அந்தக் கோவிலில் கடவுள் இல்லை!

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்தக் கவிதை இன்று பொருந்திப் போகும் விந்தை. (தமிழில்: ஆர். விஜயசங்கர்)

அந்தக் கோவிலில் கடவுள் இல்லை!

‘அந்தக் கோவிலில் கடவுள் இல்லை’ என்றார் புனிதர்.

அரசனுக்கு கடும் கோபம்.

‘அங்கே கடவுள் இல்லையா? ‘புனிதரே! நீங்கள் ஒரு நாத்திகனைப் போல் பேசுகிறீர்களே! விலை மதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப் பட்ட தங்க விக்கிரகம் அந்த சிம்மாசனத்திலிருந்து ஒளி வீசுகிறது. இருந்தாலும், கோவில் காலியாக இருக்கிறது என்கிறீர்கள்.”

புனிதர்: “கோவில் காலியாக இல்லை. அது முழுவதும் அரசகுலப் பெருமிதத்தால் நிரம்பி வழிகிறது. அரசே! நீங்கள் அங்கே வைத்திருப்பது இந்த உலகத்தின் கடவுள் இல்லை.”

அவரை முறைத்துக் கொண்டே அரசர் சொன்னார்: “வானை முத்தமிடும் அந்தக் கட்டிடத்திற்காக 20 லட்சம் பொற்காசுகளைப் பொழிந்திருக்கிறேன். அனைத்து சடங்குகளையும் முடித்து விட்டு நான் அதைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இருந்தாலும் அந்த பிரம்மாண்ட கோவிலில் கடவுள் இல்லை என்று சொல்லத் துணிந்தீர்களா?”

புனிதர் அமைதி ததும்பச் சொன்னார்: “நீங்கள் அதைச் செய்த அதே வருடத்தில் உங்கள் குடிமக்கள் 20 லட்சம் பேரை வறட்சி தாக்கியது; உணவும் வீடுமில்லாமல் விரக்தியடைந்த மக்கள் உங்கள் வாசலுக்கு வந்து உதவி வேண்டுமெனக் கதறினார்கள். அவர்கள் விரட்டப் பட்டனர். காடுகளிலும், குகைகளிலும் தஞ்சமடைந்தனர்; சாலையோர மர நிழல்களிலும், பாழடைந்த கோவில்களிலும் தங்கினர். அந்த பிரம்மாண்ட கோவிலுக்காக 20 லட்சம் பொற்காசுகளை நீங்கள் செலவழித்த அதே ஆண்டில்தான்.

அப்போதுதான் கடவுள் சொன்னார்:

“என்னுடைய நிரந்தர வீடு நீல வானத்திற்கு நடுவே நிற்காமல் எரியும் விளக்குகளால் ஒளியூட்டப் பட்டிருக்கும். என் வீட்டின் அஸ்திவாரங்கள் உண்மை,அமைதி, கருணை, அன்பு ஆகியவற்றால் கட்டப் பட்டவை. வீடிழந்த தன் மக்களுக்கு வீட்டைக் கொடுக்க முடியாத இந்த சிறுமதி படைத்த கஞ்சனா எனக்கு ஒரு வீட்டைக் கொடுக்க முடியுமென்று கற்பனை செய்து கொள்கிறான்?”

‘இப்படிச் சொன்ன அன்றுதான் கடவுள் உங்கள் கோவிலிலிருந்து வெளியேறினார். சாலையோரங்களிலும், மரங்களுக்கு அடியிலும் வாழ்ந்த மக்களுடன் சேர்ந்து கொண்டார். பரந்த கடலில் கிடக்கும் நுரையின் வெறுமையைப் போல உன் கோவிலும் உள்ளீடற்றது.

அது வெறும் சொத்துக்களினாலும், பெருமிதத்தினாலும் ஆன குமிழிதான்.

வெறி கொண்ட அரசன் ஊளையிட்டான்: “மதி கெட்ட போலி மனிதனே! உடனடியாக என் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறு!’

புனிதர் அமைதி ததும்பச் சொன்னார்:

“நீங்கள் கடவுளை எங்கே நாடு கடத்தினீர்களோ அதே இடத்திற்குத்தான் பக்தர்களையும் கடத்துகிறீர்கள்”

தமிழில்: ஆர். விஜயசங்கர்

https://theaidem.com/ta-there-is-no-god-in-that-temple/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு