எதற்காக பாராளுமன்றம்? யாருக்காக எம்.பிக்கள்?

அறம் இணைய இதழ்

எதற்காக பாராளுமன்றம்? யாருக்காக எம்.பிக்கள்?
‘பாராளுமன்றம் என்பது மக்களுக்கானதானதல்ல’ என்பது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருகிறது. சர்வாதிகார ஆட்சியை சாத்தியப்படுத்த நகர்ந்து கொண்டிருக்கிறது பாஜக அரசு! இந்தச் சூழலில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்தோ, தெரியாமலோ பாஜக அரசின் சதிச் செயல்களுக்கு ஒத்திசைவாய் உள்ளன;

மஞ்சள் புகை வீச்சைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக ஆக்ரோஷமாக  கேள்விகள் எழுப்பினர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பான விளக்கம் தந்திருக்கலாம். அது நடக்காததால் எதிர்கட்சி எம்.பிக்கள் நான்கைந்து நாட்களாக சபையை முடக்கும் வண்ணம் போராடினார்கள்! இதைத் தொடர்ந்து  நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஏககாலத்தில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் களேபரச் சூழல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற தோதாகிவிட்டது!

டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நான்கு இளைஞர்கள் மஞ்சள் புகை கேன்களை வீசி எறிந்து, அதிரடி கவன ஈர்ப்பு  நிகழ்வை நடத்தினார்கள்! பலத்த அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நாட்டில் இளைஞர்களை மிக மோசமாக பாதித்து இருக்கும் வேலையின்மையையும், அதில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள விரத்தியும் வெளிப்பட்டன!

அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது! கொஞ்ச, நஞ்ச வாய்ப்புகளிலும் முறைகேடுகள்! அரசின் தொழில் கொள்கையால் சிறுகுறுந்தொழில்கள் நசிவு! கார்ப்பரேட்களுக்கு சலுகை! விவசாயத்தை அழிக்கும் அரசின் சட்ட திட்டங்கள், தனியார் நிறுவனங்களின் உழைப்பு சுரண்டல்!

இவற்றை உரக்க பேசவே இந்த இளைஞர்கள் அந்த அத்துமீறல் வடிவத்தை ஆபத்தை பொருட்படுத்தாமல் கையாண்டுள்ளனர் எனத் தெரிய வந்தது! யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை.

இவர்கள் ஆறு பேருக்குமே ஆதர்ஷமாக இருந்துள்ளது பகத்சிங் தான்! இவர்கள் அனைவர் மீதும் கொடூரமான ஊபா சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த நாட்டில் வேலையின்மையாலும், முறைகேடுகளாலும், சர்வாதிகார ஆட்சியாலும் இளைஞர்கள் கொந்தளிப்பின் விளிம்பில் உள்ளதையே மேற்படி சம்பவம் உணர்த்துகிறது! ஆனால், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி , எதிர்கட்சி என எந்த உறுப்பினர்களுமே இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வன்முறை சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் யாரையும் தாக்கவில்லை. அத்துமீறி நுழைந்ததும், வண்ணப் புகையை பரப்பியதும், கோஷமிட்டதும் அவர்கள் செய்த அத்துமீறல்களாகும்! இந்த ஆட்சியின் பாதிப்பு எவ்வளவு மோசமாக இந்த இளைஞர்களை பாதித்து இருந்தால், இந்த அத்துமீறல்களுக்கு இவர்கள் துணிந்து தங்கள் எதிர்காலத்தையே தொலைத்துவிடக் கூடிய இந்த ஆபத்தான வழிமுறையை செயல்படுத்தி இருப்பார்கள் என்ற கோணத்தில் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடக்காமல் போனது துரதிர்ஷ்டமே! பாதுகாப்பு குறைபாடு விவாதிக்கப்பட்ட அளவுக்கு இந்த விவகாரமும் விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் சில மசோதாக்களை இந்த சந்தடியில் விவாதங்களே இல்லாமல் பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டதாகும்!

சர்ச்சைக்குரிய மசோதாக்கள்;

தபால் மசோதா; முக்கியமாக தனி நபர் சுந்ததிரத்தை கடுமையாக பாதிக்கும் தபால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது அரசாங்கத்திற்கு யாருடைய கடிதத்ததையும் இடைமறித்து பிரித்து படிக்கும் அதிகாரத்தை தருகிறது!

மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள்;

இந்திய தண்டனைச் சட்டம், 1860, இந்திய சாட்சியச் சட்டம், 1872 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 ஆகியவற்றுக்குப் பதிலாகமூன்று புதிய மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, ( பிஎன்எஸ்-ஐபிசி), பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் மசோதா, (BSA-IEA)  பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா (BNSS-CrPC) ஆகிய்வற்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை சுதந்திரங்களை பறிக்கவும், ஜனநாயகத்தை அழிக்கவும் இவை வழிவகை செய்கின்றன! முன்னரே இதற்கு கடுமையான ஆட்சேபனைகள் எதிர்கட்சிகளிடம், சமூகத் தளத்திலும் வெளிப்பட்ட நிலையிலும் கூட நமது அரசியலின்  தோற்றத்தை ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு மாற்றும் தன்மையுள்ள 12 சட்ட மாற்றங்கள் செய்துள்ளனர். மாற்றுக் கருத்தை முடக்கவும், எதிர்ப்பை மூர்க்கமாக அழிக்கவும், மற்றும் பொது உரையாடலை சாத்தியமற்றதாக்கவும் இவை வழி வகை செய்கின்றன!  இதன் மூலம் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்க மறுக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்குத் தொடுப்பது, சிறையில் அடைப்பது ஆகியவற்றை எளிமைபடுத்தி உள்ளனர்.

தலைநகர் தில்லி பிரதேச மசோதா;

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்குக்கான உரிமைகளை பறிக்கும் சட்டமாகும்.

இதுமட்டுமின்றி, நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிகர கூடுதல் செலவினமாக ரூ58,378 கோடிகள் செலவிடப் பட்டமையை கேள்வியில்லாமல் ஒப்புதல் பெற்றுக் கொண்டது பாஜக அரசு!

தொலை தொடர்பு மசோதா;

தேசிய பாதுகாப்பு நலன், வெளிநாட்டு நாடுகளுடன் நட்புறவு, கலவரம் அல்லது போர்  போன்ற நெருக்கடி காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள், தொலைத்தொடர்பு நெட்வொர்க் அல்லது அதன் ஒரு பகுதியை முடக்க – தொலைத்தொடர்பு சேவைகளின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை, அல்லது செயல்பாட்டை நிறுத்திவைக்க  – இந்த மசோதா மத்திய அரசை அனுமதிக்கிறது. அத்துடன் தவறு செய்வராக கருதப்படுவோருக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கும் வழி வகுக்கிறது.

கேள்விகளுக்கு பதில் கிடைக்காதாம்;

இதற்கெல்லாம் சிகரமாக இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் எழுப்பி இருந்த கேள்விகள் எதற்கும் அமைச்சர்கள் பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அவையில் எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து பூர்வமாகவோ, வாய் மொழியாகவோ எந்த விதத்திலும் பதில் அளிக்க தேவையில்லாமல் அவை அனைத்துமே பதில் அளிக்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன!

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி.,க்கள், நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழைய முடியாது. அந்த எம்பி.,க்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாடாளுமன்ற குழுகளின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட எந்த நோட்டீஸ்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அந்தக் காலக்கட்டத்தில் நடைபெறும் எந்த குழுக்களின் தேர்தல்களில் அவர்களில் வாக்களிக்க முடியாது.

பாராளுமன்றம் என்பது அறிவார்ந்த விவாதங்களுக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவுமான இடமில்லை என பாஜக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. எம்பிக்களுக்கே இந்த நிலைமை என்றால், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்த ஆக்ரோஷமான அணுகுமுறைகள் அடக்குமுறை சட்டங்களை மேன்மேலும் வலுப்படுத்தவே பாஜக அரசுக்கு துணை புரியும். ஆட்சியாளர்களின் அணுகுமுறையால் நாட்டில் நிலவும் ஒரு கொடூரமான சமூக நோயின் விளைவே இந்த இளைஞர்கள் வழியே புலப்பட்டுள்ளது என்ற புரிதல் எந்த எம்.பிக்குமே இருப்பதாகத் தெரியவில்லை! இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கூட பாராளுமன்ற சம்பவம் குறித்த ஆரோக்கியமான பார்வையோ, விவாதமோ இல்லை. எல்லா கட்சிகளுக்கும் அதிகாரத்திற்கான நகர்வுகள் மட்டுமே முக்கியமாகிவிட்டது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

aramonline.in /16068/parliament-m-ps-suspended/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு