உச்ச நீதிமன்றத்தின் சி.பி.ஐ விசாரணை ஆர்டர் ஏற்புடையதா?
அறம் இணைய இதழ்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அக்டோபர் – 13 , 2025 திங்களன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து சி.பி.ஐ களம் கண்டுள்ளது. இந்த உச்சநீதிமன்ற அணுகுமுறை பற்றி அலசுகிறார், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்;
சிபிஐ அமைப்பு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய போலீஸ் அமைப்பு. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால் , சம்பந்தப்பட்ட மாநிலமே அதற்கு ஒப்புதல் தர வேண்டும். காரணம் ,அரசமைப்புச் சட்டத்தின்படி சட்ட ஒழுங்கு , குற்ற விசாரணை மற்றும் காவல்துறை பற்றிய அதிகாரம் மாநில அரசின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்டது.
இதற்கு விலக்கு உண்டு. அதாவது அரசமைப்புச் சட்டம் நீதி பரிபாலனத்திற்காக உருவாக்கியுள்ள உயர்ந்த அமைப்பான உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் , சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம். இந்த அதிகாரத்தை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் .
உதாரணத்திற்கு ,காவல்துறையே படுகொலை போன்ற கொடுங் குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் வழக்குகளில் , உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்.
அதாவது ,லாக்கப் மரணங்கள் போன்ற வழக்குகளில் குற்றம் இழைத்த காவல்துறையே புலன் விசாரணை செய்வது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை தராது என்பதால், அது போன்ற வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்.
சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர்கள் இறந்தது சம்பந்தமான வழக்கை விசாரிப்பதற்கும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
1999 ஆம் ஆண்டில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் மேல் தடியடி நடத்தப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த குற்ற வழக்கை சிபிஐ புலனாய்வு செய்யும் மனுவை அப்போதைய தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் அமர்வு தள்ளுபடி செய்தது. குற்றவியல் வழக்கு விசாரணைகள் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால் சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. 17 தொழிலாளர்கள் இறந்ததற்கு போலீஸ் நடத்திய தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சும் தான். எனவே சிபிஐ புலன் ஆய்வு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். இதைக் குறிப்பிட்டு காட்டுவதற்கு காரணம், சிபிஐ புலன் விசாரணை கோரும் வழக்குகளில், நீதிமன்றங்கள் சிபிஐ புலன் விசாரணைக்கு வழக்கமாக உத்தரவிடுவதில்லை என்பதை சுட்டிக் காட்டத் தான்.
அரசியல் அழுத்தங்கள் போன்ற காரணத்திற்காக புலன்விசாரணை பாதிக்கப்படுவதாக உள்ள பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிடலாம்.
பட்டியலின தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட குற்ற வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
முன்னாள் அதிமுக மந்திரி சி.வி.சண்முகம் வீடேறி பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் அவரின் மைத்துனர் இறந்தார்; அவர் தப்பி உயிர் பிழைத்தார். 5 ஆண்டுகள் ஆகியும் புலன்விசாரணை முடிவு பெறவில்லை . புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த நிலையில் இந்த வழக்கு நான் நீதிபதியாக இருந்த போது விசாரணைக்கு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சி அப்போது ஆளும் கட்சி உடன் கூட்டணியில் இருந்த காரணத்தால் காவல்துறை புலன் விசாரணையில் சுணக்கம் காட்டியது. இந்நிலையில் சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டேன். மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி அவர்களும் விசாரணை வளையத்துக்குள் வர வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
அடுத்ததாக , வழக்கமான குற்ற வழக்காக இல்லாமல் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களில் பலர் மாண்ட நிகழ்வுகள் சம்பந்தமான வழக்குகள் அல்லது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி போன்ற மிகப் பெரிய ஆளுமையின் கொலை வழக்கு போன்ற நிகழ்வுகளில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம்.
மேற்சொன்ன இந்த வரிசையில் வராத, கூட்ட நெரிசலில் இறக்கும் துயரச்சம்பவம் சம்பந்தமான வழக்கில் எப்படி சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
குஜராத்தில் ஒரு பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாலமே இடிந்துவிழுந்து அதனால் 140-க்கும் மேற்பட்டவர்கள் இறந்த சோக நிகழ்வு சம்பந்தமான வழக்கையும் சிபிஐ விசாரிக்கவில்லை.அங்கே எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி ,சிபிஐ விசாரணை கேட்கவில்லை.
எனவே கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் சம்பந்தமான வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சிபிஐ விசாரணை சம்பந்தமாக இதுவரை வழங்கப்பட்ட பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முற்றிலும் முரணானது. அதுமட்டுமன்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, மாநிலத்தின் உரிமையை பறிக்கும் விதமான முன் உதாரணமான தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமையும்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. இது ஏற்புடையது அல்ல.
குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் சிபிஐ புலனாய்வு விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்கு மாறாக , இந்த புலன் விசாரணை சம்பந்தமான விதிமுறைகளை மேற்சொன்ன உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வகுத்தளிப்பார் என்பது ஏற்புடையது அல்ல.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், கரூர் துயரம் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கை சிபிஐ புலனாய்வு செய்ய உத்தரவிடுமாறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு ,3 .10 .2025 தேதிய உத்தரவின் மூலம் சிபிஐ புலன் விசாரணை கோரிக்கையை நிராகரித்தது. வழக்கை தாக்கல் செய்தவர்கள், கரூர் காவல்துறை இந்த குற்ற வழக்கை புலனாய்வு செய்வதில் எந்தக் குறையையும் சுட்டிக் காண்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தான் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிட மறுத்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
இந்த உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் மேற் சொன்ன தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பத்தி 22இல் கடைசி நான்கு வரிகள் உள்ளது. அதில் சிபிஐ புலன் விசாரணை கோரிக்கை சம்பந்தமாக சரியான முடிவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு எடுக்கவில்லை என்று பொத்தாம் பொதுவில் கூறிச் செல்கிறது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பத்தி 27-ல் , தமிழ்நாடு அரசின் காவல்துறை உயர் அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை தரப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த காரணத்திற்காக சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிட இயலாது என்பது எனது தாழ்மையான கருத்து.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு 3-10-2025 அன்று வழங்கிய தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றம் கூறுவது ஏற்புடையதே. பொதுக் கூட்டங்கள் மற்றும் சாலையோர கூட்டங்கள் ஆகியவைகளை அரசியல் கட்சிகள் நடத்துவது சம்பந்தமான வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வின் முன் வந்த வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கை. சிறப்பு புலனாய்வுக்கான கோரிக்கை அந்த வழக்கில் இல்லாத போது, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த உத்தரவு தவறு என்பதை சுட்டிக்காட்டுகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பாதிக்கப்பட்ட தரப்பினரை விசாரிக்காமல் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இந்த தீர்ப்பை வழங்கியிருப்பது சரியல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் காரணமும் ஏற்புடையதே.
ஆனால் எந்தத் தவறை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி செய்தார் என்று சுட்டிக் காண்பித்ததோ அதே தவறை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அதாவது, சிபிஐ புலன் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னர் தமிழ்நாடு அரசை கேட்டு தமிழ்நாடு அரசிற்கு முழு வாய்ப்பு வழங்கவில்லை உச்ச நீதிமன்றம்.
குறிப்பாக இந்த வழக்கில் ,எதிர்க்கட்சியினரான தமிழ்நாடு அரசின் பதில் மனுவைப் பெறாமலும் போதிய வாய்ப்பு அளிக்காமலும் இடைக்கால உத்தரவாக அவசர கோலத்தில் சிபிஐ புலனாய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரி அல்ல. அதாவது 10-10-2025 அன்று இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முன் முதல் முறையாக விசாரணைக்காக வந்தது. அன்றே 13 10 2025 இல் தீர்ப்பிற்காக ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இப்படி ஒரு அவசர கதியில் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு உள்ளது.
இது நீதித்துறை சுதந்திரமாக இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன், முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23044/karur-stampede-cbi-probe/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு