திருட்டுப் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தும் சதியா?

அறம் இணைய இதழ்

திருட்டுப் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தும் சதியா?

தேர்தல் களத்தில் மிதமிஞ்சிய பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டதே  தேர்தல் பத்திரங்கள் பெறும் திட்டம்! கார்ப்பரேட்களை களவாட அனுமதித்து, அதற்கு பிரதிபலனாக  பெரும் நிதி பெற்றுக் கொள்வதை, சட்டபூர்வமாக்க செய்யப்பட்ட சதியே ‘தேர்தல் பத்திரங்கள்’ என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை;

‘தேர்தல் நடைமுறையில் பணத்தின் பங்கை கணிசமாக குறைப்பதன் மூலமாகவே ஜனநாயகம் உண்மையில் மலர முடியும்.  அப்படி தேர்தலின் போது புழங்கும் பணம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? எவ்வளவு வந்தது? என்பதை கமுக்கமாக மறைக்கக் கூடாது’ என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

பணத்தின் தேவையையும், இன்றியமையா அவசியத்தையும் உணர்ந்த சாதாரண அரசியல்வாதிகள் அதை வசப்படுத்துவத்கு தங்கள் கொள்கை, மானம்,  மரியாதை ஆகியவற்றை விட்டுக் கொடுத்து வெற்றி அடைய முயல்கின்றனர். வேறு சில அரசியல் தலைவர்களோ, தங்கள் வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள தமக்கு தேவையான பணத்தை திரட்ட வழிவகுக்கும் போதே, எதிராளிகள் கையில் பணம் போகக் கூடாதென்ற குறிக்கோளுடன் திட்டங்களை தீட்டுவர்.

‘’தேர்தல் களத்தில் புழங்கும் கறுப்பு பணத்தை ஒழிக்கப் போகிறோம் , தேர்தல் நிதி அளிப்பை வெளிப்படையாக்குகிறோம், அனைத்து அரசியல் நன்கொடைகளையும் வங்கிகள் மூலமாகவே அளிக்க வகை செய்கிறோம்’’

என்று முழங்கி, மோடியும், அமித்ஷாவும், நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியும் தேர்தல் பத்திர -Electoral Bonds- எனப்படும் தேர்தல் பத்திரங்கள் பெறும் திட்டத்தை  2018-ல் கொண்டு வந்தனர். இதன்மூலம் கறுப்பு பண ஆதிக்கமும், திரைமறைவு நன்கொடைகளும், மறைமுக நன்கொடைகளும் களையப்பட்டு, வெளிப்படையான, சமநிலைகொண்ட தேர்தல் களமும், போட்டிகளும் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்ததை  பலரும் நம்பினர்.

ஆனால், நடந்தது என்ன?

நாடாளுமன்ற மேலவையை எதிர்கொள்ள பயந்து “நிதி மசோதா” என்ற கோதாவில், தேர்தல் பத்திர திட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது மோடி அரசு. இதற்காக வருமான வரிச்சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம், கம்பெனிகள் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஆகிய சட்டங்களில் “திருத்தங்கள்” கொணர்ந்து தேர்தல் பத்திர திட்டத்தை சட்டமாக்கியது.

‘தேர்தல் பத்திரங்கள் ஒரு ‘பிராமிசரி நோட்டு’ போல, ஒப்பு கொடுக்கப்பட்ட ஓலையாகும். இதை யாரும், எந்த இந்திய குடிமகனும், எந்த இந்திய நிறுவனமும் வாங்கலாம், அவ்வாறு வாங்கப்பட்ட பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்’ என்று இத்திட்டம் கூறுகிறது.

‘இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பத்திரங்கள் பற்றி பொது மக்களுக்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ, அல்லது வருமான வரித்துறைக்கோ பத்திரம் வாங்குபவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை’ என இச் சட்டம் கூறுகிறது.

யார் , எவ்வளவு  பத்திரங்கள் வாங்கினர்? எந்த கட்சிக்கு இவை நன்கொடையாக அளிக்கப்பட்டன? என்ற விவரங்கள் யாருக்கும்  தெரிவிக்கப்பட வேண்டியதில்லை! அவை, ரகசியமாக ஸ்டேட் பாங்கில் பாதுகாக்கப்படுமாம்!

‘இந்திய கம்பெனிகளுக்கு  லாபத்தில் 7.5% வரை நன்கொடை அளிக்கலாம்’ என முன்பிருந்த, வரம்பை உடைத்து, ‘எவ்வளவு விழுக்காடும் நன்கொடை அளிக்கலாம், நட்டத்தில் நிறுவனங்கள் இயங்கினாலும் நன்கொடை அளிக்கலாம்’ என மடை திறந்து விட்டது இந்த திட்டம்.

முன்பு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, வெளிநாட்டு நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள துணை நிறுவனங்கள் (subsidiaries) மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நன்கொடை அளிக்க இந்தச் சட்டம் வகை செய்தது.

இதுவரை நடந்துவந்த கள்ளத் தனமான நடைமுறையை அனாமதேயமாக்கி, திரைமறைவில் இதுவரை நடந்துவந்த இத்தகைய பண பரிமாற்றத்தை சட்டபூர்வமாக மாற்றியதோடன்றி , மக்களிடமிருந்து இதை இருட்டடிப்பு செய்தது இந்த சட்டம்.

இதன்  மூலம், ”நன்கொடையாளர்களின் பெயர்களை அறிந்து கொள்வதோ, அதை வெளியிடக் கோருவதோ மக்களின் அடிப்படை உரிமை அல்ல” என அரசு தலைமை வழக்கறிஞர்-அட்டர்னி ஜெனரல்- வெங்கட ரமணி வாதிட்டார்.

இதை மறுதலித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களான பிரசாந்த பூஷன், கபில் சிபல் ஆகியோர் ”நன்கொடையாளர்களின் பெயர்களை மறைத்து அனாமதேய நடைமுறையை ஏற்படுத்துவது, அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று அறிந்து கொள்ளும் மக்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாகும்’’ என்றனர். இது அரசியல் சாசன பிரிவு 19(1)( a) அளித்துள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

இரண்டாவது, வெளிப்படைதன்மை இல்லாமல், அனாமதேயமாக இத்திட்டம் அமைந்துள்ளதால், இது ஊழலை ஊக்குவிக்கிறது. இது அரசியல் பிரிவு 21ஐ மீறும் செயலாகும்.

இதுவரை விற்கப்பட்ட பத்திரங்களில் 50% ஒன்றியத்தில் ஆளுகின்ற கட்சிக்கும், மீதியுள்ளவை மாநிலத்தில் உள்ள ஆளுங் கட்சிகளுக்குமே சென்றுள்ளன. வெறும் 1% நன்கொடை பத்திரங்களே எதிர்கட்சிகளுக்கு கிடைத்துள்ளன’’ என்பதை பிரசாந்த பூஷன் சுட்டிகாட்டினார்.

இவை யாவுமே ” கைமாறு கருதி” அளிக்கப்பட்ட நன்கொடைகளே என நம்ப இடமுள்ளது,

விற்கப்பட்ட  தேர்தல் பத்திரங்களில் 95% மேல் ரூ.1கோடி மதிப்புள்ள பத்திரங்களே ஆகும்! எனவே, இவற்றை வாங்கியிருப்பதும் கார்ப்பரேட் முதலாளிகளே என்பது தெளிவாகிறது!

இறுதியாக, ”இத்திட்டம்  தேர்தல் களங்களிலும், வெளியிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடையே ஒரு சமமான ஆடுதளத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 5,000 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற ஒரே கட்சி ஆளும் பா ஜ க தான். இப்படி ஜனநாயகத்தை குதறி எறிந்து சிறுமைப்படுத்தியுள்ளது இத்திட்டம்” என வாதிட்டனர்.

ஆனால், அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”நன்கொடையாளர்களை அரசியல் கட்சிகள் பழி வாங்கக் கூடாது என்பதை மையமாக வைத்தே, இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றார். ”எனவே, பெயர்களை ரகசியமாக வைத்திருப்பது அவசியம்’’ என்றார்.

“இந்த ரகசியம் அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் தெரியக்கூடாது” என்றார். ஸ்டேட் பாங்க் தன்னாட்சியுடைய அமைப்பு, அரசு அதை கட்டாயப்படுத்த முடியாது’’ என்றார்.

“தேர்தல் பத்திர நன்கொடைகள் அனைத்தும் வெளிப்படையாக வங்கி கணக்கு மூலமாகவே கே ஒய் சி நடைமுறையிலேயே பெறப்படுவதால் கறுப்பு பணம் ஒழிக்கப்படுகிறது” என்றார்.

அப்பொழுது நீதிபதிகள் குறுக்கிட்டு, ” நீங்கள் கூறும் ரகசியத் தன்மை இத்திட்டத்தில் முழுமையாக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ரகசியத் தன்மையாகவே இத்திட்டம் உள்ளது. ஸ்டேட் பாங்கு நிர்வாகத் தலைமைக்கும், அதனுடைய நீட்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இந்த ரகசியம் தெரியும்! ஆனால், மக்களுக்கோ பிற கட்சிகளுக்கோ இது தெரிவதில்லை, மறைக்கப்படுகிறது” என்றனர்.

“தேர்தல் நடைமுறையில் ரகசியம் தேவை என்று கூறுவது , யாருக்கு வாக்களித்தோம் என்பது ரகசியமாக இருக்க வேண்டுமே ஒழிய, யார் யார் எங்கிருந்து எவ்வளவு நன்கொடை பெற்றனர் என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்றனர்.

நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலையும், நன்கொடை பெற்ற கட்சிகள் கணக்கையும் ஒப்பிட்டு பார்த்தால், – Mix and Match மூலம் – எந்தக் கட்சி, யாரிடமிருந்து எவ்வளவு நன்கொடை பெற்றனர் என்பதை அறிய முடியும்.

தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் பெற்ற நன்கொடை பட்டியல் (ஒவ்வொரு கட்சியும் பெற்ற நன்கொடைத் தொகை அளவு ) உள்ளதா? என நீதிபதிகள் வினவினர். தேர்தல் ஆணையம் இந்த பட்டியலை இதுவரை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

”அந்தரங்க உரிமை(right to privacy) முக்கியமானது” என்ற அரசு தரப்பு வாதத்திற்கு எதிராக மனுதாரர் தரப்பில், ”அந்தரங்க உரிமை தனி மனிதனுக்கு தான் பொருந்துமே ஒழிய, கார்ப்பரேட் நிறுவனத்திற்கு (எந்த ஒரு நிறுவனத்திற்கும்) பொருந்தாது” என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், ‘’இந்த நன்கொடைகள் மக்களிடமிருந்து மட்டும் மறைக்கப்படவில்லை, கம்பெனி பங்குதாரர்களிடமிருந்தும் (share holders)  மறைக்கப்படுகிறது, இது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது’’ என கபில் சிபல் குறிப்பிட்டதை நீதிபதிகள் ஆமோதித்தனர்.

‘’கம்பெனிகள், தங்களது கடந்த மூன்றாண்டுகளின் சராசரி லாபத்தில் 7.5% மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றியது ஏன்? நூறு சதவிகித லாபத்தையும் நன்கொடையாக கொடுக்க அனுமதிப்பதா?, நட்டத்தில் நிறுவனங்கள் இயங்கினாலும் நன்கொடை கொடுக்கலாமா?, பங்குதாரர்கள் இந்த நடைமுறையை ஏற்றுக் கொள்வரா?  என நீதிபதிகள் கேள்விக் கணைகள் தொடுத்தனர். இந்த முறை-தேர்தல் பத்திர திட்டம்- தகவல் சேகரிப்பில் பெரும் ஓட்டையை (information blackhole) ஏற்படுத்தியுள்ளது’’ என தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் -தேர்தல் இல்லாத போதும்- விற்கப்படும் இந்த பத்திரங்கள் ஆற்றும் பங்கு வெளிப்படையாக இல்லை.

எனவே, இங்கு மறைமுகத்தன்மையும், கைமாறு எதிர்பார்க்கும் நிலையும் வளர்கிறது. நேர்மையும்,வெளிப்படைத் தன்மையும் விரட்டப்படுகிறது.

ஊழலையும், கறுப்பு பணத்தையும் ஒழிப்பதற்குப் பதிலாக அவற்றை ஊக்குவிக்கும் விதமாக இத் திட்டம் உள்ளது. திட்டங்களின் நோக்கம் வேண்டுமானால் சிறந்ததாக இருக்கலாம். ஆனால் விளைவுகள் நேர்மாறாக உள்ளன’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, ‘’இந்த திட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தால், நிலைமை 2017க்கு முன்பு இருந்த மோசமான நிலைக்கு திரும்பும்’’ என்றார் .

நீதிபதிகளோ, ‘’முன்பாவது ரூ.20,000/-க்கு மேல் கொடுப்பவர்களின் பெயர்,முகவரி தெரியும். நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடை அளவு (7.5%) வரையறுக்கப்பட்டு, யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தெரியும். ஆனால், இன்று எல்லாமே அனாமதேயமாக, ஆளுங்கட்சிக்கு மட்டும் தெரியக் கூடிய ‘மூடுமந்திரமாக’ உள்ளது’’ என்றனர்.

‘’அரசு,புதிய வெளிப்படையான திட்டத்தை கொண்டுவருமா?’’ என்றும் வினவினர்.

”கார்ப்பரேட்டு நிறுவனங்கள் தங்களது பினாமி -ஷெல் கம்பெனிகள்- நிறுவனங்கள் மூலம் கறுப்பு பணத்தை தூய்மை பணமாக மாற்றுவதை போலவே, தேர்தல் பத்திரங்கள் மூலம், ஷெல் கம்பெனிகளின் உதவியால் கணக்கிற்கு வராத பணத்தை நன்கொடையாக அளித்து கார்ப்பரேட்டுகள் காரியம் சாதிக்கின்றன” என்ற வாதத்திற்கு அரசு தரப்பு பதிலளிக்கவில்லை.

ஐந்து நெடிய ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கை நீதிபதிகள் ஒய்.வி. சந்திர சூட், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், பரடிவாலா, மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இப்பொழுது விசாரித்து, வாதங்களை கேட்டு தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் இந்த அனாமதேய தேர்தல் பத்திர திட்டத்தை நீதிமன்றம் நிராகரிக்குமா?

ஆளுங்கட்சிக்கு மட்டுமே உதவும் இந்த கருப்பு பண மடைவெள்ளத்தை நீதி மன்றம் தடுக்குமா? சுதந்திரமான, நேர்மையான தேர்தல்முறையும், ஜனநாயக நடைமுறையும் பாதுகாக்கப்படுமா?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

அறம் இணைய இதழ்

aramonline.in /15629/electoral-bond-bjp-govt-fraud/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு