழ் நாடு கூட்டுறவுத் துறை மூலம் மட்டுமே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதலை செய்ய வேண்டும் என்று இடதுசாரி அரசியல் கட்சிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வந்ததை துச்சமாக கருதி தனியாருக்கு நெல் கொள்முதல் 2025 ஆம் ஆண்டு திமுக அரசால் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அதிக எதிர்ப்பு நிலவிய காவிரி டெல்டா தவிர்த்து தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் கொள்முதல் செய்ய தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் நெல் முழுமையும் இந்நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்துவதாக கூறி மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பில் தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர்கள் எனப்படும் தனியார் அமைப்பு அனுமதியை பெற்று தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமானது இந்திய உணவுக் கழகத்திற்கு ( FCI ) முறையாக கொடுத்து வந்ததை மாற்றி, தற்போது மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற பேனரில் தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற இடைத்தரகர்கள், வியாபாரிகள் கொண்ட தனியார்கள் நெல் கொள்முதல் செய்து பணம் தராமல் இழுத்தடிப்பது விவசாயிகளை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தனியார்களுக்கு கொள்முதல் பணியாளர்களோ, கட்டமைப்புகளோ, கிடங்குகளோ, இவரிடம் கிடையாது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிடங்குகளையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணியாளர்களையும், கட்டமைப்புகளையும், பயன்படுத்தி அவர்களின் வங்கிக் கணக்கின் மூலம் பணம் பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ஒப்பந்தம் செய்து இதன் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பல கோடிகள் முன்பணமாக பெற்று அரிசியை தமிழக அரசிற்கும் முறையாகத் தருவதில்லை. விவசாயிகளுக்கும் நெல் கொள்முதலுக்கான பணம் தருவதில்லை என்றால், இவர்களுக்கு மத்திய அரசிடம் இருக்கும் செல்வாக்கே காரணமாகும்.

தமிழ் நாடு அரசே நெல் கொள்முதலில் நேரடியாக ஈடுபட்ட காலங்களில் அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் விழுந்துவிடும். ஆனால், தற்போதோ பல மாதங்கள் பணம் நிலுவையில் உள்ளது.

பல வட மாவட்டங்களில் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்ற தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி செயலாக்கக் கூட்டமைப்பானது அந்தப் பொறுப்பை  வேறு சில தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைத்தது. அந்தக் தனியார் ஏஜென்சி விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்ததில் ஐந்தாறு மாதங்களாக பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், வேளாண்துறை அலுவலகத்திற்கும்  நாளும் நடையாக நடந்தலைந்து வருகிறார்கள்.

திமுக அரசு விவசாயிகளுக்கு ஏற்படுத்திய இந்த துன்பங்கள் தாம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. ஆனால், புதிய ஆட்சியாளர்களுக்கு இந்தப் பிரச்சினை புரியவில்லையா? அல்லது மத்திய அரசின் நிர்பந்தத்தை நிராகரிக்கும் துணிச்சல் இல்லையா? என்பது தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/33306/paddy-procurement-by-private/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு