மாநில உரிமைகளைப் பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதா 2026

பூவுலகு

மாநில உரிமைகளைப் பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதா 2026

கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதா 2026ஐ ஒன்றிய அரசு மக்களவையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.

MMDR 1957 (Mines and Minerals (Development and Regulation) Act of 1957) சட்டமானது, சுரங்கங்கள் கனிமங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.  தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் பிரிவு 2 ஒன்றிய அரசுக்கு கனிமம் கொண்ட நிலங்களையும்( mineral bearing lands) ஒழுங்குபடுத்துவதற்கான கூடுதல் அதிகாரத்தை அளிக்கிறது. கனிமம் கொண்ட நிலம் என்பது, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் அளவுகோல்களுக்கு ஏற்ப கனிமப் பொருட்களைக் கொண்டுள்ள எந்தவொரு நிலமாகவும் வரையறுக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மாநில அரசுக்கு தன் எல்லைக்குள் உள்ள நிலத்தின் மீதான உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகும்.

இம்மசோதாவானது MMDR 1957 சட்டத்தில் பிரிவு 9D என்பதைப் புதிதாக இணைக்கிறது. இது மிக மிக ஆபத்தான திருத்தமாகும். இத்திருத்தத்தின்படி,  கனிமங்களின் உரிமைகள் அல்லது கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது எந்த வரியையும்,  தீர்வைகளையும் அல்லது வேறு எந்தப் பெயர் கொண்ட கட்டணத்தையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக விதிக்க முடியாது. அப்படி விதிக்க வேண்டுமென்றால் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும்தான் வரி விதிக்க முடியும்.

அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளால் ஏற்கனவே இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை என்கிறது இப்புதிய மசோதா.

இத்திருத்தமானது முழுக்க முழுக்க மாநில உரிமைகளை முடக்குவதோடு, கூடுதல் நிதிச்சுமையை மாநிலங்களுக்கு ஏற்படுத்தக்கூடியது. ஜூலை 25, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் மீதான நிலங்கள் மீது வரி மற்றும் செஸ் (Cess) விதிக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

நிலம் என்பது மாநிலப் பட்டியலின் பிரிவு 18-ன் கீழ் வரும் ஒரு மாநில விஷயமாகும். மாநில சட்டமன்றங்களுக்கு நிலத்தின் மீது வரி விதிக்கும் அதிகாரமும் உண்டு என்பதையும் உச்ச  நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. இப்போது கொண்டு வரப்பட்ட MMDR  மசோதா இத்தீர்ப்புக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் முரணானது.

முக்கிய மற்றும் அரிய வகைக் கனிமங்கள் என்னும் கருத்து அமெரிக்காவால் 2019ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. எதிர்காலப் பொருளாதார உற்பத்தியைக் கருத்தில் கொண்டு சுமார் 300 வகையான கனிமங்களை முக்கியக்  கனிமங்கள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்கா இடையே 2021 ஆம் ஆண்டு முக்கியக் கனிமங்களுக்கான ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் கனிம வளத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்து அணுக் கனிமங்கள் உள்ளிட்ட கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு இடையூறாக மாநில அரசுகளோ, பொதுமக்களோ வந்துவிடக் கூடாதெனும் நோக்கத்தோடு MMDR 1957 சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது.

MMDR 1957 சட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு திருத்தம் ஒன்றை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அத்திருத்தம் லித்தியம் (lithium), பெரிலியம் (beryllium), நியோபியம் (niobium), டைட்டானியம் (titanium), டான்டலம் (tantalum), மற்றும் சிர்கோனியம் (zirconium) எனும் ஆறு அணுக்கனிமங்களைக் கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட வழிவகுத்தது . அதாவது முக்கியமானக் கனிமங்களை அள்ளித்தோண்டி எடுப்பதிலும், தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றும் என்றானது.

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் திட்டங்களைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2025ஆம் ஆண்டு அறிவித்தது.  மேலும் அகந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

மிகத் துல்லியமாக சட்டத் திருத்தங்கள் வழியாக கனிம வளங்களை அகந்தெடுக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிரது ஒன்றிய அரசு. பெருநிறுவனங்களுக்கு வசதியாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களிலிருந்து விலக்களித்தது. தற்போது மாநில அரசின் வரிகளிலிருந்தும் அவற்றைக் காப்பாற்றியுள்ளது ஒன்றிய அரசு. GST வரி அமலுக்கு வந்தபோது நீருக்காக மாநில அரசுகள் வசூலித்து வந்த Cess நீக்கப்பட்டது. தற்போது கனிம வளங்களின் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தையும் பறித்துள்ளது. அதாவது நிலத்தின் மீதான அதிகாரம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கனிமங்கள் உள்ளிட்ட வளங்களின் அதிகாரம் ஒன்றிய அரசிடமே இருக்கும் வகையில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களின் லாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்திருத்தங்கள் சுற்றுச்சூழலுக்குப் பேரபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை. பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிற இம்முயற்சியை தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் இம்மசோதாவை தமிழக வெற்றிக் கழக அரசும் தீவிரமாக எதிர்க்க வேண்டும் எனக் கோருகிறோம்.

https://poovulagu.org/statements/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-mmdr-bill-diluting-state-powers/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு