உலக மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்திய சதுரங்க ஆட்டமும், இஸ்ரேல் - ஈரான் யுத்தமும்
சமரன்
இஸ்ரேல், ஈரான் நாடுகள் இரண்டும் மத்திய கிழக்கு பிராந்திய துணை மேலாதிக்க சக்திகாளாக தொடர்ந்து மேலாதிக்கம் செய்து வருகின்றன. இச்சக்திகளிடையே தொடர்ந்து பல தசாப்தங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்த துணை மேலாதிக்கத்திற்கான மோதல் அந்நாட்டின் தரகு முதலாளித்துவ வர்க்க இயல்பிலிருந்து நீரு பூத்த நெருப்பாக தொடர்ந்து தகித்து வருகிறது. இந்த துணை மேலாதிக்கத்திற்கான மோதல் அதன் சொந்த தேசிய நலனிலிருந்து கனன்றுக் கொண்டிருக்கும் நெருப்பல்ல. அது ஏகாதிபத்திய தரகு சேவையிலிருந்து, ஏகாதிபத்தியங்கள் எண்ணெய் ஊற்றி வார்க்கும் நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளின் போட்டிக்கும், நெருக்கடிக்கும், இலாப வெறிக்கும் சேவை செய்ய துணை மேலாதிக்க சக்திகளை மோதவிடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இஸ்ரேலுக்குப் பின்னின்று அமெரிக்காவும், ஈரானுக்குப் பின்னின்று இரசிய-சீன முகாமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் - ஈரான் போர் உண்மையில் அமெரிக்க - ஐரோப்பா (E3) Vs இரசிய-சீன முகாமின் போரே.
உலக மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்தியங்களின் போட்டியின் ஒரு பகுதியே இந்த வருட ஜூனில் நடந்த இஸ்ரேல் - ஈரானுக்கிடையிலான போர். கடந்த ஓரிரு வருடங்களாக உலகத்தில் பல இடங்களில் போர்கள் நடந்து வருவதையும் போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கண்டு வருகிறோம். இரசிய X உக்ரைன் (2022), 2023ல் இஸ்ரேல் X ஹமாஸ் (காசா, பாலஸ்தீனம்) - ஹிஸ்புல்லா (லெபனான்) - ஹௌதிகள் (யேமன்), இஸ்ரேல் X ஈரான் (2025), இந்தியா X பாகிஸ்தான் (2025), தாய்லாந்து X கம்போடியா (2025), அசர்பைஜான் X அர்மேனியா (2025), கொசோவா X செர்பியா, எகிப்து X எதியோபியா, ருவாண்டா X காங்கோ, 2024 டிசம்பரில் சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத்-இன் ஆட்சி கவிழ்ப்பு, மற்றும் சீன X தைவான் மோதல், ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர், புர்க்கினோ பாசோவின் ஆட்சி கவிழ்ப்பு, இன்று புகைந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் வெனிசுலா ஆட்சி கவிழ்ப்பு சதி என்று மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தின் அமெரிக்கா என்று எங்கும் போர் மேகங்களும் ஆட்சி கவிழ்ப்புகளும் சூழ்ந்துள்ளன. ஏன் திடீரென்று உலகம் கொந்தளித்து நிற்கிறது? ஒவ்வொரு பகையும் மோதலுக்கான காரணங்களும் பல தசாப்தங்கள் இருப்பினும் திடீரென்று இந்த சில வருடங்களில் பெரும் எண்ணிக்கையிலான மோதல்களுக்கு காரணம் என்ன? ஏனென்றால் உலக ஏகாதிபத்தியங்களுக்கு இடையே பலத்தில் பெரும் சமனின்மை உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முகாமின் மேலாதிக்க வீழ்ச்சியும் இரசிய-சீன முகாமின் மேலாதிக்க வளர்ச்சியும் உலக நாடுகளின் சந்தைகளையும், கச்சாப் பொருட்களின் மீதான ஆதிக்கத்துக்கான போட்டியையும் அதிகரித்துள்ளது. இந்த ஏகாதிபத்திய போட்டியில், அதன் தரகு சேவை நாடுகளும் உள் இழுக்கப்படுகின்றன. இதுவே இந்த பதிலிப் போர்களும் பிராந்திய துணை மேலாதிக்கப் போர்களும் ஆட்சி கவிழ்ப்புகளாக வெளிப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் பலத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், உலக சந்தை மற்றும் கச்சாப் பொருள் மேலாதிக்கத்தில் மறுபங்கீட்டை நோக்கி செல்கின்றன. ஏகாதிபத்தியம் என்றாலே நிதி மூலதன ஆதிக்க கொள்ளையே. உலக சந்தை மேலாதிக்கம் மற்றும் கச்சாப் பொருள் மேலாதிக்கம் என்றால் மூன்றாம் உலக நாடுகள் மீதான புதிய காலனித்துவ கொள்ளையில் மறுபங்கீடே இந்த போர்கள். அப்படித்தான் இஸ்ரேல் X ஈரான் போர் நடைபெற்றுள்ளது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
இஸ்ரேல் X ஈரான் போர்:
2025 ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரானின் முக்கிய அணுஆயுத மற்றும் இராணுவ வசதிகள் மீது திடீர் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" (Operation Rising Lion) என்று அழைக்கப்பட்டது. இதில் ஈரானிய இராணுவத் தலைவர்கள், அணுஆயுத விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் டிரூ ப்ராமிஸ் III" (Operation True Promise III) என்ற பெயரில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் நகரங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது ஏவியது. இதன் மூலம் ஜெருசலேம் மற்றும் தெல் அவீவ் பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஈரானுடன் இணைந்து ஹவுதி போராளிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவினர்.
ஜூன் 22 அன்று, அமெரிக்கா "மிட் நைட் ஹாமர்" (Midnight Hammer) என்ற நடவடிக்கை பெயரில் தனது பி2 குண்டு எறியும் விமானங்கள் மூலம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தின. நடான்ஸ், இஸ்பகான், போர்டோ போன்ற அணுஆயுத வளாகங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஹவுதிகள் அமெரிக்காவுடனான தங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.
12 நாட்களே (13 ஜூன் - 25 ஜூன் 2025) நீடித்த இந்த போரில், இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டது. எத்தரப்பிலும் வெற்றியை உறுதிப்படுத்தவில்லை.
யுத்தத்தால் ஏற்பட்ட சேதங்கள்
இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் - 12 நாட்களில் ஈரானில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஈரானில் முக்கிய இராணுவ அதிகாரிகள், அணு
விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் ஏவுகணை தாக்குதல்களில் இஸ்ரேலில் 240 குடியிருப்பு கட்டடங்கள், 2,000-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன; பல குடியிருப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் முக்கிய அணு உலைகள் நடான்ஸ், ஃபர்டோ, இஸ்ஃபகான் (Natanz, Fordow, Isfahan) மீது தாக்குதல் நடத்தி, அவற்றை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. ஃபர்டோ, நடான்ஸ் உலையில் உள்ள மையவிலக்கு (Centrifugal) மற்றும் எரிபொருள் செறிவூட்டும் பகுதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இஸ்பகான் உலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு உலைகளின் மீதான தாக்குதல் காரணமாக உள்ளே கதிரியக்க மற்றும் இரசாயன மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) முதலில் தெரிவித்தது. இது உட்புற பாகங்களையும் மற்றும் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகு எந்தவிதமான கதிரியக்க நடவடிக்கைகளும் இல்லை என்று உறுதிப்படுத்தியது. ஈரானும் செறியூட்டப்பெற்ற யுரேனியத்தை தாக்குதலுக்கு முன்னரே இடமாற்றிவிட்டதாக கூறியுள்ளது.
இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயு கிடங்குகள், மற்றும் பிற முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஈரான் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிகரித்துள்ளன. ஈரானும் இஸ்ரேலில் உள்ள மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள், மற்றும் ஆய்வு கூடங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் பெரும் பீதியில் பதுங்கு குழுகளில் தஞ்சம் புகுந்தனர்.
போர் தொடங்கிய உடன் இரு நாடுகளிலும் விமானப் போக்குவரத்து, வணிகம், மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன; வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் போனது. பல இடங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. எரிசக்தி உற்பத்தி குறைவு, தொழில்நுட்ப சேதம், மற்றும் குடியிருப்பு சேதம் ஆகியவை மக்கள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய யுத்தங்கள், சுற்றியுள்ள நாடுகளுக்கும், கடல் மற்றும் நிலம் சுற்றுச்சூழலுக்கும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சுருக்கமாக, இஸ்ரேல் - ஈரான் யுத்தம் மனித உயிரிழப்பு, உள்கட்டமைப்பு சேதம், சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதார வீழ்ச்சி, மற்றும் சமூக பாதிப்புகள் என பல்வேறு நிலைகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலும் ஈரானின் பதிலடியும்
ஜூன் 13, 2025 அதிகாலை, இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" எனும் முன்கூட்டிய தாக்குதலை ஈரானின் அணு மற்றும் இராணுவ இலக்குகளுக்கு எதிராக தொடங்கியது. இதன் நோக்கம் ஈரானின் அணு ஆயுத திறனை "முற்றிலுமாக அழிப்பது" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இதற்கு 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தபட்டுள்ளது. F-35 ஸ்டெல்த் ஃபைட்டர்கள் மற்றும் F-16கள் உட்பட பல்வேறு போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் ஒரே சமயத்தில் ஈரானில் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன, குறிப்பாக நடன்ஸ் மற்றும் தப்ரிஸ் அணு வசதிகளிலும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பின் அமெரிக்காவும் GBU-57 "பங்கர்-பஸ்ட்டர்" குண்டுகள் பூமிக்கடியில் உள்ள மின்சார தயாரிப்புக்கான அணு உலைகளை அழிக்க பயன்படுத்தப்பட்டன.
15% ஈரான் ஏவுகணை களஞ்சியத்தை அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இஸ்ரேல், ஈரானின் 100க்கும் மேற்பட்ட இராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளை இரகசிய நடவடிக்கை மூலம் கொன்றுள்ளது. இராணுவ தலைமை தளபதி முகமது பாகேரி, IRGC தலைவர் ஹொசெய்ன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி ஃபரேடூன் அப்பாசி போன்ற நபர்களும் அதில் அடங்குவர். முதல் நாளே ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் சேதப்படுத்தபட்டன.
ஈரானின் பதிலடியாக ஜூன் 13லிருந்து 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேலுக்கு எதிராக ஏவியது. தெல் அவீவ், ஹைபா, ஜெருசலேம் மற்றும் இராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன. இத்தாக்குதலில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஜூன் 22ல் அமெரிக்கா "ஆபரேஷன் மிட்நைட் ஹாமர்" மூலம் ஈரானின் மின்சார உற்பத்திக்கான அணு உலை தளங்கள் மீதான தாக்குதலை நடத்தியது. ஈரானின் ஃபர்டோ, நட்டான்ஸ் மற்றும் இஸ்பகான் அணு உலை இடங்களை தாக்கிய பிறகு, ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது.
ஈரான் கொர்ரம் ஷஹ்ர்-4 பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலின் பென் குரியான் விமான நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையங்களை குறிவைத்தது. இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் (IRON DOME) பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்தன. ஆனாலும் இஸ்ரேலில் சேதங்கள் தவிர்க்க முடியவில்லை.
சர்வதேச சட்ட மீறல்: IAEA அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களை "அணு வசதிகளுக்கு எதிரான தடை" என கண்டித்தது. ஐ.நா சட்டத்தின் கீழ் இத்தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஐ.நா. சாசனம், குறிப்பாக பிரிவு 2(4), எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதோ அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதையோ அல்லது பலத்தை பயன்படுத்துவதாக மிரட்டுவதையோ தடை செய்கிறது. ஈரானில் அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் தெளிவான அப்பட்டமான மீறலாக பலரால் கருதப்படுகிறது. ஆனால் இந்த கண்டனங்கள் வெற்றுச் சொல்லாடல்கள் என்பதும் இந்த கழகங்கள் வெறும் ஏகாதிபத்தியத்தின் உட்பிரிவுகள்தான் என்பதை வெளிப்படுத்திக்கொண்டு உலக மக்களிடையே மேலும் அம்பலப்பட்டு நிற்கிறது.
இஸ்ரேலின் திட்டமிட்ட முன்கூட்டிய தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதல் மத்திய கிழக்கில் புதிய யுத்த மோதலுக்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வுகள் அணு ஆயுத பரவல், சர்வதேச சட்டங்களின் மீறல் மற்றும் பிராந்திய உள்கட்டமைப்புகளுக்கான கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வைத்துள்ளது. இரு தரப்பும் தங்கள் நடவடிக்கைகளை "தற்காப்பு உரிமை" எனக் கூறுகின்றன, ஆனால் இரு நாடுகளும் தன் சொந்த நாட்டு மக்களின், தேசங்களின் நலன்களுக்கு எதிராக இந்த இரு நாடுகளிலுள்ள சிறு கும்பலான தரகு முதலாளித்துவ பிரிவு, இஸ்ரேல் பிரிவு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்காகவும் ஈரான் பிரிவு, இரசிய - சீன ஏகாதிபத்தியத்திற்காகவும் அவர்களின் பிராந்திய துணை மேலாதிக்க செல்வாக்கிற்காக போர் புரிந்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சன உண்மை.
இஸ்ரேலின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள்
அரசுகள் நடத்தும் போருக்கும் பயங்கரவாதத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. போர்களுக்கும் நியதிகள் உண்டு. ஆனால் அரசு பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது; ஒரு அரசு, தனது அரசியல் மற்றும் ராணுவ இலக்குகளை அடைய, பயங்கரவாத வழிமுறைகளான திட்டமிட்ட படுகொலைகள், நாசவேலைகள், அடக்குமுறைகள் மூலம் பொதுமக்களிடையே பெரும் நாசத்தை ஏற்படுத்தி அச்சத்தை விதைப்பது "பயங்கரவாதம்" (Terrorism) ஆகும். இது அரசே செய்தால் "அரசு பயங்கரவாதம்" (State Terrorism) ஆகும். இஸ்ரேல் அரசு 'போர்' என்ற பெயரில் ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக நடத்தி வரும் பல நேரடி மற்றும் மறைமுக ஆயுத நடவடிக்கைகள் "அரசு பயங்கரவாதம்" என்ற வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது. காசாவுக்குள்ளும், பாலஸ்தீனத்திற்குள்ளும் மக்களை வேட்டையாடுவது, கைது செய்து சித்திரவதை செய்வது; சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளின் அரசு அதிகாரிகள், போராளி குழுக்களின் தலைவர்கள், விஞ்ஞானிகள், மக்கள் என்று வகையில்லாமல் எந்த சர்வதேச சட்டங்களையும், நாடுகளின் இறையாண்மையையும் மதிக்காமல் கொல்கிறது. இது அப்பட்டமாக சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும்; இதுதான் அரசு பயங்கரவாதம். அதே போன்று ஈரான் தன் செல்வாக்கை பயன்படுத்தி காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, லிபியாவில் ஹவுதியை மற்றும் ஈராக்கில் சில அமைப்புகளை பயன்படுத்தி சொந்த நாடுகளிலும் மற்றும் அதன் அண்டை நாடுகளிலுமுள்ள மக்கள் மீதும், அரசுகள் மீதும் பல்வேறு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் இஸ்ரேல் கொடூரத்தின் உச்சமாக திகழ்கிறது.
இதன் மிக சமீபத்திய மற்றும் கொடூரமான உதாரணம், காசாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று நரவேட்டை ஆடிவருகிறது. பிஞ்சு குழந்தைகள் முதற் கொண்டு வயதானவர்கள் வரை பட்டினியால் இறக்கின்றனர். அண்டை நாடுகளின் உதவிகளை பெற வரும் மக்களை கொன்று குவிக்கும் அவலம் தொடர்ந்து இஸ்ரேலும் அமெரிக்க கும்பலும் செய்து வருகின்றது. இன்று வரை, தொடர்ந்து லெபனான் மீது எந்தவித சர்வதேச சட்டத்தையும் மதிக்காமல் தொடர்ந்து குண்டு வீசியும், லெபனான் அதிகாரிகளையும், ஈரான் ஆதரவு குழுக்களின் முக்கிய தலைவர்களையும் கொன்று குவித்து வருகிறது. அண்டை நாடான சிரியாவில் ஏப்ரல் 1, 2024 அன்று சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல். வியன்னா ஒப்பந்தத்தின் (1961) படி, தூதரக வளாகங்கள் ஒரு நாட்டின் புனிதமான, இறையாண்மைக்குட்பட்ட பகுதியாகும். அதன் மீது தாக்குதல் நடத்துவது என்பது, நேரடியாக அந்த நாட்டின் மீதே தாக்குதல் நடத்துவதற்குச் சமம். இந்தத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) முக்கிய தளபதி முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இது ஒரு போர்க்களத்தில் நடந்த மரணம் அல்ல; மாறாக, போர் நடக்காத ஒரு நாட்டின் தூதரகப் பாதுகாப்பில் இருந்த அதிகாரியை, சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்ற சட்டவிரோதப் படுகொலை (Extrajudicial Killing) ஆகும்.
இந்தத் தாக்குதல் ஒரு தனித்த நிகழ்வல்ல; இது இஸ்ரேலின் நீண்டகாலக் கொள்கையின் ஒரு தொடர்ச்சி மட்டுமே. இதற்கு முந்தைய பல நிகழ்வுகள் உள்ளன. நவம்பர் 2020-ல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மூளையாகக் கருதப்பட்ட விஞ்ஞானி மொசென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டது. தெஹ்ரானுக்கு வெளியே, செயற்கைக்கோள் மூலம் இயக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியால் அவர் கொல்லப்பட்ட விதம், எந்த ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையும் மிஞ்சும் தொழில்நுட்ப பயங்கரவாதத்தைக் காட்டியது. இது, ஒரு நாட்டின் மிக முக்கிய அறிவுசார் சொத்தை அழிக்கும் செயல்.
இது மட்டுமின்றி, ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான நடான்ஸ் (Natanz) மற்றும் ஃபோர்டோ (Fordow) ஆகியவற்றில் தொடர்ந்து நிகழும் மர்மமான வெடிப்புகள், தீவிபத்துகள், மற்றும் மின்வெட்டுகள் இஸ்ரேலின் நாசவேலைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன. 2010-ல் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கியதாகக் கூறப்படும் "ஸ்டக்ஸ்நெட்" (Stuxnet) கணினி வைரஸ், ஈரானின் அணு உலைகளின் கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவி, ஆயிரக்கணக்கான மையவிலக்குகளை (centrifuges) அழித்தது. இது, உலகத்தின் அணுசக்தித் திட்டத்தின் மீதான முதல் பெரிய சைபர் தாக்குதலாகும்.
இஸ்ரேல் தனது செயல்களை "தற்காப்பு நடவடிக்கை" என்றும், "ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கும் முயற்சி" என்றும் நியாயப்படுத்துகிறது. ஆனால், எந்தவொரு சர்வதேசச் சட்டமும், ஒரு நாடு மற்றொரு நாட்டின் விஞ்ஞானிகளைக் கொல்வதற்கோ, அதன் உள்கட்டமைப்புகளை நாசப்படுத்துவதற்கோ, அதன் தூதரகங்கள் மீது குண்டு வீசுவதற்கோ அதிகாரம் வழங்கவில்லை. இந்த நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சியை அழித்து, "வல்லவன் வகுத்ததே வாய்க்கால்" என்ற காட்டு தர்மத்தை நிலைநாட்டுகின்றன. இது, போருக்கும் அப்பாற்பட்ட, அரசின் முழு ஆதரவுடன் நிகழ்த்தப்படும் பயங்கரவாதமே அன்றி வேறில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கைப்பாவையாக இஸ்ரேலும் இரசிய-சீன கூட்டணியின் கைப்பாவையாக ஈரானும்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பற்றி எரியும் நெருப்பு, வெறும் பிராந்தியப் பகைமையின் வெளிப்பாடு அல்ல. இது 21 ஆம் நூற்றாண்டின் புதிய பனிப்போரின் மிக அபாயகரமான அத்தியாயம். இந்த உலகளாவிய சதுரங்க ஆட்டத்தில், இஸ்ரேலும் ஈரானும் வெறும் காய்கள்; அவற்றை இயக்கும் கரங்கள் வாஷிங்டனிலும், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிலும் உள்ளன. இந்த மோதல், ஏகாதிபத்திய முகாமில் இருதுருவ போட்டி களமாக மாறியிருப்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இது ஐரோப்பிய முகாமுக்கு பெரும் வாய்ப்பாக அமையவில்லை.
அமெரிக்க-இஸ்ரேலிய அச்சு: பிரிக்க முடியாத கூட்டணி
அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதியுதவி மற்றும் மூலதனத்தை வழங்கும் முக்கிய நாடாகும். பிப்ரவரி 2022 வரை, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 150 பில்லியன் டாலருக்கும் மேல் வழங்கியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான இராணுவ ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 2.67 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்று வந்தது. 2019 முதல் 3.8 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீதான இன அழிப்புப் போருக்குப் பிறகு, கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்கா 18 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. மேலும், 26 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க மற்றொரு ஒப்பந்தமும் செய்துள்ளது. அமெரிக்காவின் நிதி மூலதன ஆதிக்கம் இஸ்ரேலின் பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அளவுக்கு வலிமையானது.
பாலஸ்தீனத்திற்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட எரிவாயு, எண்ணெய் வயல்கள் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய கார்ப்பரேட்டுகள் பங்கு போட்டு வருகின்றன. அல்மா ஆயில், லெவியாதன், டமர் (Tamar) உள்ளிட்ட இந்த வயல்களை முழுவதுமாக இயக்க ஆரம்பித்தால் இஸ்ரேல் எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதியில் உலகின் 80வது இடத்திலிருந்து முதல் 30 இடங்களுக்குள் முன்னேறும் என்று கூறப்படுகிறது. இதற்காகவே பல்வேறு "குழாய் திட்டங்களை" உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் குழாய் திட்டம், யூரோ-ஆசியா இணைப்பு திட்டம், கிழக்கு மத்திய தரைக்கடல் எரிவாயு கூட்டமைப்பு போன்றவைகள் கையெழுத்தாகியுள்ளன. இஸ்ரேலின் பல எரிவாயு மற்றும் எண்ணெய் வயல்களுக்கான திட்டங்களின் லைசன்ஸ் கேட்டு சீனா, இரசியா மற்றும் இந்தியா கூட விண்ணப்பித்துள்ளன.
அமெரிக்காவிற்கு, இஸ்ரேல் என்பது மத்திய கிழக்கில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கவும், வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தின் மீது மேலாதிக்கத்தை திணிக்கவும் கிடைத்த ஒரு நிரந்தர இராணுவத் தளமாகும். இன்றும் சிரியா, லெபனான், ஈராக் போன்ற நாடுகளில் ஒப்பந்தங்கள் மூலமும், சட்டத்திற்கு புறம்பான வழிகளிலும் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கவும் கட்டுப்படுத்தவும் இஸ்ரேல் நம்பகமான கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது.
மேற்காசிய அல்லது மத்திய கிழக்கின் குவாட் என அழைக்கப்படும் இந்தோ-ஆபிரகாமிக் கூட்டணி (I2U2) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய யூனியன் பொருளாதார வழித்தடம் (IMEC) போன்ற திட்டங்களை அமெரிக்கா உருவாக்கி, இஸ்ரேலை முக்கிய பங்காளியாகச் சேர்த்துள்ளது. இது சீனாவுக்கு போட்டியான திட்டங்களாக கருதப்படுகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கின் கொந்தளிப்பான அரசியல் சூழலில், இஸ்ரேல் என்பது ஒரு நட்பு நாடு மட்டுமல்ல; அது அதன் நம்பகமான, அசைக்க முடியாத வியூக நலன்களின் அச்சாணியாக (Strategic Asset) உள்ளது. இந்த "சிறப்பு உறவின்" அடித்தளம், ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியில் வெளிப்படுகிறது. இந்த நிதியுதவி, இஸ்ரேலுக்கு தி-35 'அதிர்' போன்ற உலகின் அதிநவீன போர் விமானங்களையும், 'இரும்புத் கவசம்' (Iron Dome போன்ற அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளையும் அமைத்து, பராமரிக்கவும், அதற்கான ஆயுதகளை வழங்கவும் வாங்கவும் உதவுகிறது.
இந்தக் கூட்டணி வெறும் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் நின்றுவிடவில்லை. ஏப்ரல் 2024-ல் ஈரான் நடத்திய நேரடித் தாக்குதலின்போது, அமெரிக்கா தனது உண்மையான முகத்தைக் காட்டியது. அமெரிக்காவின் USS ஆர்லே பர்க், USS கார்னி ஆகிய போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்தன. பிரிட்டனின் டைஃபூன் போர் விமானங்களும், ஜோர்டானின் விமானப் படையும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றன. இது, இஸ்ரேல் மீதான தாக்குதல் என்பது அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்ற தெளிவான செய்தியை உலகிற்குச் சொன்னது. அமெரிக்காவுக்கு, இஸ்ரேல் என்பது தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கவும், வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தைப் பாதுகாக்கவும் கிடைத்திருக்கும் ஒரு நிரந்தர ராணுவத் தளமாகும்.
இஸ்ரேலில் இரசிய-சீன நிதி மூலதனங்கள்:
ரஷ்யா - சீனா முகாமும் இசுரேலுடன் அரசியல்-பொருளாதார - இராணுவ உறவுகளில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேலின் தொழில்நுட்ப - ஆற்றல் துறைகளில் இவ்விரு முகாம்களும் முதலீடு செய்து வருகின்றன; பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திலும் இஸ்ரேல் முக்கியப் பங்காளனாக உள்ளது. சீனா ஒரு படி மேலே சென்று இந்த போர் சூழலில் இஸ்ரேலுக்கு 20,000 தொழிலாளர்களை ஏற்றுமதி செய்துள்ளது. சீனா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது. இருதரப்பு வர்த்தகம் 1992இல் வெறும் $50 மில்லியனில் இருந்து 2013 வாக்கில் $10 பில்லியனுக்கு மேல் உயர்ந்தது, மேலும் 2021-2022 காலகட்டத்தில் தோராயமாக $17-21 பில்லியன் என்ற உச்சங்களை எட்டியது. இரு நாட்டு வர்த்தகத்தில் இஸ்ரேலின் இறக்குமதியே பெருவீதமானது.
2007-2020 காலகட்டத்தில் சீன ஏகாதிபத்தியம் இஸ்ரேலில் தனது முதலீட்டை பெருமளவில் அதிகரித்தது. இது வெறும் வர்த்தக உறவல்ல - இது சீன ஏகாதிபத்தியத்தின் மூலோபாய கூட்டணியாகும். சீன ஏகாதிபத்தியம் இஸ்ரேலிய இராணுவவாத அரசுடன் தனது பொருளாதார நலன்களை இணைத்துக்கொண்டது. செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மருத்துவ தொழில்நுட்பம் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் சீனா இஸ்ரேலுடன் கூட்டுசேர்ந்தது. இந்த நடவடிக்கை உலக தொழில்நுட்ப ஆதிக்கத்தில் அமெரிக்காவிற்கு சவாலாக சீனா வளர்வதற்கான நீண்டகால உத்தியின் பகுதியாகும். இஸ்ரேலிய இராணுவ-தொழில்துறை வளாகத்தின் தொழில்நுட்பம் சீனாவின் ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கு உதவுகிறது.
ஹைஃபா, அஷ்டோட் துறைமுகங்கள், டெல் அவிவ் சுரங்கப்பாதை, மின் நிலையங்கள் - இவை அனைத்தும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (BRI) பகுதிகள். இது நவ காலனியாதிக்கத்தின் நவீன வடிவம். சீன அரசு நிறுவனங்கள் இஸ்ரேலின் மூலோபாய உள்கட்டமைப்பை கட்டுப்படுத்துவதன் மூலம், மத்திய தரைக்கடல்-ஆசிய வர்த்தக பாதையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றன.
இஸ்ரேல்-சீனா உறவு வலுப்பெற்றபோது, அமெரிக்க ஏகாதிபத்தியம் இதை சகித்துக்கொள்ளவில்லை. இஸ்ரேல் நாடு சீன உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்றது என்பது, ஏகாதிபத்திய சக்திகளின் சமநிலை மாறுவதை காட்டியது. ஹமாசின் தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேலை தனது பக்கம் இழுக்க காசா-பாலஸ்தீனத்தை பணயம் வைத்து இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறது.
அமெரிக்காவைபோல சீனாவும் இரசியாவும் "பாலஸ்தீன விடுதலை" என்ற சந்தர்ப்பவாத ஆதரிப்பு மூலம் இஸ்ரேல் அரசுடன் சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதற்கான "பேரம் பேசும் பொருளாக" பாலஸ்தீன பிரச்சனையை ரஷ்ய -சீன முகாம் பயன்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் ரசியாவிடமிருந்து 2.14 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. 2021ஆம் ஆண்டு மட்டும் உலோகம் (447 மில்லியன் டாலர்), அரிதான உலோகம் (393 மில்லியன் டாலர்), இயந்திரங்கள் (145 மில்லியன் டாலர்), உபகரணங்கள், கருவிகள் (127 மில்லியன் டாலர்) போன்றவற்றை இஸ்ரேலுக்கு ரசியா ஏற்றுமதி செய்தது. மேலும், ராணுவத் தளவாடம், போர்க் கருவிகள், உதிரி பாகங்கள் போன்றவற்றை சுமார் 24.3 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ரசியா இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாமும் இஸ்ரேலில் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு கணிசமான நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்கி, பிராந்திய துணை மேலாதிக்கம் மற்றும் எண்ணெய் வளக் கட்டுப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா இஸ்ரேலுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளைப் பேணி தனது நிதிமூலதன கும்பல் வேட்டை காடாக்க முயல்கிறது.
இதனால்தான் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்குமளவுக்கு சென்றாலும், இரசிய-சீன முகாம் இஸ்ரேல் மீது சொல்லளவில் கடும் கண்டனங்களை தாண்டி எதிர்வினையாற்றவில்லை. ஈரான் தனது சொந்த அணிக்கு சேவையாளனாக இருந்தாலும், தனது நிதிமூலதனம் பாதிக்கப்படும் பட்சத்தில் சொந்த அணியில் உள்ள நாடுகளையே தாரை வார்க்க தயங்காத பண்பாடுதான் ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க பண்பாடு. எல்லா ஏகாதிபத்தியமும் தனக்கு சேவை செய்த புதிய காலனிய தாசர்களை தனது நலன்களுக்காக காவு கொடுப்பது வரலாறு நெடுகிலும் பல சாட்சியங்கள் உண்டு.
ரஷ்ய-சீன-ஈரானிய கூட்டணி: அமெரிக்க எதிர்ப்பு என்ற புள்ளியில் இணையும் உறவு
மறுபுறம், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை எதிர்க்கும் நாடுகள், மத்திய கிழக்கின் பிராந்திய துணை மேலாதிக்க சக்தியான ஈரானை வைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணி, பொதுவான நலன் மற்றும் பொதுவான எதிரி என்ற அடிப்படையில் கட்டப்பட்டது. 2015 ஈரான் மீதான ஐ.நா வின் கட்டுப்பாடுகளும், அமெரிக்க - ஐரோப்பாவின் பொருளாதார கட்டுப்பாடுகளும் ஈரானை இரசிய-சீன ஏகாதிபத்தியத்தின் பக்கம் மேலும் நெருக்கமடைய வைத்துள்ளது. இதனால் உலகறிந்து சில வர்த்தகங்களும் உலகறியா பல வர்த்தகங்களையும் இக்கூட்டணியில் நடைபெற்று வருகிறது. இப்படி உலகறியாமல் நடக்கும் வர்த்தகங்களின் பொருட்களையும் அதன் அளவையும் தொகையையும் துல்லியமாக வரையறுக்க முடியாது. இவை மாற்று வழிகளில் சாத்தியமாக்கியுள்ளனர். இது வெறும் ஈரான் மட்டுமல்ல, வடகொரியா, வெனிசுலா போன்ற நாடுகளும் இப்படித்தான் தனது வர்த்தகங்களை செய்து வருகின்றனர்.
ரஷ்யாவின் பங்கு: ஜனவரி 2025ல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஈரானிய அதிபர் பெசஸ்கியனும் மாஸ்கோவில் அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது மே மாதத்தில் ஈரானின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த உடன்படிக்கையில் கூட்டு இராணுவப் பயிற்சிகள், அச்சுறுத்தல்கள் தொடர்பான ஆலோசனைகள், இராணுவ தொழில்நுட்ப பரிமாற்றம், இராணுவ துப்பறிவு தரவுகள் பறிமாற்றம் போன்றவை இதில் அடங்கும். இரானின் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, "12 நாள் போரின் போது இரசியா எங்களுக்கு மிகவும் உதவியது. அதன் பிறகு நாங்கள் முன்பை விட அதிக ஒத்துழைப்பில் ஈடுபட்டு வருகிறோம்," என்று நவம்பர் மாதம் "தி எக்னாமிஸ்ட்" இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்திய 'ஷாஹெட்-136' தற்கொலை ட்ரோன்கள், ஈரானால் வழங்கப்பட்டவையே. இதற்குப் பிரதிபலனாக, ரஷ்யா இராணுவ தொழில்நுட்பம், புலனாய்வு பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றில் ஈரானுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இரசியாவின் அதிபர் புடினும் இரானின் அதிபர் பெசஸ்கியனும் டிசம்பர் 12 அன்று துர்க்மெனிஸ்தானின் தலைநகரம், அஷ்காபாத்தில் தங்களுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். இதில் இரசியா சுகோய் Su-35 மற்றும் Su-30MK போர் விமானங்கள் மற்றும் S-400 வான்பாதுகாப்பு அமைப்புகளையும் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பையும் ஈரானுக்குக் கொடுக்க போவதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் ரஷ்ய அரசு அணுசக்தி கழகமான ரோசாடம், ஈரானில் நான்கு அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான $25 பில்லியன் (21.4 பில்லியன் யூரோ) மதிப்பிலான ஒப்பந்தத்தை தெஹ்ரானுடன் நவம்பர் மாதம் இறுதி செய்தது. இது போன்ற நகர்வுகள் ஈரானுக்கு கிடைக்கும் பட்சத்தில், அது மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய முகாம்களின் சமநிலையில் மாற்றம் ஏற்படும் என கருதப்படுகிறது. இரு நாடுகளும் மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் மேற்குலக ஆதிக்கத்திலிலுள்ள ஸ்விப்ட் (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication) வர்த்தக முறையிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தவிர்க்க புதிய வழிகளைக்கொண்டு 2022-ல் இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் 5 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்தது. மேலும் இரசிய அதிபர் புடின் டிசம்பர் மாதம் "இருதரப்பு உறவுகளில் விரிவாக்கப்பட்ட வர்த்தகத்தை எடுத்துக்காட்டி, கடந்த ஆண்டு 13 சதவீத வளர்ச்சியையும், 2025இன் முதல் ஒன்பது மாதங்களில் கூடுதலாக 8 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளதாக" கூறியுள்ளார். மேலும் ரஷ்யா, ஈரான், இந்தியா ஆகிய நாடுகள் சேர்ந்து வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதையை (International North-South Transport Corridor - INSTC) அமைத்துள்ளன. இது வளைகுடா நாடுகளையும் வட ஐரோப்பாவையும் இணைக்கிறது. இந்த பாதை மூலம் மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருக்காமல் வணிகம் செய்ய பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். ஈரான் 2005 முதல் 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யா குறைந்தது ஐந்து ஈரானின் செயற்கைக்கோள்களை ஏவ உதவியுள்ளது. சமீபத்தில் நாஹித்-2 என்ற செயற்கைக்கோளை ஏவியது. இரசியாவின் தொழில்நுட்ப உதவியுடன் சிமோர்க், காசெட், காயம்-100 போன்ற ராக்கெட்டுகளையும் உருவாக்கியுள்ளது. இப்படி ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரசியாவின் புதிய காலனிய ஆதிக்கத்தில் சிக்கி வருவதை பார்க்க முடிகிறது.
சீனாவின் பங்கு: ஈரான் பெரிதும் சார்ந்திருக்கும் மற்றொரு ஏகாதிபத்திய சீனாதான். ஜுன் 2020-ல் கையெழுத்தான 25 ஆண்டு கால, 400 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம், இதற்குச் சான்றாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி, சீனா தனக்குத் தேவையான தடையற்ற எண்ணெய் விநியோகத்தை ஈரானிடமிருந்து குறைந்த விலையில் பெறுகிறது. பதிலுக்கு, ஈரான் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் சீனாவின் முதலீடுகளைப் பெறுகிறது. இது, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஈரான் இராணுவ தளவாட பொருட்களுக்கு பெருமளவு சீனாவை நம்பியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இரசியா - உக்ரைன் போருக்குப் பின்னர், இரசியாவால் ஈரானுக்கு போதுமான இராணுவ தளவாடங்களை ஒப்பந்தத்தில் ஏற்றவாறு வழங்க முடியவில்லை. அதனால் ஈரானின் உடனடி இராணுவ தளவாட தேவைகளுக்கு சீன ஏகாதிபத்தியமே ஒரே மாற்றாக உள்ளது. ஏற்கெனவே இராணுவ போர்த்தளவாடங்களுக்கான உதிரி பாகங்களின் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப் பொருட்களும் பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடந்த மாதம் அமெரிக்க சிறப்புப் படையினர் இந்தியப் பெருங்கடலில், சீனாவிலிருந்து ஈரானுக்கு இராணுவம் தொடர்பான பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலை கைப்பற்றினர் என்று 'தி வாஷிங்டன் பத்திரிக்கை' உறுதிப்படுத்தியது. இது சர்வதேச நீர்வழிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோத நடவடிக்கை என்பது வேறு விசயம். இதற்கு முன்னரே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோ கோர்ட்னி, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ருபியோ மற்றும் CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோருக்கு கடிதம் எழுதினர்கள். இதில் ஈரானுக்கான சீனாவின் ஐ.நா தடைகளை மீறிய இராணுவ உதவிகளை விசாரிக்கும்படி கோரினர். அக்கடிதத்தில் சீன நிறுவனங்கள் செப்டம்பர் மாத இறுதியிலிருந்து ஈரானுக்கு 2,000 டன் சோடியம் பெர்குளோரேட் என்ற வேதிப்பொருளை அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இந்த வேதிப்பொருள் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான எரிபொருள் தயாரிக்க அவசியமான முக்கிய மூலப்பொருளாகும். இந்த அளவு 500 நடுத்தர தூர ஏவுகணைகளுக்கு எரிபொருள் தயாரிக்க முடியும் என்று CNN பத்திரிக்கை செய்தி உறுதிப்படுத்தியது.
ஈரான் சீனாவிடமிருந்து உயர்தர போர் விமானங்கள் மற்றும் உயர்தர வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பெரிய ஆயுதங்களை பெற முயல்கிறது. இஸ்ரேலின் வான் சக்திக்கு எதிராக நிற்க, HQ-9 SAM என்ற சீன வான் பாதுகாப்பு அமைப்பு கோருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போர் வான் தளப் பிரிவில், J-10சி விமானம், YJ-12 போன்ற கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பெறுவதற்கும் பேச்சுவார்த்தை வருகிறது.
2022ல் அமெரிக்காவின் கிழக்கு விவகாரங்களுக்கான உதவி வெளியுறவு செயலாளர் பார்பரா லீஃப், சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் சார்பு போராளிக் குழுக்கள் பயன்படுத்திய ஆளில்லா ஆயுத விமானங்கள் (UAVs) சீனாவால் ஈரானுக்கு வழங்கப்பட்டவை என்று தெரிவித்திருந்தார்.
பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO): 2023-ல் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது, இந்தக் கூட்டணியின் ராஜதந்திர முத்திரையாகும். இது, ஈரானை சர்வதேசத் தனிமையிலிருந்து மீட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணுக்குள் கொண்டு வந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் 2024ல் கூடுதல் நிரந்தர உறுப்பினராக ஈரான் சேர்க்கப்பட்டது. பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டணியாக பிரிக்ஸ் அமைப்பு செயல்படுகிறது.
சுருக்கமாக, இந்த மோதல் இஸ்ரேல் மற்றும் ஈரானின் எல்லைகளைத் தாண்டி, வாஷிங்டனுக்கும், பெய்ஜிங்-மாஸ்கோ கூட்டணிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு தாக்குதலும், ஒவ்வொரு பதிலடியும், இந்த உலக வல்லரசுகளால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, தங்களின் புவிசார் அரசியல் நலன்களுக்காக அரங்கேற்றப்படுகின்றன. இதில், பலியாகிக்கொண்டிருப்பது மத்திய கிழக்கு மக்களின் அமைதியும், எதிர்காலமும்தான்.
ஈரானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு தயாரான அமெரிக்கா - இஸ்ரேல்:
ஜுன் 12 மற்றும் 13ல் காணொளியில் பேசிய நெதன்யாகு கீழ்வருமாறு ஆட்சி மாற்றத்திற்கு அறைகூவல் விடுகிறார்:
"நாங்கள் உயர்ந்த இராணுவ தளபதிகளையும், முக்கிய அணு ஆராய்ச்சியாளர்களையும் வீழ்த்தியுள்ளோம். இஸ்லாமிய ஆட்சியின் மிக முக்கியமான அணு வசதிகளையும், பெரும்பகுதி ஏவுகணைகளையும் அழித்துள்ளோம். மேலும் நடவடிக்கைகள் வரப்போகின்றன. அவர்களுக்கு எது தாக்கியதென்று தெரியவில்லை. என்ன தாக்கப்போகிறது என்றும் தெரியாது.
ஈரான் நாடும் இஸ்ரேல் நாடும் சைரஸ் மன்னனின் காலத்திலிருந்தே உண்மையான நண்பர்கள். தீய மற்றும் அடக்குமுறை ஆட்சியிலிருந்து உங்கள் சுதந்திரத்திற்காக நிற்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் கொடியையும் வரலாற்று பாரம்பரியத்தையும் சுற்றி ஒன்றுபடுங்கள். இந்த ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு வலுவிழந்துள்ளது. நீங்கள் எழுந்து நின்று உங்கள் குரலை எழுப்ப இதுதான் வாய்ப்பு.
பெண், வாழ்க்கை, சுதந்திரம். நேற்றும் பலமுறையும் சொன்னபடி, இஸ்ரேலின் போர் உங்களுடன் அல்ல. நாங்கள் மதிக்கும் மற்றும் பாராட்டும் ஈரானின் தைரியமான மக்களுடன் அல்ல.
எங்கள் போர் நமது பொதுவான எதிரியுடன்தான் - உங்களை அடக்கி ஏழ்மையில் ஆழ்த்தும் கொலைகார ஆட்சியுடன். ஈரானின் தைரியமான மக்களே, உங்கள் ஒளி இருளை வெல்லும். நான் உங்களுடன் இருக்கிறேன்.
இஸ்ரேல் மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள்."
ஆதாரம்: https://www.wsj.com/video/netanyahu-calls-on-iranian-people-to-overthrow-their-government/3FB0ED3A-7AB5-489F-82CD-1E4231E0ED2B.html
மீண்டும் ஈரான் மக்களை ஆட்சி கவிழ்ப்புக்கு அறைகூவி அழைக்கும் இஸ்ரேலிய பிரதமர், மற்றொரு நாள் காணொளியில் உறையாற்றினார். அதில் ஈரானிய அதிபர் பெசஸ்கியன் தனது நாட்டில் "ஈரானிய குழந்தைகளுக்குக் கூட சுத்தமான தண்ணீர் இல்லை" என்று சொன்னதைக் குறிப்பிட்டார். இஸ்லாமிய குடியரசு ஆட்சி வீழ்ந்து ஈரான் "சுதந்திரம்" அடைந்தால், இஸ்ரேலின் நீர் நிபுணர்கள் "ஒவ்வொரு நகரத்துக்கும்" செல்வார்கள். நாங்கள் கடல்நீரை இனிப்பு நீராக்கும் தொழில்நுட்பத்தையும் நீரை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வருவார்கள் என்று அந்த காணொளியில் உறுதியளித்தார்.
ஜூன் 18 அன்று இஸ்ரேல் ஹேக்கர்கள் ஈரானின் அரசு தொலைக்காட்சியை ஹாக் செய்தனர். அவர்கள் 2022-ல் நடந்த ஈரானிய அரசுக்கெதிரான பெண்களின் போராட்ட காட்சிகளை ஒளிபரப்பினர். மஹ்சா அமினி என்ற பெண் பர்தா அணிய மறுத்ததை எதிர்த்து காவல்துறை கைது செய்து தாக்கியதால் இறந்தார். அந்த மரணத்திற்கு எதிராக நாடு முழுக்க அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. இதை இஸ்ரேலிய தாக்குதலின்போது, இஸ்ரேலிய ஹாக்கர்கள் மீண்டும் அக்காட்சிகளை ஒலிப்பரப்பி மக்களை வீதிக்கு இறங்கி போராடி அந்த ஆட்சியை கவிழ்க்க அறைக்கூவல் விடுத்தனர்.
போரின் உச்சக்கட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் ஆட்சி மாற்றத் திட்டத்தை வெளிப்படுத்தியது போன்று ஜூன் 22ல் டிரம்பும் தனது சோஷியல் ட்ரூத் சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டார்.
"'ஆட்சி மாற்றம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சி 'ஈரானை மீண்டும் சிறந்ததாக ஆக்க' (விமிநிகி) முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் இருக்கக் கூடாது??? MIGA!!!" (MIGA என்பது "Make Iran Great Again" என்பதன் சுருக்கம்).
இவர்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு நாட்டை காட்டிகொடுக்கும் ஒரு எட்டாம்படை துரோகிகள் வேண்டுமல்லவா? அதைதான் நீண்டகாலமாக பாலூற்றி வளர்த்து வருகிறது அமெரிக்க அரசு. அவர்தான் ரேசா பஹல்வி. இவர் 1970களில் ஈரானின் முடிமன்னராக இருந்து அமெரிக்க பொம்மையாட்சி நடத்திவந்த கடைசி ஷாவான முகமது ரேசா பஹல்வியின் மூத்த மகன். தனது 16வது வயதில் 1979ல் புரட்சிகர இஸ்லாமிய பாதுகப்பு படை ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். ஈரானில் அவருக்கு பெரிய தொடர்புகளோ ஆதரவோ இல்லை. 2023-ல் இஸ்ரேலுக்குச் சென்று பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தான். ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்த நீண்ட காலமாக அச்சுறுத்தி வரும் இஸ்ரேலின் ஆதரவைப் பெற முயன்றான். கடந்த 12 நாள் போரில், இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கையில் கோடிக்கணக்கான ஈரானியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஓரணியில் திரண்டனர். ஆனால் பஹ்லவி இஸ்ரேலின் செயல்களை மீண்டும் மீண்டும் பாராட்டினான். அமெரிக்க தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் அவரை முதன்மையாக்கினர். அவர் தொடர்ந்து பல முன்னணி தொலைக்காட்சிகள் அவர் உரையை நேரடி ஒளிப்பரப்பு செய்தனர்; தொலைகாட்சிகளில் நேர்காணல்கள் செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து மேற்கு நாடுகளிடம் இந்த ஈரானிய ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்த கோரி மன்றாடினார். தன்னுடைய ஆட்சி நிறுவப்பட்டால் உண்மையான விடுதலையையும், ஜனநாயகத்தையும் வழங்குவதாக ஈரான் மக்களுக்கு கோரிக்கை விடுத்த வன்னம் இருந்தார். இவர் தொலைகாட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் புரட்சி நடத்தி கொண்டிருந்தார். சதாமின் ஈராக் மீது அமெரிக்க போர் தொடுப்பதற்கு முன்னர், பஹெல்வியைப்போல ஈராக்கில் துரத்திவிடப்பட்ட அஹ்மத் சலாபி என்றொரு துரோகி ஈராக்கில் ஆட்சி மாற்றத்தை கோரினான். அதேபோல இவனும் வசதியாக அங்கிருந்துக்கொண்டு மேற்கு நாடுகளின் தயவில் ஆட்சி மாற்றத்தை கோரினான்.
ஆட்சி மாற்றம் என்றால் என்ன நடக்கும்? ஹாலிவுட் படங்களில் காட்டுவது போலவும் இந்த மேற்குலக ஊதுகுழல் தொலைக்காட்சிகளில் காட்டுவது போல கனவுகள் மெய்ப்படும் "விடுதலை" அல்ல. ஏகாதிபத்திய ஆட்சி கவிழ்ப்புகள் இரத்தத்திலும் குழப்பத்திலும் நீண்டகால அழிவிலும் நனைந்திருக்கும். அதை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் லிபியாவிலும் நடந்தது போல்தான் நடக்கும்.
இந்த இராணுவ ஆட்சி மாற்றங்கள் எப்படி இருக்கும்? ஏகாதிபத்திய சக்திகள் தனது சுயநல நோக்கங்களை "விடுதலை", "ஜனநாயகம்", "பயங்கரவாத எதிர்ப்பு" என்ற பெயரில் மறைந்துகொள்ளும். 2001-ல் ஆப்கானிஸ்தானை நினைத்துப் பாருங்கள். 2003-ல் ஈராக்கை நினைத்துப் பாருங்கள். அமெரிக்கா வெறும் குண்டுகளை மட்டும் வீசிவிட்டு திரும்பிப் போகவில்லை. அமைதியை ஏற்படுத்தவில்லை; ஜனநாயகத்தை கொடுக்கவில்லை; பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை; அதற்கு மாறாக வருடக்கணக்கில் பயங்கரவாத கூட்டணிகளை உருவாக்கியது. உளவுத் தகவல்களைச் சேகரித்தது. இலட்சக்கணக்கான படைவீரர்களை அனுப்பியது. குண்டுகளை வீசியது; ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தியது; பொம்மை அரசை நிறுவியது; பெண்களை சிறார்களை கொன்றது; வளங்களை கொள்ளையடித்தது; எதிர்த்து தாயகம் காக்க போராடிய வீரர்களை பயங்கரவாதிகளாக்கி வதைமுகாம்களில் சித்திரவதை செய்து ஊணமாக்கியது கொன்றுகுவித்தது; அமைதி கானல் நீரானது; பயங்கரவாதம் அன்றாடக் காட்சியானது; கொள்ளை சட்டமானது;
இப்படி ஒரு ஆட்சியை தொடர முடியாமல் அமெரிக்க புறமுதுகிட்டு ஓடியது; ஓடியதற்கு அமெரிக்க வீரர்களின் உயிரிழப்பும், பெரும் பொருட்செலவும் அவர்களை நிர்பந்தித்தது. ஆப்கனில் மட்டும் 5 ட்ரில்லியன் டாலர்கள் செலவழித்தனர். ஆனால் அந்த மக்கள் தன் வாழ் நிலையிலும் அந்த நாடு பொருளாதார வளர்ச்சியிலும், ஜனநாயகத்திலும் பல பத்தாண்டுகள் பிந்தி சென்றது;
ஆனால் இந்த ஏகாதிபத்திய வெறிபிடித்த அமெரிக்காவிற்கு அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்வது பற்றியோ, சொந்த நாட்டு இராணுவ வீரர்களை பகடை காயாக பணயம் வைப்பது பற்றியோ ஆட்சி கவிழ்ப்பால் ஏற்படும் மூன்றாம் உலக நாடுகளின் அவல நிலைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. மீண்டும் ஈரானிலும் இதை செய்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக டிரம்பும் நெதன்யாகுவும் ஒன்றைச் சாதித்து காட்டியுள்ளனர். ஈரானிய இஸ்லாமிய அரசு, 45 ஆண்டுகளில் செய்ய முடியாததை அவர்கள் செய்துள்ளனர் - ஈரானிய மக்களை ஒன்றிணைத்துள்ளனர். வெளிப்படையாக ஈரானின் ஆட்சியாளர்களை தீவிரமாக விமர்சனப்படுத்தி வந்த நோபல் பரிசு பெற்ற நர்கேஸ் முஹம்மதி, சிறையிலடைக்கப்பட்ட சீர்த்திருத்தவாதியும் அரசியல்வாதியுமான மொஸ்தபா தXசாதே போன்ற பல அரசியல் முன்னணியினர் இந்த ஏகாதிபத்திய சதியை எதிர்த்து ஒன்று திரண்டு ஈரானின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்துள்ளனர். ஏகாதிபத்திய தலையீடு உள்நாட்டில் பிளவுகளைவிட ஒரே குரலில் ஏகாதிபத்திய எதிர்ப்பை வெளிப்படுத்தியத்தி உள்ளது. இதனால் இஸ்ரேல் - அமெரிக்க கண்ட கனவு பலிக்காமல், பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த தருணத்திலும் மீண்டும் முயற்சியில் ஈடுபடுவர் என்பதுதான் நிதர்சனம். இவ்வளவு தீர்க்கமாக ஈரானின் ஆட்சி கவிழ்ப்புக்கு முயல்வது ஏன்? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யா - சீனா ஏகபோக அதிக்கத்திற்கு ஈரான் ஏன் முக்கியம்?
ரஷ்யாவின் எரிசக்தி ஆயுதம்: ஐரோப்பாவின் எரிசக்தி தேவையில் ரஷ்யா இன்றளவும் மறுக்கமுடியாத ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் போருக்குப் பிறகு, ஐரோப்பா இரசியாவிற்கு பல கட்ட தடைகளை விதித்தது. இரசியா ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை ஆயுதமாக்கி விநியோகத்தை 80% குறைத்ததால், தடைகளுக்கு முன்பு சம்பாதித்ததை விட அதிகமாக சம்பாதித்தது. ஜூன் 2024 நிலவரப்படி, ஐரோப்பா ரஷ்யாவிற்கு எரிவாயுவிற்காக 8.7 பில்லியன் யூரோக்களை செலுத்தியுள்ளது. ஜனவரி 2025 நிலவரப்படி கூட, ரஷ்யா ஒவ்வொரு நாளும் 231 மில்லியன் யூரோக்களை சம்பாதித்து வருகிறது. இதனால் ஐரோப்பா மாற்று வழிகளைத் தேடுகிறது. ஒரு வேலை ஈரானில், மேற்குலக நாடுகளின் பொம்மை ஆட்சி அமைக்கப்பட்டால், ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை ஈரானைக் கொண்டு பூர்த்தி செய்துகொள்ளும். ஈரான், உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ளது. அதன் புகழ்பெற்ற "தெற்கு பார்ஸ்" (South Pars) எரிவாயு வயல், ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு நேரடி சவாலாகும். ஈரானிலிருந்து ஐரோப்பா வரை ஒரு புதிய பைப்லைன் திட்டம் செயல்படுத்தப்படலாம். பல தசாப்தங்களாக, ஈரான் ஏற்கெனவே IGAT (Iran Gas Trunline) எனப்படும் குழாய்வழிகளின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தக் குழாய்வழி துருக்கி வழியாக ஐரோப்பாவின் எரிவாயு கட்டமைப்புடன் இணைக்க வடிவமைக்கப்பட்டது. மேலும், பெர்சியன் பைப்லைன் (Persian Pipeline) என்ற திட்டமும் இருந்தது; இது துருக்கி வழியாக கிரீஸ், இத்தாலி மற்றும் அங்கிருந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் வரை எரிவாயுவைக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
தற்போது தடைகளால் முடங்கிக் கிடக்கும் ஈரானின் இத்திட்டங்கள், ஆட்சி மாற்றத்தால் புத்துயிர்ப்பு பெறலாம். இது நடந்தால், ஐரோப்பா மீதான ரஷ்யாவின் எரிசக்திப் பிடி முழுமையாகத் தளர்ந்துவிடும். இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கும், அதன் புவிசார் செல்வாக்கிற்கும் ஒரு மரண அடியாக அமையும்.
சீனாவின் பெட்ரோயுவான் கனவு: சீனா தற்போது ஈரானிய எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாகும். 2025 நிலவரப்படி, ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% சீனாவிற்குச் செல்கிறது. இந்த வர்த்தகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலரில் அல்லாமல், சீனாவின் யுவானில் (Petroyuvan) நடைபெறுகிறது. இது டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு சீனா விடுக்கும் நேரடி சவால். மேலும், ஈரானுடன் சீனா கையெழுத்திட்டுள்ள $400 பில்லியன் மதிப்பிலான 25 ஆண்டு கால மூலோபாயக் கூட்டாண்மை ஒப்பந்தம் கைவிடப்படுமானால், அதன் பொருளாதார மேலாதிக்க போர்த்தந்திரம் பெரும் கேள்விக்குள்ளாகும்.
புவிசார் கேடயம் - சீனாவின் 'மலாக்கா சிக்கலும்', ரஷ்யாவின் 'தெற்குக் கோட்டையும்'
சீனாவின் 'மலாக்கா சிக்கல்': மலாக்கா ஜலசந்தி இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே அமைந்துள்ளது. சீனாவின் 80% க்கும் மேற்பட்ட வர்த்தகமும், எண்ணெய் இறக்குமதியும் மலாக்கா ஜலசந்தி (Malacca Strait) வழியாகவே நடைபெறுகிறது. இந்த குறுகிய கடல் பாதை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவுடன் முரண் முற்றிவரும் நிலையில் சீனாவின் கப்பல்களுக்கு மலாக்கா ஜலசந்தியில் அனுமதி மறுக்கப்பட்டால் சீனாவின் பொருளாதாரம் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். தீர்வாக சீனா உருவாக்கிய மாபெரும் திட்டம்தான் "ஒரு மண்டலம், ஒரு பாதை" (Belt and Road Initiative - BRI). மலாக்கா ஜலசந்தியின் பாதிப்பைக் குறைக்க, சீனா ஒரு நேரடி நில வழித்தடத்தை வடிவமைத்துள்ளது. இது சீனாவின் ஜின்ஜியாங்கில் இருந்து, மத்திய ஆசியா, ஈரான், பின்னர் துருக்கி வழியாக ஐரோப்பாவை அடைகிறது. இதை "சீனா-மத்திய ஆசியா-மேற்கு ஆசியா பொருளாதார வழித்தடம்" என அழைக்கின்றனர். இந்த நில வழித்தடம் சீனாவின் கப்பல் பயண நேரத்தை கடலில் 40 நாட்களில் இருந்து நிலத்தில் 15 முதல் 20 நாட்களாகக் குறைக்கும். விரைவான விநியோகம் என்பது சீனப் பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளை விரைவாகவும், மலிவாகவும் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதால் தனது ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கத்திற்கு பெரும் சேவை செய்யும். இந்த பாதை உருவாக்கப்பட்டால், ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகம் நேரடியாக நடைபெறும், மேலும் ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் எளிதாகச் செல்லும். இந்தத் திட்டத்தின் நில வழித்தடத்தில், சீனாவை மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் பாலமாக ஈரான் அமைந்துள்ளது. ஈரானின் புவிசார் நிலவியல் இந்த திட்டத்திற்கு மையப்புள்ளியாக இருக்கிறது. ஒருவேலை மேற்குலக நாடுகளின் பொம்மையாட்சி ஈரானில் அமையுமானால், சீனாவின் டிரில்லியன் டாலர் கனவுத் திட்டத்திற்கு பெரும் சவாலாக இருக்கும். இன்றைய நிலையில் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்துவரும் சீனா வர்த்தக மேலாதிக்கம் கடும் சவாலாக மாறும் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கம் தீவிரமடையும்.
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதை: ரஷ்யா, ஈரான், இந்தியா ஆகிய நாடுகள் சேர்ந்து ஒரு சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதையை (International North-South Transport Corridor - INSTC) அமைத்துள்ளன. இரசிய தலைமையில் இப்பாதை அமைக்கப்படுகிறது. இது வளைகுடா நாடுகளையும் வட ஐரோப்பாவையும் இணைக்கிறது. இந்த பாதை மூலம் விரைவான போக்குவரத்துக்கு மேற்கத்திய நாடுகளின் வழித்தடத்தை சார்ந்திருக்காமல் இரசியாவால் வணிகம் செய்ய முடியும். 7,200 கிலோமீட்டர் நீளமான இந்த பாதை கப்பல், ரயில், சாலை வழிகளைப் பயன்படுத்துகிறது. போக்குவரத்து நேரத்தையும் செலவையும் குறைக்கவும் இரசிய தலைமையிலான பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பை வளர்க்கவும் சூயஸ் கால்வாய்க்கு மாற்று வணிக பாதையாகவும் கட்டமைத்து வருகிறது.
இந்தியாவிலிருந்து பொருட்கள் கப்பல் மூலம் ஈரானின் சபஹார் துறைமுகத்துக்கு செல்லும். சபஹரிலிருந்து பொருட்கள் சாலை மூலம் காஸ்பியன் கடல் துறைமுகத்துக்கு பந்தர்-இ-அன்சாலி போன்ற துறைமுகங்களுக்கு செல்கின்றன. காஸ்பியன் துறைமுகத்திலிருந்து பொருட்கள் காஸ்பியன் கடலைக் கடந்து ரஷ்யாவின் ஆஸ்த்ரகான் நகருக்கு கப்பல் மூலம் செல்கின்றன. ஆஸ்த்ரகானிலிருந்து பொருட்கள் ரஷ்ய ரயில்வே மூலம் ரஷ்ய கூட்டாட்சியின் மற்ற பகுதிகளுக்கும் பின்னர் வட ஐரோப்பாவுக்கும் செல்கின்றன. இதில் ஈரான் கேந்திர முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கு பெரும் அணுகூலம் இருக்கிறது. அதனால் தான் சபஹர் துறைமுக கட்டுமானத்தை இந்தியா எடுத்து செய்துவருகிறது.
இரசியாவின் தென் பாதுகாப்பு அரண்: ரஷ்யா, ஈரானை தனது "தெற்குப் பாதுகாப்பு அரணாக" (Southern Firewall) பார்க்கிறது. ஈரான் மூன்று மூலோபாய மண்டலங்களின் சந்திப்பில் அமைந்துள்ளது:
ஈராக்: இப்போது அமெரிக்க இராணுவத் தளங்களின் தாயகமாக உள்ளது.
சிரியா: படிப்படியாக மேற்குலக ஆதரவு நிலைக்குச் செல்கிறது.
பாரசீக வளைகுடா: பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள தளங்கள் மூலம் அமெரிக்க கடற்படை ஆதிக்கம் செலுத்துகிறது.
ஈரான் வீழ்ந்தாலோ அல்லது அமெரிக்க ஆதரவு நாடாக மாறினாலோ, ரஷ்யாவின் தென்புலத்தில் அமைந்துள்ள காஸ்பியன் கடல் மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலமாக விளங்கும் மத்திய ஆசியாவின் மையப் பகுதிக்கு ஒரு நேரடி நுழைவாயிலை அமெரிக்கா பெற்றுவிடும். காஸ்பியன் கடலில் அமெரிக்காவின் கடற்படை ஆதிக்கம் பெறுவதற்கான வாய்ப்பை ரஷ்யா ஒருபோதும் விரும்பியதில்லை.
இந்தக் கேடயத்தைப் பற்றி ரஷ்யா மிகவும் தீவிரமாக உள்ளது. அதனால்தான் ரஷ்யாவும் ஈரானும் 5,000-க்கும் மேற்பட்ட கூட்டு இராணுவப் பயிற்சிகள், ஆயுதப் பரிமாற்றங்கள் மற்றும் உளவுத்துறைப் பரிமாற்றங்களை நடத்தியுள்ளன. உண்மையில், ஈரான் தனது பந்தர் அன்சாலி (Bandar Anzali) போன்ற துறைமுகங்களில் ரஷ்யப் போர்க்கப்பல்கள் மற்றும் விநியோகக் கப்பல்கள் நங்கூரமிடவும், எரிபொருள் நிரப்பவும் அனுமதிக்கிறது. ஈரான் மட்டும் தான் இப்பகுதியில் நேட்டோ மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கை தடுத்து நிறுத்தும் ஒரு பெரிய சக்தியாக உள்ளது.
ஈரான் வீழ்ந்தால், அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் கொல்லைப்புறமான மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடலுக்குள் நுழைய ஒரு நேரடி வாசல் கிடைத்துவிடும். ரஷ்யா தனது கடற்படைக்கு தளவாட மையமாகப் பயன்படுத்தும் ஈரானின் பந்தர் அன்சாலி போன்ற துறைமுகங்களையும் இழக்க நேரிடும். இது ரஷ்யாவின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும்.
இராணுவக் கூட்டணி - ட்ரோன்கள் முதல் பிராந்திய துணை மேலாதிக்க செல்வாக்கு வரை
ஆயுதப் பகிர்வு: ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. ரஷ்யா, ஈரானுக்கு ஷி-300 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. மறுபுறம், உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பெரும் பலமாக இருப்பது ஈரானின் ஷாஹித்-136 மற்றும் ஷாஹித்-131 ட்ரோன்கள்தான். இந்த மலிவான ஆனால் சக்திவாய்ந்த ட்ரோன்கள், ரஷ்யாவின் மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை மிச்சப்படுத்துகின்றன. இதுமட்டுமல்லாமல் மொஹாஜர்-6 போன்ற ஆயுதம் ஏந்திய ட்ரோன்களும் வழங்கப்பட்டன. இவை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஈரானின் ஃபத்தா-110 போன்ற குறுந்தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகள் (SRBMs) மற்றும் அவற்றின் தொழில்நுட்பம் ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதேபோல ட்ரோன்களை ரஷ்யாவிலேயே தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் ஈரான் பகிர்ந்துள்ளது. இதனால் இரசியா இந்த ட்ரோன்களை தானே தயாரிக்கிறது; அதுமட்டுமல்லாமல் பல ஏவுகணை தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து வருவதால், ஈரான் வீழ்வது, ரஷ்யா இந்த முக்கிய இராணுவச் சொத்தை இழந்துவிடும். அது மட்டுமல்லாமல் ஈரான், பெரும்பகுதி இரசிய போர்தளவாடங்களை நம்பி இருக்கும் நாடாக இருந்து வருகிறது; இரசியாவின் நவீன போர் தளவாடங்களான S400 வான் பாதுகாப்பு அமைப்பு, சுகோய் போர் விமானம் SU-35 போன்றவற்றின் நுகர்வாளராக இருக்கின்றது. ஈரானை இழந்தால், இரசியாவின் இராணுவ சந்தையின் முக்கிய நுகர்வோர் பட்டியலில் ஒருவரை இழக்க நேரிடும்.
பிராந்திய துணை மேலாதிக்க செல்வாக்கு: ஈரான், மத்திய கிழக்கில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய செல்வாக்கை எதிர்க்கும் "எதிர்ப்பின் அச்சு" (Axis of Resistance) எனப்படும் அமைப்புகளின் புரவலராக உள்ளது. லெபனானின் ஹெஸ்புல்லா, யேமனின் ஹவுதிகள், சிரியாவின் அசாத் ஆட்சி (இருந்து, தற்போதைய ஆட்சியிலும் சில செல்வாக்கை பெற்றுள்ளது) மற்றும் ஈராக்கின் ஷியா போராளிக் குழுக்கள் போன்ற அனைத்தும் ஈரானின் ஆதரவிலேயே இயங்குகின்றன. அதனால் மத்திய கிழக்கு நாடுகளில், இரசிய-சீன மேலாதிக்கத்தை பெறுவதற்கு இக்குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஈரான் வீழ்வது என்பது சுற்றி இருக்கும் நாடுகளில் தங்களின் செல்வாக்கையும் இழக்க நேரிடும்.
அமெரிக்க - இஸ்ரேலின் ஈரான் மீதான போர் எதற்கு:
இரசிய - சீன முகாமுக்கு ஈரான் எவ்வளவு முக்கியம்? எப்படி முக்கியம் என்பதை மேலே பார்த்தோம். எவ்வளவு தூரம் அவர்களின் உலக மேலாதிக்கத்திற்கு ஈரான் உதவுகிறதோ அந்த அளவுக்கு அமெரிக்க உலக மேலாதிக்கத்திற்கு பாதிப்பாகவும் அமைகிறது; மேற்கூறிய அனைத்தும் எவ்வளவு தூரம் செயல்பாட்டுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கம் கேள்விக்குறியாகிறது. அதுமட்டுமல்லாமல் அதன் காரணமாக அமெரிக்காவின் டாலரும் கேள்விக்குள்ளாகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரானின் வலைப்பின்னல்: அமெரிக்க டாலர் உலகின் முதன்மை ஆதிக்க நாணயமாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவிற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் அதிகாரத்தை வழங்கியுள்ளதோடு அதற்கு மிதமிஞ்சிய சலுகையையும் கொடுத்துவருகிறது. அமெரிக்காவிற்கு ஏற்படும் பெரும் வர்த்தகப் பற்றாக்குறைகளை எதிர்கொள்ள, மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் கடினமாக உழைத்து; அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய வேண்டும். அதை இறக்குமதி செய்ய அமெரிக்கா செய்ய வேண்டியதெல்லாம், அமெரிக்க டாலரை அச்சிடுவது மட்டுமே. ஆனால் அமெரிக்காவை தவிர மற்ற நாடுகள் இந்த நடைமுறையை கைக்கொள்ள முடியாது. அப்படி செய்தால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வை சந்திக்க நேரிடும். அமெரிக்காவின் டாலருக்கு உலகளாவிய தேவை இருக்கும் வரை அமெரிக்காவிற்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் உலக நாடுகளை சுரண்டி கொழுக்க முடியும்.
கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடைமுறையால், டாலரை தனது தனிப்பட்ட புவிசார் அரசியல் ஆயுதமாக பாவித்து வருகிறது. இதனால் அதிகரித்து வரும் எதிர்ப்புகளின் விளைவு, உலகளாவிய அளவில் நாடுகள் டாலர்-நீக்கமயத்தை (de-dollarization) ஊக்குவித்து, அமெரிக்க டாலருக்கு மாற்றுகளைத் தேடும் ஒரு இயக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. அமெரிக்க டாலரை மாற்றியமைக்க ஒரு புதிய உலகளாவிய இருப்பு நாணயத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து பலத்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தாலும், இது உருவாக பல ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், இன்று உலகம் முழுவதும் மாற்றை தேடி மேலும் மேலும் விவாதங்களும் நடைமுறைகளையும் காணமுடிகிறது. இந்த டாலர் நீக்கமயத்தின் உலகளாவிய இயக்கத்தில் மிகவும் முக்கியமான ஒரு நாடு ஈரான். ஈரான் தனது எண்ணெய் மற்றும் எரிவாயுவை மேலும் மேலும் அமெரிக்க டாலர்களில் அல்லாமல், மற்ற நாணயங்களில், குறிப்பாக சீன நாணயமான ரென்மின்பி அல்லது யுவானில் விற்பனை செய்து வருகிறது. இது அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் அமெரிக்காவை உண்மையில் பயமுறுத்தியுள்ளது. மேலும் பல தசாப்தங்களாக, அமெரிக்க அரசாங்கம் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களை அமெரிக்க டாலர்களில் மட்டுமே தங்கள் எண்ணெயை விற்கும்படி கட்டாயப்படுத்தி சாதித்து வந்தது. இது குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பாரசீக வளைகுடா முடியாட்சிகளிடம் நடைமுறை படுத்தி வரப்பட்டது. 1970 களில் இந்த நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை டாலர்களில் விற்கும்படி கட்டாயப்படுத்தியது, இதன் மூலம் அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையை அதிகமாக்கியது. ஏனென்றால் எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய் இல்லாமல் இருக்க முடியாது. கச்சா எண்ணெய் டாலரில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, டாலரை சரவதேச மயமாக்கியது மட்டுமல்லாமல், கையிருப்பில் வைத்துக்கொண்டால் மட்டுமே நாடுகள் ஒரு சம நிலையில் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கி அமெரிக்கா வெற்றி கண்டது.
2024 இல், ஈரான் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸின் முழு உறுப்பினரானது, மேலும் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, பிரிக்ஸ் உலகளாவிய டாலர் நீக்கமயத்திற்கு ஒரு தளமாக இருக்க வேண்டும் என்று கூறினார். உலகளாவிய தெற்கு நாடுகள் அமெரிக்க டாலரை மிகவும் சார்ந்திருக்கின்றன, இது அமெரிக்க மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது என்று கமேனி கூறினார். மேலும் அவர், "பிரிக்ஸ் உறுப்பினர்கள் வர்த்தகப் பரிமாற்றத்திலிருந்து முடிந்தவரை அமெரிக்க டாலரைத் தவிர்ப்பதே நோக்கம், அது ஒரு பெரிய மற்றும் முக்கியமான வேலையாக இருக்கும்" என்றார்.
ஈரான் அரசாங்கம் உலகளாவிய வர்த்தக சமநிலையின்மைகளைத் தீர்க்க ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதை ஆதரிப்பதாகவும் கூறியது. இருப்பினும் இது இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறதே ஒழிய, இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் குறுகிய காலத்தில், ஈரான் மற்றும் பிற பிரிக்ஸ் நாடுகள் ஏற்கனவே தங்கள் சர்வதேச வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்கள், தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி தங்கள் இருதரப்பு வர்த்தக பங்காளிகளுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் டாலர் நீக்கமயத்தை நடைமுறை படுத்திவருகின்றன. எனவே, உதாரணமாக, ஈரான் மற்றும் ரஷ்யா தங்கள் இருதரப்பு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட அனைத்தையும் டாலர் நீக்கத்தை நடைமுறை படுத்தியுள்ளன. சவூதி அரேபியா கூட சீனாவின் நாணயமான யுவானில் தனது எண்ணெயை விற்பது பற்றி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இது அமெரிக்க பெட்ரோடாலர் அமைப்புக்கு ஒரு பெரிய அடியாக கருதப்படுகிறது.
இப்படி அமெரிக்க ஆதிக்க நிதி அமைப்பின் இதயம் டாலர் ஆகும். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகவும் செழிப்பான பொருளாதாரமாகவும் இருப்பதற்கு இந்த டாலர் ஆதிக்கம்தான் உறுதி செய்கிறது. எனவே, அமெரிக்கா ஈரானில் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள முயற்சிப்பதற்கான மிக முக்கிய காரணங்களுள் இது முதன்மையானதாகவும் இருக்கிறது. ஈராக்கின் சதாமும், லெபனானின் கதாஃபியும் வீழ்த்தி கொல்லப்பட்டதற்கான காரணத்தில் இதுவும் பிரதானமாக இருந்தது மறுப்பதற்கில்லை.
ஏகாதிபத்திய போர்களும் புதிய காலனிய அரசியலும்:
கிளவொட்ஸ்கி குறிப்பிட்டது போல, "போர் என்பது அரசியல் கொள்கையின் வேறு வழித் தொடர்ச்சி". இதை லெனின் "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" என்ற நூலில், ஏகாதிபத்தியம் இருக்கும் வரை போர்களை ஒழிக்க முடியாது என்பதை நிறுவியிருப்பார். தற்போதைய இஸ்ரேல் - ஈரான் யுத்தம், ஏகாதிபத்திய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களிலிருந்தும், புதியகாலனித்துவ மறுபங்கீட்டிற்க்கான போட்டியிலிருந்தும் மேலாதிக்கத்திற்கான நலன்களிலிருந்தும் தவிர்க்க முடியாமல் உருவாகியிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
இன்றைய சூழலில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் உலகை மேலும் மேலும் பல்துருவ ஏகாதிபத்திய கூட்டுகளின் மேலாதிக்கத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த பல்துருவ போட்டி எந்தளவுக்கு ஆழப்படுகிறதோ அல்லது உக்கிரமடைகிறதோ, அதே அளவு போர்களும், ஆட்சி கவிழ்ப்புகளும், அரசியல் சதிகளும் உக்கிரமடையும். இதன் விளைவு, ஏகாதிபத்திய முகாம்களும் அதன் அடிவருடி புதியகாலனிய அரசுகளும் தவிர்க்க முடியாமல் அணி சேர்க்கைகளும் தீவிரப்படுகின்றன. இதன் மூலம் புதிய காலனித்துவ மறுப்பங்கீடு நிதர்சனமாகிறது. இது அமைதி வழியில் நடக்கப்போகிறதா அல்லது யுத்த வடிவில் நடக்கப்போகிறதா என்பது ஏகாதிபத்தியங்களின் அரசியல் பொருளாதார பலங்களைக் கொண்டும் புதியகாலனித்துவ அரசியல்-பொருளாதாராங்களைக் கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் ஏகாதிபத்திய முகாம்கள் புதிய காலனித்துவ நாடுகளில் எந்த வடிவில் வந்தாலும் விளைவுகள் ஒன்றுதான். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமித்த 20 ஆண்டுகளில் 5 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதேப்போல இந்தியாவை அமைதி வழியில் புதியகாலனித்துவ பொருளாதாரத்தை அமல்படுத்தியதில், விவசாயிகள் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 5 இலட்சம் மக்கள் (தற்)கொலை செய்யப்பட்டனர். இழப்புகளின் வடிவமோ, பெயரோ மாறலாம்; இழப்பு ஒன்றுதான். ஏகாதிபத்தியத்தின் ஏகபோக நிதி மூலதன கும்பல் சொந்த நாட்டு மக்களையும் மூன்றாம் உலக நாட்டு மக்களையும் ஒட்டச் சுரண்டி கொழுத்து கொண்டிருக்கிறது. அதே கும்பல் ஆயுத உற்பத்தியிலும் இருப்பதால் உயிரையும் சுரண்டி கொழுக்கிறது. அமெரிக்க மருந்து நிறுவனங்கள் சீனாவில் மருந்து உற்பத்தி செய்வது $280. ஆனால் சொந்த நாட்டு மக்களுக்கு அந்த மருந்தை $8000 டாலருக்கு மேல் விற்கிறது. இதனால் சொந்த நாட்டு மக்களும் மருந்துவம் கிடைக்காமல் கொல்லப்படுகிறார்கள். ஏகபோக நிதி மூலதனத்தின் பிடியில் பாட்டாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும், மூன்றாம் உலக நாடுகளும் சிக்குண்டு சின்னாபின்னமாகிறது. உலகெங்கிலும் தங்கள் நிதி மூலதனத்தை காப்பாற்றி கொள்ளவும், இலாபமடையவும் மூன்றாம் உலக நாடுகளுக்கிடையில் தேசிய வெறியை கிளப்பி பகைமையை ஆழப்படுத்துகிறது. (வட கொரியா Vs தென் கொரியா, இந்தியா Vs பாகிஸ்தான், இஸ்ரேல் Vs ஈரான்) ஒரு தேசத்திற்குள்ளேயே மேலும் பிளவுப்படுத்த நிறம், இனம், மொழி மற்றும் சாதி மதம் பிரிவுகளின் அடிப்படையில் வெறுப்புகளை ஆழப்படுத்தி மக்களை துண்டாடுகிறது. ஒவ்வொரு நாடுகளின் நிலைமைகேற்ப (வெள்ளை Vs கருப்பு, ஆரியம் Vs திராவிடம், ஷியா Vs சன்னி). இந்த பாகுபாடுகளைப் பயன்படுத்தி பயங்கரவாத இயக்கங்களை வளர்க்க நிதி மற்றும் ஆயுத உதவிகளைக்கூட செய்கிறது; அந்தந்த நாடுகளுக்கேற்ற வகையில் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி உழைக்கும் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மக்களையும் அவர்கள் சொத்துக்களையும் சூறையாடுகிறது. பல நேரங்களில் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளே பயங்கரவாத இயக்கங்களோடு இணைந்து அரசு பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இந்த பிரிவினையை ஆழப்படுத்துகிறது. ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பிளவை பயன்படுத்தி ஏகாதிபத்தியமே பாசிச கருப்புச் சட்டங்களை இயற்ற வற்புறுத்துகிறது. அந்த கொடும் சட்டங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களையே மேலும் அடக்கி அச்சுறுத்த செய்கிறது. இவை அனைத்திற்கும் ஏகாதிபத்திய நிதி மூலதனமே பிரதான காரணம். தங்களின் மேலாதிக்கத்திற்கும் இலாபத்திற்கும் எத்தனை கொடுமைகளை கொலைகளையும் செய்ய அஞ்சுவதில்லை. இதனடிப்படையிலிருந்து இஸ்ரேல் - ஈரான் போரை பார்க்க வேண்டும்.
இஸ்ரேல்-ஈரான் போர் ஒரு பிராந்திய துணை மேலாதிக்கப் போர். இந்தப் போரில் அமெரிக்க முகாமும் இரசிய - சீன முகாமும் அந்த பிராந்தியத்தில் தங்கள் மேலாதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன. இன்றைய சூழலில், ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கிடையில் நேரடியாக போர்களில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் ஏகாதிபத்தியங்கள் கடந்த போர்களில் இருந்து படிப்பினைக் கற்றுக்கொண்டுள்ளன. அவை நேரடி காலனிய-ஆக்கிரமிப்பு முறைகளை கைவிட்டு (விதி விலக்காக சில நேரங்களில் அதையும் கைக்கொள்கின்றனர்), தங்களது மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் புதியகாலனிய அரசுகள் மூலம் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. நேரடியாக போரில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அரசியல்-பொருளாதார ஒப்பந்தங்கள், பிராந்தியப் போர், பதிலிப்போர் மற்றும் மறைமுகப் போர் வழியாகவே உலகை (புதிய காலனிய நாடுகளை) மறுபங்கீடு செய்து வருகின்றன. இந்த அடிப்படையில்தான் ஈரானுடன் இரசியா-சீனா கூட்டணியும் பல புதிய காலனிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இரு ஏகாதிபத்தியத்துடனும் ஈரான் அரசு நீண்டகால மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு இரசியாவும் சீனாவும் தங்கள் ஆயுதங்களின் விற்பனை கூடமாக மாற்றியுள்ளது. இரசியாவின் கச்சா எண்ணெய் கார்டெல் கட்டுப்பாட்டில் ஈரான் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஐரோப்பிய பொருளாதார தடையை பயன்படுத்தி சீனா ஈரானின் எண்ணெயை மிகக் குறைந்த விலையில் வாங்குகிறது. அதே வர்த்தகத்தை பயன்படுத்தி தன்னுடைய பொருட்களையும் ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது. இப்படி எந்தவொரு ஏகாதிபத்தியமும் இன்னொரு நாட்டின் இறையாண்மையை அங்கீகரிப்பதில்லை. ஏகாதிபத்தியங்கள் தங்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டத்தான் எதிர்க்கவும் செய்கிறது, ஒத்துழைக்கவும் செய்கிறது. விளைவு புதிய காலனிய அரசியல்-பொருளாதாரம் தான். அமெரிக்க - ஐரோப்பா ஈரானை வர்த்தக தடை மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இரசியாவும் - சீனாவும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. உலக எண்ணெய் வளக் கட்டுப்பாட்டுக்காக அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் ஈரான் மீது போர் தொடுக்கிறது. அதே உலக எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது இரசிய-சீன ஏகாதிபத்தியங்கள். டாலர் மேலாதிக்க காப்பதற்காக ஈரானின் IRGC தலைவர்களை கொள்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். தங்கள் நாணய மேலாதிக்கத்திற்காக ஈரானுடன் ஒப்பந்தம் செய்கிறது. இந்த யுத்தம் ஏகாதிபத்தியங்களின் இயந்திரங்களுக்குத் தொடர்ந்து தீனி போட்டு, இஸரேல் - ஈரான் நாடுகளை பொருளாதார சீர்கேட்டுக்குத்தான் இட்டுச் செல்லுகிறது. இதில் இரு தரப்பு ஏகாதிபத்தியங்களும் இஸ்ரேல் ஈரானின் ஸ்திரத்தன்மை பற்றியோ, இஸ்ரேலின் ஈரானின் சுயசார்ப்பு பற்றியோ அக்கறை கொள்ளாது. அதனால்தான் இரு ஏகாதிபத்திய முகாம்களையும் புறக்கணித்து இந்த இரு நாட்டு மக்கள் சுயசார்பு பொருளாதாரத்தையும், சுதேசிய உற்பத்தி முறையையும் கட்டி அமைப்பதுதான் தீர்வு. இஸ்ரேல்-ஈரான் யுத்தம் என்பது பிராந்திய துணை மேலாதிக்க சக்திப் போட்டி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அப்பால், உலக வல்லரசுகளின் மேலாதிக்கப் போட்டி மற்றும் வளங்களுக்கான மறுபங்கீட்டுப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகும். இதுபோன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கிடையிலான மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளை அம்பலப்படுத்துவதும், உள்நாட்டில் அந்த மேலாதிக்க சக்திகளுக்கு சேவை செய்யும் சக்திகளை அம்பலப்படுத்துவதும் அவசியமாகும். ஏகாதிபத்திய சக்திகளுடனான சமச்சீரற்ற இரு அல்லது பல தரப்பு ஒப்பந்தங்களிலிருந்து மூன்றாம் உலக நாடுகளை வெளியேறக் கோரி உள்நாட்டு உழைக்கும் மக்கள் போராட வேண்டும். ஏகாதிபத்திய முகாம்களுடன் அரசியல் பொருளாதார கூட்டுகளிலிருந்து வெளியேறி மூன்றாம் உலக நாடுகளுக்கிடையே கூட்டுகள் ஏற்படுத்த கோரி பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும். இது அவ்வளவு எளிதான போராட்டமல்ல. இந்த போராட்டத்தை முழு ஈடுபாட்டுடன் கொண்டு செல்வதற்கு வர்க்க அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும். வர்க்க அமைப்புகளின் ஊடாகவே மக்கள் ஜனநாயகப் புரட்சிப் போராட்டங்களை வளர்த்தெடுப்பதும் அவசியமாகிறது.
சமரன்
(டிசம்பர் 2025 - ஜனவரி 2026 மாத இதழில்)