பல்கலைக்கழக மானியக் குழு (UGC-2025) -ன் புதிய விதிகள் மாணவர்களின் நலனுக்கானதா ?…!
செந்தளம்

மத்திய பாஜக அரசின் பல்வேறு மக்கள்விரோத பாசிச கொள்கையில் ஒன்று உயர்கல்வியை கார்ப்பரேட் - காவிமயமாக்கல்; புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பேரில், மாநில கல்வி உரிமையைப்பறிக்கும் பொருட்டு, கொரோனா பெரும் தொற்றை சாதகமாகப் பயன்படுத்தி பாராளமன்ற விவாதமில்லாமல் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 -ல் அமுல்படுத்தியது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது மும்மொழிக் கொள்கை, இந்திதான் இந்துராஷ்டிரத்தின் ஆட்சிமொழி என்றும் மோடி அரசனாது தனது ஆக்டோபஸ் காவி மத கரத்தை உயர்கல்வித்துக் துறையின் மீதும் நீட்டி வருகிறது. நாடுமுழுவதும் எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க மூன்றாவது மொழி எதுவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளாம், கட்டாயமில்லை மற்றும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்வது மாநிலங்கள் உரிமை மத்திய அரசு கட்டாயாப்படுத்தாது என்று பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை முதலில் அமுல் படுத்தி, அம்மாநிலங்களுக்கு அதிக நிதியையும் ஒதுக்கிவருகிறது.
அடுத்து பாசிச நடவடிக்கையாக, தன்னாட்சி அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுயின் (UGC) விதிகளை, தனக்கு சாதகமாக செயல்படக்கூடிய யுஜிசி தலைவரை நியமித்து அதன் விதிகளை ஜனவரி 6, 2025-ல் UGC -2025 என்ற புதிய அறிக்கையை வெளியிட்டதுள்ளது. யார் இந்த யுஜிசியின் தலைவர் என்பது முக்கியமானது. பேராசிரியர் ஜெகதேஷ் குமார் UGC யின் தலைவராக 2022 லில் நியமிக்கப்பட்டார். இவர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜனவரி 2016 - பிப்ரவரி 2022) துணைவேந்தராக இருந்தவர், அவர் காலத்தில் தான் பல்வேறு சர்சைக்குரிய மாணவர் விரோத திட்டங்களை அமுல்படுத்தி, RSS அமைப்பை ஊடுருவ செய்தும், பல்கலைக்கழக மாணவ- தலைவராக இருந்த SFI மாணவரின் பதவிப்பறித்தும் துப்பாக்கி கலாசாரத்தையும் ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதிய தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும், உயர்கல்வியின் தரம் உயரும், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வழிவகுக்கும் என்றெல்லாம் தனக்கேயுரிய பசப்பு வார்த்தைகளைக்கொண்டு, ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி தனது கார்ப்பரேட்மயமாக்கும் பாசிச போக்கை உயர்கல்வி துறையிலும் திணித்து வருகிறது மத்திய மோடி அரசு.
தகவல் பரிமாற்றத் தொழிநுட்பத் துறையில் நவீன தொழில்நுட்ப நுணுக்கங்கள் புத்தாக்கம் பெற்று வருகின்றன. முக்கியமாக, கல்வித் துறையில் தொழில்நுட்பங்களின் அறிமுகம், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி வரையில் கல்வி கற்பதிலும், கற்பிப்பதிலும் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வி முறையானது, மாணவர்களின் கற்றல் அதிகரிப்பு, குறிகிய நேரத்தில் மிக அதிக தகவல் பரிமாற்றங்கள் கிடைக்கப்பெற முடியும் என்பதும், ஆசிரியர்களின் பணியையும் எளிமைப்படுத்தியுள்ளது என்பதும் கல்வி மேம்பாட்டில் ஒரு அம்சம் மட்டுமே ஆகும். அதைக் காரணம் காட்டியே, ஆன்லைன் கல்வி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஊக்கமளிக்கும் என்று பல்வேறு வகையிலான அறிவிப்புகள், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக ஆன்லைன் கல்வி கற்றலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக அதிகமான நிதி ஒதுக்கியுள்ளதாகவும் மோடியின் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த முன்னெடுப்பு பள்ளி-கல்லூரியில் கல்வி மேம்பாட்டில் பெரும் வரவேற்பை அளிக்கும் என்றாலும், அதன் பின்விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உண்மையில், உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்ததான் UGC -2025 விதிமுறைகளை மாற்றியதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக கூறுவதாவது:
1. பல்துறை கலவைக் கல்வி, (interdisciplinary course) ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதாகும்.
2. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்கப்படுகிறது. அவர்கள் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தேர்வு முறைகளை மாற்றியமைக்கவும், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் (MOU) கூட்டுறவு கொள்ளவும் இது வழிவகுக்கிறது.
3. தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி: ஆன்லைன் கல்வி மற்றும் தொலைதூரக் கல்விக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு கிடைக்கிறது.
4. ஆராய்ச்சி மேம்பாடு: பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி சூழலை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
4. உள்கட்டமைப்பு மேம்பாடு: கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தவும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.
5. மாணவர் உதவித்தொகை: தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்விக் கடன்கள் வழங்குவதற்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பல் துறை கலவைக் கல்வி, (Interdisciplinary course):
பல்கலைக்கழக மானியக் குழுவினால் (UGC) பல்துறை கலவைக் கல்விக்கு இதுவரை அளிக்கப்பட்ட முக்கியத்துவம் ஓரளவிற்காவது உயர்கல்வியில் வளர்ச்சி இருந்தது. அதாவது பலதுறை கலவைக் கல்வி என்ற அணுகுமுறை, துறைகளுக்குள் சம்பந்தமுள்ள மற்ற துறைகளின் தொழில்நுட்பத்தை இணைக்கும் விதத்தில், மாணவர்களுக்கு விரிவான அறிவையும், திறன்களையும் வழங்குகிறது. இதன் மூலம், உயர்க்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதாகும். உதாரணமாக நேனோதொழிநுட்பப் படிப்பு (Nanoscience & Technoloy) என்பது சில வேதியியல் பொருட்கள் நேனோ துகள்கள் (nanoparticles) அளவில் மருத்துவ ஆய்வுகளிலும் (cancer medicine), சில உலோகப் பொருட்கள் நேனோ தொழில்நுட்ப முறையில் மூலாம் பூசுதல் (coating technoloy) அல்லது குறைக்கடத்திப் பொருட்களைக் கொண்டு சிப்ஸ் (Chips / ICs) தயாரித்தல் என்று அறிவியல் /பொறியியல் துறைகளின் உட்பிரிவுகளுக்கு தகுந்தாற்போல் மாணவர்களின் கலவை பட்டப்படிப்புகள் (interdisciplinary course) நடைமுறையில் உள்ளது. ஆம், குறிப்பிட்ட துறைச் சார்ந்த அதனுடன் தொடர்புடைய துறைகளின் அறிவையும் பெற்று, சிக்கலான பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை காண உதவுவது என்பது சாத்தியமானது. இது ஆராய்ச்சிக்கு புதிய பரிமாணங்களை கொடுக்கும் ஒரு உந்துதலாக அமைகிறது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையான பல்துறை அறிவை வழங்குவதோடு, மாணவர்கள் தொழில் உலகில் சிறந்து விளங்கவும் உதவுகிறது.
ஆனால் தற்போது மாற்றி அமைத்த UGC-2025 -ன் புதிய பல்துறை கல்வி என்பது அடிப்படை பட்டைய கல்வியில் (இளங்கலை பட்டப்படிப்பில்) (Under Graduate) கலவை, அதாவது அறிவியல் படித்தவனும் சமூகவியல் அல்லது சட்டங்கள் படித்தவனும், ஏன் மருத்துவம் படித்தவனும் கூட மாற்றிப்படிக்கலாம் என்பதும் இரு முதன்மை பாடங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதும் சர்ச்சைக்குரியது அபத்தமானது. ஒரு துறையை விட்டு மற்ற துறைகளுக்கு சென்று படிப்பது அல்லது இரு துறைகள் சார்ந்த இரு பாடங்களை (TWO MAJOR) ஒரே நேரத்தில் படிப்பது என்பது அடிப்படைக் கல்வியை (இளங்கலை பட்டப்படிப்பில்) (Under Graduate) சீர்குலைக்கும் விதமாகும். அவ்வாறே ஒரு துறையில் எண்ணற்ற முறையில் சேர்வதற்கும், விலகுவதற்கும் எந்த துறையை வேண்டுமானாலும் +2 நிலையில் அடிப்படை பாட அறிவு இல்லாமல் நிபந்தனையற்ற முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது தான் இன்றைய கலவை கல்வியாகும். சிறார்களுக்கு நினைவாற்றல் அதிகம் எனவே மும்மொழி அவசியம் என்று அறிவியல் கொடுப்பதற்கு மாறாக இந்தியை திணிக்கும் மோடியின் ‘புதிய தேசிய கல்விக்கொள்கை’யின் 'பிரதி'தான் UGC -2025 அறிக்கை. ஆம், உயர்கல்வியில் அடிப்படைக்கல்வி (பட்டப்படிப்பில்) ஒரு துறையில் ஆழமான அறிவை/படிப்பை வழங்குவதற்கு மாறாக ஒரே நேரத்தில் பல்துறை கல்வி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கு சரியான புரிதலையும் அறிவையும் தராது, அதுவே அவர்களுக்கு குழப்பத்தையும் பின் இடைநிறுத்தளுக்கும் இட்டுச்செல்லும். உண்மையில் ஆளும் மத்திய அரசின் நோக்கம் என்னவென்றால் கல்வியை ஒரு சந்தைப்பொருளாக மாற்றுவதே, ஒருவர் பல பொருட்களை நுகர்வதுப் போல் அதாவது கல்வியை வியாபாரமாக்கி கார்ப்பரேட் கையில் கொடுப்பதாகும். கல்வியை காலச் சூழலுக்கு ஏற்ப, அதாவது 3 ஆண்டுகள் அறிவியல் / கலைப் பட்டப்படிப்பையும் (UGC -2025 -ன் படி 4 ஆண்டுகள்) 4 ஆண்டுகள் பொறியியல் பட்டப்படிப்பையும் 5 ஆண்டுகள் மருத்துவ பட்டப்படிப்பையும் எந்த ஆண்டுகளில் வேண்டுமானாலும் இடைநிறுத்தம் செய்து விட்டு (Breakup) மற்றோரு படிப்பை படித்துக்கொள்ளலாம் என்ற புதிய விதியானது ஏதோ பெயரளவில் உயர் கல்வி திறனை உயர்த்துவதேயாகும். அதாவது பெருபான்மையான கிராமப்புற / முதல் பட்டதாரி மாணவர்கள் ஒரு பட்டம் பெறுவதே அவன் பொருளாதார நிலைமைக்கு அரிதான சூழலில், கலவை முறையைப் புகுத்தி பலதுறைகளில் வல்லவனாக்குவேன் என்பது எந்த துறையிலும் முழுமை பெறாதவனாக வெளியேறும் சூழலே நிகழும். சாராம்சத்தில் இப்புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் கீழ்த்தட்டு மக்களை கல்விமுறையை கைவிட்டு குலத்தொழிலுக்கு திரும்ப வழிவகுக்கும் முறையேயாகும். ஒவ்வொரு ஆண்டு இடைநிறுத்தலுக்கு ஒரு சான்றிதழ் வழங்கி அவர்களை உயர்கல்வியிலிருந்தது வெளியேற்றுவது என்பதும் மாணவர்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்கவிடாமல், ஏதாவது ஒரு துறையில் கூட தகுதி பெற முடியாத நிலையை உருவாக்குவது என்பதாகும். அதாவது ஏகாதிபத்திய உலகமயமாக்கல் உற்பத்தி முறைக்கேற்ற உதிரி தொழிலாளியாக உருவாகிக் கொள்வது முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவையை செய்யும் பொருட்டு, பிற்போக்குத் தனத்தையும் கீழ்ப்படிதலுக்கான மனப்பான்மையையும் மட்டுமே கட்டியமைக்கப்படுகிறது.
அவ்வாறே உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முதன்மை பாடத்தில் பட்டம் தேவையில்லை என்பதும், பேராசிரியர்கள் பதவியில் நீடிக்க / பதவி உயர்வு பெற ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் என்பதும் பெருபான்மையான பேராசிரியர்களை வேலை நீக்கவும் மேலும் பேராசிரியர்கள் நியமனத்தை குறைக்கும் நிகழ்வே ஆகும். அதாவது NEET / JEE போல் உதவி பேராசிரியர்களுக்கும் முறையான அடிப்டை (முதன்மை)பாடத்தில் பட்டம் என்ற கல்வித் தகுதியை நீக்கிவிட்டு உதவிப்பேராசிரியர் நியமனம் என்பது மாணவர்களுக்கு அடிப்படையான ஆழமான கல்வியை கற்பிக்க முடியுமா? பதவி பெறுவதற்கும் தகுதி தேர்வு மற்றும் பதவி உயர்வுக்கு ஆண்டு இரு முறைத்தேர்வு என்று பேராசிரியர்கள் கற்பிக்கும் பணியை செய்வதற்கு மாறாக, பதவியை தக்கவைத்துக்கொள்ள / பதவி உயர்வு பெற தனியார் பயிற்சி மையங்களில் பயின்று தேர்ச்சி என்ற நிலையையே உருவாக்கி, ஒட்டுமொத்த கல்வி துறையையே அரசு கைவிட்டு கார்ப்பரேட்மயமாகும் அபாய நிலையே உருவாகும். ஆம், IIT -ன் தலைவர்(ரே) மாட்டு கோமியத்திற்கு மருத்துவ குணம் (antioxidant) என்று விவாதிக்கும் அளவிற்கு ஒரு அபத்தமான / பிற்போக்கான / மூட நம்பிக்கையை கல்வியாளர் மத்திலும் கல்வி நிலைய தலைவர்கள் மத்திலும் வளர்க்கும் கல்விமுறையை திட்டமிட்டே உருவாக்கும் ஆட்சியாக விளங்குகிறது இந்த மோடி ஆட்சி.
கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி
இது கல்வியை தனியார், கார்ப்பரேட்மயமாக்கும் UGC -ன் விதிமுறையாகும். ஆம், தன்னாட்சி அதிகாரம் கொண்ட UGC யின் விதிகளை ஒழித்துவிட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதிகளையும் (Project, development funds) குறைத்துவிட்டு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாற்றிக்கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி என்பதின் பொருள் என்னவாக இருக்கும்? கல்வியை தனியார், கார்ப்பரேட் கைகளில் கல்வியை தாரைவார்ப்பதேயாகும்.
UGC-2025 -ன் புதிய விதிமுறைகள் மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைத்து, மாநில உரிமைகள் மற்றும் மாணவர்களின் நலன்கள் முழுமையாக பறிக்கும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை ஒழித்து கல்வியை பாசிசமாக்கும் நிகழ்வாக உள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை கூட மாநில அரசு நியமிக்க முடியாது. ஏன் கல்வியாளர்கள் கூட தேவையில்லை அரசியல் வாதிகள் / தொழில் அதிபர்கள் அல்லது காவி மடாதிபதிகள் என்று யார் வேண்டுமானாலும் துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்பது, மாநில அரசுகளால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்களின் நியமனங்களில் மத்திய அரசின் தலையீட்டை அதிகரிக்கும் வழிமுறையேயாகும். இது படிப்படியாக மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வடிவமைக்கும் கல்வி கொள்கையின் உரிமையை பறித்து, மையப்படுத்துவதாகும் மாநில கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்பாடாகும். அன்மையில் கவனர்களுக்கு எதிரான, இருக்கும் அரைகுறையான மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைவராலும் வரவேற்கப்பட்டாலும். அடுத்து ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகும்.
அண்மையில் கவனர்களுக்கு எதிரான, அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் (பெயரளவிற்கான மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில்) அனைவராலும் வரவேற்கப்பட்டாலும். அடுத்து ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகும்.
தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி
தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி முறைகள் மாணவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், பரந்த அளவிலான படிப்புகளை அணுகும் வாய்ப்பையும் வழங்குகின்றன என்பது ஒரு அம்சமேயாகும். இது தகவல் சேகரிப்பு, கருத்து பரிமாற்றம் என்ற வகையில் கலை, இலக்கியம் சார்ந்த சில பட்டய படிப்புகளுக்கு உகந்தது. இருப்பினும், நேரடி வகுப்பறை அனுபவம் இல்லாததால், மாணவர்களின் கல்விகற்கும் ஈடுபாடு மற்றும் சமூக உரையாடல் அதிகளவில் குறையும். இது பெரும்பான்மையான மாணவர்களின் புரிதல் மற்றும் சிந்திக்கும் திறன்களை பாதிக்கும். இது அறிவியல், பொறியியல் சார்ந்த தொழிநுட்பப் படிப்புகளுக்கும் திணிப்பது உயர்கல்வியை சீர்குலைக்கும் விதிமுறையேயாகும். எனவே மாணவர்கள் அதிகளவில் உயர்கல்விக்கு போகமுடியாத நிலையே ஏற்படும். உயர்கல்வியில் தரம் குறையும் அல்லது பெரும்பாண்மையான மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைக்காமல் போகும்.
தொலைதூரக் கல்வியின் முறையின் முந்தைய அனுபவத்தையும் சேர்த்தே பார்த்தால் இன்றைய தொலைதூரக் மற்றும் ஆன்லைன் கல்வியின் தரம் என்ன என்பது புரியும். இந்தியாவில் தொலைதூரக் கல்வி படிப்புகள் (Distance Education courses & Correspondence Course and Continuing Education) 1962 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தொலைதூரக் கல்வி மையங்கள் என மறுபெயரிடப்பட்டது. இந்தியாவின் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் 1982 இல் நிறுவப்பட்டது. 1985 ஆம் ஆண்டில், தேசிய அளவிலான இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU) நிறுவப்பட்டது. தமிழ் நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்குநரகம் (DDE) 1971 ஆம் ஆண்டும் 1979 ல் அண்ணாமலை பல்கலைக்கழம், 1981 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் என்று நீண்டது. 2001-2002 ஆம் ஆண்டுக்கான தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தைத் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் என்று 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழம் Dual Degree (ஒரே காலத்தில் இரு பட்டப்படிப்புகள்) அறிமுகப்படுத்தியது, இதில் பெருபான்மையோர் படித்தாலும், அதன் மூலம் பலனடைந்தோர் சிலரே. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் இயக்குநரகம் (DODL) ஏப்ரல் 2005 இல் தமிழ் நாட்டிலும் நிறுவப்பட்டது. இது 2005ஆம் ஆண்டிலிருந்தே பெரும் சர்சையைக்கிளப்பி வருகிறது. குறிப்பாக பணியில் இருக்கும் ஊழியர்கள்/ ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக இரட்டை பட்டம் பெறுவது. முதலில் பெரும் வரவேற்பைத்தந்த இத்தொலைத் தூர கல்வி படிப்புகள் பின்னர் உயர் கல்வியின் தரத்தை வெகுவாகக் குறைத்தது. குறிப்பாக கலைப்பிரிவு அறிவியல் பிரிவுகளில் இரடைப்பட்டம் பெற்ற ஆசிரியை BT யாக உயர்வு பெற்றும் TRB யால் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் உயர்நீதி மன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது (W.A. No. 2928 of 2019). மோடியின் மத்திய அரசு நீர்த்துப்போன இந்த கல்வி முறையையே மீண்டும் புதுப்பிக்கும் விதமாக பல்கலைக்கழக மானியக் குழுவினால் (UGC), செப்டம்பர் 4, 2020 ல் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் கல்வி என்பது புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை கோரும் முறை என்பது ஒரு மாயையே. அவ்வாறே ஆசிரியர்களைப் பொறுத்தவரை, மிகக்குறைவான ஆசிரியர்களே போதுமானதாக இருக்கும். ஏனெனில் ஆன்லைன் தொழில்நுட்ப முறையினால் ஒருமுறை கற்பிக்கும் வீடியோவை பதிவு செய்துக்கொண்டு பல முறைகள் திரும்ப திரும்ப (கேட்க வைத்தல்) கற்பிக்கவும்அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கற்பிக்கவும் முடியும். நேரடி வகுப்பறை கற்றல் அனுபவம் இல்லாததால், மாணவர்களின் அறிவியல் தொழிநுட்பம் சார்ந்த செய்முறை வகுப்புகள் கேள்விக்குறியாகும், கல்வி கற்கும் ஈடுபாடு, புரிதல் மற்றும் சமூக உரையாடல் அதிகளவில் குறையும். சமூகமாக இயங்கும் பண்பு இல்லாமல் போகும் எனவே, UGC-யின் இந்த விதிமுறைகள் பெரும்பான்மையான மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கவே செய்யும். ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும், புதிய நியமனங்கள் இருக்காது, தொழிநுட்பத்தால் போட்டிகள் அதிகரித்து கல்வி வியாபாரமாக்கப்படும், மாணவர்கள் NEET / JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கே தன்னை உட்படுத்திக்கொண்டு இயந்திர வாழ்க்கையாக போட்டியிலேயே மூழ்கி விடுவார்கள், இதில் சொற்ப அளவிலேயே மாணவர்கள் தேர்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளது. தோல்வியுற்று பெரும்பானமையான மாணவர்களின் வாழ்கை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதே உண்மை.
ஆராய்ச்சி மேம்பாடு - நிதி ஒதுக்கீடு :
UGC -2025-ன் 3 மற்றும் 4 வது விதிகளை இணைத்துப்பார்த்தலே தெரியும் மத்திய அரசின் திட்டம் (UGC -ன் விதிகள்) பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி சூழலை ஒழித்துக்கட்டவே மிகத்துரிதமாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று. ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி முறைகள் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிச் சூழலை பல வழிகளில் பாதிக்கின்றன. இவை ஆராய்ச்சிக்கான தரவுகளை உடனுக்குடன் கிடைக்கப் பயன்படுமே ஒழிய, ஆராய்ச்சி சூழலை ஏற்படுத்தாது. ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி முறைகள் உயர்படிப்புக்கான வாய்ப்பை பறித்துவிடுகிறது. ஏனெனில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களால் ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி முறையால் உயர்கல்வியை எட்டமுடியாது. அப்படியிருக்க ஆராய்ச்சி கல்விக்காக ஒதுக்கும் நிதி யாருக்கானது?, நிச்சியாமாக அது சாதாரண மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. JIO போன்ற கார்ப்பரேட் கல்விநிலையங்கள் மற்றும் காவி மட கல்வி நிலையங்களுக்கே நிதியை ஒதுக்கி அதில் பயிலும் செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கும், மேட்டுக்குடி மக்களுக்குமான கல்வியாக மாற்றும் பாசிச நடைமுறையே தவிர வேறொன்றும் இல்லை. உயர்கல்வியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்வித் துறையே படிப்படியாக கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு உயர்கல்வியை சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலையை உருவாக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாணவர் உதவித்தொகை:
UGC கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது வெறும் வெற்று வார்த்தைகளே. குறிப்பாக-2019 ல் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதிக்கீடை மாற்றியமைத்தது மத்திய பாசிச அரசு. அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதற்குள் பல்கலைக்கழகங்களே தங்களுக்கான நிதியை நிர்வகித்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த விதி. சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்றவைகளால் நிதியை நிர்வகித்துக் கொள்ளமுடியாத நிலையே உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சொல்லவே வேண்டாம். தனியார் முதலீடுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் உதவக்கூடும். இதனால் கல்வி முழுமையாக தனியார்மயமாக்கபடும் அதற்கான வேலையைத்தான் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது தெளிவாக புரிகிறது. கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் IIT, IIAS, AIIMS போன்ற மேட்டுக்குடி மக்கள் அதிகளவில் பயிலும், பணிபுரியும் கல்வி நிலையங்களுக்கே இதில் பெரும்பாண்மையான நிதி ஒதுக்கீடுகள் போய்சேரும். பொதுவாக பெயரளவில் மட்டுமே கிராமப்புற அல்லது அரசு கல்விநிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கென கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. இதனால் சாதாரண மாணவர்களின் கல்வி மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகளும், ஆராய்ச்சி வாய்ப்புகளும் பெருமளவு பாதிக்கப்படும். உதாரணமாக, பல்கலைக்கழகங்களுக்கான நிதி நிறுத்தப்பட்டது மற்றும் யுஜிசி நிதியை நிறுத்திவிட்டு RUSA போன்ற மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தா மாநிலங்களுக்கு நிதி இல்லை என்பதுடன் அந்த பட்டங்கள் செல்லாது என்றும் மிரட்டி வருகிறது பாசிச மோடி அரசு. இதனால் உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை குறைப்பு ஒருபுறம், மறுபுறம் கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை சிதைக்கும். இது சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் பெரும் தடையாகவே இருக்கும்.
காங்கிரஸ் ஆட்சியே கல்வியை மையப்படுத்தில் முன்னோடி
ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்ய கல்வியை, வியாபாரமாக்கும் நோக்கத்துடன் தான் அல்லது ஏகாதிபத்தியங்களின் (IMF) நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்தே 1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்து, படிப்படியாக அதிகார மையப்படுத்தலுடன் கல்வியையும் மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றி மையப்படுத்தியது. ஆம், 1975 ஆம் ஆண்டு இந்திய கல்வி வரலாற்றில் ஒரு இருண்ட காலம் எனலாம், ஏனெனில் மத்திய அரசு உயர்கல்வியின் தரத்தை ஒருங்கிணைத்து பராமரிப்பது என்று கூறி, (எமர்ஜென்சியை காலத்தில்) உச்ச அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) கலைக்க முடிவு செய்தது. UGC மிகவும் அதிகாரப் பெருக்கம் அடைந்து, கல்வி முறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இடையூறாக இருப்பதாகவும் மத்திய அரசு தன் அதிகாரத்தை யுஜிசி மீது செலுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி. UGC ஐ ஒழித்துவிட்டு, அதை ஒரு புதிய ஒழுங்குமுறை அமைப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. யுஜிசியை ஒழிப்பது என்ற நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக இருந்ததால், 1976 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டத்தை நிறுவுவதன் மூலம் உயர் கல்விக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் உயர்கல்வித் துறையை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று தனது பாசிச அதிகார மையப்படுத்தல் வேலையைத் காங்கிரஸ் அரசு தொடங்கியது.
கல்வித்துறையில், இந்திய அரசியலமைப்பில் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமை (சட்டம் 21A) என்று அறிவிக்கப்பட்டு 2001 இல் SSA (சர்வ சிக்ஷா அபியான்) வாஜ்பாய் அமைச்சரவையால் தொடங்கப்பட்து. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை, மாறாக கல்வியை தனியார் / கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு மாநில உரிமையைப் பறித்து மத்திய ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு கொண்டு சென்றது. அதற்கு பின் வந்த காங்கிரஸ்- மன்மோகன்சிங் அரசும் தனது கார்ப்பரேட் சேவைப் பங்கிற்காக இடைநிலைக் கல்வியை 2009 இல் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (RMSA) அமைப்பைத் தொடங்கியது என்பதையும் கவனிக்கவேண்டியுள்ளது. ஆம் கல்விக்கான வளர்ச்சி என்ற பெயரில் மாநிலங்களுக்கு கொடுக்கும் கல்வி நிதியை குறைத்து விட்டு, நேரடியாக மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுச் செல்வதற்காகவும் இந்தியை திணிக்கும் விதமாகவும் புதிய அமைப்பை ஏற்படுத்தி, ஹிந்தியில் பெயர் வைத்து இரு பாசிச முதலாளித்துவ கட்சிகளும் அதிகாரக் குவிப்பிற்காக மாறி மாறி கல்வியை மைப்படுத்தும் வேலையை செய்து கொண்டு வருகிறது. அவ்வாறே, உயர்கல்விக்கான பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழக்கமான புதுமை மற்றும் மேம்பாட்டுக்கான நிதியை கொண்டு செயல்பட்டு வந்தது. UGC சட்டம் 12B மற்றும் 2(f) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிதியுதவி பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு UGC நிதி மற்றும் தன்னாட்சி அதிகாரத்தை மேம்படுத்துவதற்கு மாறாக. மார்ச் 31, 2012 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உயர்கல்வித் துறையில் 574 பல்கலைக்கழகங்கள் மற்றும் 35,539 கல்லூரிகள் உள்ளன, அவற்றில் 214 பல்கலைக்கழகங்கள் UGC சட்டத்தின் 12B இன் கீழ் இல்லை, மேலும் 6,787 கல்லூரிகள் மட்டுமே 12B மற்றும் 2(f) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், மாநில அரசுகளால் நடத்தப்படும் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்கள், அவற்றின் சொந்த நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றன, மேலும் அப்பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் மேம்படுத்த போதுமான நிதி உதவி மாநிலங்களால் வழங்கப்படவில்லை. எனவே, 2012 ஆம் ஆண்டில் 12வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தனித் திட்டம் தேசிய மேம்பாட்டு கவுன்சிலால் (NDC) முன்மொழியப்பட்டது. அது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அக்டோபர் 2013 இல் RUSA அமைப்பை அங்கீகரித்தது.
இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், UGC யின் அமைப்பிற்கு அதிக நிதி அல்லது மாநில அரசுகளின் கல்விக்கான நிதியை உயர்த்தி வழங்குவதற்கு மாறாக மத்திய அரசு மட்டுமே நிர்வகிக்கக்கூடிய கல்வி / உயர்கல்விக்கான SSA, RMSA, RUSA அமைப்புகளை காங்கிரஸ், பாஜக என்ற இருபாசிச கட்சிகளுமே தொடங்கி அதற்கான நிதியை ஒதுக்கி கார்ப்பரேட்மயமாக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் தனது அதிகார குவிப்பு, மையப்படுத்தலுக்காக கல்வியை தனியார், வணிகமயமாக்கும் நோக்கத்தோடும் துரிதமாகச் செயல்பட்டுவருகிறது. ஏற்கனவே பள்ளி கல்வித்துறையில் இருந்துவந்த SSA நிதியை நிறுத்திவிட்டு PM ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்க மாநிலங்களை நிர்பந்தித்து வருகிறது. ஏதேச்சதிகாரப்போக்குடன் உயர்கல்வித் துறையில் மாநிலங்களை ஒன்றிணைத்த கல்வி ஆலோசனை வாரியாக கூட்டம் 2019 க்குப் பின் நடத்தப்படவில்லை. மாறாக UGC-க்கான கல்வி நிதியை படிப்படியாக நிறுத்திவிட்டு, உயர்கல்விக்கான ஒரு முழுமையான மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்படுத்துவதாக, ராஷ்ட்ரிய உச்சத்தார் சிக்ஷா அபியான் (இந்தியில்) "தேசிய உயர் கல்வி பணி" RUSA என்ற அமைப்புக்கு கல்வி நிதியை வழங்கி, நேரடியாக மாநில உயர்கல்வியை தனது கட்டுப்பாட்டில் வைக்க நிர்பந்தித்துவருகிறது.
மாநில கல்விக் கொள்கை:
திமுக அரசின் மாநில கல்விக் கொள்கை, மத்திய பாசிச பாஜகவின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக இல்லை. மத்திய அரசு குலக்கல்வி முறையை புகுத்தி, கல்வியை காவிமயமாக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தின. அதற்கு மாற்று என்று தமிழக அரசும் வீடு தேடி கல்வி என மாணவர்களின் வீட்டிற்கே சென்று கல்வி கொடுப்பது என மாணவர்களின் இடைநிறுத்தலை துரிதப்படுத்தும் வேலையைச் செய்துவருகிறது, அதற்கு RSS உதவியும் செய்துவருகிறது. அவ்வாறே TVS போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுமார் 500 பள்ளிகளை, தனியார் பங்களிப்பில் மேம்படுத்தல் என்ற பெயரில் தாரை வார்த்துள்ளது திராவிட அரசு. உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை என்று TamilNadu State Council For Higher Education (TNSCHE) பாடத்திட்டத்தை ஏற்படுத்தி, கல்லூரிகள் / பல்கலைகழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை (Autonomous) பறித்து எல்லா கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் அமுல்படுத்த நிர்பந்தித்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல், கார்ப்பரேட்க்கு சேவைசெய்யும் பொருட்டு, நான் முதல்வன் திட்டம் என்று பணத்தை கார்ப்பரேட்க்கு ஒதுக்கி வருகிறது. அத்திட்டங்களின் மூலம் HCL, TCS WIPRO போன்ற பெருநிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் கல்வியை தனியார்மயமாக்க, கல்லூரிகளில் இணையவழி பாடம் (ONLINE) கற்பித்தல் முறை அமல் படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கார்போரேட் ஆட்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிச்சி அளித்தும் மறுபுறம் இணையவழி பாடம் கார்ப்பரேட் நிறுவன ஆட்களையே கொண்டு நடத்தப்பட்டு ஆட்குறைப்பு வேலையையும் செய்கிறது. மேலும் புதிய பாடம் என்று பல்கலைக்கழகங்களில் Blended course (கலப்பு பாட நெறி) பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் / பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பாட திட்டம் என்று இணையவழி கல்வி கற்பித்தல் திறமையான பேராசிரியர்கள் என்று அந்நிய மோகத்தை கல்வியில் புகுத்தி ஏழைகளுக்கு கல்வியை எட்டாகனியாக்கியும், உயர்கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் கள்ள கூட்டாளியாக செயல்பட்டுவருகிறது திராவிட மாடல் அரசு.
ஸ்வீடன் நாட்டின் ஆன்லைன் கல்வி அனுபவம்
ஆன்லைன் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி ஸ்வீடன் கல்வித்துறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி முதல் கல்லூரி வரையில் கல்வி கற்பதிலும், கற்பிப்பதிலும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை புகுத்தியது. நவீன ஆன்லைன் கல்வி முறையானது, மாணவர்களின் கற்றல் அதிகரிப்பு, குறுகிய நேரத்தில் மிக அதிக தகவல் பரிமாற்றங்கள் கிடைக்கப்பெற முடியும் என்பதும், ஆசிரியர்களின் பணியையும் எளிமைப்படுத்தியுள்ளது என்பதும் கல்வி மேம்படும் என்ற சில அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டது. கல்வி கற்றலில் புதுமைகளைப் புகுத்த முயன்ற ஸ்வீடன் அரசு, அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக முற்றிலும் எண்மவழி (DIGITAL BOOKS) பாடப்புத்தகங்களையும், இணையவழிக் கற்றலையும் ((online class) கடந்த 2009-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்ற தொலைநோக்குடன் இத்திட்டத்தை ஸ்வீடன் நடைமுறைப்படுத்தியது. தொடக்கப்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கே கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டன. கற்றல், வீட்டுப்பாடம், தேர்வுகள் என அனைத்தையும் அக்கணினிகள் மூலமாகவே சிறார்கள் மேற்கொண்டனர். காகிதங்களில் எழுதத் தேவை ஏற்படாத நிலையே ஸ்வீடனின் பள்ளிகளில் காணப்பட்டது. எழுத்து வழித் தேர்வுகளும் கையடக்கக் கணினிகள் மூலமாகவே நடத்தப்பட்டன. கல்வி கற்பித்தலுக்கும் நவீன தொழில்நுட்பங்களையே ஆசிரியர்களும் பயன்படுத்தினர். தொடக்கத்தில் இத்திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு மக்களிடத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் காணப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி கற்பதன் மூலமாக மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும், தொழிநுட்ப வளர்ச்சி காணும் என்ற எதிர்பார்ப்பு ஸ்வீடன் அரசிற்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திட்டத்தை ஸ்வீடன் அரசு கைவிட்டுள்ளது. தற்போது "எண்மவழி பாடப்புத்தகங்களுக்கு" மாற்றாக, மீண்டும் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களைப் பள்ளிகளில் அந்நாட்டு அரசு மீண்டும் கொண்டுவந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், எண்மவழி கல்வி கற்றலில் மாணவர்களின் கற்றல்திறன் வெகுவாகக் குறைந்துள்ளது என்பதே. முக்கியமாக, எழுத்துத் திறனிலும் பாடப்புத்தகங்களைக் கடந்து மற்ற புத்தகங்களை வாசிப்பதிலும் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் குறைந்திருப்பதையும் ஸ்வீடன் அரசு கண்டறிந்தது. அதையடுத்து, அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கைகளில் மீண்டும் தவழத் தொடங்கியுள்ளன.
ஆம்,
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்”.
என்ற தமிழ் வெண்பாவின் கருத்திற்கு ஏற்ப, ஆன்லைன் கல்வியானது சிறார்களின் எழுதும், பேசும், சமூக பண்பு மற்றும் சிந்திக்கும் ஆற்றலை குறைக்கும் அல்லது காலப்போக்கில் இல்லாமல் போகும் அபாயம். AI உதவியுடன் வீடியோ மூலம் கல்வி கற்பதால், ஆசிரியர்களின் நேரடி உரையாடல் மற்றும் மாணாக்கர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக, ஒரே கருப்பொருளுக்கு மாணவர்களின் பல்வேறு வகைப்பட்ட கருத்தாக்கங்களின் தொகுப்பை வகுப்பறையில் மட்டுமே பெரும் வாய்ப்பு கிடைக்காது போகும் நிலையை உருவாக்கியது. எனவே சிந்திக்கும் திறன் மற்றும் பேச்சாற்றால் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு குறையும். இணையவழியாகக் கல்வி கற்றலினால் இதுபோன்ற பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சேவைக்கான ஆட்சிமுறையானது, குறிப்பாக மாணவர்களின் கவனச்சிதறல்களை ஊக்குவிக்கவே, சமூக சீர்கேடான இணையவழி விளையாட்டுகள், சிந்தனையை மழுங்கடிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், சீரியல்கள் மற்றும் மேல் நாட்டு கலாசாரப் பண்புகள் மீதான ஆர்வத்தை தூண்டும் எண்ணற்ற இணைய வழி நிகழ்வுகள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணக்கமாக இல்லாமல் தனித்திருக்கும் சூழல், சமூகத்தொடர்பு, பெற்றோர், ஆசிரியர்கள் தொடர்பற்று சமூகம் சார்ந்த கண்ணோட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதுடன், அவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டதை அறிந்தனர். மேலும், தொழில்நுட்பக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், மாணவர்களின் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் ஆர்வம் குறைவதால், உடல் பருமன் அதிகரிப்பு உள்ளிட்ட நோய்களும் ஏற்பட்டன.
மாணவர்களின் அனுபவத்தின் மூலமாக இதை உணர்ந்துகொண்ட ஸ்வீடன் அரசு, புத்தகங்கள் வழியான பாரம்பரிய கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. அதே வேளையில், அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியானது தகவல் பரிமாற்றத்திற்கும் மற்றும் கல்வி கற்றலுக்கும் ஒரு சில அம்சங்களில் மட்டும் பயன்படுத்துவதும் அது சார்ந்த மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் சில அம்சங்களில் மட்டும் ஆன்லைன் தொழிநுட்பத்தை தொடர்வது எனவும் தீர்மானித்தது. மேற்கண்ட ஸ்வீடனின் அனுபவத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், இதை எதையும் கணக்கில் கொள்ளாமல், கட்டுப்பாடற்ற முறையில் புதிய கலவைக் கல்வி முறையையும் ஆன்லைன் கல்வியையும் புகுத்தும் UGC -2025 ன் புதிய அறிக்கை உண்மையில் உயர்கல்வி மேம்பாட்டிற்கு உகந்ததில்லை, அது காவி - கார்ப்பரேட்மயமாக்கும் கல்வி பாசிசத்தையே கட்டியமைக்கும்.
ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு / உள்நாட்டு கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் முதலாளித்துவ காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இருபாசிச கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். கல்வியை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றி மையப்படுத்துவதிலும் கல்வியை கார்ப்பரேட் காவிமயமாக்குவதிலும் மற்றும் மாநில உரிமைகளையும் மாணவர்களின் உயர்கல்வி கனவையும் தொடர்ந்து பறித்துகொண்டே வருகிறது. அவ்வாறே திமுக, அதிமுக போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும், மத்தியில் ஆளும் முதலாளித்துவ கட்சிகளுடன் மறைமுக கூட்டணியாக செயல்பட்டு, மக்கள், மாணவர் விரோத கொள்கைகளைத்தான் செய்து வருகிறது. இந்த முதலாளித்துவ ஆட்சிகளால் யுஜிசியின் மாணவர் விரோத விதிகளை மாற்ற முடியாது. எனவே பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிகள் முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும், மாநில உரிமைகளை பாதுகாப்பதோடு, மாணவர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து ஓரணியில் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாகும் எதேச்சதிகார UGC-2025யின் புதிய அறிக்கையை திரும்பப்பெறும் வரை போராடுவோம் !.வெற்றிபெறுவோம் !!
- செந்தளம்