சூது, வாது, சூட்சுமம் நிறைந்த நிர்மலா மாமியின் பட்ஜெட்!

அறம் இணைய இதழ்

சூது, வாது, சூட்சுமம் நிறைந்த நிர்மலா மாமியின் பட்ஜெட்!

இதென்ன இப்படி சொல்கிறாய்? அவங்க பட்ஜெட்டில் வடிகிற தேனை எடுத்துப் பருகி ஊடகங்கள் எல்லாம் பரவசப்படுகையில், நீ மட்டும் சூது,வாது, சூட்சுமங்கிறாயே.. என்கிறீர்களா? பட்ஜெட்டில் உள்ள எழுத்துக்களை வாசித்து முடிவெடுப்பது அறிவுடமையா? இதோ, பொய்களையும், புளுகளையும் வரிசைப்படுத்திப் பார்ப்போமா?

வார்த்தை ஜாலங்கள், வகை,வகையான பொய்களைக் கொண்டு ஒரு பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவதில் நிர்மலா சீதாராமன் நிகரற்றவர் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

”இந்த பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும், அதன் உள் நோக்கங்களும் இந்திய மக்களின் முதல் எதிரியே அதன் அரசாங்கம் தான்” என அறைந்து சொல்ல வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது…!

உங்க 12 வருஷ ஆட்சி நீங்க யாருக்கானவர்கள்? என எங்கள் ஊரில் இருக்கும் பச்சபுள்ளைங்களூக்குக் கூட பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்ட நிலையில், – அதானி, அம்பானிகளுக்காகவே இந்த ஆட்சி அர்ப்பணிக்கப்பட்டுள்ள சூழலில் – பட்ஜெட்டில் எத்தனை புளுகலும், பொய்யும்!

‘அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சியாம்’

ஒவ்வொரு குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், பிராந்தியத்துக்கும் வளங்கள், வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வாங்களாம்! – ஆனால், அந்த சமூகமும், பிராந்தியமும் பாஜகவின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு இந்த வாக்குறுதி பொருந்தாது என்பதையும் சேர்த்தே சொல்லலாமே!

‘தற்சார்பு இந்தியா’ என்பதே வழிகாட்டியாம், இறக்குமதிச் சார்புகளை குறைப்பார்களாம்!

இதைக் கேட்கும் போது இன்பத் தேன் காதி பாய்கிறது. ஆனால், உண்மை என்ன? சுதேசி தொழில்களை சூறையாடி, விதேசி தொழிற்சாலைகளை விருட்சமாக வளர்த்தெடுப்பதே உங்கள் செயலாக உள்ளது. அதான் நல்ல குறைச்சிருக்காங்களே, இந்தியாவின் அத்தனை சிறு, குறுந் தொழில்களையும் சீனத்தில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை பொருட்கள் சீரழித்து கொன்று போட்டு!

வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய உற்பத்தித்திறன், குடும்பங்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வோம்!

பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் அழித்து, பல்லாயிரம் வேலை வாய்ப்புகளை பலி கொடுத்து, ஆட்சி செய்யும் பாஜக அரசுக்கு இதைச் சொல்லும் அருகதை எங்கிருந்து வந்தது? நடுத்தர குடும்பங்கள் எல்லாம் கீழ் நிலைமைக்கு சென்று கொண்டிருக்கும் சூழலை உருவாக்கி அரசு வேலை வாய்ப்புகளை ஒப்பந்தக் கூலி முறையாக்கிய பாஜக அரசின் பகட்டு வார்த்தைகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?

பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டுவார்களாம்!

பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டுதல்ங்கிற வார்த்தையை சொல்லிவிட்டு, அடுத்த வார்த்தையே நகர பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல்..என்பதிலேயே இவர்கள் அம்பலப்பட்டுவிட்டனர்!

பாரம்பரியத் தொழில்களை பாதுகாப்பதற்கு கிராமங்கள் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும். சதா சர்வகாலமும் மாநகரப் பகுதிகளை விரிவடையச் செய்வதும், சிறு நகரங்களையெல்லாம் பெரு நகரங்களாக்குவதும் என பல லட்சம் கிராமங்களின் அழிவு பாஜகவின் 12 வருட ஆட்சியின் சாதனைகளாக உள்ளது. வேளாண்மை மட்டுமா வீழ்த்தப்பட்டது? வேளாண் சார்ந்த சிறிய பாரம்பரிய தொழிகளும் சேர்ந்தல்லவா அழிந்து கொண்டுள்ளது!

வெற்றிகரமான சிறு, குறு, நடுத்தர தொழில்களை (MSME) உருவாக்குவதற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குகிறார்களாம்!

சிறு, குறுந்தொழில்களை நீங்க புதுசா உருவாக்கி வளர்க்க வேண்டியதில்லை எஜமானர்களே! ‘இருப்பதையேனும் வாழவிடுங்கள்’ என்று தானே, உங்களிடம் மன்றாடிக் கொண்டுள்ளோம். சிறு, குறுந் தொழில்களுக்கான உற்பத்தியை பெருந் தொழில்கள் காவு வாங்குவதற்கு சட்ட, திட்டங்களை உருவாக்கி, சர்வநாசம் செய்து கொண்டே இப்படி ’ஜால்ஜாப்பா’ பேசுறீங்க பாருங்க! – இதுல தான் இருக்கு உங்க சாமார்த்தியம்! இந்த 12 வருட பாஜக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதும், அதை நம்பி வாழ்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்த கண்ணீர் நிகழ்வுகளும் ஏராளம்! ஆனால், உங்க சேவைகளோ, பெருந்தொழில் நிறுவனங்களுக்கே தாராளம்!  17 லட்சம் கோடி ரூபாய் பெருந்தொழில் நிறுவனங்களின் வாரா கடனை தள்ளுபடி செய்த வள்ளல்கள் அல்லவா நீங்கள்?

சவாலான முறையில் பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்களை அமைக்கப்படுமாம்!

அதென்ன சவாலான முறையில்? ஆம், இந்த ஜவுளி பூங்காவை அமைக்கும் கார்ப்பரேட்களுக்காக விவசாயிகளிடம் உள்ள பல லட்சம் விளை நிலங்களை வலுகட்டாயமாக பிடுங்கி எடுப்பது ஒரு வகையில் சவால் தானே!

காதி மற்றும் கைத்தறித் தொழில்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்னெடுப்பு தொடங்கப்படுமாம்!

பருத்தி விவசாயத்தில் மரபணுமாற்றப்பட்ட பி.டி பருத்தியை வலிந்து திணித்து பல லட்சம் விவசாயிகளின் உயிர்களை பறித்தது ஒரு கொடுமை என்றால், பருத்திப் பஞ்சை தாறுமாறாக ஏற்றுமதி செய்து, உள் நாட்டில் பற்றாகுறைக்கு வழி வகுத்து, நெசவுத் தொழிலை நீர்த்து போகச் செய்த மரபில் வந்தவர்களன்றோ நீங்கள்? கைத்தறி நெசவையே ஏறத்தாழ காணாமலடித்துவிட்டு, அதற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்து, அஞ்சலி செலுத்தும் முயற்சியா இது? ஏற்கனவே மகாத்மா காந்தி பெயர் வைத்து ஊரக வேலை வாய்ப்புக்களைப் படிப்படியாக ஊத்தி மூடிய பிறகு அவர் பெயரையும் தூக்கினீர்களே..! அதைப் போல கைத்தறி நெசவையும் ’கைமா’ செய்யப் போகிறீர்கள் தானே!

அரிய வகை காந்தங்களுக்கான ​​கனிம வளம் நிறைந்த ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரத்யேக அரிய வகை கனிம வழித்தடங்களை அமைப்பர்களாம்!

ஆக, இனி மலைகள், இயற்கை வெளிகள் எல்லாம் எல்லாம் கபளிகரம் தான்! குவாரி முதலாளிகளின் சவாரிக்கு வழித் தடங்களை அமைக்கிறோம் என பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டியது தானே!

வர்த்தகமும், பன்முக தன்மையும் ஆபத்தில் இருக்கும் அந்நியச் சூழலை நாம் எதிர் கொள்கிறோம். வளங்கள் மற்றும் விநியோக சங்கிலிகளுக்கான அணுகல் தடைபட்டுள்ளதாம்!

ஆம், உண்மை தான்! இதற்கு யார் காரணம்? ரஷ்யா இந்திய மக்களுக்கு தந்த ஆயிலை அம்பானிக்கு தாரை வார்த்து, அந்நிய நாட்டிற்கு விற்று அவர் லாபம் பார்க்க, அமெரிக்க அதிபரின் கோபத்திற்கு இந்திய மக்களை பலிகடா ஆக்கிய புண்ணியவான் யார்?

வர்த்தகமும் மூலதனத் தேவைகளும் வரிவடைந்து கொண்டே இருக்கின்றன. இந்தச் சூழலில், உலகளாவிய சந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வாங்களாம்!

இதன் பொருள் மூலதனத் தேவைக்காக அன்னிய முதலீட்டாளர்களை இங்கே பட்டுக் கம்பளம் விரித்து வரிச் சலுகை தந்து வரவேற்பதும், உள் நாட்டு வளங்களை சூறையாடி இங்கு உற்பத்தி செய்வனவற்றை ஏற்றுமதி செய்வதுமாகும்.

சுய சார்பு தொழில்களையெல்லாம் சுயமிழக்க செய்து

தன்னிறைவான வாழ்க்கை முறைமைகளை தரைமட்டமாக்கி,

கார்ப்பரேட்கள் வாழ்வதற்கே கர்ம சிரத்தையாய் திட்டங்கள் தீட்டி

இந்திய மக்களையும், நாட்டையும் இருளுக்குள் தள்ளும்

இந்திய ஆட்சியாளர்களிடம் இது போன்ற பட்ஜெட்டைத் தவிர, வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23894/central-govt-budget-2026/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு