திமுக ஆட்சியில் தொடரும் இயற்கை பேரிடர்கள்...
அறம் இணைய இதழ்
இங்கே இன்னொரு வயநாடு பேரழிவு தடுக்கப்படுமா?
மலையே சிவனாகவுள்ள திருவண்ணாமலைக்கு வாய் இருந்தால் கதறி துடித்திருக்கும். மலை எங்கும் பல்லாயிரக்கணக்கில் கட்டிடங்கள், குடியிருப்பு வணிக வளாகங்கள் கடந்த கால் நூற்றாண்டில் எப்படி எழுந்தன? தற்போது இயற்கையின் சிறு முணுமுணுப்புக்கே 7 பேர் பலி. இன்னொரு பெரும் பேரிடரை பார்க்க வேண்டுமா?; முழு விவரம்;
சிவனின் அக்னி தளங்களில் உலகப் புகழ் பெற்றது திருவண்ணாமலை. இந்த மலையை தெய்வீகமானதாகக் கருதி நாள் தோறும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து கிரிவலம் போகிறார்கள். கார்த்திகை தீபத்தின் போதோ சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். கோவிலைக் காட்டிலும் மலையே பக்தர்களுக்கு பெரும் ஈர்ப்பாகும். அதனால், 14 கீ.மீட்டர் கிரிவலப் பாதையில் நடப்பதை பக்தி சிரத்தையோடு செல்வது சிவ பக்தர்கள் வழக்கம்.
இந்த மலை 1990 வரை அதன் இயல்பு கெடாமல் தான் இருந்தது. அதன் பிறகு ரஜினி, இளையராஜா போன்ற திரையுலகப் பிரபலங்கள் இந்த மலைக்கு வந்து போனதையடுத்து ஒரு புது மவுசு ஏற்பட்டது. 1990 கள் தொடங்கி பெருந் திரளான மக்கள் திருவண்ணாமலையை கிரிவலம் செய்யத் தொடங்கினார்கள். நாளடைவில் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அதிகமாக வர ஆரம்பிக்கவே பெரும் சுற்றுலாத் தளமானது.
சுற்றுலா தளத்தின் இயல்புக்கு ஏற்ப வணிக வளாகங்களும், லாட்ஜுகளும், ரிசார்டுகளும் பெருகின. ஊரின் மையமான ஈர்ப்பாக மலை இருப்பதால் மலையை மெல்ல,மெல்ல விழுங்க ஆரம்பித்து மலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர்.
Are you considering real estate investment in Tiruvannamalai? Well, you’re in the right place! Tiruvannamalai, known for its rich cultural heritage and the famous Arunacheleswar temple is emerging as a promising destination for property investment. With its blend of spiritual significance and developing infrastructure, it offers a unique opportunity for investors. Plese come.
இப்படி ரியல் எஸ்டேட்காரகள் விளம்பரங்கள் போட்டு நில முதலீட்டுக்கு ஆள் சேர்த்தார்கள்!
இப்படி ஆக்கிரமிப்பவர்கள் பின்புலத்தில் அரசியல் செல்வாக்கு இருந்தது. ரியல் எஸ்டேட் மாபியாக்களும், பல்துறை அரசு அதிகாரிகளும் சேர்ந்தே ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழி சமைத்து தந்தனர். இதில் மக்களும் கை கோர்த்தனர்.
குறிப்பாக மலை என்பது வனத் துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அதே சமயம் இது ஆன்மீகம் சம்பந்தட்டதாக இருப்பதால் இந்து அற நிலையத் துறையும் வருகிறது. பத்திர பதிவுத் துறையும் வருகிறது. கட்டிட ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதால் உள்ளாட்சி நிர்வாகமும் வருகிறது…இப்படி பல துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மலையில் 600 அடி உயரத்திற்கு இவ்வளவு கட்டிடங்கள் இங்கு எழுந்திருக்க வாய்ப்பே இல்லை.
திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட மூத்த பத்திரிகையாளர் இனியவனிடம் பேசிய போது, நான் சிறுவயதில் இருக்கையில் மலையில் ஆக்கிரமிப்பு இல்லை. 90 களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்டிடங்கள் மலையில் முளைத்தன. ரியல் எஸ்டேட் தாதாக்கள் மலை அடிவாரத்தை முதலில் ஆக்கிரமித்தனர். இவர்களுக்கு பட்டா போட்டு நிலம் தந்ததில் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கும் உள்ளது. பின்னர் குடியிருப்பு வளாகத்திற்கு பிளாட் போட்டு விற்றனர்.
குடியிருப்புகள் மலைப் பகுதியில் அதிகமானதும் சாலை வசதி செய்து தரப்பட்டது. வீடுகளுக்கு மின் இணைப்புகள் தரப்பட்டன. குடி நீர் வசதிகள், கழிவு நீர் வெளியேறும் வசதிகள் செய்யப்பட்டன. தேர்தலின் இந்த மக்களின் ஓட்டு வங்கிக்காக அரசியல்வாதிகளும் உதவினர். எனவே, மக்களை மட்டும் குற்றவாளியாக்க முடியாது. மக்களும், அதிகாரிகளும் கூட்டுக் களவாணிகளாக செயல்பட்டதால் தான் வளர்ச்சி என்றதன் பெயரால் இயற்கை வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.
சமீப காலமாக திருவண்ணாமலையில் வட இந்தியர்களும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மக்களும் அதிக அளவில் நிலபுலன்களை இங்கு வாங்கி குவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலையில் லட்சங்களில் இருந்த நில மதிப்பு தற்போது கோடிகளுக்கு எகிறியுள்ளது. மலையே சிவனாக கொண்ட புனித இடத்தை ஆக்கிரமிக்கத் துணிந்தவர்களை விட்டால், அண்ணாமலையாரின் மடியிலேயே கூட குடியிருப்பை கட்டி விடுவார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு அன்சுன் மிஸ்ரா என்ற மாவட்ட ஆட்சியர் இருந்த போது நான் மலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகைப் படங்களைக் கொண்டு போய் அவரிடம் தந்தேன். அதில் மலை அடிவாரத்தில் இருந்த 60 நீர் நிலைகள் காணாமல் போயுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்த நீர் நிலைகளுக்கு வந்து சேரும் பாதைகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளதையும் தெரிவித்தேன். அந்த புகைப்பாட்ங்களைப் பார்த்த அவர், உடனே கீழ் நிலை அதிகாரிகளை அழைத்து விசாரித்து, சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இதைத் தொடர்ந்து மலையில் வீடு கட்டி குடியேறியவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசியல்வாதிகள் மேலிடத்தில் அழுத்தம் தந்து அவரை இங்கிருந்து தூக்கி விட்டனர். அவரை ஒரிரு வருடங்கள் அனுமதித்திருந்தால், அன்றே மலைக் கட்டுமானங்களை முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்’’ என்றார் இனியன்.
தற்போதைய நிலச்சரிவு என்பது மலையில் 3000 அடி உயரத்தில் இருந்து ஏற்பட்டுள்ளது. இது நான்கு இடங்களில் ஏற்பட்டுள்ளது. வ.உ.சி நகரில் இரு இடங்களிலும், சோமவாரம் குளம் மேல் பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவல பாதையில் உள்ள சட்ட விரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, ‘முதல் அமர்வு’ முன் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது கவனத்திற்கு உரியதாகும்.
மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், “கிரிவல பாதை, மலையை ஆக்கிரமித்த நபர்களுக்கு சட்ட விரோதமாக பட்டா வழங்கப்பட்டு உள்ளது. எனவே, விதி மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவல பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில், நில நிர்வாக ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., அறநிலையத் துறை இணை ஆணையர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பட்டாக்களை ரத்து செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, இப்பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்!
இவை எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படும் என்பது தெரியாது. ஆக்கிரமிப்புகளால் ஆதாயம் அடைந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு இதில் கிடைப்பது கடினம். ஆகவே, அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கத் தக்க சர்வாதிகாரத் தலைமை பண்பு உள்ள ஆளுமையை இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பயன்படுத்தினால் ஒழிய தீர்வில்லை.
இது தவிர புவி அதிர்வு அலையை கணக்கிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது இந்த நிலச்சரிவு எதனால் ஏற்பட்டது என்பதை தெளிவாக்கி கொள்ள உதவும். நிலைமை மோசமாகி இன்னொரு வய நாட்டை நாம் இங்கு தமிழகத்தில் காண்பதற்கு முன்பு உடனடியாக செயல்பட்டால் நலமாக இருக்கும் என சூழலியல் அர்வலர்கள் கூறுவதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(சாவித்திரி கண்ணன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/20047/thiruvannamalai-hill-landslide/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு