5 ஆண்டுகளாக செயல்படாத மாநில ஆதிதிராவிடர் நலக் குழு - ஆர்டிஐ மூலம் தகவல்
இந்து தமிழ்

5 ஆண்டுகளாக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயல்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெற்ற தகவலில் தெரிய வந்துள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்த் தும் நோக்கில் 1988-ம் ஆண்டில் சமூக நலத்துறையிலிருந்து பிரித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை தனித்துறையாக அமைக்கப் பட்டது.
இத்துறையின் மூலம் வீடுகள் பராமரிப்பு, கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இத்துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி முழுமையாக செல விடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு தீர்வு காண 1995-ம் ஆண்டு மாநில ஆதிதிராவிடர் நலக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு நிதி ஒதுக்கீடுகளை, செலவினங்களை கண்காணிக்கும். கடைசியாக இக்குழு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செயல்பட்டது. அதன் தலைவராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், துணைத் தலைவராக அரசு செயலர், இயக்குநர்கள் உள்ளடக்கிய 34 பேர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் காலம் 2020-ல் முடிவடைந்த பிறகு புதிய குழு அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இக்குழு செயல்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் கூறுகையில், 5 ஆண்டுகளாக இக்குழு செயல்படாததால் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறையாக மக்களை சென்றடைந்ததா என்பதை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் முழுமையாக சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக மாநில ஆதிதிராவிடர் நலக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- இந்து தமிழ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு